Search This Blog

Wednesday, February 06, 2019

மாண்டலின் சீனிவாஸ்


 வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து வாசிப்பை நிறுத்தியது வரை, தம் சின்னஞ்சிறு இசைக் கருவியால் உலக அளவில் இசை ரசிகர்களைக் கவர்ந்த இளைய தலைமுறைக் கலைஞர் ஒருவர் உண்டு என்றால் அது நிச்சயம் மாண்டலின் சீனிவாஸ்தான். இசை கேட்டு ரசிக்கத் தெரியாதவர்களையும் கவர்ந்திழுத்த தனித்துவமான இசை அது.

ஒரு டிசம்பர் கச்சேரி சீஸனில், சீனிவாஸ் வாசித்ததையும், அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன ஒரு சங்கீத வித்வான், தம் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொண்டு விரைந்து போய் மேடையில் அமர்ந்திருந்த சீனிவாஸுக்குச் சூட்டியதையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. 

கூடவே வாசிக்கும் சக பக்கவாத்தியக் கலைஞர்களிடம் அசாத்திய மரியாதை. தஞ்சாவூர் உபேந்திரன், உமையாள்புரம் சிவராமன், பாலக்காடு ரகு, விக்கு விநாயக ராம், வயலின் கன்யாகுமாரி எல்லாம் கர்நாடக இசை உலகில் சிகரம் தொட்டவர்கள். இவர்கள் சீனிவாஸுக்கு வாசிக்க வேண்டும் என்றால் அவரது திறமை எந்த உயரத்தில் இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். கற்பனை வளம் அவரிடம் கொட்டிக் கிடந்தது என்றால், அதை வழங்கும் விதம் ரசிகர்களை ஈர்த்தது. மேற்கத்திய வாத்தியமான துளியூண்டு மாண்டலினில் கமகம் வாசிப்பது இயலாது என்றார்கள். சீனிவாஸ் தம் வாசிப்பில் கமகங்களாகக் கொட்டினார். எட்டு தந்தி உள்ள மாண்டலினில் நாலைக் குறைத்தார்.

பிறகு, குருவின் ஆலோசனைப்படி ஒரு தந்தியைச் சேர்த்தார் சீனிவாஸ். அப்புறம் அவர் சொல்கிறபடி கேட்காமல் இருக்குமோ அந்த மாண்டலின்? 

எந்தக் கீர்த்தனையை எடுத்துக் கொண்டாலும், அதை இவர் வாசிக்கக் கேட்டால், அந்தக் கீர்த்தனை வரிகளை அப்படியே கூடவே பாடிக்கொண்டு வர முடியும். அத்தனை துல்லியமாக அந்தச் சொற்கள் அவர் விரல்களிலிருந்து ஒலியாக வெளிப்படும். தோடி, கல்யாணி, கீரவாணி, கல்யாணவசந்தம் என்று எடுத்துக்கொண்டால், அந்த ராகங்களில் உள்ள ரசம் அத்தனையும் பிழிந்து தந்துவிடும் கலைஞர் மாண்டலின் சீனிவாஸ். நிரவலில் ஒருமுறை வாசித்த சங்கதியையே மீண்டும் வாசிக்கக் கேட்டதாக யாரும் கூறமுடியாது. அத்தனை கற்பனை வளம்! ஸ்வரங்கள் பின்னிப் பின்னி வர்ணஜால வாணங்களாக உதிர்ந்து கொண்டே இருக்கும். கேட்கிற வருக்கு பிரமிப்பாக இருக்க, சீனிவாஸ் சிரித்தபடி அனாயாசமாக வாசிப்பது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காணும் காட்சி. குழையக் குழைய அவர் வாசிக்கும் போது, அவர் வாத்தியத்தைக் கொஞ்சுகிறாரோ என்று தோன்றும். அடுத்த கணமே சரமாரியாக சுவரங்களைக் கொட்டும்போது மாண்டலினை வேண்டுமென்றே சீண்டுகிறாரோ என்று தோன்றும்!

ஆரம்ப நாட்களில், அவரை ஒருமுறை அவரது வடபழனி வீட்டில் சந்தித்து ‘கல்கி’க்காகப் பேட்டி கண்டபோது, அவரது பயமும் பவ்யமும், தமிழ் வார்த்தைகளுக்குத் தயங்கித் தயங்கி ஒரு வார்த்தை இரண்டு வார்த்தைகளாக பதில் சொன்னதும் நினைவுக்கு வருகின்றன. அதிலும் எதிரில் அமர்ந்திருந்த தந்தையின் முகத்தைப் பார்த்து, தான் சொன்னது சரிதானா என்று சைகையாலேயே கேட்டுக்கொண்டார். அடுத்த பேட்டியின்போது சீனிவாஸிடம் பயமில்லை என்றாலும் பணிவு அப்படியே இருந்தது. ஆனால், ஆறு வருடங்களுக்கு முன், இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்மை ஆசிரியர் சேகர் குப்தாவின் ‘வாக் த டாக்’ டி.வி. நிகழ்ச்சியில் அவர் சேகர் குப்தாவுக்கு அளித்த பதில்களைக் கேட்டபோது, அந்தப் பழைய சீனிவாஸா இப்படி ஆங்கிலத்தில் சக்கைப் போடு போடுகிறார் என்ற வியப்பு உண்டானதும் உண்மை. தான் பள்ளிக்கூடம் போய்க் கல்வி கற்கவில்லையே என்ற ஆதங்கம் சீனிவாஸுக்கு இருந்தாலும், அத்தனை கச்சேரிகளுக்கும் நடுவில் சொந்தமாகக் கல்வி கற்றது வியப்பைத் தந்தது.  

ஹரிபிரசாத் சௌராசியா, ஜாகிர் உசேன் போன்ற ஹிந்துஸ்தானி மேதைகளுடன் வாசித்த மேடைகள் பல. ஆனால் அவற்றில் தம் திறமையை மட்டுமே முன்னிறுத்தி விட்டு கைதட்டலைப் பெற்றுக்கொண்டு அடக்கமாக இருந்துவிடுவார். ‘ஜுகல்பந்தி ஒன்றும் கலைஞர்களுக்கு இடையே போட்டி அல்லவே!’ என்பது அவர் கருத்து.ஃப்யூஷன் மியூசிக்கின் மூலம் கர்நாடக இசைக்கோ, வாசிப்பு முறைக்கோ கௌரவக் குறைச்சல் தந்துவிட்டதாக யாரும் சீனிவாஸைக் குற்றம் கூற முடியாது. ஜான் மெக்லாக்லின், மைக்கல் நைமேன், மற்றும் மைக்கல் ப்ரூக் போன்ற உலக இசைக் கலைஞர்களுக்கு இணையாக இடம் பிடித்து அவர்களின் வாத்தியத்தில், அவர்களே அசந்து போகும் அளவுக்கு இசை மழை பொழிந்தவர் மாண்டலின் சீனிவாஸ். அவர் வாசித்தது அத்தனையும் கர்நாடக இசையே. ஆனால் அதில் ஒரு புதுமை தெரிந்தது. ஒரு கவர்ச்சி இருந்தது. அதன் ருசியை உலகம் மொத்தமும் உணரும் அளவுக்கு எடுத்துச் செல்லும் அசாத்திய திறமை அவரிடம் இருந்தது. தான் அமர்ந்த எந்த மேடையிலும் தன் வாசிப்பை மட்டுமே முன்னிறுத்தி வெற்றி கண்டவர் சீனிவாஸ்.

Wednesday, June 15, 2016

‘ஃபாமிலி ப்ளானிங்’ யுகம்!

 
 
 
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்’ என்று ஆசீர்வாதம் பண்ணுவது தமிழ் தேச வழக்கு. வேதத்தில் ஒரு ஸுமங்கலிக்கு என்ன ஆசீர்வாதம் சொல்லியிருக்கிறதென்றால், ‘பகவானே! இவள் பத்துக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அப்புறம் பதியையும் பதினொராவது குழந்தையாக ‘ட்ரீட்’ பண்ணவை!’ என்று. உள்ளே ரொம்ப அர்த்தம் வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறது. தமிழ் வழக்கில் ‘பதினாறும் பெற்று’ என்று இருக்கிறது. ‘ஃபாமிலி ப்ளானிங்’யுகம்! சொன்னாலே உள்ளே தள்ளிவிடுவார்களோ? என்று பயமாயிருக்கிறது!
 ஆனால் ‘பதினாறும் பெற்று’என்பது குழந்தை பெற்றுக் கொள்வதைக் குறிக்கவில்லை என்றும், வாழ்க்கை நல்லவிதமாக இருப்பதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களையே குறிக்கின்றனவென்றும் சொல்கிறார்கள்.

‘பெரும் பேறு பெறுவது’ என்று ஒரு Phrase (சொற்றொடர்) இருக்கிறது. ‘பெறப்படுவது’தான் பேறு. பிரஸவ காலத்தைப் பெரும்பேறு என்கிறபோது ரொம்ப பாக்யவஸமான ஒன்று. அத்ருஷ்டவசமான ஒன்று என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். நாமாக ஒன்றும் பாடுபடாமல் ஈச்வராநுக்ரஹத்தால் பெற்றுக் கொள்வதையே இங்கே ‘பேறு’என்பது. Gifted என்று இதே அர்த்தத்தில் அவர்களும் (மேல்நாட்டினரும்) சொல்கிறார்கள். இம்மாதிரியான பதினாறு பேறுகளைப் பெறுவதில்தான்‘பதினாறும் பெற்று’என்பது.

Monday, April 11, 2016

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்

தேவையானவை:
கருவேப்பிலை: ஒரு கட்டு
புதினா: ஒரு கட்டு
கொத்துமல்லித் தளிர்:
ஒரு பெரியகைப்பிடி
பெரிய வெங்காயம்: 1
பச்சைமிளகா: 1
தக்காளி: 1
வேகவைத்த துவரம்பருப்பு:
1 டேபிள்ஸ்பூன்,
பட்டை: 1, கல்பாசிப்பூ: 1, சொம்பு:
1.2 டீஸ்பூன், சீரகம்: 1/2 டீஸ்பூன், மிளகு:
1/2டீஸ்பூன், மஞ்சள் தூள்: 1 சிட்டிகை, உப்பு:
1/2டீஸ்பூன், எண்ணெய்: 1 டீஸ்பூன், பால்:
1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள்: 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை
 நீளமாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து சொம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல் பாசிப்பூ தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகா, ஆந்து கழுவிய தளிர் ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியதும் பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு நன்கு மசித்து, அந்தச் சாறை வடிகட்டி எடுக்கவும். திரும்ப ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வடிகட்டவும். பருப்பும், வெங்காயமும், தக்காளியும், கரைந்து வரும்வரை இன்னும் அரை கோப்பை தண்ணீர் கூட ஊற்றி வடிகட்டி எடுக்கலாம். வடிகட்டிய இரண்டரைக் கோப்பை சூப்பில் உப்பு சேர்த்து சூடாக்கவும். பின்னர் இறக்கிப் பாலும், மிளகுத் தூளும் கலந்து அருந்தலாம். 
 
இது அசதி போக்கும்; சுறுசுறுப்பை அளிக்கும்; பசியைத் தூண்டும்; வயிறு மந்தமாவதைத் தவிர்க்கும்; கொழுப்புச் சத்தைக் கரைக்கும். கீரைகளின் பயன்
சிதைவுறாமல் கிடைக்கும். நீர்ச் சத்து அடங்கி உள்ளதால் தாகம் தணிக்கும்.

இந்த சூப்பில் இருக்கும் சத்துக்கள்:

*புதினா இலைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. ரத்தசொகையைத் தடுக்கும்.
*கருவேப்பிலையில் விட்டமின் ஏ உள்ளது. 1 சதம் கொழுப்புச் சத்தும், 6.1 சதம் புரதம், 4 சதம் தாது உப்பும், நார்ச்சத்துகளும் மாவுச்சத்துகளும், மக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம், கந்தகம், ஆக்ஸாலிக் ஆசிட் ஆகியனவும் உள்ளன.
*கொத்துமல்லியில் விட்டமின் ஏ, கே மற்றும் கால்சியம் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றது. ஒமேகா-6 ஃபாட்டி ஆசிட் சிறிய அளவில் இருக்கிறது.
உடல் எடையைக் குறைப்பதோடு தேவையான ஊக்கச் சத்தையும் வழங்கும் இந்த சூப்பை பரீட்சை நாட்களில் அருந்திவந்தால் குழந்தைகளுக்கு சுறு
சுறுப்பும் படிப்பில் உற்சாகமும் ஏற்படும். பரீட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கான எனர்ஜி சூப் என்றும்
சொல்லலாம். 

தேனம்மை லெக்ஷ்மணன்

MSI GT72 6QD டாமினேட்டர் ஜி: (MSI GT72 6QD Dominator G)


MSI GT72 6QD டாமினேட்டர் ஜி: (MSI GT72 6QD Dominator G)

இது ஒரு கேமிங் லேப்டாப். முழுக்க உயர் ரக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கேமிங் லேப்டாப், 3.7 கிலோ எடையுள்ளதால், மடியில் வைத்து பயன்படுத்த சற்று சிரமமாகத்தான் இருக்கும். 17.3 இன்ச் ஃபுல்-ஹெச்டி (1080x1920) டிஸ்ப்ளேவின் வெளிப்புறம் மெட்டல் பாடியைக் கொண்டுள்ளதால், இது டிஸ்ப்ளேவுக்குக் கூடுதல் பாதுகாப்பாக அமைகிறது. ஆன்ட்டி-க்ளேர் கோட்டிங்கை கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே, Nvidia Gsync தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், ஸ்க்ரீன் ட்யர் (tear) மற்றும் இன்கேம் ஸ்டட்டர் (in-game stutter) ஆகியவற்றை அகற்றக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.  

ஆறு USB 3.0 போர்ட்கள், ஒரு USB 3.1 (Type C) போர்ட், ஒரு SD கார்ட் ஸ்லாட், மினி-டிஸ்ப்ளே போர்ட் (v1.2), HDMI (v1.4), கில்லர் E2400 Gigabit LAN மற்றும் ஒரு ப்ளூ-ரே ரைட்டரைக் கொண்டுள்ள இந்த லேப்டாப், Dynaudio ஸ்பீக்கர்கள் மற்றும் சப்-வூப்பரைக் கொண்டுள்ளது. இது தவிர, ஹெட்-போன் மற்றும் மைக்ரோபோன் சாக்கெட்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. SteelSeries-ன் கீ-போர்ட் பயன்படுத்துவதற்கு சிறப்பாக இருப்பதோடு, RGB பேக்-லைட்டிங்கும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. டிராக்-பேடும் வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்த அகலமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கேமிங் லேப்டாப், இன்டெல் கோர் i7-6700HQ பிராசஸரைக் கொண்டுள்ளது. இந்த quad-கோர் பிராசஸர், ஒருங்கிணைக்கப்பட்ட HD கிராபிக்ஸ் 530 GPU மற்றும் டூயல்-சேனல் DDR4 மெமரி கன்ட்ரோலரைக் கொண்டு செயல்படுகிறது. 16 GB ரேமைக் கொண்டுள்ள இந்த லேப்டாப், 1066MHz டூயல்-சேனலில் செயல்படுகிறது. 1TB 7200 rpm HGST டிரைவ், Nvidia GTX 970M பிரத்யேக கிராபிக்ஸ் கார்டு ஆகியவற்றை கொண்டுள்ள இந்த லேப்டாப், 3GB GDDR5 வீடியோ மெமரியையும் பெற்றுள்ளது. 
விண்டோஸ் 10 ஹோம் (64-bit) இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த கேமிங் லேப்டாப்பின் இந்திய விலை ரூ.1,68,000.

பிளஸ்:


தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான GPU செயல்பாடு.

RGB பேக்-லைட் கீ-போர்ட்.

Anti-glare full-HD டிஸ்ப்ளே.

வெப்பம் மற்றும் இரைச்சல் இல்லை.

ஸ்டோரேஜ் மற்றும் GPU ஆகியவற்றை உயர்த்திக் கொள்ளலாம்.

மைனஸ்:


SSD கிடையாது.

டிரினிட்டி அட்லஸ் (Trinity Atlas)

கடந்த ஆண்டு டிரினிட்டி ஆடியோ டெல்டா ஹைப்ரிட் இன்-இயர் ஹெட்போன், மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டிரினிட்டி அட்லஸ் ஹெட்போனைப் பற்றி பார்க்கலாம்.

இது ஒரு டூயல்-டிரைவர் ஹைப்ரிட் ஹெட்போன். 8 மி.மீ நியோ-டைமியம் டிரைவர் மற்றும் சமச்சீரான ஆர்மசூர் (armature) டிரைவர்களை கொண்டுள்ளது. இந்த ஹெட்போனின் ஃப்ரீக்வன்ஸி ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் 19-21000Hz, sensitivity 110dB மற்றும் இம்பெடன்ஸ் (impedance) 16 Ohms.

அலுமினியத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போன், ஐந்து மாற்றிக் கொள்ளக் கூடிய ட்யூனிங்க் பில்டர்களை (tuning filter) கொண்டுள்ளது. இதை தவிர, 0.6m, 1.2m மற்றும் பின்னல் டிசைனைக் கொண்ட 1.2m ஆகிய மூன்று அகற்றிக்கொள்ளக்கூடிய கேபிள்களும் இந்த ஹெட்போனுடன் அடங்கும்.

