Monday, May 26, 2014

தில்லி - ஐ.பி.எல் - சச்சின் -மெஸ்ஸி- ‘சக் தே இந்தியா’


தில்லி இந்த முறையும் தனது இயல்பை விட்டுக் கொடுக்கவில்லை. இதுவரை நடந்த ஐ.பி.எல்.களில் இரண்டு முறை கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த தில்லி, இந்தமுறையும் வெற்றிகரமாக கடைசி இரண்டு இடங்களில் ஒன்றைப் பிடித்துவிட்டது. ஐ.பி.எல். வரலாற்றில் மிகவும் மோசமாக ஆடுகிற அணிகளில் ஒன்றாக தில்லி இருப்பது யாரும் எதிர்பாராத ஒன்று. இத்தனைக்கும் இந்திய அணியில் ஏகப்பட்ட தில்லி வீரர்கள் ஆடுகிறார்கள். தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஐ.பி.எல்.லில் மட்டும் தில்லிக்கு இன்னமும் ஒரு நல்ல அணி வாய்க்கவில்லை. 2011, 2013 வருடங்களில் கடைசி இடத்தைப் பிடித்ததால் இந்த முறை ஒட்டுமொத்த அணியையும் மாற்றி அமைத்தார்கள். ஆனாலும் மீண்டும் மீண்டும் கடைசி இடத்தைப் பிடிப்பதே தில்லியின் வழக்கமாக இருக்கிறது. அடுத்த வருடமும் தில்லி அணியில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அதேபோல கடந்த 6 ஐ.பி.எல்.களில் ஒரே ஒருமுறை மட்டுமே ஃப்ளே ஆஃப்க்குத் தகுதி பெற்ற பஞ்சாப் அணி, இந்தமுறை ருத்ரதாண்டவம் ஆடுகிறது. மேக்ஸ்வெல், மில்லர் அவுட் ஆனால்கூட இளம் வீரர்கள் அணியைக் கரை சேர்க்கிறார்கள். ஒரு மேட்சில் ஷேவாக் ஆடினால், அடுத்த மேட்சில் சஹா பட்டையைக் கிளப்புகிறார். திடீரென்று வோஹ்ரா அடி பின்னுகிறார். பஞ்சாப் அணியைத் தாண்டி ஐ.பி.எல்.ஐ. வெல்ல முடியுமா என்பதுதான் மற்ற அணிகளின் கவலை. பஞ்சாப் ஐ.பி.எல்.ஐ வென்று, மேன் ஆஃப் தி மேட்ச், மேன் ஆஃப் தி சீரீஸ் பட்டங்களை மேக்ஸ் வெல் வெல்வார் என்பதுதான் பலருடைய ஆருடம்! ஆனால் டி20யில் அதிர்ச்சிகளுக்கு எப்போதும் இடமுண்டு. இந்த ஐ.பி.எல். என்னவிதமான ஆச்சர்யங்களைத் தரப்போகிறதோ?!

சி.எஸ்.கே. இந்த முறை ஒரு தவறு செய்துவிட்டது. ராஜஸ்தான் அணியில் லெக்ஸ்பின்னரான 42 வயது பிரவின் டாம்பேவை ஏலத்தில் தேர்ந்தெடுத்திருந்தால் சென்னைக்குப் பல சௌகரியங்கள் கிடைத்திருக்கும். இவ்வளவு திறமையான இந்திய வீரர், அதுவும் இவ்வளவு குறைந்த தொகைக்குக் கிடைப்பது மிகவும் அரிது. ஏலத்தில், வெறும் 10 லட்சத்துக்கு மட்டுமே விலை போனார் டாம்பே. இத்தனைக்கும் அவர் சென்ற வருட ஐ.பி.எல். சாம்பி யன்ஸ் டிராபி இரண்டிலும் அற்புதமாக பௌலிங் செய்து கலக்கினார். வயதைக் காரணம் காட்டி அவர் மீது எந்த அணியும் நம்பிக்கை வைக்காதது, ராஜஸ்தானுக்குச் சாதகமாகப் போய்விட்டது. 10 லட்சத்துக்கு இத்தனை திறமைகளைக் காண்பித்த வீரர் யாருமில்லை. ‘என்னுடைய வேலையை எளிதாக்குகிறார், டாம்பேவுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் வாட்சன் சொல்லும் அளவுக்கு அணியில் டாம்பேவின் பங்களிப்பு மிக அபாரமாக இருக்கிறது. இந்திய டி20 அணியில் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்க்கலாம்.  

