'அபாயகரமான வளைவு... கவனமாகப் பயணிக்கவும்!’ - அனைத்து அரசியல் தலைவர்களும் இப்போதைக்குப் படிக்க வேண்டிய ஒரே வாக்கியம் இதுதான்! அடுத்து வரப்போகும் இரண்டு வாரங்களில் தலைவர்கள் எப்படி நடந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் தலைவிதிகள் தீர்மானிக்கப்படும். அதற்கான முன்னோட்டங்கள் இந்த வாரத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டதை இந்தக்கட்சிகளின் தலைமை நிலையக் காட்சிகள் நமக்குச் சொல்கின்றன!
திணறும் தி.மு.க.
அப்பத்தைப் பங்கிட்டுக் கொடுப்பதில் எப்போதும் சமர்த்தர் கருணாநிதி. அவருக்கே இடியாப்பச் சிக்கல் வந்தது இந்த முறைதான்! போட்ட பிஸ்கட்டுக்கு வால் ஆட்டி வந்த காங்கிரஸ், இந்த முறை கொஞ்சம் கோபத்தில் இருக்கிறது என்றுதான் கருணாநிதி நினைத்தார். ஆனால், அடங்காத சீற்றமும் 'ஆ.ராசா’வை முன்வைத்த அநியாய சீண்டலையும் காங்கிரஸ் கடைப்பிடிக்கும் என்பது யாரும் எதிர்பாராதது. 40 ஆண்டு காலக் கோபத்தை நான்கே மாதங்களில் தீர்த்துக்கொள்ளத் திரிகிறது காங்கிரஸ்.
'80 தொகுதிகள் வேண்டும், எட்டு மந்திரி கள் வேண்டும், துணை முதல்வர் பதவியும் வேண்டும்’ - இந்த மூன்றும்தான் ரிபெல் காங்கிரஸின் ரிங்டோன். கருணாநிதியைச் சட்டமன்றத்திலும் பொதுமேடைகளிலும் வானளாவப் புகழும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க் கள்கூட, டெல்லி தலைமை அமைத்த ஐவர் குழுவில், இதே கோரிக்கையை ரகசியமாக வைத்திருப்பதுதான் கருணாநிதிக்கு அதிர்ச்சி. காங்கிரஸுக்கு 50, பா.ம.க-வுக்கு 30, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10. ஆக மொத்தம் 90 இடங் கள் போனால், மீதி உள்ள 144-ஐ தி.மு.க. எடுத்துக்கொள்ளலாம். உதிரிகள் சிலரை உதய சூரியனில் நிற்கச் சொல்லலாம் என்பதுதான் கருணாநிதி தனது டைரியில், பென்சிலால் எழுதிவைத்திருந்த முதல் கணக்கு. தீர்மான மான கணக்காக இருந்திருந்தால், அவரே பேனாவால் எழுதியிருப்பார். அழிக்க வசதி யாகவே பென்சில். 'கடந்த முறை 31 இடங்கள் நின்றோம். அதனால் 31-க்குக் குறைவாக வேண்டாம்’ என்று ராமதாஸ் சொன்னார். 'மருத்துவருக்கு எத்தனை தருகிறீர்களோ, அதில் பாதியாவது எங்களுக்கு வேண்டும்’ என்று சீறிக்கொண்டு இருக்கிறது சிறுத்தை. காங்கிரஸ் கட்சி 50-க்கு அடங்குவதாகத் தெரியவில்லை என்றதும், 56 இடங்கள் என்று தாராளம் காட்டினார் கருணாநிதி.
'75-க்குக் குறைவான இடங்களை வாங்கக் கூடாது’ என்று ராகுல் சொல்லிவிட்டதாக, இளைஞர் காங்கிரஸ் டென்ஷனைக் கூட்டி வருகிறது. இதை வைத்துப் பார்த்தால், 66 இடங்கள் வரை காங்கிரஸ் கறந்துவிடும் என்றே தெரிகிறது. '144 தொகுதிகளுக்குக் குறைவாக நிற்பது நமக்கு நல்லது அல்ல!’ என்கிறார் அழகிரி. 'நான் முதல்வராக வரப்போகும் நேரத்தில்தான் இந்த ஸ்பெக்ட்ரம் தொல்லை வரணுமா?’ என்பது ஸ்டாலினின் வருத்தம். 'கூடுதலாகக் கொடுத்தாலும்கஷ்டம், குறைவாகக் கொடுத்தாலும் கஷ்டம்’ என்று கலங்கினாராம் கருணாநிதி. மூன்றெழுத்துக் கட்சியை ராகுல் என்ற மூன்றெழுத்துதான் பிடித்து ஆட்டுகிறது!
அவஸ்தையில் அ.தி.மு.க!
பயந்து இருப்பது தெரியக் கூடாது என்ப தற்காகச் சில அதைரியசாலிகள் ஆளுக்கு முன்னால் கிளம்புவார்கள். ஜெயலலிதாஅந்த வகையறா! எல்லாக் கட்சிகளுக்கும் முன்ன தாகவே, தன் கூட்டணியை அறிவிப்பார். தொகுதிகளைப் பிரிப்பார். வேட்பாளர்களை அறிவிப்பார். டூர் கிளம்பிவிடுவார். தேர்தல் தேதிக்கு முன்னதாக எல்லாமே பக்காவாகத் தீர்மானிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த முறை அம்மா படும் அவஸ்தை சொல்ல முடியாதது. எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலை இல்லை என்ற அவரது இமேஜ், கடுமையாகச் சரிந்து இருக்கிறது. சேதுராம னுக்கு ஒண்ணு, கிருஷ்ணசாமிக்கு ரெண்டு, ஜிவாஹிருல்லா வுக்கு மூணு... என்றுதான் அறிவிக்க முடிந்தது. இந்த ரீதியில் போனால், 234 அறிவிப்பதற்குள் எலெக்ஷன் முடிந்துவிடும். கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் வைகோவுக் குக்கூட அவரால் எண்ணிக்கையைச் சொல்ல முடியவில்லை. கறார் கம்யூனிஸ்ட்டுகளும் கணக்குத் தெரியாமல் அலைகிறார்கள். அத்தனைக்கும் காரணம், விஜயகாந்த் விஷயத்தில் இன்னமும் முடிவெடுக்க முடியாததுதான்.
மாவட்டத்துக்கு இரண்டு தொகுதிகள் வீதம் வேண்டும் என்று 66-ல் விஜயகாந்த் தொடங்க... மாவட்டத்துக்கு ஒன்றுதான் என்று 33-ல் ஆரம்பித்தார் அம்மா. இரண்டு பேர் சொல்லும் எண்களும் பக்கத்தில் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தை பல நாட்கள் நீடித்தன. ஜனவரி 30-ம் தேதி இந்த நம்பரைச் சொன்னதும் விஜயகாந்த் சிரித்தது, கார்டனின் கோபத்தை அதிகப்படுத்தியது. 'முதலமைச்சர் நாற்காலியில் உட்காரப்போறது அந்த அம்மாதான். நான் இல்லை. அதனால, சரியான முடிவெடுக்க வேண்டியது அவங்கதான்’ என்று சொன்ன விஜயகாந்த், எந்த ரியாக்ஷ னையும் இதுவரை வெளியிடாதது ஜெயலலிதாவைத் தூக்கம் இல்லாமல் செய்துவிட்டது. 'விஜயகாந்த் வேணும். ஆனால், அவருக்கு வெளியே தெரியும்படி ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துடக் கூடாது’ என்ற மனோபாவம் பிடித்து ஆட்டுவதால் அவஸ்தையில் இருக்கிறார் ஜெ!
கலக்கும் காங்கிரஸ்!
காமராஜர் ஆட்சியைக் கொல்லைப்புறம் வழியாகப் போய் அமைக்க இப்படி ஒரு பாதை இருக்கிறதே என்று காங்கிரஸ் இப்போதுதான் கண்டுபிடித்து இருக்கிறது. எந்தக் கூட்டணி யில் இருந்தாலும், காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று, தேர்தலில் நிற்கும் அந்தக் கட்சி வேட்பாளர் மட்டும்தான் கடவுளை வேண்டிக்கொண்டு இருப்பார். மற்ற தொண்டர்கள் அதைப்பற்றிய கவலையே இல்லாமல்தான் இருப்பார்கள். ஆனால், இந்த முறைதான் காங்கிரஸின் அனைத்துத் தொண்டர்களும் துள்ளிக் குதிக்கிறார்கள்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகிய மூவர்தான் இதற்கான தூண்டுதல். காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கிளம்பியது, கருணாநிதி ஆட்சியை அகற்றுவோம் என்றே அனைவர் காதிலும் விழுந்தது. காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையப்போவதாகத்தான் தொண்டர்கள் நினைத்தார்கள். ராகுலும் அதற்கான வேலைகளில் இறங்கி னார். ஆனால் சோனியா, 'இந்த ஒரு தடவை கருணாநிதியுடன்தான் கூட்டணி’ என்று சொல்லிவிட்டார். 'கருணாநிதி யுடன் கூட்டணி ஓ.கே. ஆனால், நான் கேட்கும் சீட்டு களைத் தர வேண்டும்’ என்றார் ராகுல். 'மகனே, உன் சமர்த்து’ என்று சீட் விஷயத்தில் சோனியா ஒதுங்கிக்கொள்ள... ஆ.ராசாவை வைத்தே தி.மு.க-வின் தெம்பைப் பாதியாகக் குறைத்தது காங்கிரஸ்.
கேட்கும் தொகுதிகளைத் தரவில்லை என்றால், கம்பி எண்ண வேண்டியோர் எண்ணிக்கை கூடுதலாகும் என்று காங்கிரஸ் நடத்தும் பாலிடிக்ஸ்... தமிழ்நாட்டுக்கு ரொம்பவே புதுசு. 'காங்கிரஸைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்’ என்று மு.க. தங்கபாலுவாகத் தன்னுடைய முன்னெழுத்தை மாற்றிக் கொண்ட கே.வி.தங்கபாலுவே சொல்ல ஆரம்பித்த பிறகு, காங்கி ரஸைக் குறைத்து மதிப்பிட முடியாதுதான். அதுக்காக, 80 சீட் ரொம்ப ஜாஸ்தி சார்!
விட்டுத்தராத விஜயகாந்த்!
'விருதகிரி’க்கு அடுத்த சினிமா வாகத்தான் இதையும் நினைக்கிறார் விஜயகாந்த். இன்னும் ரெண்டு வாரம் கழித்துப் போய்க் கேட்டாலும், 'என்ன சார் அவசரம். இன்னும் தேர்தலுக்கு மூணு மாசம் இருக்கே’ என்று பதற்றம் இல்லாமல் சொல்வார். 'சேலம் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பேன்’ என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பியவர், அநியாயத்துக்கு மௌன சாமியார் ஆகிவிட்டார். 'மனசுல உள்ளதை மறைக்காம சொல்லிடு வேன்’ என்ற விஜயகாந்த், என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது அவர் அறிவிக்கும் வரை மர்ம மானதுதான்.
கார்டன் தரப்பு, காந்த் தரப்புடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகிறது. கடந்த வார நிலவரப்படி, 50 தொகுதிகளுக்குக் குறையாமல் நிற்கிறார் விஜயகாந்த். 'இன்னும் எத்தனையோ கட்சிகளுக்குத் தர வேண்டியிருக்கே’ என்று அ.தி.மு.க. மாஜிக்கள் சொல்லிப் பார்த்தார்கள். 'எங்களுக்கு 12 சதவிகித வாக்கு இருக்கிறதை மதித்தால், அதற்கான இடங்க ளைக் கொடுங்க’ என்று கேப்டன் ஆட்கள் சொல்லி வருகிறார்கள்.
'12 சதவிகித வாக்குகள் வைத்திருப்பவருக்கு, 50 தொகுதிகள் என்றால், மற்ற 35 சதவிகித வாக்குகள் உள்ள அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டிஇடுவது?’ என்கிறார்கள் அம்மா ஆட்கள். 'கருணாநிதி ஜெயிக்க ணுமா? ஜெயலலிதா ஜெயிக்க ணுமா? என்று தீர்மானிக்கப் போறதே எங்கள் கேப்டன்தான்’ என்று தே.மு.தி.க-வினர் சொல்கிறார்கள்.
இந்த இரண்டில் எது நடந்தாலும், விஜயகாந்த்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அவரது கட்சி சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் கணிசமான உறுப்பினர்கள் செல்வது மட்டுமே அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்று பலரும் ஓதியதால் 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி’ என்பதில் உறுதியானார். ஆனால், சீட் இழுபறிகள் இன்னும் தொடரவே செய்கின்றன. 41 அவரது கடைசி இலக்காக இருக்கும்! (கூட்டுத்தொகை 5 ஆக இருக்கணும்).