இந்த மூன்று கேபிள்களிலும் ஒரு ரிமோட், இன்-லைன் மைக்ரோ போன் மற்றும் 3.5 மி.மீ பிளக் அடங்கும். மேலும், கொடுக்கப்பட்டுள்ள ஏழு இயர்-டிப்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். லோ, மிட்ஸ் மற்றும் ஹை ஆகிய அனைத்து ஒலி வடிவங்களும் சிறப்பாகவும் தெளிவாகவும் வேலை செய்யும் இந்த ஹெட்-போனின் இந்திய விலை ரூ.14,200.
பிளஸ்:

டிசைன் மற்றும் தரம்.

வாடிக்கையாளர்களுக்கேற்ற வசதி (Customization)

தெளிவான ஒலி வெளிப்பாடு.

மைனஸ்:


சுமாரான இயர்-டிப்ஸ்.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Monday, March 28, 2016

சிறுதானியம்... பெரும் பலன்கள்!

ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

தினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

சோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.
கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

வரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

ரெட்மி நோட் 3 (Redmi Note 3)

குறைந்த விலை, சிறந்த தொழில்நுட்பம் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள ஷியோமி நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட் போனான ரெட்மி நோட் 3-ஐ சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு பலத்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் டிசைனில் எந்தவித குறையுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த போன் சரிபாதி அளவு மெட்டலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘Matte’ பினிஷும் அடங்கும்.
 

1.4 GHz ஹெக்ஸா-கோர் Qualcomm Snapdragon 605 SoC பிராசஸர் கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு மாடல்களில் வருகின்றன. 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி. மற்றொன்று, 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி .


மேலும், 32 ஜிபி வரை மைக்ரோ SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். 5.50 இன்ச் 1080x1920 பிக்ஸல் 403 PPI டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 4050 எம்ஏஹெச் (mAh) பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது.  ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போனில் ஷியோமி நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைனான MIUI 7 இந்த ஸ்மார்ட் போனிலும் அடங்கும். டூயல் சிம் எல்டிஇ (LTE) வசதி கொண்டுள்ள இந்த ரெட்மி நோட் 3, ஐந்து விரல் ரேகைகள் வரை ஸ்டோர் செய்துகொள்ளும் ‘Finger Print’ சென்சார், 16 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவை கொண்டுள்ளது.

விலை:

2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.9,999

3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.11,999

பிளஸ்:

டிசைன்
டிஸ்ப்ளே
தொழில்நுட்பம்
பேட்டரி

மைனஸ்:


NFC வசதி கிடையாது 32 ஜிபி வரைதான் SD கார்டு மூலம் மெமரியை விரிவுபடுத்த முடியும்

சுமாரான கேமரா

செ.கிஸோர் பிரசாத் கிரண் 

இன்ஃபோகஸ் II - 50EA800 LED டிவி

இன்ஃபோகஸ் II - 50EA800 LED டிவி

அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஃபோகஸ் நிறுவனம், அலுவலக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் புரஜெக்டர் தயாரிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கிய இந்த நிறுவனம் தற்போது டிவி தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த LED டிவி, 50 இன்ச் Full HD 1920x1080 பிக்ஸல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ரூ.34,999 என்ற விலையில் விற்கப்படும் இந்த டிவி, மற்ற ப்ராண்ட் 50 இன்ச் LED டிவிக்களைவிட விலை குறைவாக இருந்தாலும் சாதாரண தோற்றத்தையே கொண்டுள்ளது. 


இதன் டிசைனில் பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை. ஓரத்தில் மெல்லிய தோற்றத்தையும் நடுவில் சற்று பருமனாகவும் தோற்றமளிக்கும் இந்த டிவியின் மொத்த எடை 12 கிலோ.

டிவியின் பட்டன்கள் அனைத்தும் கீழே வலப்பக்கத்தில் அமைந்துள்ளன. இன்புட் போர்ட்கள் மற்றும் பிற போர்ட்கள் அனைத்தும் பின்புறத்தில் அமைந்துள்ளன.இந்த டிவியை சுவரிலும் மாட்டலாம்; ஸ்டாண்ட் மூலமும் நிறுத்தி பயன்படுத்தலாம்.

ஒரு USB போர்ட், இரண்டு HDMI போர்ட் இன்புட்,  component & composite ஆடியோ வீடியோ இன்ஸ், Antenna சாக்கெட், VGA போர்ட் வித் PC ஆடியோ இன் மற்றும் 3.5 மி.மீ ஸ்டீரியோ ஆடியோ அவுட்புட் ஆகிய போர்ட்கள் இந்த டிவியில் அடங்கும்.

High-end டிவிகளில் உள்ள செயல்பாடுகள் இந்த டிவியில் இல்லா விட்டாலும், தினசரி பயன்பாட்டுக்கு தேவையான அத்தனை செயல்பாடு களும் இந்த டிவியில் கச்சிதமாக அமைந்துள்ளது.

விலை - ரூ.34,999.

பிளஸ்:

டிஸ்ப்ளேவின் தரம்.
எளிதாக டிவியை பயன்படுத்தலாம்.

மைனஸ்:

ஒலியின் வெளிப்பாடு சில சமயங்களில் சுமாராக அமைகிறது.

சாம்சங் கேலக்ஸி Samsung Galaxy A5

பிரீமியம் ஸ்மார்ட் போனின் தரத்தை பட்ஜெட் விலையில் விற்பதே சாம்சங் கேலக்ஸி ‘A’ வரிசை ஸ்மார்ட் போன்களின் நோக்கமாகும்.

முழுக்க முழுக்க மெட்டல் மற்றும் கண்ணாடி கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், பார்க்க மிக ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது. முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் ‘curved’ கொரில்லா க்ளாசை கொண்டுள்ளது. 5.2 இன்ச் full-HD சூப்பர் Amoled 1080x1920 பிக்ஸல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை ஹோம் பட்டனோடு கொண்டுள்ளது.

டூயல் சிம் 4G LTE  ஸ்மார்ட் போனான இந்த A5, சாம்சங் நிறுவனத்தின் 1.6 GHz Exynos 7580 SoC அக்டோ-கோர் பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது.

2 ஜிபி ரேமைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.

டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூ-டூத் 4.1, என்.எஃப்டி.சி., எஃப்.எம். ரேடியோ, USB OTG ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்  இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைன் மாற்றங்களான TouchWiz டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.

13 மெகா பிக்ஸல் பின்புற கேமரா வெளிச்சத்தில் சிறப்பாக செயல்படு கிறது. இதனுள் இருக்கும் 2900 mAh பேட்டரி   1.5 நாட்கள் வரை நீடிக்கும்.
விலை - ரூ. 28,500.

பிளஸ்:

டிசைன், 
தரம்,
பேட்டரி.

மைனஸ்:

விலை.
Notification LED கிடையாது.
கேமராவின் Focus ஸ்பீட் மெதுவாக இருக்கிறது

செ.கிஸோர் பிரசாத் கிரண்

மோடியின் பார்வை நடுத்தர மக்கள் மீது படுமா?

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம், இந்தியா முழுக்க உள்ள நடுத்தர வர்க்கத்து மக்கள்தான். காங்கிரஸ் ஆட்சியில் ஏகத்துக்கும் அதிகரித்த விலைவாசி உயர்வுடன், கணக்கு வழக்கில்லாமல் நடந்த ஊழல்களால் மனம் வெறுத்துப் போனார்கள். காங்கிரஸை ஒழித்துவிட்டு, மோடியைக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், ஆட்சி மாறியதால் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை மாறிவிடவில்லை. மோடியின் இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயராமல் இருந்திருக்கலாம். சில பொருட்களின் விலை குறையக்கூட செய்திருக்கலாம். எனினும், கல்வி மற்றும் மருத்துவத்துக்காக செய்ய வேண்டிய செலவுகள் அனைத்துமே தாறுமாறாக ஏறியிருப்பது மனதை வருத்தும் நிஜம்.

இன்றைக்கு சென்னை போன்ற பெரிய நகரங்களை ஒட்டி இருக்கிற சில பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புக்கான கட்டணமே ரூ.1 லட்சத்துக்கு மேல். சாதாரண பள்ளிகளில்கூட ரூ40,000 கட்டணம் வசூலிக்கிறார்கள். எல்.கே.ஜி.க்கே இப்படி எனில், கல்லூரிப் படிப்பை சொல்ல வேண்டியதில்லை. கலைக் கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை படித்து முடிக்க வேண்டுமெனில், குறைந்தது ரூ.4 லட்சமாவது செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதுவே பொறியியல் கல்லூரி எனில், 6 முதல் 8 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. 20 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் ‘மேனேஜ்மென்ட் கோட்டா’வில் சீட் வாங்க ரூ.10 லட்சம் நன்கொடையாக கட்ட வேண்டியிருக்கிறது.  


கல்விக்கு இப்படி எனில், மருத்துவத்துக்கு ஆகும் செலவு அதிர  வைக்கிறது. ஹார்ட் அட்டாக் என்று அறுவை சிகிச்சை செய்து 3.50 லட்சம் ரூபாய் பில் போட்டால், எந்த நடுத்தர வர்க்கத்து மனிதனால் கட்ட முடியும்? அறுவை சிகிச்சைகூட வேண்டாம், சாதாரண நோய்களுக்கு தொடர்ந்து சாப்பிடும் மருந்துகளே மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறதே! எதிர்காலத்துக்கென எதுவும் சேர்த்து வைக்காத சாதாரண மனிதர்கள் இந்தச் செலவுகளை எப்படித்தான் சமாளிப்பார்கள்?

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். இவர்களின் சிக்கலைத் தீர்க்க பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நடுத்தர மக்கள் மலை போல நம்பியிருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைக்கிறார். மோடியின் ஆட்சி இப்படியே இருக்குமெனில், விரைவில் நடக்கவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலிலும் மக்களின் ஆதரவை பா.ஜ.க. பெற முடியாது என்பது நிச்சயம்!

- ஆசிரியர்.

Sunday, February 07, 2016

மகாமக மகாத்மியம்!


பிரளயமாகிற பேரழிவு நிகழப் போவதன் துவக்கத்தை உணர்ந்து கவலையுற்ற பிரம்மனுக்கு சிவனார் வழிகாட்டினார். அதன்படி, ஜீவன்களை, படைப்பின் கலன்களை, அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் வைத்து இமயத்தின் உச்சியில் வைத்தார் பிரம்மன்.

பிரளயம் வந்தது. உலகெல்லாம் நீரில் மூழ்க, நீரின் அலைகள் இமயத்தின் உச்சியைத் தொட்டன. அப்போது, அந்த அமுதக் கும்பமானது, நீரலைகளில் அடித்து வரப்பட்டது. அது, குடந்தை பகுதியில் வந்தபோது, பிரளய நீர் வடிந்து, கும்பம் தரை தட்டி நின்றது. பிரம்மனுக்கு உதவும் பொருட்டு, சிவபெருமான் வேடுவ உருவம் தாங்கி, தனது வில்லில் நாண் ஏற்றினார். சிவனாரின் பாணம் பாந்து, கும்பத்தின் மூக்கு சிதறித் தெறித்தது. அப்போது கும்பத்தில் இருந்து அமுதம் பெருக்கெடுத்து, குளமா நிறைந்தது. அந்தக் குளமே தற்போது நாம் காணும் மகாமகக் குளம்.

குடத்தின் மூக்குச் சிதறுண்டதால், குடமூக்கு என்றும், கும்பகோணம் எனவும் வழக்கப்பட்டது. குடத்திலிருந்த அமுதம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங்களிலும் பாந்து அப்பகுதிகளைச்
செழுமையாக்கியது. இதன் பின்னர் பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெரு மானிடம் அனுமதி கேட்டார். அவர் அருளியபடி, பிரம்மன் பூர்வபட்ச அசுவதி நாளில் கொடியேற்றம் செய்து, பெருமானையும் தேவியையும் எட்டு நாட்கள் எழுந்தருளச் செய்தார். தொடர்ந்து, ஒன்பதாவது நாள் மேரு மலைபோலும் உயர்ந்த தேரில் பஞ்சமூர்த்திகளை எழுந்தருளச் செய்து, பத்தாவது நாளான மக நன்நாளில் பஞ்ச மூர்த்திகளை வீதி உலா அழைத்து வந்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசி மகவிழாவைத் துவக்கி வைத்தார். இவ்வாறு பிரம்மனே துவக்கி நடத்தி வைத்த விழா எனப் பெருமை பெற்றுத் திகழ்கிறது, மாசி மக விழா.

இத்தகைய புராண வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட மகாமக தீர்த்தக் குளத்துக்கு தீர்த்தச் சிறப்பு கிடைத்தது நவநதி கன்னியர்களால்!

நீர், நம் அழுக்கைக் களைவது. நம் பாவங்களைப் போக்கி நம்மைத் தூமையாக்குவது. அதனால்தான் நதிகள் புனிதமாயின. நதி நீராடல் புனிதமாயிற்று. இப்படி, மனிதர்கள் தங்கள் பாவங்களைக் கழுவ புண்ணிய நதிகளில் மூழ்கித் திளைக்க, நதிகள் எல்லாம் அவர்களைக் கழுவிப் பாவங்களைச் சுமக்கத் தொடங்கின. ஒருகட்டத்தில் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து, சரயு உள்ளிட்ட நவநதிகளும் நவ கன்னியர்களா மாறி, கயிலாயத்தை அடைந்து
சிவபெருமானைத் துதிக்க, பெருமான் அவர்களுக்கு அருளினார். அதன்படி, அவர்களை காசியிலிருந்து குடந்தை நகருக்கு அழைத்து வந்து, மாசி மக நன்னாளில் மகாமகக் குளத்தில் ஒன்றுசேர்ந்து புனித நீராடச் சோன்னார். நவ நதி கன்னியரும் குளத்தில் நீராடி, ஆதிகும்பேஸ்வரரை பூஜித்து, தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று தூமை அடைந்தனர்.

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப் பதும், தொடுவதும், பருகுவதும், அதில் நீராடு வதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இந்த தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

செங்கோட்டை ஸ்ரீராம்

ஆராய்ச்சி!


கடலிலே மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் ஜோர்டான் நாட்டில், ‘மரணக் கடல்’ என்றழைக்கப்படும் சாக்கடலில் குதிப்பவர்கள் மூழ்கி இறக்கவே மாட்டார்கள். இது எப்படிச் சாத்தியம்? ஒரு சின்னப் பரிசோதனையை வீட்டிலேயே செய்தால் இதற்கான விடையைக் கண்டு பிடித்துவிடலாம்.

பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள்: முட்டை, கண்ணாடி டம்ளர், உப்பு, தண்ணீர் மற்றும் ஸ்பூன்.

செமுறை: ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். முட்டையை டம்ளரில் இருக்கும் தண்ணீரில் மெதுவாகப் போடுங்கள். நீரில் அடியில் முட்டை தங்கிவிடும்.

அதே முட்டையை மிதக்க வைக்கவும் முடியும். முயன்று பார்ப்போமா?

டம்ளரில் இருக்கும் முட்டையை எடுத்து விடுங்கள். இப்போது டம்ளரில் உள்ள தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். முட்டையை அந்த நீரில் மெதுவாகப் போடுங்கள். இப்போது முட்டை நீரில் மிதப்பதைப் பார்க்கலாம்.

முட்டை இப்போது மட்டும் ஏன் மிதக்கிறது? காரணத்தைப் பார்ப்போமா?

சாதாரணத் தண்ணீரில் முட்டையைப் போட்டபோது முட்டையின் அடர்த்தி(density), நீரின் அடர்த்தியை விட அதிகமானதாக இருந்தது. எனவே முட்டை மூழ்கி விட்டது. அடுத்தது உப்புக் கரைசலில் போட்டபோது, முட்டையின் அடர்த்தியைவிடக் கரைசலின் அடர்த்தி அதிகமாக இருந்ததால் முட்டை மிதக்க ஆரம்பித்து விட்டது. அதாவது ஒரு திடப்பொருள் திரவத்தில் மிதக்கிறதா அல்லது மூழ்குகிறதா என்பது அந்தப்திடப் பொருள், மற்றும் திரவத்தின் அடர்த்தியைப் பொருத் திருக்கிறது! பரிசோதனை இன்னும் முடியவில்லை. இப்போது முட்டையை வெளியே எடுத்துவிட்டுக் கரைசல் இருக்கும் டம்ளரில் கரைசலுக்கு மேலே சுத்தமான தண்ணீரை ஊற்றி நிரப்புங்கள். முட்டையை மீண்டும் அந்த நீரில் மெதுவாக இடுங்கள். முட்டை மூழ்குமா? மிதக்குமா?

முட்டை நீர்ப் பரப்பின் மேலேயும் மிதக்காது. டம்ளரில் அடியிலும் இருக்காது. மாறாகக் கரைசலும் புதிதாக ஊற்றப்பட்ட நீரும் சந்திக்கும் இடத்தில் நிற்கும். இதற்கு என்ன காரணம்? அடர்த்தி மிகுந்த உப்புக் கரைசல் முட்டையை மேலே தள்ளுகிறது. அடர்த்தி குறைந்த நீரோ முட்டையைக் கீழே அழுத்துகிறது. எனவேதான் முட்டை நடுவில் நிற்கிறது!

