Search This Blog

Saturday, March 31, 2012

அருள்வாக்கு - சாச்வத அமைதி!


நல்லதும் கெட்டதுமாகப் பலது நம்மை பாதிக்கிறது. அதனால் அழுகிறோம், சிரிக்கிறோம். இரண்டும் பாதிப்புதான். இரண்டுமே போதும் போலத்தான் இருக்கிறது. சிரித்தால்கூட ஒரு அளவுக்கு மேலே போனால் வயிற்றை வலிக்கிறது! பலஹீனமாகிறது. சிரிப்பு மூட்டாதே!" என்று கோபித்துக் கொள்கிறோம். ஆனந்தமாக டான்ஸ் பண்ணினாலும் உடம்பு அசந்து போகிறது. போதும் என்றாகிவிடுகிறது. ஒரு பாதிப்பும் இல்லாமல் விச்ராந்தியாக இருக்க மாட்டோமோ என்றுதான் இருக்கிறது. இதுதான் நமக்கு வேண்டியது. அத்வைதமுமில்லை, த்வைதமும் இல்லை.

இதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம். பாதிப்பு எப்படிப் போகும் என்று ஆலோசித்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ‘முதலிலே காங்கோ சண்டை ந்யூஸ் வந்தபோது விழுந்து விழுந்து படித்தோமே, அப்புறம் ஏன் விட்டுப் போச்சு? அது ஏன் இப்போது நம்மை பாதிக்கவில்லை’ என்று ஆலோசித்தால், இடத்தில் (spaceல்) ஒன்று தள்ளிப் போகப் போக அதன் பாதிப்பு குறைகிறதென்று தெரிகிறது. பத்து வருஷம் முந்தி பிதா காலமானபோது அத்தனை அழுத நம்மை இப்போது அது ஏன் பாதிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால், காலத்திலே தள்ளிப் போகப் போக, பாதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. அதனால் நாம் பாதிப்பே இல்லாமலிருக்க வேண்டுமானால் பக்கத்திலேயே நடப்பதை காங்கோவில் நடக்கிற மாதிரி பாவிக்கப் பழக வேண்டும்; இந்த க்ஷணத்தில் வருகிற நல்லது பொல்லாததுகளைப் பத்து வருஷத்துக்கு முந்தி நடந்த மாதிரிப் பார்க்க அப்யாஸம் செய்ய வேண்டும்.  எத்தனை ஸந்தோஷமும், துக்கமும் சாச்வதமாக இல்லாததால், எல்லாம் relativeதான் (ஸ்வய சக்தி இல்லாமல், இன்னொன்றைச் சார்ந்திருப்பதுதான்) என்று தெரிந்துவிட்டது. அதனால் இன்னொன்றைச் சாராமல் தன்னில் தானாக நிறைந்து Absolute- ஆக இருப்பதைப் பிடித்தால்தான் பல தினுஸான பாதிப்பு இல்லாமல் சாச்வத அமைதியாக இருக்கும் என்று தெரிகிறது. இதுதான் spirituality-யில் (ஆத்மிகத்தில்) ஐன்ஸ்டீனின் Relativity Theory (சார்புக் கொள்கை)! அவரும் Time, Space-ஐத்தானே சொல்கிறார்?

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

எனது இந்தியா! ( வாஸ்கோடகாமாவின் கடல் பயணம் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
இந்தியா மிகவும் வறுமையான நாடு. பொரு​ளா​தார ரீதியாகப் பெரிதும் பின்தங்கி இருக்கிறது. வன்முறையும், மக்கள் நெருக்கடியும், சீரழிந்த அரசியலும் இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிரவிடாது என்ற எண்ணம் உலகெங்கும் இன்று பரவி இருக்கிறது. ஆனால், இதே இந்தியா செல்வம் கொழிக்கும் தேசமாக, எப்படியாவது இந்தியாவுக்குப் போய் வணிகம் செய்ய வேண்டும் என்று உலகையே ஆசைகொள்ளவைத்த கனவு தேசமாக இருந்தது ஒரு காலம். அந்தப் பெருமையும் வளமும் காலச்சூழலில் மறைந்துபோய்விட்டன.  கப்பல் வணிகத்தில் பாரசீகத்துக்குப் பிறகு புகழ்பெற்று விளங்கியவர்கள் போர்த்துக்கீசியர்களே. அதிலும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்த்துக்கீசியர்கள் நாடு பிடிக்கும் கடற்பயணங்களில் தீவிரமாக ஆர்வம் காட்டினர். ஐரோப்பாவின் மேற்குக் கோடியில், ஆப்பிரிக்காவைத் தொட்டவண்ணம் இருக்கும் நாடு போர்ச்சுக்கல். அதன் தலைநகரம் லிஸ்பன். மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நாடு இது. 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளவரசர் ஹென்றி, புதிய கடல் வழி தேடும் பயணத்தைத் தொடங்கினார்.1483-ல் 'டீகோ காவோ’ என்ற கப்பல் போர்ச்​சுக்கலில் இருந்து ஆப்பிரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து திரும்பியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 'பார்த்தலோமியோ டயஸ்’ என்ற கடலோடி, ஆப்பிரிக்கா கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தார். இவர்​தான், ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு 'நன்னம்பிக்கை முனை’ எனப்பெயர் சூட்டியது என்பார்கள்.
 
