Search This Blog

Saturday, December 31, 2011

அறிவோமா ஐ.ஐ.டி.?

தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததும், பாராளுமன்றச் சட்டத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் எப்படியாவது இடம் கிடைத்துவிடாதா என்பதுதான் பிளஸ் டூ மாணவர்களின் கனவு. அப்படி என்ன ஐ.ஐ.டி. உசத்தி? பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வியை உலகத்தரத்தில் கற்றுக் கொடுக்கும் தலைசிறந்த கல்வி நிலையங்கள்தான் ஐ.ஐ.டி. தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச மாணவர்களையும் கவர்ந்துள்ளது இந்தக் கல்வி நிலையம். ஒரு நாடு பொருளாதாரம், விவசாயம், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், மின்சாரம் இப்படி எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றிருந்தால் மட்டுமே, அது வளர்ந்த நாடு. இதனை அடைய கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சிறந்த மாணவர்களை உருவாக்கித் தரும் கல்வி நிறுவனங்கள் வேண்டும். படிப்போடு நின்றுவிடாமல், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் கண்டுபிடிப்புகளைக் கற்றுத் தரும் கல்வி நிலையங்களில் முதன்மையானதுதான் இந்த ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள். இப்படிப்பட்ட கல்வி நிலையங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய அரசு அறிவித்தது. 1961ஆம் ஆண்டுதான்.
தற்போது நாட்டில் மொத்தம் 15 ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் இருக்கின்றன. வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தின் ஒப்புதல் தற்போது மாநிலங்களவையில் இருக்கிறது. ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் பதினாறு. இதில் கரக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், தில்லி, குவஹாத்தி, ரூர்கி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் பழைமையானவை. ரோபர், புவனேசுவரம், ஹைதராபாத், காந்திநகர், பாட்னா, ராஜஸ்தான், மாண்டி, இந்தூரில் செயல்படும் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் 2008ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு அங்கீகாரம் பெற்றவை.ஐ.ஐ.டி. கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் ஒவ்வொன்றும் தன்னாட்சிப் பெற்ற பல்கலைக்கழகங்கள். ஒவ்வொரு ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களிலும், இளநிலை தொழில்நுட்பப் படிப்பு, ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் படிப்பு மற்றும் முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த கல்வி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும். இந்திய மாணவர்கள் மட்டுமல்லாது அயல் நாட்டு மாணவர்களுக்கும் இந்த நுழைவுத் தேர்வு பொதுவானது. இளநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கு எப்படி ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதேபோல், முதுநிலைத் தொழில்நுட்பப் படிப்பில் சேருவதற்கு கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினீயரிங் என்று அழைக்கப்படும் கேட் தேர்வை எழுத வேண்டும். அதேபோல் ஐ.ஐ.டி. கல்வி நிலைய வளாகங்களில் கற்றுக் கொடுக்கப்படும் எம்.எஸ். படிப்பு, எம்.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், எம்.பி.ஏ. மற்றும் பி.எச்டி. படிப்புகளில் சேருவதற்கு முறையே ஜேமேட், ஜாம், சீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். 
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 1950 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் ஐ.ஐ.டி.க்கள் மூலம் உருவான தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மேதைகள் மூலம் நாட்டுக்குப் பல்வேறு சிறந்த கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளன. ஐ.ஐ.டி.க்களின் இந்தச் சிறப்பான செயல்பாடுகள் தான், 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் ஐ.ஐ. ஐ.டி. கல்வி நிலையம் உருவாகக் காரணம். தகவல் தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி எட்டவேண்டும். அதில் இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஐ.ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தின் முக்கிய நோக்கம்.ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் சிலவற்றில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்பும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.டெக். படிப்பும் சில கல்வி நிலையங்களில் இரட்டை எம்.டெக். படிப்பும் (டியூயல் டிகிரி)படிக்க வசதி இருக்கின்றன. இக்கல்வி நிலையங்களில் ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்தபட்சம் 40 மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவதால், ஏதேனும் ஒரு படிப்பில் சேருவதற்குக் கடும் போட்டி நிலவி வருகிறது. நுழைவுத் தேர்வு கேள்வித்தாளில் கேட்கப்படும் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்துதான். மற்ற மாநிலத்தில் படித்துவரும் மாணவர்கள் அடிப்படையில் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் இருந்து வருவதால் அவர்களால் எளிதாக நுழைவுத்தேர்வில் வெற்றி பெற முடிகிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு மெட்ரிகுலேஷன், மாநிலப் பாடத் திட்டம், ஆங்கிலோ இந்தியன் பல்வேறு பாடத்திட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவதால், ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களில் மற்ற மாநில மாணவர்களைப்போல் தமிழக மாணவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சேருவதற்கான பயிற்சிகளிலும் மாணவர்கள் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு நகர மாணவர்களுக்குக் கிடைத்ததுபோல கிராமப்பகுதி மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை.ஒவ்வொரு ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்ன? நாட்டில் உள்ள மிகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் எந்தெந்த ஐ.ஐ.டி.க்களில் படித்தவர்கள், ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சேர நுழைவுத் தேர்வில் எம்மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன...? போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பதிவில் . 
புகை படம் அனைத்தும்  ஐ.ஐ.டி கான்பூரில் எடுத்தது

நள்ளிரவில் பெற்றோம்!, ஓ பக்கங்கள் - ஞாநி

 
இந்த வருடம் முடிவதற்குள் இரண்டு மெகா பிம்பங்கள் நொறுங்கிப் போயிருக்கின்றன. ஒன்று அப்துல் கலாம். இன்னொன்று அண்ணா ஹசாரே. அப்துல் கலாமின் பிம்பமாவது சுமார் பத்து வருடங்கள் தாக்குப் பிடித்திருக்கிறது. அண்ணா ஹசாரே பிம்பம் 2011 ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வருடக் கடைசியில் கலைந்துவிட்டது. இரண்டு அசலான மக்கள் பிரச்னைகளில் இருவரும் எடுத்த நிலைதான் இருவரது பிம்பங்களும் காலியாகக் காரணம்.கூடங்குளம் அணு உலைப் பிரச்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் கூடிப் போராடிக் கொண்டிருக்கும்போது, அணு உலை பாதுகாப்பானது என்று அவசர அவசரமாக நற்சான்றிதழ் வழங்க, அப்துல் கலாமை மத்திய அரசு ஏவிவிட்டது. பதவியில் இருந்தபோது, குஜராத் முஸ்லிம் படுகொலைகள் உட்பட எந்தச் சமூகப் பிரச்னையிலும் கறாராகக் கருத்து சொல்லாதவர், இப்போது அணு உலைக்காக ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பினார். எங்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேசுங்கள் என்று கூடங்குளம் மக்கள் எழுப்பிய கோரிக்கையை அவர் கண்டு கொள்ளவே இல்லை. கலாம் வாழ்க்கை முழுக்கவும் ராணுவம் சார்பான தொழில்நுட்ப வளர்ச்சியில் மட்டுமே ஈடுபட்டவர். அவர், அணுகுண்டு, அணு உலைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் எப்போதும் குழந்தைகளுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்து மீடியா வளர்த்த பிம்பத்தால் அவரைப் பெரிய சமாதான விரும்பி என்று தவறாக நம்பிய நம்மேல் தான் தப்பு. கூடங்குளத்தில் இன்னும் இயங்க ஆரம்பிக்காத உலையைப் பாதுகாப்பானது என்று சொல்ல முடிந்த கலாமுக்கு, தமிழ்நாட்டின் இன்னொரு பெரிய கவலையான முல்லைப் பெரியாறில் செயல்பட்டு வரும் அணை பாதுகாப்பானதா இல்லையா என்று சொல்ல தைரியமில்லை.அண்ணா ஹசாரே மீடியா உதவியுடன் அவர் நடத்திய லோக்பால் போராட்டம் ஜனநாயக விரோதமான போராட்டமாக மாறிவிட்டது. பிரதமர், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் அனைத்துக்கும் மேலே ஒரு சர்வாதிகாரியாக லோக்பாலை உருவாக்கியே தீருவேன் என்று அவரும் அவரது குழுவும் காட்டும் பிடிவாதம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. கடைசியில் ஹசாரே மூன்று மாதங்களுக்கொரு முறை உண்ணாவிரதம் நடத்திக் கொண்டே இருப்பது ஒரு தமாஷாகிவிட்டது. ஒரு லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்த்து, அவர் குழுவினர் பல லட்சம் ரூபாய் வாடகையில் மும்பையில் தேர்வு செய்த மைதானத்தில் கடைசியில் திரண்டது வெறும் ஐந்தாயிரம் பேர்தான். 
 
 
அண்ணாவைப் பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ். சார்பாளர்கள்தான் என்பது மெல்ல மெல்ல அம்பலமாகிவிட்டது. 1983ல் அண்ணா ஹசாரே, ஆர்.எஸ்.எஸ்ஸில் பங்கேற்றவர் என்பதை நயி துனியா ஏடு வெளிப்படுத்தியிருக்கிறது. இப்போது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி வகையறாக்களின் நோக்கம், காங்கிரஸ் ஆட்சிக்குத் தொல்லை கொடுத்து, முடியுமானால் இடைத்தேர்தல் வரச் செய்வதுதான். அதற்கு அண்ணா ஹசாரே ஒரு கருவி. அவருடைய லோக்பால் மசோதாவை எந்தக் கட்சியும் முழுமையாக ஒப்புக் கொள்ளாத போதும், காங்கிரசுக்கு எதிராக மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்தார். கடைசியாக இந்த வாரம் லோக்பால் மசோதாவை அவையில் நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி நடவடிக்கை எடுத்தபின்னர் கூட, இன்னும் மூன்று நாட்களில் நிறைவேற்றாவிட்டால் ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வேன் என்றார். மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்தது பி.ஜே.பி.தான். திரும்பவும் கமிட்டிக்கு அனுப்பி சில மாதங்கள் கழித்து நிறைவேற்றலாம் என்று சுஷ்மா ஸ்வராஜ் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.  இதையெல்லாம மீறி காங்கிரஸ் சொன்னபடி லோக்பால் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. தவிர, எதிர்க்கட்சிகள் சொன்ன சில திருத்தங்களோடும். லோக்பாலுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தரும் தீர்மானம் மட்டுமே தோல்வி. இதுகூட எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திருந்தால் நிறைவேறியிருக்க முடியும். லோக்பாலை, தணிக்கை அதிகாரி, தேர்தல் கமிஷன் போல அரசியல் சட்ட ஒப்புதல் உடைய அமைப்பாக ஆக்கியிருந்தால் லோக்பால் நிச்சயம் பலமுள்ளதாக இருக்க முடியும். அப்படி ஆகவிடாமல் தடுத்தது பி.ஜே.பியும் இடது சாரிகளும்தான்.இப்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறுமா என்பது சந்தேகம். அங்கே வேறு திருத்தங்களுடன் நிறைவேறினால், மறுபடியும் அதற்கு ஒப்புதல் தர மக்களவைக்கு வரவேண்டி இருக்கும். மாநிலங்களவையில் சிக்கல் இருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி அங்கே நிறைவேற்ற காங்கிரஸ் அரசு முயற்சிக்கலாம். இந்த இதழ் வெளிவரும்போது நிலைமை தெரிந்துவிடும். முதற்கட்டமாக இப்போதைய லோக்பால் மசோதாவைக்கூட கொண்டு வரவிடாமல் எதிர்க்கட்சிகள் ஒரேயடியாகத் தடுத்தால், அவர்கள்தான் மக்களிடம் அம்பலப்பட்டுப் போவார்கள்.இப்போது வந்திருக்கும் லோக்பால் மசோதாவில் அண்ணா ஹசாரே கோரியபடி பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் தரப்பட்டாகிவிட்டது. லோக்பால் குழுவுக்கு உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் குழுவிலும், லோக்பால் குழுவிலும் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள், சிறுபான்மை மதத்தினர் ஆகியோருக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை அண்ணா ஹசாரே குழுவும் பி.ஜே.பி.யும் எதிர்க்கின்றன. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில், தேர்தலில் நிற்காத சிவில் சொசைட்டி சொல்வதையும் கேட்கவேண்டுமென்று வாதாடுபவர்கள், போராடுபவர்கள், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு லோக்பாலில் பிரதிநிதித்துவம் தருவதை மட்டும் எதிர்ப்பது அவர்களுடைய அசல் நோக்கத்தைக் காட்டிக் கொடுக்கிறது. 
 
