Search This Blog

Tuesday, February 25, 2014

பொது அறிவு - ‘400’க்குள் 400..!

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில், அவருடைய நாட்டில் வாழ்ந்த 400 சிறந்த நடனக் கலைஞர்களின் பெயர்கள் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரிக்கும் நன்முயற்சியாக, 400 விஷ சிலந்திகளுடன்  மூன்று வாரங்கள் வசித்து உலக சாதனை படைத்தார் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த 67 வயதான நிக் லீ சொய்ப் என்ற பெண்மணி.  


1900-ம் ஆண்டில் இருந்து ஆண்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டு வந்த 400 மீட்டர் தடை  தாண்டும் ஓட்டப் போட்டி, 1984-ம் ஆண்டில் இருந்து, பெண்களுக்காகவும் நடத்தப் படுகிறது.

ஜாக்கிசான் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'போலீஸ் ஸ்டோரி’ படத்தின் 6-வது பாகம் சீனாவில் மட்டும் ரூ.400 கோடி வசூலை அள்ளியது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்கா. ஆனால், அந்த பிரமாண்ட நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்த /வாழ்ந்து வரும் பல்வேறு இன குழுக்களே.... அதன் பூர்வகுடிகள்.

'புன்னகை அரசி' என அழைக்கப்படும், பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா... தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, புறநானூறு எனும் தொகைநூல் 400 பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த சங்கத் தமிழ் பாடல்கள் கொண்ட நூலாகும்.

விமானத்தின் வேகம், பொறிகளின் செயல்பாடு, விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணிகளை பதிவு செய்யும் விமான கறுப்புப் பெட்டி, விமான விபத்து தொடர்பான காரணங்களை அறிவதற்கும், ஆராய்வதற்கு பெரிதும் உதவக் கூடிய கருவி.  

கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் இருக்கும் வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தின் ஷேக்கல்முடி எஸ்டேட்டில் 400 ஆண்டு பழமையான தேக்கு மரம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது!

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீஷியஸ் தீவில் வாழ்ந்த, ஒரு மீட்டர் உயரமுடைய, 'டோடோ’ எனும் பறவை இனம், கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக அழிந்துபோனது!

சென்னையின் புகழ்பெற்ற அண்ணா சாலை (மவுன்ட் ரோடு), உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆகின்றன.

பூமியின் அளவும், எடையும் கொண்ட (கற்பாறைகள் மற்றும் இரும்பால் ஆன) கோள் ஒன்று, சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டு, கெப்லர் 78 பி (KEPLER 78B) எனப் பெயரிடப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி, சர்வதேச அளவில் 400 சிக்ஸர்களை அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர்.

1605-ல் பெல்ஜியத்தில் தொடங்கிய 'நியூ டெய்டிங்கென்' (Nieuwe Tijdingen) என்ற செய்தித்தாள் 400 ஆண்டுகளை கடந்து நிற்கிறது.

மேற்கு இந்தியத் தீவைச் சேர்ந்த பிரையன் லாரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 ரன்களை அடித்து உலக சாதனை செய்த, முதல் கிரிக்கெட் வீரர்.

கிறிஸ்தவர்களின் புனித இடமான நாசரேத் மலைக்குன்றில் வளர்ந்த, 4 மீட்டர் உயரமுடைய, 400 ஆண்டுகள் பழமையான ஒலிவ மரத்தை வத்திக்கான் தோட்டத்துக்காக இஸ்ரேல் அரசு வழங்கியிருக்கிறது!

கிரிக்கெட்டின் கடவுள்' என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 400 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஏசு கிறிஸ்துவின் வாழ்கை வரலாற்றை கவிதை வடிவில் கூறும், 'ஏசு காவியம்’ என்ற நூல், 400 பக்கங்களைக் கொண்டதாகும்.



 செல்போன் பாதிப்பு பற்றி ஆராய்ந்த இந்திய சுகாதாரத்துறை, பயோ டெக்னாலஜி துறை மற்றும் தொலை தொடர்புத்துறை நிபுணர்கள் கொண்ட குழு, 'செல்போனில் அதிக நேரம் பேசும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு மூளை கேன்சர் ஏற்படும் அபாயம் 400 சதவிகிதம் இருக்கும்' என்று கூறியிருக்கிறது!

சீனாவைச் சேர்ந்த 52 வயதான ஷங் புக்ஸிங் என்ற செருப்பு தயாரிப்பாளர் 400 கிலோ எடையுள்ள இரும்பினாலான செருப்பை அணிந்து நடந்து ஆச்சர்யப்படுத்துகிறார்.

சிலந்தி மனிதன்’ என்று அழைக்கப்படும் ஆலன் ராபர்ட் 400 அடி உயரம் உள்ள கட்டடத் தின் சுவர்களில் எந்தவித பாது காப்புமின்றி ஏறி புதிய சாதனை படைத்தார்.

400 மி.மீ உயரம் கொண்ட 'கிவி’, நியூசிலாந்தில் வாழும் அப்டெரிக்ஸ் என்னும் இனத்தைச் சேர்ந்த சிறிய, பறக்காத விநோதப் பறவை.

வானியல் மேதை கலீலியோ, 400 ஆண்டுகளுக்கு முன்பு, தொலைநோக்கியை முதன்முதலாக பயன்படுத்தி, கோள்களை ஆராய்ந்ததன் நினைவாக, 2009-ம் ஆண்டினை, அனைத்துலக வானியல் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக்கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரிய கபில்தேவ், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் உரியவர்.

400 கி.மீ நீளம் கொண்ட தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் பிறந்து, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

 தஞ்சை அரண்மனை வளாகத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ள சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 400 ஆண்டு பழமையான, மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கட்டுரை : எம்.மரிய பெல்சின், சா.வடிவரசு

Monday, February 24, 2014

ஃபேஸ்புக் - 'வாட்ஸ்அப்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வாரத்தில் 'வாட்ஸ்அப்’ நிறுவனத்தை 19 பில்லியன் டாலர் தந்து வாங்கியிருக்கிறது. இந்த 'வாட்ஸ்அப்’ நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் கோம் என்கிற இருவர்.  பிரையன் ஆக்டன், யாகூ நிறுவனத்தில் ஏறக்குறைய 11  ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, புதிய வாய்ப்பைத் தேடி அதிலிருந்து வெளியேறி, டிவிட்டர் நிறுவனத்திடம் வேலை கேட்டார். 'ஸாரி, வேலை இல்லை’ என்ற பதில் வரவே, அடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்தை அணுகினார். அங்கும் 'வேலை இல்லை’ என்கிற பதிலே வர, தன் நண்பரான ஜான் கோமுடன் இணைந்தார்.


உக்ரைனில் பிறந்த ஜான் கோம், பல்வேறு அரசியல் மற்றும் யூத எதிர்ப்புக் காரணமாக 16 வயதில் அமெரிக்காவில் தன் தாயுடன் குடியேறினார். கோமின் தாயார் அமெரிக்காவில் குழந்தைகள் பராமரிப்புச் செய்தும், மளிகைக் கடைகளைச் சுத்தம் செய்தும் கோமை வளர்த்தார். கோம் தனது உடற்பயிற்சி வகுப்புகளில் செல்போன் பேசுவது தடை செய்யப்பட்டதால் முக்கிய அழைப்புகளைத் தவறவிடுவதாக உணர்ந்தார். 2009-ல் ஆக்டனுடன் இணைந்து, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்க, 'வாட்ஸ்அப்’ உருவானது.
 
'வாட்ஸ்அப்’ என்பது ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என அனைத்தையும் ஒரு போனிலிருந்து இன்னொரு போனுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன். எந்தவித விளம்பரமும் செய்யாமல், இந்த ஆப்ஸை புழக்கத்தில்விட,  இன்றைக்கு 45 கோடி பேர் இதை பயன்படுத்துகின்றனர். ஒருநாளைக்கு 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் 'வாட்ஸ்அப்’புக்கு வருகின்றனர்.இந்த 'வாட்ஸ்அப்’பைத்தான் இப்போது ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது தொழில்நுட்ப உலகின் மிகப் பெரிய வியாபாரமாகக் கருதப்படுகிறது.தோல்விகளையும், நிராகரிப்பு களையும் கண்டு துவளாமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிற பாடத்தைத்தான்  இந்த இருவரும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

Sunday, February 23, 2014

அருள்வாக்கு - குழந்தை சந்தோஷம்


ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும் பெரிய மநுஷ்யாள் வீட்டுக் குழந்தையாயிருந்து விட்டால் அதனிடம் எல்லோரும் அன்பு காட்டிக் கொஞ்சுவார்கள். அதற்குப் பயப்படக்கூடச் செய்வார்கள். பழைய நாளில் ‘ராஜாப்பயல்’ என்று அன்போடும் பயத்தோடும் சொன்னார்கள். அப்புறம் ‘கலெக்டர் அகத்துப் பிள்ளையாக்கும்’ என்று சொல்லி வந்தார்கள். இப்போது ‘மந்திரி, எம்.எல்.ஏ. வீட்டுப் பிள்ளை’ என்று சொல்கிறார்களோ என்னவோ? 

பெரிய மநுஷ்யாள் குழந்தை என்றால் அது ஏதாவது சண்டித்தனம் பண்ணினால்கூட, மற்ற குழந்தைகளை அதட்டுகிற மாதிரி அதட்டாமல் அது கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால், இந்தக் குழந்தை போய், ரொம்பவும் செல்வாக்குள்ள அதன் தகப்பனாரிடம் ஒருத்தரைப் பற்றி ஏதாவது புகார் பண்ணிவிட்டால், அவ்வளவுதான், அந்த ஆசாமிக்கு இந்தத் தகப்பனார் காரரிடமிருந்து பெரிய உபத்ரவங்கள் வந்து சேரும். எவரும் தங்களையே திட்டினால் கூடப் பொறுத்துக் கொள்ளக்கூடும், போனால் போகிறதென்று விட்டு விடலாம். ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிறார்களே, அப்படி ரொம்பவும் அருமையாக இருக்கப்பட்ட தங்கள் குழந்தையை யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்களானால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யர் கோபித்துக் கொண்டு கிளம்பினால் ரொம்ப ஆபத்து அல்லவா? அதனால்தான் ‘இது பெரிய இடத்துப் பிள்ளை அப்பா. இதனிடம் வம்புக்குப் போகப்படாது’ என்று சொல்வது.

இதற்கு நேர் எதிராக, ஒரு குழந்தையை மெச்சிவிட்டால் அதன் தகப்பனாருக்கு அவரையே மெச்சுவதைவிட ஸந்தோஷமாவிடும், உச்சிக் குளிர்ந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யரை ப்ரீதி செய்துவிட்டால் ஸுலபமாக அவரிடமிருந்து பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாம். பெரியவர்களை நேராக த்ருப்தி செய்வது கஷ்டம். குழந்தைகளையோ ரொம்பவும் எளிதில் த்ருப்திப்படுத்தி விடலாம். ஒரு சின்னச் சோப்பையோ சாக்லெட்டையோ காட்டிவிட்டால் போதும். இல்லாவிட்டால் ஏதோ கொஞ்சம் கோணங்கி விளையாட்டுக் காட்டினால் அதிலேயே ஒரு குழந்தைக்கு குஷி பிறந்துவிடும். அந்தக் குழந்தையின் ஸந்தோஷத்தில் அதன் அப்பாவுக்கும் ஏக ஸந்தோஷம் உண்டாகிவிடும்.  தன் குழந்தையை ஸந்தோஷப்படுத்தினவருக்குத் தன்னாலான எல்லா நன்மையும் பண்ணிவிடுவார். அதாவது, ஸுலபத்தில் திருப்திப்படுத்த முடியாத ஒரு பெரியவரால் நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமானால் அதற்கு வழி ஈஸியாக த்ருப்தியாகிவிடும் அவருடைய குழந்தையை ஸந்தோஷப்படுத்துவதுதான். 

