வீரபாண்டி ஆறுமுகம் (சங்ககிரி): 'வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியில் நின்றால், அல்வா கொடுத்துவிடுவார்கள்’ என சங்ககிரிக்கு வந்திருக்கிறார் ஆறுமுகம். இதுநாள் வரை அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் சாதாரண ஆட்களாக இருந்ததால், எளிதில் ஜெயித்தார். இந்த தடவை அப்படி இல்லை. சித்தப்பாவை 'விடாது கருப்பாக’த் துரத்திக்கொண்டே வந்திருக்கிறார் அ.தி.மு.க-வின் விஜயலட்சுமி பழனிசாமி. இருவரும் வன்னியர். ஆனால், சங்ககிரி தொகுதியில் கவுண்டர்கள் அதிகம் என்பதால், அவர்களது வாக்குகள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். நில அபகரிப்பு, ஆறு கொலைகள் விவகாரம், கடந்த ஐந்து வருடங்களில் கட்சிக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வீரபாண்டியாரை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது. அண்ணன் மகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், சித்தப்பா ரொம்பவே மெனக்கெட வேண்டும்!
துரைமுருகன் (காட்பாடி): கருணாநிதியின் இடது கரமான துரைமுருகனுக்கு மீண்டும் காட்பாடி. அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை முடிந்த வரை காட்பாடிக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். மக்கள் யாரும் எளிதில் நெருங்க முடியாதவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு... ஒரு புதுமுகம். மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். இதுதான் துரைமுருகன் பலம். செல்வாக்கான ஆளைப் போட்டு இருந்தால் திணறி இருப்பார். ஆனாலும், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெறக்கூடும்!.
பொன்முடி (விழுப்புரம்):அதிரடி அமைச்சர் பொன்முடி நிற்பது, விழுப்புரத்தில். எதிர்ப்பாளர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அவரும் அதிரடிப் பேர்வழிதான். யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசுவதும், கட்சிக்காரர்களிடம்கூட நெருங்கிப் பழகாமல் விலகி இருப்பதும் பொன்முடியின் பலவீனம். வன்னியர் எதிர்ப்பாளர் என்ற இமேஜும் உண்டு. பெரும்பாலான வாக்காளர்கள் வன்னியர்கள் என்பதும், தி.மு.க-வில் இருக்கும் வன்னியர்களே பொன்முடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதும், அவரை டேமேஜ் பண்ணிவிடும்போலத் தெரிகிறது. ஆனால், அவரோ தன் பண பலத்தை நம்புகிறார்!
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி): பன்னீருக்கு தொடர்ந்து மூன்று முறை வெற்றியைத் தந்த தொகுதி குறிஞ்சிப்பாடி. தொகுதிக்கு நிறையவே செய்திருக்கிறார். தொகுதியில் அதிகப்படியாக வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும் கை கோத்து இருப்பது பன்னீருக்குக் கூடுதல் பலம். எதிர் அணி வேட்பாளரான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலிப் பகுதியில்தான் செல்வாக்கானவர் என்பதால், குறிஞ்சிப்பாடியில் பன்னீருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!
பெரிய கருப்பன் (திருப்பத்தூர்): அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், 'தான் உண்டு தனது சொந்த வேலை உண்டு’ என்று இருப்பவர். அதற்காக தொகுதி மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி? கடந்த ஐந்து வருடங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தவிர வேறு எந்த சிறப்புத் திட்டத்தையும் பெரிய கருப்பன் கொண்டுவரவில்லை. அ.தி.மு.க - வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன். 1991-96-ல் இங்கே வெற்றி பெற்று அமைச்சராக இருந்த இவர், தன்னை வளப்படுத்திக்கொண்டதோடு, கட்சியினரையும் சாதிக்காரர்களையும் கை தூக்கிவிட்டார். அதுதான் இப்போது ராஜ கண்ணப்பனைக் கை தூக்கிவிடும் சக்தியாக மாறி இருக்கிறது. பெரிய கருப்பன் மறுபடியும் சட்டமன்றத்துக்குப் போவது கொஞ்சம் கஷ்டம்தான்!
