சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.
காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.
சந்தை வாய்ப்பு!
காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.சூப் தயாரிக்க, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க, வெஜிடபிள் பிரியாணி செய்ய, ஊறுகாய் செய்ய என பல வகைகளில் உணவுப் பிரியர்களால் விரும்பப் படுகிறது. காளான் பவுடர் பால் கொதித்த நீரில் கலந்து டானிக்காக குடிக்கவும் பயன்படுகின்றது.பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. தவிர, காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழி லுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.
உற்பத்தி முறை
தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய வேண்டும் எனில், அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். அதாவது, சிறந்த மூலப்பொருள் மற்றும் சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசிய தேவைகள் ஆகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிப்பி காளான் தயாரிக்க வைக் கோலை அதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். பிறகு அதனை 50% காய வைத்து பாலித்தீன் கவரில் போட வேண்டும். இதே கவருக்குள் காளான் விதையையும் போட்டு கட்டி தொங்கவிட வேண்டும். 300 கிராம் எடை கொண்ட காளான் விதைக்கு நான்கு கிலோ வைக்கோல் போட வேண்டும். இது ஒரு பாலித்தீன் பைக்கான அளவு.
இதற்கென பிரத்யேகமாக 550 சதுர அடிக்குள் தென்னை ஓலையால் குடிசைக் கட்ட வேண்டும். கீழே தரையில் ஆற்று மணலைப் பரப்பி அதில் தண்ணீர் ஊற்றி வரவேண்டும். இந்த சூழ்நிலை காளான் வளர்ப்பிற்கு ஏற்ற தட்டவெப்ப நிலையைக் கொடுக்கும். விதைகள் போட்டிருக்கும் பாலிதீன் பைகளில் 20 ஓட்டை போட வேண்டும்.இந்நிலையில் 30-35 நாட்களுக்குப் பிறகு சிப்பி காளான் வெளியில் வர தொடங்கும். காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். முளைத்திருக்கும் காளானை மாலையில் அறுவடை செய்தால் மறுநாள் காலையில் பயன் பாட்டிற்கு கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும். காளான்களை அறுவடை செய்ததும் உடனடியாக சப்ளை செய்துவிட வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.
நிலம் மற்றும் கட்டடம்
10 கிலோ காளான் உற்பத்தி செய்ய 700 சதுர அடி நிலம் தேவைப்படும். நிலத்தில் குடிசை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இயந்திரம்
ஒரு நாளைக்கு 350 கிலோ வீதம் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால் 105 டன் காளான் தயாரிக்க முடியும். வைக்கோலை வேக வைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரமான ஆட்டோகிளேவ் சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது.
தண்ணீர்
தினமும் 15 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும்படி இருக்க வேண்டும்.
ஃபைனான்ஸ்
இந்த உற்பத்தி திறனுக்கான நிலத்திற்கு 60,000 ரூபாய் (தேர்ந்தெடுக்கப்படும் இடத்தைப் பொறுத்து விலை மாறுபடும்), கட்டடம் 2,50,000 ரூபாய் என மொத்தம் 3,10,000 ரூபாய் தேவை. இயந்திரத்திற்கான செலவு 1.98 லட்சம் ரூபாய்.
ரிஸ்க்
காளான் வளர்க்கும் இடம் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். காரணம், அசுத்தமான கையுடன் வேலை செய்தால்கூட பாக்டீரியாவால் பாதிப்படைந்து காளான் ஒழுங்காக வளராமல் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஒரு பாலித்தீன் கவர் கெட்டு போனால்கூட அனைத்து பாலித்தீன் கவரும் கெட்டுப் போய்விடும். கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும், எனவே குறைந்த அளவே காளான் உற்பத்தியாகும். இதனை சரி செய்ய மற்ற நேரங்களில் காலை, மாலை மட்டும் தெளிக்கும் தண்ணீரை வெயில் நேரங்களில் நாள் முழுவதும் தெளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை விட்டு வந்தால் காளான் வளரத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். பனிக் காலத்திலும் காளான் வளர்வது குறையும்.
பிளஸ்
அசைவ உணவுகளுக்கு மாற்றாக மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்களும் காளானைப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை நோயைக் குணப்படுத்த தயாரிக்கப் படும் மாத்திரைகளில் காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.
நல்ல ஏற்றுமதி வாய்ப்பு உள்ள இத்தொழிலில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வாய்ப் புள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையில் காளான் உற்பத்தி யூனிட்டுகள் இல்லாத தால் இத்தொழிலுக்கு பிரகாச மான எதிர்காலம் இருப்பதை மறுக்க முடியாது!
நன்றி : ITCOT Consultancy..
No comments:
Post a Comment