Search This Blog

Sunday, June 22, 2014

உலகக் கோப்பை கால்பந்து


வழக்கமாய் உலகக் கோப்பையின் முதல் வாரம் சோம்பல் முறிக்கும் வாரமாய் அமையும். கிரிக்கெட் போலன்றி, கால்பந்தாட்டக்காரர்கள் நாட்டுக்கு விளையாடுவதை விட, அவரவர் கிளப்புக்கு விளையாடுவதே அதிகம். ஒரு அணியில் இருப்பவர்கள் சேர்ந்து ஆடியதை விட, ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடியதே அதிகமாக இருக்கும். 

இந்த உலகக் கோப்பையில் கோல்களின் எண்ணிக்கை முதல் ரவுண்டிலேயே கணிசமான அளவில் உள்ளது. முதல் 14 ஆட்டங்களில் 13 ஆட்டங்கள் டிராவின்றி அமைந்துள்ளன. அதிலும் பெரிய அணிகள் மோதும்போது கோல் மாரி பொழிந்ததென்றே சொல்லலாம். முதல் ஆட்டம் பிரேசிலுக்கும் க்ரோயேஷியாவுக்கும் இடையில் நடந்தது.

இவ்வாண்டு சாம்பியன்ஷிப்பை வெல்லக் கூடிய வாய்ப்பு பிரேசிலுக்கு அதிகமுள்ளதாகக் கருதப்பட்ட நிலையில் அந்த அணியின் ஆட்டம் அத்தனை சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக உலகின் தலைசிறந்த தற்காப்பு வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், பல நேரங்களில் எதிர் அணியின் தாக்குதலை பிரேசில் ஆட்டக்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தின் முதல் கோல், ரியல் மாட்ரிடின் லெஃப்ட் பேக் (Left back) மார்செலோவின் செல்ஃப் கோலாக அமைந்தது. அதிர்ஷ்டமும், ரெஃப்ரீயின் கருணையும், நெமார் மற்றும் ஆஸ்கரின் சிறப்பான ஆட்டமுமே கடைசியில் பிரேசிலை கரை சேர்த்தன.சென்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய நெதர்லாந்துடன் இம்முறை முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் மோதியது. ஸ்பெயினின் வழக்கமான Possession game முதல் அரை மணி நேரத்துக்கு ஆட்டத்தை அதன் கட்டுக்குள் வைத்திருந்தது. பெனல்டி ஏரியாவில் கோஸ்டாவை நெதர்லாந்து வீரர் தடுக்கிவிட, சாபி அலோன்ஸோ (Xabi Alonso) 1-0 என்று ஸ்பெயினை முன்னிலைப்படுத்தினார்.ஆட்டத்தின் முதல் பகுதியின் முடிவில் டாலி ப்ளைண்டின் கிராஸை, ஒரு துல்லியமான டைவின் மூலம் தலையால் கோல்கீப்பரின் தலைக்கு மேல் பந்தை செலுத்தி வான் பெர்ஸி ஆட்டத்தை சமன் செய்தபோது ஆட்டம் திசை திரும்பியது. அந்த கோலின் தருணமும், செயலாக்கப்பட்ட விதமும் நெதர்லாந்தை தட்டி எழுப்பின.ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் முதலில் இருந்தே அதிரடியாய் நெதர்லாந்து தொடங்கி, ஸ்பெயினை திக்குமுக்காடச் செய்தது. ரோபனும், வான் பெர்சியும் தலா இரண்டு கோல் அடித்தனர். 

சென்ற உலகக் கோப்பை முழுவதும், கோல்கீப் பர் கஸியாசை தாண்டி ஐந்து கோல்களே சென்றன. இந்த முறை முதல் ஆட்டத்திலேயே ஐந்து கோல்களைப் பறிகொடுத்து பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமே. ஸ்பெயின் இருக்கும் பிரிவில் இன்னொரு அணியான சிலேவின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, ஸ்பெயின் அடுத்த இரு ஆட்டங்களில் வென்றாலன்றி இரண்டாவது சுற்றுக்குச் செல்வதே சிரமம்தான்.

