அமையவிருக்கும் புதிய அரசிடமிருந்து மக்களுக்கு எத்தனை எத்தனையோ விருப்பங்கள், எதிர்பார்ப்புகள். தேர்தல் நேரத்தில் எவ்வளவோ வாக்குறுதிகள், இலவச அறிவிப்புகள் இருந்திருக்கலாம். ஆனால், திட்டவட்டமான அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் அவை மட்டும்தான் என்று யாரும் உறுதியாக முடிவெடுத்துவிட முடியாது.
தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்குமேயானால் இந்தியா எப்போதோ உலக வல்லரசாகி இருக்கும். சேது சமுத்திரத் திட்டம், காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்றவை கடந்த பல தேர்தல் அறிக்கைகளில் எல்லா கட்சியினராலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டவைதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவசியமான திட்டங்களை அவசரமாக நிறைவேற்றி அதன்மூலம் மக்களின் உடனடித் தேவைகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பதவி ஏற்க இருக்கிறது.
இன்றைய நிலையில் மக்களை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எங்கும் எதிலும் ஊழல் என்கிற வெளிப்படைத்தன்மை இல்லாத நிர்வாகம் போன்றவைதான். இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் நாளும் பொழுதும் அதிகரித்துவரும் நிலையில் அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு நிர்வாகம் செயல்படாவிட்டால், வருங்காலம் விபரீதமாகிவிடக் கூடும்.
இன்றைய படித்த இளம் தலைமுறையினர் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான செய்திகளை, நாட்டு நடப்புகளை, ஊடகச் செய்திகளை, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்கம் இயங்கும் முறைகளை, இணையதளங்களிலும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் பரிமாறிக் கொள்கிறார்கள். அதில் கிண்டலும் கேலியும் கலந்து, அரசியல் கட்சிகள் சிந்திக்க முடியாத அளவு, ஆழ்ந்த கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அவர்களின் மன உணர்வுகளைப் புரிந்து எல்லோரும் பாராட்டும் ஒரு நிர்வாகம் நடைபெற வேண்டும்.ஒரு கழுகுப் பார்வையாகப் பார்த்தால், மின்சார உற்பத்தி, விவசாய உற்பத்தியில் உயர்வு, உணவுப் பொருள் விலைக் கட்டுப்பாடு, அடிப்படைக் கட்டமைப்புகள் என எல்லா தளங்களிலும் விரைவில் முன்னேற்றம் கண்டாக வேண்டும். எதிலும் வீண் காலதாமதமும் பண விரயமும் இருக்கவே கூடாது. கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பும், எதிர்பாராத அளவுக்கு இளைஞர்கள், குறிப்பாகப் படித்த கிராமப்புற இளைஞர்கள் கலந்துகொண்டதிலிருந்து, அவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை நாம் புறந்தள்ளிவிட முடியாது என்பதை வலியுறுத்துகிறது
மனிதவள மேம்பாட்டில் சாதாரண படித்த, படிக்காத எல்லோருடைய திறமையும் உயர்த்தப்பட வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகச் சுலபமாக வேலைவாய்ப்புகள் கிடைக்கத் தேவையான வகையில் தமிழ்நாட்டில் உலக மொழிகளில் அவர்கள் பயிற்சிபெற வழிகோலும் பள்ளிகள், கல்லுரிகள், மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இங்கிருந்து தேர்ச்சிபெறும் மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதும், அப்படியே கிடைத்தாலும் அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்திருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். கல்லூரிகள் அதிகரித்திருக்கும் அளவுக்குக் கல்வியின் தரமும் அதிகரித்திருக்கிறதா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
பல லட்சங்களைக் கொடுத்துப் படித்துவிட்டுத் தரமான கல்வி போதிக்கப்படாததால் சர்வதேச அரங்கிலும், அகில இந்திய அளவிலும் போட்டிபோட இயலாமல் சம்பந்தாசம்பந்தமில்லாத ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள நேரும் இளைஞர்களின் மன அழுத்தம் மிகவும் ஆபத்தானது. சர்வதேச அளவில் திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புக்கேற்ற படிப்பு இருந்தும் நமது கல்வியின் தரம் குறைந்ததாக இருப்பதால் தனக்கு வாய்ப்பு கை நழுவும்போதுதான் இளைஞர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டு நிற்பதை உணர்கிறார்கள். நிலைமை விபரீதமாவதற்குள், தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை அண்மைக்காலத்தில் எல்லா மட்டத்திலும் அதிகமாகிக் கொண்டே போவதை யாரும் மறுக்க முடியாது. அதற்கெல்லாம் அடிப்படைக் காரணமே மின்சாரப் பயன்பாடு பலவகையிலும் அதிகரித்திருப்பதுதான். சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம், தொழில் வளர்ச்சி போன்றவைகளால் உண்டாகும் அதிக அளவிலான மின்சாரத் தேவைதான் இவ்வகைத் தட்டுப்பாட்டின் மூலகாரணம் ஆகும்.
தேவைக்கேற்ப மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பதுதான் மூலகாரணம். பல புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தமிழ்நாடெங்கும் பரவலாகத் திட்டமிடப்பட்டு உருவாகி வருகின்றன. சில மாதங்களில் அல்லது சில ஆண்டுகளில் அவை செயல்படக்கூடும். ஆயினும், மின்தட்டுப்பாடே இல்லை என்கிற நிலை வரவேண்டுமானால், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி கணிசமாகவும் உடனடியாகவும் அதிகரிக்கப்பட்டாக வேண்டும். மின்சாரப் பயன்பாடு ஏழை எளிய விவசாயப் பெருங்குடி மக்களுக்குப் பயன்பட வேண்டுமானால், அதற்கேற்றபடி மின் உற்பத்தியும் இருந்தாக வேண்டும். மின்சாரத்தின் விலையையும் குறைக்க வேண்டும். மின்சாரத் திருட்டு, மின்சார டிரான்ஸ்மிஷன் மூலம் ஏற்படும் இழப்பு, ஆகியவைகளை நவீன விஞ்ஞான முறைகளின்படி குறைக்க வேண்டும்.சூரிய மின் உற்பத்தியால் மட்டும்தான் ஏறத்தாழ ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் பெரிய அளவில் மின் உற்பத்தியைப் பெருக்க முடியும். மற்றவகை மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்பட்டு பயன்தரக் குறைந்தது மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகிவிடும். ஆகையால், இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயத்துக்குத் தேவையான மின் உற்பத்தியை ஈடு செய்யலாம்.
சூரிய மின்சாரத்தின் மூலம் அதிகபட்சம் ஆறு மணி நேரத்துக்கு மின்சாரம் பெற இயலும். அதற்கேற்றபடி திட்டமிட்டு, தேவையான மின்சாரத்தைப் பேட்டரி மூலம் சேமிப்பதால் தேவையான மின்சாரத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இது ஒரு பசுமை மின்சக்தி என்பதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.இப்போது இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் சில ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாகிறது. சில ஆண்டுகளின் மொத்தப் பணச் செலவை ஒரே முறையாக உலக வங்கி அல்லது அரசின் திட்டத்திலிருந்து பணத்தை ஒதுக்கிவிட முடியும். 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வேண்டுமானால் சுமார் ரூ.25,000 கோடி முதல் 26,000 கோடிவரை முதலீடு தேவைப்படும். ஆனால், அந்த முதலீடு மிகப்பெரிய அளவில் நமது மின்தேவையைப் பூர்த்தி செய்வதுடன், நீண்டகாலம் பயனளிக்கும் திட்டமாகவும் அமையும்.
மக்களை மிக அதிகமாகப் பாதிப்பதும், எரிச்சலூட்டுவதும், எந்த அரசு அலுவலாக இருந்தாலும் கையூட்டு இல்லாமல் வேலை நடக்காது என்கிற போக்குதான். சின்னச்சின்ன, நியாயமான கோரிக்கைகளுக்கும், உரிமைகளுக்கும்கூடக் கையூட்டு வழங்கித்தான் காரியம் நடக்கும் என்பதை இன்றைய படித்த விவரம் தெரிந்த இளைய தலைமுறையினர் வெறுக்கிறார்கள். அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.சாதாரண மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் அல்லது அரசு ரேஷன் கார்டு, பட்டா மாற்றம், மற்ற ஏதாவது அரசுத் துறையில் தேவையானவைகளை, சாதாரண ஒரு தபால் கார்டில் கடிதம் வாயிலாக அனுப்பினாலும் அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்தாலும், தேவையான கட்டணத்தைப் பெற்று அரசே தாமதமின்றி முடித்துத் தர வேண்டும். இதுதவிர - ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, வாகனத் தரச் சான்று போன்றவற்றுக்கு லஞ்சம் என்பது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். இதைச் செய்தாலே போதும் அந்த அரசும், ஆட்சியும் பொற்கால ஆட்சி என்று மக்களால் போற்றப்படும்.
தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இரண்டு முக்கியமான விஷயங்கள், கட்டுப்பாடற்ற மின்சாரமும், கையூட்டு இல்லாத நிர்வாகமும்தான். மக்கள் மன்றம் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் அடுத்த அரசிடம் நாம் எதிர்பார்ப்பது ஊழலற்ற ஆட்சி, தங்கு தடையில்லாத மின்சாரம், தெளிவான, தரமான கல்விக்கொள்கை, விவசாயத்துக்கு முன்னுரிமை ஆகியவைதான்.
தினமணி
No comments:
Post a Comment