லோக்பாலின் தலைவரைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் ஆரோக்கியமான அணுகு முறைதான். லோக்பாலின் கீழ் சி.பி.ஐ.யைக் கொண்டு வரவேண்டுமென்ற அண்ணாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதற்குப் பதில் சி.பி.ஐ.யை அரசு ஏவலாக இல்லாமல் சுயேச்சையாக ஆக்க ஒரு நடவடிக்கையை எடுக்க அரசு முன்வந்திருக்கிறது. சி.பி.ஐயின் இயக்குனரை நியமிக்கும் குழுவில் பிரதமருடன் எதிர்க்கட்சித் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியும் இருப்பார்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதுவும் வரவேற்கத்தக்கதுதான்.லோக்பாலின் கீழேயே விசாரணை அமைப்புகளைக் கொண்டு வரவேண்டுமென்று அண்ணா குழு சொல்வது நிராகரிக்கப்பட்டது சரி. அதில் லோக்பால் இன்னொரு போட்டி அரசு போல ஆகிவிடும் ஆபத்து உள்ளது. அதே சமயம் மத்திய கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ ஆகியவற்றின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரம் லோக்பாலுக்குத் தரப்படுகிறது. இது நல்ல அம்சம். இப்படி சி.பி.ஐ.யின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் உச்ச நீதி மன்றம், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பல நல்ல கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது. எனவே இப்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் மசோதாவை முழுக்கவும் மோசடியானது என்றோ பலவீனமானது என்றோ ஒதுக்க முடியாது. இன்னும் கூடுதல் அதிகாரங்கள் தருவது இன்னொரு போட்டி அரசாக லோக்பாலை ஆக்கும் ஆபத்து கண்டிப்பாக உள்ளது. உண்மையில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள லோக்பாலைக் கொண்டே பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தேர்தல் ஆணையத்தில் டி.என்.சேஷன் தொடங்கி வந்த ஆணையர்கள் பலரும் செய்த முக்கிய பணிகள் எதற்கும் புது சட்டங்கள் போடப்படவில்லை. ஏற்கெனவே ஆணையத்துக்கு இருந்த அதிகாரத்தைக் கொண்டே அவை செயப்பட்டன. எனவே தேர்தல் ஆணையமானாலும், உச்ச நீதிமன்றமானாலும் லோக்பாலானாலும் யார் அங்கே பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதே முக்கியம். இருக்கும் சட்டங்கள் போதுமானவைதான்.லோக்பாலுடன் சேர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த, இப்போதைய மசோதா வழி செய்திருக்கிறது. இதற்காக அரசியல் சட்டம் 253ம் பிரிவைப் பயன்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க., அ.தி.மு.க., திரிணமூல் உள்ளிட்ட பல மாநிலக்கட்சிகள் எதிர்ப்பு காட்டுகின்றன. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு இதன் மூலம் தலையிடுவதாக அவை சொல்வது சரியல்ல. நீங்கள் விரும்பினால் லோக் ஆயுக்தாவை நியமியுங்கள் என்று சொன்னால் கருணாநிதியோ ஜெயலலிதாவோ, லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களோ நிச்சயம் செய்யமாட்டார்கள். லோக் ஆயுக்தா வந்தால் முதலில் நேரடியாக, புழல் சிறைக்கு அனுப்பப்படக் கூடியவர்கள், எப்படித் தாங்களே சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வார்கள்? லோக் ஆயுக்தாவால் எடியூரப்பாவுக்கு ஏற்பட்ட கதி அவர்களுக்கு மறக்குமா? மனித உரிமைகள் ஆணையத்தை ஒவ்வொரு மாநிலமும் இப்போது அமைத்திருப்பதற்குக் காரணம் அது 253ம் பிரிவின் கீழ் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதினால்தான். லோக் ஆயுக்தாவும் அப்படி வற்புறுத்தினால்தான் வரும். இப்போதைய மசோதாவில் தனியார் நிறுவனங்கள், காப்பரேட் கம்பெனிகள், மீடியா ஆகியவை உட்படுத்தப்படவில்லை. என்.ஜி.ஓ. எனப்படும் தொண்டு நிறுவனங்கள் மறைமுகமாகக் கொண்டு வரப்பட்டுவிட்டன என்று சொல்லலாம். பொது நன்கொடையோ, அரசு உதவியோ பெறும் அமைப்புகளும் லோக்பால் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்ற விதியின் கீழ் இவை வரும். இன்னும் லோக்பால் கீழ் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறோமோ அதை காலப்போக்கில் ஒவ்வொன்றாகச் செய்யலாம். அடிப்படை அமைப்பு இப்போது வந்துள்ள மசோதாவினால் அமைக்கப்பட்டுவிட்டால், அடுத்த கட்டம் எளிது தான்.
 
இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது ஒரு நள்ளிரவில்தான் நடந்தது. அதே போல லோக்பால் மசோதாவும் மக்களவையில் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. (என்னை 12 மணிக்கு எழுப்பி புதிய தலைமுறை டி.வி.யில் கருத்து கேட்டார்கள்!) சுதந்திரத்தை விமர்சிக்கும் புதுக் கவிதைகளில் என்னால் மறக்க முடியாதது அரங்கநாதன் எழுதிய இரவிலே வாங்கினோம். இன்னும் விடியவே இல்லை." லோக்பாலும் இரவிலே வந்திருக்கிறது. ஊழலுக்கு விடிவு காலம் வருமா? 
 
இந்த வருட கண்டனம்:
 
1.தன் மகள் கனிமொழிக்காக, பாரம்பரியம் உள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையே பணயம் வைத்து பலவீனமாக்கிவிட்ட கலைஞர் கருணாநிதிக்கு. 
 
2. சி.பி.ஐ.யால் குற்றவாளி என்று நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கும் கனிமொழியைச் சந்தித்ததன் மூலம் தம் கீழ் இருக்கும் சி.பி.ஐ.யை அவமதித்திருக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு.
 
இந்த வருட புதிர்!
 
மாறன் சகோதரர்கள் இன்னமும் திஹாருக்கு அனுப்பப்படாமல் இருப்பது.
 
இந்த வருடப் பூச்செண்டுகள்
 
1.உச்ச நீதிமன்றத்துக்கும் சி.பி.ஐ.க்கும்.ஊழல்களை சகித்துக் கொள்ளத் தேவையில்லை என்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியதற்காக.

2.வலுவான அமைதியான போராட்டத்தின் மூலம் மத்திய அரசை அதிர வைத்திருக்கும் கூடங்குளம், இடிந்தகரை மக்களுக்கு.
   


 

எனது இந்தியா!(வன வேட்டை ) - எஸ். ராமகிருஷ்ணன்......


புது டெல்லி நகரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, டிசம்பர் 15-ம் தேதி 1911-ம் ஆண்டு நடைபெற்றது. 1905-ம் ஆண்டில் இருந்தே பிரிட்டிஷ் அரசு தலைநகரத்தை மாற்றக் காரணங்களைத் தேடிக்கொண்டு இருந்தது. அதன் விளைவுதான், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் அறிவிப்பு என்றும் சொல்கிறார்கள்.  ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வேட்டைக்கும் ஆதியில் நடைபெற்ற வனவாசிகளின் வேட்டை​களுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்ற கேள்வி வரக்கூடும். வனவாசிகள் தங்கள் அதிகாரத்​தைக் காட்டிக்கொள்வதற்காக ஒரு போதும் வேட்டையாடவில்லை என்பதுதான் அதற்கான பதில். ஆங்கிலேயர்கள் அடர்ந்த காடு இல்லாத தேசத்தில் இருந்து வந்தவர்கள். அதிலும், புலி போன்ற வலிமை மிக்க மிருகம் அங்கே கிடையாது. ஆகவே, அவர்கள் புலியை வெறும் ஆட்கொல்லியாக மட்டுமே அடையாளம் கண்டார்கள். புலியைக் கொல்வதை சாதனை என்று கூறி விருது கொடுத்தார்கள். அந்த எண்ணம்தான் இந்திய விலங்குகளை அவர்கள் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது.இங்கிலாந்து கிராமங்களில் பல நூற்றாண்டுகளாக நரி வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்கு. வேட்டை நாய்களை வைத்து நரிகளைத் துரத்தி வேட்டை​யாடுவார்கள். சில நேரங்களில், குதிரைகளில் சென்று துப்பாக்கியால் நரிகளைச் சுட்டுக் கொல்வதும் உண்டு. அது இயற்கையை அழிக்கும் செயல் என்று இங்கிலாந்து அரசு தடை விதித்தது. அவர்கள் நாட்டில் நரியைக் கொல்வதைத் தடை செய்த அரசு, இன்னொரு நாட்டில் காண்டா மிருகத்தைக் கொல்வதைக்கூட தவறாக நினைக்கவே இல்லை. அதுதான், பெரிய முரண்.

மனிதனைக் கொல்லும் இந்த மிருகங்களை ஏன் பாதுகாக்க வேண்டும்? மனிதன் தனது தேவைக்​காக மிருகங்களைக் கொல்வதில் என்ன தவறு இருக்கிறது? என்ற கேள்விகள் நமக்குள் எப்போதும் இருக்கின்றன. மிருகம் எந்த மனிதனையும் இருப்பிடம் தேடிவந்து கொல்வது இல்லை. அவன் தனக்கு இடையூறு செய்கிறான் என்று உணரும்போதுதான், தாக்குகிறது. பசிதான் அதன் ஒரே காரணம். மனிதனும் பன்னெடுங்காலமாகவே முன்பு பசிக்காக விலங்குகளை வேட்டை​யாடி இருக்கிறான். அது ஒரு மானோ, முயலோ, காட்டெருதாகவோ இருக்கக்கூடும். அதிலும், சினையாக உள்ள விலங்குகளை வேட்டையாட மாட்டார்கள். விலங்குகளின் இனப்பெருக்கக் காலத்தில் வேட்டைக்கு செல்லவே மாட்டார்கள். வேட்டையாடிய மிருகங்களை ஊரே கூடி பகிர்ந்து உண்பார்கள். அதுதான் நடைமுறை.காட்டில் புலி ஒரு மிருகத்தை வேட்டையாடி உண்ணும்போது, மீதமுள்ளதை  100 சிறு உயிர்கள் உணவாகப் பகிர்ந்துகொள்கின்றன. அதே செயல்பாடுதான் ஆதிமனிதர்​களிடமும் இருந்தது. ஆனால், மன்னர் காலத்திலும் அதன் பின்பு ஆண்ட வெள்ளைக் காலனிய காலத்திலும்தான் பொழுது போக்கவும், வீரத்தை நிரூபிக்கவும் மிருகங்களை வேட்டையாடினர்.ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மட்டும் அல்ல... சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வேட்டை தொடங்கி மொகலாயர்களின் வேட்டை வரை எவ்வளவோ சாகச சம்பவங்கள் சரித்திரத்தில் இருக்கின்றன. அந்த வேட்டையில், துணைக்குச் சென்ற சாமான்யர்கள் புலி தாக்கி இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஓர் அரசன்கூட பலி ஆனதில்லை. இந்தியாவில் பிரதானமாக வேட்டையாடப்பட்டது நான்கே விலங்குகள். புலி, யானை, காண்டாமிருகம் மற்றும் அரிய வகை மான்கள். இந்த நான்கிலும் காடுகளில் இன்று இருப்பது 20 சதவீதமே. மற்றவை, வேட்டையில் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன.


புலி இனத்தில் ராயல் பெங்கால், தெற்கத்திய சீனம், இந்தோசீனம், சுபத்திரன், சைபீரியஸ், பாலி, ஹாஸ்பின், ஜாவா ஆகிய எட்டு வகைகள் இருந்தன. இவற்றில் 1940-ல் பாலி, ஹாஸ்பின் ஆகிய இனங்களும், 1970-ல் ஜாவா இனமும் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது, நான்கு வகையான புலி இனங்களே இருக்கின்றன. இவற்றில், இந்தியாவில் உள்ள பிரதான வகை ராயல் பெங்கால் புலிகள், சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியா முழுவதும் சேர்ந்து மொத்தம் 40,000-க்கும் மேற்பட்டவை இருந்தன. ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் படித்த இந்திய அதிகாரிகளின் வேட்டையால் அது வெகுவாகக் குறைந்துவிட்டது. 1973-ல் நடத்திய கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கை 1,800. இப்போது 1,411 என்கிறார்கள். ஒரு முதிர்ந்த ஆண் புலியைக் கொல்வது அதன் வம்சத் தொடர்ச்சியை அழிப்பதாகும்.மொகலாய மன்னர் ஜஹாங்கீர், தான் வேட்டையாடிய விலங்குளைப் பற்றிய பட்டி​யலை தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார். தனது 12 வயதில் தொடங்கி 48 வயதுக்குள் அவர் வேட்டையாடிய விலங்குகளின் எண்ணிக்கை 28,532. அவர், தனி ஆளாகக் கொன்ற மிருகங்களின் எண்ணிக்கை  17,167. இவற்றில் சிங்கம், கரடி, புலி, சிறுத்தை, மான், எருது, யானை என சகலமும் அடக்கம்.ரேவா சமஸ்தானத்தின் ஒவ்வொரு ராஜாவும் எவ்வளவு காட்டு மிருகங்களை வேட்டையாடினார்கள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. 1911-ல் ராஜா ரகுராஜ் சிங் கொன்ற புலிகளின் எண்ணிக்கை 91. சிறுத்தைகள் 7, யானைகள் 5. ராஜா பவதேவ் கொன்ற புலிகள் 121. சிறுத்தை 12, கரடி 4. ராஜா குலாப் சிங் தனது முதல் புலியை சுட்டபோது, அவருக்கு வயது 13. அவர் கொன்ற புலிகளின் எண்ணிக்கை 616. இவற்றில் ஆண் 327, பெண் புலிகள் 289. இவை தவிர, யானை மற்றும் கரடிகளின் எண்ணிக்கை 526. இப்படி தலை​முறைக்குத் தலைமுறை அழியும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.புலிகளைப் போலவே, வெகுவாக அழிந்துபோன இன்னோர் இனம் காண்டா மிருகம். இதை வேட்டையாடியதைப்பற்றி பாபர் தனது நூலில் விரிவாக குறிப்பிட்டு உள்ளார். ஒரு காலத்தில் சிந்துச் சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்தியக் காண்டா மிருகம், இன்று அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள இரண்டு இடங்களிலும், நேபாளத்தின் சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் மட்டுமே தென்படுகிறது.இந்தியக் காண்டா மிருகம் தனித்த வகைமை கொண்டது. ஒற்றைக் கொம்புகொண்ட இதற்கு மோப்ப சக்தி அதிகம். ஆனால், பார்க்கும் திறன் குறைவு. பெரும்பாலும் தனித்து வாழக்கூடியது. ஆகவே, இதை எளிதாக வேட்டையாடினார்கள். காண்டா மிருகத்தின் கொம்பு அதிக ஆண்மைச் சக்தி தரக்கூடியது என்ற நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. அதன் கொம்பை வெட்டி எடுப்பதற்காக காண்டா மிருக வேட்டை இன்றும் தொடர்கிறது.