கடலில் 'நன்னம்பிக்கை முனை’க்கு வந்துவிட்டால் அங்கே இருந்து இந்தியா நோக்கிப் போய்விடலாம் என்ற நம்பிக்கைதானே உருவாகும். அதன் காரணமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு என இந்தியாவில் கிடைக்கும் வாசனைப் பொருட்​களைத் தேடி கடலோடிகள் வழி தெரியாமல் அலைந்துகொண்டு இருந்த சூழலில், போர்த்துக்கீசிய மன்னரான டான் மேனுவல் தனது நாட்டில் இருந்த பிரபல ஜோதிடரான 'ஆபிரகாம் கோகடோ’வை அழைத்து வர ஆள் அனுப்பி இருந்தார்.நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை ஆகிய மூன்றையும் கோள்களின் மூலம் துல்லியமாக அறிந்து சொல்லிவிடக்கூடியவர் என லிஸ்பன் மாநகரில் புகழ்பெற்று இருந்தார் கோகடோ. மன்னர் அவரை உடனடியாக அழைப்பதாக காவலர்கள் சொன்னதும் எதற்காக அழைக்கிறார் எனப் புரியாமல் இரவோடு இரவாக அரண்மனைக்குச் சென்றார் கோகடோ.மன்னர் எது குறித்து ஆரூடம் தெரிந்து​கொள்ள விரும்புகிறார் என்று பணிவான குரலில் கேட்டார் கோக​டோ. 'தனது பாட்டன், முப்பாட்​டன் காலத்தில் இருந்தே இந்தியாவுக்குக் கடல் வழி கண்டுபிடிக்க முயன்று தோற்றுப்போய்விட்டனர். தன்னுடைய காலத்திலாவது இந்தியாவுக்குப் போய், வணிகம் செய்ய சாத்தியம் இருக்கிறதா? கிரக நிலைகள் தனக்குச் சாதகமாக உள்ளதா என்பதை அறிந்து சொல்ல வேண்டும்’ என்று கேட்டார் மன்னர் டான் மேனுவல்.மன்னரின் கிரக நிலைகளை மூன்று நாட்களுக்குள் ஆராய்ந்து பார்த்துப் பதில் தருவதாக சொல்லி விடைபெற்றார் கோகடோ. நான்காம் நாள் இரவு, மன்னர் ஆவலோடு காத்திருந்தார். கிரக நிலைக் குறிப்புகளுடன் சந்திக்க வந்த கோகடோ, ''மாமன்னரே, கடலின் வெகுதொலைவுக்கு அப்பால் இந்தியா இருக்கிறது. அங்கே இருப்பவர்கள் காட்டு​மிராண்டிகள். தங்கமும் வெள்ளியும் குவிந்துகிடக்கும் அந்த நாட்டுக்குப் போகும் கடல் வழி ஆபத்தானது. கப்பல் புயலில் மூழ்கிவிடும். மீறி, அந்த தேசத்துக்குள் நுழைபவர்கள் உயிரோடு தப்ப முடியாது. உங்களுடைய முன்னோர் ஜான் அரசன் தனது நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளான பெத்ரோ கோவிலியன், அல்போன்சா பேவா ஆகிய இருவரையும் நிலம் வழியாக இந்தியாவைக் கண்டுபிடித்து வருமாறு அனுப்பிவைத்தார். அவர்கள் இருவரும் ஆப்பிரிக்​காவில் சுற்றி அலைந்தும் இந்தியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதி வழியிலேயே பேவா இறந்தும் போனார்.ஆனால், கோவிலியன் எப்படியோ சுற்றி அலைந்து இந்தியாவுக்குப் போனார். ஆனால், அவராலும் இந்தியாவுக்குச் செல்லும் வழியைத் துல்லியமாக அறிந்து சொல்ல முடியவில்லை. ஆகவே, உங்களது ஆசை எளிதாக நடந்துவிடக்கூடியது அல்ல. இப்போது, கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. நீங்கள் இந்தியாவுக்குக் கடல் வழி கண்டுபிடிக்கும் பணியை இப்போது மேற்கொண்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீங்களே இந்தியாவின் சக்கரவர்த்தியாகவும் ஆவீர்கள்'' என்றார்.
 
கோகடோவின் நல்வாக்கைக் கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு நிறையப் பரிசுகள் தந்ததோடு, இந்தியாவுக்கான கடல் வழி தேடும் பயணத்தை உடனே தொடங்க உத்தரவிட்டார்.இதற்கென, லிஸ்பன் துறைமுகத்தில் மூன்று விசேஷக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இரட்டை அடுக்குகொண்ட அந்தக் கப்பல்களில் பீரங்கிகள் பொருத்தப்பட்டன. தட்டுப்பாடு இல்லாத உணவும், மதுவும், ஆயுதங்களும், வெடிமருந்தும் நிரப்பப்பட்டன.  உடைகளும், விதவிதமான பரிசுப்பொருட்களும் ஏற்றப்​பட்டன, அரபு பேசத் தெரிந்த ஆட்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் ஒரு மதபோதகர், ஒரு மருத்துவர் சென்றனர். கூடவே, வழியில் உள்ள ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களுடன் பேசிப் பழக வேண்டும் என்பதற்காக கறுப்பு அடிமைகள் கப்பலில் ஏற்றப்பட்டனர். பலவிதக் கடல் வரைபடங்களும், புயல் எச்சரிக்கைக் குறிப்புகளும் எடுத்துச் சென்றனர். வழியில் இடர் ஏற்பட்டால் பலி கொடுப்பதற்காக, மரண தண்டனைக் கைதிகள் 10 பேரும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்தக் கடல் பயணத்துக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்று முடிவு செய்ய முடியாமல், மன்னர் மேனுவல் குழப்பத்தில் இருந்தார். நாட்டின் மிகப் பெரிய மாலுமியான பார்த்தலோமியா டயஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்து நியமித்த எஸ்வதோ நோயுற்று இறந்துபோனார். ஒரு நாள், அவரது சபையில் நடந்த விருந்தில் தற்செயலாக ஓர் இளைஞரைப் பார்த்தார். ராணுவ அதிகாரி போலத் தோற்றம்கொண்ட அந்த இளைஞர் மிடுக்காக நடந்து சென்றதைக் கண்ட மன்னர், அவரைப் பற்றி விசாரிக்கும்படி உத்தரவிட்டார். கடலோடி வம்சத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தவுடன், மறுநாள், அந்த இளைஞர் தன் முன்னே ஆஜராக வேண்டும் என உத்தரவு போட்டார். சபையில், மன்னர் முன்வந்து நின்ற அந்த இளைஞரின் பெயர் வாஸ்கோடகாமா. அவரைத் தனது இந்தியக் கடல் பயணத்துக்கு கேப்டனாக நியமித்து உள்ளதாக மன்னர் அறிவித்தார். ஆனால், ''நான் ஓர் உதவாக்கரை, இந்தப் பணிக்கு நான் தகுதி ஆனவன் இல்லை'' என்று மறுத்தார் வாஸ்கோடகாமா.ஆனால், நாட்டின் எதிர்காலமும் தனது எதிர்​காலமும் இந்தக் கடல் பயணத்தில்தான் இருக்கிறது என்று மன்னர் வற்புறுத்தினார். ஆனால், மற்ற இரண்டு கப்பல்களுக்கு கேப்டனாக நியமிக்க ஆள் கிடைக்கவில்லை. ''உனக்கு சகோதரர்கள் இருக்கிறார்களா'' என்று, வாஸ்கோடகாமாவிடம் கேட்டார் மன்னர்.
 