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - திருப்தியற்ற ஆறுதல் தீர்ப்பு! ஞாநி


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், ராஜீவ் கொலை வழக்கின் தூக்குத் தண்டனைக் கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உயிர் தப்பி வாழும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மரண தண்டனையிலிருந்து இப்போது இந்த மூவரும், சில மாதங்களுக்கு முன்னர் வீரப்பன் கூட்டாளிகளும் மீண்டதற்கான காரணங்கள் இன்னமும் திருப்திகரமானவை அல்ல. மரண தண்டனை என்பதே ஒழிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் இவர்களின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்படவில்லை. இவர்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் அரசு காட்டிய தாமதத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இது புதியதல்ல. 1983ல் தமிழ்நாட்டில் நடந்த விஷ ஊசிக் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வைத்தி. பணத்துக்காகப் பலரை ஏமாற்றி வரவழைத்து விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டு பணத்தைச் சுருட்டிய குற்றம் பற்றிய வழக்கு இது. இதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வைத்திக்கு அதை நிறைவேற்ற இரண்டு வருடங்கள் தாமதமாவதைக் காட்டி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்னப்ப ரெட்டியும் ஆர்.பி.மிஸ்ராவும் அந்தத் தண்டனையை ஆயுளாகக் குறைத்தனர். அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு அளிக்கும் வாழ்க்கைக்கும் சுதந்திரத்துக்கும் ஆன உரிமையை அந்தத் தாமதம் பாதிப்பதால் இப்படி தீர்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர்.இதன்படி தண்டனை விதித்து இருவருடமே ஆனது தாமதம் என்ற கருத்துப்படி பார்த்தால் பத்தாண்டுகளுக்கும் முன்னதாகவே ராஜீவ் மரண தண்டனைக் கைதிகள் உட்பட பல கைதிகளின் மரண தண்டனை குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருபதாண்டுகள் கழித்துத்தான் தாமதம் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னொரு காரணம், நம் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு எடுக்கும் நேரமும் முன்பைவிட அதிகமாவதுதான். கொல்கத்தாவில் தூக்கில் இடப்பட்ட தனஞ்செய் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் தூக்கில் போடப்பட்டார். அவரது அப்பீல் மனு 1994ல் தாக்கல் செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுக்கவே நீதிமன்றத்துக்கு எட்டாண்டுகள் ஆகியிருக்கிறது.இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கொஞ்சம் பேரை மரணத்திலிருந்து காப்பாற்றியிருந்தாலும், இனி வரப்போகும் வழக்குகளில் சில ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் முடிந்து குடியரசுத் தலைவர் கருணை மனுவை குறிப்பிட்ட காலவரம்புக்குள் பரிசீலித்து முடிவு தெரிவித்துவிட வேண்டுமென்ற கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்படுகிறது. அப்படி நிர்ணயிக்காவிட்டால், எல்லாமே காலதாமதமான தூக்குத் தண்டனை என்ற பிரிவின் கீழ் வந்துவிடும். காலவரம்பை நிர்ணயித்தால் வரப்போகும் ஆபத்து என்ன? பல சமயங்களில் அப்பாவிகள், தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், தவறு தெரியவரும் வாய்ப்பே இல்லாமல் அவர்கள் கொல்லப்படுவார்கள். இப்போது ராஜீவ் கொலை வழக்கிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மனித வெடி குண்டில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி செல்களை அதற்கென்று தெரிந்தே வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டில் பல ஓட்டைகள் இருந்தன. எந்தப் பெட்டிக்கடையிலும் பேட்டரி செல்வாங்கினால், ரசீது கொடுப்பதில்லை என்பது நடைமுறை உண்மை. இங்கே ரசீது சாட்சியமாகக் காட்டப்பட்டது. அப்படியே அந்தக் கடையில் பேரறிவாளன் வாங்கியிருந்தாலும் அந்த செல்கள்தான் வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டன என்பதை எப்படி நிரூபிக்கமுடியும் என்றும் புரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மையில் பேரறிவாளனை வழக்கில் விசாரித்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்த காவல் அதிகாரி, பேரறிவாளன் சொல்லாததைச் சொன்னதாகத் தான் எழுதியதாகப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். அது என்ன? ‘இந்த செல்களை ராஜீவ் கொலைக்குப் பயன்படுத்தப் போவதாகத் தனக்குத் தெரியும் என்று பேரறிவாளன் சொல்லவில்லை. ஆனால் தெரிந்தே வாங்கிக் கொடுத்ததாக ஒப்புக்கொள்வதாக’ அதிகாரி எழுதியிருக்கிறார்.

இந்தத் தவறான ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவுப்படி காலதாமதம் தவறு என்று கருதி காலவரம்பு நிர்ணயித்து முன்கூட்டியே தூக்கில் போட்டிருந்தால், அது எவ்வளவு பெரிய கொடுமையாக, அநீதியாக இருக்கும்! 

எனவே மரண தண்டனை என்பதே முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதாகும்.
இதை ஏற்காதவர்கள் வைக்கும் வாதம் என்ன? ‘கொடூரமான கொலைகள் செய்தவர்கள், குற்றங்கள் செய்தவர்கள் ஏன் அதற்காகக் கொல்லப்படக்கூடாது’ என்பதாகும். அப்படிப்பட்ட கொடூரர்களுக்கு மரணதண்டனை விதித்தால்தான் இனி அப்படிப்பட்ட குற்றங்கள் பெருகாமலும் நடக்காமலும் தடுக்கமுடியும் என்பதே இந்தத் தரப்பின் வாதம்; நம்பிக்கை.

இதைப் பற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணயர் பல வருடங்களுக்கு முன்னரே அழகாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர் கொலைக் குற்றவாளிகளை மூன்று விதமாக வகைப்படுத்துகிறார். ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு கொல்லுகிறவர்கள். இவர்கள் நிச்சயம் தூக்குக் கயிற்றைப் பற்றி முன்கூட்டியே யோசிக்கக்கூடப் போவதில்லை. எனவே அந்தப் பயன் அவர்களைத் தடுக்காது. இரண்டாவது வகையினர் இறுகிய மனம் உடைய கிரிமினல்கள். இவர்களும் (சாவுக்கு) மரண தண்டனைக்குப் பயப்படப் போவதில்லை. மூன்றாவது வகையினர் கொள்கை அடிப்படையிலோ, தங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கை அடிப்படையிலோ, அரசியல் அடிப்படையிலோ கொலையில் ஈடுபட்டவர்கள். இவர்களும் மரணத்துக்கு அஞ்சுவதில்லை. எனவே மரண தண்டனை அச்சத்தை ஏற்படுத்தி கொலைக் குற்றங்களைக் குறைக்கும் என்று நம்புவது அர்த்தமற்றது.  இதை இங்கிலாந்தில் ராயல் கமிஷன் 1866லேயே சுட்டிக்காட்டியது. அங்கு ஒரு நகரத்தில் மரண தண்டனைக் கைதிகளாக இருந்த 167 பேரில் 164 பேர் தங்கள் கண் முன்பாகவே வேறு ஒருவர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்படுவதைப் பார்த்தவர்கள். ஆனால் அது ஒன்றும் அவர்கள் குற்றம் செய்வதைத் தடுத்துவிடவில்லை. எனவே தூக்குத் தண்டனையை ஒழித்துவிடலாம் என்று ராயல் கமிஷன் தெரிவித்தது.இன்று ஐரோப்பா முழுவதும் மரண தண்டனை இல்லை. மிக அதிகமான மரண தண்டனை விதிக்கும் நாடுகள் சீனா, சவுதி அரேபியா, காங்கோ, ஈரான், அமெரிக்கா ஆகியவைதான். ஆனால் இங்கே எங்கும் எந்தக் குற்றமும் குறைந்துவிடவில்லை. மரண தண்டனை என்பது ஒரு சமூகம் சட்டத்துக்குள் ஒளிந்துகொண்டு கொலை செய்வது தவிர வேறல்ல.ஆயுள் தண்டனைக் கைதிகளையும் முழு ஆயுளுக்கும் சிறையில் வைத்திருக்கவேண்டும் என்பது தவறான பார்வை. தண்டனைக் காலமாகப் பத்தோ பதினான்கு ஆண்டுகளோ சிறையில் இருந்து பின்னர் வெளியே வந்துவிட்டால், மீண்டும் கொலை செய்வார்கள் என்று அஞ்சத்தக்க அளவு எந்த நிகழ்ச்சியும் இல்லை. வெளியே வரும்போது திருந்தி வந்து வாழ்ந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம். அவர்களைத் திருந்தவிடாமல் தடுக்கும் சமூகம்தான் பல சமயங்களில் பிரச்னை. ராஜீவ் கொலை வழக்கு மட்டுமல்ல, இன்னும் கோவை குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட பல கைதிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அரசாங்கங்கள் மறுத்துவருகின்றன. மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்ததாகத் தண்டிக்கப்பட்டோரை அவர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என்பதால், அண்ணா நூற்றாண்டில் விடுதலை செய்த தி.மு.க. அரசு, நளினியையும் கோவை இஸ்லாமிய கைதிகளையும் விடுவிக்கத் தொடர்ந்து மறுத்தது. ஜெயலலிதாவோ மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதையே ஏற்கும் மனநிலை இல்லாதவர். இந்திய அரசாங்கமும் அது காங்கிரசானாலும், பா.ஜ.க.வானாலும் மரண தண்டனை பற்றிய மாற்றுக் கருத்துக்கே தயார் இல்லை. கடந்த 2007லும் மறுபடி 2012லும் இந்தியா ஐ.நா. பொது மன்றத்தில் மரண தண்டனை ஒழிப்புக்கான தீர்மானத்தை எதிர்த்தே வாக்களித்தது. அண்மையில் இந்தியாவில் கொடூரமான பாலியல் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்க அவசரச் சட்டமே பிறப்பித்து பிறகு அதைச் சட்டத்திலும் சேர்த்திருக்கிறது.இப்படிப்பட்ட சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதுவும் டெக்னிகலான அடிப்படையில் மட்டுமான தீர்ப்புக் கொடுத்திருப்பது தற்காலிக ஆறுதல்தான். மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்படுவதற்குத் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் பிரசாரமும் தேவைப்படுகிறது. சிறை தண்டனை என்பது ஆயுள் முழுவதுமானதாக இருக்கத் தேவையில்லை; நன்னடத்தை அடிப்படையில் வெளியே வந்து வாழ்க்கையை இன்னொரு முறை வாழ்ந்து பார்க்க அனுமதிக்கும் சிறை தண்டனையே சரி என்ற பார்வையையும் நம் சமூகத்தில் வளர்க்க வேண்டியிருக்கிறது. 

இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தற்காலிக ஆறுதல் நிரந்தர மகிழ்ச்சியாக மாற இவையெல்லாம் தேவை. 

Friday, February 21, 2014

கயிலாயம் - ஆசார்ய சங்கரர்


(ஆசார்ய சங்கரர், கயிலாயம் சென்று சிவபிரானைத் தரிசித்தார். அப்போது, அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களை சிவபிரான் அளித்தார் என்கிறது சங்கர விஜயம். அதன் சிறப்பைப் பற்றி மகாபெரியவர் தந்த விளக்கம் இது.)

ஆசார்யாளுக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்களைக் கொடுத்தார் ஸ்வாமி. இந்த விஷயம் இதிஹாஸ-புராணங்களை (முறையே) சேர்ந்த ‘சிவ ரஹஸ்யம்’, ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’ ஆகிய இரண்டிலும் இருக்கிறது. சிவ ரஹஸ்யத்தில் இது காசியில் நடந்ததாகச் சொல்லியிருந்தாலும், அவை கைலாஸ லிங்கங்கள் என்றே இருக்கிறது. அவற்றைப் பிற்பாடு ஆசார்யாள் எங்கெங்கே ப்ரதிஷ்டை பண்ணினாரென்ற விவரம் ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யில் கொடுத்திருக்கிறது. யோகலிங்கம் இந்த (காஞ்சி) மடத்தில்; போகலிங்கம் ச்ருங்கேரி மடத்தில்; வரலிங்கம் நேபாளத்தில் நீலகண்ட கே்ஷத்ரத்தில்; முக்தி லிங்கம் கேதாரிநாத்தில்; மோக்ஷ லிங்கம் சிதம்பரத்தில். அது ஸ்படிக லிங்கமாக இருந்ததில் ரொம்ப அர்த்தமுண்டு.

ஸ்ரீருத்ர ப்ரச்னம்தான் வைதிகமான சிவ ஸூக்தங்களில் முக்யமாக இருப்பது. அதில் த்யான ச்லோகத்தில் என்ன சொல்லியிருக்கிறதென்றால்:
ஆபா தாள-நப: ஸ்தலாந்த-புவன-ப்ரஹ்மாண்ட- மாவிஸ்புரஜ்-
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க-மௌளி விலஸத்- பூர்ணேந்து வாந்தாம்ருதை:I
அஸ்தோகாப்லுத-மேக-மீச-மநிசம் ருத்ராநுவாகாஞ்-ஜபந்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ)த்ருத-பதம் விப்ரோ (அ)பிஷிஞ்சேச்-
சிவம் II

பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முடியாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதன்பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது.

பரப்பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்கு திருஷ்டாந்தமாக இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.  மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. பூர்ணேந்து என்று சுலோகத்தில் வருவது. ‘பூரண இந்து’: இந்து என்றாலும், சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈஸ்வரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயங்களும் கொண்ட ‘ஸகள’ ரூபத்தில் வருகிற போது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டு சந்திரமௌளியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா, நிஷ்கள தத்வமாயிருக்கிறபோது அங்கே சந்திரன், கங்கை எதுவுமில்லை. அரூபமாயும் இல்லாமல் ஸ்வரூபமாயும், அவயங்களோடு இல்லாமல் லிங்கமாக, சகள - நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூரண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிர்தமே கங்கை மாதிரி கொட்டுகிறது.யோகிகள் தமது சிரசுக்குள் சகஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிர்தம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த ஸ்வரூபமான ஜ்யோதிர்லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஒயாமல் அபிஷேகம் செய்வது, ருத்திர அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுறுத்துவது.உருவத்தைப் பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு, உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்விய ரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை. அதாவது, ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரி தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.அடிமுடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வ ரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும். அப்படி ஜ்யோதிஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்றபொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும் ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா, ஹம்ஸ ஸ்வரூபமானவர். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப் போனார். இரண்டு பேருக்கும், தேடிப் போனவை அகப்படவில்லை.

இப்படிச் சொல்வதின் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மா சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாதவரையே, என் சாமர்த்தியத்தால் அறிய முடியும் என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டு விடுவார். அன்பினாலே மிகமிக திருப்தி பெற்று அநுக் கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. ஆசுகவி என்றால், கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் இல்லை.

Thursday, February 20, 2014

டாப் 5 இந்தியர்கள்!

