Saturday, May 17, 2014

‘யெல் நினோ’ - கடலில் கிளம்பும் பூதம்

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவின் யாங்ஸே நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 1,500 பேர் மாண்டனர். இதற்குக் காரணம் அப்போது கடற்பரப்பில் ஏற்பட்ட ‘யெல் நினோ’தான். இப்போது பசிபிக் பெருங்கடலில் வெப்ப அளவு கன்னாபின்னா என்று அதிகமாகி வெப்பமடைந்த தண்ணீர்ப் பரப்பு கிழக்கு நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறதாம். இது முந்தைய பல பத்தாண்டுகளில் இல்லாத அளவில் எல்லோரும் கவலைப்படுகிற மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்கிறார் ஆஸ்திரேலியாவின் பருவநிலை அறிவியலாளர் ஒருவர். 
 
பசிபிக் கடல் பரப்பில் இப்படி வெப்பநிலை உருவாவதைத்தான் ‘யெல் நினோ’ என்கிறார்கள். இதன் விளைவாக உலக உருண்டையின் வெவ்வேறு பகுதிகளில் ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கும் இன்னொரு பக்கம் கடும் வறட்சியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்படைகிறது.இன்னும் கொசுக்களால் உண்டாகும் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்களும் விரைவாகப் பரவுகிற அபாயம் உண்டு. இந்தியா, வெனிசுலா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் மலேரியா நோய்ச் சுழற்சி ஏற்படுவதற்கு ‘யெல் நினோ’ பாதிப்பே காரணம் என்பதை இப்போது கண்டறிந்திருக்கிறார்கள். ‘யெல் நினோ’ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு ‘சிறுவன்’ என்று பொருள் கொள்ளலாம். பொதுவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பரப்பில் கிறிஸ்துமஸ் காலத்தையொட்டி இது ஏற்படுவதால் இதைக் ‘குழந்தை இயேசு’ என்று அடையாளப்படுத்தினார்கள். பசிபிக் கடற்கரைக்கு அப்பால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் வெப்பமடைவதுதான் ‘யெல் நினோ’. இதேபோல் அளவுக்கு அதிகமாகக் கடல் பரப்பு குளிர்ச்சியடைவதும் உண்டு. இதை ‘லா நினா’ என்பார்கள். இதற்கு ‘சிறுமி’ என்று பொருள். முற்காலத்தில் இதை ‘யெல் வீஜோ’ (கிழவன்) என்று வழங்கியிருக்கிறார்கள். கீழைப் பசிபிக் பெருங்கடலின் நீர்ப் பரப்பில் இப்படி ஏற்படுகிற வெப்ப அளவு மாறுபாடுகளை ‘யென்ஸோ’ என்ற ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார்கள். (யெல் நினோ சதர்ன் ஆஸிலேஷன்). இந்த மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை இன்னும் முழுமையாக ஆராய்ந்து சொல்ல முடியவில்லை. பொதுவாக, வேளாண்மை, மீன்பிடித் தொழில்களை மட்டுமே சார்ந்துள்ள வளர்ந்துவரும் நாடுகள், குறிப்பாக பசிபிக் பெருங்கடல் பரப்பை ஒட்டியிருக்கும் நாடுகள் இந்த விளைவுகளால் பெரிதும் பாதிப்படைகின்றன.
 
இந்த விளைவு ஒழுங்கற்ற கால இடைவெளியில் ஏற்படுகின்றன. இரண்டு முதல் ஏழு ஆண்டுகள்.  சராசரியாக ஐந்து ஆண்டுகள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கடல் பரப்பு வெப்ப நீட்டிப்பு ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை இருக்கலாம். அதற்கு மேலும் கால அளவு நீண்டால் இதை ‘யெல் நினோ எபிஸோட்’ என்கிறார்கள்.
 
இந்த ‘பூதம் கிளம்பிவிட்டது’ என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்துகொள்வது?  

* இந்தியப் பெருங்கடல், இந்தோனேஷியக் கடல் பகுதி, ஆஸ்திரேலியக் கடல்பகுதிகளில் மேல் மட்ட அழுத்தம் அதிகமாகும்.
 
* பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதியிலுள்ள தாஹித்தி போன்ற பகுதிகளில் மேற்பரப்பின் காற்றழுத்த அளவு வீழ்ச்சியடையும்.
 
* தென் பசிபிக் பகுதியின் டிரேட் விண்டின் வேகம் பலவீனமடையும் அல்லது கிழக்கு நோக்கித் திரும்பும்.
 
* பெருவுக்கு அருகில் காற்றின் வெப்ப அளவு கூடுதலாகி வடக்குப் பெரு பாலைவனப் பகுதிகளில் மழை கொட்டும்.  

* மேற்குப் பசிபிக், இந்தியப் பெருங்கடல் பரப்பிலிருந்து கிழக்குப் பசிபிக் வரை வெப்பநீர் பரவும். இதனால் மேலைப் பசிபிக் பகுதியில் கடும் வறட்சியும், சாதாரணமாக வறண்ட \ பகுதியாக உள்ள கீழைப் பசிபிக் பகுதியில் பெருமழையும் பொழியும்.
 
1972 யெல் நினோ விளைவின்போது கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழில் பெரும் அளவுக்குப் பாதிப்படைந்ததாம். 1982 -83 விளைவின் போது சில குறிப்பிட்ட மீன் இனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. சிலவகை மீன் இனங்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
 
2008 மார்ச்சில் ஏற்பட்ட ‘லா நினா’ விளைவின்போது மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது.கடந்த பல பத்தாண்டுகளாக ‘யெல் நினோ’ விளைவுகள் கூடுதலாகியுள்ளன என்றும், ‘லா நினா’ விளைவுகள் குறைந்துள்ளன என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்) என்று நம்பப்படுகிறது.வரலாற்றைப் புரட்டிப் போட்டதிலும் இந்த முகமறியாத ‘யெல் நினோ’வின் பங்கு இருக்கிறது. 1789 - 1793 விளைவுகளால் ஐரோப்பாவில் வேளாண் விளைபொருள் உற்பத்தி பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு, ‘பிரெஞ்சுப் புரட்சி’யே உருவாகக் காரணமானதாம். 1876-77 ‘யெல் நினோ’ விளைவால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வட சீனாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஒருகோடியே முப்பது லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.உலகிலேயே பாம் ஆயில் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தோனேஷியா. 2014 ஜூன் வாக்கில் ‘யெல் நினோ’ விளைவு தொடங்கிவிட்டால் இதில் கடும் பாதிப்பு உண்டாகுமாம்.
 
‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து...’ என்று ஆண்டாள் பாடிய காலம் போயே போய்விட்டது. தாறுமாறான பருவநிலைகள் உருவாவதற்கு மனிதர்களின் சுயநலமே காரணமாக அமைந்து விட்டிருக்கிறது. முக்கியமாக வனவளத்தைப் பறிகொடுத்துவிட்டுக் ‘கான்கிரீட் காடு’களைத் தினமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ‘யெல் நினோ’, அது இது என்று எதன் மீதாவது பழிபோடவா நமக்குத் தெரியாது?
 
சுப்ர.பாலன்

No comments:

Post a Comment