 
''என்னோடு பிறந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் துறவி. அடுத்தவர் பாவ்லோ, ஒரு வழக்கில் நீதிபதியை அவமானப்படுத்திவிட்டார் என்று தண்டிக்கப்பட்டு இருக்கிறார். மற்றவர் பதின்வயது சிறுவன். மன்னர் எனது சகோதரர் பாவ்லோவின் தவறை மன்னித்து விடுதலை செய்தால், அவன் என்னோடு கடல் பயணத்தில் துணை வருவான்'' என்றார் வாஸ்கோடகாமா. உடனே, பாவ்லோவுக்கு பொது மன்னிப்பு அளித்து உத்தரவு விட்டார் மன்னர். மூன்றாவது கப்பலுக்கு தனது நண்பன் நிகோலஸ் கொய்லோ கேப்டனாகப் பணியாற்றுவான் என்று உறுதிஅளித்தார் வாஸ்கோடகாமா. சேன் மிகைல், சேன் கேபிரியல், சேன் ரபேல் என்ற அந்த மூன்று கப்பல்களும் பயணத்துக்குத் தயாராகின. இந்த மூன்று கப்பல்களுடன் சரக்கு ஏற்றிய துணைக் கப்பல் ஒன்றும் பின்னால் வருவது என முடிவு செய்யப்பட்டது. பொருத்தமான மாலுமிகள், கடல் அறிந்த பணியாளர்கள் என 150 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.1497-ம் ஆண்டு தேவாலயத்தின் சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டுவிட்டு, மன்னரின் ஆசி பெற்று வாஸ்கோடகாமாவின் கடல் பயணம் தொடங்கியது. கடல் காற்று மோசமாக இருந்த காரணத்தால் முதல் மூன்று நாட்களும் கப்பல்கள் மெதுவாகச் சென்றன. நான்காவது நாள், கடல் காற்று சீரானதும் கப்பல் வேகம் எடுக்கத் தொடங்கின. அவர்கள் நினைத்தது போல பயணம் எளிதாக இல்லை. புயலில் சிக்கி கப்பல்கள் தடுமாறின.ஒரு மாதப் பயணத்துக்குப் பிறகு, நன்னம்பிக்கை முனையை நோக்கி நகர்ந்தனர். நினைத்தபடியே இந்தியா போவதற்காக கப்பல் ஊழியர்களை அடித்தும் உதைத்தும் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார் வாஸ்கோடகாமா. அவரது மூர்க்கமான அலறல் கேட்டு, பணியாளர்கள் பயந்து போய் வேலை செய்தனர். இதற்கிடையில், பொருட்கள் ஏற்றிவந்த துணைக் கப்பல் தீப்பிடித்து எரிந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இந்தியாவைக் கண்டுபிடிக்காவிட்டால், கடலிலேயே சாக வேண்டியதுதான் என்று அறிவித்தார் வாஸ்கோடகாமா. இதனால், கப்பலில் கிளர்ச்சி ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இரும்புக் கரம்​கொண்டு கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிய வாஸ்கோடகாமா, மூன்று கப்பல்களும் இணைந்து பயணம் செய்ய ஏற்பாடு செய்தார். கோப்ரா வெர்தா தீவுகளைத் தாண்டி ஆப்பிரிக்கக் கடற்கரை ஓரமாக கப்பல்கள் செல்லத் தொடங்கின. ஆப்பிரிக்காவின் பல்வேறு நிலப் பகுதிகள் வெவ்வேறு சுல்தான்களால் ஆளப்பட்டு வருவதையும், அவர்களுக்குள் சண்டையும் சச்சரவும் அதிகமாக இருப்பதையும் அறிந்த வாஸ்கோடகாமா, மொசாம்பிக் நகரில் பிரவேசித்தார். எதிர்பார்த்த வரவேற்பு அங்கே கிடைக்கவில்லை. அதனால், கென்யா நாட்டின் மெலிந்தி நகருக்குச் சென்றார் வாஸ்கோடகாமா. அங்கே, சுல்தான் அவர்களை வரவேற்று போர்த்துக்கீசியர்களுடன் ஒரு நல்லுறவு ஒப்பந்தம் செய்துகொண்டதோடு, கடல் பயணத்தில் வழிகாட்ட அரபுக் கடலோடிகளை உடன் அனுப்பிவைக்கவும் ஒப்புக்கொண்டார்.
 
வாஸ்கோடகாமாவின் கனவு மெள்ள நனவாக ஆரம்பித்தது. இந்தியப் பெருங்கடலில் சுற்றி அலைந்து அதன் கொடும் காற்றையும் புயலையும் நன்கு அறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெற்றார். 1498-ல் கப்பல்கள் மீண்டும் கிளம்பின. இந்த முறை தென் மேற்குப் பருவக் காற்று அவர்களுக்கு சாதகமாக இருந்தது. கப்பல்கள் வேகமாகச் செல்லத் தொடங்கின. 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையை மூன்று கப்பல்களும் அடைந்துவிட்டன. 


விகடன்

Friday, March 30, 2012

அருள் மழை ----------- 51


நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன்.

சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவாகாஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலைஎன அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வான்னு தகவல். பறந்தடிச்சுண்டுபெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால  மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோடஅழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.

அவனை உள்ளே கூப்பிடுன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சுகாஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கேபுஷ்பங்களாலபெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.

தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.

அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான்பெரியவான்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.

 ‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்று பெரியவா சொல்லகண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்

எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார்பெரியவா.

பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவாஎன்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!”

– 
நன்றிசக்தி விகடன்

Thursday, March 29, 2012

இந்திய மருந்துகள்!

நீங்கள் இருப்பது தெரிய வேண்டும் என்றால், நீங்கள் செயல்பட வேண்டும். இந்தியக் காப்புரிமைக் கட்டுப்பாட்டாளர் பி.ஹெச்.குரியனும் அவருடைய அலுவலகமும் இப்போது இந்தியாவைத் தாண்டியும் தெரிய ஆரம்பித்திருப்பது அப்படித்தான். ஜெர்மனியைச் சேர்ந்த 'பேயர்’ மருந்து நிறுவனத்துக்கு குரியன் கொடுத்த அடி, உலகம் முழுவதும் பொது சுகாதாரத்துக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது.சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்காக 'பேயர்’ நிறுவனம் தயாரிக்கும் மருந்து 'நெக்ஸாவர்’. ஒரு மாதத்துக்கு 'நெக்ஸாவர்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், 2.80 லட்சம் செலவிட வேண்டி இருந்தது. இந்த விலை இந்தியர்களுக்குக் கட்டுப்படியாகாது என்று 'பேயர்’ நிறுவனத்திடம் சொன்னார் குரியன். 'பேயர்’ அசைந்துகொடுக்காத நிலையில், கட்டாயக் காப்புரிமையின் அடிப்படையில் இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை இந்திய நிறுவனமான 'நாட்கோ பார்மா’வுக்கு வழங்கிவிட்டார் குரியன். இனி, இந்த மாத்திரைகள் 8,800-க்குக் கிடைக்கும். இந்த மருந்தின் அடிப்படை மூலக்கூறுக்கான காப்புரிமைக்காக 'பேயர்’ நிறுவனத்துக்கு 'நாட்கோ பார்மா’காப்புரிமைத் தொகையாக விற்பனையில் 6 சதவிகிதத்தைத் தரும். இப்படிக் காப்புரி மைக்கு உட்பட்ட ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கான அனுமதியை உள்நாட்டு நிறுவனத்துக்கு இந்திய அரசு அளிப்பது இதுவே முதல் முறை.உலக அளவில் மருந்து உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், ஆண்டுக்கு 1 லட்சம் கோடிக்கு மருந்து உற்பத்தி நடக்கிறது. இதில் ஏற்றுமதியாகும் 40 சதவிகித மருந்துகள் ஏழை நாடுகளுக்கே செல்கின்றன. குறிப்பாக, ஐ.நா. சபைசார் சுகாதார அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் மருந்துகளில் மூன்றில் இரு பங்கு இந்திய மருந்துகள். காரணம், இந்திய மருந்துகள் விலை குறைவு.
இந்தப் போட்டியை எதிர்கொள்ள இந்திய மருந்துத் துறையைக் கைப்பற்றும் வகையில் இப்போது மூன்று விதமான போர்களில் இறங்கி இருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். முதலாவது, இந்திய மருந்து நிறுவனங்களை வாங்கிவிடுவது. 'ரான்பாக்ஸி’, 'டாபர் பார்மா’, 'பிராமல் ஹெல்த் கேர்’ எல்லாம் இப்போது இந்திய நிறுவனங்கள் இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நிறுவனங்கள். இரண்டா வது, விலைக்கு வராத இந்திய நிறுவனங்களைக் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வளைப்பது. 'டாக்டர் ரெட்டீஸ்’, 'அரபிந்தோ’, 'காடில்லா’... பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இந்த வலைக்குள் வந்துவிட்டன. மூன்றாவது, காப்புரிமைப் போர். முந்தைய இரு வழிகளைவிட மோசமான உத்தி இது. இந்தப் போரை, எவ்வளவு திட்டமிட்டு அவை நடத்துகின்றன என்பதற்கும் இந்தப் போரில் அவை வென்றால் என்ன நடக்கும் என்ப தற்கும் ஒரு சின்ன உதாரணம், சுவிட்சர் லாந்தைச் சேர்ந்த 'நோவார்டீஸ்’ மருந்து நிறுவனம் தொடுத்திருக்கும் ஒரு வழக்கு.ரத்தப் புற்றுநோய்க்கான 'இமாடினிப் மெசிலேட்’ என்ற மருந்தைத் தயாரிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்துஇருக்கிறது 'நோவார்டீஸ்’. இந்திய மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 'இமாடினிப் மெசிலேட்’ மாத்திரை ஒன்றின் விலை 90. அதே மருந்தை சின்ன மாற்றங்களோடு 'நோவார்டீஸ்’ தயாரிக்கும் 'கிளிவெக்’ மாத்திரை ஒன்றின் விலை 1,000. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில் 'நோவார்டீஸ்’ இந்த வழக்கில் வென்றால் என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள்! இப்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இந்த வழக்குக்காக 'நோவார்டீஸ்’ சார்பாக இதுவரை ஆஜரான வழக்குரைஞர் கள் யார் எல்லாம் தெரியுமா? ப.சிதம்பரம் (இன்றைய உள்துறை அமைச்சரேதான்), ரோகிந்தன் நாரிமன், கோபால் சுப்ரமண்யம் (இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை அலங்கரித்தவர்கள்). எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரிக்கே மருந்து நிறுவனங்களுடன் சந்தேகத்துக்குரிய தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து, அவர் வழக்கில் இருந்து விலக நேர்ந்தது. 'நோவார்டீஸ்’ மட்டும் அல்ல. பல நிறுவனங்கள், பல்லாயிரம் மருந்துகள் அடுத்தடுத்து வரிசையில் நிற்கின்றன.
இத்தகைய சூழலில்தான் 'பேயர்’ நிறுவனத்துக்கு எதிராகக் கட்டாயக் காப்புரிமையைப் பயன்படுத்தி இருக்கிறார் குரியன். உலக வர்த்தகக் கழகம் அளித்துஇருக்கும் ஒரு விசேஷ உரிமையின் அடிப்படையில் - அதாவது, தேச நலன் சார்ந்து, உரிமம் அற்ற நிறுவனங்களுக்குக்கூட மருந்து களைத் தயாரிக்க அரசு அனுமதி வழங்க லாம் என்கிற விதியின் அடிப்படையில் - இந்த அனுமதியை அளித்திருக்கிறார் குரியன். பன்னாட்டு நிறுவனங்கள் இந்த முடிவால் அதிர்ந்துபோய் இருக்கின்றன. பெரும்பாலான அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் ''காப்புரிமைகளுக்கு இந்தியா துளியும் மதிப்பு அளிப்பது இல்லை'' என்று கடுமையாகச் சாடி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து காப்புரிமை என்பதற் கான எல்லை எது என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.இந்தத் தருணத்தில் இந்தியாவிடம் தொடரும் ஒரு முக்கியமான பலவீனத்தைப் பற்றியும் நாம் பேச வேண்டியது அவசியம். அது ஆராய்ச்சித் துறையில் நாம் மிக மோசமான நிலையில் இருப்பது. நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.75 சதவிகிதம்கூட ஆராய்ச்சிக்காகச் செலவிடப்படுவது இல்லை. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பது என்பதைக் காட்டிலும், பிறர் கண்டுபிடித்த பொருட்களைப் பிரதியெடுப்பதே இந்தியத் தொழில் கலாசாரமாகிவருகிறது. இது மோசமான போக்கு.  உலகின் ஆறில் ஒரு பங்கு மக்களைச் சுமக்கும் இந்தியா, இந்தச் சூழலிலேனும் விழித்துக்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிப் பணிகளில் பிரதான கவனம் செலுத்துவதுடன் மேலும் பல பொதுத் துறை மருந்து நிறுவனங்களை உருவாக்க வேண்டும். ஒரு பொருளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அதற்குரிய காப்புரிமையை வழங்கும் அதேசமயத்தில், அந்தக் காப்புரிமை நியாயமானதாகவும் கட்டுப்படியானதாகவும் இருப்பதை உறுதிசெய்யக் குரல் கொடுக்க வேண்டும். குரியனின் நடவடிக்கை அதற்கான முதல் படியாக இருக்கட்டும்!
சமஸ்
விகடன் 