1993-ம் ஆண்டு பூடான் இளவரசி 22 காண்டா மிருகங்களின் கொம்புகளை தைவானுக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்தபோது பிடிபட்டார். அவரிடம் நடத்திய சோதனையில் இதுபோல நூற்றுக்கணக்கான காண்டா மிருகங்களை, மின்சாரம் பாய்ச்சிக் கொன்று அதன் கொம்புகளை விற்றதை ஒப்புக்கொண்டார். ஒரு கொம்பின் விலை ஒன்றரை லட்சம் டாலர். தோலின் விலை 40 ஆயிரம் டாலர். 1683 வரை பிரிட்டனில் பொதுமக்கள் யாரும் காண்டா மிருகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. 1683-ம் ஆண்டுதான் மக்கள் பார்வைக்காக காண்டா மிருகம், அங்கே காட்சிக் கூண்டில் வைக்கப்பட்டது. உலகில் உள்ள காண்டா மிருகங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவில்தான் வசித்தன. ஆனால், தொடர்ந்த வேட்டையாடலில் காண்டா மிருகங்கள் பெருமளவு அழிந்துவிட்டன.இந்தியாவின் ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் ஒவ்வொரு விதமான விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இமயமலைப் பகுதியில் பனிச் சிறுத்தைகள், அஸ்ஸாமில் காண்டா மிருகம், நேபாளம் மற்றும் குவாலியர் பகுதியில் சிறுத்தை மற்றும் புலிகள் வேட்டையாடப் பட்டன. பறவைகள் அதிகம் வரும் பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால், கறுப்பு வாத்துகளைக் கொன்று குவிக்கலாம். குஜராத் காடு களில் மான் வேட்டை, கிர் வனப் பகுதியில் சிங்கம், தெற்கே கேரளாவிலோ யானை வேட்டை சாத்தியம். இவை போக, கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, மிளா என்று இந்தியாவின் வன விலங்குகள் பெருமளவு, மன்னர்களாலும் காலனிய அதிகாரிகளின் சந்தோஷ விளையாட்டிலும் உயிரிழந்தன.கர்ஸன் பிரபு வேட்டையாடிக் கொன்ற புலியின் முன்பு, தனது மனைவியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகவும் பிரலபமானது. இறந்துபோன புலியின் தோலை பாடமாக்கி வைத்துக்கொள்வது, புலி வேட்டைக்காக தனியாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவது இவை எல்லாம் சென்ற நூற்றாண்டு உயர்குடிப் பிரபுக்களின் வழக்கம்.அதிகாரிகளை வன வேட்டைக்கு அழைத்துப் போய் வருவதற்காக சிகாரி எனப்படும் வழிகாட்டிகள் இருந்தார்கள். இவர்கள் காட்டை,  உள்ளங்கை ரேகை போல அறிந்தவர்கள். அவர்களின் துணை இல்லாமல் எந்த ஒரு வெள்ளைக்காரனும் வேட்டைக்குப் போய்விட முடியாது. சிகாரி செய்யும் உதவிக்கு பணமும், குடிப்பதற்கு மதுவும் கூலியாகத் தரப்பட்டது. இந்திய சிகாரிகளைப் போல காட்டு வாழ்வின் நுட்பங்களை அறிந்தவர்கள் உலகில் ஒருவரும் இல்லை என்று, வெள்ளைக்காரர்கள் பாராட்டி இருக்கின்றனர். ஆனால், விலங்குகளைக் கொல்வதை சிகாரிகள் விரும்புவது இல்லை. கொல்லப்பட்ட விலங்குகளின் முன்பு, 'தனது பாவத்தை மன்னிக்கும்படி சிகாரிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்’ என்று, ஆண்டர்சன் என்ற வேட்டையாடி எழுதி இருக்கிறார்.

வன வேட்டையின் வரலாறு குருதிக் கறை படிந்தது. அந்த நினைவுகள்தான், இந்தியன் என்றதும் வனவாசி என்று, வெள்ளைக்காரர்களை இன்றும் நினைக்கவைக்கிறது. கேளிக்கை என்று அறியப்பட்ட வேட்டையாடுதல், இயற்கையின் சம நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எறும்பில் இருந்து புலி வரை அத்தனையும் ஒன்று சேர்ந்து வாழும்போதுதான் காடு முழுமையாகிறது. அதை மறந்து ஓர் இனம் அழிக்கப்பட்டால், அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் மெள்ள அழிக்கப்பட்டு விடும். நகர்மயமாதல், புதிய தொழிற்சாலை அமைப்பது என்று கடந்த 100 வருடங்களில் நிறையக் காடுகள் காணாமல்போயிருக்கின்றன. அதன் விளைவுகளே, இன்று நாம் அனுபவிக்கும் வறட்சி மற்றும் இயற்கை மாறுபாடுகள், சீற்றங்கள். அந்த விளைவுகளின் ஆதார வேர்களை வரலாறு நமக்கு அடையாளம் காட்டுகிறது.நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தக் கானுயிர் கொலைகளைத் தடுக்க, 1991-ம் ஆண்டு  நவம்பர் மாதம் வன வேட்டைத் தடுப்புச் சட்டம் அமலாகியது. அன்றோடு இந்திய வரலாற்றின் கரும்புள்ளி போல படிந்திருந்த வேட்டையாடுதல் அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டுவிட்டது என்றாலும், அலங்காரத்துக்காக மாட்டப்பட்டுள்ள மிருகங்களின் தலைகளும் பாடமாக்கப்பட்ட புலியின் உடலும் கடந்த காலத்தின் வன்முறையை நினைவுபடுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மியூசிய சுவரில் மாட்டப்பட்டுள்ள புலியின் அசையாத கண்களில் அது கேட்க விரும்பிய கேள்வியும் உறைந்துபோய்தான் இருக்கிறது. அதைக் கவனிக்காதது போல நாம் கடந்துவிடுகிறோம் என்பதுதான் நிஜம்.

விகடன் 


Thursday, December 29, 2011

ரஷ்யாவில் பகவத் கீதைக்குத் ஏன் தடை விதிக்கக் கூடாது ?


ரஷ்யாவில் பகவத் கீதைக்குத்  தடை விதிக்கக் கூடாது . இது போன்ற தேசியப் பிரச்சனைகள் ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு, ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு மட்டுமே  கவலை தருவதாக இருக்ககூடாது இத்தகைய தேசிய பிரச்சனைகள் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே கவனத்திற்கு உரியதாகும்.இது வெறும் ஒரு “ஹிந்து பிரச்சனையாக” இருக்கவில்லை. தேசத்தின் கெளரவம்,தேச மக்களின் கெளரவம், இந்தியாவின் நாகரீகப்  பாரம்பரியம் கீதை வாயிலாக உலகிற்கு பாரதம் கொடுத்த மிக சிறந்த அன்பளிப்பான கலாச்சார மூல்யங்கள் என அனைத்தையுமே  தோண்டிப் புதைக்கும் விதத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை அமைந்துள்ளது. .கர்மா என்னும் விஞ்ஞான பூர்வமான கோட்பாடு, பலவகை வாழ்க்கைமுறை ஒரு குணக்குன்றான சமூகம் அமைய, பாரத நாடு கொடுத்துள்ள  சகோதரத்துவம் நிறைந்த கோட்பாடுகள் என அனைத்துக்குமே ஆபத்து வந்துள்ளது. 


ரஷ்யாவில் பகவத் கீதாவை தடை செய்ய முயற்சிப்பதைக் கேட்டு பாரத மக்கள், சினம் கொண்டார்கள். வேதனைக்கு ஆட்பட்டார்கள். டிசம்பர் 19 இல் நாடாளுமன்றத்தில் லாலு பிரசாத், சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் , அருண் குமார் போன்றவர்கள் வெகு மிகத் தெளிவாக பாரத மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திப்  பேசினர்.  பிஜூ ஜனதா தளம் கட்சியைச்  சேர்ந்த பார்துஹாரி மகாதாப் இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். உடனே நாடாளுமன்றம் இப்பிரச்சனை பற்றி விவாதம் செய்ய எடுத்துக் கொண்டது. மகதாப் தன்னுடைய “சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பின் வருமாறு குறிப்பிட்டார் “ரஷ்யாவில் உள்ள ஹிந்துக்களின் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விநோதமாக ரஷ்யாவின் வக்கீல் பகவத் கீதையை தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்துமாறு, தோம்ஸ்க் “டோம்ச்க் மாநில பல்கலைக் கழகத்தைக்” கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இப்பல்கலைக் கழகம் இப்பணியை மேற்கொள்ள தகுதி உடையது அல்ல. சரித்திரத்தை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இப்பல்கலைக் கழகத்தில் இல்லை. இந்திய தேசத்தின் கலாச்சாரம், மொழிகள், இலக்கியங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தறிந்து கொள்ளும் நிபுணத்துவம் கொண்டவர்கள் அப்பல்கலைக் கழகத்தில் இல்லை. பகவத்கீதைக்கு எதிரான இந்த வழக்கில் “மதப்  (கிருஸ்துவ மத) பாரபட்சம் உள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு பெரும்பான்மை மதக்குழுவினர்  சகிப்புத்தன்மை அற்று இந்த வஷக்கை தொடுத்துள்ளனர். எனவே ரஷ்யாவில் உள்ள ஹிந்துக்களின் மத வழிபாட்டு உரிமைகளை, அவர்களின் நம்பிக்கைகளைப் பாதுகாக்க ரஷ்ய அரசை வலியுறுத்த வேண்டுமென நான் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பகவத்கீதை வெறுப்பை போதிக்கவில்லை. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு  ஆவன செய்ய வேண்டும்.” இவ்வாறு பிஜூ ஜனதா தளம் உறுப்பினர் ஆணித்தரமாக பேசினார்.


இவ்விஷயத்தை முதலில் எழுப்பிய முலாயம்சிங் யாதவ் மிகவும் போற்றத்தக்க விதத்தில் பேசினார். அவர் தனது உரையில், “பகவத் கீதா உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, உலகிற்கு சொந்தமான ஒரு புத்தகம். கீதை ஒரு மனிதன் சிறந்த மனிதன் ஆவதற்கு வழி காட்டுகிறது. கீதை சமூகத்தின் நன்மைக்கு வழி காட்டுகிறது. ஒரு புனிதமான வாழ்வை எவ்வாறு வாழ்வது என்பதையும், நேர்மையாக வாழ்வதையும் கீதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். காந்திஜி கீதையை தினமும் படிப்பதை வஷக்கமாக கொண்டிருந்தார். அவருடைய சொற்பொழிவுகளில் பெரும்பாலானவை  கீதையின் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அமைந்து இருந்தன. நம்முடைய நாட்டை கீதையின் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்க அவர் விரும்பினார். ஆனால் இந்த அரசு கீதையை விசேஷமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த உண்மையை எல்லா கட்சிகளுமே ஏற்றுக் கொள்வார்கள். கீதையை நாட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்ய இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது விஷயமாக அரசு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது ஆரம்ப கல்வியில் இருந்து கல்லூரி படிப்பு வரை கீதையின் கோட்பாடுகளை கொண்டு செல்ல முடியும். சபாநாயகர் அவர்களே! எதாவது செய்து நம்முடைய மாணவர்கள் கீதையை படிக்குமாறு செய்யுங்கள். இது நடக்கும் போது காந்திஜியின் கனவு நனவாகும். மக்கள் கீதையின் மையக் கருத்தை புரிந்து கொள்வார்கள். அதன் மூலம் நம்முடைய நாடு இன்னும் சிறந்த நாடாக மாறும். சைபீரியாவின் அட்டர்னி கீதாவை குறித்து பேசியதை அனைவரும் கண்டிக்க வேண்டும். பகவத் கீதையை குறித்து அவர் பேசியதை இந்த முழு அவையும் கண்டிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்”. என்று வலியுறித்தினார்.


