Friday, May 27, 2011

அறிவியல் - அறியாததை அறிவோம்

 
நீர் நிரம்பிய வாளியில் கையை விட்டுச் சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்?
 

 
    நீர் நிரம்பிய வாளியில் கையை விட்டுச் சுழற்றும்போது, வாளியிலுள்ள நீர் சுழலுகிறது. இவ்வாறு சுழலும் நீருக்கு மைய விலக்கு விசை உண்டு. இது சுற்றுவேகத்தின் வர்க் கத்துக்கு நேர்விகிதத் தொடர்பு கொண்டிருக்கும். நீரை வேக மாகச் சுற்றச் சுற்ற இந்த விசையும் கூடுகிறது. மைய நோக்கு விசையால், வாளியில் மையத்திலிருந்து நீர் விலகி விளிம்புக்கு நகரும். இதனால் நீர்மட்டம் தாழ்ந்தும், விளிம்பில் உயர்ந்தும் காணப்படும். சுழலும் நீரின் மையப் பகுதியில் ஏற்படும் குழி சுழியாகிறது. 
 
சுண்ணாம்பில், நீர் ஊற்றினால் புகை வருவது ஏன்?


 
    சுட்ட சுண்ணாம்பு என்பது கால்ஷியம் ஆக்ஸைடு ஆகும். இதில் நீரை ஊற்றும் போது, கால்ஷியம் ஆக்ஸைடும் நீரும் சேரும்போது, கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு உண்டாகிறது. இந்த வேதிவினையில் வெப்பம் வெளிப்படுகிறது. அப்போது நீரின் ஒரு பகுதி நீராவியாக மாறும். கூடவே சுட்ட சுண்ணாம்புத் தூள்களும், நீராவியோடு கலந்து வருவதால் புகை மண்டலம் போல் காட்சி தருகிறது. இந்த கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு நீர்மத்தை சுவரில் பூசிய பின், அது காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு (Co2) உடன் வினை புரிந்து கால்ஷியம் கார்பனேட்டாக மாறுகிறது. இது சுவருக்கு வெண் மையைக் கொடுக்கும்.
 
வெண்ணிறப் பூக்கள் பெரும்பாலும் இரவில் மலர்வது ஏன்?
 
 
     இனப்பெருக்கத்துக்குக் காரணமான மகரந்தச் சேர்க்கையின் (pollination) பொருட்டு, பூச்சிகளைக் கவர்ந்து இழுப்பதற்கே, பூக்கள் பல வண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. பகல் நேரத்தில் பூச்சிகளை ஈர்க்க, பூவின் நிறம் பெரும் பங்காற்றும். ஆனால், இரவில் இந்த நோக்கத்துக்கு வண்ணங்கள் பயன்படுவதில்லை; மாறாக நல்ல நறுமணம் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் சக்தியாக விளங்குகிறது. மல்லிகை, முல்லை ஆகியன இதற்குச் சிறந்த உதாரணம். பகல் நேரத்தில் பட்டாம்பூச்சி, தேனீ, பறவை ஆகியவை பூக்களின் நிறங்களால் கவரப்பட்டு மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமாக விளங்குகின்றன. இரவு நேரங்களில் அந்துப் பூச்சி, விட்டில் பூச்சி, வௌவால் போன்றவை நறுமணக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு இதற்கு உதவுகின்றன. எனவே இரவு நேரங்களில் பூக்களின் வண்ணத்துக்கு முக்கியத்துவமே இல்லை. இதனால்தான் அவை வெளிறிய நிறங்களில் பெரும்பாலும் வெண்மை நிறத்தில் மலர்கின்றன.

1 comment:

  1. நல்ல தகவல்கள். அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிய தமிழில் கூறியுள்ளது அருமை. நன்றி . தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete