Search This Blog

Saturday, June 14, 2014

அருள்வாக்கு - ராஜ விசுவாசம்

இப்போதெல்லாம் குடியரசு யுகத்தில் ஒருத்தரைத் தலைவர் என்று ஸ்தோத்திரம் பண்ணி ஊரையெல்லாம் இரண்டு படுத்துகிற மாதிரி டெமான்ஸ்டரேஷன்கள் பண்ணிவிட்டு, கொஞ்ச காலமானால் அவரை எவரும் சீந்தாமல் தூக்கிப் போடுகிற மாதிரி இல்லை, ராஜ விஸ்வாசம் என்பது. அது நின்று நிலைத்து ஹ்ருதயபூர்வமாக இருந்து வந்த விஷயம். ராஜாக்களும் இந்த விஸ்வாசத்தைப் பெறுவதற்குப் பாத்திரர்களாகவே ரொம்பவும் ஒழுக்கத்தோடு குடிஜனங்களைத் தம் பெற்ற குழந்தைகளைப் போலப் பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அதிகாரம் வந்து, அந்த ருசியில் கண்டது காணாதது போல் ஒழுங்கு தப்பிப் போகிற மாதிரி இல்லை, பாரம்பரிய ராஜயாதிகாரம் என்பது. 

திடீர் அதிகாரம் வந்தால்கூட பாரம்பரியப் பண்பு அவர்கள் தலைதெறிக்கப் போகாமலே கட்டுப்படுத்தும். புராணங்களைப் பார்த்தால் வேனனையும் அஸமஞ்ஜனையும் பல் எங்கேயாவது நூற்றிலே ஒரு ராஜாவோ ராஜகுமாரனோ முறை தப்பிப் போனால் அப்போது ஜனங்களே அதனைத் தொலைத்து முழுகியிருக்கிறார்கள். மொத்தத்தில் ‘யதா ராஜா ததா ப்ரஜா’. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி’ என்ற மாதிரி, அப்போது இரண்டு பக்கத்திலும் தர்மத்துக்குப் பயந்தவர்களாக இருந்தார்கள்.  

சட்டம் என்று வெறும் ராஜாங்கரீதியில் போடுகிறபோது, முதலில் அதைப் பண்ணுகிறவர்கள் சரியாகயிருக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. இந்தச் சட்டங்களுக்கெல்லாம் மேலான த்ரிலோக ராஜாவான பரமேச்வரனின் சட்டமான தர்மசாஸ்திரத்துக்கு அடங்கியே ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்கள் ஆகிய இருவரும் இருந்தால்தான் லோகம் நன்றாயிருக்கும். பூர்வகாலங்களில் ஆளப்படுகிறவர்களுக்கும் ஆளுகிறவர்களே இப்படி தர்மத்துக்கு அடங்கியிருந்து வழி காட்டியிருக்கிறார்கள். இதனால்தான் ஜனங்களுக்கு ஸ்வபாவமாக, ரஜவிஸ்வாசம் என்ற ஆழ்ந்த, நிஜமான பற்று இருந்து வந்திருக்கின்றது.

இவர்கள் தன் ஜனங்கள்’ என்ற பாந்தவ்யம் ராஜாவுக்கும், ‘இவன் நம் ராஜா’ என்ற அன்பு ஜனங்களுக்கும் இருந்து வந்தது. 

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


No comments:

Post a Comment