சென்ற முறை அரை இறுதிவரை சென்ற உருகுவேயின் நிலைமையும் ஸ்பெயினைப் போலத்தான். ஃபோர்லான், கவானி போன்ற நட்சத்திரங்கள் இருக்கும் உருகுவேயின் முதல் ஆட்டத்தில் சௌரேஸ் ஆடாதது பலவீனமாய் அமைந்தது. முதல் கோலை உருகுவே அடித்தபோதும், அடுத்தடுத்து மூன்று கோல்கள் பதற்றமின்றி அடித்து கோஸ்டாரிகா வென்றது. இந்தப் பிரிவின் மற்ற இரு அணிகளான இங்கிலாந்தும், இத்தாலியும் மோதிய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நிறைய அனுபவம் உள்ள பிர்லோவின் டம்மி (அடிப்பது போல் ஏமாற்றி பந்தை தன் அணியின் வேறொருவருக்கு அனுப்பி வைப்பது) மூலம் இத்தாலி முன்னிலை பெற்றது. இங்கிலாந்து ஸ்டரிட்ஜின்கோல் மூலம் சமன் செய்தாலும், வென் ரூனி கிடைத்த நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டார். மரியோ பாலோடெல்லியின் ஹெட்டர், ஆட்டத்தை இத்தாலிக்கு வென்று கொடுத்தது. இந்தப் பிரிவில் இனிவரும் ஆட்டங்கள் பல வாழ்வா சாவா வகை என்பதால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமையும்.உலகெங்கிலும், குறிப்பாக இந்தியர்களிடையிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கும் அர்ஜென்டினாவின் தொடக்கமும் எதிர்பார்த்த அளவு அமையவில்லை. தலைசிறந்த ஸ்டிரைக்கர்கள் கொண்ட அணி வழக்கமான 4-3-3 ஃபார்மேஷனாக இல்லாது 5-3-2 ஃபார்மேஷனில் போஸ்னியாவை எதிர்த்துக் களமிறங்கியது. கோல் அடிப்பதற்கான பளு மெஸ்ஸியின் மேல் அதிகமாய் இருக்க, அவர் ஆட்டம் சொபிக்கவில்லை. இரண்டாம் பகுதியில் ஹிகுவென் நுழைந்து 4-3-3 ஃபார்மேஷனாக ஆனதும்தான் பழைய மெஸ்ஸி தென்படத் தொடங்கினார். அவருடைய டிரேட்மார்க் நகர்த்தல் மூலம் தன் முதல் கோலை அடித்து ஆட்டத்தை அர்ஜென்டினா வெல்ல உதவினார். இரண்டாம் சுற்றுக்கு அர்ஜென்டினா நிச்சயம் தகுதி பெற்றுவிடும் என்றபோதும், இவ்வகையில் ஆடினால் சாம்பியனாவது கடினம். விரைவில் அணியின் வலிமைக்கேற்ற சூழல்களை அவர்கள் வகுத்துக் கொள்ளுதல் அவசியம்.முதல் ரவுண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய ஆட்டம் ஜெர்மனிக்கும் போர்ச்சுகலுக்கும் இடையே நடைபெற்றது. நட்சத்திர ஆட்டக்காரர்களை நம்பாமல் சேர்ந்து ஆடுவதில் கவனம் செலுத்தும் ஜெர்மனி ஒருபுறம், ஒற்றை ஆளா ஆட்டத்தைத் திருப்பிப் போடும் கிரிஸ்டியானோ ரொனால்டு, அவ ருக்கு உதவியாய் இருக்க மற்ற ஆட்டக்காரர்கள் என்று வியூகம் அமைத்துக் கொள்ளும் போர்ச்சுகல் மறுபுறம்.

ஷ்வான்ஸ்டைகர், பொடோல்ஸ்கி போன்ற ஆட்டக்காரர்கள் இல்லாமல் களமிறங்கினாலும் கூட ஜெர்மன் அணியின் வலு கணிசமானதாகத் தோன்றியது. போட்டிக்கு முன் ஏற்பட்ட காயம் முழுவதாகக் குணமாகிவிட்டதாக ரொனால்டோ கூறினாலும் அவர் ஆட்டத்தைப் பார்க்கும்போது அந்தக் கூற்றின் நம்பகத்தன்மை குறைகிறது. ஜெர்மனியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் மூலம் எழுந்த அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் பாதியிலேயே மூன்று கோல்களைக் கொடுத்துத் தவித்தது போர்ச்சுகல். போதாக்குறைக்கு தேவையே இல்லாமல் ரியல் மாட்ரிடுக்கு ஆடும் பெப்பே சண்டையில் இறங்கி ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். போன உலகக் கோப்பையில் ஐந்து கோல்கள் அடித்து கோல்டன் பூட் வென்ற தாமஸ் மூல்லர் இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் அடித்து இவ்வாண்டும் பட்டத்தை வெல்லும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment