Search This Blog

Monday, December 29, 2014

ஜிஎஸ்டி... - யாருக்கு என்ன நன்மை ?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான மசோதா கடந்த டிசம்பர் 19-ம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசும் இந்த மசோதாவை வரும் மார்ச் 2016-க்குள் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த ஜிஎஸ்டி மசோதா எப்படிப்பட்டது, இந்த மசோதாவைக் கொண்டுவருவதில் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும், இதனால் தொழில் துறையினருக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன லாபம் கிடைக்கும், இந்தியாவின் ஜிடிபியில் இந்த மசோதா என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்த கேள்விகளுக் கான பதிலைப் பார்ப்போம்.
 
ஜிஎஸ்டி என்றால்..?
 
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு என்பது புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் சிக்கலானது. தற்போது ஒரு பொருளையோ அல்லது சேவையையோ தயாரித்து விற்கும்போது, அதற்கு கலால் வரி, சேவை வரி, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டு செல்ல நுழைவு வரி, மாநில அரசுக்கு கட்டவேண்டிய வாட் வரி என பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரே பொருளுக்கு பல இடங்களில் பலவகையான வரிகளைக் கட்டுவது சிரமம் தரும் விஷயமாகவே இருந்து வருகிறது. இப்படி பல இடங்களில் வரி கட்டுவதைவிட, இந்த அனைத்து வரிகளையும் ஒன்று சேர்த்து, சரக்கு மற்றும் சேவை வரி என்கிற பெயரில் ஒரே வரியாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்துவதுதான் ஜிஎஸ்டி.

 


 யாருக்கு என்ன நன்மை?
 
1. மத்திய/மாநில அரசு:

மத்திய அரசுக்கு உற்பத்தியாளரிடம் இருந்து மட்டும் வந்த வரி என்பது தற்போது உற்பத்தி யாளர் துவங்கி டீலர், மொத்த விற்பனையாளர், அந்தப் பொருளை கடையில் விற்கும் சிறு கடைக்காரர் வரை அனைவரிடமிருந்தும் வரி கிடைக்கும். இதனால் மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கும். ஒரு சில துறைகள் தவிர அனைத்துத் துறைகளுக்கும் இது பொருந்தும் என்பதால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு அதிக அளவில் இருக்கும்.

 

மாநில அரசுகளைப் பொறுத்தமட்டில், இதுவரை சரக்குகளுக்கான வரியை மட்டுமே வருமானமாக கொண்டிருந்தன. ஜிஎஸ்டி மூலம் சரக்கு மற்றும் சேவை இரண்டுக்குமே மாநில அரசுக்கு வரி மூலம் வருவாய் கிடைக்கும். இதில் சிலர், மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கின்றனர். அது தவறான கருத்து. தவிர, ஆல்கஹால் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு இன்னமும் மாநில அரசிடம் தான் உள்ளது. அதனால் மாநில அரசுக்கு எஸ்ஜிஎஸ்டி (மாநில சரக்கு மற்றும் சேவை வரி) மூலம் வருவாய் அதிகரிக்கும்.

2. தொழிற்துறை:

தொழில்துறையினர் நீண்ட காலமாகவே இதனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தொழில் துறையினரைப் பொறுத்தமட்டில், இந்த வரி விதிப்பு என்பது அவர்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடியதாகவே இருக்கும். நிறைய வரிகளுக்காக தனித்தனியே அதிக தொகையை வரியாகச் செலுத்த வேண்டிய சூழலில் இருந்து ஒரே வரியாகச் செலுத்தும் நிலை உருவாகியுள்ளதை நிச்சயம் வரவேற்பார்கள்.

இதனை ஒருங்கிணைப்பதில் குழப்பங்கள் இருந்தாலும், அதனை சரியாக ஒருங்கிணைத்து வரி விதிப்பை அறிமுகம் செய்யும்போது அவர்களது உற்பத்தித் துவங்கி அனைத்து நிலை களிலும் செலவுகள் குறையும். செலவுகள் குறையும்போது அந்தப் பணம் திரும்பவும் தொழிலில் முதலீடாக மாறுவதற்கு வாய்ப்பிருப் பதால், அவர்களது உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அப்போது உற்பத்தி அதிகரித்து பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்யும் சூழல் உருவாகும்.

3. பொதுமக்கள்:
 
இந்த வரி விதிப்பின் மூலம் நிறுவனங்களின் செலவு குறைவதால், அவர்கள் குறைந்த விலை யில்தான் பொருட்களை விற்பார்கள். அதற்கான வரியும் குறைவாகவே இருக்கும். எனவே, பொதுமக்களும் குறைந்த விலையில் அந்தப் பொருளை வாங்க முடியும். இதனால் பொருட்களை வாங்குபவரது எண்ணிக்கை அதிகமாகும்.

4.ஜிடிபி:

இந்த ஜிஎஸ்டி மூலம் பெரும்பாலானோரை வரி கட்டவைக்க முடியும். வரி ஏய்ப்பு செய்வது குறையும். வரி மூலம் வரும் வருவாய் கணிசமான அளவு உயரும். இதனை அறிமுகம் செய்தால், ஜிடிபியில் 2 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று கூறாவிட் டாலும் தற்போது உள்ளதைவிட நல்ல வளர்ச்சி இருக்கும் என்று கூறலாம்.

தற்போதுள்ள நிலவரப்படி, மத்திய, மாநில ஜிஎஸ்டி சேர்த்து 27 சதவிகிதமாக இதனை நிர்ணயிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை, மத்திய, மாநில ஜிஎஸ்டியை சேர்த்து 12 - 14 சதவிகிதம் வரி விதிப்பு என்பது சிறந்த விகிதமாக இருக்கும். தற்போதுள்ள மத்திய அரசின் 12%, மாநில அரசின் 14.5% ஆகிவற்றை சேர்த்து 27 சதவிகிதம் என்று வரி விதிக்காமல் மொத்த வருவாயைப் பொறுத்து 12-14 சதவிகிதமாக விதித்தாலே தற்போது உள்ளதைவிட அதிக வருவாயை அரசு ஈட்ட முடியும்.

ச.ஸ்ரீராம்


2014 பாப்புலர் கேட்ஜெட்கள்!


சில ஆண்டுகள் மொபைல் வர்த்தகத்தில் சத்தமில்லாமல் இருந்த மோட்டோரோலா நிறுவனம், 2014-ம் ஆண்டில் மோட்டோ இ, மோட்டோ ஜி ரக பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இதில் மோட்டோ ஜி பலத்த வரவேற்பைப் பெற, இதன் அடுத்த வெர்சனான ‘மோட்டோ ஜி 2nd ஜென்’ மக்களிடம் பிரபலமானது.

இதிலுள்ள கொரில்லா க்ளாஸ், பின்புறம் மற்றும் பின்புற கேமராவின் தரம் 1.2GHz குவால்காம் ஸ்நாப்டிராகன் 400’ என்ற மிகச் சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் பிராசஸர், ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் மற்றும் இதன் அடுத்த வெர்சன் ஆண்ட்ராய்டு எல், ‘Water Resistant Coating’ போன்றவை இதன் பிரபலத்துக்கு சாதகமான அம்சங்கள்.


பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றத்துடன் லெனோவோ தனது யோகா 2 டேப்லெட்டை வெளியிட்டது. மெட்டலால் செய்யப் பட்டிருந்தாலும், சிறிது பிளாஸ்ட்டிக்கும் இந்த டேப்லெட்டின் வடிவமைப்பில் பயன் படுத்தப்பட்டிருந்தது ஈர்ப்புக்கு சாதகமாகவே இருந்தது.

டேப்லேட்டை பல ஆங்கிள்களில் பயன்படுத்த உபயோகமாக கிக் ஸ்டாண்ட் வடிவமைப்பு, ஒரேநேரத்தில் பத்து விரல்களை சென்ஸ் செய்யும் 10 இன்ச் IPS டிஸ்ப்ளே, வேகமாக இயங்கும் குவாட்-கோர் பிராசஸர், கேமராவின் தரம், 9600 mAh திறன்கொண்ட லித்தியம்-ஐயான் பேட்டரி, f2.2 ‘wide aperture’ லென்ஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் மக்களை வாங்கத் தூண்டின.



புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்களின் நண்பனாக வந்திருக்கிறது கிண்டில். மற்ற நிறுவனங்களின் இ-புக் ரீடரைவிட வாடிக்கை யாளர்களின் முதல் சாய்ஸாக அமைந்தது அமேஸானின் புதிய ‘கிண்டில்’ இ-புக் ரீடர். இது பழைய கிண்டில் இ-புக் ரீடரைக் காட்டிலும், பல புதிய தொழில்நுட்ப மாற்றங் களோடு வெளிவந்துள்ளது. கிண்டில் இ-புக் ரீடரின் சிறப்பம்சம், அதன் ‘Ink Diplay’ தொழில் நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் வாடிக்கையாளர் களுக்கு புத்தகத்தில் படிக்கக்கூடிய அதே உணர்வைத் தரும். தொடுதிரை வசதியோடு வெளிவந்த புதிய ‘கிண்டில்’, முழு சூரிய ஒளியிலும் பயன்படுத்தக் கூடிய ‘Glare-Free’ திறன்கொண்டது. இதில் சொல்லின் பொருளை அறிய இன்-பில்டாக அமைந்துள்ள அகராதி மற்றும் விக்கிபீடியா இருப்பது சிறப்பு.