இதன் பிறகு லாலு பிரசாத் யாதவ் பேசினார். அவர் தனது உரையில், பகவத் கீதையை அவமதிப்பது இறைவன் கிருஷ்ணனை அவமதிப்பதற்கு நிகராகும். இறைவன் கிருஷ்ணருக்கு எதிராக மிகப் பெரிய சதி நடக்கிறது. கீதாவின் செய்தியில் இருந்து உற்சாகம் பெற்றே அரசியல்வாதிகள் தங்களுடைய வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். பாராளுமன்றம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவின் அரசாங்கம் பகவத் கீதையை தடை செய்வதைக் குறித்து நம்முடைய அரசிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. நம்முடைய அரசு மௌனம் சாதித்துக் கொண்டுள்ளது. இதை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. முழு அவையின் சார்பாக ரஷ்ய அரசின் செயலை நான் கண்டனம் செய்கிறேன். கீதையைத்  தடை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த அவமதிப்புக்கு  நாம் பழி வாங்குவோம். இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அரசையும் நாங்கள் தண்டிப்போம். சமீபத்தில் நம் பிரதமர் ரஷ்யா சென்று வந்துள்ளார். ரஷ்ய அரசிடம் பகவத் கீதை தடை விஷயம் குறித்து நம் பிரதமர் பேசினாரா? பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் எதையும் நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதைத்தான்  நான் சொல்ல விரும்புகிறேன். ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு ஜெய் என்று அனைவரும் சொல்லுங்கள்”  இவ்வாறு லாலு பேசியதும் அவை முழுவதும் கரகோஷம் எழுப்பியது.

உலகிற்கு இந்தியா அளித்த மிகச் சிறந்த நன்கொடை என்று ஒன்று இருக்குமானால் அது பகவத்கீதைதான். மராத்தியில் பகவத் கீதையை பற்றி வினோபா அவர்கள் மிக அருமையான ஒரு புத்தகம் எழுதியுள்ளார். துளசி ராமாயணம் எப்படி ஹிந்தி உலகில் பேரும் புகழும் பெற்று பிரசித்தியோடு உள்ளதோ அதே போன்று வினோபாவின் புத்தகமும் மராத்தி மொழியில் விளங்குகிறது. பகவத் கீதையை தடை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டு இருந்தன. அப்போது நம் பிரதமர் மாஸ்கோவில் இருந்தார். ஆனால் ரஷ்யாவின் எந்த உயர் அதிகாரிகளிடமும்  மன்மோகன் சிங்  இந்த விஷயம் குறித்துப் பேசவில்லை. உலகம் முழுவதிலும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா இன மக்களும் கீதையை படித்துள்ளனர். இப்பூவுலகில் பிறந்த மிகப்  புகழ் வாய்ந்த அனைவருமே கீதையின் உபதேசங்களில் இருந்து ஆக்கமும் ஊக்கமும் பெற்றுள்ளனர்!  இதற்கு மன்மோகன் சிங் மட்டும்தான் விதிவிலக்கோ? 

இக்கட்டுரை டிசம்பர் 21 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும்.  Dec 21 

ஆங்கிலத்தில்: தருண் விஜய் 
தமிழாக்கம்: லா.ரோஹிணி







Wednesday, December 28, 2011

'ஜோக்பால்’

ண்ணா ஹஜாரே குழுவினர் லோக்பாலுக்கு எதிர்ப்பதமாக, எதுகை மோனைக்காக 'ஜோக்பால்’ என்ற வார்த்தையை உருவாக்கி இருக்கலாம். ஆனால், மன்மோகன் அரசு மக்களவையில் தாக்கல் செய்திருக்கும் மசோதாவைப் பார்த்தால், அதுதான் பொருத்தமான பெயர் என்பது தெரிகிறது!இந்த மசோதாவின்படி, மத்தியில் லோக்பால் அமைப்பையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளையும் உருவாக்கினால், அவை பெயர் அளவிலான அமைப்புகளாகத்தான் இருக்கும். அரசு ஊழியர்கள் தொடங்கி, 10 லட்சத்துக்கு மேலாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறும் தொண்டு நிறுவனங்கள் வரை மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான பிரிவினர், லோக்பால் விசாரணை வரம்புக்குள் வந்துள்ளனர். ஆனால், அரசியல்வாதிகளும் பெருநிறுவனங்களும் எஸ்கேப். முக்கியமாக லஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் முதன்மை அமைப்பான மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) நழுவிவிட்டது.


லோக்பால் வரம்புக்குள் பிரதமர் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆனால் வெளியுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி தொடர்பான பிரதமரின் நடவடிக்கைகளை லோக்பால் விசாரிக்க முடியாது. மேலும், பிரதமருக்கு எதிரான எந்த விசாரணையையும், லோக்பாலின் அனைத்து உறுப்பினர்கள் அடங்கிய முழுஅமர்வு மட்டுமே மேற்கொள்ள முடியும். அவர்களில் 75 சதவிகித உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே விசாரணைக்கு உத்தரவிட முடியும்.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, லோக்பால் அமைப்பின் அதிகாரம் என்னவென்றால், கிட்டத்தட்ட ஓர் அஞ்சல்காரரின் நிலைதான். லோக்பால் தானாகவே விசாரணை நடத்தவோ, விசாரணை நடத்த ஆணையிடவோ முடியாது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.) அல்லது மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மூலம் விசாரிக்கப் பரிந்துரைக்க மட்டுமே முடியும். இந்த விசாரணைகளையும் மேற்பார்வையிட முடியுமே தவிர, வழிநடத்த முடியாது.அரசியல் கட்சிகள் இடையே லோக்பால் தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லை என்பதுதான் உண்மை. 'இன்னும் வலுவான அமைப்பாக லோக்பால் உருவாக்கப்பட வேண்டும்’ என்று வெளியில் முழங்கும் கட்சிகள், இந்த மசோதாவைக் கண்டே நடுங்குகின்றன. குறிப்பாக, மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. மசோதா நிறைவேறினால், எல்லா மாநிலங்களிலும் லோக்ஆயுக்தா அமைப்பைக் கட்​டாயம் உருவாக்க வேண்டும் என்பதால், மாநிலத்தில் தங்களுடைய ஊழல்களை, 'லோக்ஆயுக்தா’ அம்பலப்படுத்தி விடும் என்று நடுங்குகின்றன.

- சமஸ்

எனது இந்தியா!(தலைநகர் டெல்லி உருவான விதம் ) - எஸ். ராமகிருஷ்ணன்......

 
வேட்டை என்பது சாகச விளையாட்டா? அல்லது உயிர்க் கொலையா? பசிக்​காக மிருகங்களைக் கொல்வது வேறு, பெருமை அடித்துக்கொள்ள மிருகங்களை கொல்வது வேறு இல்லையா? ஆட்சியில் இருக்கும் மன்னர்களே வேட்டை ஆடுவது சரிதானா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தேடி அலைந்து ஏமாந்து​போயிருக்கிறேன்.வெள்ளைக்காரர்களுக்கு இந்தியா என்றாலே... முரட்டு யானையும், புலியும், பாம்பும்தான் அடை​யாளமாக இருக்கின்றன. அப்படித்தான் அவர்கள், அனுபவக் குறிப்புகளில் இந்தியாவைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். அதை வாசிக்கும் அயல்நாட்டு​காரர்களுக்கு இந்தியா என்பது நாகரிகமற்ற மனிதர்கள் வாழும் ஓர் அடர்ந்த காடு என்று​தான் தோன்றக்கூடும்.இந்தியர்களை நல்வழிப்படுத்தி நாகரிகமடையச் செய்தது ஆங்கிலேய அரசு மட்டுமே என்ற பொய்யை இன்றும் திரும்பத் திரும்ப பிரிட்டிஷ் சரித்திரக் குறிப்புகள் கூறிக்கொண்டு இருக்கின்றன. உணவுக்காக வேட்டையாடுதல் என்பது தொல்குடிகளில் இருந்து தொடர்கிறது. ஆனால், வேட்டை எவ்வாறு பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக, வீரத்தை நிலைநாட்டும் சாகச விளையாட்டாக உருமாறியது? வன விலங்குகள் இன்று பன்னாட்டுச் சந்தைப் பொருள் ஆகியிருப்பது எதனால் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
 
 
எந்தப் புலி, தேசிய விலங்காகப் பெருமையோடு இன்று அறியப்படுகிறதோ, அது நூற்றாண்டு காலமாக வேட்டையாடும் மனிதர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க ஓடிய ஓட்டமும், பட்ட காயமும், அடைந்த வலியும் அறிவீர்களா? ஓடிய புலியின் கால் தடங்களுக்கு கீழே அறியப்படாத வரலாறு மறைந்துகிடக்கிறது. அதிகாரம், மனிதர்களை மட்டும் இல்லை, விலங்குகளைக்கூட தனது வாழ்விடத்தில் இருந்து துரத்தி அடிக்கிறது என்பதுதான் காலம் உணர்த்தும் உண்மை.வரலாற்று வெளி எங்கும் ரத்தம் காயாத கால் தடங்களாக புலியின் மௌனமான கேள்விகள் பதிந்து இருக்கின்றன. காலம் மறந்த அந்தக் கேள்விகள் முக்கியமானவை. அதற்கு மனசாட்சியுள்ள மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும். உண்மையில், ஒவ்வொரு புலியும் மனிதனைப் பார்த்துக் கேட்க நினைப்பது, 'பசித்தால் மட்டுமே நாங்கள் வேட்டையாடுகிறோம். அதுவும் ஒரு மானையோ, முயலையோதான்.  நீங்களோ உங்கள் பொழுதுபோக்குக்காக வேட்டையாடுகிறீர்கள். ஒன்றிரண்டு இல்லை, ஒரே நேரத்தில் 40 மிருகங்களைக்கூடக் கொன்று உங்களை வீரனாக அடையாளம் காட்டிக்கொள்கிறீர்கள் என்றால், நம் இருவரில் யார் கொடூரமானவர்கள்? யார் ஆபத்தானவர்கள்?’காலம் இந்தக் கேள்வியை நம் முன்னே அலையவிடுகிறது. பதில் தெரிந்தும் நாம் சொல்ல மறுக்கிறோம். புலிகளைப் பார்த்து மனிதன் பயந்து நடுங்கிய காலம் போய், மனிதர்களைக் கண்டு புலி அஞ்சி பதுங்கும் காலம் உருவாகிவிட்டது, ஓர் உயிரின் அழிவு மற்றொரு உயிருக்குக் கேளிக்கையாக மாறியிருக்கிறது. ஏராளமான பணம் சம்பாதிக்கும் ஒரு கள்ளத் தொழிலாக இன்று வேட்டை ஆடுவது மாறியிருக்கிறது. இந்த எதிர்நிலை எப்படி உருவானது? அதைச், சமூகம் ஏன் கண்டுகொள்வதே இல்லை?இயற்கையை அழித்தொழிக்க முனைந்தது விலங்குகளை உணவாகக்கொள்ளும் ஆதிவாசிகள் இல்லை, அரசாண்ட மன்னர்களே. அடிமைப்பட்ட இந்தியாவின் முதல் பேரரசியாக இங்கிலாந்து ராணி பதவி ஏற்றார். அவருக்குப் பின், மூன்று இங்கிலாந்து மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். நான்காம் அரசராகப் பதவி ஏற்றவர் வேல்ஸ் இளவரசனும் விக்டோரியாவின் பேரனுமான ஐந்தாம் ஜார்ஜ். இவர், இந்தியாவுக்கு வந்து மன்னராக முடிசூடிக்கொள்ள விரும்பினார். இதற்காக, 40 நாட்கள் பயணமாக இந்தியா வந்து சேர்ந்தார். 1911 டிசம்பர் 12-ம் தேதி சிறப்பு தர்பார் ஏற்பாடு செய்யப்பட்டது. இளவரசர்கள், வைஸ்ராய்கள், குறுநில ஆளுநர்கள், ஐ.சி.எஸ். அலுவலர்கள், இந்தியப் பிரபுக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தர்பார் ஹாலில் கூடியிருந்தனர். புதிய மன்னரும் மகாராணியும் பட்டம் ஏற்றுக்கொண்டார்கள்.
 
