Sunday, June 22, 2014

ஃப்ராங்க்ளின் - தடைக்கல்லும் படிக்கல்லே

ஏதாவது ஒரு சின்ன விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டாலே போதும், அதை நான்தான் கண்டுபிடித்தேன் என காப்பி ரைட் வாங்கும் காலமிது. ஆனால், தான் கண்டுபிடித்த எதற்கும் காப்புரிமை வேண்டாம்; அவையெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேரட்டும் என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தவர்தான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். இத்தனை நல்ல உள்ளம் கொண்ட இவரது வாழ்க்கை, சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது.

1706-ம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்த இவரது தந்தை மெழுகுவத்தி மற்றும் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்தார். இவருக்கு மொத்தம் 17 குழந்தைகள். அதில் 15-வது குழந்தைதான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். சிறுவயதிலிருந்தே குடும்பச் சூழ்நிலையால் வறுமையில் வாடிய ஃப்ராங்க்ளினால் ஓர் ஆண்டுக்குமேல், படிப்பை தொடர முடியவில்லை. அதனால் தன் தந்தையோடு இணைந்து மெழுகுவத்தித் தயாரிக்கும் தொழிலை செய்யத் தொடங்கினார்.

 

இதற்குபின், தன் அண்ணனின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்து பெண்களுக்கான உரிமைகளைப் பற்றிப் புனைப்பெயரில் புரட்சிகரமாக எழுதினார். அதற்காக இவரது அண்ணன் சிறை வைக்கப்பட்டதால் குடும்பத்தினர் ஃப்ராங்க்ளினை வெறுத்து ஒதுக்கினர். வீட்டைவிட்டு வெளியேறி தனியாகப் பத்திரிகை நடத்தத் தொடங்கினார் ஃப்ராங்க்ளின். பத்திரிகையில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

ஒருநாள் மழையில் நனைந்தபடி பட்டம் விட்டுக்கொண்டிருக்கும்போது, அதன் மூலம் மின்சாரம் கடத்தப்படுவதை உணர்ந்தார். இதன் மூலம் பெரிய கட்டடங்கள் இடிமூலம் தாக்கப்படுவதைத் தடுக்கலாம் என்று இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.

அதுமட்டுமின்றி மின்சாரம் தொடர்பான கண்டுபிடிப்புகளைச் செய்தார். இவர் கண்டுபிடித்த எதற்கும் காப்புரிமை கோரவில்லை. அவையெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதனாலேயே அவர் கண்டுபிடித்த விஷயங்களைத் தனது சொத்தாக அவர் நினைக்கவில்லை.

மக்களின் உரிமை பற்றிப் பத்திரிகையில் எழுதியதற்காக நிந்திக்கப்பட்டார். ஆனால், பிற்காலத்தில் அவரது உருவம் அமெரிக்க டாலரில் இடம்பெறுகிற அளவுக்கு உயர்ந்தார். உண்மையாக உழைப்பவர்கள் இன்று துன்பம் அனுபவித்தாலும், வரலாற்றில் இடம் பெறுவார்கள் என்பதற்கு ஃப்ராங்க்ளினின் வாழ்க்கை ஓர் அற்புதமான உதாரணம்!

No comments:

Post a Comment