 
2014-ம் ஆண்டின் சிறந்த லேப்டாப்  எனில், ‘ஆப்பிள் மேக்புக் ஏர்’-ஐ சொல்லலாம். பார்ப்பதற்கு எளிமையாகவும் கவர்ச்சிகர மாகவும் இருக்கும் இந்த லேப்டாப், மற்ற லேப்டாப்களைவிட வேகம், பேட்டரி மற்றும் எடையில் வாடிக்கையாளர்களுக்கு பெஸ்ட் சாய்ஸாக உள்ளது. 2014-ம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட இந்த லேப்டாப், இன்டெல் 4th ஜென் பிராசஸரைக் கொண்டுள்ளது.

11 இன்ச் மட்டும் 13 இன்ச் ஆகிய இரு மாடல் களில் கிடைக்கும் இந்த லேப்டாப், 1.4GHz dual-core Intel Core i5 பிராசஸரைக் கொண்டு செயல்படுகிறது. 4 GB ரேம், 720p FaceTime HD கேமரா மற்றும் dual மைக்ரோபோன்ஸ் இந்த லேப்டாப்பின் சிறப்பம்சம். 11 இன்ச் மாடல் 9 மணி நேரம் வரை தாங்கும்.



2014-ம் ஆண்டில் சோனி நிறுவனம் தனது ‘Cybershot RX100 III’ கேமராவை வெளியிட்டது. Wide angle ‘Zeiss Vario-Sonnar’ 24-70mm F1.8-2.8 லென்ஸ்களைக் கொண்டுள்ள இந்த பாயின்ட் அண்ட் ஷூட் கேமரா 20.1 MP சென்சாரைக் கொண்டுள்ளது.

சிறப்பான படங்களை எடுக்கக்கூடிய திறன், வேகமான லென்ஸ் ஆகிய சிறப்பம்சங் களைக் கொண்டுள்ள இந்த கேமரா, கிட்டத்தட்ட DSLR கேமரா தன்மையைத் தொட்டுவிடுகிறது. பார்ப்பதற்கு ஸ்லிம்மாகவும் சிறிதாகவும் இருக்கும் இந்த கேமரா கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. வெயிலிலும் தெளிவாகத் தெரியும் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருப்பது இதன் சாதகமான விஷயம்.


 
2014-ம் ஆண்டுதான் ஸ்மார்ட் வாட்சுகள் பிரபலமாகின. ஆப்பிள், சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட் வாட்சுகளை வெளியிட்டாலும் மோட்டோரோலா நிறுவனத்தின் ‘மோட்டோ 360’ ஸ்மார்ட் வாட்ச், விலை மற்றும் டிசைன் அடிப்படையில் பெஸ்ட் சாய்ஸாக அமைந்தது. டிசைன், லெதர் ஸ்ட்ராப் ஆகியவை ‘கிளாஸிக்’ லுக்கை தருகிறது. இந்த லெதர் ஸ்ட்ராப்பை மெட்டல் ஸ்ட்ராப்பாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். வாட்சின் டயல் OLED தொடுதிரை, வாய்ஸ் மெசேஜுக்காக பயன்படுத்தும் மைக் ஆகியவை இதற்கு சுவாரஸ்யத்தை வழங்கின. லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என அனைத்தோடும் மோட்டோ 360யை இணைத்துக்கொள்ளலாம்.


2014-ல் ‘போஸ் சவுண்ட்லிங் கலர்’ என்கிற ப்ளூடூத் ஸ்பீக்கர்தான் மக்களின் முதல் சாய்ஸாக இருந்தது. இதன் விலையும் தரமும்தான் இதற்கு முக்கியக் காரணம். இந்த ஸ்பீக்கர் 0.57 கிலோ எடையைக் கொண்டது. மேலும், சிறிதாக இருப்பதனால் இதையும் எதிலும் எளிதாக வைத்துக்கொள்ளலாம்.

எங்கும் எந்த சிரமமும் இல்லாமல் எடுத்துச் செல்லாம். பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்பீக்கர் எட்டு மணி நேரம் வரை தாங்கும் பேட்டரியைக் கொண்டு இயங்கு கிறது. இந்த ஸ்பீக்கர் தெளிவான மற்றும் சக்தி வாய்ந்த ஒலியை வழங்கும் தன்மையை உடையது.


சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத போது தகவல்களைப் பரிமாறிக்கொள்ள  உதவும் கேட்ஜெட்டாக வந்திருக்கிறது  ‘கோடென்னா’ (goTenna). சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கருவி எந்த செல்போன் நெட்வொர்க்கின் உதவியும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்ப வல்லது. இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்னலைப் பயன் படுத்தாமல், தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறலாம். இதிலுள்ள ஃப்ளாஷ் மெமரி பல்லாயிரக்கணக்கான மெசேஜை சேமிக்க வல்லது. லித்தியம்-ஐயான் பேட்டரி, தண்ணீர் மற்றும் தூசிகள் உள்ளே புகமுடியாத தொழில் நுட்பம், நீண்ட தூரத்திலும் பயன்படுத்தும் வகையிலான அலைவரிசை இதன் சிறப்புகள்.

செ.கிஸோர் பிரசாத் கிரண்.

Saturday, December 27, 2014

ஐ.ஆர்.டி.சி. இணையதளம்


இந்தியாவில் இணையதளத்தில் ஆன்லயனில் ஆர்டர் செய்துப் பொருட்களை வாங்கும் பாணி மெல்ல அதிகரித்து, நேரடி விற்பனையாளர்களை அச்சப்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை இதை அதிகம் விரும்புவதற்குக் காரணம் விலை, மற்றும் வீடுதேடி வந்து அவர்களுக்காகக் காத்திருக்கிறது என்பதுதான், கடந்த சில மாதங்களில், பிலிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள் ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் விற்பனை இலக்கை கோடிகளில் நிர்ணயத்து வெற்றிகரமாக அதை அடைந்தார்கள். 

இந்த ஆண்லைன் விற்பனையை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இந்திய ரெயில்வே என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.2002ம் ஆண்டில் ஐ.ஆர்.டி.சி. இணையதளம் தொடங்கப்பட்டபோது நாள் ஒன்றுக்கு விற்பனையான டிக்கெட்டுகள் 27 மட்டுமே! ஐ. ஆர்.டி.சி. என்பது ரெயில்வே நிர்வாகத்தின் கேட்டரிங், மற்றும் சுற்றுலா பிரிவு. பயணத்தில் பாதுகாப்பான உணவு விற்பதுதான் இவர்களின் முக்கிய பணி. ஆன்லைன் டிக்கெட் விற்பனையை செய்ய ஒரு தனி நிறுவனம் அவசியமானபோது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட இதையே பயன்படுத்தத் தொடங்கினார்கள். இப்போதும் தொடர்கிறார்கள். இப்போது டிக்கெட் விற்பனைதான் முக்கிய பிஸினஸ். கடந்த ஆண்டு (20012-13) விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்கள் 12,419 கோடிகள். இந்த ஆண்டு 2013-14 விற்பனை 15,410 கோடிகள். வளர்ச்சி வீதம் 24%. இந்தியாவின் அனைத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் மொத்த விற்பனையை விட இது மிக அதிகம். ஆசிய-பசிபிக் மண்டலத்திலேயே மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக (இ-காமர்ஸ்) இணையதளம் இப்போது ஐ.ஆர்.சி.டி.சி.தான்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய அதிவேக சர்வர்கள் மூலம் தளத்தை நிர்வகிக்கிறார்கள். வேகம் அதிகரித்து இணைய பக்கங்கள் ஜிவ்வென்று பறக்கிறது. விழாக்காலங்களில் விற்பனை தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிவடைகிறது. நேரடி புக்கிங் கவுண்ட்டர்கள் காத்தாடுகின்றன. 

ஐ.ஆர்.டி.சி.யில் ஆன்லைனில் டிக்கெட் வாங்க நீங்கள் விபரங்களை முன் பதிவு செய்துகொண்டு பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி உபயோகிக்க வேண்டும். இப்படி இவர்களிடம் பதிவு செய்திருப் பவர்கள் 2.1 கோடி பேர். ஒரே நிறுவனத்தில் இப்படி பதிவு செய்துக் கொண்டிருப் பவர்கள் ஆசியாவில் வேறு எங்குமில்லை. இதைக் கவனித்த அமோசன், பிளிப்கார்ட் போன்ற புத்திசாலி நிறுவனங்கள் ஐ.ஆர்.டி.சி. மூலமே உறுப்பினர்களுக்கு பொருள்களை விசேஷ சலுகை விலையில் விற்பது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முடிவானால் ஐ.ஆர்.டி.சி. உறுப்பினர்களுக்கு ‘59% தள்ளுபடியில் டிராவல் பேக், ஒரு வாட்டர்பாட்டில் இலவசம்’ என்ற விளம்பரங்கள் வரலாம். 

ரமணன்

ஆசைகளை விட்டுவிடு

 
 
நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டு விட்டால், அத்தனைக் கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக் கொண்டு நம்மைக் கட்டிப் போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.

Monday, December 22, 2014

மேக் இன் இந்தியா... மேக் ஃபார் இந்தியா...

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் மத்தியில் அமைந்தவுடன், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானதாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவுவதாகவும் கருதப்பட்ட திட்டம்தான் ‘மேக் இன் இந்தியா’.

இந்தியாவில் முக்கியமான 25 துறைகள் கண்டறியப்பட்டு, அதில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம்; இந்தியாவில் அவர்களது தொழிற்சாலையை அமைத்து உற்பத்தி செய்யலாம் என கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்துப் பேசிய பிரதமர் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பெருமையுடன் அறிவித்தார். மேக் இன் இந்தியா மூலம், வருகிற 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் சொன்னதால், இந்தியாவின் தலையெழுத்தையே இந்தத் திட்டம் மாற்றிவிடும் என எல்லோரும் நினைத்தார்கள். 

மோடியின் மேக் இன் இந்தியா கருத்துக்கு பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், அந்தத் திட்டத்துக்கு கடுமையான விமர்சனம் கிளம்பி இருக்கிறது. இந்த விமர்சனத்தை எதிர்கட்சியைச் சேர்ந்த யாராவது செய்திருந்தால், அது கவனம் பெறாமலேயே போயிருக்கும். ஆனால், மேக் இன் இந்தியாவைப் பற்றி விமர்சித்தவர் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன். ‘மேக் இன் இந்தியா’ என்கிற கருத்தைப் புறந்தள்ளிவிட்டு, ‘மேக் ஃபார் இந்தியா’ என்கிற புதிய கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார். இதனால் இப்போது ‘மேக் இன் இந்தியா’வா, இல்லை, ‘மேக் ஃபார் இந்தியா’வா என்கிற மோதல் எழுந்துள்ளது. சிலர் ‘மேக் இன் இந்தியா’தான் சரி என்றும், இன்னும் சிலர் ‘மேக் ஃபார் இந்தியா’தான் சரி என்றும் கருத்து சொல்லிவரும் இந்த நிலையில், இந்த இரண்டு விஷயங்களிலும் உள்ள சிறப்பான அம்சங்களைப் பார்த்துவிடுவோம்.

மேக் இன் இந்தியா!

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 25 துறை களில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்து, இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கவைப்பதுதான் திட்டத்தின் முக்கியமான நோக்கம்.  இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வது இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்கு. உலகின் 7-வது மிகப் பெரிய ஆட்டோமொபைல் துறையைக் கொண்டிருக்கும் இந்தியாவை, நான்காவது இடத்தைப் பிடிக்க வைப்பது; 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்டுக்கு 6 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்வது; இந்தியாவில் கட்டுமானத் துறையின் பங்களிப்பை ஜிடிபியில் 10 சதவிகிதமாக அதிகரிக்கச் செய்வது; 2017-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் கி.மீ  தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது; ரயில்வே துறையில் புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்வது; ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது போன்ற பிரமாண்ட திட்டங்களை முன்வைத்துதான் இந்த மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது.

மேக் இன் இந்தியாவில் என்ன பிரச்னை?

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க வருவதும் முதலீடு செய்வதும் நல்ல விஷயம் என்றாலும், அந்த நிறுவனங்கள் இங்கு பதிவு செய்வதில் தொடங்கி,  மின்சாரம், உள்கட்டமைப்பு, பணியாளர் திறன் என பல விஷயங்கள் தேவைக்கு ஏற்ற அளவு இல்லை. இந்தச் சிக்கல்கள் எல்லாம் இருப்பதை நன்கு உணர்ந்த வெளிநாடுகள், இங்கு வந்து புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குமா என்பது சந்தேகமே. தவிர, இந்தத் திட்டம் ஏற்றுமதிக் கொள்கையைத் தீவிரமாக வலியுறுத்துவதாக உள்ளது. ஏற்றுமதியை மட்டுமே வலியுறுத்தும் ஒரு கொள்கையை நூறு சதவிகிதம் நாம் பின்பற்றினால் எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

இதுமாதிரியான பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாகத்தான் ‘மேக் ஃபார் இந்தியா’ என்கிற கருத்தை ரகுராம் ராஜன் சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள் சிலர். 

 

மேக் ஃபார் இந்தியா! 

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது. காரணம், உலக அளவில் சீனா இதை ஏற்கெனவே செய்து முடித்துவிட்டது. உலகப் பொருளாதாரம் இப்போதுள்ள நிலையில் சீனாவை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இருக்கும்போது, இன்னொரு நாடு அதேமாதிரி உருவாவதை ஏற்றுக் கொள்ளாது. தவிர, ஏற்றுமதிப் பொருளாதாரத் தினால் கரன்சி மதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.

இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டுமெனில், ஏற்றுமதியை மட்டும் நம்பாமல்,  உள்நாட்டுக்குத் தேவையான பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். நம் நாட்டிலேயே எல்லா மக்களுக்கும் எல்லா விதமான வசதிகளும் இன்னும் கிடைத்துவிடவில்லை. எனவே, முதலில் நம் நாட்டு மக்களுக்காக உற்பத்தியைப் பெருக்குவோம்; பிற்பாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம் என்பது ரகுராம் ராஜன் வைத்திருக்கும் வாதம்.

 ச.ஸ்ரீராம்




தவிர்க்க வேண்டிய வீண் செலவுகள்!

1. சம்பளம் வாங்கியவுடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு  காஸ்ட்லி ரெஸ்டாரன்ட்டுக்குப் போய்ச் சாப்பிடுவது, ஷாப்பிங் செய்வது என இன்றைய இளைஞர்களில் பலர் எக்கச்சக்கமாக செலவு செய்கிறார்கள். ஜாலி என்கிற பெயரிலும் ரிலாக்ஸ் என்கிற எண்ணத்திலும் இவர்கள் செய்கிற இந்தச் செலவுகள் எந்த அளவுக்கு அவசியமானது என நினைத்துப் பார்ப்பதே இல்லை. முடிந்தவரை இதைத் தவிர்க்கலாம்.

2. இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் ஆஃபர்களைப் பார்த்துவிட்டு தேவை யில்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள் சிலர். 40% தள்ளுபடி விலை என்பதால் ஒன்றுக்கு இரண்டு செல்போன்களை வாங்கி வைத்திருந்து என்ன பயன் என யாரும் யோசிப்பதில்லை. உங்கள் செல்போனில் ஆஃபர்ஸ் பற்றி தகவல் தரும் எந்த ஆப்ஸுக்கும் நோட்டிஃபிகேஷன் அமைப்பை ஆன் செய்து வைக்காதீர்கள். காரணம், தினமும் வரும் டாப்-அப் செய்திகள் உங்களை அந்தப் பொருளை ஏதாவது ஒருநேரத்தில் வாங்கத் தூண்டும்.  அதேபோல, கூடுதலாக செலவு செய்யத் தூண்டும் கேஷ் பேக் ஆஃபர்களையும் தவிர்க்கலாம். 

3. இன்றைய இளைஞர்கள் டூவீலரை அடிக்கடி மார்டனாக மாற்ற அதிகம் செலவு செய்கிறார்கள். ரிம்களை மாற்றுவது, ஹாரன்களை மாற்றுவது, ரேஸ் பைக்குகளைப்போல வண்டியின் அமைப்புகளை மாற்றுவது, பெயின்டிங் செய்வது என நிறைய  செலவு செய்வதைத் தவிர்த்தால், நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியுமே!

4. எந்த சினிமா படம் வெளியானாலும், அதை முதல் நாளன்றே பார்த்துவிடுவது என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். இதற்காக இவர்கள் அதிகக் கட்டணம் கொடுக்கக்கூட தயங்குவதில்லை. இப்படி அவர்கள் சினிமாவுக்குப் போவதுடன், நண்பர்களையும் பெருமையோடு அழைத்துச் செல்கிறார்கள். இதனால் சம்பளத்தின் கணிசமான பகுதி கணக்கில் வராமலே காலியாகிவிடுகிறது. இந்தச் செலவைத் தவிர்த்து, சேமித்தால் பெரும் பணம் சேருமே!

5. எல்சிடி டிவி இருந்தாலும், புதிதாக வந்த எல்இடி டிவியை வாங்குவது, ஒரு டன் ஏசி ஏற்கெனவே வீட்டில் இருக்க, இரண்டு டன் ஏசியை வாங்குவது, நல்ல ஆண்ட்ராய்டு போன் இருந்தாலும், புதிதாக வந்த போனை தேவையேயில்லாமல் வாங்குவது என நல்ல கண்டிஷனில் இருக்கும் பொருட்களையே தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக வாங்குவதைத் தவிர்க்கலாம். அந்தப் பணத்தை நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.

6. எடுத்ததற்கெல்லாம் ட்ரீட் கொடுப்பது இன்றைக்கு கலாசாரமாகிவிட்டது. மாத பரீட்சையில் பாஸாவது தொடங்கி, புராஜெக்ட் முடிப்பது வரை எல்லாவற்றுக்கும் ட்ரீட் கேட்பதும், தருவதும் வாடிக்கையான விஷயமாகி விட்டது. இதற்காக ஒருவர் ஒரு மாதத்துக்கு 1,000 - 2,000 ரூபாய் வரை செலவு செய்கிறார். இந்தச் செலவைத் தவிர்க்கலாம்.

7. வீட்டில் நடைபெறும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற பார்ட்டிகளில் தங்களின் பொருளாதாரச் சூழலுக்கு மீறி பந்தாவுக்காக, அடுத்தவர்கள் வியக்க வேண்டும் என செலவு செய்வதை முடிந்தவரைத் தவிர்க்கலாம்.

8. ஃபேஷன் மோகம் சிலருக்கு அதிகமாக இருக்கும். கடன் வாங்கியாவது கண்ணில் படும் புது ரக ஆடைகளை வாங்கிக் குவிப்பதையும், தேவைக்கும், தகுதிக்கும் அதிகமாக அழகு சாதனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதையும் கொஞ்சம் குறைக்கலாம்.
 
9. ஐந்து நிமிடத்தில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை அரைமணி நேரம் பேசுவதையும், தேவையே இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்புவதையும் தவிர்த்தால் செல்போன் கட்டணம் பாதியாகக் குறையும்.

10. சைக்கிளில் போகக்கூடிய தூரமே இருக்கும் காய்கறிக் கடைக்கு பைக்கில் போவதையும், பஸ்ஸில் போவதற்கான சூழல் இருந்தும் ஆட்டோ, கால்டாக்ஸி யில் போவதையும் தவிர்க்கலாம்.

கெளதமன்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P666


Sunday, December 21, 2014

அருள்வாக்கு - இந்திரியங்களை அடைக்கும் வழி


மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத் தான் செய்யும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை.

சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாக்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லா இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.

Thursday, December 18, 2014

தக்காளி

தக்காளியை காய்கறி லிஸ்ட்டில் வைத்திருக்கிறோம்... ஆனால் அது பழ வகையைச் சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவு.

உள்ளே... 

  மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் கொலஸ்ட்ரால். தக்காளியில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஆன்்டிஆக்சிடன்ட்கள் 'கொலஸ்ட்ரால்’ உருவாவதைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 

  100 கிராம் தக்காளியில் 18 கலோரிகளே உள்ளன. அதே சமயம் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

  ஒரு கப் தக்காளி சாப்பிட்டால், அன்றைய தினத்துக்குத் தேவையான நார்ச்சத்தில் 7 சதவிகிதம் கிடைத்து விடும். இதில்  வைட்டமின்கள் ஏ, சி, கே, தயாமின், நியாசின், வைட்டமின் பி6, சோடியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் என ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் நிறைவாக உள்ளன.

  சருமத்தில் ஏற்படும் கருவளையங்கள், சுருக்கங்களுக்குக் காரணமான    'ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ பாதிப்பில் இருந்து பாதுகாத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.

  தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் இணைந்து, ஆரோக்கியமான எலும்பு கட்டுமானத்துக்கு உதவுகிறது. தக்காளியில் உள்ள 'லைக்கோபின்’  (Lycopene) என்ற ரசாயனம் எலும்பு அடர்த்தியாக இருக்க உதவுகிறது.

வெளியே... 

  தக்காளிச்சாறு அல்லது துண்டுகளை சருமத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும். தக்காளியில் உள்ள வைட்டமின் சி, சருமத்தைப் பொலிவாக்குகிறது.

  2 டீஸ்பூன் தக்காளிச்சாறு,4 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு இவற்றைக் கலந்து முகத்தில் பூசினால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

  தக்காளியில் உள்ள 'லைக்கோபின்’ ரசாயனம் இயற்கை சன்ஸ்கிரீனாக செயல்பட்டு, சூரியக் கதிரிலிருந்து சருமம் பாதிப்படைவதைத் தடுக்கிறது.

  தேனுடன் தக்காளிச்சாறு கலந்து முகத்தில் பூசி ,15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.

  ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து, ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் வட்டமாக மசாஜ் செய்தால், இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென மாறும்.

சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்... வழிபாடுகள்!

திருக்கணிதப்படி ஜய வருடம், ஐப்பசி மாதம் சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி, ஜய வருடம், மார்கழி -1, செவ்வாய்க்கிழமை அன்று (16.12.14) மதியம் 2:16 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

ஜாதக பலன்களைக் காண்பதற்கு லக்னத்தை முதன்மையாகச் சொல்வது போன்று, கோசார பலன் காண்பதற்கு ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியை முதன்மையாகக் கொண்டு பலன் சொல்ல வேண்டும். சனி ராசிக்கு 12, 1, 2 வரும் காலங்களை ஏழரை சனி என்றும், ராசிக்கு 4-ம் இடத்துக்கு வரும் போது அர்த்தாஷ்டம சனி என்றும், 7-ம் இடத்துக்கு சனி வரும்போது கண்டச் சனி என்றும், 8-ல் வரும்போது அஷ்டமச் சனி என்றும் கூறுகிறோம்.

5, 9, 10 இடத்தில் சனி வரும் காலத்தை, சனி பகவான் மத்திம பலன் தரும் காலமாகச் சொல்லலாம். அவர் 3, 6, 11-ம் இடத்துக்கு வரும் காலத்தில் யோக பலன்கள் கூடிவரும்.


இந்த அடிப்படையில், தற்போதைய சனிப்பெயர்ச்சியில்... மிதுன ராசிக்கு 6-ம் இடத்துக்கும், கன்னி ராசிக்கு 3-ம் இடத்துக்கும், மகர ராசிக்கு 11-ம் இடத்துக்கும் பெயரும் சனிபகவான் சிறந்த யோக பலன்களை வாரி வழங்குவார். கடக ராசிக்கு 5-ம் இடத்து சனியாகவும், கும்பத்துக்கு 10-ம் இடத்து சனியாகவும், மீன ராசிக்கு 9-ம் இடத்து சனியாகவும் வருகிறார். அதனால் கடந்த காலத்தைவிட, இப்போது சுப பலன்கள் கூடும்; மத்திம பலன் எனலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு கண்ட சனியாகவும், சிம்ம ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும், துலா ராசிக்காரர்களுக்கு பாதச் சனியாகவும், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜென்மச் சனியாகவும், தனுசு ராசிகாரர்களுக்கு விரயச் சனியாகவும் (ஏழரைச் சனி ஆரம்பம்) வருகிறார். இந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது சிறப்பு. அதற்காக பயமோ, பதற்றமோ தேவையில்லை. சனி பகவானை உரிய முறையில் வழிபட்டு, சங்கடம் நீங்கப் பெறலாம்.


சில பரிகாரங்கள்... வழிபாடுகள்...

சனிக்கிழமை விரதம் இருந்து, எள் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, சனிபகவானுக்கு உகந்த எள் எண்ணெய் விளக்கிட்டு, எள் சாதம் படைத்து, சனி கவசம் ஓதி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

வெள்ளிக்கிழமை இரவு, எள் தானியத்தை கரும்பட்டுத் துணி அல்லது கருமை நிற காகிதத்தில் வைத்து மடித்து தலையணைக்குக் கீழ் வைத்து படுத்துறங்கவும். மறுநாள் காலையில் எள் எண்ணெய் தேய்த்துக் குளித்து,  முதல்நாள் மடித்து வைத்த எள்ளை வடித்த சாதத்தோடு கலந்து நைவேத்தியம் செய்து காக்கைக்கு வழங்க நன்மை ஏற்படும். இயன்றபோது குச்சனூர், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு முதலான தலங்களுக்கும் சென்று சனிபகவானை வழிபட்டு வரலாம்.

வெள்ளிக்கிழமைதோறும் அதிகாலை நீராடி அருகம்புல் மாலை சாற்றி, அரசமர பிள்ளையாரை சுற்றி வந்து முறையாக வழிபட்டால் சீரும் சிறப்பும் நாடி வரும்.

இயன்றபோதெல்லாம் அனுமனுக்கு வடைமாலை சாத்தி, துளசி மாலை அணிவித்து, வெண்ணெய் அர்ப்பணித்து வழிபட்டு வந்தால், பாதிப்புகள் நீங்கும். அதேபோன்று நளபுராணம் படிப்பதாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராம நாமத்தை உச்சரிப்பதாலும் பாதிப்புகள் நீங்கி பயன் அடையலாம்.

நேர்மை, நீதி, வாக்கு தூய்மையை விரும்பக்கூடியவர் சனி பகவான். பாதகமான காலங்களில் சோதனைகளைத் தாங்கி நேர்மையாக உண்மையாக நடந்துகொண்டால் எந்தத் தீங்கும் ஏற்படாது.

ஜூராசிக் பார்க்.

