Friday, June 13, 2014

ஜெர்மன் மொழி - பயிற்சி வகுப்புகள் சென்னையில்

'ஆங்கிலம் கற்றுக்கொண்டால் மட்டுமே உலகில் எந்த மூலைக்கும் சென்று சமாளிக்கலாம்' என்கிற நினைப்பு... நியாயமானதாக இருக்கலாம். அதேசமயம், படிப்பு, வியாபாரம் என்று அனைத்துத் துறைகளிலும் தங்கள் தாய்மொழி வழியில் மட்டுமே இன்றும் இயங்கக்கூடிய நாடுகள் இங்கே அதிகம் என்பதை மறந்துவிட வேண்டாம். ஜெர்மனி, அரபு நாடுகள், ஃபிரான்ஸ், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளைப் பட்டியலிட முடியும். இங்கெல்லாம் பணி நிமித்தம் செல்ல நேர்ந்தால், அந்தந்த மொழியைக் கற்க வேண்டியது அவசியம் என்பதால், இப்போது அந்த பயிற்சி வகுப்புகள் சென்னையில் பெருகியுள்ளன. அவற்றில் முதன்மையான மொழிகளின் விவரங்கள் இங்கே...

ஜெர்மன்: ''ஜெர்மன் மொழியில் ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2 என மொத்தம் ஆறு நிலைகள் உள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரையிலும் ஒரு செட் வகுப்புகள், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என்ற கணக்கில், ஒரு நிலைக்கு ஆறு வாரங்கள் ஆகும். சனி, ஞாயிறு செட் வகுப்புகள் என்றால், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என நான்கு மாதங்கள் நடக்கும். ஞாயிறு மட்டும் நடக்கும் வகுப்புகளில், ஒரு நிலைக்கு ஆறு மாதங்கள் எடுக்கும். வார நாட்களில் நடைபெறும் வகுப்புகளுக்கு 14 ஆயிரம் ரூபாயும், வார இறுதி நாட்கள் வகுப்புகளுக்கு 16 ஆயிரம் ரூபாயும் ஒரு நிலைக்கான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 17 வயது நிரம்பியவர்கள் இதைக் கற்கலாம்.


அராபிக்: சென்னை தி.நகரில் உள்ள 'அராபிக் இன்ஸ்டிடியூட்’ நான்கு வருடங்களாக அராபிக் மொழியைக் கற்றுத்தருகிறார்கள். ஒரே வருடத்தில் மொழியை எழுத, படிக்க, புரிந்துகொள்ள முடியும். மொத்தம் மூன்று நிலைகள் உள்ளன. நிலை ஒன்றுக்கு 60 மணி நேரம், நிலை இரண்டுக்கு 80 மணி நேரம், நிலை மூன்றுக்கு 120 மணி நேரம் ஆகிறது. ஒரு நிலைக்கு 7,000 ரூபாய் கட்டணம். திடீரென்று வேலைக்குச் செல்பவர்களுக்கென குறுகியகால வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதில் 50 மணி நேரத்திலேயே பேச, சரியாக உச்சரிக்கக் கற்றுத்தரப்படுகிறது. இதற்கான கட்டணம், ஒரு மணி நேரத்துக்கு 200 ரூபாய். குழந்தைகளுக்கென தனிவகுப்புகளும் உண்டு. எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்படுவது, அரபு மொழியின் சிறப்பு.

ஸ்பானிஷ்: அடையாறிலும், பெசன்ட் நகரிலும் உள்ள 'இன்ஸ்டிடியூட்டோ ஹிஸ்பேனியா’ பயிற்சி மையத்தில் ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. பேசிக், இன்டர்மீடியட், டிப்ளோமா என்று 8 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன வகுப்புகள். பேசிக் லெவலுக்கு 70 மணி நேரம், 2 - 5 நிலைகளுக்கு 60 மணி நேரம், 6 - 7 நிலைகளுக்கு 50 மணி நேரம், 8-ம் நிலைக்கு 50 மணி நேரம் என்று வகுப்புகள் நடக்கும். இந்த 8-ம் நிலை, இலக்கிய நிலை எனப்படும். 1 - 7 நிலைகள் ஒவ்வொன்றுக்கும் 10,700 ரூபாயும், 8-ம் நிலைக்கு 11,000 ரூபாயும் கட்டணம். பள்ளி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனத்தினர் என்று பலதரப்பினரும் வரும் இந்த மையத்தில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்களே வகுப்பெடுக்கின்றனர்.

