Thursday, May 05, 2011

''ரஜினியை விட்டு விலகி நிற்கிறேன்!'' - கே.பி.ஆதங்கம்

பூங்கொத்துகள் புடைசூழப் புன்னகையும் பெருமிதமுமாக இருக்கிறார் கே.பாலசந்தர். ''தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது தாதா சாகேப் பால்கே விருது!'' எனச் சொன்னால், ''உங்களின் அதிக பட்சப் புகழாரம் என்று வேண்டுமானால், அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்!'' என்கிறார் பளிச் சிரிப்பில்.

'நான் ஆரம்பத்தில், தியேட்டர்களில் விழுந்துகிடக்கும் ஃபிலிம்களை எடுத்து வந்து வீட்டுக்குள்ளேயே படம் ஓட்டிய வன். எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைப் பார்க்க மைல் கணக்கில் சைக்கிள் மிதித்து, வறுமையையும் தாண்டிய வைராக்கியத்தோடு நாடகங்கள் நடத்தி, திரைத் துறையிலும் அடியெடுத்துவைத்தது பெரிய சாதனைதான். கடந்து வந்தபாதை களை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தால், இலக்கை அடைந்துவிட்ட சிலிர்ப்புநிச்சயமாக இருக்கிறது!''

 

''உங்கள் இடத்தை நோக்கி வரும் அளவுக்கு இன்றைக்கு எந்த இயக்குநரும் இல்லை என்கிற கருத்தில் உடன்படுகிறீர்களா?''

''எனக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்து பாரதிராஜா வந்தார். அவருக்குப் பின்னால் பெரிய இடைவெளி ஏற்பட்டது உண்மை. ஆனால், இப்போது நிறையப் பேர் வருகி றார்கள். வித்தியாசங்களைப் படைக்கிறார் கள். ஆனால், ஒரு படத்தோடு அவர்களின் வித்தியாசம் வீழ்ந்துவிடுகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு வாய்க்காத விஞ்ஞான வரம் இன்றைய இயக்குநர்களுக்கு வாய்த்து இருக்கிறது. உலகத்தின் எந்த திசையில் எடுக்கப்பட்ட படத்தின்டி.வி.டி -யையும் உடனே பார்க்க முடிகிறது. நம் சிந்தனையை உலகளாவிய அளவோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. டெல்லியில் ஜனவரி மாதம் நடத்தப்படும் ஃபிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் மட்டுமே எங்க ளால் இதர மொழிப் படங்களைப்பார்க்க முடியும் என்கிற நிலை அப்போது இருந் தது. எல்லா வசதிகளும் இருந்தும் சிந்தனை வளத்தைப் பெருக்கிக்கொள்ளாமல் இருப் பது தவறு. அதே நேரம், 'வசூலைக் குவிக் கும் படம்தான் நல்ல படம்’ என்கிறநிலை யும், 'முதல் படம் ஓடினால்தான்வாழ்க்கை’ என்கிற இக்கட்டும் ஒருசேர இருப்பதும் இன்றைய இயக்குநர்களின் சுயத்தைக் காவு வாங்கிவிடுகிறது!''

''நடிகர்களுக்காகச் சமரசம் ஆகும் நிலையைச் சொல்கிறீர்களா?''

''யாருடைய கையில் படம் இருக்கிறது என்பதைப் பொறுத்துதான், அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியும். ஸ்டார்ஸ் கையில் எல்லாமும் இருந்தால், அவர் எதைவிரும்பு வார், ரசிகர்கள் அவரிடம் எதை விரும்புவார்கள் என்பதை எல்லாம் ஆராய்ந்து, அதற்குத் தக்கபடி தான் படம் செய்ய முடியும். அங்கே இயக்குநரின் சுயம் அடிபட்டுப்போய்விடும். நான் தயாரிப்பாளராக இருந்து ரஜினியை வைத்து 'தில்லுமுல்லு’ படத்தை மட்டும்தான் இயக்கி இருக்கிறேன். அதிலும் ரஜினிக்காக நான் சமரசம் ஆகாமல், என்னுடைய படமாகத்தான் எடுத்தேன். நடிகர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்றுதெரிந்தவுடன், நான் தள்ளி நின்றுவிட்டேன். என்னுடைய ரஜினிகாந்த்தை வைத்து என்னாலேயே படம்செய்ய முடியாத நிலை. அது தெரிந்து நான் ஓரமாக விலகிவிட்டேன். ஆனால், கமலைவைத்து 30 படங்கள் செய்தேன். கமல் எப்போதுமே குறிப்பிட்ட இமேஜை மட்டும் எடுத்துக்கொள்ள மாட்டார். அதனால், கமலை வைத்துப் பண்ண நான் பயந்தது இல்லை. ஆனால், ரஜினியிடம் வேறு விதமான எதிர்பார்ப்பு இருக்கிறது!''