1993-ல், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் வந்த ஹாலிவுட் படம், ஜூராசிக் பார்க். உயிரியல் பாடத்தில் மட்டுமே கேள்விப்பட்ட டைனோசரை, திரையில் கண் முன் நிறுத்திய படம். பாப்பா முதல் பாட்டி வரை பார்த்து பிரமித்த படம்.


ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் என்றாலே, அதில் குட்டிப் பசங்க இருப்பாங்க. படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் இவங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஜூராசிக் பார்க் படத்திலும் ஒரு குட்டிப் பையனும் பொண்ணும் வருவாங்க. டைனோசர்களிடம் அவங்க மாட்டிக்கிறதும் தப்பிக்கிறதும் திக்திக் நிமிடங்கள்.

ஜூராசிக் பார்க் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்களும் வந்து சக்கைப்போடு போட்டுச்சு. தவிர, டைனோசரை மையமாகவெச்சு, நிறையப் பேர் நிறையப் படங்களை எடுத்தாங்க.

'இப்போ அதுக்கு என்ன? 

ஜூராசிக் பார்க் படத்தின் நான்காம் பாகம், நவீன தொழில்நுட்பத்தோடு, ஜூராசிக் வேர்ல்டு (Jurassic World) என்கிற பெயரில் 2015 ஜூனில் வெளிவரப்போகுது. சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர், சில நாட்களிலேயே 4 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கு. டிரெய்லரே செம மிரட்டல்.

இந்த ஜூராசிக் வேர்ல்டு கதைதான் என்ன?


ஒரு தீவில், 22 வருடங்களுக்கு முன் டைனோசர்களை உருவாக்கி, ஜூராசிக் கண்காட்சியை ஆரம்பிச்சாங்க.  டைனோசர்களால் அழிக்கப்பட்ட அந்தக் கண்காட்சியை, இப்போ  சரிசெய்றாங்க. ஜெனட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னும் பெரிய பெரிய டைனோசர் மற்றும் ஆதிகால முதலைகளை உருவாக்கி, பொதுமக்கள் பார்வைக்ககாகத் திறக்கிறாங்க. அதைப் பார்க்க ஒரு குட்டிப் பையனுக்கு டிக்கெட் கிடைக்குது. அங்கே போனவன் ஒரு பகுதியில் மாட்டிக்கிறான். அப்புறம் என்ன ஆகுது என்பதுதான் மீதிக் கதை.

இந்தக் கதையை, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 13 வருஷங்களாக ரெடி பண்ணினாராம். ஆனால், இந்தப் படத்தில் இவரது பங்கு, நிர்வாகத் தயாரிப்பு  மட்டுமே. படத்தை இயக்கியவர், கோலின் ட்ரிவோரோ (Colin Trevorrow).குட்டிப் பையன் கேரக்டரில் நடிப்பது, டை சிம்ப்கின்ஸ் (Ty Simpkins). இதற்கு முன்பு வந்த பாகங்களில் குட்டிப் பசங்களைச் சுற்றி கதை நகர்ந்த மாதிரி, இந்தப் படத்திலும் டை சிம்ப்கின்ஸ் கேரக்டரைச் சுற்றிதான் கதை இருக்கும். ஸோ, இந்தப் படமும் சுட்டிகளை அசரவைக்கும்.

இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்க்க https://www.youtube.com/watch?v=RFinNxS5KN4 என்ற தளத்துக்கு வாங்க. மிரட்டக் காத்திருக்கு ஜூராசிக் வேர்ல்டு!

ஷாலினி 


Wednesday, December 17, 2014

மானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்!

 
நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்று பரவிக்கிடக்கும் தகவல்தான் காரணம்.
 
சிலிண்டருக்கான மானியம் தொடர்பாக அதிரடி வேலைகளில் மத்திய அரசு இறங்கியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதில் என்ன நடக்கிறது என்பது சரிவர தெளிவுபடுத்தப்படாததால்... மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மானிய சிலிண்டரை தொடர்ந்து பெறுவதற்கு என்ன வழி, இதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும்?
 
சமையல் எரிவாயுக்காக தற்போது வழங்கப்படும் சிலிண்டர்கள், மத்திய அரசின் மானியத்தின் காரணமாகவே 400 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால், 800 ரூபாய்க்கு மேல் தரவேண்டியிருக்கும். இப்படி மானிய விலையில் தரப்படும் சிலிண்டர்கள், தவறாகவும் பெறப்படுகின்றன, இதனால் அரசுக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்பதால், எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தப் போகிறது. இந்தத் திட்டம், கடந்த நவம்பர் 15 முதல் இந்தியாவில் 54 மாவட்டங்களில் அமலில் இருக்கிறது. அடுத்தகட்டமாக, இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது.
 
ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் தரப்படும். உங்களுக்கான சிலிண்டரை விநியோகஸ்தரிடம் முழுவிலை கொடுத்து நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த விலை, மாறுதலுக்கு உட்பட்டது. அப்படி நீங்கள் விநியோகஸ்தரிடம் சிலிண்டருக்காகக் செலுத்திய தொகைக்கும், மானிய விலைக்குமான வித்தியாசம் சலுகைப் பணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உங்களது வங்கிக் கணக்கில் அரசு சேர்த்துவிடும். அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு என இரண்டு வழிகள் மூலமாக இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். எந்த முறையில் இணைவது என்றாலும், வங்கிக் கணக்கு முக்கியம்.

ஆதார் எண் வைத்திருப்போர்!

ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதற்காக, விண்ணப்பத்தை (படிவம்-1) பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகலுடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து, உங்களுடைய சமையல் எரிவாயு ஏஜென்சியுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை (படிவம்-2) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் ஆதார் அட்டை நகல் மற்றும் இதற்குமுன் வாங்கிய கேஸ் பில்லின் நகல் அல்லது கேஸ் புக்கின் முதல்பக்க நகலை ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல, வாடிக்கையாளர் உதவி மைய தொலைபேசி எண் வாயிலாக 1800- 2333- 555 பதிவு செய்யலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற தொலைபேசி எண் மூலம் இணையலாம். இது வழக்கமான சிலிண்டர் பதிவுக்கான தொலைபேசி எண்தான். இதில் எண் 2-ஐ அழுத்தினால் உங்களின் ஆதார் அட்டை எண் கேட்கப்படும். அதை அழுத்தினால், இந்தத் திட்டத்தில் உங்களது கணக்கு சேர்ந்துவிடும்.

இணையத்தின் மூலமாகவும் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். இதற்கு,  https://rasf.uidai.gov.in/ என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். தபால் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவும் இணையலாம்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள்!

ஆதார் அட்டை இல்லாதவர்கள், தங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் பெயர், கிளை, முகவரி உள்ளிட்ட விவரங்களைக் குறிக்கும் ‘IFSC' கோட்  எண்ணை  உங்கள் விநியோகஸ்தரிடம் கொடுத்து, அவர்களிடம் விண்ணப்பம் 4 பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உங்களது கணக்கை இந்தத் திட்டத்தில் சேர்த்துவிடுவார்கள். அல்லது விநியோகஸ்தர்களிடம் விண்ணப்பம் 3 பெற்று, பூர்த்தி செய்து, வங்கியில் சமர்ப்பிக்கலாம். அதன் பின் மானியத்தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேரும்.

பெயர் மாற்றம் அவசியம்!

சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, வங்கிக் கணக்கும் அவர் பெயரில் இருக்க வேண்டியது கட்டாயம். எனவே, குடும்பத் தலைவரின் மரணம் மற்றும் சில காரணங்களால் வேறு பெயர்களில் இணைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள், அவற்றை உங்களின் பெயருக்கு மாற்ற வேண்டிய தருணம் இது. இதற்கு விநியோகஸ்தர் கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

காலக்கெடுவும் கருணை அடிப்படையும்!
 
ஜனவரி 1, 2015 முதல் இந்தத் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வருவதால், அதற்குள் இதில் இணைந்துவிட வேண்டும். அப்படி இணையாதவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு கருணை அடிப்படையில் மானிய விலை சிலிண்டர் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி இணைந்துவிட வேண்டும். இல்லையென்றால், மானிய விலை சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்தத் திட்டத்தில் இணையாதவர்கள், அதாவது மானிய விலை சிலிண்டர் தேவையில்லை என்று இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இத்திட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு  mylpg.in என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று பார்க்கலாம். படிவங்களை சம்பந்தப்பட்ட ஏஜென்சி அல்லது இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியா முழுக்கவே 8000 பேர்!

மானிய விலை சிலிண்டர் தேவையில்லாதவர்கள், ஆன்லைன் வழியாக  mylpg.in என்ற முகவரியில் டிஎன்எஸ்சி  (DNSC-DOMESTIC NON SUBSIDIARY HOUSEHOLD CYLINDER)  என்ற ஆப்ஷன் மூலம், ‘தேவையில்லை’ என்று குறிப்பிடலாம். அல்லது நேரடியாக ஏஜென்சியிடம் விண்ணப்பம் 5 மூலம் பதிவு செய்யலாம். இப்போது இந்தியா முழுவதும் 8,000 பேர் மட்டுமே இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.