இப்போது முட்டையை வெளியே எடுத்துவிடுங்கள். கரண்டியால் டம்ளரில் உள்ள கரைசலை நன்கு கலக்குங்கள். மீண்டும் அதில் முட்டையைப் போடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்!

யார் இந்த ஏஞ்ஜெலிக் கெர்பர்?


செரீனா வில்லியம்ஸை டென்னிசில் தோற்கடிக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ளார் ஏஞ்ஜெலிக் கெர்பர். யார் இந்த ஏஞ்ஜெலிக் கெர்பர்?

டென்னிஸுக்கு அப்படி ஒன்றும் புதியவர் இல்லை. ஜெர்மனியில் வளர்ந்த போலிஷ் பெண் கெர்பர், 2003-ல் புரொஃபஷனல் ஆனார். 13 ஆண்டுகளில், முடிந்த ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன், இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்குத் தகுதி, சில முறை டாப் 10-ல் இடம் என்பதைத் தவிர வேறு சாதனைகள் இல்லை.

2015-ல் முதல் ரவுண்டிலேயே தோல்வியுற்ற கெர்பர், இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே நிலைக் குத் தள்ளப்பட்டார். அவர் வார்த்தைகளில் சொன்னால், ஒரு காலை விமானத்துக்குள் வைத்தபடிதான் முதல் ரவுண்டின் மூன்றாவது செட்டை ஆடினார்", எனலாம். தோல்வியின் விளிம்பில் இருந்து பெற்ற வெற்றி அவர் தன்னம்பிக்கையைக் கூட்டியிருக்க வேண்டும். அடுத்தடுத்த வெற்றிகள் அவரை காலிறுதிக்கு இட்டுச் சென்றன.

மெல்பெர்னில் நான்காவது சுற்றை முதன் முறையாகத் தாண்டிய கெர்பரை சந்திக்க விக்டோரியா அசரெங்கா காத்திருந்தார். இவ்விருவரும் இதற்கு முன் மோதியபோதெல்லாம், கிராண்ட் ஸ்லாம்கள் சில வென்றுள்ள, அசரெங்காவின் பக்கமே வெற்றி. ஆட்டத்தில் தொடக்கத்தில் அசரெங்கா ஒழுங்காக ஆட வில்லை என்றபோதும், முதல் செட்டை கெர்பர் போராடித்தான் வெல்ல முடிந்தது. இரண்டாவது செட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில், ஐந்து செட்பாயிண்டுகளைத் தவிர்த்து, அசரெங்காவை சமன் செய்தபோதும் கெர்பர் ஜெயிப்பார் என்று நினைத்திருப்பவர்கள் குறைவுதான்.

எதிர்பாராதது நடந்தது! கெர்பர் நேர் செட்களில் 6-3, 7-5 என்று ஜெயித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இறுதி ஆட்டம் கெர்பரைவிட செரீனாவுக்கே அதிக அழுத்தத்தைக் கொடுத்திருக்க முடியும். கெர்பர் ஜெயித்தாலும் தோற்றாலும்எதிர் பார்த்ததைவிட அதிகம் சாதித்து விட்டார். 

செரீனாவின் பதற்றம் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தெரிந்தது. எதிராளியை முதல் அடியிலிருந்து எழவிடாமல்திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்று வந்திருந் தார் செரீனா. துரதிர்ஷ்டவசமாக அவருடைய கணக்குகள் தப்பின. பரபரப்பில் பல முக்கிய தருணங்களில் அவருடைய ஆட்டம் அவரைக் கைவிட்டது.

மாறாக, கெர்பரோ அதிகம் அலட்டிக் கொள்ளா மல் செரீனாவின் தவறுகளுக்குக் காத்துக் கொண்டிருந்தார்.

செரீனா 46 முறை தூண்டலின்று தவறு செய்ய, கெர்பரோ அத்தகை தவறுகளை 13 முறைதான் செய்தார். சமவாப்பு அமைந்த தருணங்களில் அவசரப் பட்டு நெட்டுக்கு அருகில் செரீனா வந்தபோதெல்லாம் அவருக்குத் தோல்வியே காத்திருந்தது. கெர்பரை சாம்பியன் பட்டம் வெல்லவைத்த அந்தக் கடைசி பாயிண்டில் கூட செரீனா நெட்டுக்கு விரைந்து பந்தை வெளியில் அடித்தார்.

26 ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற செரீனா பதற்றமாகவும், முதன் முறையாக ஃபைனலில் ஆடிய கெர்பர் நிதானத்துடனும் ஆடிய விசித்திரம் அரங்கேறியது.

1990-களில் பட்டம் வென்ற கிராஃபுக்குப் பிறகு ஒரு ஜெர்மன் வீராங்கனை கிராண்ட்ஸ்லாம் வென்று, கிராஃபின் சாதனையை தற்காலிகமாகவாவது காத்துள்ளார்.
வாடி ராசாத்தீ!

தீன சரண்யர் - அருள்வாக்குதமிழ் தேசத்துக்கு அவர் ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சோல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம் - முருகன். முருகு என்றாலே அழகு என்றுதான் சொல்கிறார்கள். காமன் எரிந்துபோன அப்புறம் அவனுடைய கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக்கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால் தான் ஸுப்ரஹ்மண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, த்ரிபுரஸுந்தரி. அவளுடைய பிள்ளை, தாயைப் போலப் பிள்ளை என்றபடி லாவண்ய மூர்த்தியாகத் தானே இருப்பார்?


அழகு இருந்தால் போதுமா? நமக்கு வேண்டியது அருள். ஸ்வாமி அழகு வடிவமாக இருக்கிறாரென்றால் அந்த அழகே அருள் வடிவம் தான். காருண்யம்தான் லாவண்யம். இரண்டும் வேறே வேறேயில்லை. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர் - ‘தீன சரண்யர்’. எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்ரர்கள் எல்லாரும் ‘தீனர்கள்’ என்ற வார்த் தைக்குள் வந்து விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் துக்க நிவ்ருத்தி தரும் புகலாக அவர் இருக்கிறார்.

கட்டுப்பாட்டு அணை! - அருள்வாக்கு


யௌவனம், வாலிபம் என்பது உணர்ச்சி வேகங்கள் கட்டறுத்துக் கொண்டு புரளுகிற பருவம். தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஸர்வ ஜனங்களின் மேலும் ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கிற பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ் ஆகியவை அத்தனை பேரையுமே உணர்ச்சி வேகங்களில் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கையில், தன்னியற்கையாகவேறு அந்த வேகங்களின் எழுச்சிக்கு ஆளாகியிருக்கிற வாலிப வயசு மாணவர்கள் - கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் - ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பது இரண்டு பங்கு (மடங்கு) சிரமம்தான்.

ஆனாலும் தங்களுடைய எதிர்காலத்துக்கான வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்தச் சிரமத்தைச் சமாளித்தேதீர வேண்டும். அதிலேயேதான் தேசத்தின் தற்கால அமைதி, எதிர்கால அமைதி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன. வாலிப வயஸுக்காரர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப் போய், வீட்டிலும் அமைதி குலைந்து கெட்டுப் போய், நாட்டிலும் அமைதியின்மையே அடிவேர் வரை பரவிக் கெடுத்து விடும்.

கட்டறுத்துப் புரளுகிற இந்த உணர்ச்சி வெள்ளத்துக்கு அணை போட்டு வைப்பதாகத்தான் நம்முடைய முன்னோர்களான பெரியவர்கள் பாலப்பிராயத்தில் அக்ஷராப்யாஸம் ஆன நாளிலிருந்து தெய்வ பக்தியையும், குரு பக்தியையும், அடக்க குணப் பண்பையும் விதித்து, நடைமுறையாக்கிக் கொடுத்தார்கள்.

Thursday, February 04, 2016

லெனோவா வைப் K4 நோட்...

லெனோவா நோட் இந்தியாவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து, லெனோவா தனது அடுத்த தயாரிப்பான லெனோவா வைப் K4 நோட்டை வெளியிட்டுள்ளது. இது என்.எஃப்.சி தொழில்நுட்பத்துடன் வெளியாகி யுள்ளது. ஆப்பிள் போன்களில் உள்ளதைப் போன்ற ஃபிங்கர் சென்ஸார் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.


இந்தியாவில் சுமார் 12 லட்சம் k3 நோட் செல்போன்களை விற்று சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து லெனோவா அதன் அடுத்த வெர்ஷனை களமிறக்கியுள்ளது. இது 5.5 இன்ச் டிஸ்ப்ளே அளவு கொண்டதாகவும், பின்புற கேமரா 13 MP மற்றும் செல்ஃபி கேமரா 5 MP என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3300 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த தயாரிப்பு K3 நோட்டைவிட அதிக பேட்டரி திறன் கொண்டது. இந்த மாடல் பாதுகாப்பு திறன் அதிகம் கொண்டதாகவும், 4 அடுக்கு பாதுகாப்பு வசதி கொண்ட பேப்லெட் (Phablet) வகை என கூறப்பட்டுள்ளது. (Pin, Pattern, Password, Finger print). Octa- core பிராசஸர் கொண்ட இந்த பேப்லெட் 3 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி இன்டர்னெல் மெமரியைக் கொண்டுள்ளது. 