தமிழரசி (மானாமதுரை): தான் பெரிதும் எதிர்பார்த்த சோழவந்தான் தொகுதியை பா.ம.க. தள்ளிக்கொண்டு போனதால், மானா மதுரையில் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறார் தமிழரசி. தொகுதி மாறி வந்ததுதான் அவருக்கு ஏழரை. வழக்கமாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதி என்பதால், ஸீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த காங்கிரஸார் ஏக அதிருப்தியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான குணசேகரனுக்கும் சொந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட அதிருப்திகள். அதை எல்லாம் தாண்டி, கூட்டணி பலத்தோடு தொகுதியை ரவுண்டு வருகிறார் குணசேகரன். இருக்கும் நிலைமையைப் பார்த்தால், தமிழரசிக்கு மானாமதுரை மல்லி மணக்காது!
பொங்கலூர் பழனிசாமி (கோவை தெற்கு): கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமி, தொகுதிக்கு 'ஆஹோ... ஓஹோ’ என்று செய்துவிடாவிட்டாலும், மக்கள் டென்ஷனாகும் வகையில் எந்த வம்பையும் இழுக்கவில்லை. தொகுதிக்குள் இருந்து யார் போன் பண்ணினாலும், தானே அட்டெண்ட் செய்து பொறுப்பாகப் பதில் சொல்வதில் ஆரம்பித்து, சிம்பிளாக நடந்துகொள்வதன் மூலம் சம்பாதித்துவைத்த நல்ல பேர்தான் அவருக்கு இப்போது ரொம்பவே கைகொடுக்கிறது!
இளித்துரை ராமச்சந்திரன் (குன்னூர்): நீலகிரி மாவட்டம் குன்னூரில் போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு ஆரம்பமே ஆறுதல் தருவதாக இருக்கிறது. குன்னூரின் பலம் வாய்ந்த தி.மு.க. புள்ளியான முபாரக்குக்கு ஸீட் கிடைக்காததால், அவரது ஆதரவுப் பட்டாளம் கடும் அதிருப்தியில் சோர்ந்துகிடக்கிறது. ஆனால், அவர்களிடம் வெள்ளைக் கொடி நீட்டி வழிக்குக் கொண்டுவந்திருக்கும் ராமச்சந்திரன், கூடவே தன் மீது மாளாத வருத்தத்தில் இருந்த படுக இனத் தலைவர்களிடமும் சமரசம் செய்திருக்கிறார். இதன் மூலம் ராமச்சந்திரனின் பாதை தெளிவாக இருக்கிறது!
எ.வ.வேலு (திருவண்ணாமலை): வேலுக்கு எதிராக நிற்பது அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன். இருவருமே மக்களுக்கு நன்கு அறிமுகமனாவர்கள். தொகுதியில் இருக்கும் அடிப்பொடிகளில் தொடங்கி, அத்தனை பேரையும் தெரிந்துவைத்து இருப்பது, வேலுவின் பிளஸ். வன்னியர் எதிர்ப்பாளர் என்பது அவருக்குக் கெட்ட பெயர். தொகுதியில் அதிகம் இருக்கும் முதலியார்களைப்பற்றி இவர் ஏதோ ஒரு கமென்ட் அடித்ததாகவும், அதனால் அவர்கள் கோபம்கொண்டு கூடிப் பேசி வருவதாகவும் தகவல். தலித் வாக்குகள் பெரும்பாலும் விஜயகாந்த் பக்கம் இருக்கின்றன. இதைவைத்துப் பார்க்கும்போது வேலு வெல்வது டவுட். எனவே, அனைவரையும் குறிவைத்து விலைக்கு வாங்கி வருகிறார்கள் தி.மு.க-வினர்!
ஐ.பெரியசாமி (ஆத்தூர் - திண்டுக்கல்): எதிர்க் கட்சியில் இருக்கும் ஆட்களைக்கூட பெயர் சொல்லிக் கூப்பிடுவதுதான் ஐ.பெரியசாமியின் வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே, தொகுதியில் ரேஷன் கார்டு, டி.வி. என பெண்டிங்கில் இருந்த அத்தனையும் அள்ளி வழங்கி, நல்ல பெயரைத் தக்கவைத்துக்கொண்டார் ஐ.பி. எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு அவரின் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதால், பெரியசாமியின் வெற்றி உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர்!
மதிவாணன் (கீழ்வேளூர்): புதிய தொகுதியான கீழ்வேளூரில் பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன். அவரை எதிர்த்து நிற்பவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாலி. திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுவதால் ஒட்டுமொத்த உடன்பிறப்புகளும் திருவாரூரே கதியெனக் கிடக்கிறார்கள். மதிவாணனைக் கண்டுகொள்ளக்கூட, தொகுதிக்குள் ஆள் இல்லை. கம்யூனிஸ்ட்கள் அதிகம் உள்ள தொகுதி என்று சொல்லக்கூடிய பட்டியலில் இந்தத் தொகுதியும் உண்டு. தே.மு.தி.க-வுக்கும் இங்கே குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உண்டு. ஆகவே, மதிவாணணுக்கு பால் பொங்குவது கஷ்டம்!
சுப.தங்கவேலன் (திருவாடானை): திருவாடானை தொகுதி தனக்குத்தான் என முடிவு செய்த தங்கவேலன், கடந்த ஆறு மாதங்களாக அரசின் நலத் திட்டங்கள் அத்தனையும் திருவாடானைத் தொகுதியிலேயே செயல்படுத்த ஆரம்பித்தார். எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர் ரகுமான் வெளியூர்க்காரர் என்பதால், அதையே சாதகமாக்கி பிரசாரத்தில் குதித்திருக்கிறார் தங்கவேலன். தொகுதி முழுக்க வைட்டமின் 'ப’வும் நிறையவே போகிறது. எனவே, கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு பிடி கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் தங்கவேலன். 'அதற்காக’ ஓட்டு போட்டால் மட்டும்தான், இவரால் தேற முடியும்!
மைதீன்கான் (பாளையங்கோட்டை): கடந்த இரண்டு முறை டி.பி.எம்.மைதீன்கான் வெற்றி பெற்ற தொகுதி இது. 'தமிழக அமைச்சர்களில் எளிதாக அணுகக்கூடியவர் யார்?’ என்று போட்டிவைத்தால், மைதீன்கானுக்கே முதல் இடம். தொகுதி வளர்ச்சிக்காக தனது மேம்பாட்டு நிதியுடன், கனிமொழி, சண்முகசுந்தரம், திருச்சி சிவா போன்ற ராஜ்ய சபா எம்.பி-க்களின் நிதியையும் பெற்றுத் தந்து நிறையத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். கடந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் மைதீன்கான். பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்பதும், வேட்பாளர் முஸ்லிம் அல்லாதவராக இருப்பதும் அ.தி.மு.க. அணியில் தோல்விக்கு முழுக் காரணமாக இருக்கும்.
பூங்கோதை (ஆலங்குளம்): ஆலடி அருணாவின் வாரிசு என்ற ஒரே தகுதியுடன் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூங்கோதை, அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர். அது மட்டுமே போதும் என்று நினைத்ததால், கட்சிக்காரர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, இங்கு இருக்கவில்லை என்ற வருத்தம் மக்களிடம் பரவலாக இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் கடையம் போன்ற தி.மு.க. ஆதரவு ஏரியாக்கள் உள்ளே வந்து இருப்பது மட்டும்தான் பூங்கோதைக்கு கை கொடுக்கும். எதிர் அணியில் நிற்பவர், பூங்கோதையைவிட வீக்கான வேட்பாளர். இருவருமே நாடார்கள். எனவே, வாக்குகள் பிரியும். மற்ற சாதியினர் பூங்கோதைக்கு எதிராக இருக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டும்தான் தேறலாம். இல்லை என்றால் டவுட்!
கீதாஜீவன் (தூத்துக்குடி): அரசு நலத் திட்டங்களைத் தொகுதிக்காக நிறைய செயல்படுத்தி இருக்கிறார் கீதா ஜீவன். அப்பா பெரியசாமியின் தலையீடு நிறைய இருப்பதுதான் அவருக்கு மைனஸ். அதேபோல, அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ஜெனிஃபர் சந்திரனை அறிவித்தார்கள். பிறகு பால் என்பவரைக் கொண்டுவந்தார்கள். அவரையும் மாற்றி செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த காமெடி, கீதா ஜீவனுக்கு சாதகம். ஜெனிஃபருக்கு ஸீட் அறிவித்து பிடுங்கிக்கொண்டதால், மீனவர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தி தி.மு.க-வுக்கு சாதகமாகி, கீதா ஜீவனை வெற்றிக் கோட்டுக்கு அருகே கொண்டுபோய் உள்ளது!
சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி): சுற்றுலா வளர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கும் தொகுதி. நம்பிக்கையை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார். எதிர்ப்பு என்று பெரிய அளவில் ஏதும் இல்லை. அ.தி.மு.க-வில் தளவாய் சுந்தரத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவை எல்லாம் சுரேஷ்ராஜனுக்குப் பலமாக... கன்னியாகுமரியில் காற்று தி.மு.க. பக்கமே வீசுகிறது!
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை): சாத்தூரில் இருந்து தொகுதி மாறி அருப்புக்கோட்டையில் வேட்பாளர் ஆகி இருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இவரை எதிர்த்து நிற்பது அ.தி.மு.க-வின் மாநில நிர்வாகியான வைகை செல்வன். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே, தொகுதி முழுக்க பணத்தை அள்ளி இறைக்கிறார் அண்ணாச்சி. மாவட்டம் முழுக்க செய்திருக்கும் நலத் திட்டங்களுடன் அண்ணாச்சி கொடுக்கும் பணத் திட்டங்களும் சேர்ந்து இருப்பதால் வெற்றி உறுதி என்று நினைக்கிறார். ஆனால், சாந்தமாக தொகுதிக்குள் வலம் வரும் வைகை செல்வனின் தேவாங்கர் சமூகத்தினரது வாக்குகள் முழுமையாகப் போனால், இரட்டை இலைக்கு வெற்றி கிடைக்கவும்கூடும். மற்ற சமூகத்து வாக்குகளை அள்ள பகீரத வேலைகளில் இறங்கி இருக்கிறார் சாத்தூரார்!
தங்கம் தென்னரசு (திருச்சுழி): குற்றச்சாட்டுக்கள் எதிலும் சிக்காமல் இருக்கிறார் தங்கம் தென்னரசு. அதே நேரத்தில், தொகுதிக்கு புதிதாக திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு. எதிர்த்து நிற்பவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த இசக்கி முத்து. ஓர் இடைத் தேர்தலின்போது தனியாக நின்றே இந்தக் கட்சி 20 ஆயிரம் வாக்குகளை அள்ளிய வரலாறும் உண்டு. அகமுடையர் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் அந்த சமூகத்தவரை நிறுத்தி இருந்தால், தங்கம் வெற்றி சந்தேகத்துக்கு உரியதாக மாறி இருக்கும். எதிர் வேட்பாளரின் பலவீனம் இவரை இம்முறை ஜெயிக்கவைத்துவிடும்!
கே.என்.நேரு (திருச்சி மேற்கு): திருச்சி மேற்குத் தொகுதியில் களம் இறங்குகிறார் கே.என்.நேரு. கூட்டணி இழுபறியில் அ.தி.மு.க. திணற... அப்போது இருந்தே, சட்டென்று வேலைகளை ஆரம்பித்துவிட்டார் நேரு. இவரது பலமே சுறுசுறுப்புதான். நள்ளிரவு 12 மணிக்கு கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் பிரசார வியூகம்பற்றி ஆலோசனை நடத்துகிறார் என்றால், அதிகாலை நேரத்தில் கட்சிக்காரர்கள் யாரையாவது தொலைபேசியில் விரட்டுகிறார். நேருவுக்கு எப்போதும் ஒரு ராசி உண்டு. ஒரு தேர்தலில் வெற்றி என்றால் அடுத்த தேர்தல் அவரது காலை வாரிவிட்டுவிடும். பெரிய அரசியல் பின்புலன் இல்லாத நபர்களிடம் தோற்ற அனுபவமும் அவருக்கு உண்டு. இந்த முறை தனது உழைப்பு மற்றும் பண பலம் மூலமாக வெற்றியை அடையலாம்!
என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்): வனத் துறை அமைச்சரான என்.செல்வராஜ், மணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர். செல்வராஜின் மகன் கருணைராஜா, முத்தரையர் சங்க செயல்பாடுகளில் பெரும் ஈடுபாடுகொண்டவர். ஆகவே, அந்த வாக்குகள் செல்வராஜ் பக்கம் சாயவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், நேருவும் இவரும் தனித் தனி கோஷ்டியாக செயல்படுபவர்கள் என்பதால், அதுவே தலைவலி. அதனால், நேரு கோஷ்டி ஆட்களை சமாதானப்படுத்தி தேர்தல் வேலை செய்யவைப்பதில் முனைப்பாக இருக்கிறார். எதிர் அணி வேட்பாளர் சரி இல்லை என்பதால், செல்வராஜ் வெல்வார்!
உபையதுல்லா (தஞ்சாவூர்): தொடர்ந்து மூன்று முறை தொகுதியின் எம்.எல்.ஏ.வான உபையதுல்லா எளிமையானவர். மக்களிடம் நல்ல பெயர் நல்ல பெயர் இருந்தாலும், மாவட்டச் செயலாளர் பழனிமாணிக்கத்துக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். அதுதான் உபையதுல்லாவுக்குப் பிரச்னையாக இருக்கும். ஆனால், நல்ல மனிதர் என்ற இமேஜ் இவரை கை தூக்கிவிடலாம்!
வெள்ளகோயில் சாமிநாதன் (மடத்துக்குளம்): தொகுதி மாறி மடத்துக்குளத்துக்கு வந்து இருக்கிறார் சாமிநாதன். தொகுதிக்குப் புதியவர். முழுக்க முழுக்க பணத்தையே நம்பி களத்தில் குதித்திருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேலு, தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எளிமையானவர் என மக்களிடம் பெயரெடுத்தவர். தொகுதி முழுக்க சண்முகவேலுக்கு சொந்த பந்தங்கள் அதிகம். சுத்தி வளைத்துப் பார்த்தால், சண்முகவேலுவின் கைதான் ஓங்கி இருக்கிறது!
கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்): கே.பி.பி. சாமிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் கே.குப்பன். முன்னாள் எம்.எல்.ஏ-வான குப்பன், தற்போது திருவொற்றியூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர். சாமியைவிட செல்வாக்குகொண்டவர். கடந்த ஐந்து ஆண்டுகளில், தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை சாமி வலை வீசிக் கொண்டுவந்து குவித்து இருந்தாலும், தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான எதிர்ப்பு அலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அமைச்சர் சாமியின் தம்பி சாமியாடிய விவகாரங்களைப் பயத்துடன் மீண்டும் நினைத்துப் பார்த்தபடி, பொது ஜனம் இலைத் தரப்பை இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள். மணலி, சேக்காடு, எண்ணூர் என இதுவரை சாமிக்கு சர்வ பலத்தைக் கொடுத்த மீனவ ஏரியாவாசிகளும், இப்போது தி.மு.க-வின் மீது திடீர் கோபம்கொண்டு சாமிக்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்கி உள்ளனர்!
க.அன்பழகன் (வில்லிவாக்கம்): 88 வயதுக்காரர் பேராசிரியர் க.அன்பழகன், தி.மு.க-வின் பொதுச் செயலாளர். தமிழக நிதி அமைச்சர். இந்தப் பெருமைகளை உடைய பேராசிரியர், இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் அ.தி.மு.க-வின் ஜே.சி.டி.பிரபாகரனை எதிர்த்துக் களம் இறங்கி இருக்கிறார். இதற்கு முந்திய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் 336, 409 என்கிற ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தார். அதனால்தான், தனக்கு சேஃப்டியான தொகுதி இது என்கிற வகையில் வில்லிவாக்கம் வந்து இருக்கிறார். ஆனால், வில்லிவாக்கமும் அவருக்கு சாதகமாக இல்லை!ஜே.சி.டி.பிரபாகரன் 1980-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். இவரது ஆளுமையைவைத்து 'வில்லிவாக்கம் எம்.ஜி.ஆர்' என்று மக்கள் செல்லமாக அழைப்பார்கள். தொகுதிக்குள் ஒன்றரை மாதங்கள் பாத யாத்திரை சென்று மக்கள் குறை கேட்டவர். கடந்த 27 ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள், சமூகப் பணிகள் எனத் தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறவர். இவருக்குக் கை கொடுப்பவர் - தே.மு.தி.க. கவுன்சிலர் பிரபாகரன். கடந்த உள்ளாட்சியில் தி.மு.க. முக்கியப் பிரமுகரை வீழ்த்தி இவர் ஜெயித்தார். இதை எல்லாம் வைத்து அன்பழகன் அவுட் என்கிறார்கள்!
