Saturday, May 10, 2014

அருள்வாக்கு - மாலை மாற்று

 
‘விகடகவி’, ‘குடகு’ முதலிய வார்த்தைகளைத் திருப்பிப் படித்தாலும், ‘விகடகவி’, ‘குடகு’ என்றே இருக்கும். ‘மலையாளம்’ என்பதை இங்கிலீஷில் Malayalam என்று எழுதினால் திருப்பிப் படித்தாலும் அதே ஸ்பெல்லிங் வரும். இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.
 
காசியாத்திரை ஹிந்துவாகப் பிறந்தவர்களுக்கு முக்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. அதோடு கயா ச்ராத்தம், த்ரிவேணி என்கிற ப்ரயாகையில் ஸ்நானம், பித்ரு கார்யம் எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. இதையும் பாலின்ட்ரோமாகச் சொல்வதுண்டு. காசிக்கு காசிகா என்றும் பெயர். இது பின்னிருந்து முன்னாகவும் ‘காசிகா’தான். ‘கயா ப்ரயாக’ என்பதும் இப்படியே.இப்படி ஒரு வார்த்தையைத் தலைகீழாகப் படிப்பதைப் பெரிய விளையாட்டாகப் பண்ணி காவ்ய ரஸத்தைப் பற்றியே ரஸமாக ஒரு ஸ்லோகம் இருப்பதாக ஒரு பண்டிதர் சொன்னார். ‘ஸாக்ஷரா’ என்றால் வெறுமே படிப்பறிவு மட்டுமுள்ளவர்கள் என்று அர்த்தம். அதாவது வறட்டு வறட்டு என்று நிறையப் படித்திருப்பார்கள். இலக்கியச் சுவையில் ஊறியிருக்கமாட்டார்கள். ‘ஸரஸ’ என்றால் இலக்கியச் சுவையில், காவ்ய ரஸத்தில் ஊறியவன் என்று அர்த்தம். ரஸம் அறிகிற பக்வ மனஸ் இல்லாமலிருக்கிறவன் அந்தப் படிப்பு நெறியிலிருந்து மாறினால் குணம்கெட்ட ராக்ஷஸனாகி விடுவான்; ஆனால் ரஸிகனோ எப்படி வெளியிலே மாறினாலும் அவனுடைய உயர்ந்த ரஸிகத் தன்மை போகவே போகாது என்பது அந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்.ஸாக்ஷரா, ஸரஸ என்ற வார்த்தைகளைத் திருப்பிப் போட்டே இந்த தாத்பர்யத்தை ஸ்லோகம் நிலைநாட்டி விடுகிறது. ‘ஸாக்ஷரா’வைத் திருப்பிப் படித்தால் ‘ராக்ஷஸா’! ‘ஸரஸ’வோ திருப்பிப் படித்தாலும் ‘ஸரஸ’வேதானே?திருஞானஸம்பந்தர் ஸாக்ஷபத் பரதேவதையின் க்ஷீரத்தைப் பானம் பண்ணியதால் குழந்தையாக இருந்து கொண்டே எத்தனைவிதமான செய்யுள் வகை உண்டோ அத்தனையிலும் வர்ஷிக்கிறாற்போலக் கொட்டினவர். பாலின்ட்ரோமாகவே முழுச் செய்யுள் செய்வதற்கு ‘மாலை மாற்று’ என்று பேர். மிகவும் கஷ்டமான இந்த ‘மாலை மாற்று’ வகையில் பதினோரு இரட்டை வரிச் செய்யுள்களை ஞானஸம்பந்தர் அநுக்ரஹித்திருக்கிறார்.
 
படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கும். முதல் அடி இப்படி இருக்கிறது.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
கடைசியிலிருந்து திருப்பிப் படியுங்கள்; அதுவே வரும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

No comments:

Post a Comment