 
தமிழ்நாட்டில்கூட பல இடங்களில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவி ஏற்பதைக் கொண்டாடும் விதத்தில், சிலைகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. சென்னையில் உள்ள பனகல் பூங்காவில் ஒரு காலத்தில் ஐந்தாம் ஜார்ஜின் மார்பளவு சிலை இருந்தது. ஐந்தாம் ஜார்ஜுக்கு, வேட்டையாடுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இளவரசராக இந்தியா வந்த நாட்களிலேயே, நேபாளத்தின் அடர்ந்த காடுகளுக்குள் வேட்டையாட வேண்டும் என்று வேல்ஸ் ஆசைப்பட்டார். காலரா நோய் பரவியிருந்த நேரம் என்பதால், அவரது விருப்பம் அப்போது நிறைவேறவில்லை. ஆகவே, மன்னர் ஆன உடனேயே, ஒரு பெரிய வேட்டையை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இதை, நேபாள மன்னர் ரானா ஏற்பாடு செய்தார். இமயமலை அடிவாரத்தில் உள்ள தராய் பகுதியில் முகாம் அமைத்து வேட்டையாட ஏற்பாடு செய்யப்பட்டது. விசேஷ ரயிலில் நேபாள எல்லை வரை சென்ற மன்னர், அங்கிருந்து காரில் காட்டின் உள்ளே அமைக்கப்பட்ட முகாமுக்குப் போனார்.இந்த வேட்டைக்காக 14,000 ஆட்கள், 300 யானைகள், டபுள் பேரல் மற்றும் சிங்கிள் பேரல் துப்பாக்கிகள் என்று விதவிதமான துப்பாக்கிகள் மன்னருடன் அனுப்பிவைக்கப்பட்டன. ஜந்தாம் ஜார்ஜ் மன்னர் வேட்டையாட வரப்போகிறார் என்பதால், நான்கு நாட்களுக்கு முன்பே, 20 தனிப் பிரிவுகள் காட்டுக்குப் போனது. புலிகளின் நடமாட்டம் எங்கு இருக்கிறது என்று அறிவதற்காக, எருமைக் கன்றுக்குட்டிகளை தண்ணீர் துறை அருகில் கட்டிப் போட்டனர். அதை அடிக்க புலி வருகிறதா என்று கண்காணித்தனர். எருமைக் கன்று கொல்லப்பட்டு இருந்த பகுதிகளை அடையாளப்படுத்திக்கொண்டனர். சில இடங்களில் கடுகு எண்ணையை ரப்பர் பந்துகளோடு சேர்ந்து புலி தண்ணீர் குடிக்க வரும் நீர்நிலையில் கலந்துவிடுவார்களாம். புலி, தண்ணீரைக் குடிக்கும்போது பிசுபிசுப்பு ஒட்டிக் கொள்ளவே முகத்தை காலால் துடைப்பது போல தடவித் தடவி கண்ணில் பிசுபிசுப்பு படும்படியாகச் செய்துவிடுமாம். அதன் பிறகு, அந்தப் புலியால் துல்லியமாக எதையும் பார்க்க முடியாது. உடனே அதை வேட்டையாடத் துவங்கிவிடுவார்களாம். இப்படி, புலியை அடையாளம்கொண்டு அதை எங்கே இருந்து சுற்றிவளைப்பது என்று திட்டமிட்டார்கள். புலி வேட்டைக்கு உகந்த காலம் ஜனவரி முதல் மார்ச் வரை. அந்தப்பருவத்தில்தான் புற்கள் செழித்து வளர்ந்து இருக்காது. புதர்களும் காய்ந்துபோயிருக்கும். ஆகவே, புலிகளை எளிதாக மடக்கிவிடலாம். ஒன்று, புதர்களுக்குத் தீ வைத்து புலி தப்பி ஓடும்போது அதைக் கொல்வது, அல்லது புலி பதுங்கி உள்ள இடத்தைச் சுற்றி யானைகளைக்கொண்டு ஒரு வளையம் போலாக்கி, நடுவில் புலியை ஓடவிட்டுக் கொல்வது. இந்த இரண்டில் எதை மன்னர் விரும்புகிறாரோ... அப்படி வேட்டையாடலாம் என்று முடிவு செய்துகொண்டார்கள்.
 
 
யானைகளை வைத்து வளைத்து நேரடியாக வேட்டை​யாடலாம் என்று மன்னர் முடிவு செய்தார். அதுதான் துணிச்சல் மிக்கதாக இருக்கும் என்றார். அதன்படி, முதல் நாள் 300 யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன. ஒரு யானையின் தங்க சிம்மாசனம் கொண்ட அம்பாரியில், ஐந்தாம் ஜார்ஜ் துப்பாக்கியோடு உட்கார்ந்துகொண்டார். 300 யானைகள், அதை ஓட்டிச் செல்லும் ஆட்கள், சிகாரி எனப்படும் வழிகாட்டிகள், உடல் வலிமைகொண்ட கிராமவாசிகள், வேட்டையாடிய புலியின் தோலை உரிக்க தனித் திறன்கொண்ட ஆதிவாசிகள், வேட்டையைப் படம் பிடிக்க புகைப்படக் கலைஞர் என ஒரு படையே புலி வேட்டைக்குப் புறப்பட்டது.புலி பதுங்கி உள்ள இடத்தை 300 யானைகள் வளைத்துக்கொண்டன. புலி எங்கே போவது என்று தெரியாத சீற்றத்தில் பாய்ந்தது. யானை மீது இருந்த வீரர்கள் குத்தீட்டியால் புலியைத் துரத்தி மன்னர் முன்னால் போகும்படி செய்தார்கள். புலி ஆவேசமாகப் பாய்ந்தது. ஜந்தாம் ஜார்ஜ், தனது துப்பாக்கியால் புலியைச் சுட்டுக் கொன்றார். உடனே, கூட்டம் கைதட்டிப் பாராட்டியது. சுட்டுக் கொன்ற புலியோடு மன்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்படியாக, ஐந்து நாட்கள் தொடர்ந்த வேட்டையில் 39 புலிகள், 18 காண்டா மிருகங்கள், 4 கரடிகள், 6 காட்டு எருதுகள் கொல்லப்பட்டன. இவை தவிர, பறவைகள், குழிமுயல்கள் மற்றும் மான்கள் ஆகியவை உணவுக்காக வேட்டையாடப்பட்டன.புதிய மன்னரின் பதவியேற்பு, 39 புலிகளைக் கொன்று உற்சாகமாகத் தொடங்கியது. இந்தப் பணிக்கு தன்னோடு உதவியாக வந்த 14,000 பேருக்கும் மன்னர் சன்மானம் வழங்கினார். நேபாள மன்னருக்கு விசேஷ சலுகைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.பதிலுக்கு, நேபாள மன்னர் யானை முதல் கிளி வரை 70 விதமான காட்டு மிருகங்களைக் கூண்டில் அடைத்து இங்கிலாந்தில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குப் பரிசாகக் கொடுத்தார். பிறந்த காடு தவிர வேறு ஒன்றும் அறியாத கரடியும், காண்டா மிருகமும், ஓநாயும் கப்பலில் பயணம் செய்து இங்கிலாந்தின் கண்காட்சிப் பொருளாக மாறின. அந்த ஊரின் குளிரும் உணவும் சேராமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப்போயின.நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது என்பார்கள். அது உண்மைதான். மனிதர்​கள்தான் நினைவுகளைத் தூர எறிந்து​விட்டு எந்த இழிநிலைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து​விடுவார்கள். மிருகங்கள் அப்படி இல்லை. பட்டினி கிடந்து சாகுமே அன்றி, அது எளிதில் தன்னை விட்டுக்கொடுத்து விடாது. ஒரு மிருகம் பணிந்துபோகிறது என்பது மனிதன் மேல் உள்ள அன்பால் மட்டுமே, பயத்தால் இல்லை.ஒரே வேட்டையில் இவ்வளவு புலிகளைக் கொன்ற சந்தோஷமோ என்னவோ, ஐந்தாம் ஜார்ஜ் அது வரை இந்தியாவின் தலைநகரமாக இருந்த கல்கத்தாவில் இருந்து மாறி, புதிய தலைநகரமாக டெல்லியை அறிவித்தார். பிரிட்டிஷ் கட்டடக் கலை நிபுணர் எட்வின் லூட்டியன்ஸிடம் புதிய தலைநகரம் அமைப்பது பற்றி அரசர் ஆலோசனை செய்தார். மனிதர்களின் சமாதிகள் இல்லாத வெற்று நிலமாக ஒரு பெரிய பரப்பளவு இருந்தால், அதில் ஒரு புதிய டெல்லி நகரை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார் எட்வின் லூட்டியன்ஸ். அப்படித்தான் புது டெல்லி உருவானது!
 
 
விகடன் 
 

 
 
 

Tuesday, December 27, 2011

ஜப்பானிய மொழியில் திருக்குறள் பாரதியார் பாடல்கள் ..

 
மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தனது 91-வது வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்து. கடந்த 1981-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர். அதேபோல் ஜப்பானின் ஷூமாடா நகரில் வசிக்கும் சுஸோ மாட்சுனாகா (91) என்பவரும் ஒரு ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவள்ளுவரும் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்.
 
 
ஜப்பானில் அரசு அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளராக இருந்து வரும் சுஸோ மாட்சுனாகா, ஜப்பானிய மொழியின் மூலத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் மொழி ஆய்வு செய்து வந்துள்ளார். இதற்கிடையே இவருடைய பேனா நண்பராக 1980-ல் அறிமுகம் ஆனார் சேலத்தைச் சேர்ந்த சொ.மு.முத்துவின் மகனும் பொறியாளருமான எம்.சேகர் (64). மாநாட்டுக்காக 1981-ல் தமிழகம் வந்த சுஸோ மாட்சுனாகா தனது பேனா நண்பரின் முகத்தைக் காண்பதற்காக சேகரின் வீட்டுக்கு வந்தபோது, அவரது தந்தையாரும் அரசு ஊழியருமான சொ.மு.முத்துவை சந்தித்துள்ளார். இருவரும் இலக்கியம், திருக்குறள், தமிழ் கலாசாரம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது பாரதியார் குறித்து பேச்சு எழுந்தது. பாரதியைக் கேள்விப்பட்ட சுஸோ, அவர் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களை கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு குயில்பாட்டு ஆங்கில மொழி பெயர்ப்பு நூலையும் பாரதி குறித்த நூல்களையும் தபாலில் அனுப்பியுள்ளார் முத்து. இந்த நூலில் ஏற்படும் தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள், சந்தேகங்களை ஆங்கிலத்தில் கடிதமாக எழுத, அதற்கு முத்து ஜப்பானுக்கு பதில் கடிதம்  அனுப்பியுள்ளார். இந்த கடிதப் போக்குவரத்து கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பாரதியை நன்கு கற்றுத் தேர்ந்த சுஸோ, ஜப்பானின் ஜப்பானீஸ் மொழியில் சுப்பிரமணிய பாரதியின் குயில்பாட்டு, இதர பாடல்கள் என்ற தலைப்பில் புத்தகமாகவே வெளியிட்டார். இதன் தாக்கமாகவே டோக்கியோவில் 1982 ஏப்ரல் 6-ல் பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சதந்திர கதைகள், வள்ளலாரின் மணிமொழிகள், மணிமேகலை, நாலடியார் ஆகியவற்றின் ஆங்கில பதிப்புகளை அனுப்பி, உரிய விளக்கத்தை கடிதத்தில் அனுப்ப அவற்றையும் ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்துள்ளார் சுஸோ. ஜப்பான் மொழியில் வெளியான  வள்ளலாரின் குரல் என்ற நூலின் வெளியீட்டு விழா 1986 ஜனவரியில் வடலூரில் பொள்ளாச்சி ந.மகாலிங்கம், ஊரன் அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக கலை, இலக்கிய, கலாசாரம், திருமண முறை போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்பிய சுஸோ மாட்சுனாகா, சொ.மு.முத்துவின் உதவியுடன் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் குறித்து கடிதம் மூலம் அனுப்பிய தகவல்களைத் தொகுத்து, எனது கடிதங்களில் இந்தியாவைப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் 4 நூல்களை ஜப்பானிய மொழியில் வெளியிட்டு, அதன் பிரதிகளையும் முத்துவுக்கு அனுப்பியுள்ளார்.
 
 
இந்திய கலாசாரத்தை சுஸோ மாட்சுனாகா மூலம் ஜப்பானியர்கள் அறிந்து கொள்ள உதவியமைக்காக ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்துவுக்கு கடந்த 2007 ஆகஸ்டில் ஜப்பான் அரசாங்கம் தபால் தலை வெளியிட்டுள்ளது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் இந்த கௌரவம் சேலத்தைச் சேர்ந்தவருக்கு கிடைத்திருப்பது உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கே இன்னும் தெரியாமல் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு  இருவரையும் சந்திக்க வைக்க முயற்சி ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் சுஸோ மாட்சுனாகாவும், ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்துவும் கடைசியாக 1981-ம் ஆண்டு நேரில் சந்தித்துக் கொண்டனர். அதன் பிறகு கடிதம் மூலமாகவே ஆங்கில மொழியில் தொடர்பு கொண்டு வருகின்றனர். இருவருக்கும் 91 வயது ஆன நிலையிலும் இருவரும் நல்ல திடகாத்திரமாகவும், தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்பவர்களாகவும் உள்ளனர். 
 
கே.தங்கராஜா, சேலம் 

Saturday, December 24, 2011

ஹேப்பி கிறிஸ்மஸ்!


கிறிஸ்துமஸ் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் சாண்டா கிளாஸ். 4-ஆம் நூற்றாண்டில் டர்கியில் வாழ்ந்த நிக்கலஸ் என்ற பாதிரியாரின் நினைவாக உருவாக்கப்பட்டவர்தான் சாண்டா கிளாஸ்.இவரை கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் இணைத்து வைத்தவர்கள் ஹாலண்டுகாரர்கள். ‘டச்‘ மொழியில் சின்டர் கிளாஸ் என்று அழைக்கப்பட்ட அவரை அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஹாலண்டுகாரர்கள் அங்கே அறிமுகப்படுத்திய பின் உலகம் முழுவதும் சாண்டா கிளாஸாகப் பிரபலமானார்.

கிறிஸ்துமஸ் பரிசு:


கிறிஸ்துமஸ் நாட்களில் சிம்னி அருகே முன்தினம் சிவப்பு நிற சாக்ஸ் தொங்கவிடப்படுவதற்குப் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி கூறப்படுகிறது.இளகிய மனம் படைத்த நிக்கலஸ், மகள் திருமணத்தை நடத்த பணமின்றி தவித்த ஏழைத் தகப்பனுக்கு உதவ, சில தங்கக் காசுகளை அவர் வீட்டு சிம்னி வழியாகப் போட, அது அங்கே காயவிடப்பட்டிருந்த சாக்ஸில் விழுந்ததாம். இப்படியே அந்த ஏழையின் அடுத்த பெண் திருமணத்திற்கும் உதவுகிறார் நிக்கலஸ். கடைசிப் பெண் திருமணத்தின் போது அவர் தங்கக் காசுகளைப் போடுவதை அந்த ஏழை பார்த்து விடுகிறார். அதிலிருந்து அப்படியொரு பழக்கம் தோன்றியதாம்.

கிறிஸ்துமஸ் அலங்கரிப்பு:

கிறிஸ்துமஸ் விழாவிற்காக வீடு ஒட்டடை அடிக்கப்பட்டு சிலந்திகள் விரட்டப்பட்டன. ஆனால் இரவு சில சிலந்திக் குட்டிகள் கிறிஸ்துமஸ் மர அலங்கரிப்பைக் காணும் ஆவலுடன் வந்தன. மரத்தில் ஏறி இறங்கி விளையாடி அவை விட்டுச் சென்ற இழைகளால் கிறிஸ்துமஸ் மரத்தின் அழகு குலைந்தது. அங்கே வந்த குழந்தை ஏசுவின் கைபட்டதும் அவை வெள்ளி இழைகளாக மாறி மினுமினுத்தனவாம்.இதை நினைவுகூற ஏற்பட்டதுதான் ‘டின்சல்’ எனப்படும் தங்க ஜரிகை அலங்கரிப்பு. சிலர் சிறு சிலந்தி பொம்மைகளையும் கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டித் தொங்கி விடுகிறார்கள்.

யூல் லாஃக்:


கிறிஸ்துமஸ் தொடங்கி 12 நாட்கள் வரை யூல் லாஃக் எனப்படும் ஒருவகை மரத்துண்டுகளை எரிக்கும் வழக்கமும் சில நாடுகளில் உண்டு. இது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. சிலர் இந்த யூல் லாஃகை போன்ற வடிவமைப்பில் யூல்டைடு லாக் என்ற சிறப்பு வகை கேக்கைத் தயாரிப்பார்கள்.

12 நாள் கொண்டாட்டம்:

பழங்காலத்தில் கிறிஸ்துமஸ் 12 நாட்கள் கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறந்ததை அறிந்து அவரைக் காண மூன்று அரசர்கள் பரிசுகளுடன் வந்தனர். அவர்கள் பன்னிரண்டு நாட்கள் பயணம் செய்து பெத்லஹேம் வந்தடைந்தனர். இன்றும் பலர் 12 நாட்கள் கழித்து ஜனவரி 5 அன்றுதான் கிறிஸ்துமஸ் மர அலங்கரிப்பை நீக்கி அப்புறப்படுத்துவார்கள்.

பாக்ஸர் டே:

கிறிஸ்துமஸ் மறு தினம் பாக்ஸர் டேவாக கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அன்று அரசாங்க விடுமுறை கூடக் கொடுக்கப்படுகிறது. இந்தத் தினத்திற்கு ‘பாக்ஸர் டே’ என்ற பெயர் வர பல காரணங்கள் கூறப்படுகின்றன.

* பழங்காலத்தில் கிறிஸ்துமஸுக்கு மறு தினம்தான் தேவாலயத்தின் உண்டியல்கள் திறக்கப்பட்டதாம்.

* கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து மறு தினம் வேலைக்குத் திரும்பும் வேலைக்காரர்கள் ஒரு பெட்டி கொண்டு வருவர். அதில் முதலாளி பரிசுப்பணத்தை போடுவாராம். 

* கிறிஸ்துமஸ் அன்றும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் இன்றுதான் பரிசுப் பெட்டியைத் திறந்து பார்ப்பார்கள்.

கிறிஸ்துமஸ் கேரல்:

கேரல் என்றால் ஆனந்தப் பாட்டு என்று பொருள். கிறிஸ்து பிறந்த போது தேவதைகள் ஆனந்த கீதம் பாடித் தொடங்கி வைத்ததுதான் இந்த கிறிஸ்துமஸ் கேரல் பாடும் வழக்கத்திற்கு வித்திட்டது எனலாம். கிறிஸ்துமஸ் விழாவிற்கு சில தினங்களுக்கு முன்பிருந்தே பக்திப் பாடல்களை பாடியபடி கையில் மெழுகுவத்தி ஏந்தி சிறுவர் முதல் பெரியவர் வரை வீதிகளில் உலா வருவார்கள். இந்தப் பழக்கம் சுமார் 17ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தொடங்கியது.

ஊர்ப் பெயர்கள்:

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சாண்டா கிளாஸ் என்ற பெயரிலும் கிறிஸ்துமஸ் என்ற பெயரிலும் ஊர்கள் உள்ளன. இண்டியானா மாநிலத்திலும் சாண்டா கிளாஸ் என்ற பெயரிலும், ஃபிளோரிடாவில் கிறிஸ்துமஸ் என்ற பெயரிலும் ஊர்கள் உள்ளன.

சாண்டாவுக்குப் பரிசு:

பொதுவாக சாண்டாதான் குழந்தைகளுக்குப் பரிசு கொடுப்பார். ஆனால் சில மேலைநாட்டுக் குழந்தைகள் சாண்டாவுக்குச் சாப்பிட ஏதேனும் வைக்கிறார்கள்.நியூஸ்லாண்டில் குளிர்பானங்களும், (அங்கே கோடைக்காலம் என்பதால்), அயர்லாண்டில் ‘பை’ எனப்படும் ஒருவகை தின்பண்டத்தையும் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் சாண்டாவுக்காக வைக்கின்றனர். ஜெர்மனியில் தங்களுக்குத் தேவையான பரிசைப் படமாக வரைந்து அதன் மீது சர்க்கரை வைத்து ஜன்னல் அருகிலும், நார்வே குழந்தைகள் போரிட்ஜ் எனப்படும் பாயசம் போன்ற இனிப்பைத் திறந்த வெளியிலும், ஸ்வீடனில் ஃப்ரௌனீஸ் என்ற தின்பண்டமும் சாண்டாவுக்காக இரவில் விட்டு வைக்கிறார்கள்.வீட்டு முகப்பில் நாம் மாவிலை கட்டுவது போல ஹோலி என்ற பசும் இலைகளை வைப்பர். ஏசு கிறிஸ்து நடந்த பாதையில் முளைத்ததாகக் கருதப்படும் இந்த ஹோலி செடி, கடுமையான பனியிலும் பசுமையாக இருக்கும். தீயசக்திகள் வீட்டுக்குள் நுழையாத வண்ணம் காக்கும் தன்மை இந்த ஹோலி செடிக்கு உள்ளது என்பதும் நம்பிக்கை.

- விஜயலட்சுமி   
     

தமிழ் சினிமா தடுமாறுவது ஏன்?


திரைப்படங்கள் இன்று 10 நாள் ஓடினாலே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடப்பட முடியாத நிலை.சிறிய பட்ஜெட் நல்ல படங்கள் வராததற்கு யார் காரணம், படத் தயாரிப்பாளர்களா? திரையரங்கம் பற்றாக் குறையா? சிறிய படங்களை வாங்க மறுக்கும் விநியோகஸ்தர்களா? அல்லது சன் குழுமம் - ரிலையன்ஸ் போன்ற பெரிய முதலைகளின் ஆதிக்கமா?

இயக்குனர் டி.பி. கஜேந்திரன்:


ஆர்வக் கோளாறில் படம் தயாரிக்க வருபவர்களால்தான் இன்று சின்ன பட்ஜெட் படம் திரையிடப்பட முடியாத நிலை உள்ளது. படம் பற்றிய நுணுக்கம் இல்லாமல் படம் எடுப்பது. அவர்களே நடிப்பது, அவர்களே கதை, அவர்களே இயக்குவது. பிறகு எப்படி விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள். தன்னை பிரகடனப்படுத்த வேண்டும் என்ற ஆசை. தான் புகழ்பட வேண்டும் என்ற வெறி, அப்புறம் நஷ்டம். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றால், சினிமா சினிமாவாக வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும். கட்சி பேதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய ஹீரோ என்றால் 10 பேர். அவர்கள் படம் வருடம் முழுவதும் ஓடாது. எனவே, சிறிய பட்ஜெட் படங்கள் வளர அரசுதான் கன்ட்ரோல் கொண்டு வரவேண்டும். தியேட்டர் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

‘திவ்யா மீது காதல்’ மதன் - தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர்:


சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காதது; தியேட்டர் குறைந்ததுதான் காரணம். எல்லாம் ‘மால்’ ஆகிவிட்டது. அங்கு சின்னப் படங்கள் போடுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். செக்ஸ் படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். அதற்கு தியேட்டர் கிடைக்கிறது. ஆனால், நல்ல படங்கள் வாங்க மறுக்கிறார்கள். நல்ல படம் பண்ணினால் திரையரங்கு, விநியோகஸ்தர்கள் ஆதரவு தர வேண்டும். என்னுடைய படம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால், வெளியிட முடியவில்லை. காரணம், ஒவ்வொரு 2 மாதம் முன்பும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இந்த டிசம்பரில் வெளியிட நினைக்கிறேன். இன்னும் பெரிய படங்கள் 10 இருக்கிறது. எப்படித்தான் வெளியிடுவது. இந்த நிலை மாற வேண்டும்."

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி:


‘தென்மேற்குப் பருவ காற்று’ படத்தை வெளியிட முடியாமல் நான் பட்ட பாடு பிரசவ வலியை விடக் கொடுமையானது. தியேட்டரில் நல்ல வரவேற்போடு மக்கள் பேசுவதற்குள் படத்தை எடுத்துவிட்டார்கள். என்னுடைய படம் 25வது நாள் போஸ்டர் எங்காவது ஒட்டப்படுமா என்று ஏங்கியிருக்கிறேன்.நல்ல படங்களைத் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை எல்லோரும் கொண்டாட வேண்டும். சின்ன பட்ஜெட் படங்கள்தான் சினிமாவுக்குத் தரமான தமிழ்க் கலாசாரப் படமாக உருவாகும். படத்தைப் பார்த்து மக்கள் பேசப்படும்வரை, படம் தியேட்டரில் ஓட்டப்பட வேண்டும்." 

‘தாண்டவக்கோன்’ பட இயக்குனர் சுப்பு சுஜாதா:

சினிமா உலகில் துரோகங்கள் மிகவும் மலிந்து போய்விட்டன. நாம் யாரை பாவம் என்று உள்ளே கொண்டு வருகிறோமோ, அவர்களே நமக்கு ஆப்பு வைக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குனரையும் அவர்களது கருத்தை, சுதந்திரமாகச் சொல்ல விட்டால்தான் நல்ல படைப்பைத் தர முடியும். சின்ன பட்ஜெட் படங்கள் தர மில்லை. புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். அதனால், விநியோகஸ்தர்கள் வாங்கி வெளியிட மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். அப்படிப் பார்த்தால் பாலா சார், பிரபுசாலமன் சார் எப்படி நிலைத்திருக்க முடியும். திரை அரங்க உரிமையாளர், விநியோகஸ்தர்களை நாம் குறை சொல்வதைவிட ‘யூனிட்’ ஒற்றுமை மிக முக்கியம்’. அப்போதுதான் நல்ல படம் தர முடியும்." 

ஒளிப்பதிவாளர் கிச்சா:

இன்றைய சினிமா டிஜிட்டல் உலகமாக மாறிவிட்டது. செலவும் குறைகிறது. ஆனால், ஃபிலிமில் படம் செய்ய பட்ஜெட் எகிறுகிறது. ஒரு படத்துக்கு 30 லட்சம் ஃபிலிம் வாங்க முன் பணம் கட்ட வேண்டும். அப்புறம் தினமும் ஷூட்டிங் செலவு. இது பெரிய தயாரிப்பாளர்களால்தான் முடியும்.சின்னத் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் முறையில் 30 முதல் 50 லட்சத்துக்குள் படம் முடித்து விடுகிறார்கள். ஆனால், சென்சார், வீடியோ சென்சார் என்று அறிக்கை தருகிறார்கள். வீடியோ சென்சாரை விநியோகஸ்தர்கள் வாங்க மறுக்கிறார்கள். ரசிகர்களுக்குத் தேவை நல்ல படமா? நல்ல கதையா என்றுதான் கேட்கிறார். இது ஃபிலிமா, டிஜிட்டலா என்று பார்ப்பதில்லை. எனவே டிஜிட்டல் படங்களையும் விநியோகஸ்தர்கள் வாங்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலை மாறும்."

‘முன்னவர்’ பட இயக்குனர் ஆர்.கே. வேல்ராஜ்:

ஆசிரியரைப் பெருமைப்படுத்தும் விதமான படம் எடுக்க வேண்டும் என்று நல்ல தரமான படம் எடுத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் ‘படம் வெளியிட முடியவில்லை. படம் பார்ப்பவர்கள் ‘ஏன் கவர்ச்சி இல்லை, வன்முறை இல்லை’ என்று கேட்கிறார்கள். அப்படியிருந்தால் தான் படம் வாங்க முடியும் என்று சொல்வதைப்போல் உள்ளது. நல்ல தரமான படம் எடுத்தால் இவ்வளவு சோதனையா என நொந்து போய் உள்ளேன். அப்புறம் புதுமுகங்கள் வைத்துப் படம் எடுத்துள்ளீர்கள். ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லை என்கிறார்கள். கொஞ்சம் பிரபலமான நடிகர் ஒரு கோடி என்கிறார்கள். எங்கே போவது? என்னுடைய படமே 60 லட்சம் பட்ஜெட்தான். நல்ல கதை, கவர்ச்சி இல்லை. தரமான படம் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் படம்தான் என்ன பண்றது? இனிமேல் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் 6 லட்ச ரூபாய், பட்ஜெட் என்றால் படத்தைச் சொந்தமாக வெளியிட, மேலும் 60 லட்சம் வைத்துக் கொண்டால் மட்டுமே சின்ன பட்ஜெட் படம் வெளியிட முடியும்."

ராஜா பக்கிரிசாமி - மேனேஜர் - தங்கர்பச்சான் அஸிஸ்டெண்ட் (மெரீனா - படத் தயாரிப்பு நிர்வாகி):

நார்த் இண்டியர்கள் ஆதிக்கம் தமிழகத்தில் பரவிவிட்டது. மெகா மார்ட் போல் தியேட்டர்கள் முழுதும் சன் டி.வி. குழுமத்திடம், ரிலையன்ஸ் குழுமத்திடம் உள்ளது. 1450 தியேட்டரில் குறைந்தது 900 தியேட்டர்கள் அவர்கள் வசம் உள்ளது. இதை மீட்டு எடுத்தால் ஒழிய சின்னப் படங்கள் தலை நிமிர வாய்ப்பே இல்லை. இன்று தமிழகம் முழுதும் அசாம், சிக்கிம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மேகாலயா மக்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்களுக்காக இனி ஹிந்திப்படங்கள் ஸ்பெஷலாகப் போட வேண்டி இருக்கும். புதுமுகம் என்ற பெயரில் ரசனை இல்லாதவர்களை நடிக்க வைக்கும் தயாரிப்பாளர்கள் மாற வேண்டும். தியேட்டர்கள் முன்போல, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அரசுதான் முடிவு செய்ய வேண்டும்."

- விஜய்கோபால்      

 

புத்தாண்டுக் கொண்டாட்டம்

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் புது வருடம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றன. ஜனவரி 1 புது வருடம் என்பது கிரிகேரியன் காலண்டர்படி உலகம் முழுவதும் வெகு பிரபலமாகக் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே! கிறிஸ்து பிறந்து எட்டாவது நாளாக வரும் ஜனவரி 1 அன்று தான் அவருக்கு நாமகரணம் சூட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. மேற்கத்திய நாடுகளிலேயே, வரலாற்றில் பல தினங்கள் - டிசம்பர் 25, மார்ச் 1, செப்டம்பர் 1 - என புது வருடம் பின்பற்றப் பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் நவீன கால கட்டத்தில் ஜனவரி 1 புது வருடம். அதேபோல் கொண்டாட்ட முறைகளும், புது வருட சம்பிரதாயங்களும் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது.
பிரிட்டனில் புது வருடம்
ஜனவரி 1 நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு முதன் முதல் வீட்டுக்கு வரும் ஆண்தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகிறார்கள். அந்த ஆண் வரும் பொழுது பணம், ப்ரெட் என்று அந்தக் குடும்பத்துக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொண்டு வருவார். அப்படிக் கொண்டு வந்தால், அந்த வருடம் முழுவதும் அந்தக் குடும்பத்துக்கு எல்லா வளமும் கிட்டும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு பெண்ணோ, செம்பட்டை முடிக்காரரோ அச்சமயத்தில் வந்தால், அதைக் கெட்ட சகுனமாகக் கருதுகின்றனர்.
சீனாவில் புது வருடம்
நமது நவராத்திரியைப் போல் சீனர்கள் புது வருடத்தை ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறார்கள். சீனப் புது வருடம் - யுவான் டான் - ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20க்குள் வரும். நமது ஊரில் இருப்பது போன்று அங்கும் சந்திரனின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடுவதால், குறிப்பிட்ட ஆங்கிலத் தேதியில் வரும் என்பதற்கில்லை. புது வருடம் அதிர்ஷ்டம், சந்தோஷம், செல்வம் என அனைத்தையும் கொணரும் என்றே சீனாவிலும் நம்புகிறார்கள். அன்றைய தினம் பெரிய அளவில் பேரணி, அணிவகுப்புகள் சாலைகளில் நடக்கும். அதை லட்சக்கணக்கான மக்கள் நின்று கண்டுகளிப்பார்கள். சீனாவைப் பொறுத்தவரை சிங்கமும், ட்ராகன் என்றழைக்கப்படும் கடல் நாகமும்தான் முக்கிய இடம் பெறும். புது வருடத்திலும் இந்த விலங்குகள் கொண்ட தோரணமும், ஆடை அலங்காரமுமே எங்கும் நிறைந்திருக்கும். கடல் நாகம் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் வழங்குவதாக அவர்களது நம்பிக்கை. அரக்கர்களுக்கு சப்தம் பிடிக்காது என்பதால், அவர்களை விரட்டியடிப்பதற்காக சீனாவெங்கும் பட்டாசு வெடித்துப் பட்டையைக் கிளப்புவார்கள். நமது ஊரில் இருக்கும் மஞ்சள் செடியைப் போன்று கடைவீதியிலிருந்து எல்லாரும் கும்காட் மரத்தை, புது வருடத்தன்று வீட்டுக்கு வாங்கி வந்து அலங்கரிப்பார்கள். பெரியவர்கள் சிவப்பு கவரில் பணம் வைத்து, சிறியவர்களுக்குக் கொடுத்து ஆசி வழங்குவார்கள்.
ஜெர்மனியில் புது வருடம்
ஜெர்மானியர்கள் ஜனவரி 1 அன்றே புது வருடத்தை கொண்டாடுகிறார்கள். இவர்கள் வீடுகளில் உருக்கிய ஈயத்தை, தண்ணீரில் விட்டு அது என்ன வடிவத்துக்கு மாறுகிறதோ அதைக் கொண்டு அந்த வருடத்திய பலனைச் சொல்வார்கள். உதாரணத்துக்கு அது இதய வடிவத்துக்கோ அல்லது வட்டமான மோதிர வடிவத்துக்கோ மாறினால், அந்த வீட்டில் கெட்டி மேளம் நிச்சயம். கப்பல் வடிவமென்றால் பிரயாணம் உண்டு, பன்றி உருவம் என்றால் சாப்பாட்டுக்கு அந்த வருடம் முழுவதும் பஞ்சம் இருக்காது இத்யாதி இத்யாதி. அன்று சாப்பாட்டில் கெண்டை மீன் கண்டிப்பாக இருக்கும். சாப்பிட்ட பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தட்டுகளில் சாப்பாட்டை நள்ளிரவு வரை கொஞ்சம் மிச்சம் வைப்பார்கள். அதனால் அந்த வீட்டில் சாப்பாடு நன்றாகத் தங்கும் என்று ஐதிகம்.
கிரேக்கர்களின் புது வருடம்
ஜனவரி 1 அன்று புது வருடத்துடன் புனித பேஸில் அவர்களின் நினைவு தினத்தையும் கிரேக்கர்கள் கொண்டாடுகிறார்கள். புனித பேஸில் ஏழைகளுக்கு உதவிய மகான், இரக்க குணமுடையவர். இவர்கள் கேக் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கேக்கை சாப்பிடும்பொழுது மட்டும் கெடுபிடியான விதிமுறைகள் இருக்கும். அதாவது முதல் துண்டு புனித பேஸிலுக்கு, இரண்டாவது துண்டு வீட்டுக்கு, மூன்றாவது முதியவர்களுக்கு, பிறகு குழந்தைகளுக்கு, அதன்பின் வர முடியாதவர்களுக்கு என்று முறைப்படி கொடுத்து உண்பார்கள். அதே போல் வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் சில துண்டுகள் ஒதுக்கப்படும். அதிர்ஷ்டம், செல்வம், நீண்ட ஆயுள் என எல்லாவற்றையும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் வருகையை வைத்துக் கணிக்கிறார்கள். 
ஜப்பானில் புது வருடம்
ஜப்பானியர்கள் தங்கள் புது வருடத்தை - ஓஷாகட்சூ - ஜனவரி 1 அன்றே கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று இருக்கும் புது வருட சம்பிரதாயத்தையே பின்பற்றுகிறார்கள். அரக்கனை விரட்ட புது வருடத்தன்று வைக்கோலை வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்களாம். 108 திவ்யதேசம் மாதிரி, ஜப்பான் கோயில்களில் 108 முறை டணால் டணால் என்று மணியை ஓங்கி அடிப்பார்களாம். 
இந்த மாதிரி சம்பிரதாயங்களால் சந்தோஷம் குடிகொள்ளும் என்று ஒரு நம்பிக்கை. அதேபோல் கடல் நண்டு பொம்மைகள் செய்து வீட்டை அலங்கரிப்பார்கள். நண்டின் வளைந்த முதுகு முதுமையைக் குறிக்கும். நீண்ட ஆயுள் வேண்டுமென்று புத்த பகவானை வேண்டிக் கொள்வார்கள்.ஆக, உலகம் முழுவதும் மக்களுக்கு நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி ஆகியவைதான் புது வருட பிரார்த்தனைகளில் பிரதான இடத்தைப் பிடிக்கின்றன.     

பேசுங்கள் ஜெயா...பேசாதீர்கள் மன்மோகன்...! , ஓ பக்கங்கள் - ஞாநி

1. பேசுங்கள் ஜெயா :
 
 
சசிகலா குடும்பத்தினரைக் கூண்டோடு அ.தி. மு.கவிலிருந்து ஜெயலலிதா வெளியேற்றியிருப்பது இதுவரை ஜெயலலிதா செய்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளிலேயே உச்சமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஏன் இந்த நடவடிக்கை என்பதுதான் மர்மமாக இருக்கிறது. ஜெயலலிதா-சசிகலா நட்பு தொடர்பான எல்லாமே எப்போதுமே மர்மமாகவே இருந்துவருவதைப் போலவே இப்போதும் மர்மம் தொடர்கிறது.தி.மு.கவில் எப்படி கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் பல்வேறு கிளைகள் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தினவோ அதற்கு நிகராக அ.தி.மு.க.வில் சசிகலா குடும்பம் இருந்து வந்திருக்கிறது என்பதே உண்மை. ஆனால் இரண்டுக்கும் ஒரு முக்கியமான அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க.வில் செல்வாக்குடன் இருந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலோர் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகார பூர்வமான பொறுப்புகளில் இருந்தார்கள். அதனால் பொதுமக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால், சசிகலாவின் குடும்பத்தினர் அப்படி எந்தப் பொறுப்பிலும் இல்லாமலே ஆதிக்கம் செலுத்தினார்கள். பொது மக்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திலிருந்து இதுவரை தப்பித்தே வந்திருக்கிறார்கள். சசிகலா இதுவரை பத்திரிகைகளுடன் பேசியதோ அறிக்கை வெளியிட்டதோ கிடையாது.சசிகலா குடும்பத்தினர் என்ன செய்தாலும் அத்தனைக்கும் ஜெயலலிதாவே பொறுப்பேற்க வேண்டி வந்திருக்கிறது. ஜெயலலிதாவே பதில் சொல்ல வேண்டி வந்துள்ளது. ஜெயலலிதா ஒவ்வொரு முறை ஆட்சியில் இருக்கும்போதும் சம்பாதித்த கெட்ட பெயருக்கு சரி பாதி காரணம் சசிகலா குடும்பத்தைச் சார்ந்த செயல்கள்தான். வளர்ப்பு மகன் திருமணம் முதல் சிறுதாவூர், கொடநாடு, டான்சி, ப்ளசண்ட் ஸ்டே விவகாரங்கள் வரை சசிகலா குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. அரசு ஊழியர் நீக்கம், சமச்சீர் கல்வி குளறுபடி, அண்ணா நூலக மாற்றம் போன்ற அராஜகங்களுக்கு சசிகலாவைப் பழிக்க முடியாது. அவற்றுக்கு ஜெயலலிதாவே முழுப் பொறுப்பு.சுமார் இருபதாண்டுகள் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் குடியிருந்து அவரைப் பராமரிக்கும் பொறுப்பை நிர்வகித்து வந்த சசிகலா இப்போது தூக்கி எறியப்பட்டிருப்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சசிகலா குடும்பத்தினரின் அத்துமீறல்கள், அராஜகங்கள் அளவு கடந்து போய்விட்டன. (இதற்கெல்லாம் ஏதாவது அளவு உண்டா என்ன?). இனியும் சகிக்க முடியாது என்று உயர் அரசு அதிகாரிகள் நேரடியாகவே ஜெயலலிதாவிடம் புகார் செய்துவிட்டனர். ஜெயலலிதாவுக்கே தெரியாமல் பல பேரங்களை சசிகலா வகையறாக்கள் நடத்தி வந்தனர் என்பது இப்போது ஜெயாவுக்குத் தெரிந்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டால், கட்சி, ஆட்சி முழுவதையும் சசிகலா குடும்பமே கைப்பற்ற பெங்களூருவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது. இனி ஜெயலலிதாவின் உயிருக்கே கூட ஆபத்து என்ற நிலையில் ஜெயலலிதா தம் பால்ய நண்பர், பத்திரிகையாளர் சோவின் உதவியை நாடினார். சோவும் நரேந்திர மோடியும் சேர்ந்து செய்த ஏற்பாட்டின்படி குஜராத்திலிருந்து நம்பிக்கைக்குரிய பாதுகாவலர்களும் நர்சுகளும் போயஸ் தோட்டத்தில் குடியேற்றப்பட்டு சசிகலா வெளியேற்றப்பட்டார். இப்படிப் பல விஷயங்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வலம் வருகின்றன. இவற்றில் எது உண்மை, எது பொய் என்பது கண்டறியமுடியாத மர்மம்.
 
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெயலலிதா வாயைத் திறக்க வேண்டும். பேசவேண்டும். ஏனென்றால் ஏன் அவர் இப்போது சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதை மக்களுக்குச் சொல்லியாக வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. இதற்கு முன்னர் சசிகலாவைப் பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகளில் வந்தபோது, என் உடன்பிறவா சகோதரி என்றும் தம்மைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர் என்றும், அவருக்கும் கட்சி, ஆட்சிக்கும் தொடர்பு இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டவர் ஜெயலலிதா. பின்னர் சசிகலா குடும்பத்தினர் பலருக்கும் கட்சிப் பொறுப்புகளைக் கொடுத்ததும் அவர்தான்.சசிகலா கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பேரங்கள் முதல்; ஆட்சியில் அரசு நிர்வாக பேரங்கள் வரை அனைத்திலும் பங்கேற்று வந்தார் என்று நேரடியாக இவற்றில் சம்பந்தப்பட்ட பலரும் தனிப் பேச்சில் சொல்கிறார்கள். அப்படி அவரை இதுவரை பங்கேற்க அனுமதித்தவர் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவின் சம்மதம் இல்லாமல் சசிகலா கோட்டைக்குச் செல்ல முடியாது. அமைச்சரவைக் கூட்டங்களுக்குச் செல்லமுடியாது. அமைச்சர்களுடன் பேசி முடிவுகளை எடுக்க முடியாது. இத்தனை காலம் இதையெல்லாம் அனுமதித்த ஜெயலலிதா ஏன் இதுவரை இதை அனுமதித்தார் என்பதையும் சொல்ல வேண்டும். இனி அனுமதிக்க முடியாது என்ற நிலை அவருக்கு இப்போது ஏன் வந்தது என்பதையும் சொல்ல வேண்டும். கடுமையான தவறுகளை சசிகலா குடும்பத்தினர் செய்திருந்தார்கள் என்றால் அதற்கு, கட்சியிலிருந்து நீக்குவது மட்டும் தண்டனையாகாது. சட்டப் படியான தண்டனைகள் தரப் படவேண்டும்.இவை எதுவும் உட்கட்சி விவகாரம் என்றும் அந்தரங்க விஷயம் என்றும் தப்பிக்க முடியாது. உட்கட்சி விவகாரங்கள் கூட பொதுமக்கள் அக்கறைக்குரியவைதான். ஏனென்றால், கட்சி என்பதே பொது விஷயம்தான். இன்று தனியார் வணிக நிறுவனங்கள் கூட நீதிமன்றம் முன்பு தங்கள் இயக்குனர் குழுவில் என்ன நடந்தது என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய சட்டக் கட்டாயம் உள்ளது. ஆட்சி நடத்தும் அரசியல் கட்சிக்கு இதில் எந்தச் சலுகையும் தரமுடியாது. சசிகலா குடும்பத்தை வெளியேற்றியது; நிச்சயம் ஜெயலலிதாவுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் பொதுமக்கள் செல்வாக்கிலும் கணிசமான லாபங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இதுவரை ஏன் சசிகலாவை அவர் சீராட்டினார், இப்போது ஏன் தூக்கி எறிகிறார் என்ற இரண்டுக்கும் மக்களிடம் காரணம் சொல்ல வேண்டிய தார்மிகக் கடமை அவருக்கு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவின் மௌனம் தவறானது. பேசினால் சசிகலா தரப்பிலிருந்து ஜெயலலிதாவுக்கு எதிரான விஷயங்கள் அம்பலப்படுத்தப்படும் என்ற அச்சத்தினால் மௌனமாக இருக்கிறார் என்றே இந்த மௌனம் பொருள் கொள்ளப்படும். எனவே ஜெயலலிதா இப்போதேனும் எல்லா உண்மைகளையும் மக்களிடம் பேசியேயாக வேண்டும். 
 
2. பேசாதீர்கள் மன்மோகன்!
 
 
பிரதமர் மன்மோகன்சிங் பேசாமல் இருக்கிற வரையில் அவரை ஓர் அறிஞராக, சிறந்த அரசியல்வாதியாக நாம் நம்பிவிடுகிற வசதி அவருக்கு இருக்கிறது. அமைதியானவர், கண்ணியமானவரென்ற பிம்பத்தில் அவர் ஒளிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவர் பேசத் தொடங்கினால் அசல் மன்மோகன்சிங் யாரென்று தெரிந்துபோய்விடுகிறது.ரஷ்யாவில் அவர் பேசிய பேச்சு அவரை தமிழக மக்களுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. ரஷ்ய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை இன்னும் இரு வாரங்களில் இயங்க ஆரம்பித்துவிடும் என்று அவர் அங்கே பேசியிருக்கிறார். அப்படியானால் கூடங்குளம் தொடர்பாக அவர் இதுவரை தமிழக மக்களுக்குச் சொன்னதெல்லாம் பொய் என்றாகி விட்டது. மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் வரை அணு உலையில் எந்த வேலையும் நடக்காது என்றது பொய்தானே? தமிழக அரசு வேண்டுகோளின்படி அமைத்த நிபுணர் குழுவால் அச்சத்தைப் போக்க முடியவில்லை. ஆனாலும் இரு வாரங்களில் அணு உலை இயங்க முடியும் என்றால், அங்கே பராமரிப்பு மட்டுமே நடந்து வருகிறது என்று சொன்னதும் பொய்தானே?எல்லாவற்றுக்கும் மேலாக மன்மோகன் சிங் ரஷ்யாவில் நிருபர்களிடம் பேசும் போது, சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு அமைத்த உலையை அப்படி எளிதில் மூடிவிட்டுப் போய்விடமுடியாது என்று பேசியிருக்கிறார். அதாவது அவருக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய்தான் முக்கியம். மக்களின் நலனோ, அச்சமோ அதை விட சின்ன விஷயம்தான்.இடிந்தகரை கிராமத்திலிருந்து வந்த சாதாரணப் பெண்ணிடம் சென்னை நிருபர் சந்திப்பில் ஒரு நிருபர் கேட்டார்: இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து கட்டியபிறகு மூடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறதே? அந்தப் பெண் சொன்ன பதில்: உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி விடிந்தால் கல்யாணம் நடத்தப்போறீங்க. பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? பாமரப் பெண்ணுக்குப் புரிகிற விஷயம் மெத்தப் படித்த மேதாவி மன்மோகனுக்குப் புரிவதில்லை. அவருக்குப் புரிவதெல்லாம் அவருடைய லட்சிய பூமியான அமெரிக்காவில் சொல்வதும் செய்வதும்தான் என்பதால், அவருக்காக அமெரிக்க அணு உலைகள் வரலாற்றிலிருந்து ஒரு தகவலைச் சொல்ல விரும்புகிறேன்.1979ல் த்ரீமைல் ஐலண்ட் அணு உலையில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு 1973ல் நியூயார்க் பகுதியில் இருக்கும் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் கட்ட ஆரம்பித்த ஷோர்ஹேம் ப்ளாண்ட்டை 1984ல் கட்டி முடித்தார்கள். 1983ல் அமெரிக்க மத்திய அரசு இந்த உலையில் விபத்து ஏற்பட்டால் எப்படி மக்களை வெளியேற்றவேண்டும் என்பதற்கான அவசர கால திட்டத்தை உருவாக்கி வெளியிட்டது. இதற்கு உள்ளூர் பஞ்சாயத்தான சஃபோக் பகுதி கவுண்ட்டியின் ஒப்புதல் வேண்டும். ஆனால், அதை ஏற்கமுடியாது என்று உலை இருக்கும் பகுதியான சஃபோக் கவுண்ட்டி (பஞ்சாயத்து) தெரிவித்தது. 
 
ஆறு பில்லியன் டாலரில் (சுமார்) கட்டி முடிக்கப்பட்ட இந்த அணு உலை வேண்டாம் என்று அங்கே மக்கள் வாக்களித்தார்கள். அதை அரசு ஏற்றுக் கொண்டது. உலை சொந்தக்காரரான லில்கோ கம்பெனிக்கு அந்தப் பணத்தை அரசு செலுத்தியது. உலை மூடும் செலவான இன்னொரு 186 மில்லியன் டாலரையும் அரசு ஏற்றது. இத்தனையும், கட்டி முடித்து இயங்கவே ஆரம்பிக்காத அணு உலைக்கு! இப்படி உலையை மூடும் செலவுக்காக பொது மக்கள் அடுத்த 30 வருடத்துக்கு மின் கட்டணத்தில் மூன்று சதவிகிதம் சர்சார்ஜ் செலுத்தும்படி அரசு கோரியதை சஃபோக் கவுண்ட்டி ஏற்றுக்கொண்டது. அங்கே யாரும் அய்யோ மின்சாரம் தேவை என்று கூப்பாடு போடவில்லை. இத்தனைக்கும் வருடந்தோறும் அப்போது சபோக் மின் தேவை 1 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டிருந்தது. மூடப்பட்ட அணு உலை சிறு மாற்றங்களுடன் 2002ல் இயற்கை எரி வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையாக மாற்றப்பட்டது. ஷோர்ஹேம் உலை மூடப்பட்டபிறகு அமெரிக்காவில் புதிய அணு உலை எதுவும் ஆரம்பிக்கப்படவே இல்லை.அமெரிக்க தாசரான மன்மோகன் இந்த வரலாற்று நிகழ்விலிருந்து சில பாடங்களைக் கற்க வேண்டும். பல கோடி ரூபாய் செலவழித்துவிட்டதற்காக ஆபத்தான உலையை ஆரம்பித்துவிடக் கூடாது. உண்மையான ஜனநாயகம் என்பது மத்திய அரசு தன் விருப்பத்தை பஞ்சாயத்துகளின் மீது திணிப்பது அல்ல. உலை இருக்கும் பகுதியின் பஞ்சாயத்து எடுக்கும் முடிவுக்குதான் மத்திய அரசு கட்டுப்பட வேண்டும். மத்திய அரசின் முடிவுக்குத் தலையாட்டுவது பஞ்சாயத்தின் வேலையல்ல. கூடங்குளம் பகுதியில் சென்ற வருடமே எல்லா பஞ்சாயத்துகளும் கூடி அணு உலை இங்கே வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன. கட்டிய உலையை வேறு எரிபொருள் கொண்டு இயக்கமுடியுமா என்று ஆராய்வதுதான் விஞ்ஞானிகளின் வேலை. மன்மோகன் வாயைத் திறந்தாலே அவர் அரசின் உண்மையான உள்நோக்கம் என்னவென்பது தெரிந்துபோய்விடுகிறது. பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது. அதை விட நல்லது மற்றவர்கள் பேசுவதைக் கேட்பது. குறிப்பாக கூடங்குளத்திலிருந்து சாதாரண மக்களும் அவர்கள் சார்பாக, சூழல் அறிஞர்களும் பேசுவதைக் கேட்பது.
 
இந்த வார கேள்வி
 
 
விளம்பரப் படங்களில் நடித்துக் கிடைத்த வருமானத்துக்கு வரி கட்டாமல் தவிர்ப்பதற்காக, தம் தொழில் நடிப்பு என்று கூசாமல் பொய் சொன்ன கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது தருவது எப்படி நியாயமாகும்? பாரத ரத்னா விருதுக்கான தகுதி என்பது திறமை மட்டும்தானா? மதிப்பீடுகள், ஒழுக்க நெறிகள் எதுவும் கிடையாதா?