பரிதி இளம்வழுதி (எழும்பூர்): ஐந்தாவது முறை எழும்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. இந்த முறை ஆறாவது தடவை... தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட்டவர். சாலை வசதி, புதிய கட்டடங்கள் என்று மக்கள் பணியை ஏகத்துக்கும் செய்திருந்தாலும், ஒரு சில கட்சி நிர்வாகிகளின் குறைகளைக் கேட்கவில்லை என்கிற புலம்பல் உட்கட்சியில் ஒலிக்கிறது. பரிதியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் நிற்பவர் தே.மு.தி.க-வின் புரசை கு.நல்லதம்பி. இவருக்கும் நடிகர் விஜயகாந்த்துக்கும் 30 வருடப் பழக்கம். ரசிகர் மன்றத்திலும், கட்சியிலும் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்னால், 15 சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து, இவருக்கு சைக்கிள் கடை வைத்துத் தந்ததே விஜயகாந்த் தானாம். ஆனால், இவருக்குப் பரிதியை எதிர்கொள்ளும் அளவுக்கு படை, பண பலம் இல்லாததால், பரிதியின் பக்கம் வெற்றிக் காற்று!
தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்): கடைசி நிமிஷம் வரையில்கூட, 'முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதி இது’ என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென்று கருணாநிதி திருவாரூருக்கு இடம்பெயர, இங்கே தா.மோ.அன்பரசனுக்கு உறுதியானது. குரோம்பேட்டை தாண்டி சாலையில் வரும்போது, எதிர்ப்படும் மேம்பாலங்கள், பழைய மகாபலிபுர ரோட்டைத் தொடும் துரைப்பாக்கம் ரேடியல் மேம்பாலம், மீனம்பாக்கம் விமான நிலைய மேம்பாலம்... இரண்டையும் கடக்கும் பல்லாவரம்வாசிகள் உதயசூரியன் சின்னத்தை மறக்க மாட்டார்கள் என்று தி.மு.க-வினர் சொல்லி ஓட்டு சேகரிக்கிறார்கள். தர்ஹா ரோடு சுரங்கப் பாதை, மீனம்பாக்கம் பி.வி.நகர் சுரங்கப் பாதை... இரண்டையும் கட்டி முடித்ததும் இவர்களே. ஆனால், மக்கள் வசிக்கும் சில இடங்களை தொல்பொருள் துறை கைப்பற்றி, அங்கே எல்லாம் புதிய கட்டடம் எதுவும் கட்டக் கூடாது. பூமியைத் தோண்டக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறது. அந்த உத்தரவைத் திரும்பப் பெறவைப்பதாக அன்பரசன் மக்களிடம் உத்தரவாதம் தந்திருந்தார். ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஓர் அறிவிப்பும் வரவில்லை. அன்பரசனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தன்சிங் போட்டியிடுகிறார். முன்னாள் பல்லாவரம் நகரசபைத் தலைவர். இவருக்கும் செல்வாக்கு இருக்கிறது. கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகளை வாங்கினார். அந்த வகையில், இந்த ஓட்டுகள் மீண்டும் தன்சிங்குக்கு சாதகமாக விழும் என்று எதிர்பார்கிறார்கள். இது தா.மோ.அன்பரசனை டவுட் பட்டியலில் சேர்க்கவைக்கிறது!
தி.மு.க வேட்பாளர்கள் ஒரு பார்வை
- ஜூ.வி