4ஜி, இரண்டு சிம் வசதி கொண்ட இந்த பேப்லெட்டின் விலை ரூ.11,999. இந்த கேட்ஜெட் மார்ச் மாதத்துக்குள் K3 நோட்டைவிட அதிக விற்பனையாகும் என லெனோவா எதிர்பார்க்கிறது. குறைந்த விலை கேட்ஜெட்டில் K3 நோட் ஹிட் அடித்ததை போல, இது ஹிட் அடித்தாலும் இதற்கும் இதன் முந்தைய மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், அடுத்த மாடலுக்கு அப்டேட் செய்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கியர் S2 VR...

சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பமான விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் சாம்சங் கியர் S2. இதன் முந்தைய மாடலுடன் 19% எடை குறைவாக வெளியாகி இருக்கும் இந்த கேட்ஜெட், 318 கிராம் எடையுள்ளதாகவும், 201.9x116.4x92.6mm அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 96 டிகிரி அளவுக்கு பார்க்க முடியும். இதில் ஆடியோவை கன்ட்ரோல் செய்யும் பட்டன், ஃபோகஸ் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும். 


360 டிகிரி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை இதன் மூலம் 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அளவை மாற்றி அமைத்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை ரூ.8,200 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வீடியோக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தயாரிக்கும் அக்குலஸ் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. அக்குலஸ் நிறுவனத்தின் உதவியுடன்தான் சாம்சங் இந்த தயாரிப்பை தயாரித்துள்ளது. இனி ஒரு ஃப்ரேமில் மட்டுமல்லாமல் இதனைக் கொண்டு 360 டிகிரியில் வீடியோக்களை ரசிக்க முடியும்.

ச.ஸ்ரீராம்

Thursday, December 31, 2015

வெள்ளரியின் பலன்கள் 5


கருவளையம்: கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதுதான். வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்‌ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து, சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தைப் போக்குகின்றன. வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து, கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும்.

கண் வீக்கம்: கண் வீங்கிப்போய் இருந்தால், வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள்வைத்தால், அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும்.

சருமப் பொலிவு: வெள்ளரியை முகத்தில் தடவினால், முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன், சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.


புற ஊதா கதிர்வீச்சு: சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சு, சருமத்தைப் பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும், சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது.

முடி வளர்ச்சி: வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து, தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்.


ஆரோக்கியம் காக்க வழிகள் 10

கம்ப்யூட்டருக்கும் நம்முடைய கண்களுக்குமான இடைவெளி, கோணம் என அனைத்தும் சரியாக உள்ளதா, நாற்காலி கீழ் முதுகைத் தாங்கும் வகையில் உள்ளதா என்பன போன்ற எர்கனாமிக்ஸைக் கவனிக்க வேண்டும்.
 கைகளை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும். முடிந்தால் ஆன்டிசெப்டிக் லிக்யூட்டை பயன்படுத்தலாம்.

எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.

அதிக அளவில் காபி, டீ அருந்துவதும் தவறு. இரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சரியான நேரத்துக்கு மதிய உணவை உட்கொள்ள வேண்டும்.

வேலை செய்யும் இடத்திலேயே (டெஸ்க்கில்) அமர்ந்து மதிய உணவை உண்ணக் கூடாது.

நடப்பதற்காக ரிமைண்டர் செட் செய்துகொள்ளலாம். காபி, டீ சாப்பிட என நடப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

மேசை மீது தண்ணீர் பாட்டிலை வைத்து, அவ்வப்போது நீர் அருந்த வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து, உலோகத்தால் ஆன பாட்டிலைப் பயன்படுத்தலாம்.

வடை, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்து, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை என ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எல் நினோ

இந்த ஆண்டின் இறுதி, மறக்க முடியாத சோகத்தை அளித்திருக்கிறது. சென்னை மற்றும் கடலூர் பகுதியில், பல லட்சம் மக்களைத் தெருவில் வரவைத்தது பேய் மழை. ‘எல் நினோ’ எனும் உலக வானியல் நிகழ்வே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்த ‘எல் நினோ’-வின் காரணத்தால், வெள்ளத்தில் சென்னை மூழ்கிவிடும் என்ற பெரும் பீதி கிளம்பியது. 


‘எல் நினோ’ என்றால், ஸ்பானிஷ் மொழியில்  ‘குட்டிப் பையன்’ என்று பொருள். ‘குழந்தை ஏசு’ என்றும் பொருள்படும். தென் அமெரிக்க பசிபிக் கடலில், பெரு நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், கிறிஸ்துமஸ் நெருங்கும் சமயத்தில், வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் வெப்பமாக இருப்பதை மீனவர்கள் கண்டனர். இந்த நிகழ்வுக்கு ‘எல் நினோ’ என்று பெயர் வைத்தனர். டிசம்பரில் ஏற்படும் எல் நினோ, அடுத்த ஒன்பது மாதங்கள் நீடித்து, உலக வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

எல் நினோவுக்கும் பசிபிக் கடலின் வானிலைக் காற்றழுத்த மாற்றங்களுக்கும் தொடர்பு உள்ளது. பசிபிக் கடலின் மேற்கில், குறைவான காற்றழுத்தம் இருந்தால், எடை இல்லாத தராசுத் தட்டு மேலே செல்வது போல பசிபிக் கடலின் கிழக்கில், காற்றழுத்தம் கூடுதல் அடையும். அதேபோல, மேற்குப் பகுதியில் காற்றழுத்தம் குறைந்தால், கிழக்குப் பகுதியில் அதிகரிக்கும். ஊஞ்சல் போல அலையும் இந்த வானிலை மாற்றத்தை, தென் பகுதி அலைவு (Southern Oscillation) எனப்படும். எனவே, எல் நினோவையும் தென் பகுதி அலைவையும் சேர்த்து, ‘என்ஸோ’         (ENSO-El Nino Southern Oscillation) என்று வானிலையாளர்கள் அழைக்கின்றனர்.


எல் நினோ நிகழ்வின்போது, கிழக்கு பசிபிக் கடல் நீரோட்டத்தின் வெப்பம் அதிகரிக்க, கடல் நீர் ஆவியாவதும் அதிகரிக்கிறது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. எனவே, எல் நினோ ஏற்படும்போது, கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் மழைப் பொழிவு கூடுதல் அடைகிறது. அதிக மழைப் பொழிவால், கிழக்கு பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில், வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கக் கண்டத்தில், அதிக வெள்ளம் ஏற்படும். கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்படுவது முதல், ஆஸ்திரேலியாவில் புயல் மழை வரை இதன் விளைவுகள் அமையும்.

சரி, இந்த நிகழ்வு இந்தியாவை எப்படிப் பாதிக்கும்? எல் நினோ- என்ஸோ அலைவுக்கும், இந்திய வானிலைக்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு. எல் நினோ ஆண்டுகளில், மேற்கில் இருந்து கடல் நீர் வெப்பம் அடையத் துவங்கி, மத்திய பசிபிக் வரை வெப்பம் அடையும். பசிபிக் கடலில் குவியும் வெப்ப நீர்த்திரளின் காரணமாக, புவியின் பல பகுதிகளிலும் வானிலை வெகுவாகத் தாக்கம் பெறும். இந்தோனேஷியப் பகுதியில் அதிகரிக்கும் கடல் வெப்பம் காரணமாக, இந்திய நிலப்பரப்பின் மேலே இருந்து பசிபிக் கடல் நோக்கிக் காற்று பாயும். இதன் காரணமாக, தென் மேற்குப் பருவக் காற்று வலிமை குன்றி, இந்தியாவில் மழைப் பொழிவு குறையும்.


132 ஆண்டுகால இந்திய வானிலை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவில் வறட்சி ஏற்பட்ட ஆண்டுகள் எல்லாம் ‘எல் நினோ’ நிகழ்வு ஆண்டுகளே.  ஆயினும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எல் நினோ வில்லன் எனச் சொல்ல  முடியாது. தென்மேற்குப் பருவ மழையை, எல் நினோ கடுமையாகப் பாதித்தாலும், அதன்பின் ஏற்படும் வடகிழக்குப் பருவ மழை கிடைக்கும். எல் நினோவின் தங்கையாகிய ‘லா நினோ’ என்பது, ‘குட்டிப் பெண்’ என்று பொருள்படும். லா நினோ விளைவு, இந்திய தென் மேற்குப் பருவ மழைக்கு உதவும்.