எந்த நாட்டுக்காரன் என்று பார்க்காதே... திறமைசாலியைத் தலைவனாக்கு!’  இதுதான் இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் சக்சஸ் மந்திரம்! அந்த ஃபார்முலாபடி உலகின் முதன்மையான சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு  இந்தியரான சத்யா நாதெள்ளா, சி.இ.ஓ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சமீபமாக, உலகின் டாப் நிறுவனங்கள் பலவற்றின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர்களே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பெப்ஸி நிறுவனத்தை இந்தியாவின் இந்திரா நூயி திறம்பட நடத்துவது முதல், இணையத்தின் திசையைத் தீர்மானிக்கும் முடிவுகளை எடுப்பது வரை, பல கட்டங்களில் இந்தியர்களின் ஆற்றலே உலக இயக்கத்தைத் தீர்மானிக்கிறது. அப்படி உயர்நிலை அதிகாரத்தில் இருக்கும் டாப்5 இந்தியர்கள் பற்றிய மினி பயோடேட்டா இங்கே...

சத்யா நாதெள்ளா   சி.இ.ஓ., மைக்ரோசாஃப்ட்

'''சத்யாவைத் தவிர வேறு ஒருவர் மைக்ரோசாஃப்டை திறம்பட நடத்த முடியாது!’ என அந்த நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸே பாராட்டுப் பத்திரம் வாசிக்கும், சத்யா நாதெள் ளாவுக்கு 46 வயது. ஹைதராபாத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மகனாகப் பிறந்தவர், அமெரிக் காவில் எம்.எஸ். படித்து முடித்துவிட்டு 1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 22 வருடங்கள் அங்கேயே பணி. பில் கேட்ஸ் தலைமையில் வெளியான 'விண்டோஸ் விஸ்டா’ பெரும் தோல்வி. ஸ்டீவ் பாமர் தலைமையில் அணி வெளியிட்ட சர்ஃபேஸ் டேப்லெட் சாதனம் மிகப்பெரும் தோல்வி. மேகக்கணினிய பாதையில் நிறுவனத்தை நடத்த முடிகிறவருக்கே அடுத்த தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பல வருடங்களாக மைக்ரோசாஃப்டின் கணினியப் பிரிவுக்குத் தலைமையேற்று சிறப்பாக நடத்திக்கொண்டிருந்ததால் சத்யாவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகரான சத்யா, ''டீம் ஸ்பிரிட்டையும் லீடர்ஷிப்பையும் கிரிக்கெட்டில் இருந்துதான் கற்றுக்கொண்டேன்'' என்கிறார்!

 சுந்தர் பிச்சை
துணைத் தலைவர், கூகுள். தலைவர்  ஆண்ட்ராய்ட், க்ரோம், கூகுள் ஆப்ஸ் பிரிவு

சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சைதான் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். 'இன்னொரு பிரவுஸர் தேவையா?’ என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி வியக்கவைத்தவர். இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை. மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக முயற்சிக்கும்  ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்துவருகிறது கூகுள்!  

சாந்தனு நாராயணன்

தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி, அடோப் சிஸ்டம்ஸ்.
சுமார் மூஞ்சி குமார்களுக்கு அல்ட்ரா டச் கொடுக்கும் போட்டோஷாப்பை உருவாக்கியது அடோப் சிஸ்டம்ஸ். அந்த நிறுவனத்தின் தலைவர் சாந்தனு நாராயணன், ஆந்திராவைச் சேர்ந்த உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதலில் ஆப்பிள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய சாந்தனு, டிஜிட்டல் போட்டோ ஷேரிங் இணையதளமான 'பிக்ட்ரா’வை உருவாக்கியவர். 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சாந்தனு, அடோப் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்க கடுமையாகப் போராடிவரும் நிலையில், அடோப்பில் புதுப் புது தொழில்நுட்பங்களுடன்கூடிய சாஃப்ட்வேர்களை உருவாக்கி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்!  

சஞ்சய் மெஹ்ரோத்ரா
நிறுவனர், தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, சான்டிஸ்க்.

மெமரி கார்டு மற்றும் ஃப்ளாஷ் டிரைவ் தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனமான சான்டிஸ்கை உருவாக்கியவர்களில் ஒருவர் சஞ்சய் மெஹ்ரோத்ரா. டிஜிட்டல் உலகில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சஞ்சய் செம ஸ்மார்ட். கடந்த வருடத்துக்கான 'அமெரிக்காவின் சிறந்த சி.இ.ஒ.’ விருது வென்றிருப்பவர். ''சாஃப்ட்வேர் துறையில் அப்டேட் இல்லையென்றால் அவுட்டேட் ஆகிவிடுவோம். அதே சமயம் அது சும்மா பப்ளிசிட்டி அப்டேட்டாக இல்லாமல், வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள அப்டேட் ஆக இருக்கவேண்டும்!'' என்கிறார்.

தாமஸ் குரியன்
நிர்வாகத் துணைத் தலைவர், ஆரக்கிள்.

மைக்ரோசாஃப்டுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஆரக்கிளைச் செலுத்துவதில், தாமஸ் குரியனுக்கு பெரும் பங்குண்டு. அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பட்டியலில் தொடர்ந்து 20 இடங் களுக்குள் இருந்து வருகிறார் தாமஸ் குரியன். இவர் விரைவில் ஆரக்கிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கின்றன ஹேஷ்யங்கள். ''வளர்ச்சி என்பது சீரான வளர்ச்சியாக இருக்கவேண்டும். இது நிறுவனம், ஊழியர்கள்... இரு தரப்புக்குமே பொருந்தும். இன்றைய ஐ.டி. இளைஞர்கள் சாஃப்ட்வேர் துறையின் உச்சகட்ட வளர்ச்சியை உடனடியாக எட்டத் துடிக்கிறார்கள். அதற்கு வேலையின் மீது பேரார்வமும், காரியம் சாதிக்கும் வியூகங்களும் வேண்டும்!'' என்பது இவரது பிரபல வாசகம்.

சார்லஸ்

Tuesday, February 18, 2014

ஸ்ரீசக்ர குழி!

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். இங்கே... அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீகோமதி அம்பாளும் ஸ்ரீசங்கர நாராயணரும் கோயில் கொண்டுள்ளனர் என்பது தெரியும்தானே?!

 


இந்த ஆலயத்தின் மகிமைக்கு மகிமை சேர்ப்பது,  ஸ்ரீகோமதி அம்மன் சந்நிதியில் (கருவறையில் இருந்து 10 அடி தொலைவில்) அமைந்திருக்கும் ஸ்ரீசக்ர குழி! இதில் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்ரம்... அம்பாளின் ஆணைப்படி, திருவாவடுதுறை ஆதீனம் 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து, ஸ்ரீகோமதி அம்பாளை தியானித்துப் பிரார்த்திக்க, எண்ணிய காரியம் யாவும் நிறைவேறும்! 

பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து வேண்டிக் கொண்டால், வீட்டில் தொட்டில் சத்தம் விரைவில் கேட்கும்; குழந்தைகள் பிரார்த்திக்க... கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவர். பிணிகள் மற்றும் பில்லி சூனியம் முதலானவை அகலும் என்று சிலிர்ப்பும் வியப்பும் மேலிடத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!

Monday, February 17, 2014

இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்!

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிவேகமாகப் பிரபலமாகி வருகிறது 'வாட்ஸ்ஆப்’ (WhatsApp) என்கிற 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ என்கிற ஆப்ஸ்... உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். கொஞ்சம்கூட மிரட்டாத, எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த ஆப்ஸ் மூலம் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என அனைத்தையும் அசால்ட்டாக அனுப்பலாம். இந்த 'வாட்ஸ்ஆப்’ மாதிரியான வேறு சில 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ ஆப்ஸ்களை இப்போது பார்ப்போம்.
 
 வைபர் (Viber) 

என்னதான் வாட்ஸ்ஆப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதில் வாய்ஸ்கால்கள் இல்லை. வைபரின் முக்கிய அம்சமே வாய்ஸ்கால்கள்தான். மிகக் குறைவான செலவில் இன்டர்நெட்டை பயன்படுத்தி பேசிக்கொள்வதற்கு இந்த 'வைபர்’ உதவி செய்கிறது. தவிர, மெசேஜ், ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் போன்றவற்றையும் தாராளமாக அனுப்பலாம்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.

பிபிஎம் (BlackBerry Messenger)

பிபிஎம் ஆப்ஸ்-ன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்புதான். பிபிஎம் ஆப்ஸை மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு 'பிபிஎம் பின்’ வழங்கப்படும். இதுபோல மற்றவர்களின் 'பிபிஎம் பின்’ இருந்தால் தான் அவர்களுக்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். இது பாதுகாப்பான அம்சமாக இருந்தாலும், இதன் வடிவமைப்பு பயன்படுத்துபவர்களை கவரும்படி இல்லை.

ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 1-5 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.


 
லைன் சாட் (Line Chat)

'லைன் சாட்’தான் தற்போதைய மார்க்கெட்டின் ஹாட் செல்லிங் ஆப்ஸ். பார்க்கக் கவர்ச்சியாகவும், பயன்படுத்த எளிதாகவும் அமைந்திருக்கும் இந்த ஆப்ஸின் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ, வாய்ஸ் மெசேஜ் என அனைத்தையும் அனுப்பலாம். மேலும், வீடியோ சாட்கள் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸிங் இந்த ஆப்ஸில் மிகச் சுலபம்.

ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.

குரூப் மீ (Group Me) 
 
குரூப் சாட்களுக்கான பிரத்யேகமான ஆப்ஸ் 'குரூப் மீ’. தோற்றத்திலும், பயன்பாட்டிலும் எளிமையாகவும் விரைவாகவும் இயங்கக்கூடிய 'குரூப் மீ’ ஆப்ஸ் மூலம் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நண்பர்கள், வியாபார ரீதியாக வீடியோ கான்ஃபரன்ஸ் என அனைவரும் ஒன்றாக குரூப் சாட் செய்ய முடியும். இதன் மூலமும் மெசேஜ், லொக்கேஷன் (பயனாளர் இருப்பிடம் குறித்த விவரங்கள், ரூட் மேப் போன்றவை), ஆடியோ, வீடியோ மற்றும் கான்டக்ட்களை அனுப்பலாம்.

ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 லட்சம் பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.

மேலே சொன்ன ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதுவும், இதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதுவும் கூடுதல் சிறப்பு.

 

Saturday, February 15, 2014

ஜெ.வை பயமுறுத்தும் சொத்துக் குவிப்பு வழக்கு!

 
1992-1995 காலகட்டத்தில் ஜெயலலிதா வருமான வரி படிவம் தாக்கல் செய்யாத வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், சென்னையில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கை நான்கே மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அவரது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் பெங்களூர் - நீதிமன்றம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. அது விரைந்து விசாரிக்கப்படும் நிலையைப் பார்க்கும்போது அந்த வழக்கின் தீர்ப்பும் மூன்று, நான்கு மாதத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் முழு கவனம் செலுத்தி, நாற்பதையும் அள்ளும் முயற்சியில் இருக்கும் ஜெயலலிதா தேர்தல் நெருங்கும் சமயம், இந்த வழக்குகள் தமக்குத் தலைவலியாக மாறிவிடுமோ என்ற திக்... திக்கில் இருக்கிறாராம். எப்படியாவது இந்த இரண்டு வழக்குகளும் ஆறப்போடப்பட்டு, மே மாதத்துக்குப் பிறகு விசாரணைக்கு வரும் வகையில், தாமதப்படுத்த தீவிரமாக யோசிக்கப்படுகிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, இந்த வழக்குகள் குறித்து ஜெ.வுக்குப் பாதகமான அம்சங்கள் நீதிமன்றத்தில் வெளிவரும்போது அது குறித்து செய்தி வெளியிடுவதைத் தவிர்க்குமாறு செய்தித்துறை அதிகாரிகள் முன்னணி தமிழ் தினசரி பத்திரிகைகளிடம் ‘நட்பு’ ரீதியாகக் கேட்டுக் கொள்கிறார்கள். வருமானவரி வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது அப்படிக் கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல் தேர்தலின்போது ஆட்சி மட்டத்திலும் ஆளும்கட்சி மட்டத்திலும், பல பக்கங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடும் யோசனைகள் இருப்பதையும் பூடகமாக, புரியும்படிச் சொன்னார்களாம்.
 
காவல் துறை மற்றும் மாநில, மத்திய அரசுகளில் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வுபெற்ற உடனேயோ அல்லது ராஜினாமா செய்தோ, தேர்தல் நெருங்கும்போது, அரசியல் கட்சியில் இணைந்து பிரசாரம் செய்வதோ அல்லது தேர்தலில் போட்டியிடும் போக்குகளோ அதிகமாகிக் கொண்டே இருக்கிறது அல்லவா? இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இப்படிப்பட்ட அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்த போது மத, இன, கட்சிப் பாரபட்சம் காட்டாமல் கடமையைச் செய்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அரசுத் துறைகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், குறிப்பாக உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற தேதியிலிருந்து, இரண்டு வருட காலம், வருமானம் ஈட்டும் தொழிலிலோ, வேலையிலோ செல்லக் கூடாது என்ற நடத்தை விதி இருக்கிறது. அதுபோல உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலோ ராஜினாமா செய்தாலோ ஐந்து வருடம் எந்த அரசியல் கட்சியிலும் சேரக் கூடாது என்றும், தேர்தலில் போட்டியிடக் கூடாதென்றும், நடத்தை விதிகள் திருத்தப்பட வேண்டும்.

அ.தி.மு.க. அமைச்சர்களும், பொறுப்புகளில் இருக்கும் கட்சிப் பிரமுகர்களும், யாரைக் கண்டு பயப்படுகிறார்களோ இல்லையோ மாவட்டத்திலும் உளவுப் பிரிவு (ஸ்பெஷல் பிரான்ச்) அதிகாரிகளைப் பார்த்துத்தான் மிகவும் பயப்படுகிறார்கள். காரணம் ஜெயலலிதா, பெரும்பாலும், கட்சிக்காரர்களின் செயல்பாடுகளைக் காவல்துறை நுண்ணறிவுத் துறை அதிகாரிகளின் அறிக்கையின் மூலமே அறிந்து கொள்வதால் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் மாவட்ட நுண்ணறிவு காவல் அதிகாரிகளைக் குஷியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழல் காரணமாக ஒருவர்மீது அவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. பின்னர் அந்த நபர் தேர்தலில் போட்டியிட முதல்வரால் வாய்ப்பு வழங்கப்படும்போது மீடியாக்கள் மூலமாகப் பாதகமான விஷயங்கள் வெளியே வருகின்றன. வேட்பாளரை மாற்றுகிறார் ஜெ. அ.தி.மு.க.வில் பலமுறை இதுபோன்று நடந்திருக்கிறது. கீழிருந்து நற்சான்றிதழ் கொடுத்த காவல் அதிகாரி எந்த நடவடிக்கைக்கும் ஆளாகாமல் தப்பிக்கிறார். இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டு அ.தி.மு.க. தலைமை கட்சியின் முக்கிய தலைவர்களையோ மாவட்டச் செயலாளரையோ நம்ப வேண்டும்.
 
அபிமன்யு

ஓ - பக்கங்கள் தில்லிக்கு அனுப்புவது யாரை? ஞாநி


கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு தமிழகத் தொலைக்காட்சிகளில் அரசியல்வாதிகள் கறாராக, தெளிவாகச் சொல்லும் உண்மை இதுதான்: கூட்டணி அமைப்பதன் ஒரே நோக்கம் அதிக இடங்களைப் பெறுவதுதான். கொள்கை, கோட்பாடு, செயல் திட்டம் இவையெல்லாம் எதுவும் காரணம் கிடையாது. இது ஏதோ புதிய அணுகுமுறை என்று கருத வேண்டாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு அரசியல்வாதிதான் பகிரங்கமாகக் கூட்டணி அமைக்க அதிக இடம் தவிர வேறு நோக்கமே கிடையாது என்று அறிவித்தார். அவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவரையடுத்து இன்னொரு அரசியல்வாதி எந்தக் கொள்கை முரண்பாடும் இல்லாமல் யாரும் யாரோடும் சேரலாம் என்ற வழிமுறையை மக்களுக்குப் புரியவைக்க, அரசியலில் எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சியல்ல (நோ ஒன் ஈஸ் அன்டச்சபிள்) என்று பிரகடனம் செய்தார். அவர் முரசொலி மாறன். இப்போது எல்லா கட்சிப் பிரமுகர்களும் இதே கருத்தை பகிரங்கமாகச் சொல்லத் தயங்குவதே இல்லை என்பதுதான் காலமாற்றம்.இந்திய, தமிழக அரசியலில் ஒவ்வொரு பிரதானக் கட்சியும் தனக்குப் பகைவராக இன்னும் ஒரு கட்சியைத்தான் கருதுகிறது. தி.மு.க. x அ.தி.மு.க., காங்கிரஸ் x பி.ஜே.பி., மம்தாவின் திரிணமூல் x இடதுசாரிகள், பி.ஜே.பி. x இடதுசாரிகள், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி x மாயாவதியின் பகுஜன், மற்றபடி யாருக்கும் வேறு யாரோடும் தேர்தல் கூட்டணி சேருவதில் தயக்கமே கிடையாது. பி.ஜே.பி.க்கும் காங்கிரசுக்கும் ஈழப் பிரச்னையில் ஒரே கருத்துதான். தனி ஈழம் கூடாது. ஆனால் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லும் ம.தி.மு.க.வுடன் கூட்டு சேர பி.ஜே.பி.க்குத் தயக்கம் கிடையாது. காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைக்கும் அ.தி.மு.க.வின் பொருளாதாரக் கொள்கைக்கும் (ஊழல் குற்றச்சாட்டு வரலாற்றிலும் கூட) வேறுபாடு கிடையாது. ஆனால் இடதுசாரிகள் காங்கிரசை எதிர்க்க அ.தி.மு. க.வுடன் சேரத் தயங்குவதே இல்லை. 

இப்படிப்பட்ட சூழலில் தமிழருவிமணியன் விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வையும் ராமதாசின் பா.ம.க.வையும் ‘அரசியல் செய்கிறீர்களா, தரகு செய்கிறீர்களா’ என்று கேட்டிருப்பது மிகக் கொடுமையான நகைச்சுவை. எல்லா கட்சிகளும் செய்வதைத்தான் அவர்களும் செய்துகொண்டு இருக்கிறார்கள். எங்கே போனால் தங்களுக்கு அதிக லாபம் என்ற கணக்கை மீதி எல்லாரும் போடலாம். அவர்கள் போடக் கூடாதா என்ன? இருவரையும் பி.ஜே.பி. அணிக்கு வரும்படி சந்தித்து கெஞ்சிக் கொண்டிருந்தபோதெல்லாம் அவர்கள் தரகு செய்வதாக மணியனுக்குத் தெரியவில்லையா? இவ்வளவு கெஞ்சியும் இன்னும் வந்து சேரவில்லையே என்ற எரிச்சல் மட்டுமே அவர் பேச்சில் தெரிகிறது.  மோடியைப் பிரதமராக்குவதும் வைகோவை முதல்வராக்குவதும்தான் தம் குறிக்கோள் என்று பிரகடனம் செய்த மணியன் அடுத்தபடியாக தம் காந்திய மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றியிருக்கிறார். எதற்கு இன்னொரு கட்சி? மோடியிடமும் வைகோவிடமும் தமக்கு இல்லாவிட்டாலும் தம் இயக்கத்தில் இதுவரை விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு கேட்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்கமுடியும்? இப்படிப்பட்ட மோசமான சூழலில் தமிழ்நாட்டு கட்சிகள் எல்லோருடைய கணக்கும் கட்சிகளின் சுயலாபத்துக்காக மட்டுமே. இதில் எந்தப் பொது நலமும் மக்கள் நலமும் இல்லை. தில்லியில் ஊழல் காங்கிரசும் மதவாத பி.ஜே.பி.யும் ஆட்சி அமைக்காமல் தடுக்க நினைக்கும் இடதுசாரிகளுக்கு, தமிழகத்தில் சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக வருவதில் கூட எந்தச் சிக்கலும் இல்லை. தேர்தலுக்குப் பின்னர் தேவைக்கேற்ப அ.தி.மு.க. ஆதரவையோ தி.மு.க. ஆதரவையோ தில்லியில் பெற்று ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கக்கூடிய பி.ஜே.பி.க்கு, காங்கிரசின் ஊழல்தான் பிரதானமே தவிர கழகங்களின் ஊழல் அல்ல.

தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் தில்லியில் ஆட்சி அமைக்க வேண்டியது காங்கிரசா, பி.ஜே.பி.யா என்பதை விட, அந்த ஆட்சியில் எதிர்க் கழகத்துக்கு செல்வாக்கு இருந்துவிடக் கூடாதே என்பதே பிரதான கவலை. ஊழலை எதிர்ப்பதற்காகவே மாநாடு நடத்துவதாக அறிவிக்கும் விஜயகாந்த்துக்கு, அ.தி.மு.க.வின் ஊழல் பற்றி மட்டுமே அக்கறை. அதற்கு நிகரான ஊழல் புகார்களுடைய காங்கிரசுடனோ தி.மு.க.வுடனோ கூட்டு சேர எந்தத் தயக்கமும் இல்லை. எத்தனை இடம் என்பது மட்டுமே இழுபறி. திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு சேர்ந்து தில்லியில் பதவிகளை அனுபவித்த பா.ம.க. இனி எந்தத் திராவிடக் கட்சியுடனும் கூட்டு இல்லை என்று அறிவித்தாலும் இன்னொரு திராவிடக் கட்சியான ம.தி.மு.க. இருக்கும் பி.ஜே.பி. அணிக்குச் செல்ல தயக்கம் இல்லை. எத்தனை இடம் என்பது மட்டுமே பிரச்னை.  

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்தத் தேர்தல் காங்கிரசுக்கோ பி.ஜே.பி.க்கோ உண்மையில் முக்கியம் அல்ல. தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே வாழ்வா சாவா என்ற அளவு முக்கியம். பத்தாண்டுகளாக தில்லியில் அதிகாரத்தில் பங்கு வகித்த வசதியும் அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்தாலும் கூட எதிரிக் கட்சியின் ஒடுக்குமுறையைச் சமாளிக்கும் வலிமையையும் அனுபவித்து வந்த தி.மு.க.வுக்கு இந்த முறைதான் தில்லி அதிகாரத்தில் பங்குபெறாமல் போகும் ஆபத்தும் எதிரிக்கட்சி பங்கேற்றுவிடும் ஆபத்தும் மிரட்டுகின்றன. கட்சிக்குள்ளேயும் இருக்கும் அதிகாரப் போட்டியில் ஸ்டாலினுக்கு இதுவரை வந்த சிக்கல் எல்லாம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களால் அல்ல. தில்லிக்கு அனுப்பப்பட்டு பதவி பெற்ற அழகிரி, கனிமொழி, தயாநிதி ஆகியோரே ஸ்டாலினின் தலைவலிகள். எப்படியும் 2016 வரை தமிழக ஆட்சி பற்றிக் கவலைப்படாமல், தானே தில்லிக்கு எம்.பி.யாகச் செல்ல முயற்சித்தால் என்ன, ஆட்சியில் பங்கு கிடைத்தால் அங்கே மத்திய அமைச்சராக இருந்து வடக்கே தம் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு கட்சியின் இதர கோஷ்டிகளை பலவீனமாக்கி விட்டு, பின்னர் 2016ல் தமிழக அரசியலுக்குத் திரும்பிவந்தால் போதுமே என்று கூட ஸ்டாலின் சிந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க.வுக்கோ, மறுபடி காங்கிரஸ் ஆட்சி அமையும் வாய்ப்பு வராமல் தடுத்தால்தான் தில்லியில் தி.மு.க.வின் செல்வாக்கைத் தடுக்க முடியும். அ.தி.மு.க.வுக்குக் கணிசமான தனி பலம் இருந்தால்தான், தி.மு.க.வுக்குப் பதில் அதை மூன்றாவது அணியோ பி.ஜே.பி.யோ நாடும் நிலை வரும். சொத்துக் குவிப்பு வழக்கு போன்ற பெரும் கத்தியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறமுடியும். 

கட்சிகளெல்லாம் கொள்கையும் நெறியும் இல்லாமல் அதிகார ஆசையில் மட்டுமே செயல்படும் இப்படிப்பட்டச் சூழலில் தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலை மக்கள் எந்த அடிப்படையில் சந்திக்க வேண்டும்? தில்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவோ பி.ஜே.பி. ஆட்சி அமைக்கவோ தமிழகத்தின் வாக்குகள் நேரடியாக எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. காரணம், என்ன ஆனாலும் காங்கிரசோ, பி.ஜே.பி.யோ ஆளுக்கு பத்து எம்.பி.களைக் கூட தமக்கென்று நேரடியாகத் தமிழகத்திலிருந்து பெறும் வாய்ப்பு இல்லை. கணிசமான எம்.பி.களைத் தமிழக வாக்காளர்கள் தி.மு.க.வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோதான் தரமுடியும். நாளைக்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்து காங்கிரஸ், பி.ஜே.பி. இருவருக்கும் சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனால், அப்போது தி.மு.க., அ.தி.மு.க. இருவருமே யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கும் வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால், மூன்றாவது அணிக்குக் கூட இருவரும் செல்ல முயற்சிக்கலாம்.  எனவே தமிழக வாக்காளர் தம் வாக்கை யாருக்கு அளிப்பது? அடுத்து தில்லியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது காங்கிரசா, பி.ஜே.பி.யா என்பதை விட அந்த ஆட்சியில் செல்வாக்குடன் இருக்க வேண்டியது தி.மு.க.வா, அ.தி.மு.க.வா என்பதை மட்டுமே யோசித்துத் தீர்மானிக்க வேண்டும். இரு கட்சிகளுக்குமே அங்கே செல்வாக்கு இருக்கத் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கோ, நோட்டாதான் ஒரே வழி! ‘ஆம் ஆத்மி’ கிடையாதா என்று கேட்காதீர்கள். அது இன்னும் இங்கே ஒரு கனவுதான். தில்லியில்தான் ரியாலிட்டி ஷோ. சட்டமன்றத்துக்கு இரு கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்வு செய்வது போலவே, தில்லிக்கும் தேர்வு செய்யும் சிக்கலை தமிழகம் சந்திக்கிறது. என்ன கொடுமை! விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய்ய நினைத்திருக்கிறாய்!

அருள்வாக்கு - இங்கிலீஷ் ஃபாஷன்!


ஏழையோ, பணக்காரனோ எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான சுபகாரியங்கள், சாவு மாதிரியான அசுப காரியங்கள் வருகின்றன. இவற்றுக்காக எவனும் கடன்படுகிற மாதிரி நாம் விட்டால் அது நமக்குப் பெரிய தோஷம். அவரவரும் தன்னாலானதை ஐந்தோ, பத்தோ ஏழைப்பட்ட பந்துக்களின் சுபாசுபகார்யங்களுக்கு உதவ வேண்டியது ஒரு பெரிய கடமை. இதை முன்காலங்களிலெல்லாம் ஸஹஜமாகச் செய்து வந்தார்கள். ‘பரோபகாரம்’ என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்குச் செய்வதற்கு முன்னால், ‘பந்துத்வ’த்தோடு நம்முடைய ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு தலைமுறைக்கு முந்தி இதைச் சொல்ல வேண்டிய அவச்யமே இருக்கவில்லை.

அப்போது கிழவர் பராமரிப்பு இல்லம், விதவை விடுதி என்றெல்லாம் வைக்க வேண்டிய அவச்யமே இல்லாதிருந்ததற்கு என்ன காரணம்? பந்துக்களே இவர்களைப் பராமரித்து வந்தது தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு அத்தை, பாட்டி, மூன்று தலைமுறை விட்டு ஒரு மாமா, தாத்தா என்கிற மாதிரி கிழங்கள் இருக்கும்! தற்காலத்தில் ரொம்பவும் பணக்காரர்களும் கூட வெறும் ‘ஷோ’வாக பார்ட்டியும் ஃபீஸ்டும் கொடுக்கிறார்கள். அல்லது பேப்பரில் போடுகிற மாதிரி டொனேஷன் கொடுக்கிறார்கள்; ஆனால் பந்துத்வத்தோடு தங்கள் குடும்பத்திலேயே வசதி இல்லாதவர்களை ஸம்ரக்ஷிப்பது என்பது இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது.

அவிபக்த குடும்பமுறை (Joint family system)போனபின் அண்ணன், தம்பி என்பதே போய்விட்டது. முன்பெல்லாம் இப்படி ஜாயின்ட்- ஃபாமிலியாக இருக்கும்போது, தாயார், தகப்பனார், சிற்றப்பா பெரியப்பாமார்கள், அவர்களுடைய பத்னிகள், பிள்ளைகள், மாட்டுப்பெண்கள், பேரக்குழந்தைகள் என்று ஒரு வீட்டிலேயே 20, 25 பேர் இருப்பார்கள். இவ்வளவு பேர் இருக்கிறபோது, அநாதரவான தூர பந்துக்கள் நாலைந்து பேரைக்கூட வைத்துக்கொண்டு சோறு போடுவது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதோ அவனவனும் பெண்டாட்டியோடு கத்திரித்துக்கொண்டு தனிக்குடித்தனம் என்று போவதால் கூட ஒருத்தரை வைத்துக்கொள்வது என்றால்கூடச் சுமையாகத் தெரிகிறது. எத்தனையோ ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் வீணாகப் போய், இங்கிலீஷ் ஃபாஷன் வந்ததில், உயர்ந்த தர்மங்கள் எல்லாம் நசித்துப் போய்விட்டன.


ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Wednesday, February 12, 2014

தண்ணீர்..தண்ணீர்...

'ஊர்ல நம்ம வீட்டுலயும் 'வாட்டர் ப்யூரிஃபையர்' போட்டாச்சுல. நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு இப்ப இந்த மெஷினுங்கதான் ஓடிட்டிருக்கு. உங்க 'மினரல் வாட்டர்' எல்லாம் தோத்துடும். சும்மா கல்கண்டு மாதிரி இருக்கும்ல....'' 
 
''என்னது, அந்த வரப்பட்டிக்காட்டுல வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்தறீங்களா?''

''பின்ன என்னப்பா... பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன வாய்க்கா தண்ணியைக்கூட அள்ளி அள்ளி குடிச்சுட்டு இருந்தவங்கதான். ஆனா, இப்ப தண்ணி சரியா இல்ல. நிலத்தடிநீர் கெட்டுப் போச்சு. போர் போட்டு எடுக்கற தண்ணியைகூட அப்படியே வாயில வெக்க முடியல. சுத்தமான தண்ணியா குடிக்கணும்ல...''

-நகரங்களில் மட்டுமல்ல... இன்று தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் கூட மினரல் வாட்டர் பாட்டில்கள் பளபளக்கின்றன. வீட்டுக்கு வீடு டிஷ் ஆண்டெனா வைத்திருப்பது போல... 'தண்ணீர் சுத்திகரிக்கும்' இயந்திரங்களையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

நியாயம்தான்... சுத்தமான குடிநீர் அவசியம்தான். ஆனால், ஒட்டுமொத்த தண்ணீரின் சுத்தத்தைப் பாதுகாப்பது பற்றி கவலைப்படாமல், நாம் குடிக்கும் தண்ணீர் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்கிற நிலைப்பாடு... எந்த அளவுக்கு சரி?

நீர் நிலைகளைப் பாதுகாத்து காலாகாலத்துக்கும் ஜீவராசிகளுக்கான நீர்த் தேவையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கம்தான். ஆனால், 'தனியார் 20 ரூபாய்க்கு மினரல் வாட்டர் பாட்டில் விக்கறாங்க... உங்கள் அன்புச் சகோதரியான நான் 10 ரூபாய்க்குக் கொடுக்கிறேனே...!' என்று முதல்வரே பெருமை அடித்துக் கொண்டிருக்கும்போது... வேறென்ன சொல்ல!

இது, இன்றைக்குச் சரியாக இருக்கலாம். நாளைக்கு...?

ஆம், உடனடித் தேவைக்கு சரி. ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தால், 'கடல்நீரைச் சுத்திகரித்து குடிநீராக்குகிறோம்...', 'வீட்டுக்கு வீடுதண்ணீரைச் சுத்திகரிக்கிறோம்' என்கிற பெயரில், இருக்கின்ற நீரையெல்லாம் சுத்திகரிக்க ஆரம்பித்தால், அதன் எச்சமாக தேங்கும் கழிவுநீர், திரும்பத் திரும்ப பூமிக்குள் அனுப்பப்பட்டு, ஒரு கட்டத்தில்... ''இந்தத் தண்ணியில தொடர்ந்து கழிவு நீர் சேர்ந்ததால... 10 ஆயிரம் டிடிஎஸ் இருக்கு. இதை சுத்தப்படுத்தவே முடியாது. வேணும்னா... செவ்வாய் கிரகத்துல தண்ணியிருக்காம். ஒரு கிரவுண்ட் 500 கோடி ரூபாய்தான். பேசாம அங்க போயிட்டா... தண்ணி என்ன, பைப் போட்டு தேவலோக அமிர்தத்தையேகூட எடுத்துக்கலாம். நானெல்லாம் ஏற்கெனவே ஏழு கிரவுண்ட் வாங்கிப் போட்டுட்டேன். என்ன... நீங்க நாலு கிரவுண்ட் புக் பண்றீங்களா...?'' என்று நம்ம 'டெல்லி' கணேஷ் உள்ளிட்ட பெரியதிரை, சின்னத்திரை நட்சத்திரப் பட்டாளங்கள் டிவி-யில் தோன்றி உங்களிடம் வீட்டுமனை விற்கவேண்டிய நிலை வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை!

காற்று, தண்ணீர் இந்த இரண்டும் இயற்கை அளித்த இலவசங்கள்... ஆனால், காலஓட்டத்தில் குடும்ப பட்ஜெட்டின் செலவுப் பட்டியலில் அவையும்கூட இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன! இயற்கையின் அருட்கொடைகளை முறையாகப் பயன்படுத்தாதன் விளைவு... இலவசமாகக் கிடைத்து வந்த தண்ணீர் இன்று விலைக்கு வாங்க வேண்டிய பொருளாக மாறியிருக்கிறது. ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை, 'காசை தண்ணியா செலவு செய்றான் பாரு’ என உவமையாகச் சொல்வார்கள். ஆனால், இன்று தண்ணீருக்காக காசு செலவு செய்யும் நெருக்கடியான நிலை!

குடிநீருக்கே இந்த நிலை என்றால்....
விவசாயத் தேவைக்கு?

வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு, பழங்களை எதிர்பார்த்து அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீராதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, நீரை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? மலைகளில் இருந்து மரங்களை அழித்தோம்... பிறகெப்படி மேகம் சூழ்கொள்ளும்?



மலைகளில் உருவாகி ஆறாக மாறி, குளம், குட்டைகளைக் குளிர்வித்து, ஏரி நிறைத்து, குடிநீர் கொடுத்து, கடலில் கலக்கும் தண்ணீர், அதன் பாதையில் பயணித்த வரையில் பிரச்னை இருக்கவில்லை. ஆனால், வயல்காடு, ஆறு, குளம், குட்டை, ஏரி, கண்மாய் என்று அனைத்து நீராதாரங்களையும் ஆக்கிரமித்து பெரும்பெரும் பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஏர்போர்ட், நீதிமன்றங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், தொழிற்சாலைகள் என்று அமைக்க ஆரம்பித்த பிறகுதான், பொறுமை இழந்து, தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்டாள் தண்ணீர் தாய்! கடைசியில், அவள் தனது பயணத்தை நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

விளைவு, பாசனம் இல்லாமல் கருகிக் கிடக்கின்றன பயிர்கள். முடங்கிக் கிடக்கிறது விவசாயம். தை மாதத்திலேயே தலைவிரித்தாடும் பஞ்சம், கொளுத்தும் கோடையில் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது நெஞ்சம்.

கோடையைச் சமாளிக்க, என்ன செய்யலாம்..? என்பதற்கான ஆய்வுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்கியிருக்கிறது, தமிழக அரசு. அப்படி ஆய்வுக்காகச் சென்ற அதிகாரிகள், பிரச்னையின் விஸ்வரூபத்தை கண்ட அதிர்ச்சியில் ஆடிப்போய் கிடக்கிறார்கள்.

'நீரை நிலத்துல தேடாதே... வானத்துல தேடு’!

யாரால் நிகழ்ந்தது இந்தப் பேராபத்து..? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா..’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மனதில் நிறுத்தினால், இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியது, நாம் ஒவ்வொருவரும்தான்.

'நீரை நிலத்துல தேடாதே... வானத்துல தேடு’ என்பார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அதாவது, மழை பொழிய என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள் என்பதுதான் அதன் உட் பொருள். இனியாகிலும், நெருங்கி வரும் பேராபத்தைத் தடுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டாமா? தும்பை விட்டு வாலைப் பிடித்திருந்த நாம், தற்போது வாலையும் அல்லவா கைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

'எஞ்சியிருக்கும் தண்ணீரையாவது காப்பாற்றினால்தான்... இனி எதிர்காலம் என்கிற எச்சரிக்கை உணர்வு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊற வேண்டும். அது பெருவெள்ளமாகப் பாய்ந்து ஆட்சிப் பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு, சூழலைப் பற்றியும்... எதிர்கால சந்ததி பற்றியும்... இயற்கைச் சுரண்டல்கள் பற்றியும் கண்டுகொள்ளாமல், பொதுச்சொத்துக்களைச் சுருட்டுவதை மட்டுமே குறிக்கோளாக மேற்கொண்டிருப்போரை சுருட்டிக் கொண்டு போகவேண்டும்...'

இப்படியெல்லாம் வீராவேசம் கொண்டு சாபம் விடலாம்தான். ஆனால், அதைவிட முக்கியம்... நிஜத்தில், நாம் ஒவ்வொருவருமே களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான்!

இருக்கும் நிலத்தடி நீரை, கிடைக்கும் மழை நீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதை அறிந்துக் கொண்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட நுட்பங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தவே... 'தண்ணீர்... தண்ணீர்...’ எனும் இந்தப் புதிய தொடர் இங்கே பாய்ந்து வருகிறது. நீர் மேலாண்மை வல்லுநர்கள், பொறியாளர்கள், விவசாயிகள்... என பலதரப்பட்டவர்களும் மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்களை உங்களிடம் பகிரப் போகிறார்கள்.

நிலங்களைக் குளிர வைக்கும் குளங்கள்!

இதைச் சொன்னதுமே... 'என்ன பேசி என்ன பயன்... சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா?' என்கிற சந்தேகக் கேள்விகள் இந்நேரம் அனைவரிடமுமே மையம் கொண்டிருக்கும். அதில் தவறில்லை. ஆனால், அனைத்தும் நடைமுறை சாத்தியம்தான் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஆம்... மகாராஷ்டிர மாநிலத்தின், ராலேகண்சித்தி எனும் வறண்ட கிராமத்தை, இன்றைக்கு வளமான விவசாய பூமியாக அண்ணா ஹஜாரே மாற்றியிருக்கிறாரே! அதே மாநிலத்தில் புனே அருகில் இருக்கும் ஹிவ்ரே பஜார் எனும் வறண்ட கிராமம், அந்த ஊர் நல்ல உள்ளங்கள் சிலரின் முயற்சியால் இன்றைக்கு சோலைவனமாக மாறியிருக்கிறதே! எல்லாமே, நீர் மேலாண்மை எனும் மந்திரத்தால் விளைந்த உண்மையே!

இவையெல்லாம் தொலை தூர நிஜங்கள். இங்கே உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே, நேரடி சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன பத்துக்கும் மேற்பட்ட குளங்கள்!

நம் முன்னோர்கள், குளங்களை முறையாக தூர்வாரி, வண்டலை நிலங்களில் போட்டனர். நீரும் நிறைந்தது, நிலமும் விளைந்தது. அந்த முறையைக் கைவிட்டதன் விளைவு, குளமும் காய்ந்து, நிலமும் வறண்டு கிடக்கிறது. குளங்கள் விவசாயத்தின் அடிப்படை ஆதாரங்கள். அவற்றை முறையாகப் பராமரித்தாலே... பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஒரு குளம் நிறைந்து, அடுத்த குளம்... அது நிறைந்தவுடன் அடுத்த குளம்... என வரிசையாகக் குளங்களை நிறைத்துக் கொண்டே ஏரிகளை அடையும் வகையில் பாசன வாய்க்கால்களை அமைத்திருந்தனர், நம்முன்னோர். அவையெல்லாம் பராமரிப்பில்லாமல் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும்... குளங்கள் வறண்டு போக ஒரு காரணம்.

இதைச் சரியாக புரிந்துகொண்டு, கடந்த 2010-ம் ஆண்டு, குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள அத்தனைக் குளங்களையும் இணைத்தார், அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் வள்ளலார் (தற்போது தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்). கிட்டத்தட்ட 14 குளங்கள் இணைக்கப்பட்டதன் பலன், பல ஆண்டுகளுக்கு பிறகு, அங்கிருந்த தரிசுகளில் அரங்கேறியது, உழவுத் தொழில். 'இனி இந்த மண்ணில் விவசாயமே இல்லை’ என நினைத்து, வேலை தேடி வெளியூர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்பிய அதிசயம் அரங்கேறியது! நம்பிக்கை விதை விதைக்கப்பட்டிருக்கிறது!


 



Monday, February 10, 2014

இம்பல்ஸ் ஷாப்பிங்கைத் தடுக்க 10 வழிகள்!

எல்லாப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை? ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டில் நுழைவோம். வாங்க நினைத்த பொருளோடு,  வாங்க நினைக்காத நான்கைந்துப் பொருட்களை வாங்குவோம். கடையைவிட்டு வெளியே வந்தபிறகு ஏன் இத்தனை பொருட்களை வாங்கினோம் என்று தெரியாமல் முழிப்போம். இதற்குப் பெயர்தான் 'இம்பல்ஸ் பையிங்’. அதாவது, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணுக்குப்பட்டதை எல்லாம் வாங்க நினைக்கிற மனநிலை. இந்த மனநிலையைத் தூண்டி, தங்கள் குவித்து வைத்திருக்கிற பொருட்களை விற்பதற்கான அத்தனை வேலைகளையும் பெரிய மால்களும், சூப்பர் மார்க்கெட்களும் பக்கவாகச் செய்கின்றன. இந்த வலையில் சிக்காமல், தேவையான பொருளை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்கு இதோ பத்து வழிகள்..!
 
1. கிரெடிட் கார்டு வேண்டாம்! 

பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள். ஏனெனில், கிரெடிட் கார்டுதான் இருக்கிறதே என்று பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குச் சட்டென வந்துவிடுவீர்கள். எனவே, முடிந்த மட்டும் ரொக்கமாக பணம் தந்து பொருளை வாங்குங்கள்.

 2. தேவையான பொருள் மட்டும்..! 

நீங்கள் ஷாப்பிங் செல்லும்முன், உங்களுக்கு என்னென்ன பொருள் தேவை என்று பட்டியல் போடுங்கள். எது உடனடியாகத் தேவையோ, அது மட்டுமே ஞாபகத்துக்கு வரும். சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடன் அந்தப் பொருட்களை மட்டும் வாங்குங்கள். அதுதவிர்த்து கண்ணில்படும் பொருட்களை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். பிற்பாடு தேவைப்பட்டால் வாங்குங்கள்.

3. டைம்பாஸ் ஷாப்பிங்! 

வீட்டில் போரடிக்கிறது, ஷாப்பிங் போனால் பொழுதுபோறதே தெரியாது என்று நினைத்து ஷாப்பிங் போகாதீர்கள். ஷாப்பிங் போனால் பொழுதுபோகும்; கூடவே பர்ஸும் காலியாகும். எனவே, உங்கள் ஷாப்பிங்கை அதிகபட்சம் மாதம் இருமுறை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.


 4. ஆஃபர் வலை! 

இது வாங்கினால் அது ஃப்ரீ, அது வாங்கினால் இது ஃப்ரீ என ஆஃபர்கள் சூப்பர் மார்க்கெட்களில் அடிக்கடி போடப்படும். இந்த ஆஃபர் இன்னும் சிலநாட்கள் மட்டுமே என்பார்கள். இந்த ஆஃபரை நாம் சுதாரிப்போடு கேட்காவிட்டால், அதில் நாமும் சிக்கி, தேவை இல்லாத பொருட்களை வாங்குவோம். தினம் ஆஃபர் சேல்ஸ் இருக்கும்! அவசரப்பட வேண்டாம்!

5. விளம்பர மாயை! 

50% தள்ளுபடி, 60% தள்ளுபடி என்கிற மாதிரியான அதிரடி விளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். விளம்பரங்கள் சொல்கிறமாதிரி 50%, 60% தள்ளுபடி சில பொருட்களுக்கு மட்டுமே  இருக்கும். குறைந்த எண்ணிக்கையில் எந்த சாய்ஸும் இல்லாமல் தரத்திலும் குறைவானதாக அந்தப் பொருட்கள் இருக்கும். கடைக்குப் போய் வெறுங்கையோடு திரும்ப மனமில்லாமல், வேறு ஏதேதோ பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவோம். அதேபோல் இணையதளத்தில் அதிரடி ஆஃபர் விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும். அதுபோன்ற சமயங்களில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.  

 6. மளிகைக் கடைகளே பெஸ்ட்! 

உங்கள் வீட்டுக்கு அருகில் மளிகைக் கடைகளில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குங்கள். அங்குதான் ஆளை விழுங்கும் ஆஃபர்கள் அடிக்கடி இருக்காது. எனவே, ஆஃபருக்காகத் தேவையில்லாத பொருளை வாங்கவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இருக்காது. பணமும் அதிகம் செலவழியாது.

 7. சரியான விலை தாருங்கள்! 

நீங்கள் வாங்கப்போகும் பொருளுக்கான விலையை முதலில் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய கடைகளில் அதைவிடக் குறைந்த விலையில், ஆனால் அதே அளவு எடையில், அதே அளவு தரத்தில் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.  ஆஃபர் என்கிற பெயரில் விலை குறைந்த ஒரு பொருளோடு, தேவையில்லாத வேறொரு பொருளை நீங்கள் வாங்குவதைவிட, கொஞ்சம் அதிக விலை தந்து உங்களுக்குத் தேவையான பொருளை வாங்கிவிடலாமே!

 8. அவசரம் வேண்டாம்! 

பெரிய கடைகளுக்குப் போய் அவசர அவசரமாக ஷாப்பிங் செய்யாதீர்கள். இந்த அவசரம் நமக்கான  தேவை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கவிடாமல், நஷ்டத்தில் நம்மை வாங்கவைத்துவிடும். அதேபோல, மிக நிதானமாகவும் ஷாப்பிங் செய்யவேண்டாம். ஒவ்வொரு பொருளையும் அதிகநேரம் பார்த்துக்கொண்டே இருந்தால், அதை வாங்காமல் வெளியே வரமாட்டோம்.

9. செல்ஃப் ஆடிட்டிங் தேவை! 

அதிரடி ஆஃபரில் இதுவரை நீங்கள் உங்களுக்குத் தேவையான சரியான பொருளைத்தான் வாங்கி இருக்கிறீர்களா? எந்தெந்தப் பொருளைத் தேவையில்லாமல் வாங்கி இருக்கிறீர்கள்? அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன? என்பதை என்றைக்காவது வீட்டில் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது உங்களுக்கு நீங்களே ஆடிட் செய்துபாருங்கள்! நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கே புரியும்!


10. தேவை, உடன் ஒருவர்! 

நீங்கள் ஷாப்பிங் செய்யப்போகும் முன்பு உங்களைப் பற்றி நன்கு அறிந்த, உங்கள் நலனில் அக்கறைகொண்ட ஒருவர் (உங்கள் கணவரையோ/மனைவியையோ) உடன் இருந்தால், தேவையில்லாத பல பொருட்களை நாம் வாங்கத் துணிய மாட்டோம். நம் பர்ஸும் எப்போதும் கனமாகவே இருக்கும்!
 

சத்யா நாதெள்ளா

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த ஸ்டீவ் பாமருக்கு அடுத்து அந்தப் பதவிக்கு வரப்போகிறவர் யார் என்கிற கேள்வியைக் கடந்த ஐந்து மாதங்களாக உலகம் முழுக்கப் பலரும் கேட்க... அதற்கான பதில் இப்போதுதான் கிடைத்திருக்கிறது.  

ஆந்திராவில் பிறந்து வளர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடந்த 22 வருடமாக வேலை பார்த்துவரும் சத்யா நாதெள்ளாவைதான் மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த சிஇஓ என்று  அறிவித்திருக்கிறார் பில் கேட்ஸ். யார் இந்த சத்யா?

1969-ம் ஆண்டு, ஹைதராபாத்தில் பிறந்தவர் சத்யா நாதெள்ளா. அங்குப் பள்ளிப் படிப்பை முடித்தவர், பொறியியல் படிப்பை மணிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயின்றார். மேற்படிப்புக்காக அமெரிக்காச் சென்ற நாதெள்ளா, விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை வளர்த்ததோடு, தானும் வளர்ந்தவர். ஆரம்பத்தில் எந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது என்று குழம்பினாலும், மைக்ரோசாஃப்ட்டில் சேர்ந்தவுடனேயே அதன் தனித்துவத்தைப் புரிந்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.  

''பல நிறுவனங்கள் உலகத்தை மாற்ற நினைக்கின்றன. ஆனால், சில நிறுவனங்களிடம்தான் அந்தத் திறமை  இருக்கிறது. மைக்ரோசாஃப்டிடம் உலகை மாற்றும் திறமை இருக்கிறது'' என்று புகழ்கிறார் சத்யா.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் திட்டத்தோடு சிஇஓ ஆகியிருக்கும் சத்யாவின்  சம்பளம் எவ்வளவு தெரியுமா? பணம், போனஸ் எல்லாம் சேர்த்து 18 மில்லியன் டாலர். மைக்ரோசாஃப்ட்டின் முன்னாள் சிஇஓ வாங்கிய சம்பளத்தைவிட இது 70% அதிகம்! கங்கிராட்ஸ் சத்யா!

வங்கி ஆண்டுப் பராமரிப்புத் தொகை மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் !

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பல வாடிக்கை யாளர்கள், ஆண்டுப் பராமரிப்புத் தொகை மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அந்த வங்கிகள், அவ்வப்போது விதிக்கும் பலவகையான இடைநிகழ்வுக் கட்டணங்களைப் பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இந்தக் கட்டணங்களில் பலவற்றைத் தவிர்க்க வழி இருக்கிறது. இதன்மூலம் பணத்தை மிச்சப்படுத்தவும் வழி இருக்கிறது.

'வங்கிகள் பலவகையான சேவை களுக்கு விதிக்கும் கட்டணங்களை, வங்கியின் இணையதளம் மற்றும் கணக்கு ஆரம்பிப்பதற்காக நிரப்பப்படும் படிவத்தில் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார்கள். இதைப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கூர்ந்துக் கவனிப்பதில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் களின்படியே வங்கிகள், இந்தக் கட்டணங்களை வசூலிக்கின்றன என்பதால் அவற்றைச் சொல்லிக் குற்றமில்லை.

மினிமம் பேலன்ஸ்!

வங்கிக் கணக்கில் உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகைக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையெனில், வாடிக்கையாளர் அபராதம் செலுத்தவேண்டும். இந்த அபராத தொகை வங்கிக்கு வங்கி வேறுபடும். பொதுவாக, பொதுத்துறை வங்கிகள் காலாண்டுக்கு ஒருமுறை குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையைக் கணக்கிடுகின்றன. அவ்வாறு அந்தத் தொகை இல்லாதபட்சத்தில் காலாண்டுக்கு ஒருமுறை அபராத கட்டணம் விதிக்கின்றன. சில தனியார் வங்கிகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் அபராத கட்டணம் விதிக்கின்றன.

கணக்கை மூட!
வாடிக்கையாளர் வங்கிக் கணக்கை குறிப்பிட்டக் காலத்துக்கு முன்பே  மூட விரும்பினால், அவர் ரூ.150 - 300 வரை கட்ட வேண்டும். உதாரணமாக, சில தனியார் வங்கிகள் வங்கிக் கணக்கை, ஆரம்பித்த 6 மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் மூடினால் 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. இதே 6 மாத காலத்துக்குள் மூடினால் 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

வங்கிக் கணக்கை மாற்ற!

வங்கிக் கணக்கை ஒரு கிளை யிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்றுவதற்குக் கட்டணம் இருக்கிறது. இது ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை. எனினும், சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்துக்குப்பின், கட்டணம் ஏதும் வாங்காமல் வங்கிக் கணக்கை வேறு கிளைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. உதாரணமாக எனது நண்பர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரது வங்கிக் கணக்கும் சென்னையில் இருந்தது. 
 
பாஸ்புக்!

பொதுவாக வங்கிகள் பாஸ்புக் வழங்குவதற்கும், பரிமாற்றப் பதிவு செய்வதற்கும் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால், வேறு நகரத்திலோ அல்லது ஒரே நகரிலுள்ள வேறொரு கிளையிலோ புது பாஸ்புக் வாங்கும்பட்சத்தில், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் வங்கிக் கணக்குத் துவங்கி ஒரு வருடம் ஆகியிருந்தால் ஒரு கட்டணமும், ஒரு வருடத்துக்கு மேல் ஆகும்பட்சத்தில் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் சுமார் 50 முதல் 100 ரூபாய் வரை இருக்கலாம். சில பொதுத்துறை வங்கிகள் இதற்கென கட்டணம் ஏதும் விதிப்பதில்லை. இரண்டாவது முறை பாஸ்புக் வழங்குவதற்கும், பரிமாற்றப் பதிவு செய்வதற்கும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுகிறது.

செக்புக்!

பழைய காசோலைகளுக்குப்  பதிலாக அதிகப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட சிடிஎஸ் காசோலைகளாக மாற்றித்தருவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது. அதன்பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் சுமார் 2 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
செக் பவுன்ஸ்!

பற்றாக்குறையான இருப்பு நிதியினால் செக் பவுன்ஸ் ஆகும்பட்சத்தில் சுமார் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படுகிறது. சில தனியார் வங்கிகளில் காலாண்டில் முதன்முறையாக ஒரு காசோலை பவுன்ஸ் ஆனால் கட்டணம் 350 ரூபாயும், அதே காலாண்டில் அடுத்தடுத்த காசோலைகள் பவுன்ஸ் ஆகும்போது சுமார் 750 ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
டெபிட் கார்டு!

வங்கிகள் தங்கள் டெபிட் கார்டு சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுக் கட்டணமாக விதிக்கின்றன. இந்தத் தொகை ரூபாய் 50-லிருந்து 200 ரூபாய் வரை வேறுபடலாம். ஐந்து தடவைக்குமேல், பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் பணத்தை எடுத்தால் அதற்கும் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். ஒரு மாதத்தில் ஐந்து தடவைக்குமேல் பிற வங்கி ஏடிஎம்களில் பரிமாற்றம் செய்தால் கட்டணமாக சுமார் 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
 இன்டர்நெட் பேங்கிங்!

எலெக்ட்ரானிக் பில் பேமென்ட்கள், நிதிப் பரிமாற்றம் ஆகியவற்றுக்குக் கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக, ரயில் டிக்கெட் பதிவு செய்ய ஒரு பதிவுக்கு ரூபாய் 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது.

நிதிப் பரிமாற்றத்துக்கு!

சில தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏடிஎம்-கள், இன்டர்நெட் பேங்கிங், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கும் படி வற்புறுத்துவதன் மூலம் தங்கள் கிளைகளின் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதனால் ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் கிளைகளில் செய்யப்படும் பரிமாற்றங் களுக்கு, வங்கிகள், கட்டணங்கள் விதிக்கின்றன.

செயல்படாதக் கணக்கு!

வங்கிகளில் தொடங்கப்படும் கணக்குகளில், சிலசமயம் வருடம் முழுவதும் எந்தப் பரிமாற்றமும் செய்யாமல் இருக்கும்பட்சத்தில், அதற்காகச் செயல்படாத கட்டணம் வசூலிக்கப்படும்.

கட்டணங்களைத் தவிர்க்க!

தற்போது பலரும் ஆன்லைனில் ரயில் டிக்கெட், பேருந்து டிக்கெட் போன்றவற்றைப் பதிவு செய்கின்றனர். இதைத் தவிர்த்து நேரடியாகச் சென்று டிக்கெட் வாங்கும்பட்சத்தில் இந்தக் கட்டணங்களைத் தவிர்க்க முடியும்.

சிலர் தங்களது வங்கிக் கணக்கில் பண இருப்பைத் தெரிந்துகொள்ள ஏடிஎம் சென்று அடிக்கடி தனது பண இருப்பைச் சரிபார்க்கின்றனர். அவ்வாறு பார்ப்பதைத் தவிர்த்தால், இந்தக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும், சிலர் ஏடிஎம்மில் நாளன்றுக்கு நூறு ரூபாய் விதம் ஒரு மாதத்துக்குப் பலமுறை பணம் எடுக்கிறார்கள். இதைத் தவிர்த்து தேவையான அளவுக்குப் பணத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்தக் கட்டணங்களாவது குறையும்.

வங்கிகளில் நேரடியாகச் சென்று பணப் பரிவர்த்தனைச் செய்யும்போது விதிக்கப்படும் கட்டணங்களைவிட ஆன்லைன் பரிமாற்றத்துக்கு மிகக் குறைவான கட்டணங்களே விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் சில கட்டணங்களைக் குறைக்க முடியும். கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்தும்போது, ரூ.25,000க்கு மேல் ரொக்கமாகச் செலுத்தினால் கேஷ் ஹேண்ட்லிங் சார்ஜ் விதிக்கப்படும். மேலும், காசோலையாகத் தரும்பட்சத்தில், அது சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை எனில், அபராத கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டு மூலம் பணத்தை ரொக்கமாக எடுத்தால், சில நூறு ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்தவேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.

புகழரசி


 


Saturday, February 08, 2014

கோலி - யுவ்ராஜ் சிங் - ஜாகீர் கான் - ஹர்பஜன் சிங் - ரைனா - பாலிவுட் காதல்


பட்டோடி - ஷர்மிளா தாகூர், ரவி சாஸ்திரி - அம்ரிதா சிங், அசாரூதின் - சங்கீதா பிஜ்லானி, கங்குலி - நக்மா என இந்திய கிரிக்கெட் - பாலிவுட் இடையேயான காதல் கூட்டணிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இன்றைய இந்திய கிரிக்கெட் வீரர்களின் காதல் வாழ்க்கை எந்த நிலைமையில் இருக்கிறது என்று பார்க்கலாம்.

கோலி: இன்றைய இந்திய கிரிக்கெட்டின் காதல் மன்னன். ‘பக்கத்து வீட்டுக்காரர்கள் பலர், தங்களுக்குக் கல்யாண வயதில் மகள் இருப்பதாக என் அம்மாவுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். எனக்கு ரத்தத்தில் கையெழுத்திட்டுக் கடிதங்கள் அனுப்பும் ரசிகைகள் உள்ளார்கள்’என்று பெருமைப்படும் அளவுக்கு கோலி உச்சக்கட்ட புகழில் இருப்பவர்தான். அதனால் தான் அவர் காதலிக்கும் நடிகையும் பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா சர்மா. இப்போது கோலியையும் அனுஷ்கா சர்மாவையும் வைத்து ஒரு சினிமாவே எடுக்கலாம் என்றளவுக்கு விதவிதமான செய்திகளைத் தந்து கொண்டிருக்கிறது வடக்கு மீடியா. 


ஷாம்பு விளம்பரத்தில் நடித்தபோது நண்பர்களானவர்கள் கோலியும், அனுஷ்கா சர்மாவும். தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் முடித்து இந்தியா திரும்பிய கோலி, அனுஷ்கா சர்மாவின் பி.எம்.டபிள்யூ. காரில் ஏறி நேராக அவர் வீட்டுக்குத்தான் சென்றிருக்கிறார். அங்குதான் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார். அந்தளவுக்குக் காதல் பொங்கி வழிகிறது என்று ஒரு பத்திரிகை விடாமல் செய்தி வெளியாகிவிட்டது. விளம்பரத்தில் நடிக்கும் போதிலிருந்து பழக்கம். கோலி என் வீட்டுக்கு வந்தது உண்மை தான். மற்றவர்களும் வந்தார்கள். ஆனால் செய்தியில் இடம் பெற்றது கோலி மட்டும்தான்" என்கிறார் அனுஷ்கா சர்மா.

யுவ்ராஜ் சிங்: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்ததை விடவும் காதல் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர் யுவ்ராஜ் சிங். டஜன் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர். முதலில் நடிகை கிம் சர்மாவைக் காதலித்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாகப் பிரிந்து விட்டார்கள். யுவ்ராஜ் சிங்கின் அம்மா ஷப்னம் சிங் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியானபோது, ‘இது என் மகன் எடுத்த முடிவு’ என்று மறுப்புத் தெரிவித்தார் ஷப்னம் சிங்.  

கிம் சர்மாவுக்குப் பிறகு தீபிகா படுகோன், பிரீத்தி ஜிந்தா, அமீஷா படேல் என்று ஆறு மாதங்களுக்கொரு முறை வெவ்வேறு நடிகைகள், மாடல்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் யுவ்ராஜ் சிங். ஒரு கட்டத்தில் யுவ்ராஜ் சிங் - தோனி - தீபிகா படுகோன் இடையே ஒரு முக்கோணக் காதலும் பரபரப்பாக ஓடியது. சமீபகாலமாக மாடலும் நடிகையுமான கிஜில் தக்ராவுடன் நட்புடன் இருப்பதாகச் செய்திகள் வெளியானாலும் இதற்கு வேறொரு விதத்தில் மறுப்புத் தெரிவிக்கிறார் யுவ்ராஜின் அப்பா யோக்ராஜ். யுவ் ராஜ், புற்றுநோயிலிருந்து விடுபட்ட பிறகு முனிவராகி விட்டான். அவனுக்குப் பணமும் பார்ட்டிகளும் தேவைப்படுவதில்லை" என்கிறார்.

ஜாகீர் கான்: மிகவும் பொறுப்பானவராகப் பார்க்கப்படும் ஜாகீர் கானும் இஷா ஷர்வானி என்கிற நடிகையைக் காதலித்தார். எட்டு வருடக் காதல். நிச்சயம் திருமணம் வரை செல்லும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்த காதல். 2011, 2012ல் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நிறையச் செய்திகள் வெளியாகின. ஆனால், திடுதிப்பென்று ஒருநாள் ஜாகீருடனான காதல் முடிந்துவிட்டது என்று பேட்டி கொடுத்தார் இஷா. எதனால் பிரிந்தோம் என்பதை இஷா சொல்ல மறுத்துவிட்டார். ‘இருவரும் நண்பர்களாக இருப்போம்’ என்றார். ஜாகீர் இதுவரை காதலைப் பற்றி வாய் திறந்ததில்லை. நேற்று வந்த வீரர்கள் எல்லாம் திருமணம் ஆகி செட்டில் ஆன நிலையில், சீனியரான ஜாகீர் இன்னமும் திருமணம் செய்யாமல் இருப்பது ஆச்சர்யம்தான்.

ஹர்பஜன் சிங்: சீனியர் பேச்சுலர்களில் பஜ்ஜியும் ஒருவர். அவருடைய காதலி, பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா. திருமணம் வரை காதலைக் கொண்டு செல்ல விருக்கும் அரிதான கிரிக்கெட்டர். ஹர்பஜன் என் நெருங்கிய நண்பர். வாழ்க்கையின் முக்கியமான நபர்" என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் கீதா பஸ்ரா. 

இருவரும் ஒன்றாகப் பல விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஓய்வுக்குப் பிறகு சச்சின் வைத்த விருந்து நிகழ்ச்சியில் ஹர்பஜன், கீதாவுடன் கலந்துகொண்டார். வெகுவிரைவில் இருவரிடமிருந்தும் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம். 

ரைனா: உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?" என்று தோனி, ரைனா ஆகியோரிடம் கேட்கப்பட்டது. தோனி, ‘தீபிகா படுகோனே’ என்றார். ரைனா ‘அனுஷ்கா சர்மா’ என்று சொல்லிவிட்டார். உடனே இரண்டு ஜோடிகளுக்கும் முடிச்சுப் போட்டது மும்பை மீடியா.  தோனி, சினிமாவுக்குச் சம்மதம் இல்லாத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். ரைனா? ‘அனுஷ்கா சர்மா என்றில்லை, வேறு எந்த நடிகையாக இருந்தாலும் என்னால் காதலிக்க முடியாது. நடிகை அல்லது மாடலை ஒருபோதும் காதலிக்க மாட்டேன். என் வீட்டில் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்’ என்று கிசுகிசுக்களுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரைனா.

தினேஷ் கார்த்திக்: இது இரண்டு விளையாட்டு வீரர்களின் காதல் கதை. எனக்கு கிரிக்கெட் வீரர்களே பிடிக்காது. இப்போது இதை வைத்து என் தோழிகள் பயங்கரமாகக் கிண்டல் செய்கிறார்கள். கிரிக்கெட்டர் என்பதை விடவும் அவர் நல்ல மனிதர் என்பதால்தான் காதலித்தேன்" என்கிறார் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல்.  

தமிழகக் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலும் காதலிக்கிறார்கள் என்று முதலில் செய்தி வந்தபோது அது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. செய்தி வந்த வேகத்தில் உடனே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. அவரவர் தொழிலில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, 2015ல்தான் திருமணம் என்று இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள்.



ஓ பக்கங்கள் - இதோ ஒரு சண்டைக்காரி! ஞாநி


சரியாகப் பதினைந்து வருடங்கள் முன்பு சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கான மூன்று மாத நாடகப் பட்டறை நடத்தியபோது அதில் ‘சண்டைக்காரிகள்’ என்ற நாடகத்தை உருவாக்கினேன். சரித்திரம் முழுக்கவும் தங்களுக்கான நியாயத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் வெவ்வேறு விதங்களில் சண்டையிட்ட பெண்களின் கதைகளின் தொகுப்பு அந்த நாடகம். அப்படி ஒரு சண்டைக்காரியாக இந்த வாரம் அம்மாபட்டினம் அனீஸ் பாத்திமாவை அறிந்தேன். மதவெறிக்கு எதிரான சண்டையில் களம் கண்டு வெற்றி அடைந்தவர். 

மதவெறி என்பது எந்தத் தனி மதத்துக்கும் உரிய ஏக போகச் சொத்து அல்ல. எல்லா மதங்களுக்கும் உரியது. மதத்தின் பெயரால், மதப் பழக்க வழக்கங்களின் பெயரால் மனிதர்களை ஒடுக்குவது, அவர்களுடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது என்பதும் எல்லா மதங்களிலும் இருப்பதுதான்.  சாதாரண மக்கள் பொறுத்தது போதும் என்று எதிர்த்து நின்றால் மத வெறியர்களால் தாங்கமுடியாது. பின்வாங்கியே தீரவேண்டியிருக்கும். அப்படி பாகிஸ்தானில் தாலிபான்களை எதிர்த்து நின்ற சிறுமி மலாலா இன்று உலகம் முழுவதும் மதவெறிக்கு எதிரான மக்களின் பிரதிநிதியாக ஆகிவிட்டார்.

தமிழ்நாட்டிலும் ஒரு மலாலாவாக, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அம்மாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா உருவாகியிருக்கிறார். கோவை அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் மாணவியான இவர் புரட்சிகர மாணவர் இளைஞர் அமைப்பு என்ற இடதுசாரி அமைப்பில் இருப்பவர். இவரது அண்ணன் அலாவுதீனும் அதே அமைப்பில் இருக்கிறார். அவரும் அதே கல்லூரியில் சட்டம் படித்து புதுக்கோட்டையில் வழக்கறிஞராக இருப்பவர்.கடந்த ஜனவரி 27 அன்று இரவு தன் கிராமத்திலிருந்து பக்கத்து ஊரான மீமிசலுக்குப் போய் கோவைக்கு பஸ் ஏறப் புறப்பட்டார் அனீஸ் பாத்திமா. அவருக்குத் துணையாகக் குடும்ப நண்பர் முத்துகிருஷ்ணன் உடன் சென்றார். மீமிசலில் பஸ் ஏறுவதற்காகக் காத்திருந்த சமயத்தில், பாத்திமா வேறு மத இளைஞருடன் இருப்பதைக் கண்ட சில இஸ்லாமிய மதவெறியர்கள் அவர் பஸ்ஸில் ஏறிய பின்னர் அவரிடம் வந்து கடுமையாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். தான் யார் என்றோ, யாருடன் எங்கே செல்கிறேன் என்பதைக் கேட்கவோ அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை என்று பாத்திமா பதில் சொன்னதையடுத்து தொடர்ந்து கலாட்டா செய்துள்ளனர். பஸ் கம்பெனி ஊழியர்கள் தலையிட்டு பாத்திமா வழக்கமாக அந்த பஸ்சில் செல்பவரென்று விளக்கியும், பாத்திமாவின் சகோதரர் அலாவுதீனுக்கு முத்துகிருஷ்ணன் போன் செய்து சொல்லி அவருடன் கலாட்டா செய்தவர்கள் பேசிய பின்னரும், தாற்காலிக சமாதானம் ஏற்பட்டு, பஸ் புறப்பட்டது. ஆனால் பஸ் கொஞ்ச தூரம் சென்றதும், சிலர் அதை டூவீலர்களில் துரத்திச் சென்று தடுத்து மீண்டும் பாத்திமாவுடன் தகராறு செய்தனர். பாத்திமா எதற்கும் அசரவில்லை. ‘போலீசை வரச் சொல், பார்த்துக் கொள்வோம்’ என்று சவால் விடுத்தார். பொது இடத்தில் நடந்த சச்சரவால் கூட்டம் கூடி, போலீசும் வந்துவிட்டது.போலீஸ் வந்ததும் மதவெறி இளைஞர்கள் பலர் காணாமல் போய்விட்டார்கள். எஞ்சியிருந்தவர்களை போலீஸ் விசாரிக்கும்போதே, புகார் தரவேண்டாமென்று பாத்திமாவை, முஸ்லிம் அமைப்புகளின் பிரமுகர்கள் வந்து வற்புறுத்தத் தொடங்கியதாக ‘வினவு’ இணையம் தெரிவிக்கிறது. ஆனால் பாத்திமா கடைசி வரை உறுதியாக இருந்து போலீசில் புகார் எழுதிக் கொடுத்தார். அவரை அதன்பின் வீட்டுக்குப் போலீசாரே பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

மறுநாள் நடந்த சமரசப் பேச்சு வார்த்தையில் பாத்திமா புகாரைத் திரும்பப் பெற உறுதியாக மறுத்தார். போலீஸ் கைது செய்து வழக்குத் தொடர்ந்தால், தவறு செய்த இளைஞர்களின் எதிர்காலமே பாழாகி விடும் என்று மன்றாடப்பட்டது. அதையடுத்து,

1. மதத்தின் பெயரால் தாங்கள் இழைத்த கொடுமைக்காகப் பொதுமக்கள் முன்னிலையில் அனீஸ் பாத்திமாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். 

2. மத உரிமை என்ற பெயரில் இனி யாருடைய தனி உரிமையிலும் தலையிடமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். 

இவற்றையே கடிதமாகவும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை கலாட்டா செய்த இளைஞர்கள் ஏற்றுக்கொண்டனர். இதை பாத்திமா ஒப்புக் கொண்டார். அதையடுத்து பிரச்னை நடந்த ஊரின் பொது இடத்தில் மக்கள் முன்னால் ஐவரும் பாத்திமாவிடம் மன்னிப்புக் கேட்டார்கள். கடிதமும் தரப்பட்டது. 

பாத்திமா கடைசிவரை பிடிவாதமாக எதிர்த்துப் போராடக் காரணம், அவர் ஒரு இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வருபவர் என்பதால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய தெளிவுதான். பாத்திமாவின் சகோதரரும் இடதுசாரி அமைப்பில் இருப்பவர் என்பது இன்னொரு காரணம்.  சாதி, மத வெறியர்களின் முதல் கவலை தங்கள் சாதி, மதப் பெண்கள் வேறு சாதியில், மதத்தில் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதேயாகும். இந்தக் கவலை எல்லா சாதிகளிலும் மதங்களிலும் இருக்கும் வெறியற்ற மனிதர்கள் பலரிடமும் உண்டென்றாலும்கூட, இதற்காகத் தீவிர வழிகளைப் பின்பற்றுபவர்கள் வெறியர்களே ஆவர். பிற மத, சாதி ஆண்களைத் தங்கள் பெண்கள் சந்திக்கவும் பேசவும் பழகவும் விடாமல் தடுத்துவிட்டால் நல்லது என்பதே இவர்கள் கருதும் தீர்வு. இந்தப் பார்வையில்தான் இன்று ஒவ்வொரு சிறு நகரத்திலும் கிராமங்களிலும் சாதி வெறிக் குழுக்களும் மதவெறிக் குழுக்களும் தம் இனப் பெண்களைத் தொடர்ந்து கண்காணிப்பது, மிரட்டுவது, குடும்பத்தின் மூலம் அழுத்தம் தருவது என்றெல்லாம் செயல்களில் ஈடுபடுகின்றன. பெரு நகரத்தில் இது சாத்தியமில்லை.ஆணோ பெண்ணோ 18 வயதை எட்டிய பின்னர், அவர் யாருடன் பேசுகிறார், யாருடன் பழகுகிறார், யாருடன் வெளியே செல்கிறார் என்றெல்லாம் கட்டுப்படுத்தும் உரிமை அவரவர் குடும்பத்துக்கே கிடையாது. பாத்திமா அடைந்திருக்கும் வெற்றி அவர் வட்டாரத்தில் இருக்கும் இதர அவர் மதப் பெண்கள் எல்லாருக்கும் பயன்தரக்கூடிய வெற்றி. நாம் கவலைப்படவேண்டிய அம்சங்கள் இதில் இன்னும் சில உள்ளன. பாத்திமாவைப் போல ஒவ்வொரு பெண்ணும் பொது இடத்தில் தனக்கு அநீதி நடக்கும் போது அதை எதிர்த்து சண்டையிட்டால், அதை ஆதரிக்கும் பொதுப் புத்தி நம் சமூகத்தில் இன்னமும் இல்லை. அரசியல்ரீதியாக கவலைக்குரிய அம்சம், இதில் ஈடுபட்ட மதவெறி இளைஞர்கள் அரசியல், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதுதான். ஒரு கட்சியாக, அமைப்பாக இருக்கும் பல இயக்கங்கள் பொதுவெளியில், ஊடகங்களில் பல நியாயமான சமூக அக்கறையுள்ள விஷயங்களை முன்வைப்பதும் அவற்றின் தலைவர்கள் கண்ணியமாக அவற்றை பேசுவதும் ஒருபுறம் நடக்கும் அதேசமயத்தில், அதே அமைப்புகளின் கீழ்மட்டத்தில் நேர் எதிரான அராஜகப் போக்குகளும் கட்டப் பஞ்சாயத்துகளும், பாசிச, நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் சகஜமாகச் செயல்படுவதைப் பார்க்கிறோம். 

மிக அண்மையில் பி.ஜே.பி.யின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின் வீடியோவைப் பார்த்த போது அதில் அவர் பெரியாரை ‘அவன் இவன்’ என்றும் ‘அவரை அப்போதே செருப்பால் அடித்திருக்க வேண்டாமா?’ என்றும் ஆவேசமாகப் பேசியிருப்பதைக் கண்டபோது, மதவெறி என்பது இவர்கள் எல்லாரையும் தாற்காலிகமாக மட்டுமே கண்ணியமாக நடக்கச் செய்யும் சக்தி என்பது புரிகிறது.  வேறெப்போது இருந்ததையும்விட இப்போது தமிழ்நாட்டில் சாதி அமைப்புகள், மத அமைப்புகள் அரசியல் களத்தில் பலமாக இறங்கியிருப்பது மட்டுமல்ல, மிகவும் பிற்போக்கான பார்வையுடன் கீழ்மட்டத்தில் செயல்படவும் செய்கின்றன. அது எதுவும் ஊடகங்களின், பத்திரிகைகளின் கவனத்துக்கும், ஆய்வு அலசல்களுக்கும் வராமல், மேல்மட்ட தலைவர்களின் கண்ணியமான சண்டைகள் மட்டுமே செய்திகளாகின்றன.இந்தச் சூழ்நிலையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடியோர் ஒவ்வொரு சாதியிலும் மதத்திலும் இருக்கக் கூடிய பெண்கள்தான். ஏதாவது ஒரு சாக்கின் மூலம் அவர்களை வீட்டுக்குள்ளேயோ அல்லது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயோ முடக்கிவைக்கும் முயற்சிகளுக்கு சாதி, மத அரசியல் தளம் இன்று சார்பானதாக இருக்கிறது. இதில் ஒரு அனீஸ் பாத்திமாவின் சண்டைக்குரல் ஆறுதலாக ஒலித்திருக்கிறது. இந்த வருடப் பூச்செண்டு பாத்திமாவுக்கு. இன்னும் பல சண்டைக்காரிகள் வெளியே வரவேண்டும்.

அருள்வாக்கு - அகத்தின் அழகு!

 
அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறைத்து கொண்டே வர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்களை, அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்புதான் அழகு என்று ஆகிவிடுகிறது. கன்னங்கரேலென்று, பல்லும் பவிஜுமாக ஒரு தாயார்க்காரி இருந்தால்கூட, அவளுடைய குழந்தை அவளை விட்டு யாரிடமும் போகமாட்டேன் என்று பிடித்துக் கொள்கிறது. அசலார் யாராவது ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால் அவர்களிடம் பயந்து கொண்டு வந்து, குரூபமான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது தெரிந்து கொண்டிருக்கிறது!
 
அஷ்டாவக்ரர் எட்டுக் கோணலாக, மஹா குரூபமாக இருந்தார்; அவரை வித்வான்கள் தேடித் தேடிப் போய் தரிசனம் பண்ணினார்கள். இன்னும் எத்தனையோ மஹான்கள், ஞானிகள், ஸித்தபுருஷர்கள் ரூபத்தைப் பார்த்தால் விகாரமாக அசடு மாதிரி, பயப்படுகிற மாதிரியெல்லாம் இருக்கும். ஆனாலும் தர்சனம், தர்சனம் என்று அவர்களை ஜனங்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்; திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள்; வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் ஏன்? அவர்களுடைய அன்புள்ளம், அருளுடைமைதான் காரணம்.  

நாம் திரும்பித் திரும்பி விரும்பிப் பார்க்கும்படியாக இருப்பது தான் அழகு" என்ற Definitionபடி இவர்கள்தான் அழகு என்று சொல்ல வேண்டும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று, இவர்களுடைய உள்ளத்திலிருக்கிற அன்பு சரீரத்தின் அவலக்ஷணங்களையும் மீறி ஏதோ ஒரு அழகை அள்ளிப் பூசிவிடுகிறது என்று அர்த்தம்.
 
மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், ‘உயிருள்ள ரூபமாக இருக்கிற ஒன்றின் அழகு அது அன்பாக இருக்க இருக்க ஜாஸ்தியாகிறது; அன்பு ரொம்பவும் முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே எடுபட்டுப்போய் அன்புதான் அழகாகத் தெரிகிறது’ என்று ஆகிறது.
 
நமக்கு ஒன்றைப் பார்ப்பதில் ஆனந்தம் ஏற்படுவதால்தான் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஆனந்தத்தை அளிக்கவல்லதில் தலைசிறந்தது அன்புதான். அன்பு தருகிற ஆனந்தத்துக்கு ஸமமாக எதுவும் இல்லை. இதனால் ஆனந்தத்தைத் தரும் அன்பே அழகாகி விடுகிறது; திரும்பத் திரும்ப ஆசையோடு பார்க்கப் பண்ணுகிறது.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்