சுதந்திரப் போராட்டமும்கூட இந்த அம்சத்தில் மக்களை உரிய திசையில்
திருப்பிவிடத் தவறிவிட்டது என்ற துரதிர்ஷ்டவசமான உண்மையைக்
கூறாதிருக்கவியலாது. இப்போராட்டத்தின் முக்கியமான தலைவர் மேல்நாட்டினரின்
ஆட்சியைக் களைவதோடுகூட, அல்லது
அதனினும் முக்கியமாக, அவர்தம் வாழ்முறையில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட
மோகத்தையும் களைந்தெறிய வேண்டுமென்ற கொள்கை உடையவராயினும், ஏனைய போராட்டத்
தலைவர்களும் அவற்றைப் பின்பற்றிய ஏராளமான
மக்களும் அதில் அவ்வளவாகக் கவனம் கொள்ளவில்லை.
நாட்டை அந்நியரின் அரசியல் ஆளுகையிலிருந்து மீட்பதொன்றுக்கே முழு கவனமும்
கொடுக்க வேண்டுமென்று அவர்கள் கருதியதால், மக்களின் மனப்பான்மையையும்
வாழ்முறையையும் அந்நிய வழிகளின் ஆளுகையிலிருந்து மீட்பதற்கு
எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. நாடு அந்நியராட்சியிலிருந்து அரசியல்
சுதந்திரம் பெறும்போது அதிலுள்ள பிரஜைகள் ஹிந்து மதம் மட்டுமின்றி
எம்மதத்தினராயினும் ஏதோ ஒரு மதத்தின் மூலம் உள்ளவுயர்வு பெற்றவர்களாக
இருக்க வேண்டும் என்பதைக்
கருதாது, அரசியல் சுதந்திரத்துக்காக மட்டுமேதான் போராட்டம் நடத்தப்பட்டது.
எனவே குறிப்பாக ஹிந்து மதஸ்தர் மனிதாபி மானத்தில் பின்னடைவு காணும் நிலையே
நீடித்து வந்தது.
அந்நிலையில்தான் இறுதியாகச் சுதந்திரம் வந்திருப்பதும்.
இங்கு கவனத்திற்குரிய அம்சம் யாதெனில், இந்திய மக்களில் ஹிந்துக்கள்
மாத்திரம் தான் இவ்விதம் சுயமனிதாபிமானம் குன்றியது. இஸ்லாமியர் எப்போதுமே
தீவிரமான சுயமதப் பற்றும் சமுதாயக் கட்டுப்பாடும் உள்ளோராதலின் அவர்கள்
மேனாட்டு வழிகளில் ஹிந்துக்கள்
போல் மயங்கி சுய மதக் காப்பில் பின்தங்கவில்லை. கிறிஸ்துவர்களோ
அம்மேனாட்டினரின் மதத்தைச் சேர்ந்தோரேயாதலின், அவர்கள் விஷயத்தில்
இப்பிரச்னை எழும்பவேயில்லை. அதாவது ஹிந்து மதம் மட்டுமே
பாதிப்புற்றது.
சுதந்திரப் போராட்ட காலத்தின் போதும் ஹிந்து சமயத்துக்காகவும் அதன்
சமூகத்தினருக்காகவும் சமய ஸ்தாபனம் எனக் கூற முடியாமல் சமூக ஸ்தாபனமாகவே
இருந்துகொண்டு எழுச்சியுடன் போராடிய ஓரிரு இயக்கங்கள் ஆற்றிய சிறு பங்கைத்
தவிர, மாபெரும் சுதந்திரப் போராட்ட இயக்கம்
எதுவும் செய்யாமல், ஹிந்து சமயம் பின்னடைவிலேயே உள்ள நிலையில்தான்
முடிவாகச் சுதந்திரம் வந்திருப்பது.
இந்த நடைமுறை உண்மைகளை ஹிந்துக்களல்லாதாரும் நடுவு நிலையிலிருந்து
நோக்கினால், சுதந்திர பாரத அரசாங்கமானது மக்களின் உள்ள உயர்வுக்குத் தமது
பங்கான பணியை ஆற்ற
வேண்டுமென்றும், மதத்தின் மூலம்தான் அவ்வுயர்வு நடப்பதாகச் சரித்திரம்
காட்டியிருப்பதால் இங்குள்ள எல்லா மதங்களுக்கும் எம்மதமாயினும் போஷணையளிக்க
வேண்டுமென்றும் உணர்ந்து அதைச்
செயற்படுத்துமாயின், மிகவும் பாதிப்புற்றிருப்பதும் மிகப் பெரும்பாலோருக்கு
உரியதுமான ஹிந்து மதத்துக்கே அரசாங்கத்தின் வழியாக அதிகப் பொருள் உதவி
அளிக்க வேண்டுமென்பதை ஒப்புக்கொள்ளவே
செய்வர்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment