Search This Blog

Monday, May 09, 2011

இந்தியா எதிர் கொள்ள போகும் மிக பெரிய பிரச்சனை...

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா உலக வல்லரசாகிறதோ இல்லையோ, மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்க இருக்கிறது. பனிபடர்ந்த இமயமலைச் சாரலில் உள்ள பல கிராமங்களில்கூட சமீபகாலமாகத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏன்? ஆண்டு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும் என்று நாம் பூகோளப் பாடத்தில் படித்த சிரபுஞ்சியில் குடிநீர் தட்டுப்பாடு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுதான் எதார்த்த நிலைமை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஏறத்தாழ 250 லட்சம் நீர்நிலைகள் இருந்ததுபோக, இப்போது முறையாகப் பாதுகாக்கப்படும் நீர்நிலைகளின் எண்ணிக்கை வெறும் 40,000 மட்டுமே என்கிறது சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கை ஒன்று. 2008-ல் "நாசா' நடத்திய ஓர் ஆய்வின்படி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், பிகார் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிவேகமாகக் குறைந்து வருவதாகவும், அது மழையால் முழுவதுமாக ஈடுகட்டப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவின் மொத்த நீர் வரவு 1,123 பில்லியன் கியூபிக் மீட்டராகத் தேக்கமடைந்திருக்கும் நிலையில், சுமார் 800 பில்லியன் மீட்டர் தேவை அதிகரித்திருக்கிறது. இது மேலும் அதிகரித்தவண்ணம் இருப்பதால் உற்பத்தியாகும் தண்ணீர் நமது தேவைக்குப் பற்றாக்குறையாகவே தொடர்கிறது. இப்போதே இந்தியாவின் பல பகுதிகள் வறட்சிப் பிரதேசங்களாக மாறிவிட்டிருப்பதன் காரணம் இதுதான்.நகர்ப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் இதற்கு முக்கியமான காரணம். நீர் மேலாண்மை என்பதற்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிட்டதால், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கிரிமினல் குற்றமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. சொல்லப்போனால், மாநில அரசுகளேகூட இந்த ஆக்கிரமிப்பை நடத்தி முன்னுதாரணமாகத் திகழும்போது, பொதுமக்களை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி?

அநேகமாக எல்லா மாநிலங்களிலும், பல பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது நீர்நிலைகளின் மீதுதான். அரசு அலுவலகங்கள் பல குளங்களையும், ஏரிகளையும் நிரப்பிக் கட்டப்பட்டவை என்பது உலகறிந்த உண்மை. வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை அமைப்பதில் தொடங்கி, நீர்நிலைகளில் மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளராக இருப்பது அரசாங்கம் எனும்போது, அரசியல் செல்வாக்குப் படைத்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களும் நீர்நிலைகளையும், ஏரிகளையும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க இயலாமல் போய்விட்டது.நகர்ப்புறங்களில் நடக்கும் குடிதண்ணீருக்கான போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, விவசாயிகளின் பாடு அதைவிடத் திண்டாட்டம். சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளாகியும் இன்னும் முறையான நீர் மேலாண்மைக்கான திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் ரூ. 1,20,000 கோடி செலவழித்திருக்கிறோமே தவிர, இன்னும் இந்தியாவிலுள்ள 30% விளைநிலங்கள்தான் பாசன வசதி பெற்றவை என்கிற புள்ளிவிவரம் தலைகுனிய வைக்கிறது. எங்கே போயிற்று இத்தனை கோடி மக்களின் வரிப்பணம் என்று கேள்வி கேட்கக்கூட ஆளில்லாத நிலைமை.

திட்டக் கமிஷன் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது. திட்டக் கமிஷன் உறுப்பினரான மிகிர் ஷா என்பவரை நீர் மேலாண்மைக் கொள்கையை வரையறுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் பணித்திருப்பதாகத் தெரிகிறது.விவசாய நீர் மேலாண்மையைப் பொறுத்தவரையில், மகாராஷ்டிரம் இந்தியாவுக்கு முன்மாதிரியாகப் பல பரிசோதனைகளைச் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்தச் சோதனைகள் அனைத்தையுமே செய்பவர்களும், செய்து வெற்றி பெற்றிருப்பவர்களும் காந்தியவாதிகளான மோகன் தாரியா, அண்ணா ஹஸôரே போன்றவர்கள். "பானி பஞ்சாயத்' (தண்ணீர் பஞ்சாயத்துகள்) என்று ஆங்காங்கே அமைக்கப்பட்டு, நீர்நிலைகளைத் தூர்வாருவது, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை நிறைவேற்றுவது, கால்வாய்களுக்கு சிமென்ட் பூசப்பட்டு கசிவைத் தடுப்பது என்று அவை செயல்படுகின்றன.

1960-ல் கிருஷ்ணா நதியின் தண்ணீர் உற்பத்தி 57 பில்லியன் கியூபிக் மீட்டராக இருந்தது. இப்போது, அநேகமாக ஒன்றுமே இல்லாத நிலைமை. 1892-ல் 1,85,000 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர்வரத்து இருந்த சிந்து நதியின் நீர்வரத்து 1990 புள்ளிவிவரப்படி வெறும் 12,300 மில்லியன் கியூபிக் மீட்டர் மட்டுமே. யமுனை நதி அநேகமாக வற்றிவிட்ட நிலைமை. ஆக்கிரமிப்புகளாகவும், கழிவு நீர் கலப்பதாலும் அதை நதி என்று அழைப்பதைவிடச் சாக்கடை என்று அழைக்கலாம் போலிருக்கிறது.தட்பவெப்பநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு என்று இமயமலையிலுள்ள பனிச்சிகரங்கள் பாதிக்கப்பட்டு கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா நதிகள் மெல்ல மெல்ல வற்றத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நீர்நிலைகளில் 36% நச்சுக் கழிவுகள் கலப்பதால் குடிநீராகப் பயன்படுத்தும் தகுதியை இழந்துவிட்டிருக்கின்றன.

2020-ல் இந்தியாவின் தண்ணீர்த் தேவை சுமார் 1,000 பில்லியன் கியூபிக் மீட்டர்களாகவும், மொத்த நீர்வரத்து வெறும் 700 பில்லியன் கியூபிக் மீட்டர்களாகவும் இருக்கப் போகிறதே, நாம் என்ன செய்யப் போகிறோம்?

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என்று எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில், அவர்கள் பகுதியிலுள்ள, இன்னும் ஆக்கிரமிப்புக்கு உள்படாத, நீர்நிலைகளையும், கோயில் குளங்களையும் முறையாகத் தூர்வாரிச் செப்பனிட்டுப் பாதுகாத்தாலேகூட ஓரளவுக்கு நாம் சமாளிக்க முடியலாம்.இனியும் தாமதிக்காமல், அரசு ஆறுகளில் மணல் அள்ளும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தால், மக்கள் மத்தியில் தண்ணீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், சமாளிக்க முடியலாம்.

இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால், நீர்நிலைகள் வற்றுவதுபோல நமது தொண்டைகளும் வற்றக்கூடும்!       


1 comment:

  1. ஹா ஹா
    முதல் ஆள் நான் தான்
    வடை எனக்கே :)

    ReplyDelete