Friday, May 30, 2014

சுடோகு... ஓர் அறிமுகம்!

உலகமே டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கிறது. கைபேசி, கணினி என எண்களின் ராஜ்ஜியம் எங்கெங்கும் நிறைந்துள்ளது. அத்தகைய எண்களை வைத்து ஒரு விளையாட்டை உங்கள் மழலைகளுக்குக் கற்றுத் தரலாமே! இந்தக் கட்டுரையை கவனமாகப் படித்து உங்கள் குழந்தைகளுக்கு சுடோகுவில் உள்ள லாஜிக் விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். முதலில் கடினமாகத் தெரிந்தாலும், புத்திசாலித்தனமான யூகங்களால் இதை எளிதில் சால்வ் செய்ய முடியும். ஃபின்லாண்டின் கணித மேதை டாக்டர் ஆர்டோ இங்காலா என்பவர் உருவாக்கிய சுடோகு தான் மிகவும் கஷ்டமான புதிர் என்று கருதப்பட்டது. வலைத்தளங்களில் கிடைக்கும் அதுபோன்ற சுடோகுகளை ப்ரிண்ட் எடுத்து குழந்தைகளைப் போடச் சொல்லலாம். செய்தித்தாள்களில் வரும் சுடோகுகளையும் போடச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். இதில் உள்ள லாஜிக் புரிந்துவிட்டால் எத்தகைய கடினமான சுடோகுவாக இருந்தாலும் உங்கள் சுட்டீஸ் நொடியில் முடித்து விடுவார்கள். என்ன ரெடியா? 
சுடோகு என்பது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ஓர் எண் விளையாட்டு. எழுத்து என்றால் மொழி வேண்டும். எண்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியானவைதானே!


ஜப்பானில் உள்ள நிகோலி என்ற நிறுவனம் இதை சுடோகு என்ற பெயரில் பிரபலப்படுத்தியது. (சுடோகு என்றால் ஒற்றை இலக்க எண் என்பது பொருள்).
இதில் பொதுவாக 9க்கு 9 என்கிற சதுர அளவில் 81 கட்டங்கள் இருக்கும். 1லிருந்து 9 வரை எந்த வரிசையில் வேண்டுமானாலும்,(ஒவ்வொரு வரிசையிலும்) எழுதலாம். இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்று வரும் எந்த வரிசைக்கும் இது பொருந்தும். அதுமட்டுமல்ல இந்த 9 x 9 கட்டத்தை 3 X 3 என்று 9 சமமான பகுதிகளாகப் (BLOCKS)பிரிக்க முடியும். இந்த ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 9 கட்டங்களிலும் 1லிருந்து 9 வரை உள்ள எண்களைக் காணலாம்.

இப்படி எண்களை (1லிருந்து 9 வரை உள்ள எண்களை) இந்தக் கட்டங்களில் நிரப்பிவிட்டு, அதிலிருந்து சில எண்களை நீக்கிவிடுவார்கள். (சில சமயம் பல எண்களைக்கூட நீக்கிவிடுவார்கள்). விடுபட்ட எண்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சுடோகு விளையாட்டு.
விடுபட்ட எண்களைக் கண்டுபிடிக்க சில குறிப்புகள் இதோ.
எந்த ஒரு வரிசையிலும் (இடமிருந்து வலமுள்ள வரிசையோ (ROWS) அல்லது மேலிருந்து கீழ் வரிசையிலோ (COLUMNS) 1லிருந்து 9 வரை உள்ள எல்லா எண்களும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே (மொத்தம் 9 கட்டங்கள்தான் ஒவ்வொரு வரிசையிலும் என்பதால்) 1லிருந்து 9 வரை உள்ள எந்த எண்ணுமே அந்த வரிசையில் ஒருமுறைதான் இடம் பெற்றிருக்கும்.
ஒவ்வொரு ‘ப்ளாக்’கிலும் (அதாவது 3 X 3 என்றிருக்கும் சிறு பகுதியில்) 1 முதல் 9 வரை உள்ள அத்தனை எண்களும் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒருமுறைதான் இடம் பெற்றிருக்கும். நீங்கள் இதை விளங்கிக் கொண்டீர்களா என்பதைத் தெரிந்து கொள்ள இதோ ஒரு சின்ன சோதனை.
கீழே உள்ள கட்டங்களில் 3 இடங்களில் கேள்விக் குறிகள் உள்ளன. கேள்விக் குறி உள்ள கட்டங்களில் இடம் பெற வேண்டிய எண்கள் எவை? யோசியுங்கள்.
முதல் வரிசையில் உள்ள கேள்விக்குறிக் கட்டத்தில் இடம்பெற வேண்டிய எண் 3 ஏனென்றால் அடுத்த 3 X 3 என்றிருக்கும் சிறு பகுதியில் 1லிருந்து 9வரை உள்ள எல்லா எண்களும் (3த் தவிர) அந்த வரிசையில் உள்ளது.
ஐந்தாவது வரிசையில் மேலிருந்து கீழாக 5, 7 ஆகிய கட்டங்களுக்குக் கீழ் உள்ளது இரண்டாவது கேள்விக்குறி. அந்தக் கட்டத்தில் இடம் பெற வேண்டிய எண் 3. ஏனென்றால் ஒவ்வொரு 3 X 3 கட்டங்களாக இதைப் பிரித்தால்,ஒவ்வொன்றிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்கள் இடம் பெற்றிருக்கும். அப்படிப் பார்த்தால் மேற்புறம் நடுவில் உள்ள 3 X 3 கட்டங்களில் 9,5,6,2,7,8,4,1 ஆகிய எண்கள் காணப்படுகின்றன. 1லிருந்து 9 வரை உள்ளவற்றில் இதில் மிஸ் ஆகும் ஒரே எண் 3-தான். இதனால்தான்கேள்விக் குறி உள்ள கட்டத்தில் 3 இடம் பெற வேண்டும்.
ஐந்தாவது வரிசையில் மேலிருந்து கீழாக ஏழாவது கேள்விக் குறி உள்ள கட்டத்தில் இடம் பெற வேண்டிய எண் 9. ஏனென்றால் 1லிருந்து 8 வரை உள்ள எண்கள் அந்த வரிசையில் ஏற்கனவே உள்ளன. இதன் அடிப்படையில்தான் சுடோகோ விளையாட வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்துவர கடினமான சுடோகோவும் ஈஸியாகும்.



No comments:

Post a Comment