Tuesday, July 01, 2014

அசத்தல் தொழில்நுட்பங்கள்!


iSTREAM

ஆட்டோமொபைல் உலகில் மாதம் தோறும் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பாதி, பெரும்பான்மை மக்களைச் சென்றடையாமல், அறிக்கைகளோடு காணாமல் போய் விடுகின்றன. ஆனால், இங்கே வெளியாகியுள்ள ஆறு தொழில்நுட்பங்களும் எதிர்காலத்தில் பரவலான பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று, 'கார்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையையே மாற்றக்கூடியவை.

உலகில் முதன்முதலாக ஹென்றி ஃபோர்டு, கார் தயாரிக்கும் அசெம்பிளி லைனைத் துவக்கியதில் இருந்து இன்று வரை 'கார்’ என்ற வாகனத்தைத் தயாரிக்கும் அடிப்படை முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இதை முற்றிலும் மாற்றியமைத்து, கார் தயாரிப்பு என்ற விஷயத்தை மிக எளிமையாக்கி இருக்கிறார் மெக்லாரன் F1 காரை உருவாக்கிய கார்டான் முரே. அவர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் பெயர் ஐ-ஸ்ட்ரீம் (iStream). இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்களைத் தயாரித்தால், வழக்கமான கார் தயாரிப்புக்குத் தேவைப்படும் தொழிற்சாலை வசதிகளில் 20 சதவிகிதம் போதும். மேலும், 'மெட்டல் ப்ரெஸ்’ எனப்படும் உலோகத் தகடை காருக்கு ஏற்ப மாற்றும் வேலைகள் இதில் தேவை இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எந்த ஒரு சிறு நிறுவனமும், சிறிய முதலீட்டில் கார் தயாரிப்பைத் தொடங்க முடியும்.ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தில் ஐ-பேனல்ஸ், ஐ-ஃப்ரேம் (iPanels, iFrame) என இரண்டு அம்சங்கள் உள்ளன. ஐ-பேனல்ஸ் என்பவை கண்ணாடி இழைகள் அல்லது இயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட காம்போசிட் (Composite). இவை மிகவும் ஸ்திரமான, அதிக எடையைத் தாங்கும் திறன்கொண்டவை. ஐ-ஃப்ரேம் என்பது லேசர் மூலம் வெட்டப்பட்ட, கம்ப்யூட்டர் வெல்டிங் செய்யப்பட்ட, மெல்லிய ஸ்டீல் குழாய்களால் ஆன ஸ்டீல் ஃப்ரேம்.

ஐ-பேனல்ஸும், ஐ-ஃப்ரேமும் தயாரானவுடன் இரண்டையும் இணைப்பது வெகு எளிது. இரண்டு நிமிடங்களுக்குள் ஐ-பேனலை ஃப்ரேமுடன் இணைத்து, பிரத்யேக பசையின் மூலம் ஒட்டிவிடலாம். இவை இரண்டும் ஒன்று சேர்ந்தவுடன் நமக்குக் கிடைப்பது மிகவும் திடமான, பாதுகாப்பான கட்டுமானம். 1,00,000 ஸ்திர சோதனைகளுக்குப் பின்பும் சேதமடையாமல் நிற்குமாம், இந்தக் கட்டுமானம்.ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய வசதி என்ன என்றால், ஒரு சேஸியை உருவாக்கிவிட்டு, அதன்மீது எந்தவிதமான பாடி அமைப்பையும் உருவாக்க முடியும். 4 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார், இடவசதி நிறைந்த டாக்ஸி, எடை சுமக்கும் பிக்-அப் டிரக் என இத்தனை வாகனங்களையும் ஒரே ஒரு அடிப்படைக் கட்டுமானத்தை வைத்தே தயாரிக்க முடியும். மேலும், பெட்ரோல், டீசல், ஹைபிரிட், எலெக்ட்ரிக் என எல்லா வகை வாகனங்களையும் இதில் தயாரிக்க முடியும். ஒரே தொழிற்சாலையில், ஒரே அசெம்பிளி லைனை மிகக் குறுகிய நேரத்தில் மாற்றியமைத்து, எந்த வகையான வாகனத்தை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களைச் சுதந்திரமாகச் சோதனை செய்யும் அமைப்பான EuroNCAP, 'கார்களுக்கு வகுத்துள்ள சட்ட திட்டங்களைப் பூர்த்தி செய்யும் பாதுகாப்பான கட்டுமானம் இது’ என உறுதி செய்யப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம், ஐ-ஸ்ட்ரீம் முறையில் ஏற்கனவே மோட்டிவ்.இ (Motiv.e) என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Free valve

'இன்ஜின்’ விஷயத்தில், கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் பாகம், கேம் ஷாஃப்ட். ஸ்வீடனைச்  சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான கோனிசே மற்றும் கார்ஜின் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, 'ஃப்ரீ வால்வு’ எனும் தொழில்நுட்பத்தை உருவாக்குகின்றன. இதில், சிலிண்டர்களுக்கு மேலே உள்ள கேம் ஷாஃப்ட்டுக்குப் பதில், நியூமாட்டிக் (Pneumatic -  அழுத்தப்பட்ட காற்றால் இயங்கும்) ஆக்சுவேட்டர்களைப் பொருத்திவிட்டார்கள். இதனால், ஒவ்வொரு சிலிண்டரையும் தனித்தனியாக இயக்க முடியும். தேவைப்பட்டால், இந்த இன்ஜினை குறைந்த ஆர்பிஎம்-ல் 2 ஸ்ட்ரோக்காகவும் இயங்க வைக்க முடியும். இப்போது பயன்பாட்டில் இருக்கும் இன்ஜின்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், 30 சதவிகிதம் அதிக சக்தியும், டார்க்கும் கிடைக்கும். மேலும், மைலேஜ் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கும். டைமிங் பெல்ட் போன்ற சர்வீஸ் சிக்கல்கள் இதில் இல்லை.

கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்

கூகுள் நிறுவனம், ஆட்டோமொபைல் உலகுக்கு சமீபத்தில் கொடுத்த ஷாக், 'செல்ஃப் டிரைவிங் கார்.’ இத்தனை நாட்களாக மற்ற நிறுவனத்தின் கார்களில் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வந்த கூகுள். திடீரென்று ஒரு புத்தம் புதிய காரையே அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஸ்டீயரிங் வீல், பெடல்கள் போன்றவை கிடையாது. இதன் டிஸைனையும் ஏற்கெனவே பிரபல கார் டிஸைனர்கள் விமர்சித்துவிட்டார்கள். கூகுளின் மற்ற செல்ஃப் டிரைவிங் கார்களில் இருந்தது போலவே LIDAR ஸ்கேனர் மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. மேலும், காரில் அமர்ந்திருப்பவரின் செல்போனில் சிக்னல் இல்லையென்றால், இதனால் தொடர்ந்து இயங்க முடியாது. காரணம், செல்போன் நெட்வொர்க் மற்றும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்திக்கொள்கிறது இந்த கார். ஆனால், இந்த தானியங்கி காரால் விபத்து ஏற்பட்டாலோ, உயிரிழப்பு நிகழ்ந்தாலோ யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு, கூகுள் உட்பட யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=CqSDWoAhvLU இந்த லிங்க்கில் வீடியோவைக் காணலாம்.

ஆப்பிள் CarPlay

காருக்குள் செல்போன் பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, ஆப்பிள் நிறுவனம் 'கார்ப்ளே’ ( CarPlay) என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை சந்தைக்கே கொண்டுவந்துவிட்டது. கார்ப்ளே வசதி கொண்ட காரில், உங்களுடைய ஐபோனை இணைத்துவிட்டால் போதும்; காரின் டச் ஸ்க்ரீனிலேயே ஐபோனை முழுமையாக இயக்க முடியும். போன் செய்வது; குறுந்தகவல் அனுப்புவது; இசை கேட்பது; மேப்ஸில் தேடுவது என அனைத்து வேலைகளையும் இந்தத் திரைக்குள் கொண்டுவந்துவிட்டது ஆப்பிள் கார்ப்ளே. தற்போது ஃபெராரி, ஹோண்டா, ஹூண்டாய், மெர்சிடீஸ் பென்ஸ், வால்வோ  கார்களில் இந்த வசதி இருக்கின்றன. விரைவில் பிஎம்டபிள்யூ, செவர்லே, ஜாகுவார், லேண்ட்ரோவர், நிஸான், ஃபோர்டு, சுஸ¨கி, டொயோட்டா கார்களில் இந்த வசதி விரைவில் வரவிருக்கிறது. இதில் இருக்கும் லாபத்தை உணர்ந்துகொண்ட கூகுள், இப்பொது 'ஆட்டோலிங்க்’ என்ற தொழில்நுட்பத்தை வேகமாக உருவாக்கிவருகிறது.