பலித்தது பா.ம.க-வுக்கு!
'நாங்கள் இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி’ என்பது ராமதாஸர் வாக்கு. ஆனால், இம்முறை அவரை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பாடாய்ப்படுத்தினார்கள். 25 இடங்களைத் தருவதாகச் சொன்னாராம் கருணாநிதி. 'விஜயகாந்த் வருவதால் உங்களுக்கு 17-தான் தர முடியும்’ என்றாராம் ஜெயலலிதா. இரண்டு தரப்புமே பெரிய மரியாதை எதையும் தந்துவிடவில்லை என்பதை ராமதாஸ் முதல்முறையாக உணர்ந்தார். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் பா.ம.க. தரப்பில் இருந்து தனித்தனி தூதர்களை ராமதாஸ் அனுப்பினாரே தவிர, அவர்கள் இவருக்காகத் தூண்டில் போட்டுக் காத்திருக்கவில்லை என்பதுதான் நிஜம். இரண்டு பக்கமும் பேசுவதாகக் காட்டி, எண்ணிக்கையைக் கூட்டிப் பார்க்கலாம் என்றுகூட ராமதாஸ் நினைத்தார். ஆனாலும், எண்ணிக்கைகள் அவ்வளவாகக் கூடவில்லை.
கடந்த புதன் கிழமை ஒரு தீர்மானமான முடிவுக்கு ராமதாஸ் வந்தார். 'அ.தி.மு.க. கூட்டணியில் நாம் இருந்தால், நம்முடைய பல தொகுதிகளை விஜயகாந்த்தும் கேட்பார். அவருக்கு விட்டுத்தர வேண்டி வரும். கருணாநிதியிடம் பேசி, வாக்குவாதம் செய்து, தொகுதிகளைப் பிரிப்பது மாதிரி ஜெயலலிதாவிடம் செய்ய முடியாது. எனவே, தி.மு.க. கூட்டணியே சரியானது’ என்று முடிவெடுத்தார். இந்தத் தகவலை அ.தி.மு.க. சார்பில் பேசியவர்களுக்கு பா.ம.க. தரப்பு சொல்லிவிட்ட பிறகு, மறுநாள் காலையில் கோபாலபுரம் போனதுதான் டாக்டர் நடத்திய நாகரிகமான அரசியல் .
25 என்று சொல்லிக்கொண்டு இருந்த கருணாநிதியிடம் 28 வாங்கிவிடலாம் என்றுதான் ராமதாஸ் போனார். 31 வந்து விழுந்ததில் ராமதாஸ் ஷாக்! லண்டனில் இருந்த ஸ்டாலின் தலையில் விழுந்தது இடி!
மனம் வெம்பிய ம.தி.மு.க!
கடந்த தேர்தலில் வைகோவுக்கு 35 இடங்கள் தரப்பட்டன. ஆனால், இன்று விஜயகாந்த் வர இருக்கிறார், இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் வந்திருக்கிறார்கள், கொங்கு பேசிக்கொண்டு இருக்கிறது, கார்த்திக் இணைந்திருக்கிறார், சரத்குமார் வருகிறார், இதுவரை தியேட்டர் டிக்கெட் பறித்து வந்த விஜய் ரசிகர்கள், இம்முறை தேர்தல் டிக்கெட் கேட்கலாம்... இந்த நிலைமையில், ம.தி.மு.க. போட்டியிடப் போகும் இடங்கள் 18 முதல் 21 ஆக இருக்கலாம் என்று அ.தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. ம.தி.மு.க-வும் அதை மனதளவில் ஆமோதிப்பதற்கு ஆயத்தமாகிவிட்டது!
