Thursday, May 05, 2011

விஜய் வியூகம்... அஜீத் காயம்!


மைதிக்கும் அதிரடிக்கும் பிரபலமான அஜீத்தின் அடுத்த சரவெடி... ரசிகர் மன்றங் கள் கலைப்பு!'மே-1 'தல’ பிறந்த நாளை’ கொண்டாடக் காத்திருந்த ரசிகர்கள், நிச்சயம் அஜீத்திடம் இருந்து இப்படி ஓர் அறிவிப்பை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், 'எனது ரசிகர் மன்றங்களை நான் கலைக்கிறேன்!’ என்று அஜீத் அறிவிக்கக் காரணமும் அந்த ரசிகர்கள்தான்!  

''என்னதான் நடந்தது?''  


''அஜீத் எப்பவும் கேமரா முன்னாடி மட்டும்தான் 'ஹீரோ’வா நடிக்கணும் என்பதில் தெளிவாக இருப்பவர். அதிலும் சமீப காலமாக 'அல்டிமேட் ஸ்டார்’ பட்டம் துறந்தது, பஞ்ச் வசனங்கள் தவிர்த்தது, பில்டப் கதைகளை நிராகரித்தது, இயல்பான நரைத்த முடியுடன் நடிப்பது என்று ஸ்க்ரீனிலும் ஹீரோ பிம்பத்தைக் கலைத்துக்கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்டவர், தனக்குப் பின் ஒரு கும்பல் திரண்டு நிற்பதையோ, தனக்காக அவர்கள் சொந்த வேலைகளைக் கெடுத்துக்கொள்வ தையோ எப்போதும் விரும்பியதே இல்லை.

அஜீத் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராகச்சேரும் போதே, 'நான் எந்த சாதி, மதச் சங்கங்களிலோ, அரசியல் கட்சியிலோ அடிப்படை உறுப்பினர் கிடையாது. எந்தப் பதவியிலும் நான் இல்லை’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் கையெழுத்து வாங்குவோம். ஆனால், இதையும் தாண்டி சமீபத்தில் முடிந்த தேர்தலில், சில மாவட்ட மன்ற நிர்வாகிகள் தங்கள் போக்கில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க-வுக்குச் சார்பாக எடுத்த ஆதரவு நிலைப்பாடுகள்தான் சில தீர்க்கமான முடிவுகளை நோக்கி அவரை நகர்த்தி இருக்கிறது.  
தேர்தல் சமயத்தில் 'எடுப்பார் கைப்பிள்ளை’யாக மன்றத்தை இரு கழகங்களும் பயன்படுத் திக்கொண்டதில் அவருக்கு உடன்பாடு இல்லை. இத்தனைக்கும் 'நீ கட்சி சார்போடு இரு. பிரசாரம் செய். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அங்கு மன்ற பேனரைப் பயன்படுத்தாதே’ என்று கிட்டத்தட்ட வேண்டுகோளாகவே தனது ரசிகர் மன்றத்தினரிடம் கேட்டுக்கொண்டார் அஜீத்.ஒவ்வொரு தொகுதியாகச் சென்று மன்ற நிர்வாகிகளின் நடவடிக்கைகளை போலீஸ்போல் கண்காணிப்பதும் சாத்தியம் இல்லாத ஒன்று என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார் அஜீத். ஆனால், தன் ரசிகர்கள் தன் குரலுக்கு மதிப்பு அளிப்பார்கள் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆனால், தேர்தல் சமயம் அந்த நம்பிக்கையில் விழுந்த அடிதான், அவரை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது.
  

கமலைப்போலவே அஜீத்தும், 'அரசியலுக்கு வரும் ஐடியா தனக்கு இல்லை’ எனப் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே தெளிவாகக் கூறிவிட்டார். மேலும், ரசிகர் மன்றத்தை 'அஜீத் குமார் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றி, மக்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் உதவிகளைச் செய்யவும் திட்டமிட்டு இருந்தார். வழக்கமான இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கு வது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவதுபோன்றசெயல் களைத் தாண்டி, தமிழகம் முழுக்க மரம் நடும் திட்டத்தை ஆர்வமாகத் தொடங்கினார் அஜீத். ஆனாலும், அந்த ஆர்வம் ரசிகர்களிடம் பற்றிப் படரவில்லை. அப்படி நல்ல காரியத்துக்கு உதவாத ரசிகர் பலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற கேள்விக்கான விடை, அவருக்குத் தெரியாமலேயே இருந்தது.

இந்நிலையில், சில மன்ற நிர்வாகிகளின் நடவடிக்கைகளால் அவருக்குக் கெட்ட பெயர் வரலாம் என உணர்ந்ததால், உஷாராகித்தான் இந்த அதிரடி முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார்!'' என்கிறார்ரசிகர் மன்றங்களை வழிநடத்துவதில் அஜீத்துக்கு உதவியாக இருக்கும் அவருடைய நண்பர்.


விஜய் 'காவலன்’ படத்தை வெளியிட முடியாமல் தடுமாறியபோது, தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவருக்கு ஆளும் கட்சித் தரப்பில் இருந்து ஏகப்பட்ட பிரஷர் குவிந்ததாகச் செய்திகள் உண்டு. விஜய்யின் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன் திடீரென்று விஜய்க்கு எதிராகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் போர்க் கொடி தூக்கினார். அவரது அரசியல் கனவுக்கு அடிப்படையான ரசிகர் மன்ற பலமே கிடுகிடுத்தது. அந்தச் சமயம் விஜய்க்கு ஆதரவாகப் பேச, எதிர்க் கட்சி முகாமும் முன்வராததால், தேர்தலில் தன் பங்கு என்ன என்பதை விஜய்  புரிந்துகொள்வதற்குள் தேர்தலே முடிந்துவிட்டது. ஆங்காங்கே மன்றங்கள் கலைக்கப்பட்டன, சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர் என்பது தவிர, தேர்தலால் விஜய் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை. சொல்லப் போனால், இன்னும் தன்மையாகத் தன்னை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார். அந்த வியூகம்தான் இப் போது அஜீத்துக்கு எதிராகவும் வகுக்கப் பட்டதோ என்றும் ஒரு பேச்சு உலவுகிறது கோடம்பாக்க வட்டாரத்தில்.அஜீத்தின் வழிகாட்டுதல்படிதான் அவரது ரசிகர்கள், கழகங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நினைத்தால், தனது நடுநிலை இமேஜ் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, ஆரம்பத்திலேயே அலாரம் அடித்ததுபோல உஷார் ஆகிவிட்டார் அஜீத். இதனால் இனி தனக்கும் தனது ரசிகர்களின் அரசியல் நடவடிக்கை களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே அஜீத், 'சிலருக்கு’ப் புரியவைக்க விரும்பும் சேதி!
விகடன்

No comments:

Post a Comment