Monday, June 02, 2014

கே.எஃப்.சி!

அசைவ உணவுப் பிரியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது சிக்கனைத்தான். இன்றைக்கு பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கும் சிக்கன் என்றதுமே கே.எஃப்.சி.தான் ஞாபகத்துக்கு வருகிறது. தனித்துவம் மிக்கச் சுவையினால் உலகம் முழுக்க உள்ள அசைவப் பிரியர்களின் மனத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கிறது கே.எஃப்.சி. இந்த வெற்றிக்குப் பின்னால் கொலோனல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் சந்தித்த போராட்டங்கள் பலப்பல.

கொலோனல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ், 1890-ம் ஆண்டு அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்தார். தனது ஆறாவது வயதிலேயே அவரது தந்தை இறந்ததால், தனது தம்பியையும், தங்கையையும் வளர்க்கும் பொறுப்பும், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் சாண்டர்ஸுக்கு வந்தது. தனது உறவினரின் பண்ணையில் விவசாயம் செய்தார். பின்னர் அமெரிக்க ராணுவத்தில் டிரைவராக சிலமாதம் வேலை பார்த்தார்.

16 வயதில், ரயிலில் கரி அள்ளிப்போடும் வேலை என நிரந்தரமாக எந்த வேலையிலும் சாண்டர்ஸினால் இருக்க முடியவில்லை.

 

என்றாலும், பகுதி நேரமாகச் சட்டம் படித்தார். ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ்மேன் வேலைக்குச் சேர்ந்தார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை என்பதால், அந்த வேலையையும் விட்டுவிட்டார். கடைசியில், ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்தின் சர்வீஸ் ஸ்டேஷனை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில நாட்களில் அதற்கும் வந்தது சோதனை. கம்பெனி நஷ்டத்தில் சென்றதால் அதனையும் மூடும் நிலை உருவானது.

ஆனால், சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளவர்களுக்கு பொரித்த சிக்கனை விற்று வந்தார் சாண்டர்ஸ். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கென்டகி ஃப்ரைடு சிக்கன் என்று தனது தயாரிப்புக்கு பெயர் வைத்தார். இதன்பிறகு கே.எஃப்.சி. அமெரிக்கா முழுக்க பரவி, அடுத்த நாடுகளுக்கும்  செல்ல ஆரம்பித்தது.

சாண்டர்ஸின் பல்வேறு முயற்சிகளில் வெற்றிகரமாக இருந்தது கே.எஃப்.சி மட்டுமே. அடுத்தடுத்து தோல்விகள் தம்மைத் துரத்தி வந்தபோதும், தனக்கான வாய்ப்பை பெறும்வரை நம்பிக்கையோடு மனம்தளராமல் காத்திருந்தார் சாண்டர்ஸ். தொடர் தோல்விகளால் துவண்டுபோகிறவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தால், சாண்டர்ஸ் போல நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!


No comments:

Post a Comment