பஜாஜ்
டிஸ்கவர் வரிசையில் ஏற்கெனவே ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன. பஜாஜ் இந்த
வரிசை பைக்குகளில் அவ்வப்போது இன்ஜின், ஸ்டைல், கிராஃபிக்ஸ் என ஏதாவது
அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்கும். 100 சிசி செக்மென்டில் வெளிவந்த
டிஸ்கவர் 100M பைக்குக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, 125
செக்மென்ட்டிலும் மைலேஜ் வாடிக்கையாளர்களைக் கவர, டிஸ்கவர் 125M என்ற
மாடலைக் கொண்டுவந்துள்ளது பஜாஜ்.
கம்யூட்டர் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களை, எல்லா
செக்மென்ட்டிலும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பதால், மைலேஜ்
விஷயத்திலும் தெளிவாக இருக்கிறது பஜாஜ். ஏற்கெனவே, டிஸ்கவர் 125 சிசி
மாடலில் ST, T ஆகிய மாடல்கள் இருக்க... இன்ஜினில் சின்ன மாறுதல்கள் செய்து
'M’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது பஜாஜ். M என்றால், மைலேஜ் என்று
அர்த்தமாம். சரி, கம்யூட்டர் பைக் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப்
பூர்த்திசெய்யுமா இந்த பைக்?
ஏற்கெனவே விற்பனையில் உள்ள டிஸ்கவர் 125
பைக்குகளுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. ஆனால், பாடி
கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர் வேலைப்பாடுகள் புதுசு. தனித்துவமான 10
ஸ்போக் அலாய் வீல்களும், சைலன்ஸர், இன்ஜின் ஆகியவற்றில் பூசப்பட்டுள்ள
கறுப்பு வண்ணமும் மிளிர்கிறது. ஹெட்லைட்டின் மீது கவிந்திருக்கும் வைஸர்
கவர்ச்சியாக இருக்கிறது. இதன் மறைவில் உள்ள மீட்டர் கன்ஸோல் பேனல்,
அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அனலாக் ஸ்பீடோ, ஓடோ
மீட்டரும்... பெட்ரோல் மீட்டரும் உள்ளன. நீளமான பேனலில் நியூட்ரல்,
ஹெட்லைட், இண்டிகேட்டர் சிக்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சீட்டில் அமர்ந்தால், உயரமான இடத்தில்
அமர்ந்திருப்பதுபோன்று இருக்கிறது. டேங்க், கால்களை அணைத்து வைத்துக்கொள்ள
வசதியாக இருக்கிறது. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத்
தெளிவாகக் காட்டுகின்றன. ஹேண்டில்பார், பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக
இருக்கிறது. ஃபுட்ரெஸ்ட் - கால்களை வைக்க வசதியாக இருந்தாலும்,
கியர்பாக்ஸில் கால் படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால், இன்ஜின் சூடு
கால்களைப் பதம்பார்க்கிறது. ஷூ அணிபவர்களுக்குப் பிரச்னை இல்லை. சைடு
பேனலில் இருக்கும் 125M லோகோ மட்டுமே வித்தியாசம் எனலாம். மற்றபடி டெயில்
லைட், கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர் போன்றவை டிஸ்கவர் மாடல்களில்
இருப்பதுதான்.
டிஸ்கவர் 125 மாடல்களில் இருக்கும் அதே 124.6 சிங்கிள்
சிலிண்டர் ஏர் கூல்டு, DTS-i இன்ஜின்தான் என்றாலும், மைலேஜுக்காக பவரில்
சில மாறுதல்கள் செய்திருக்கிறது பஜாஜ். 8,000 ஆர்பிஎம்-ல் 11.3 bhp
சக்தியையும் 6,000 ஆர்பிஎம்-ல் 1.10 kgm டார்க்கையும் அளிக்கிறது இந்த
இன்ஜின். இது, டிஸ்கவர் 125T மாடலைவிட 1 bhp சக்தி குறைவு. அதேபோல்,
125 ST மாடலைவிட 1.5bhp சக்தி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மைலேஜுக்காக சக்தியை அட்ஜஸ்ட் செய்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. இதன் 4
ஸ்பீடு கியர்பாக்ஸ், மைலேஜுக்காகவே டிஸைன் செய்யப்பட்டுள்ளதைப் போலவே
இருக்கிறது. கியர் மாற்றுவது ஸ்மூத்தாக இருந்தாலும், வலுவாக மிதிக்க
வேண்டியது அவசியம். டிஸ்கவர் வாகனங்களுக்கு உரித்தான இன்ஜின் சத்ததுடன்,
ஸ்மூத்தாகவே இயங்குகிறது 125M இன்ஜின்.
உயரமான ஓட்டுதல் பொசிஷனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள
டிஸ்கவர் 125M, அன்றாடப் பயன்பாட்டுக்கான வாகனமாக
வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நகரம், நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் ஓட்டுவதற்கு
ஏற்ப இருந்தாலும், நீளமான வீல்பேஸ் காரணமாக சிட்டி டிராஃபிக்கில் வளைத்து
நெளித்து ஓட்டுவது சிரமமே. பிரேக், கையாளுமை சிறப்பாக இருந்தாலும்,
டயர்களில் போதுமான கிரிப் இல்லை. பெயருக்கு ஏற்றபடி, நகருக்குள்
லிட்டருக்கு 55.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 57.8 கி.மீ மைலேஜ் அளிக்கிறது
டிஸ்கவர் 125M.
100 சிசி செக்மென்ட்டில் இருப்பவர்கள், மைலேஜை சமரசம் செய்துகொள்ளாமல், அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஏற்ற பைக், டிஸ்கவர் 125M.
No comments:
Post a Comment