கட்சியின் பொதுக் குழுவில் பேசிய வைகோ, உணர்ச்சியை ஒதுக்கிவைத்துவிட்டு, யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து பேசியிருக்கிறார். ''கடந்த முறைபோல நமக்கு இடங்கள் கிடைக்காது. எதிர்பார்க்கவும் முடியாது. இதனால் பலரும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஆனால், நம்முடைய ஒரே லட்சி யம், கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவது மட்டும்தான். அதற்காக எல்லாவற்றையும் சகித்துத்தான் தீர வேண்டும்!’ என்ற தொனியில் பேசி, தொண்டர்களை மனமாற்றம் செய்துஇருக்கிறார். 'உங்களைப்போலத் தொண்டன் எனக்கும் கிடைக்க மாட்டான். என்னைப்போலத் தலைவன் உங்களுக்கும் கிடைக்க மாட்டான்!’ என்றார் வைகோ. மேலும், 17 ஆண்டுகள் கட்சி நடத்தியதே பெரிய விஷயம் என்றும் சொன்னார். 'கடந்த தேர்தலில் 6 சதவிகித ஓட்டுகளை ம.தி.மு.க. வாங்கியது என்பதைவிட, 234 தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்யப்போகும் ஒரே தலைவர் வைகோதான். அந்த மரியாதையை ஜெயலலிதா நிச்சயம் தருவார்!’ என்கிறார்கள் வைகோ ஆட்கள். 39 தொகுதிகளுக்கான பட்டியலைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறது ம.தி.மு.க!
கலக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சிறுதாவூர் விவகாரத்தை வைத்து ஜெயலலிதாவுக்கு கசப்பைக் கூட்டி வந்தவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். அதனால்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் இருந்து பிரகாஷ் காரத்தை வரவைத்துப் பேசினார் ஜெ. அப்போதுகூட, மாநிலத் தலைமையான ஜி.ராமகிருஷ்ணனுக்குத் தடை. தனியாகவே காரத்துடன் பேசினார் ஜெ.
இருவரும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்துப் பேசவில்லை. 'அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் ஜெயலலிதா இருக்கிறார்’ என்று சொல்லிப் போனார் காரத். ஆனால், அப்படி ஒரு நம்பிக்கை மார்க்சிஸ்ட்டுகளுக்கு இல்லை. 25 தொகுதிகளுக்கான பட்டியலைக் கொடுத்திருக்கும் சி.பி.எம். இதில் 15 இடங்கள் வேண்டும் என்கிறது. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் கிடைத்த 13 இடங்களாவது கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், 11 கொடுப்பது அ.தி.மு.க-வின் திட்டமாம். தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை 10 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6-ல் வென்றது. அதைவிடக் கூடுதலாகத் தேவை என்பது இவர்களது கோரிக்கை.
இவர்கள் இருவருக்கும் முக்கியமான கலக்கம் என்ன தெரியுமா? 'சி.பி.ஐ-யைவிடக் கூடுதலாக ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும்’ என்பதுதான் சி.பி.எம்-மின். லட்சியம். அவர்களுக்குச் சமமாகத்தான் நமக்கும் தர வேண்டும் என்பது சி.பி.ஐ-யின் லட்சியம்!
திடுக்கிட்ட திருமா!
டாக்டர் ராமதாஸுக்கு 31 இடங்கள் என்று அறிவித்ததும் திடுக்கிட்டவர் திருமா. 'நான்கு ஆண்டுகளாக நாம் தி.மு.க-வுடன் இருக்கிறோம். ராமதாஸைச் சேர்ப்பதா வேண்டாமா என்று நம்மிடம் தி.மு.க. ஆலோசனை செய்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. மேலும் 31 இடங்கள் பா.ம.க-வுக்குத் தந்திருக்கிறார்கள். அதில் பாதி இடங்களை யாவது எங்களுக்குத் தர வேண்டும்!’ என்று குமுறுகிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள். சிறுத்தைகளின் கோரிக்கை 15 ஆக இருந்தால், தி.மு.க. அவர்களுக்கு ஒதுக்க நினைப்பது 9-தான். இரண்டு இலக்கம் வேண்டும் என்பதும் சிறுத்தைகளின் ஆசை.
'பா.ம.க-வுக்கு எதிராக அரசியல் செய்தால் மட்டும்தான் தலித் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற முடியும். பா.ம.க-வுடன் இணைந்து போய் வாக்குக் கேட்டால், கட்சியை வளர்க்க முடியாது!’ என்ற ரீதியில் கொள்கை வாக்குவாதங்களும் திருமாவளவ னைச் சுற்றிலும் நடக்கின்றன. 15 தராவிட் டால் மாற்று அணியைத் தேட வேண்டியது தான் என்றும் சொல்கிறார்கள். இதை அ.தி.மு.க. கவனித்து, தூண்டிலைச் சரிசெய்து வருகிறது.