Search This Blog

Friday, June 13, 2014

ஸ்கூல் அட்மிஷன் - சமச்சீர் கல்வி

''சமச்சீர் கல்வி (மெட்ரிக்குலேஷன், ஸ்டேட்போர்டு, ஆங்கிலோ இண்டியன்... என பல கல்வி முறைகள் நம் மாநிலத்தில் சொல்லப்பட்டாலும், இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, சமச்சீர் கல்வியாக மாற்றப்பட்டுவிட்டது), சி.பி.எஸ்.இ (CBSE- Central Board of Secondary Education), ஐ.சி.எஸ்.இ (ICSE- Indian Certificate of secondary Education), இன்டர்நேஷனல் பள்ளிகள் (International Schools), மான்டிசோரி பள்ளிகள் (Montessori Schools), சுதந்திரப் பள்ளிகள் (Independant Schools ), டிஸ்கூலிங் (Deschooling) என்று பலவகை பாட முறைகளிலான பள்ளிகளுடன், வேறு சில பாடமுறைகளிலான பள்ளிகளும் இங்கே இருக்கின்றன.
 
கல்வி முறை எதுவாக இருந்தாலும்... பாடம் குறித்துப் படிக்கின்ற வார்த்தை ஒன்றுதான். ஆனால், கற்பிக்கும் முறையும், பாடத்தின் விரிவாக்கமும்தான் மாறுபடுகின்றன. உதாரணத்துக்கு, 'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எங்கு உள்ளது?' என்றால், அதற்கு நேரடியாக பதில் அளிப்பதே சமச்சீர் கல்வி முறையாக இருக்கிறது. இதுவே மற்ற கல்வி முறைகளில், வரைபடங்களுடன் அந்த களஞ்சியத்தைப் பற்றிய கடந்தகால, தற்கால தகவல்கள், செய்முறை தகவல்கள் என்று பலவித தகவல்களும் கூடுதலாக இருக்கும்.
 
சி.பி.எஸ்.இ பள்ளிகள்: இந்தியக் கல்வி முறையில் இயங்கக்கூடிய பள்ளிகள் இவை. பாடங்கள் விரிவானதாக இருக்கும். பெரும்பாலும் ஆய்வுகளைச் செய்யும் வகையிலான பாடங்கள் இருக்கும். புராஜெக்ட் எனப்படும் திட்டப்பணிகளும் இவற்றில் அதிக அளவில் இருக்கும். மாணவர்கள் வெறுமனே படம் பார்த்து பாடத்தைப் படிக்காமல், செயல்முறையாகவும் படிப்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை மனதில் ஏற்றிக்கொள்ளாமல், விஷயங்களை உள்வாங்கி படிப்பதாக இருக்கும். 'குடை' என்றால், படமாக மட்டுமே சமச்சீர் கல்வி முறையில் இருக்கும். சி.பி.எஸ்.இ முறையில் குடையை பேப்பர் உள்ளிட்ட பொருட்களால் செய்தே காட்டுவார்கள். மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலான கல்வி இது.


ஐ.சி.எஸ்.இ பள்ளிகள்: கிட்டத்தட்ட சி.பி.எஸ்.இ போன்றதே இந்தக் கல்விமுறையும். என்றாலும், இங்கே செயல்வழிக்கற்றல் என்பது மேலும் விரிவாக இருக்கும். உதாரணத்துக்குக் குடையை பேப்பர் உள்ளிட்ட பொருட்களில் செய்துகாட்டுவதோடு... அதற்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

சுதந்திர பள்ளிகள்: மேம்படுத்தப்பட்ட கல்வியை அளிப்பதாக இயங்கி வருபவை, இந்தப் பள்ளிகள். தி ஸ்கூல், ஈஷா கேம்பஸ் (The School, Isha Campus) போன்ற பள்ளிகள், இவற்றில் அடக்கம். இந்தப் பள்ளிகள், வழக்கமான கல்வி முறையில் இல்லாமல் தங்களுக்கென தனித்தனி பாடமுறைகளை வகுத்துக்கொண்டு, அதை செயல்படுத்தி வருகின்றன. உதாரணத்துக்கு தி ஸ்கூல் என்பது ஐ.ஜி.சி.எஸ்.இ எனும் ஆக்ஸ்போர்டு கல்வி முறையில் இயங்குகிறது. பெரும்பாலும் இந்தப் பள்ளிகள் ஐ.சி.எஸ்.இ கல்வி முறையிலே செயல்படுவதாக தெரிகிறது. இந்தப் பள்ளிகளின் சிறப்பம்சம், ஒரு மாணவன், ஒரு வகுப்பில் தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுகிறான். அங்கிருந்தபடியே தோல்வியடைந்த முந்தைய வகுப்பு பாடத்தைப் படித்து தேர்ச்சி பெறலாம். முழுக்க முழுக்க வாழ்வியல் சார்ந்த நடைமுறைக் கல்வியாகவும் இது இருக்கும்.

