Saturday, May 14, 2011

வியக்க வைக்கும் விருதுநகர் ரிசல்ட் - 26 ஆண்டுகளாக நம்பர் 1



பொட்டல் வெளியும், கருவேலமர காடுகளும்தான் எங்கும். வானம் பார்த்த பூமி என்கிறது வரைபடங்கள். எப்போதாவது இருட்டிக் கொண்டு வரும் கருமேகமும், கொஞ்சம் மழையும்தான் அவ்வப்போதைய சந்தோஷம் என்கிறார்கள் இவ்வூர்காரர்கள். காமராஜரின் பிறந்த ஊர் என்பதால் இயல்பான ஒரு பெருமிதம். பழைய நகரம், குறுகிய தெருக்கள், மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா, நாக்கை அடிமையாக்கும் எண்ணெய் பரோட்டா என விருதுநகரைப் பற்றி சொல்வதற்கு சில பொதுவான சங்கதிகள் இருக்கிறது என்றாலும், தமிழகத்தின் பலசரக்கு விற்பனையின் தலையெழுத்தை இந்த கரிசல்காடு பேனாக்கள்தான் கிறுக்குகின்றன! 


பீகாருக்கு 2 லோடு, ஒரிசாவுக்கு 2 லோடு என இங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு பருப்பு ஏஜென்டுக்கு ஆர்டர் கொடுக்கிறார். விற்கும் விலையையும் வாங்கும் விலையையும் இவர்கள் சங்கமே தீர்மானிக்கிறது. சரக்கு வாங்குப வருக்கும், விற்பவருக்கும் இடையில் இவர்கள் கமிஷன் ஏஜென்டுகள்தான் என்றாலும் பருப்புக்கும், எண்ணெய் வகை களுக்கும் இவர்கள் வைக்கும் விலைதான் இன்றைக்கு மார்க்கெட் ரேட். சிம்பிளாக சொல்ல வேண்டுமெனில், ஒரு வங்கி கணக்கு, ஒரு தொலைபேசி, கோடிக்கணக்கில் வர்த்தகம்.  எத்தனை கார்ப்பரேட் நிறு வனங்கள் வந்தாலும் விருதுநகர் வர்த்தகத்தை நெருங்க முடியாது என்பது என்னவோ நிஜம்.  


ஆனாலும் யார் கண்பட்டதோ, கடந்த சில வருடங்களாக பிஸினஸிலும் சிறிது தொய்வுதான். முன்புபோல வர்த்தக உலகில் கோலோச்ச முடியவில்லை என்பது இங்குள்ள வர்த்தகர்களின் வருத்தம். பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பு மிளகு, முந்திரி பருப்பு, மல்லி, மிளகாய், மற்றும் பருப்பு, எண்ணெய்கள் என எல்லா வகையான பலசரக்கு வர்த்தகமும் விருதுநகரை மையமாக வைத்தே நடந்தன. தற்போது இவர்களின் விலை நிர்ணய கட்டுப்பாட்டில் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் மட்டும்தான் உள்ளன. ''பருப்பை பொறுத்தவரை தரம் பிரிக்கும் வேலைகள் மட்டுமே இங்கு நடப்பதால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது சொல்லமுடியாது' .


நகரத்தின் வளர்ச்சியும், விரிவாக்க பணிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. உள்கட் டமைப்பு வசதிகள் படுமோசம். பாதாள சாக்கடைத் திட்டம் ஆரம்பித்து பாதியிலேயே நிற்கிறது. அதற்கென்று தோண்டப் பட்ட குழிகள் பல இடங்களில் மூடப்படவில்லை. இதனால் நகரின் மைய சாலைகள்கூட மேடுபள்ளம்தான். சில இடங்களில் இந்தத் திட்டம் எட்டிகூடப் பார்க்கவில்லை. பழைய பேருந்து நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எப்போதும். பள்ளி விடுமுறை காலங்களிலேயே இப்படி யென்றால் பள்ளிக்கூட நாட்களில் மக்கள் என்ன பாடுபடுவார்களோ?  