இந்தமுறையும் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஒரு வெளிநாட்டு வீரர்தான் (மேக்ஸ்வெல் அல்லது ஸ்மித்) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஐ.பி.எல். ஆரம்பித்தது முதல் இன்றுவரை, 2010ம் வருடம் தவிர (சச்சின்), மற்ற எல்லா வருடங்களிலும் வெளிநாட்டு வீரர்கள்தான் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்கள். கடந்த மூன்று வருடங்களில் இரண்டு முறை இந்தப் பெருமை கெல்-குச் சென்றது. இந்தியாவில் நடக்கும் ஒரு போட்டியில், இந்திய பிட்சில், வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணி வீரர்களைத் தாண்டிச் செல்வது விநோதம்தான்.

இந்த வருட ப்ரெஞ்ச் ஓபனை நடாலால் ஜெயிக்க முடியுமா என்கிற கேள்வி டென்னிஸ் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ப்ரெஞ்ச் ஓபனுக்கு முன்பு கடைசியாக நடந்த ரோம் மாஸ்டர்ஸ் போட்டியிலும் நடால் தோற்றுவிட்டார். களிமண் தரையில் நடால்தான் எப்போதும் ராஜா. கடந்த 9 வருடங்களில் எட்டு முறை ப்ரெஞ்ச் ஓபன் சாம்பியன். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மூன்று களிமண் தரையில் நடந்த போட்டிகளிலும் நடாலால் சாம்பியன் ஆகமுடியவில்லை. இந்த மூன்று தோல்விகளால் நடாலால் ப்ரெஞ்ச் ஓபனை ஜெயிக்க முடியுமா என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ப்ரெஞ்ச் ஓபன் போட்டிக்கான சரியான பயிற்சி கிடைக்கவில்லை, தொடர்ந்து தோற்றிருக்கிறார், ஜெயிப்பது கடினம்தான் என்பது பல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. 2005க்குப் பிறகு இப்போதுதான் நடாலுக்கு இப்படியொரு சங்கடம் ஏற்பட்டுள்ளது.  \\

ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் நடாலைத் தோற்கடித்து சாம்பியன் ஆன ஜோகோவிச், இருவருக்கும் நடந்த 41 போட்டிகளில் 19 முறை வென்றிருக்கிறார். கடந்த இரண்டு ப்ரெஞ்ச் ஓபன் போட்டிகளிலும் ஜோகோவிச், நடாலிடம்தான் தோற்றுப்போனார். ஆனால் இந்தமுறை நடாலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறவர், ஜோகோவிச்தான். இன்னும் இரண்டு வாரங்களில் நடால் மீண்டும் ப்ரெஞ்ச் ஓபன் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளப்போகிறாரா அல்லது கோட்டை தகர்க்கப்படுமா என்பது தெரிந்துவிடும்.உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரரான 26 வயது மெஸ்ஸிக்கு பார்சிலோனா அணி, வருடத்துக்கு 160 கோடி ரூபாய் சம்பளம் அளிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. (2018க்குப் பிறகு ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படும்) 2004-05 முதல், பார்சிலோனா அணிக்காக ஆடிவரும் அர்ஜெண்டினா வீரரான மெஸ்ஸியால் இதுவரை 21 போட்டிகளை வென்றுள்ளது பார்சிலோனா அணி. சம்பளம், விளம்பர வருவாய் எல்லாம் சேர்த்து மெஸ்ஸி வருடத்துக்கு 426 கோடி ரூபாய் சம்பாதித்து, உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர் என்கிற அந்தஸ்தை அடைந்துள்ளார்! 

‘லகான்’, ‘சக் தே இந்தியா’ போன்ற விளையாட்டுத் தொடர்பான படங்களுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 5 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக்ஸில் வெண்கலம் என இந்தியாவுக்குச் சர்வதேச அரங்கில் பெருமைத் தேடித் தந்துள்ள பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு, அவரது பெயரிலேயே ஹிந்திப் படமாக உருவாகி வருகிறது. மேரிகோமாக நடிப்பவர், பிரியங்கா சோப்ரா. இந்தப் படம் பார்த்த பிறகு பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்துவார்கள். 17 வயதில், சாலையில் ஒருவன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தபோது, தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி அவனிடமிருந்து தப்பித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாறு, பெண்களுக்கு நிச்சயம் ஒரு தூண்டுகோலாக இருக்கும்" என்கிறார் மேரி கோம். தன்னைப் பற்றிய கதை என்பதால் மேரி கோமின் சம்மதத்துடன்தான் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய காதல் மற்றும் திருமணக் காட்சிகள் மிகவும் சுவாரசியமான முறையில் வந்துள்ளன," என்கிறார் மேரி கோமின் கணவர். சென்ற வருடம் வெளியான மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பாக் மில்கா பாக்’, சூப்பர் ஹிட் ஆகி, நூறு கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்த வரிசையில், மேரி கோம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ‘மேரி கோம்’ அக்டோபர் 2ம்தேதி வெளியாகிறது.  

ச.ந.கண்ணன்


No comments:

Post a Comment