இந்திய அரசியலமைப்புச் சட்டம் அற்புதமானது. உலகமே போற்றும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. விடுதலை அடைந்து நமது நாடு இத்தனை பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்கிறது என்றால் அதில் நமது அரசியல் சட்டத்தின் அளப்பரிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது. இவ்வளவு சிறப்புக்கு மத்தியிலும் துரதிருஷ்டவசமான ஒரு குறை இருக்கிறது. எல்லாவகையினரையும் கண்காணிக்கும் நமது அரசியல் சட்டம், அரசியல்வாதிகளை மட்டும் ஏனோ விட்டுவிட்டது.
அவர்கள்தானே சட்டங்களை இயற்றப் போகிறார்கள், அதனால் சுய கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்வார்கள். அவர்களைக் கண்காணிப்பது தேவையற்றது என நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைத்தார்கள். அதனால்தான் அவர்களைக் கட்டுப்படுத்தும் சட்ட விதிமுறைகளை நமது அரசியல் சட்டத்தில் சேர்க்காமலேயே விட்டுவிட்டார்கள். இதுதான் நமது நாட்டுக்கே மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்திருக்கிறது.
அரசியல்வாதிகள் எங்கெல்லாம் நுழைந்தார்களோ அங்கெல்லாம் அதிகாரம் தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லா நிலையிலும் ஊழல், மோசடி, நிர்வாகச் சீர்கேடு என நாடே செல்லரித்துப் போயிருக்கிறது. தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நமது நிர்வாக அமைப்பை அரசியல்வாதிகள் கெடுக்கிறார்கள். இதைத் தடுப்பதற்குத்தான் லோக்பால் என்கிற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஆனால், இந்தச் சட்டத்தையும் நமது அரசியல்வாதிகள்தானே இயற்ற வேண்டும். தாங்களே தங்களுக்குக் குழிதோண்டிக் கொள்ளும் அளவுக்கு நமது அரசியல்வாதிகள் யோசிக்கத் தெரியாதவர்களா என்ன? அதனால்தான் இதோ வருகிறது, அதோ வருகிறது என கடந்த 40 ஆண்டுகளாக லோக்பால் மசோதாவை இழுத்தடித்து வருகிறார்கள்.
இனிமேலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அப்படியே விட்டோமானால், இன்னும் ஒரு 40 ஆண்டுகள் ஆனாலும், லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படுவதை நாம் பார்க்கவே முடியாது. அண்ணா ஹஸாரேயின் உறுதியாலும் விடாமுயற்சியாலும் லோக்பால் மசோதா அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. அண்ணா ஹஸாரேயின் போராட்டத்துக்குக் கிடைத்த ஆதரவையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் பார்த்த அரசியல்வாதிகள் நடுங்கிப் போயிருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரு விஷயத்தை 4 நாளில் சாதித்துக் காட்டியிருக்கிறார் ஹஸாரே.
ஆனால், அண்ணா ஹஸாரேவுக்கும் எதிர்ப்பு இருக்கிறது. அரசை மிரட்டும் முயற்சி என்றும், அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் அவரது போராட்டத்தை சிலர் குறை கூறுகிறார்கள். பிரிட்டனின் மகா சாசனம் எழுதப்பட்டபிறகு, மக்கள் புரட்சியின் காரணமாகவே அது 10 முறை திருத்தப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த அரசியலமைப்புச் சட்டமும் முழுமையானதாக இருக்க முடியாது. குறைகள் இருப்பின் அதை ஏதாவது ஒரு வழியில் களைவதற்கு முயற்சி எடுக்கப்பட வேண்டும்.இன்று ஹஸாரே மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள்தான் விடுதலைப் போராட்ட காலத்தில் காந்திஜி மீதும் கூறப்பட்டன. அரசியல் சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம், சட்டமறுப்பு, ஒத்துழையாமைப் போராட்டங்களை நடத்தினார் என்று காந்திஜியைக் குறை கூறியவர்களும் உண்டு. ஆனால், நோக்கம் சரியானதாக இருந்ததால் அவருக்கு வெற்றி கிடைத்தது.
அதுபோலத்தான் இப்போது ஹஸாரேயும் விமர்சிக்கப்படுகிறார். சுயநல நோக்கம் ஏதாவது இருக்கும் என்றாலோ, போராட்டம் முறையற்றது என்று கருதினாலோ அரசே அதைப் புறந்தள்ளியிருக்கலாம். ஆனால், ஹஸாரேயின் போராட்டத்தில் எந்த விதமான சுயநலமும் இல்லை. நாடு முழுவதுமே கிளர்ந்து எழுந்த நிலையில், இதை மிரட்டலாகவும் கருத முடியாது.லோக்பால் சட்டத்தால், எந்தவிதமான பெரிய மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என்று மூத்த அமைச்சர் ஒருவரே பொறுப்பற்ற வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். தொடக்கக் கல்வி உள்ளிட்ட வகையில் இந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்பது அவரது விளக்கம். பெரும்பாலான விமர்சனங்கள் இதே மாதிரியானவைதான்.
ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கோ அத்தியாவசியக் கட்டமைப்பு வசதிகளுக்கோ லோக்பால் சட்டம் பயன்படாது என்று கூறுவது அறியாமை. நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். நாட்டில் பலர் வறுமையால் கீழ்நிலையில் துன்புற்றிருக்க, சிலர் மட்டும் ஆடம்பரமாகச் செல்வச் செழிப்பில் வாழ முடிவதற்கு இந்த ஊழல்தான் காரணம். அடிப்படைச் சுகாதாரம், கல்வி, ஏழ்மை போன்ற எல்லாவற்றிலும் ஊழலுக்குத் தொடர்பு உண்டு. ஊழலை ஒழிப்பதன் மூலம் நாட்டை வளர்ச்சியடையச் செய்யலாம் என்பதுடன், அனைவருக்கும் அதன் பலனைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும் என்பதும் நூறு சதவீத உண்மை.
இருப்பினும், எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் வகையில் லோக்பால் மசோதா அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசில் பங்குபெறும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் போன்றவர்களைக் கண்காணிக்கும் வகையிலான சட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். எந்த வகையில் நெருக்கடி தரப்பட்டாலும், அதற்கு அப்பாற்பட்ட வகையில் தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய வகையில் அதிக அதிகாரம் கொண்டதாக லோக்பால் அமைப்பு இருக்க வேண்டும். இந்த அமைப்பின் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அப்பழுக்கற்றவராகவும், அனுபவம் மிக்கவராகவும், நம்பகமானவராகவும், பாரபட்சமாக நடந்து கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும். இப்பேர்ப்பட்ட நபர்களை இந்தக்காலத்தில் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான செயல்தான் என்றாலும், ஊழலை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்போருக்கு இத்தனை தகுதிகளும் இருப்பது அவசியம். இதற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
லோக்பாலுக்கு முக்கியத்துவமும் கூடுதல் அதிகாரமும் கொடுக்கும் அதேவேளையில், வழக்கமான நீதித்துறைப் பணிகளில் அது குறுக்கிட்டு மோதல் ஏற்படாதவண்ணம் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையின் அதிகாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவிதத்திலும் இதில் சமரசம் செய்து கொள்ளவேகூடாது. இதற்கு லோக்பால் எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது. நீதித்துறையிலும் ஊழல் மலிந்திருக்கிறது. அதிலும், களையெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அந்தப் பணியை லோக்பால் அமைப்பிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது.
அரசியல் சட்டப்படி பேசவும், வேலை செய்யவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், அமைச்சராகப் பணியாற்றுவது எனது அடிப்படை உரிமை என யாரும் கோர முடியாது. இந்த விஷயத்தில் லோக்பால் அமைப்பின் பணி தேவைப்படுகிறது. யார் மீதெல்லாம் குற்றச்சாட்டுகளுக்கான போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக லோக்பால் கருதுகிறதோ, அவர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும்வரை பதவி விலகச் சொல்வதற்கு லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரோ, அதிகாரியோ தொடர்ந்து பதவியில் இருப்பது வழக்குக்கும், நிர்வாகத்துக்கும் நல்லதல்ல. வழக்கு நடைபெறும் காலத்தில் அவர்கள் எடுத்த முடிவுகளை மாற்றியமைக்க முடியாது. அதனால் அவர்களைப் பதவி விலகுமாறு உத்தரவிடுவதே சரியானதாக இருக்கும்.அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான ஆதாரங்களை ஆய்வு செய்வதில் லோக்பால் அமைப்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் பாரபட்சமற்ற முறையில், ஆதாரங்களை உரிய முறையில் சரிபார்க்கும் பணியில் லோக்பால் ஈடுபட்டால், இதுவே அந்த அமைப்பின் மிகமிக முக்கியமான பணியாகவும் இருக்கும். தாமாகவே முன்வந்து ஊழல் விவகாரங்களை விசாரிக்கவும், தன்னிச்சையாக முடிவு எடுக்கவும் லோக்பாலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால்தான் இதெல்லாம் சாத்தியம்.
லோக்பால் அமைப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டுமானால், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம்.லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிப்பதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாகத் தீர்வு செய்யப்பட வேண்டும். இப்போது மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் ஹஸாரே, மசோதாவை உருவாக்கும்போது இந்த அம்சங்கள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்த நற்செயலைச் செய்ய முற்படும்போதும் அதற்குப் பல முட்டுக்கட்டைகள் வரத்தான் செய்யும். நமது நோக்கம் நிறைவேற வேண்டுமானால் கொஞ்சம் நெகிழ்வாக நடந்து கொள்ளத்தான் வேண்டும். அதேநேரத்தில் மேற்சொன்ன முக்கிய அம்சங்கள் எதையும் மறந்துவிடவும் கூடாது. மசோதாவை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், வரும் மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே அதைச் சட்டமாக்குவதிலும் உறுதியாக இருக்க வேண்டும். தேவையெனில் போராடவும் தயங்கக்கூடாது.
டி .எஸ்.ஆர். சுப்பிரமணியன்
No comments:
Post a Comment