''ரஜினி, கமலை வைத்து மீண்டும் படம் பண்ணும் எண்ணம் இல்லையா?''

''நான் அழைத்தால் நாடகத்தில்கூட நடிப்பதாகச் சொல்லிவிட்டார் ரஜினி. கமலும் தயார்தான். ஆனால், இன்றைய ரசனைக்கு ஏற்றபடி என்னால் படம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. மக்களின் ரசனை மாறும்போது, அதைப் புரிந்துகொண்டு விலகி நிற்பதுதான் உத்தமம். கழுத்தை அறுக்கிற காட்சிக்கு கைத்தட்டல் பறக்கிறதைப் பார்க்கையில், பயமா இருக்கு. ரசிகனின் இந்த மனப் போக்குக்குத் தக்கபடி படம் பண்றவங்கதான் நிற்க முடியும் என்கிற நிலையாகிவிட்டது. நான் படம் எடுப்பதாக இருந்தால்கூட, மதுரையைமையப் படுத்திதான் யோசிக்க வேண்டும். அதனால், தனித்திருத்தலே நலம்!''

''உங்களின் மனம் கவர்ந்த இயக்குநர்களைப் பட்டியலிடுங்களேன்?''

''என் பாணியைவிட்டு சற்றும் விலகாமல் படம் செய்யும் வசந்த், பாத்திரத் தேடலில் எல்லோரையும் வியக்கவைக்கும் பாலா, எவர்கிரீன் மணிரத்னம், புதிய சிந்தனைகளைப் பாய்ச்சும் அமீர், வேகமான திரைக்கதையில் மிரட்டும் சமுத்திரக்கனி, அத்தனை தளங்களிலும் ஆச்சர்யப்படுத்தும் மிஷ்கின், அழகியலில் பிரமாதப்படுத்தும் கௌதம் மேனன்,மென்மை யிலும் மெனக்கெடுதலிலும் வியக்கவைக்கும் விஜய் ஆகிய எட்டுப் பேர்!''

''உங்களுடைய படங்களில் உங்களைப் பெரிதாக ஈர்த்த ஒன்று?''

 ''ரொம்ப பழைய படமான 'புன்னகை’. அதைப் பார்க்கிறபோது எல்லாம் அழுதுவிடுவேன்! 'மரோசரித்ரா’, 'அக்னி சாட்சி’ படங்களையும் அந்தப் பட்டியலில் வைக்கலாம்!''    

''இந்தப் படத்தை நாம் செய்திருக்கலாமே என உங்களை ஏங்கவைத்த படம்?''

'மதராசபட்டினம்’. காலத்தையும் காதலையும் கொஞ்சமும் பிசகாமல் வார்த்த அழகு அபாரமானது. இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு படத்தை எடுக்க ஆசைப்பட்டாலும், அது எனக்குச் சாத்தியம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்!''

''உங்களின் வார்ப்புகளில் நீங்கள் யாரிடம் மிகுந்த அந்நியோன்யம் பாராட்டுவீர்கள்?''

''நான் காட்டும் அந்நியோன்யத்திலேயே வித்தியாசம் இருக்கிறது. கமலிடம் பேசுவதுபோல், ரஜினியிடம் பேச முடியாது. 10 நிமிடங்கள் சந்திக்கிறோம் என்றால், ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசிவிட்டு, மௌனமாக இருப்பான் ரஜினி. கமல் அப்படி இல்லை... நிறையப் பேசுவான்!''

''ரஜினி, ஏன் இதை இன்னமும் செய்யவில்லை என நீங்கள் நினைக்கும் விஷயம்?''

'அவன் ஏன் இன்னும் தேசிய விருது வாங்க முயற்சி பண்ணலை என்பதுதான் என் வருத்தம். அதற்கான எல்லாத் தகுதிகளும் அவனுக்கு இருக்கு. ஆனால், 'ஜனங்க ரசிச்சா சரி’ன்னு நின்னுடுறான். சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைக்காமல் போயிடுச்சேன்னு, இப்போ நினைச்சாலும் வருத்தமா இருக்கு. ரஜினி விஷயத்திலும் இந்த வருத்தம் நீடிக்கக் கூடாது. 

என்னுடைய அனுமானத்தில் சொல் றேன்... இந்த வருடம் 'எந்திரன்’ படத்துக்காக நிச்சயம் ரஜினிக்குத் தேசிய விருது கிடைக்கும். 'பொழுதுபோக்கு’ என்கிற சிறப்புத் தகுதியில் அது சாத்தியப்படும் என நம்புகிறேன்!''

''கே.பி. சார் யாருடைய ரசிகர்?''

''நான் உருவாக்கிய கமலுக்கே நான் ரசிகன்!''

''விருது அறிவிப்பு தெரிந்ததும் யாரிடம் முதலில் சொன்னீர்கள்?''

''முதல் நாள் இரவே எனக்கு பால்கே விருது சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து தகவல் வந்துவிட்டது. அதே நேரம், அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்கும் வரை ரகசியம் காக்கும்படி சொன்னார்கள். அதனால், யாரிடமும் சொல்லவில்லை. என் மனைவியிடம்  மட்டும் மறைக்க முடியாமல், 'நாளைக்கு ஒரு குட் நியூஸ் வரும்’ எனச் சொன்னேன். சற்று நேரம் யோசித்தவள், 'என்ன, பால்கே விருது கிடைக்கப்போகுதா?’ என்றாள். அசந்துபோய் விட்டேன்!''

''நடிகர்களின் அரசியல் ஆர்வம் சரியானதா?''

''அரசியலை மனதில் வைத்துக்கொண்டு சினிமாவுக்கு வந்தவர்கள் சிலர் உண்டு. அவர்கள் ஜெயித்ததாகச் சரித்திரம் இல்லை. நடிப்பில் ஏற்பட்ட வரவேற்பு, ஒருவரை அரசியலை நோக்கித் திருப்பினால் அது தவறு இல்லை.

'ஒரு வார்த்தை சொன்னால் தமிழக அரசியலே மாறும்’ என்கிற நிலை இருந்தும் ரஜினி அமைதியாக இருக்கிறானே... எதையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பாதவன் அவன். அவனுடைய ஆன்மிகச் சிந்தனையே அவனை இயக்குகிறது. அவன் என்ன நினைத்தாலும், அது நடக்கும். நான் தனிப்பட்ட விதத்தில் அவனிடம் அரசியல் குறித்துக் கேட்டபோதுகூட, 'எல்லாம் அவன் செயல்’ என மேலே கை காட்டி சஸ்பென்ஸ் வைத்துவிட்டான்!''

''முதல்வர் கருணாநிதி..?''

''அரசியல் வாழ்க்கை என்னைக் கைவிட்டாலும் எனக்கு சினிமா இருக்கிறது என இத்தனை வயதிலும் தில்லாகச் சொன்ன அவருடைய நம்பிக்கையும் ஆர்வமும் யாருக்குமே வாய்க்காதது!''

''ஜெயலலிதாவின் இரண்டாவது படத்தை இயக்கியவர் நீங்கள். பால்கே விருதுக்காக அவர் உங்களைப் பாராட்டினாரா?''

''இல்லை!''

'நடிகை சுஜாதாவின் மரணம்?''

''கடந்த 10 வருடங்களாக அவர் எங்கே இருந்தார் என்பதே எனக்குத் தெரியாது. ஆனாலும் அடிக்கடி அவரைப்பற்றி விசாரிப்பேன். இறப்பு விஷயம் தெரிந்து பதறி ஓடினேன். 'நீங்க இங்கே வந்ததில் நிரம்ப சந்தோஷம்’ என்றார் சுஜாதா வின் கணவர். அந்த வார்த்தைகளைச் சொல்லி இருக்க வேண்டியவள் சுஜாதா!''

''மிச்சம் இருக்கும் கனவு?''


''சத்யஜித் ரே போல் மிகக் குறைந்த பட்ஜெட் டில் ஒரு படம் இயக்க வேண்டும்!''
      
விகடன்     

1 comment:

  1. 'நான் உருவாக்கிய கமலுக்கே நான் ரசிகன்!'- என்று மனம் திறந்த பாலசந்தர் அவர்களின் பேட்டி அருமை.

    ReplyDelete