கருவின் உறுப்புகள் ஓர் கண்ணோட்டம்!


தாயிடமிருந்து ஒரு கரு பெறும் உறுப்புகள்:

சருமம், இதயம், தொப்புள், கல்லீரல், மண்ணீரல், இரத்தம், மாமிசம், கொழுப்பு, சிறுகுடல், பெருங்குடல், வயிறு, முதலியன...

தந்தையிடமிருந்து பெறும் உறுப்புகள்:

தலைமுடி, மீசை, பற்கள், நகம், உடம்பு, மயிர், எலும்பு, தசைக்கயிறுகள், இரத்தக்குழாய், நரம்பு, முதலியன.

ஆன்மாவிடமிருந்து பெறுபவை:

ஜன்ம நிர்ணயம், ஆயுள், ஆத்மா, மனம், ஞாபகச் சக்தி, உருவம், குரல், நிறம், சுகம், துக்கம், விருப்பு, வெறுப்பு, அறிவு, தைரியம், அகங்காரம், விடாமுயற்சி முதலியன.

முற்பிறவியிலிருந்து பெறுபவை:

சுத்தம், நன்னடத்தை, ஈகை, சோம்பல், உற்சாகம், கம்பீரம், சஞ்சலம், கெட்டிக்காரத்தனம் முதலியன.  

- ‘குழந்தை இல்லாத குறையா?’ நூலிலிருந்து: லட்சுமிசிவம், சென்னை 

Wednesday, March 28, 2012

எனது இந்தியா! (தாய்ப்பால் கொடுக்கும் தாதி! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
அப்துல் கரீம், மகாராணியோடு நெருக்கமாக இருப்பதோடு, அரசியல் விஷயங்களில் காய் நகர்த்துவதை அறிந்த அரண்மனை அதிகாரிகள், அவரைப்பற்றி ராணியிடம் புகார் சொல்ல ஆரம்பித்தனர். ராணி எதையும் நம்பவில்லை. 'மகாராணியின் செல்ல நாய்க்குட்டிதான் அப்துல் கரீம்’ என்று மகாராணியின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். அவர், மகாராணியின் உளவாளி என்றே மற்றவர்கள் நினைத்தனர். 1890-ல் கரீம் உடல் நலம் இல்லாமல் படுக்கையில் விழுந்தார். செய்தி அறிந்த விக்டோரியா மகாராணி தனது தனது சொந்த மருத்துவரை அனுப்பி சிகிச்சை அளித்தார். தினமும் இரண்டு முறை அவரைப் பார்த்துச் சென்றார். இது, அரண்மனையில் பல வதந்திகளைக் கிளப்பியது.  