ஜாப்பனீஸ்: அமைந்தகரையில் உள்ள 'அயோட்ஸ் டொசோக்கி’ பயிற்சி மையம், ஜப்பானிய மொழியை பேச (ஸ்போக்கன்) மற்றும் எழுதப் படிக்க (ஸ்கிரிப்ட்) கற்றுத் தருகிறது. ஞாயிறு மட்டுமே வகுப்புகள். ஸ்கிரிப்டில் N5, N4, N3, N2, N1 என ஐந்து நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் ஒரு வருடம் ஆகும். விரைவு வகுப்புகளும் உண்டு. ஸ்போக்கன் வகுப்புகள் தொலைத்தொடர்பு முறையிலும் வழங்கப்படுகிறது. ரூபாய் 4,750-க்கு டி.டி அனுப்பினால் புக் மற்றும் சி.டி அனுப்பி வைக்கப்படும். N5 நிலைக்கு 150 மணி நேரம் வகுப்பு. கட்டணம் - 6,250 ரூபாய்; N4 நிலைக்கு 150 மணி நேர வகுப்பு. கட்டணம் - 7,250 ரூபாய்; N3 நிலைக்கு 150 மணி நேர வகுப்பு. கட்டணம் - 9,500 ரூபாய். N2 நிலைக்கு 200 மணி நேர வகுப்பு. கட்டணம் - 13,500 ரூபாய்; N1 நிலைக்கு 300 மணி நேர வகுப்பு. கட்டணம் - 16,500 ரூபாய்.

ஃபிரெஞ்ச்: அடையாறு மற்றும் அண்ணா நகரில் கடந்த 13 வருடங்களாக இயங்கிவரும் 'இன்ஏவேர்ட்' (INaWORD) நிறுவனத்தில் பல ஐரோப்பிய மொழிகளும், சைனீஸ், ஜாப்பனீஸ் உள்ளிட்ட மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஃபிரெஞ்ச் உட்பட அனைத்து ஐரோப்பிய மொழிகளும் சி.இ.எஃப்.ஆர்.எல் (Common European Framework of Refrence for Languagees) தரத்தைக் கொண்டது. ஃபிரெஞ்ச் மொழி, ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2 என ஆறு நிலைகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏ நிலை பேசிக், பி நிலை இன்டர்மீடியட், சி நிலை அட்வான்ஸ்ட் என்கின்றனர். ஏ நிலைகள் இரண்டிரண்டு துணை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ1.1 மற்றும் ஏ1.2 நிலைகள் ஒவ்வொன்றுக்கும் 50 மணி நேர வகுப்பு. கட்டணம் - 6,450 ரூபாய்; ஏ2.1க்கு 50 மணி நேர வகுப்பு. கட்டணம் - 6,950 ரூபாய்; ஏ2.2-க்கு 50 மணி நேரம். கட்டணம் - 7,250 ரூபாய்; பி1-க்கு 120 மணி நேர வகுப்பு. கட்டணம் - 19,500 ரூபாய்; பி2-க்கு 150 மணி நேர வகுப்பு. கட்டணம் - 26,000 ரூபாய். இந்த நான்கு நிலைகளிலும் பேச, எழுத, படிக்க, புரிந்துகொள்ள கற்றுக் கொடுக்கப்படும். வார நாள் வகுப்புகள், வார இறுதி நாள் வகுப்புகள் உண்டு. ஃபிரெஞ்ச், உலகில் அதிகம் பேசப்படும் மொழி. ரெனால்ட் நிஸான், செயின்ட் கொபெயின் போன்ற நிறுவனங்கள் ஃப்ரெஞ்சை முதன்மையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment