Tuesday, July 01, 2014

பதில் சொல்லுங்கள், மோடி!


''நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்''

-இப்படி ஓர் அறிவிப்பை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஒருசில நல்ல திட்டங்களில், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் ஒன்று. வளர்ச்சித் திட்டங்களுக்காக, தொழிற்சாலைகளுக்காக என்று விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, ஓரளவுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை இந்தச் சட்டம்தான் உறுதிப்படுத்தியிருக்கிறது. கிராமப்புறங்களில் சந்தை மதிப்பில் 4 மடங்கும், நகர்ப்புறத்தில் இருமடங்கும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

இத்தகையச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், நிலத்தைக் கையகப்படுத்தி கோடிகோடியாகச் சம்பாதிக்கத் திட்டமிடும் முதலாளிகள், இதை முடக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்கள். அதையெல்லாம் மீறி, விவசாயிகளின் வாக்குகளைக் குறிவைத்து, சட்டத்தை நிறைவேற்றியது காங்கிரஸ். விவசாயிகளின் வாக்குகளை மனதில் வைத்தே, தானும் ஆதரவை அள்ளி வழங்கியது அன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பி.ஜே.பி.

ஆனால், 'தற்போது மத்தியில் ஆட்சி மாறியவுடன், அந்த முதலாளிகள், மீண்டும் தங்களின் வேலையை ஆரம்பித்துள்ளனர். இதற்கு, பி.ஜே.பி-யும் துணைபோக ஆரம்பித்துவிட்டதோ’ என்கிற சந்தேகம், விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.

'விவசாயத்தை வாழ வைப்பது என் கடன்' என்றபடி அரியணை ஏறியிருக்கும் நரேந்திர மோடி, இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

No comments:

Post a Comment