உடல்நலம் தேறிய அப்துல் கரீமைச் சந்தோஷப்​படுத்து​வதற்காக  அவரை அழகான வண்ண ஓவியமாகத் தீட்டவும் மகாராணி ஏற்பாடு செய்தார். கூடவே, முன்பு எடுபிடியாக இருந்தபோது எடுத்துக்​கொண்ட புகைப்படங்கள், ஓவியங்கள் அத்தனையும் எரித்துவிட வேண்டும் என்றும் உத்தரவு போட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்​கொண்ட அப்துல் கரீம், இந்தியாவில் தனக்கு நிலமானியம் வேண்டும், பிரபுக்களுக்கு இணையாக தனக்குப் பட்டம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார். இந்தியாவில் உள்ள கவர்னருக்குக் கடிதம் எழுதிய மகாராணி, அப்துல் கரீமுக்கு நிலம் ஒதுக்கும்படி ஆணையிட்டார். 'கான் பகதூர்’ என்ற பட்டத்தை கரீமுக்கு வழங்கினார்.ஆக்ராவில் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு அருகில் இருந்த நிலங்களை விலைக்கு வாங்கி பெரிய மாளிகை ஒன்றைக் கட்ட ஆரம்பித்தார். கூடவே, தன்னை இந்தியாவில் ஒரு நவாப்பாக அறிவிக்கும்படி மகாராணியிடம் கெஞ்சினார். அப்துல் கரீமுக்குப் பிள்ளை இல்லை என்பதால், தனது மருத்துவரைக்கொண்டே கரீமின் மனைவிக்குச் சிகிச்சை அளித்தார் ராணி. ஆனாலும், குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.மகாராணியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி அப்துல் கரீமை ஒதுக்கிவைக்க அரண்மனைப் பிரமுகர்கள் முயன்றனர். அது சாத்தியமாகியது. ஆகவே, மீண்டும் ஒருமுறை இந்தியா வந்து சென்றார் அப்துல் கரீம். லண்டன் திரும்பும்போது தனது வாரிசு என, ரஷீத் என்பவரை அழைத்துச் சென்றார்.1900-ம் ஆண்டு நவம்பரில் விக்டோரியா மகாராணி இறந்தார்.எந்த அறையில் ஓர் இளைஞனாக பயத்துடன் மகாராணியின் கால்களைப் பற்றிக்கொண்டு தனக்கு வேலை தரும்படி கெஞ்சினாரோ, அதே அறையில் மகாராணியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. கரீம் குனிந்து மண்டியிட்டு வணங்கி தனது தாயைப் போல மகாராணி தன்னை வாழ்வில் மேலோங்கவைத்தார் என்று கூறி கண்ணீர் வடித்தார்.அதன் பிறகு, அப்துல் கரீமின் சகல அதிகாரங்களும் பறிக்கப்பட்டதோடு, மகாராணி அவருக்கு அளித்த பரிசுகள், கடிதங்கள், நாட்குறிப்புகள் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன. வெறும் ஆளாக அவர் அரண்மனையைவிட்டு வெளியே துரத்தப்பட்டார்.
 
 
இந்தியா திரும்பிய கரீம், இங்கும் நிம்மதியாக வாழ முடியவில்லை. ராணியோடு தொடர்​புடைய ஆவணங்கள், குறிப்புகள் ஏதாவது அவரிடம் இருக்கிறதா என்ற சோதனை தொடர்ந்து நடந்து வந்தது. பத்திரிகைகள் எதிலும் அவர் ஒரு வார்த்தை பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அவர்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மொத்தமாகத் தீ வைத்து எரிக்கப்​பட்டன. அரசின் கண்காணிப்பின் கீழே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனஉளைச்சல் மற்றும் தூக்கமின்மை காரணமாக 1909-ம் ஆண்டு அப்துல் கரீம் மரணம் அடைந்தார். அதன்பிறகும் அவரது இரண்டு மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் இங்கிலாந்து அரண்மனையின் கண்காணிப்பில் இருந்தனர்.  அப்துல் கரீம் மறைவுக்குப் பிறகு, அவரை மகாராணி​யோடு இணைத்து வதந்திகள் வரத் தொடங்கின. ஜான் பிரௌனைப் போலவே, யாரும் இல்லாத ஒரு தனி இடத்தில் அப்துல் கரீம் மகாராணியோடு இருந்தார் என்று பரபரப்பாகப் பேசிக்கொண்டனர். அந்தப் பரபரப்பின் அடுத்த நகர்வு போல, அப்துல் கரீமுக்கும் மகாராணிக்குமான கடிதத் தொடர்பு மற்றும் உறவு குறித்து ஆராய்ந்து தனிநூல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.இன்று, அப்துல் கரீம் குடும்பம் ஆக்ராவில் இருந்து இடம் மாறி திசைக்கு ஒருவராக வாழ்கிறார் கள். ஆனால், விக்டோரியா மகாராணியின் அரண்மனைப் பதிவேடுகளில், நினைவுகளில் கரீம் நடமாடியதும், அதிகாரம் செலுத்தியதும் பேசப் பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சாமான்யர்களின் விதி, இப்படி ஏதாவது ஒரு குருட்டுக் கரம் சுழற்றி மேலே கொண்டுசெல்வதும்... பின்பு தானே தூக்கி எறியப்படுவதுமாக வரலாற்றில் திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருக்கிறது. அப்துல் கரீமின் வாழ்வ இங்கிலாந்து அரண்மனை அமைத்துக் கொடுத்தது. ஆயா அந்தோனி பெரா, தனது வாழ்க்கையைத் தானே தேடிக் கொண்டார்.படிப்பறிவும் வசதியும் இல்லாத ஒரு பெண், 50-க்கும் மேற்பட்ட முறை கப்பலில் லண்டன் போய் வர முடிந்தது, அவரது துணிச்சலான மனதையே காட்டுகிறது. 1800-களில் இந்தியாவுக்கு ராணுவச் சேவைக்காகவும், அதிகாரிகளாகவும் வந்த இங்கிலாந்துவாசிகள் பலர், இங்கு உள்ள சூழ்நிலையில் தங்களது குழந்தைகளை வளர்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். அன்றைய கணக்கெடுப்புப்படி 1000 குழந்தைகளில் 189 பேர், பிறந்த சில வாரங்களிலே இறந்தனர். சாவு எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு சீதோஷ்ண நிலையும் அதனால் அவரது தாயின் உடல்நலக்கேடும் முக்கியக் காரணமாக இருந்தன. ஆகவே, பிறந்த குழந்தைகளை ஐந்து வயது வரை பராமரிக்க பணிப் பெண்கள் தேவைப்பட்டனர்.லக்னோவில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அந்தோனி பெரா, பிழைப்புக்காகத் தாதி வேலை செய்ய ஆரம்பித்தார். அவளது எஜமானர் அவளுக்குச் சூட்டிய பெயர்தான் அந்தோனி பெரா. அவளு​டைய உண்மையான பெயர் அவளுக்கு மறந்து போய் இருந்தது. அந்தக் காலத்தில் ஆயா வேலை செய்பவர்​கள்தான் குழந்தைக்குத் தாய்ப்பால் தர வேண்டும். பகலும் இரவும் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். ஆனால், குழந்தையை முத்தமிடக் கூடாது, ஒன்றாகப் படுத்துக்கொள்ள கூடாது என்பது போன்ற கடுமையான விதிமுறைகள் இருந்தன. மீறினால் சவுக்கடி கிடைப்பதோடு சம்பளமும் கொடுக்க மாட்டார்கள். இதனால், பல ஆயாக்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டதோடு, குறைவான சம்பளமே பெற்றனர்.
 
