அதிக தண்ணீர் தேவையில்லை.
வேலையாட்கள் பிரச்னையில்லை.
வேலையாட்கள் பிரச்னையில்லை.
ஆண்டுக்கு ரூ.1,50,000.
வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளில் முக்கியமானது செம்பருத்தி. இதன் பூவை பூஜைக்காக பலர் உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், அது அதிக மருத்துவ குணம் வாய்ந்தச் செடி என்பது பலருக்கும் தெரியாத விஷயம். சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவத்தில் இதய நோய்க்கான மருந்து தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருப்பது செம்பருத்தி. அதனால் மருந்து உற்பத்தித் துறையில் இதற்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. இதைச் சரியாக புரிந்துகொண்ட சிலர் செம்பருத்தியைத் தனிப்பயிராக சாகுபடி செய்து வருகிறார்கள்.
ஆலோசனைகள் :
ஏக்கருக்கு 1,200 செடிகள்!
'வணிகரீதியாக சாகுபடி செய்ய ஐந்து இதழ் கொண்ட சிவப்பு நிற செம்பருத்தி மட்டுமே ஏற்றது. செம்மண், கரிசல் மண் நிலங்களில் நன்றாக வளரும். மழைக் காலத்துக்கு முன்பு (ஜூலை, ஆகஸ்ட்) நடவு செய்ய வேண்டும். ஒரு முறை நடவு செய்தால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இறைத்து நிலத்தை நன்றாக உழுது, மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ளவேண்டும். 15 அடி நீளம், 4 அடி அகலத்தில் பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாத்திகளில் செடிக்கு செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில், அரையடி ஆழத்தில் குழியெடுத்து, செம்பருத்திச் செடிகளை நடவேண்டும். ஏக்கருக்கு 1,200 செடிகள் வரை தேவைப்படும். இதற்கான செடிகள் நாற்றுப் பண்ணைகளில் கிடைக்கும்.
10 நாட்களுக்கு ஒரு தண்ணீர்!
இரண்டு செம்பருத்தி வரிசைக்கு இடையில் மற்றும் செம்பருத்திச் செடிகளுக்கு இடையில் என கறிவேப்பிலையை நடவு செய்யலாம். செம்பருத்தி வரிசை மற்றும் செம்பருத்திச் செடிகளுக்கு நடுவில் 3 அடி இடைவெளியில், கறிவேப்பிலைச் செடியை நடவேண்டும். தண்ணீர் பாயும் வாய்க்கால் கரைகளின் இருபுறமும் இரண்டு அடி இடைவெளியில் அகத்தி விதையை ஊன்றவேண்டும். எட்டு முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
ஆரம்பத்தில் உழவு செய்யும்போது, தெளிக்கும் தொழுவுரமே போதுமானது. அதிக அளவு உரங்களைக் கொடுக்கக்கூடாது. ஊட்டம் அதிகமானால் செடிகள் கொழுத்துப் போய் இலைகளில் மொறமொறப்புத் தன்மை அதிகமாகி, பூக்கள் அதிகம் பூக்காமல் போகக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். முதல் எட்டு மாதம் வரை, மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். பிறகு செடிகள் அடர்த்தியாகி நிழல் கட்டிக் கொள்ளும். பத்தாவது மாதம் முதல் தினமும் பூக்களை அறுவடை செய்யலாம்.
பத்து மாதத்துக்குப் பிறகு, ஆண்டுக்கு ஒரு தடவை கவாத்து, 10 நாட்களுக்கு ஒரு பாசனம் மட்டும் செய்தால் போதும். வேறு எந்தப் பராமரிப்பும், செலவும் தேவைப்படாது. நோய் எதுவும் தாக்குவதில்லை. எப்போதாவது மாவுப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைய் கரைசல் அல்லது மாவுப்பூச்சிகளைப் பிடித்து தின்னும் பொறிவண்டுகள் மூலமாக இதையும் கட்டுப்படுத்தி விடலாம்.
நன்கு வெயில் ஏறிய பிறகுதான் செம்பருத்தி இதழ் மலரும். அப்போதுதான் அறுவடை செய்ய வேண்டும். பூக்களைக் காம்புகளுடன் அறுவடை செய்து, இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு, எடை போட்டு விற்பனைக்கு அனுப்பலாம். ஒரு ஏக்கரில் இருந்து தினமும் 5 கிலோ வரை காய்ந்தப் பூக்கள் கிடைக்கும். ஆண்டுக்கு சராசரியாக 1,000 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 160 ரூபாய் என்று விலை வைத்து நமது இடத்துக்கே வந்து வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் ஓராண்டில் 1 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்துக்கு முன்பு தரையில் இருந்து ஒரு அடிக்கு மேலே உள்ள செடிகளை வெட்டி எடுத்து விடவேண்டும். வெட்டியக் குச்சிகளை இரண்டு நாட்களுக்கு வயலில் போட்டு வைத்தால், இலைகள் உதிர்ந்து விடும். காய்ந்த இலைகளை எடை போட்டு விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 500 கிலோ காய்ந்த இலைகள் கிடைக்கும். இவற்றையும் ஒரு கிலோ ரூ.25 ரூபாய் வீதம் வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் 12,500 ரூபாய் கிடைக்கும்!
ஆண்டுக்கு 5 டன்!
கறிவேப்பிலையைப் பொறுத்தவரை தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. செம்பருத்திக்குக் கொடுக்கும் தண்ணீர், களையெடுப்பு ஆகியவையே போதும். பத்தாவது மாதத்தில் இருந்து சுழற்சி முறையில் தினமும் கறிவேப்பிலையை அறுவடை செய்யலாம். நடவு செய்ததில் இருந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். ஒரு ஏக்கரில் இருந்து வாரம் ஒருமுறை குறைந்தபட்சம் 100 கிலோ கறிவேப்பிலையை அறுவடை செய்யலாம். ஒரு கிலோ குறைந்தபட்சம் 10 ரூபாய் வீதம் விற்பனையாகிறது. ஆண்டுக்கு 5 டன் கறிவேப்பிலை குறைந்தபட்சம் கிடைக்கும். இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். வாய்க்காலில் இருக்கும் அகத்திக் கீரைகளை ஆடு, மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.’
No comments:
Post a Comment