Search This Blog

Monday, June 09, 2014

காலை உணவு கட்டாயம்!


பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், நேரமில்லை எனும் காரணம் காட்டி பல மாணவர்கள் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை. இது ஆரோக்கியக் கேடுகளுக்கு வழி வகுக்கிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. 

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளி விடுகிறோம். இதனால் உடலில் சக்தி குறைகிறது. இந்தச் சக்தியைப் பெறுவதற்குக் காலையில் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். காலையில் நாம் சாப்பிடும் உணவுதான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.  

காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு விரைவிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் காலை வகுப்புகளில் அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை. தூக்கம், சோர்வு தலைவலி வருகிறது. அவை கற்றல் திறனைப் பாதிக்கிறது. இவர்கள் மதிய உணவுக்கு முன்பாக வரும் இடைவேளை நேரத்தில் பசி காரணமாக ஏதாவது ஒரு நொறுக்குத் தீனியை வயிறு நிறையச் சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மதிய உணவு சாப்பிடுவதும் குறைந்து போகிறது. நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதால் உடற்பருமன் வருகிறது. இதன் விளைவால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது. 

மேலும், தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இரைப்பையில் சுரக்கிற அமிலச் சுரப்பு இரைப்பைத் திசுக்களை அரித்துப் புண்ணாக்கி விடுகிறது. இது பசியைக் குறைத்து விடுகிறது. செரிமானக் கோளாறு தொல்லை தருகிறது. எனவே இவர்களால் அடுத்த வேளை உணவையும் சரியாகச் சாப்பிடமுடிவதில்லை. இது ஊட்டச்சத்துக் குறைபாட்டை இன்னமும் அதிகரிக்கச் செய்கிறது. இது உடல் வளர்ச்சியைப் பாதிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. இவர்கள் உடலளவிலும் மன அளவிலும் பலவீனமாக இருக்கிறார்கள். இதனால் பொறுமை குறைந்து கோபம், எரிச்சல் அதிகமாக வருகிறது.

காலை உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து கலந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த காலை உணவு மந்த நிலையைஉருவாக்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வழக்கமான அரிசியில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை, சாதம் என்று ஒரே வகை உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக பல மாற்று உணவுகளைச் சாப்பிடும் வழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்.  

உதாரணமாக கேழ்வரகு இட்லியுடன், நிலக்கடலை சட்னி, ஒரு வாழைப்பழம், கார்ன்ஃபிளேக்ஸ் கலந்த பால் சாப்பிடலாம். வேக வைத்த காய்கறிகள் சேர்த்த கோதுமை ரவா உப்புமாவுடன் வேகவைத்த முட்டை சாப்பிடலாம். சப்பாத்தியுடன் தேன் கலந்த ஓட்ஸ் 100 மி.லி. அரை ஆப்பிள் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும்போது ஆரோக்கியத்துக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும். அரிசி தோசை ஒருநாள் என்றால் சம்பா தோசை ஒருநாள் சாப்பிடலாம். காலை உணவில் ஒரு பழம் அவசியம் இருக்க வேண்டும். சாமை, வரகு, தினை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது.

காலை உணவைச் சரியாகச் சாப்பிடும் குழந்தைகள் நல்ல உடல் நலனுடனும் ஊக்கத்துடனும் செயல்படுகிறார்கள் என்பதும் இவர்களுக்குச் சிந்திக்கும் திறன் அதிகமாக உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

No comments:

Post a Comment