 
 
வெள்ளைக்கார அதிகாரி தனது குடும்பத்தை இங்கிலாந்து அனுப்பும்போது கூடவே தனது ஆயாவுக்கும் பாஸ்போர்ட் வாங்கித் தந்து அனுப்பி​விடுவான். அப்படி அனுப்பப்பட்டவர்தான் அந்தோனி பெரா. கப்பலில், அவருக்கும் எஜமானிக்கும் தகராறு ஏற்பட்டது. எஜமானி, அந்தோனியை உதைத்து தனி அறையில் பூட்டிவிட்டாள். என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு நாட்கள் இருட்டு அறையிலேயே அடைந்துகிடந்தார் அந்தோனி. இன்னொரு இங்கிலாந்துப் பெண், கதவைத் திறந்துவிட்டு தனது பிள்ளைகளின் ஆயாவாக இருக்க முடியுமா என்று கேட்கவே அதற்கு ஒப்புக்கொண்டார் அந்தோனி.லண்டன் போய் இறங்கியபோது தன்னைப் போலவே இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட ஆயாக்கள் நூற்றுக்கணக்கில் லண்​டனில் இருப்பதை உணர்ந்தார். விசுவாசமாகப் பிழைத்தால் தன்னால் முன்னேற முடியாது என்று அறிந்த அந்தோனி, தந்திரத்துடன் நடந்துகொண்டார். சில மாதங்களிலேயே, அந்த வீட்டு வேலையும் பறிபோனது.இன்னொரு வெள்ளைக்காரக் குடும்பம் கப்பலில் இந்தியா கிளம்பியது. அவர்களுடன் தானும் இந்தியா கிளம்பினார். இந்தியாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். அந்த வீட்டிலும் பிரச்னை ஏற்பட்டது. புதிய எஜமானனைத் தேடிப் பிடித்தார். இந்த முறை அவளது எஜமானராக வாய்த்தவர் ஸ்மித் என்ற இன்ஜினியர். அவரது மனைவிக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது. இதைப் பயன்படுத்தி அந்தோனி நிறைய பணம் கறக்க ஆரம்பித்தார். அந்தப் பெண்ணுக்கு வெயில் தாங்க முடியவில்லை. அதனால், இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அந்தோனியும் அவருடன் சென்றார். இப்படி இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில், ஆயா வேலைக்காக 54 முறை பயணம் செய்து இருக்கிறார் அந்தோனி பெரா. முடிவில், இனிமேலும் இந்தியா போக வேண்டிய தேவை இருக்காது என்று இங்கிலாந்திலேயே வீடு வசதி என அமைத்துக்கொண்டு வாழத் தொடங்கினார்.  1800 முதல் 1900 வரை, ஆயா வேலை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று வந்த ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டதோடு, கப்பல் பயணத்தில் நோயுற்று இறந்துபோய் கடலில் தூக்கி வீசப்பட்ட சம்பவமும் நடந்து இருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளரான வில்லியம் தாக்ரே, சிறு வயதில் இந்திய ஆயா ஒருவரால் தான் வளர்க்கப்பட்டதாகவும், தனது பள்ளிப் படிப்பு முடியும் வரை அந்த ஆயா தன்னுடன் இருந்தார் என்றும் நினைவு கூர்கிறார். இவரைப்போல, இங்கிலாந்தில் ஒரு தலைமுறையே இந்திய ஆயாக்​களால்தான் உருவாக்கப்பட்டது. அந்தோனி பெரா வளர்த்த வெள்ளைக்காரப் பிள்ளைகள் யார், எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல்கள் தெரியவில்லை. ஆனால், தனக்கென்று ஒரு பிள்ளை இல்லாமல் போய் இறந்துபோன அந்தோனியின் கல்லறை, இங்கிலாந்தின் பெல்மாண்ட் பகுதியில் கவனிப்பார் இல்லாமல் இருக்கிறது. பெராவும், கரீமும் வாழ்க்கைச் சூறாவளியால் அடித்துப் போடப்பட்ட மனிதர்கள். இவர்களை சுழற்றி அடித்தது காலனிய அரசின் மாற்றமே. சரித்திர மாற்றம் என்பது சுனாமி போல அடிக்கக்கூடியது. அதற்கு, சாமான்யனும் சக்கரவர்த்தியும் ஒன்றுதான். சரித்திர மாற்றத்தை தனக்குச் சாதமாக்கிக்கொண்டவரும் உண்டு. அதற்குப் பலியானவர்களும் உண்டு. இரண்டுமே எப்படி நடக்கிறது என்பதுதான் இன்று வரை பதில் அறிய முடியாத பெரும் புதிர். 
 