லேசர் ஹெட்லைட்ஸ்

கடந்த மாதம் ஜெர்மனியில் எட்டு வாடிக்கையாளர்களுக்கு, லேசர் ஹெட்லைட்டுகள் கொண்ட i8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்தது பிஎம்டபிள்யூ. இதன் மூலம், கார்களில் லேசர் ஹெட் லைட்டுகளைப் பொருத்தி விற்பனை செய்த முதல் நிறுவனம் பிஎம்டபிள்யூ என்று பெயரெடுத்துள்ளது. லேசர் ஹெட்லைட்டுகளில் இருந்து வரும் ஒளி ஆபத்தான கதிர்கள் இல்லை. ஹெட்லைட் அசெம்பிளியின் பின்பக்கத்தில் இருந்து வரும் மூன்று நீல நிற லேசர் பீம்கள், கண்ணாடித் துண்டுகள் வழியாக மஞ்சள் பாஸ்ஃபரஸ் நிரப்பப்பட்டுள்ள லென்ஸின் மீது படுகிறது. அப்போது லென்ஸ், சக்திவாய்ந்த வெள்ளை நிற வெளிச்சத்தை உருவாக்குகிறது. அந்த வெளிச்சம் ஒரு ரிஃப்ளெக்டர் மீது பட்டு, அதன் வீரியம் குறைக்கப்பட்டு வெளியே செல்கிறது. இந்த லேசரினால் உருவாகும் வெளிச்சம், கண் பார்வைக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது என்கிறது பிஎம்டபிள்யூ. இந்த லேசர் விளக்கு, எல்இடி விளக்குகள் எடுத்துக்கொள்வதில் முக்கால் பங்கு சக்தியை மட்டுமே பயன்படுத்தி, அதைவிட 1,000 மடங்கு ஒளியைத் தருகிறது. ஏதேனும் விபத்து ஏற்பட்டு ஹெட்லைட்டுகள் சேதமானால், இது தானாகவே ஆஃப் ஆகிவிடும்.

ஆடி டிராஃபிக் லைட் அஸிஸ்ட் 

நாம் கார் ஓட்டும்போது, வரிசையாக சாலையில் உள்ள அனைத்து சிக்னல்களும் பச்சையிலேயே இருந்தால், எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் அல்லவா? இந்த எளிதான ஐடியாவை எடுத்துக் கொண்டு, ஆடி நிறுவனம் உருவாக்கி இருப்பதுதான் 'டிராஃபிக் லைட் அஸிஸ்ட் ரிகக்னிஷன்’ (Traffic Light Assist Recognition) எனும் தொழில்நுட்பம். இதை ஜெர்மனில் ஓடும் கார்களில் பரவலாகப் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 900 மில்லியன் லிட்டர் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஆடி. நமது கார் செல்லும் சாலையில் உள்ள சிக்னல்களின் டைமிங், காரின் நேவிகேஷன் சிஸ்டத்துக்கு வை-ஃபை மூலம் அனுப்பப்படுகிறது. பின்பு, அடுத்த சிக்னல் சிவப்பில் இருந்தாலும், அது சரியாக பச்சை விளக்குக்கு மாறும்போது கடக்க, எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டுமோ, அதை உங்களுக்குக் காட்டும். நாம் அதைக் கடைப்பிடித்தால், சிக்னல் பச்சையில் இருக்கும்போது கடந்துவிடலாம். கூடவே, சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால், பச்சைக்கு மாறுவதற்கு எத்தனை விநாடிகள் இருக்கின்றன என்பதையும் காட்டும். இதனுடன் காரின் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டமும் இணைந்து இயங்கும்போது, கணிசமான எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஆடி.

ராஜா





No comments:

Post a Comment