Friday, June 13, 2014

ஹோண்டா ஆக்டிவா 125

 63,500(உத்தேச விலை)

டிஸைன் - இன்ஜினீயரிங் 

ஹோண்டா ஆக்டிவா-125 பார்க்க ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், இது ஒரு ஆக்டிவா பிராண்டு ஸ்கூட்டர் என்பதை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதால், பாரம்பரிய ஆக்டிவா ஸ்டைலிங்கை அதிகம் குறைக்காமல் இருக்கிறது ஹோண்டா. பைலட் லேம்ப் கொண்ட ஹாலோஜன் ஹெட்லைட், ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரின் முன் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஷட்டர் டைப் சாவித் துவாரம் கொடுக்கப்பட்டுள்ள ஆக்டிவா 125-ல், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஓட்டும்போது எளிதாகப் படிக்கும் வகையில் இருக்கிறது. ஸ்பீடோ மீட்டர் அனலாக்தான். டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ் போன்றவை காட்டப்படுகின்றன. மற்ற ஹோண்டா ஸ்கூட்டர்களைப் போலவே ஆக்டிவா 125 மாடலிலும் சுவிட்ச்சுகள் தரமாக இயங்குகின்றன. கைப்பிடி க்ரிப் சூப்பர்!

ஆனால், ஒரு ஸ்கூட்டருக்கு முக்கியமான அம்சமான ரியர் பிரேக் லாக் கிளாம்ப்-ஐ, இதன் டாப் வேரியன்ட்டில் தராமல் விட்டுவிட்டது ஹோண்டா. சீட்டுக்குக் கீழே நல்ல இடவசதி உள்ளது. ஆனால், ஸ்கூட்டரின் முன் பக்கமும் கொஞ்சம் இட வசதி ஏற்படுத்தித் தந்திருக்கலாம். பின் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, சாதாரண ஆக்டிவா போலத்தான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் தரமும், கட்டுமானமும் நன்றாக இருக்கிறது.

இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பெர்ஃபாமென்ஸ் 

இதுதான் இந்தியாவில் ஹோண்டாவின் முதல் 125 சிசி ஸ்கூட்டர். என்றாலும், இன்ஜின் சத்தம் என்னவோ பழைய ஆக்டிவாவைப் போலத்தான் இருக்கிறது. மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரியுடன் பட்டன் ஸ்டார்ட் இருந்தாலும், அவசரத்துக்காக கிக் லீவரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா 125-ல் இருப்பது 124.9 சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின். சாதாரண ஆக்டிவாவைவிட 0.6 bhp அதிகமாக, அதாவது 8.6 bhp சக்தியை 6,500 ஆர்பிம்-ல் அளிக்கிறது. ஆனால், இந்த சக்தி பழைய ஆக்டிவாவை விட 1,000 ஆர்பிஎம் கூடுதலாகவே வெளிப்படுகிறது. அதிகபட்சமாக 1 kgm டார்க்கை 5,500 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. கார்புரேட்டர் மூலம்தான் இன்ஜின் எரிபொருளை எடுத்துக் கொள்கிறது.

ஆக்டிவா 125-ல் விஸ்கஸ் (Viscous) டைப் ஏர் ஃபில்டர் உள்ளது. எல்லா ஸ்கூட்டர்களிலும் உள்ள சிவிடி டிரான்ஸ்மிஷன்தான் இதிலும். சக்தி அபரிமிதமாக வெளியாகாமல், குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்தே சீரான, ஸ்மூத்தான பவர் டெலிவரி இருக்கிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் திராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருப்பதால், நகர டிராஃபிக்கில் எளிதாக ஓவர்டேக் செய்து ஓட்ட முடிகிறது. 0 - 60 கி.மீ வேகத்தை 9.29 விநாடிகளில் அடைகிறது ஆக்டிவா 125. டாப் ஸ்பீடு மணிக்கு 88 கி.மீ. மணிக்கு 80 கி.மீ வேகங்களில் ஸ்மூத்தாக க்ரூஸ் செய்யவும் முடிகிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை 

ஆக்டிவா 125-ன் இருக்கை அகலமாக, நீளமாக, அமர்வதற்கு சொகுசாக இருக்கிறது. ஹேண்டில்பாரை முழுவதுமாக வளைத்தாலும் முழங்காலில் இடிக்கவில்லை. 5 ஸ்போக் அலாய் வீல்கள் பார்க்க உயர்தரமான உணர்வை அளிக்கின்றன. இதுவரை ஆக்டிவா மாடல்களில் எல்லாரும் கேட்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனை 125 மாடலில் பொருத்தியிருக்கிறது ஹோண்டா. பின் பக்கம் ஒரு ஷாக் அப்ஸார்பர் இருக்கிறது. மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில், பழைய ஆக்டிவா கொஞ்சம் தூக்கிப்போடும். ஆனால், ஆக்டிவா 125 மாடலில் இந்தப் பிரச்னை இல்லை.

பிரேக்ஸ் விஷயத்திலும் சொன்னதைக் கேட்கிறது ஆக்டிவா 125. முன் பக்கம் 190 மீமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. ஹோண்டாவின் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் இதில் உண்டு. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும்போது, முழுமையாக நிற்க 16.65 மீட்டர் தூரத்தை எடுத்துக்கொண்டது. இதன் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ், இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர்களிலேயே சிறந்தது எனலாம்.

மைலேஜ் 

ஹோண்டா ஆக்டிவா 125, நகருக்குள் லிட்டருக்கு 44.1 கி.மீ, நெடுஞ்சாலையில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்தால், லிட்டருக்கு 47.3 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.


 

ஹோண்டா ஆக்டிவா 125, ஒரு நல்ல ஆல்ரவுண்டர். ஒரு சாதாரண ஸ்கூட்டர் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சிறந்த பெர்ஃபாமென்ஸும், அதிக மைலேஜும் உத்திரவாதம். கட்டுமானத் தரமும் நன்றாக இருக்கிறது. ஓட்டுதல் மற்றும் கையாளுமையைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. இதில் அமர்ந்து ஓட்டினால், வேறு ஸ்கூட்டர்களை ஓட்டவே பிடிக்காது. ஹோண்டா ஆக்டிவா 125தான் இப்போது இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்!




No comments:

Post a Comment