- த.வி.வெங்கடேஸ்வரன்


2015 முக்கிய நிகழ்வுகள்!

திட்டக் குழுவை மாற்றி அமைத்தார்  மோடி! 
மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை   இந்த ஆண்டின் முதல் நாளன்றே, அதாவது ஜனவரி 1-ம் தேதி அன்றே செய்யத் தொடங்கியது. அதில் முக்கியமானது, இந்தத் திட்டக் குழு மாற்றம். இந்தத் திட்ட குழுவின் பெயரை ‘நிதி ஆயோக்’ என்று மாற்றினார்.

பத்து பேர் கொண்ட இந்த ‘நிதி ஆயோக்’ குழுவின் துணைத் தலைவராக, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். 65 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்த  இந்தத் திட்டக்  குழுவின் பெயரை மாற்றியது இந்த ஆண்டின் அதிரடி அரசியல் மாற்றங்களில் ஒன்றாகும்! 

பங்குச் சந்தையின் கருப்பு திங்கள்!

2015 ஆகஸ்ட் 24-ம் தேதி திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை பெரிய சரிவை சந்தித்தது.  அன்று சந்தை முடிவில்  சென்செக்ஸ் 1,624.51 புள்ளிகளும், நிஃப்டி 490.95 புள்ளிகளும் சரிந்தன. இதுதான் இந்தியப் பங்குச் சந்தையின் வரலாற்றில் மிகப் பெரிய சரிவாகக் கூறப்படுகிறது.

இதற்குமுன் 2008-ல் உலகச் சந்தையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால், ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை 1408 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.


எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல்!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் நடவடிக்கைகளை செயல்படுத்த ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற திட்டத்தைத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் மோடி. இதன் மூலம் பல நிறுவனங்களில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்றும், சுமார் 18 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ரூ.2.5 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது. டிசிஎஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 60,000 பேருக்கு வேலை வழங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சொல்லி இருக்கிறார்.

ஏஜென்ட்டுகள் தவறு செய்தால் ரூ. 1 கோடி!

காப்பீட்டு நிறுவன முகவர்கள் தவறு செய்தால், அந்த நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என காப்பீட்டு கண்காணிப்பு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ. புதிய விதிமுறையைப் பிறப்பித்துள்ளது. அதேபோல, முகவர்கள் விதிமுறையை மீறி செயல்பட்டால், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஒரு முகவர் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம், ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்காக மட்டும் பணியாற்ற முடியும் என்றும் சொல்லி இருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.!

பழைய கார்களுக்குத் தடை!

வாகனங்களால் காற்று பெருமளவில் மாசுபடுவதால், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஹரியானா போன்ற மாநிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் இயங்கும் டீசல் வாகனங்களையும், 15 வருடங்களுக்கு மேல் இயங்கும் பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாணையம். மீறி பயன்படுத்துவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்தது. இதனால் புதிய கார்களின் விற்பனை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சனிக்கிழமை தாக்கலான மத்திய பட்ஜெட்! 

மத்திய அரசின் பட்ஜெட் பொதுவாக பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளன்று தாக்கல் செய்யப்படும். இதுவரை இது வாரநாளாகவே இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டம், 15 ஆண்டுகளுக்குப்பின்  சனிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது.  கடந்த    1999-ம் வருடம் யஷ்வந்த் சின்ஹா நிதி  அமைச்சராக இருந்த போது சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 வட்டியை உயர்த்திய ஃபெடரல் வங்கி!

2006-ம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப் படாமல் இருந்த வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%்) அதிக ரித்து ஃபெடரல் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெ ரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி னால், இந்தியச் சந்தையி லிருந்து வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் வெளியேறும் என்றும், சந்தை சரியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்தில் இந்தியச் சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகின.

 மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இருந்து வெளியேறியது ரெலிகேர்!

 ரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ரெலிகேர் நிறுவனம் 51 சதவிகித பங்குகளையும் இன்வெஸ்கோ நிறுவனம் 49 சதவிகித பங்குகளையும் வைத்திருந்தது. ரெலிகேர் தனது 51 சதவிகித பங்கையும் இன்வெஸ்கோ நிறுவனத்திடமே விற்றுவிட்டு, மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸிலிருந்து   வெளியேறியது. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறை சீராக வளர்ச்சி அடைந்த  நிலையிலும், ரெலிகேர் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தையின் புதிய உச்சம்!

2008 சரிவின்போது சுமாராக 8500 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வந்த சென்செக்ஸ், 2015 மார்ச் மாதம்  30,024 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.

போலாரீஸ் நிறுவனத்தை கைப்பற்றிய வெர்சூசா!

சென்னையைத் தலைமையிடமாக கொண்ட போலாரீஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், கோர் பேங்கிங் கன்சல்டிங், கார்ப்பரேட் பேங்கிங், வெல்த் அண்ட் அஸெட் மேனெஜ்மென்ட், இன்ஷூரன்ஸ் உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது.  இந்த போலாரீஸ் நிறுவனத்தை அமெரிக்காவைச் சார்ந்த வெர்சூசா  நிறுவனம் ரூ.1,173 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. 

கார்பன் சிக்கலில் மதர்சன் சுமி!

வோக்ஸ் வோகன் கார் நிறுவனத்தின் கார்பன் வெளியீடு ஊழலைத் தொடர்ந்து அதன் முக்கிய சப்ளையரான மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனத் தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது. 05 ஆகஸ்ட் 2015-ல் 395 ரூபாய்க்கு வர்த்தகமான இந்தப் பங்கு இந்த செய்தி வெளியானபின் 01 அக்டோபர் 2015 அன்று 217 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது.

69% இறங்கிய ஆம்டெக் ஆட்டோ!

ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியா ளரான இந்த நிறுவனம் கூடுதல் கடன் சுமை, மூலப்பொருட்களின் விலை அதிகரித்தது, நிகர விற்பனை குறைந் தது, இதை எல்லாம் விட இன்வென்ட்ரி லாஸ் 252 கோடி ரூபாயாக அதிக ரித்தது, நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் குறைந்தது போன்ற செய்திகளால் இந்தப் பங்கின் விலை 69% சரிந்தது.

ஐந்து நிமிடங்களில் விற்ற 60,000 மேகி பாக்கெட்டுகள்! 

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான காரீயம் உள்ளது என்று அதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. பிற்பாடு அந்த  தடை விலக்கப்பட்டது. இந்த நிலையில் நெஸ்லே ஸ்னாப்டீலுடன் இணைந்து ஆன்லைனில் மேகி விற்பனையைத் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் சுமார் 60 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.

ஜாக்பாட் அடித்த ஐபிஓகள்! 

2015-ல் ஐ.பி.ஓ.கள் மூலம் சுமார் ரூ.11,000 கோடி  திரட்டப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.3,025 கோடியை திரட்டியது. காபிடே ரூ.1,150 கோடியும் ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் ரூ.1,037 கோடியும் திரட்டின.

ரூ.765 ரூபாய்க்கு பட்டியலான இண்டிகோ பங்கு விலை தற்போது ரூ.1150-க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. எஸ்.ஹெச்.கேல்கர் பங்கின் விலை ரூ.180-க்கு பட்டியலானது, தற்போது ரூ.240-க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆனால், காபிடே பங்கு விலை ரூ.328-க்கு பட்டியலானது. ஆனால், இப்போது ரூ.275-க்கு வர்த்தகமாகி வருகிறது.

டீமேட் கணக்குகள் அதிகரிப்பு!

2015 ஜுன் 30 வரை  முடிந்த ஓராண்டில்  ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.4 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக என்எஸ்டிஎல் தெரிவித் துள்ளது. ஜூன் 30  வரை மொத்தம் 2.37 கோடி டீமேட் (இது அதற்கு முந்தைய ஆண் டில் 2.2 கோடியாக இருந்தது) கணக்குகள் உள்ளன. இந்த டீமேட் கணக்குகளில் உள்ள  மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.131.26 லட்சம் கோடி ஆகும்.  இது முந்தைய ஆண்டைவிட 29% அதிகம். திருப்பதி வெங்கடாசலபதியின் பெயரில் டீமேட்  கணக்கு தொடங்கப்பட்டுள்ளது!

வராமலே போன ஜி.எஸ்.டி.!

இந்த ஆண்டிலாவது நிச்சயம் நிறைவேறும் என்கிற மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தது பொருள் மற்றும் சேவை வரி மசோதா.  ஆனால், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேறாமல்  தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் கடைசியாக நடந்துமுடிந்த  நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடித்தது பாரதிய ஜனதா அரசாங்கம். இதற்காக பிரதமர் மோடி நேரடியாக களத்தில் இறங்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஆதரவை கடைசி வரை தரவே இல்லை. 2016-லாவது இந்த மசோதா நிறைவேறுமா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது!

கைமாறிய ஸ்பைஸ் ஜெட்!

2010 முதலே தொடர்ந்து விலை இறங்கிவந்த ஸபைஸ்ஜெட் நிறுவனத்தின்  பங்கு விலை 2014-ம்  ஆண்டு ஆகஸ்ட் 14-ல் 11 ரூபாய்க்கு வர்த்தகமானது. பல்வேறு பிரச்னைகளால் இந்த நிறுவனம் நஷ்டத்தையே கண்டுவந்த நிலையில், இந்த நிறுவனத்தை தொடங்கிய அஜய் சிங்கே மீண்டும் அதை வாங்கினார்.

அதிகரித்த விமான பயணிகளின் எண்ணிக்கை, விமான எரிபொருளின் விலை குறைவு போன்ற சாதகமான அம்சங்களால் இந்தப் பங்கின் விலை அதிகரித்து, தற்போது சுமாராக ரூ.69-க்கு வர்த்தகமாகி வருகிறது.

4ஜி சேலஞ்ச்: வரிந்துகட்டும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

இந்திய செல்போன் தொழில்நுட்பத்தில் அடுத்த மைல்கல் இந்த 4ஜிதான். இந்தியாவில் 4ஜி சேவை தர முதலில் இறங்கியது ஏர்டெல். இதனை அடுத்து ஏர்செல், ரிலையன்ஸ், ஐடியா மற்றும் வோடாபோன் என அனைத்து மொபைல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் 4ஜி-யை அறிமுகப்படுத்த உள்ளன. 4ஜி சேவை  நம் மக்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது 2016-ல் தான் தெரியும்.

தங்கம் இறக்குமதி  அதிகரிப்பு !

தங்கம் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க மத்திய அரசு எத்தனையோ நடவடிக் கைகளை எடுத்துப் பார்த்தது. ஆனால், நடப்பாண்டில் (2015) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத் தின் அளவு 1,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 11%  அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.சா.கெளதமன், ஜெ.சரவணன்.

2015 பெஸ்ட் கேட்ஜெட்ஸ்!

மைக்ரோசாஃப்ட் ஹாலோ லென்ஸ் (Microsoft HoloLens) 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முற்றிலும் ‘அவுட் ஆஃப் தி ஸ்க்ரீன்’ கேட்ஜெட்டாக வலம் வருகிறது மைக்ரோசாஃப்ட் ஹாலோ லென்ஸ். இதை மூக்குக் கண்ணாடி போல் நாம் அணிந்துகொண்டால், நம் கண் எதிரே காண்பது, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளின் 3D ஹாலோகிராம் பிம்பங்கள். உதாரணமாக, நீங்கள் உங்கள் லேப்டாப்பில் ஒரு பைக்கினை டிசைன் செய்கிறீர்கள் எனில், இந்த லென்ஸை அணிந்துகொண்டு பார்த்தால், அந்த பைக்கின் முன்மாதிரி உங்கள் கண்முன் தெரியும். இந்த பிம்பங்களை உங்கள் கைகள் அல்லது குரலை பயன்படுத்தி, உங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். விலை: ரூ.80,000 - ரூ.99,999.

பிரின்ட் கேஸ் (Print Case) 


இதன் மூலம் உங்கள் மொபைலை இன்ஸ்டன்ட் கேமராவாக மாற்றிக்கொள்ளலாம். இது வெறும் மொபைல் கேஸ்தான். இதனை உங்கள் மொபைலுக்கு அணிவித்தால் போதும். உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்களை இதற்கென்றே பிரத்யேக ‘ப்ரின்ட் ஆப்’-ல் நீங்கள் பதிவேற்றம் செய்து இந்த கேஸினுள் வைக்கப்பட்ட போட்டோ ஷீட்டில் உங்களுக்கான போட்டோவை பிரின்ட் செய்து, இந்த கேஸின் மறுமுனையில் அந்த பிரின்டட் போட்டோவை பெற்றுக் கொள்ளலாம். கேமராக்களோடு இருந்த பிரின்ட் ஆப்ஷன் தற்போது மொபைலுக்கு தாவியுள்ளது. விலை ரூ.6,500 - ரூ7,000.

லைவ்ஸ்க்ரைப் 3 ஸ்மார்ட்பென் (Livescribe 3 Smartpen)


ஸ்மார்ட் ஆக்ஸசரீஸ் வரிசையில் இப்போது பேனாவும் வந்துவிட்டது. லைவ்ஸ்க்ரைப் நோட்புக்கில் நீங்கள் எழுதுவதை இதன் இன்ப்ரா ரெட் கேமரா பதிவு செய்யத் தொடங்கும். அந்தக் கணத்திலேயே உங்களைச் சுற்றி கேட்கும் ஒலியை அந்த நோட்ஸுடன் ஸிங்க் செய்து இதன் பிளாஷ் மெமரியில் பதிவு செய்துகொள்ளும் இந்த ஸ்மார்ட் பென். கையில் பேனா பிடித்திருக்கும் உணர்வையே மறக்கச் செய்யும் டிசைன் கொண்ட இந்த ஸ்மார்ட்பென்னில் 400 முதல் 800 மணி நேரங்கள் வரையிலான ஆடியோக்களை பதிவு செய்துகொள்ளலாம். இதன் பேட்டரி 14 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. விலை ரூ.86,000 – 1,00,000

அமேசான் எகோ (Amazon Echo)

இந்த வருடம் முழுவதும் கூகுள் முதல் ஃபேஸ்புக் வரை அனைத்து நிறுவனங்களும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பில் மும்முரமாக இருக்க அமேசான் தன் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக பரிசளித்தது இந்த அமேசான் எகோ. வாய்ஸ் கண்ட்ரோல்டு ஸ்பீக்கர் என்பதைத் தாண்டி நிற்கும் இதன் ஸ்பெஸிஃபிகேஷன்கள் சந்தைக்கு புதிது. ‘அமேசான்’ அல்லது ‘அலெக்ஸா’ என்ற கட்டளைச் சொல்லின் மூலம் இயக்கப்படும் இதனிடம் நீங்கள் டைம், வெதர் ரிபோர்ட் கேட்கலாம்; டைமர் செட் செய்யலாம், மளிகை லிஸ்ட் தயார் செய்ய சொல்லலாம்.இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை கேட்கலாம். கடந்த மேட்சில் சென்னையின் எஃப்சி அணியின் ஸ்கோர் பற்றி விவாதிக்கலாம் இன்னும் எவ்வளவோ என நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல். விலை ரூ.12,500 முதல்...

ஃபிட் பிட் சார்ஜ் ஹெச் ஆர் (Fit Bit Charge HR) 


2015-ம் ஆண்டின் சிறந்த ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது இது. ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் என்பன நம் இதயத்துடிப்பு, நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு, நாம் நடக்கும் தூரம் போன்ற உடலின் சில முக்கிய ஹெல்த் ஃபாக்டர்களை தொடர்ந்து கண்காணிக்க உதவும் வாட்ச் போன்ற கருவியாகும். மற்ற எல்லா ஃபிட்னஸ் ட்ராக்கர்களும் தினந்தோறும் நாம் நடக்கும் தூரத்தை கணக்கிடுவதில் ஏதேனும் ஒரு பிழை இழைத்தாலும் இது தனக்கான வேலையை மிகத் துல்லியமாக செய்து முடிக்கிறது. தானாகவே செயல்படத் துவங்கும் ஸ்லீப் ட்ராக்கர், வைரேஷன் வசதி கொண்ட அலாரம், குறைந்த விலை ஆகியவை மற்ற ஃபிட்னஸ் ட்ராக்கர்களை விட இந்த ஃபிட் பிட்–ஐ சந்தையில் முதலிடம் பிடிக்க வைத்திருக்கி்றது.விலை ரூ.12,900 முதல்...

சோனி ஸ்மார்ட் வாட்ச் 3 (Sony Smartwatch 3)
ஆப்பிள், சாம்சங், எல்.ஜி., பெப்பிள் என ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பல ஜாம்பவான்களின் தலை தென்பட்டாலும் சோனியின் பங்களிப்பு மிகவும் நுட்பமானது. இதன் GPS-இல் ஆப்பிள் தோற்றுப் போனது. இதன் வசீகரமான ஸ்லீக்கி டிசைனில் சாம்சங் தோற்றுப் போனது.

இதன் ஸ்போர்ட்ஸ் ஸ்டைலிங் வசதிகள் மற்றும் விலையே பெப்பிள், மோட்டோரோலா, எல்.ஜி. போன்ற பெரு நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்சுகளை சந்தையில் பின்னுக்கு தள்ளியதற்கான முக்கியக் காரணிகள். விலை ரூ. 17,000 முதல்...

ஸ்ரீ.தனஞ்ஜெயன்