நகரைவிட்டு வெளியில் இருப்பதால் புதிய பேருந்து நிலையத்தால் விருதுநகர் வாசிகளுக்கு எந்த உபயோகமும் இல்லை. மதுரை பேருந்துகள் நிற்கும் இடமும் படுமோசம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை பொறுத்த அளவில் பெரிய மாற்றம் எதையும் கண்டுவிட முடியவில்லை. புதிய நகரிய வளர்ச்சிகளும் குறைவுதான்.எனினும் கல்வித்துறை வளர்ச்சியில் விருதுநகர் நகரத்தை தமிழகத்தின் பிற நகரங்கள் எட்ட முடியாதுதான். கிட்டத் தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகள், கலை - அறிவியல், பொறியியல், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப பயிலகங்கள் என கல்வித் துறையில் டாப் ஒன் நகரமாக இருக்கிறது. 


'ஏழை மக்களின் சந்ததிகள் கல்விக் கண்ணைத் திறந்து முன்னேற வேண்டும்’ என்ற கனவோடு காமராஜர், இலவசக் கல்வித் திட்டத்தையும், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தையும் அமல்படுத்தினார். அவரது கனவை நிறைவேற்றும் விதமாக, தொடர்ந்து 26 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வின் தேர்ச்சி சதவிகிதத்தில் முதல் இடம் பெற்று மகிழ்வில் இருக்கிறது, விருதுநகர் மாவட்டம்!

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 95.93 சதவிகிதம் பெற்ற இந்த மாவட்டம், இந்த ஆண்டு 95.07 சதவிகிதம் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
வியாபாரம் மற்றும் தொழில் துறையில் அடுத்த தலைமுறையினர் முன்னேறக் கல்வியே முக்கியம் என்பதை உணர்ந்ததால்தான் இந்த சாதனை தொடர்கிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் என்று ஒவ்வோர் ஊரிலும் உள்ள நாடார் சமுதாயத்தினர், தங்களது மகமை மற்றும் உறவின்முறை அமைப்புகள் மூலம் பள்ளி​களைத் தொடங்கி இலவசமாகத் தரமான கல்வியைக் கொடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்கள். அவர்களின் கல்வி நிறுவனங்களைப் பார்த்து, பிற சமுதாயத்தினரும் கல்விப் பணிகளைத் தொடங்க...  அருமையான வளர்ச்சி!

 

வறட்சியான விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த வரை, 165 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளி​களின் எண்ணிக்கை 65. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளும் இங்கு அதிகம். பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தில் ஏழு அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றன; 50-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் 90 சதவிகிதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று இருக்கின்றன. 




முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கணேசனிடம் பேசினோம். ''இப்போதைய போட்டி உலகத்தில், கடுமையாக உழைத்தால்தான் நம்மை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற மனோநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. அதனால்தான் இந்த வெற்றி. தவிர, பெற்றோர்களும், மாணவர்களும் தீவிரமாக உழைத்தனர். தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கும். விளைவு, நாங்களும் சிறப்பு வகுப்புகளைத் தொடங்கினோம். இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்தது...'' என்​றார் உற்சாகம் கொப்​பளிக்க.

விருதுநகர் நாடார் சமுதாயத்தின் கே.வி.எஸ். பள்ளியின் முன்னாள் நிர்வாகி சங்கரவேல், ''எங்கள் சமுதாயம் 1905-ம் ஆண்டில் இருந்தே பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றது. தரமான கல்வி வழங்கினால்தான் நம் பிள்ளைகள் பெரிய அளவில் வர முடியும் என்பதை உணர்ந்தோம். அதன்படி, சுமாராக படிக்கும் மாணவர்கள், சிறப்பாகப் படிப்பவர்கள், மாநில அளவில் மார்க் பெறுபவர்கள் என்று தனித்தனியாக மதிப்பிட்டு, அதற்கு ஏற்றபடி சிறப்புப் பயிற்சிகளை ஏற்படுத்தினோம். விடுமுறைகளிலும், பள்ளி முடிந்த பிறகும், சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உணவும் வழங்கப்படுகிறது. ஆகவே, நாங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ஒருங்கிணைத்து உழைத்ததுதான் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்!'' என்றார் பூரிப்போடு.

No comments:

Post a Comment