 
விகடன் 

Tuesday, March 27, 2012

வங்கிக் கடன்: வழிமுறை!

 
தமிழகத்தில் சமீப காலமாக வங்கிகளின் வாராக் கடன் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்விக் கடனும், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களும் வாராக் கடனாக மாறி வருகிறது. இந்நிலையில், இனி யார் கடன் கேட்டு வந்தாலும் அவர்களின் பின்னணியை முழுமையாக விசாரித்தபிறகே, கடன் தருவது என்கிற முடிவுக்கு வங்கிகள் வந்துள்ளன.
 
ந்த இக்கட்டான நிலையில் நீங்கள் கடன் கேட்டு விண்ணப்பித்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கடன் மனுவை வங்கிகள் தள்ளுபடி செய்யாமல் இருக்க, உங்களுக்கு கட்டாயம் கடன் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: 

1. இதற்கு முன் வங்கி கிரெடிட் கார்டு அல்லது வேறு ஏதாவது கடனுக்கான மாதத் தவணையை சரியான தேதியில் கட்டாமல் அபராதத்துடன் கட்டியிருந்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு நியாயமான காரணத்தை எடுத்துச் சொன்னால், உங்களுக்கு நிச்சயம் கடன் கிடைக்கும்.
 
2. உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை, சரிவர பராமரிக்கப்படவில்லை என்று தெரியவந்தால், காசோலை கொடுத்து பணம் இல்லாமல் திரும்பி இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இங்கேயும் நியாயமான காரணம் இருந்தால் எடுத்துச் சொல்லி, கடன் பெறுவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.  
 
3. எந்த வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும், எந்த கிரெடிட் கார்டு கடன் இருந்தாலும் அவற்றை நீங்கள் சரியாகத் திரும்ப கட்டாத பட்சத்தில் உங்கள் பெயர் சிபிலில் இடம் பெற்றுவிடும். சிபிலில் உங்கள் பெயர் வந்து விட்டால், உங்கள் கடன் மனு நூறு சதவிகிதம் தள்ளுபடி ஆகும். முதலில் அந்த கடனை கட்டி, சிபிலில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே மீண்டும் உங்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்புண்டு.
 
4. கடந்த மூன்றாண்டு களில் நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனில், உங்கள் கடன் மனு நிராகரிக் கப்படும். எனவே, வரித் தாக்கல் செய்துவிட்டு, வங்கி வாசலை மிதிப்பதே சரி.    
 
5. ஒருவருடைய சம்பாத்தியத்தில்       40 சதவிகிதம் மாதத் தவணை கட்டும் அளவுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். நீங்கள் ஏற்கெனவே வேறு சில கடன் வாங்கியிருந்து, அதற்கு மாதத் தவணையாகப் பெரும் பணம் செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு கடன் கிடைக்காது. எனவே, மற்ற கடன்களை முதலில் அடைத்துவிட்டு, புதிய கடனை கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
 
6. அதிக தொகை கடனாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, மனைவி அல்லது மகன்/மகளை இணை விண்ணப்பத்தாரராக (சிஷீணீஜீஜீவீறீநீணீஸீt) காட்டுகிறார்கள் பலர். இவர்களில் யாரேனும் ஒருவர், வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டவில்லை என்கிற விவரம் சிபில் அறிக்கை மூலம் தெரிய வந்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடியாகும். எனவே, உங்கள் இணை விண்ணப்பத்தாரர் ஏற்கெனவே வாங்கிய கடனை சரியாகத் திரும்ப கட்டியிருக்கிறாரா என்று பாருங்கள்.  
 
7. இணை விண்ணப் பத்தாரர் சகோதரர், சகோதரி, நண்பராக இருந்தாலும் உங்கள் கடன் மனு தள்ளுபடியாக வாய்ப்பிருக் கிறது. மனைவி, கணவர், பெற்றோரை மட்டுமே இணை விண்ணப்பத்தாரராக வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்.
 
8. ஒருவர் ஒரு வேலைக்குச் சேர்ந்து மிகச் சில ஆண்டுகளே ஆகியிருந்தாலும் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு வாய்ப்புள்ளது. பணி நிரந்தரமாகி மூன்றாண்டுகள் கடந்திருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.
 
9. நண்பர்கள் அல்லது உறவினர்கள் என யாராவது வாங்கிய கடனுக்கு நீங்கள் கேரண்டர் கையெழுத்து போட்டு, அவர் அந்த கடனை சரியாக கட்டவில்லை எனில், உங்களுக்கு கடன் கிடைக்காது. நீங்கள் கேரண்டர் கையெழுத்து போட்டவர் கடனைத் திரும்பக் கட்டினால் மட்டுமே உங்களுக்கு கடன் கிடைக்கும்.  
 
10. ஏற்கெனவே கடன் வாங்கி சரியாக திரும்பக் கட்டாமல் போன ஒருவரின் வீட்டு முகவரியும், உங்கள் வீட்டு முகவரியும் ஒன்றாக இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஒரு குழப்பம் நடந்திருப்பது உங்களுக்குத் தெரிந்தால், அதை ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்களுக்கு கடன் கிடைக்கும்.