 

‘அனைவருக்கும் ஓய்வூதியம்’


இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ (NPS - National Pension System)  எனும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதாரப் பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக் கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு!

அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத் துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பிரான்’ (PRAN-permanent Retirement Account Number) எண் தரப்படும். இது வாழ்நாளுக்கான எண்.

18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன் பெறலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகள் அனைத் திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் சேர முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். நீங்கள் 100 ரூபாய் செலுத்தினால், உங்கள் கணக்கில் ஆண்டுக்கு 1000 ரூபாயை மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்களுக்கு மட்டும்). அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை மாதம்தோறும் செலுத்துபவர்கள் வரைதான் மத்திய அரசின் 1000 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் செலுத்துவோருக்கு இந்தச் சலுகை இல்லை. சந்தாதாரருக்கு 60 வயது ஆகும்போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக்கொள்ளலாம். மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8 முதல் 12% கூட்டு வட்டியுடன்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதிநேர வேலை தேடுபவர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தில் முகவர் களாக சேர்ந்து வருமானமும் ஈட்டலாம்.

மேலும் விவரங்களுக்கு http://pfrda.org.in/index1.cshtml?lsid=86 எனும் லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

செல்போன்

இன்றைக்கு செல்போன் இல்லாமல் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது என்கிற அளவுக்கு நாம் மாறிவிட்டோம். இந்த செல்போனுக்கான விதையானது விதைக்கப்பட்டது 1880-ம் ஆண்டில்! அந்த ஆண்டில் தான், கம்பியில்லா தொலைபேசி என்கிற தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

மனித வரலாற்றில் தகவல் பரிமாற்றம் என்பது பலவகையில் வளர்ந்து வந்திருக்கிறது. மனிதன், ஆரம்பத்தில் செய்தி அனுப்ப புறாக்களைப் பயன்படுத்தினான். புறாக்களின் வேகம் மனிதனுக்கு திருப்தித் தரவில்லை. உடனுக்குடன் செய்தியை பரிமாற ஆசைப்பட்டான்.


இந்த ஆசைக்கு உருவம் கொடுத்தார் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். 1876ம் ஆண்டு தொலைபேசியைக் கண்டு பிடித்த கிரஹாம்பெல், தனது கண்டுபிடிப்பைக் காப்புரிமை செய்தார். கம்பிகளின் மூலமாக செய்திகளைக் கொண்டு செல்லும் தொலைபேசி பழக்கத்துக்கு வந்தது.

என்றாலும், பிரச்னை தீரவில்லை. இயற்கை சீற்றத்தால் திடீரென கம்பிகள் அறுந்துபோய் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தவிர, கம்பிகள் மூலம் இணைக்க முடியாத பிராந்தியத்தில் வாழும் மனிதர்களுடன் எப்படி தொடர்புகொள்வது என்கிற கேள்வி பிறந்தது. இந்தக் கேள்விக்கு பதிலாக உருவானதுதான் கம்பியில்லாத் தொலைபேசிகள்.

மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி சிறிது தூரத்தில் இருக்கும் ஒருவருடன் எந்த கம்பியின் உதவியும் இல்லாமல் பேசும் போட்டோ போனைக் கண்டுபிடித்தார் கிரஹாம் பெல். நீண்ட தொலைவில் இருக்கும் ஒருவருடன் பேச  அடிப்படையாக அமைந்திருந்தது இந்தக் கண்டுபிடிப்பு. இன்றைக்கு ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையைக் கண்டுபிடிக்க காரணமாகவும் அமைந்தது இந்தக் கண்டுபிடிப்பு. 

இன்று மெரினா பீச்சில் இருந்தபடி மியாமி பீச்சில் இருக்கும் ஒருவருடன் செல்போன் மூலம் பேச அடிப்படையாக இருந்தது இந்தக் கம்பியில்லா போன் தொழில்நுட்பம்தான். இதற்காகவாவது காலையில் எழுந்து செல்போனை எடுக்கும்முன் கிரஹாம் பெல்லுக்கு ஒருமுறை நன்றி சொல்லுங்கள்!
 
ச.ஸ்ரீராம்

Monday, December 15, 2014

மோக்ஷத்துக்கு வழிகாட்டி!


லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள் போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைச் சொல்கிறார். அந்த வஸ்துக்கள் என்ன? முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப் புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்துகொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொகையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே."

இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணார விந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, ‘மாசில் வீணை’ என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.

நல்ல ஸங்கீதம்அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம்என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப் பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல் கியரும் ‘சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும்  தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம்; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம். கஷ்டமான சாதனைகளே வேண்டாம்  இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவிடும்’ என்கிறார்.

Sunday, December 14, 2014

மைக்ரோசாஃப்ட் லூமியா 535

வடிவமைப்பு:

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஸ்மார்ட் போன் முந்தைய நோக்கியா லூமியாவின் எளிமையான மற்றும் கலர்ஃபுல்லான டிசைனையே பின்பற்றியுள்ளது. பச்சை, ஆரஞ்சு, கறுப்பு, வெள்ளை மற்றும் ஸியான் ஆகிய ஐந்து வண்ணங்களில் வருகிறது. இதன் பின்புறப் பகுதியை எளிதில் மாற்றிக்கொள்ளலாம். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப பின்புறத்தின் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்த ஐந்து நிறங்களில் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம் ‘கிளாஸி’ தன்மை உடையது. கறுப்பு, வெள்ளை மற்றும் ஸியான் நிறங்கள் ‘மேட்’ தன்மை உடையது.


டிஸ்ப்ளே:

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 அகலமான 5 இன்ச் 540*960 IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 220 ppi கொண்டுள்ள இந்த ‘Capacitive’ டிஸ்ப்ளே 16M கலர் திறனை கொண்டுள்ளது. மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முழு வெளிச்சத்திலும் இந்த டிஸ்ப்ளே துள்ளியமாகச் செயல்படும் என்று உறுதியளித்துள்ளது. மேலும், இந்த டிஸ்ப்ளே ‘Corning Gorilla Glass 3’ என்ற பாதுகாப்பு டிஸ்ப்ளே கிளாசையும் கொண்டுள்ளது.

ஓ.எஸ்:

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஸ்மார்ட் போன், விண்டோஸ் 8.1 ஓ.எஸ்சை கொண்டு இயங்குகிறது. பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கும் இந்த விண்டோஸ் 8.1 ஓ.எஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

பிராசஸர்:

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 200 பிராசஸரை கொண்டு இயங்குகிறது. இந்த Qualcomm Snapdragon 200 பிராசஸர், ‘Quad-core’ பிராசஸராகும். 1.2 GHzஇல் இயங்கக்கூடும் இந்த பிராசஸரோடு பிரத்யேகமான ‘Adreno 302’ என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 1GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட் போன், 8GB இன்டெர்னல் மெமரியை கொண்டுள்ளது. மேலும் இதனை 128GB வரை SD கார்ட் மூலம் விரிவுபடுத்தலாம். தவிர மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 15GB ‘One Drive’ cloud storageயை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இந்த ஸ்மார்ட் போனுடன் அளிக்கிறது.

கேமரா:

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஸ்மார்ட் போன் 5MP முன்புறம் மற்றும் பின்புற கேமராவை கொண்டுள்ளது. இந்த 5MP முன்புற கேமரா ‘செல்ஃபி’ பிரியர்களுக்கு ஏற்றதாக அமையும். மேலும் இந்த முன்புற கேமரா ‘wide angle’ லென்ஸை உடையதால் குரூப் ‘செல்ஃபிஸ்’களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பின்புற கேமராவுடன் ஒரு LED பிளாஷ் லைட்டும் அமைந்துள்ளது. கேமராவின் செயல்பாடும் வேகத்ைத  முந்தைய லூமியா ஸ்மார்ட் போன்களைவிட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

பேட்டரி:

1905mAh Li-ion பேட்டரியை கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் லூமியா 535, கிட்டதட்ட 336 மணி நேரம் ‘standby time’யை உடையது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் 11மணி நேரம் 2G நெட்வொர்க்கிலும் 13 மணி நேரம் 3G நெட்வொர்க்கிலும் உழைக்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இசை பிரியர்கள் இந்த ஸ்மார்ட் போனில் 78 மணி நேரம் வரை தொடர்ந்து இசையைக் கேட்டு மகிழலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.


செ.கிஸோர் பிரசாத் கிரண்

Sunday, December 07, 2014

ரெட்மி நோட்

சிறப்பான தொழில்நுட்பம், எளிமையான டிசைன் மற்றும் குறைந்த விலை, இது தான் ஸியோமி நிறுவனத்தின் சிறப்பம்சம். இந்நிறுவனத்தின் எம்.ஐ.3 மற்றும் ரெட்மி 1எஸ் ஆகிய இரு ஸ்மார்ட் போன்களும் இந்திய மார்கெட்டில் பயங்கர ஹிட்.  ரெட்மி 1எஸ் ரக போன் சூடாகிறது என்ற குறைபாடு பற்றி பேசப்பட்டாலும், அதன் புதிய 4.5 வர்சனை அப்டேட் செய்த பிறகு சூடாவது குறைந்திருக்கிறது. தற்போது ஷியோமி நிறுவனத்தின் புதிய கேட்ஜெட்டான ‘ஸியோமி ரெட்மி நோட்’ இந்தியாவில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

வடிவமைப்பு:

ரெட்மி நோட்டின் வடிவமைப்பும் ரெட்மி 1S-ன் வடிமைப்பு கிட்டத்தட்ட ஒன்று தான். எளிமையான டிசைனை கொண்ட ரெட்மி நோட் முற்றிலும் பிளாஸ்டிக்கால் ஆனது. ரெட்மி நோட்டின் முன்புறம் கருப்பு நிறத்திலும் பின்புறம் வெள்ளை நிறத்திலும் அமைந்துள்ளது.

டிஸ்ப்ளே:

ரெட்மி நோட் அகலமான 5.5 இன்ச் 1280*720 IPS LCD ஸ்க்ரீன் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 267 ppi கொண்டுள்ள இந்த துல்லியமான டிஸ்ப்ளே படம் பார்க்க, ஈ-புக் படிக்க, இன்டர்நெட் ப்ரௌஸ் செய்ய மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ‘Corning Gorilla Glass 3’ என்ற சக்திவாய்ந்த ஒரு கிளாஸால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ப்ராஸஸர்:

ரெட்மி நோட் சக்திவாய்ந்த MediaTek MT6592 ப்ராஸஸரை கொண்டு இயங்குகிறது. இந்த MediaTek MT6592 ப்ராஸஸர் எட்டு CPU கோர்களை கொண்டுள்ளது. 1.7 GHzஇல் இயங்கக்கூடும் இந்த ப்ராஸஸரோடு பிரத்யேகமான Mali 450 GPU என்ற கிராபிக்ஸ் ப்ராஸஸரும் அடங்கும். 2GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் எந்த குறைப்பாடும் இருக்காது. 8GB இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்த ரெட்மி நோட்டை 32GB SD கார்ட் மூலமும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

கேமரா:

13 மெகா பிக்ஸல் பின்புறக் கேமராவும் 5 மெகா பிக்ஸல் முன்புறக் கேமராவும் கொண்டுள்ள இந்த ஒன் பிளஸ் ஒன் ஸ்மார்ட் போன் 1080P HD வீடியோவை ரெகார்ட் செய்யும் திறனை கொண்டுள்ளது.

பேட்டரி:

3100 mAh பேட்டரியை கொண்டுள்ள ரெட்மி நோட், நீடித்து உழைக்கும் தன்மையை கொண்டுள்ளது. கிட்டதட்ட 15 மணி நேரம் வரை இந்த பேட்டரி உழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ரெட்மி நோட்டுடன் கொடுக்கப்படும் 2A சார்ஜர் சில மணி நேரங்களிலேயே இந்த பேட்டரியை சார்ஜ் செய்யும் திறனை பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓ.எஸ்:

ரெட்மி நோட் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது. ரெட்மி 1S மற்றும் எம்.ஐ.3யில் பயன்படுத்தப்பட்ட ஷியோமி நிறுவனத்தின் பிரத்யேக MIUI ஓ.எஸ். டிசைனும் இந்த ரெட்மி நோட்டில் அடங்கும். பார்பதற்கு கவர்ச்சியாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும் இந்த MIUI, வாடிகையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வண்ணத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்:

* சிறப்பான தொழில்நுட்பம்.
*  கேமரா.
* விலை.

மைனஸ்:

* பழைய ஓஸ்.
* சிம்பிள் டிசைன்.

ரெட்மி நோட் ‘Flipkart’ இணையதளத்தில் ரூபாய் 8,999 என்ற விலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

-செ.கிஸோர் பிரசாத் கிரண்.

சோனி வாக்மேன்!

உலகம் முழுக்க இன்றைக்கு இசைப் பிரியர்களது எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இன்று செல்போனிலும் மெமரி கார்டிலும் பதுங்கிக் கிடக்கும் இசையை, ஒரு காலத்தில் மனிதன் தேடிச் சென்றுதான் கேட்க வேண்டி இருந்தது.

முதலில், பிறர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்த மனிதன், பிற்பாடு இசைத்தட்டின் மூலம் கேட்டு சந்தோஷமடைந்தான்.பிற்பாடு வந்த டேப் ரிக்கார்டர் சாதாரண மனிதனும் இசையைக் கேட்டு மகிழக் காரணமாக இருந்தது.

என்றாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாம், எல்லோருடைய காதுகளை யும் ஒரேநேரத்தில் சென்று சேருகிற மாதிரியே இருந்தது. இசையில் ஆயிரம் வகை உண்டு. ஒருவருக்குப் பிடித்த இசை மற்றவருக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தனக்குப் பிடித்த இசையை மற்றவர்களுக்குத் தொல்லைதராமல், தான் மட்டுமே கேட்க முடிகிற மாதிரி ஒரு தொழில்நுட்பம் இருந்தால்..? அதுவும், நடக்கிறபோது, பஸ்ஸில் பயணிக்கிறபோது, விமானத்தில் பறக்கிறபோது மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்க முடிகிறமாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


இப்படி எல்லாம் சோனி நிறுவனம் யோசித்ததன் விளைவாகப் பிறந்ததுதான் ‘வாக்மேன்’ என்னும் அற்புதம். 1978-ம் ஆண்டு சோனியின் ஆடியோ பிரிவு இன்ஜினீயர் நொபுடோஷி, சோனியின் நிறுவனர்களில் ஒருவரான மசரு இபுகாவுக்கு விமானப் பயணங்களின்போது பாடல் களைக் கேட்க ஓர் அமைப்பை வடிவமைத்தார். அதுதான் 1979-ம் ஆண்டு சோனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கண்டுபிடிப்பான வாக்மேனாக வெளியாகியது. இதில் ஒலிநாடா அமைப்புள்ள கேசட் மூலம் சிறிய கருவியில் ஹெட்போன் வசதியுடன் பாடல்களை நடந்து கொண்டே கேட்கலாம் என்ற அளவுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பிரபலமா கியது.

உலகம் முழுக்க வாக்மேன் அறிமுகமான சிறிது காலத்திலேயே 20 கோடி பேர் வாங்கினர். ஆனால், சோனியின் மற்றொரு நிறுவனரான அகியோ மொரிடாவுக்கு வாக்மேன் என்ற பெயர் பிடிக்கவில்லை. இதன் பெயரை மாற்றும்படி கூறினார். ஆனால், இந்தப் பெயர் மக்கள் மனதில் நிலைத்துவிட்டது. தவிர, பெயர் மாற்றத்துக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என சோனி அதிகாரிகள் சொல்ல, வாக்மேன் என்ற பெயரே வரலாற்றில் நிலைத்தது.

2010-ம் ஆண்டோடு வாக்மேன் தயாரிப்பை சோனி நிறுத்திவிட்டது. என்றாலும், மனதுக்குப் பிடித்த இசையை ரசித்துக் கேட்க, வாக்மேன் இருந்தால் மட்டுமே முடியும் என்கிற அளவுக்குப் புதுமையை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு அது!

ச.ஸ்ரீராம்
 

Saturday, December 06, 2014

நம்பிக்கை தரும் 10 இந்தியர்கள்!

இந்தியாவின் நம்பிக்கை மனிதர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் பிரதமர் மோடி! 1950-ல் வட் நகரில் பிறந்த மோடி, கடந்த மே மாதம் இந்தியாவின் 15-வது பிரதமராகப் பதவியேற்றார். தேர்தலுக்குமுன் இவர் பேசிய மேடை பேச்சுகளும், டிஜிட்டல் புரட்சியும்தான் இவரது வெற்றிக்கு வழிவகுத்தன. பல வாக்குறுதிகளைத் தந்த மோடி, பதவியேற்றதும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமானார். தற்போது இந்தியாவையும், இந்திய பொருளாதாரத்தையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என பல புதுமையான திட்டங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவரது தலைமையில் இந்தியா நவீனமயமாகும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்.  இந்தியா இதுவரை கண்ட பிரதமர்களில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியவராக மோடி இருப்பார். 65 வயதான அவரது  செயல்பாடுகளும், வெளிநாடுகளில் அவர் செய்யும் பொருளாதார ஒப்பந்தங்களும் இந்தியாவை வல்லரசாக்க உதவும். பல நாடுகள் அவரது வருகைக்காக காத்திருக்கின்றன என்பது சர்வதேச அளவில் அவர் சக்தி வாய்ந்தவராக வளர்கிறார் என்பதைக் காட்டுகிறது!

இன்று சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக மாறிவரும் உடனடித் தகவல் ஆப்ஸ்களில் முக்கியத்துவம் வாய்ந்தது வாட்ஸ் அப். இதன் பின்னணியில் இருப்பவர் நீரஜ் அரோரா என்கிற இந்தியர்தான். ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ-வும் படித்த நீரஜ் அரோரா, நான்கு வருடம் கூகுளின் தயாரிப்புப் பிரிவில் பணிபுரிந்தார். அதன்பின் வாட்ஸ் அப்பில் தன் பணியைத் துவங்கிய நீரஜ், தற்போது சர்வதேச வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார். இவரது செயல்பாடுகள் வாட்ஸ் அப்பின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.
ரிலையன்ஸ் போனில் மாதாந்திர வாட்ஸ் அப் சேவையை 16 ரூபாய்க்கு விற்றது இவரது மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று. 35 வயதாகும் இவர், வாட்ஸ் அப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் சமூக வலைதளங்கள் பிஸினசில் இவர் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சண்டிகரில் பிறந்த சச்சின் பன்சால், டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றவர். அவரது ஐஐடி நண்பரான பென்னி பன்சாலுடன் இணைந்துதான் ஃப்ளிப்கார்ட் என்னும் ஆன்லைன் இணையதளத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். சச்சினும் பென்னியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தாலும், ஐஐடியில் இணையும்வரை ஒருவரையொருவர் அறியாமலே இருந்தனர். பட்டம் பெற்றபிறகு இருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு அமேசானில் கிடைத்த வேலை மூலம் மீண்டும் இணைந்தனர். இதன்பின்  ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை இருவரும் ஆளுக்கு ரூ.2 லட்சம்  முதலீடு செய்து ஆரம்பித்தனர்.
2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2014-லேயே பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாற்றினர். இனிவரும் காலத்தில் சர்வதேச நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் அலிபாபா பட்டியலிட்டு சாதனை புரிந்த மாதிரி, ஃப்ளிப்கார்ட்டும் விரைவில் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்டு சாதனை புரியும் என்கிற நம்பிக்கையை இந்த நண்பர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவின் வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள நிர்மலா சீதாராமன் 1959-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். பாரதிய ஜனதா கட்சியில் முக்கியப் பங்காற்றிய இவர், தனது இளங்கலை படிப்பை திருச்சியிலும், முதுகலைப் படிப்பை டெல்லியிலும் பயின்றார். தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்த இவர், தற்போது நாட்டின் வணிகத் துறை அமைச்சராக மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அரசின் தொழிற்துறை ஊக்குவிப்புத் திட்டங்களான மேக் இன் இந்தியாவில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்நிய முதலீடுகளை வரவேற்கும் அரசில் இவரது பங்களிப்பு அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கை தொழிற்துறையில் நிலவி வருகிறது. இந்த ஆட்சியில் தொழிற்துறைக்கு நம்பிக்கையாக இருக்கும் இந்தியர்களில் இவர் அதிகம் கவனிக்கப்படுவார்.

1972-ல் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும் வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற இவர், 2004-ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் சுந்தர். கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையேச் சாரும். அடுத்ததாக, ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி அளப்பறியது.
இதற்கிடையில் மைக்ரோசாஃப்டின் சிஇஓ பதவிக்கு இவரைத்தான் பரிந்துரை செய்திருப்பதாக பலமான வதந்தி கிளம்பியது. ஆனால், கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. உலகமே தன் சந்தேகங்களை கூகுளில் தேட, கூகுள் தேடிய பொக்கிஷமாக இருக்கிறார் சுந்தர் பிச்சை. அவரது பெயரை வருங்காலத்தில் கூகுளின் முக்கிய தலைமை பதவிகளில் எதிர்பார்க்கலாம்.

சர்வதேச நிதி ஆணையத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ராஜன், 2012-ல் இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகராக ஆனார். கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவியேற்றார். குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம், சிஆர்ஆர், எஸ்எல்ஆர் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த விதத்திலும் வளைந்து தராமல் நாட்டின் வளர்ச்சிக்காகத் தனக்கு சரியென்று பட்டதையே செய்தார்.
பணவீக்கத்தைக் குறைத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் குறியாக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டில் முடிவுக்கு வருகிறது. பிரிக்ஸ் வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதிகள் அனைத்தும் ரகுராம் ராஜனுக்கு இருப்பதால், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளில் அதிகம் கவனிக்கப்படும் ரகுராம் ராஜன், இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவுவார் என்று நம்பலாம்.

கர்நாடகாவின் மணிபால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படித்தவர் ராஜீவ் சூரி. முதுகலைப் பட்டம் ஏதும் படிக்காமல் நோக்கியாவின் வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்தவர். கால்காம் நிறுவனத்தில் 1989-ம் ஆண்டு உற்பத்திப் பிரிவில் தன் பணியைத் தொடங்கிய சூரி, 1995-ல் நோக்கியாவில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியில் சேர்ந்தார். 19 வருடங்களாக நோக்கியாவில் பல உயர் பொறுப்புகளில் தன் பணியைத் தொடர்ந்துவந்த சூரி, செல்போன் விற்பனையில் நீண்ட காலமாக லாபமின்றி இயங்கிக் கொண்டிருந்த நோக்கியா நெட்வொர்க் யூனிட்டின் செலவுகளைக் குறைத்து, கடந்த 2012-ல் மீண்டும் லாபப் பாதைக்கு கொண்டு வந்தார்.
நோக்கியாவின் செல்போன் தயாரிப்புப் பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியபோதும், நோக்கியா நிறுவனம் நெட்வொர்க் மற்றும் மேப்பிங் தொழில்நுட்பத் துறையில் தொடரும் என்று சொல்லப்பட்டது. அந்தப் பிரிவுகளுக்காக நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி நியமிக்கப்பட்டார். தொழில்நுட்ப உலகை ஆளுகிற இந்தியர்களின் பட்டியலில் இவரது பெயரும் முக்கிய இடம்பிடித்துள்ளது.

ஐஐஎம் அஹமதாபாத்தில் பட்டம் பெற்ற இவர், இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்கில் கிடைத்த வேலையை எழுத்தின் மீது உள்ள ஆர்வம் காரணமாக புறக்கணித்துவிட்டு புத்தகம் எழுதுவதைத் தொடர்ந்தார். இவரது புத்தகங்கள் எளிய நடையிலும், இளைஞர்களைக் கவரும் விதமாகவும், கல்லூரி வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் இருந்து வருகிறது. அதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை சேத்தன் பகத் பெற்றுள்ளார்.
இவர் எழுதிய ஏழு புத்தகங்களுமே ஹிட் ஆனதுடன், மூன்று புத்தகங்கள் படமாக எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகம் விற்கும் இந்திய எழுத்தாளர்களில் இவரது புத்தகங்கள் முதலிடம் பிடித்துள்ளன. இவரது கடைசிப் புத்தகமான ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட் புத்தகம்  ஆன்லைனில் ஹிட் அடித்து விற்பனைக்கு வருவதற்கு முன்பே முன்பதிவில் விற்றுத் தீர்ந்தது. விரைவில் உலகின் முக்கிய ஆங்கில எழுத்தாளர்களின் வரிசையில் சேத்தன் பகத் இடம் பிடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவியேற்றுள்ள விஷால் சிக்கா, அமெரிக்காவின் ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் அல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்றால் அது விஷால் சிக்காதான். இன்ஃபோசிஸின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி நிர்வாகப் பொறுப்பைத் திரும்ப ஏற்றபின் ஓராண்டுக்குள் இன்ஃபோசிஸின் புதிய சிஇஓ அறிவிக்கப்படுவார் என்று அறிவித்தப்படி சிக்காவின் பெயரை நம்பிக்கையோடு அறிவித்தார்.
தற்போது விஷால் சிக்காவின் பணி வர்த்தகரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், போட்டியைச் சமாளிக்க புதிய நடவடிக்கைகளைக் கையாள்வதும், புதுமைகளை அறிமுகப்படுத்தும் விதமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் இன்ஃபோசிஸின் தாக்கத்தை அதிகப்படுத்தவும், சர்வதேச அளவில் முன்னிறுத்தவும் விஷால் சிக்காவால் முடியும் என்றால், நிச்சயம் இன்ஃபோசிஸின் வளர்ச்சிக்கு இவர் பெரிய பங்களிப்பை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதோடு இந்தியாவின் ஐ.டி துறை வளர்ச்சியிலும் இவரது பிரதிபலிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி அடிப்படையில் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை  பாகிஸ்தானைச் சேர்ந்த அமைதிப் போராளி மலாலாவுடன் இணைந்து பெற்றிருக்கிறார் கைலாஷ் சத்யார்த்தி. குழந்தை தொழிலாளர் முறை இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. அதுவும், மத்தியப்பிரதேசத்தில் மிக அதிகம். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து தனது 26 வயதில் ‘பச்பன் பசாவோ அந்தலன்’ (குழந்தைப் பருவத்தைக் காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினார். இவரது தீவிர முயற்சியால் இதுவரை 83,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவரது சேவை இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள் என்ற அளவிலேயே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவிக்கும் குழந்தை தொழிலாளர்கள் அதிகம். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் சத்யார்த்தி இறங்கினால், கோடிக்கணக்கான குழந்தைகளை மீட்டு குழந்தை தொழிலாளர் இல்லா இந்தியாவை உருவாக்குவார் என நம்பலாம்.

ச.ஸ்ரீராம்