Saturday, May 31, 2014

குஜராத்தின் முதல் பெண் முதல்வர்!

 
மோடி பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கான விடை, லோக்சபா தேர்தலின் கடைசிகட்ட வாக்குப் பதிவு நடந்துமுடிந்த பிறகு வெளியான வாக்குக் கருத்துக் கணிப்புகள் மூலமாகத் தெரிந்து விட்டது. ஆனாலும், ‘மோடிக்கு அடுத்து குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போவது யார்?’ என்ற சஸ்பென்ஸ் அதன் பிறகும் நீடித்தது. காரணம், குஜராத் முதலமைச்சராக இருந்த வரையில், மோடி தனக்கு பிறகு நெம்பர் 2 என யாரையும் அடையாளம் காட்டியதில்லை. ஆனால், அதற்கு ஆசைப்பட்டவர்கள் இருக்கவே செய்தார்கள். 
 
அதனால்தான், மோடிதான் பிரதமர் என உறுதியானவுடன், குஜராத்தின் நிதி அமைச்சரான நிதின் பட்டேல், ‘தனக்கு அந்த வாய்ப்புத் தரப்பட்டால், அதனை ஏற்கத் தயார்’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். குஜராத் முதலமைச்சர் பந்தயத்தில் சௌரப் பட்டேல் (பத்தாண்டுகள் முதலமைச்சர் மோடிவசமிருந்த பல முக்கியமான துறைகளுக்கு இவர்தான் துணை அமைச்சர்), புருஷோதம் ருபாலா (இவர் ராஜ்யசபா எம்.பி.), வாஜுபாய் வாலா (சபாநாயகர்) என்று சிலரது பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டாலும், இறுதியில் வின்னிங் போஸ்ட்டைத் தொட்டவர் ஆனந்திபென் பட்டேல் தான்! மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியர் அமைச்சர் இவர். சுமார் 15 வருடங்கள் அமைச்சராக இருந்திருக்கிறார். குஜராத்தில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் எம்.எல்.ஏ. இவர்தான். இப்போது குஜராத்தின் முதல் பெண் முதல்வர்.
 
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ஆனந்தி பென், பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பள்ளிக்கூட ஆசிரியர் ஆனார். 1987ல், பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு சர்தார் சரோவர் என்ற நர்மதா அணைக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த சமயத்தில், இரண்டு மாணவிகள் தவறி விழுந்தபோது, உடனே தண்ணீரில் குதித்து, அவர்களைக் காப்பாற்றினார். இதற்காக, மாநில அரசின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. எம்.எட். படிப்பை முடித்தபோது அவர் தங்கப்பதக்கம் பெற்றார். பின்னர் அகமதாபாத் நகரில் உள்ள மோனிபா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபாலாகப் பணியாற்றினார். ஆசிரியப் பணிக்காக ஒருமுறை மாநில அரசின் விருதும், ஒரு முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.  

ஆரம்பக்கால ஆர்.எஸ்.எஸ். நாட்களிலிருந்தே மோடிக்கு ஆனந்திபென்னைத் தெரியும். மோடியின் அழைப்பின் பேரில்தான், அவர் அரசியலுக்கு வந்தார். மோடி, குஜராத் மாநில பா.ஜ.க. செயலாளராக இருந்தபோது, அவர் ஆனந்தி பென்னை பெண்கள் பிரிவுக்குத் தலைவி ஆக்கினார். பின்னர் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். கேசுபா பட்டேலின் கீழ் அமைச்சராக இருந்தபோதிலும், கேசுபா பட்டேலும், சஞ்சை ஜோஷியும் சேர்ந்து கொண்டு, மோடியை குஜராத்திலிருந்து வெளியேற்றத் திட்டமிட்ட காலகட்டத்தில், மோடிக்கு ஆதரவாக நின்றவர்களுள் ஒருவர் ஆனந்திபென்; இன்னொருவர் அமித் ஷா. 
 
73 வயதில் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து, தன் பணியைத் தொடங்கிவிடும் ஆனந்திபென் தினமும் காலை யோகாவும், பிராயாணமும் செய்யத் தவற மாட்டார். குஜராத் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மூன்று முறை முதல்வராக அரியணை ஏறிய மோடியின் நம்பிக்கை பெற்றவராக ஆகியிருக்கிறார் ஆனந்தி பென்.

சந்திரமௌலி

No comments:

Post a Comment