 
இன்டர்நேஷனல் பள்ளிகள்: இந்த சர்வதேசப் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. கூடுதலாக இசை, நடனம், நீச்சல், ஸ்கேட்டிங் உள்ளிட்ட பலவித பயிற்சிகளும் வழங்கப்படும். ஏ.சி வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டு, சாட்டிலைட் மூலமாக வெளிநாட்டு ஆசிரியர்கள் பாடம் எடுப்பது முதலான தொழில்நுட்பங்கள் இந்த வகைப் பள்ளிகளின் சிறப்பம்சங்கள். பாடம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கே மாணவர்களை அழைத்துச் செல்லும் 'ஃபீல்டு ட்ரிப்’களும் நடத்தப்படுகின்றன.  இங்கே மாண வர்கள் உணவு மற்றும் உடை ஆகியவையும் வெளிநாட்டு கலாசாரத்துக்கு இணையானதாகவே இருக்கும்.
 
மான்டிசோரி பள்ளிகள்: மரியா மான்டிசோரி என்பவர் கண்டுபிடித்த இந்த வெளிநாட்டுக் கல்வி முறையின் சிறப்பம்சமே, ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதான். அதேநேரத்தில், ஒரு மாணவன், ஒரே வகுப்பை மூன்று வருடங்கள் (இரண்டரை வயது முதல் ஐந்தரை வயது வரை) படிக்க வேண்டும். பல்வேறு வயதுள்ள மாணவர்கள் ஒரே வகுப்பில் படிப்பதால், அவர்களிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவும் மனப்பான்மையும் வளர்கின்றன. கூடுதலாக இன்னொரு சிறப்பும் இந்தப் பள்ளிகளுக்கு உண்டு. அதாவது, ஒரு வகுப்பின் பாடதிட்டத்தில் சந்தேகம் இருந்தால், அந்த மாணவன் மீண்டும் முந்தைய வகுப்புக்குச் சென்று, அங்கே அமர்ந்து, சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டு வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதைக்கு இந்த பள்ளிகள் துவக்கப் பள்ளிகள் அளவில் மட்டுமே செயல்படுகின்றன. அதிலும், பல மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் வகையில்தான் இருக்கின்றன. அதன்பிறகு, வழக்கமான பள்ளிகளில் சேர்ந்துதான் படிக்க வேண்டும்.
 
டிஸ்கூலிங்: 'ஒரு குழந்தை வேலைக்கு சென்று கல்லை சுமப்பதும், பள்ளிக்கு சென்று புத்தகத்தை சுமப்பதும் ஒன்றுதான்' என்றும், 'பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களுக்கு இணையானவர்கள்' என்றும் கருதுபவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே பாடம் கற்பிக்கும் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறையிலான கல்வியை, இந்தியாவில் வெகுசிலர் மட்டுமே பின்பற்றுகிறார்கள். இந்தக் கல்வி முறையைப் பொறுத்தவரை பெற்றோரிடமோ அல்லது தன் வீட்டுக்கு வந்து பாடம் எடுக்கும் ஆசிரியரிடமோ அல்லது 'ஆன்லைன்’ மூலமாகவோ மாணவன் பாடம் பயில்கிறான். அல்லது தனக்குத் தோதான நேரத்தில், தனக்குப் பிடித்த இடங்களுக்கு சென்று பயில்கிறான்.

உயர்கல்வி, வேலை வாய்ப்பு போன்ற எண்ணங்கள் இருந்தால், தனித்தேர்வர்களாக 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம்.
 

No comments:

Post a Comment