Search This Blog

Wednesday, June 29, 2011

வரப்போகிறது, வண்ணப் பருத்தி , தரப்போகிறது, திருப்பூருக்கு தீர்வு?

''சீனாவில் வண்ணப் பருத்தி பயன்பாட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நமது வேளாண்மைப் பல்கலைக்கழகமும் வண்ணப் பருத்தி குறித்த ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். இந்தப் பருத்தி கண்டுபிடிக்கப்பட்டால், சாயக்கழிவு பிரச்னையால் சரிவு கண்டிருக்கும் திருப்பூருக்கு சரியான தீர்வாக இருக்கும்''

 


பரிசோதனையில் இருக்கிறது! 

''சரி, வண்ணப்பருத்தி என்பது எந்த அளவுக்கு சாத்தியம்?'' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பருத்தி ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர், முனைவர். எஸ்.ராஜரத்தினத்தைச் சந்தித்தபோது, ''சீனாவில் வண்ணப்பருத்தி விளைவது குறித்த தகவல் எங்களிடம் இல்லை. ஆனால், நமது பருத்தி ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வண்ணப்பருத்தி தொடர்பான ஆராய்ச்சிகளை நீண்டகாலமாக செய்துமுடித்து, வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டு நிறங்களில் விளையும் பருத்தி ரகத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள்'' என்று சொல்லி ஆச்சரியமூட்டினார்!

தொடர்ந்து பேசிய ராஜரத்தினம், ''பல்கலைக்கழக நிலத்தில் வண்ணப்பருத்தியை விதைத்து பரிசோதனை முறையில் மகசூல் எடுத்துள்ளோம். ஆனால், ஆராய்ச்சி இன்னும் நிறைவு பெறாத காரணத்தால் வெளியிடவில்லை. வண்ணப் பருத்தியில் நூற்புத்திறன் குறைவாகவே உள்ளது. அதேபோல இதைச் சாகுபடி செய்துள்ள நிலத்தின் அருகில் வேறு பருத்தியை பயிரிடக்கூடாது. இதற்கு அருகில் வெள்ளை நிற பருத்திச்செடிகள் இருந்தால், அயல்மகரந்த சேர்க்கை மூலம் அதன் வெண்மை நிறத்தை, வண்ணப்பருத்தி பாதித்து விடும். அதனால் நூற்புத்திறன், மகசூல், புதிய நிறங்கள்... என்று எல்லாவற்றிலும் முழுமை அடைவது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்கின்றன'' என்று சொன்னார்.

 

ண் வளம் பாதுகாக்கப்படும்! 
 
பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். ப. முருகேசபூபதி இதுதொடர்பாக பேசியபோது, ''வண்ணப்பருத்தி குறித்தான ஆராய்ச்சியை இஸ்ரேல் நாடுதான் முதலில் துவங்கியது. நமது பல்கலைக்கழகமும் அதைச் செய்து வருகிறது. பல வண்ணம் கொண்ட பருத்தியை நமது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வண்ணப்பருத்தி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்த நாள் வரும்போது... திருப்பூரை உலுக்கி வரும் சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பலாம். மண்வளம், நீர்வளம், மனிதவளம், சுற்றுசூழல் இதன் மூலம் காப்பாற்றப்படும். இந்த ஆராய்ச்சி திருப்பூருக்கு மட்டுமல்ல... இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்து, பெருமைத் தேடித் தரக்கூடியதாகவும் இருக்கும்'' என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.

இதற்கு வரவேற்பு தந்து நம்மிடம் பேசிய தென்னிந்திய பனியன் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் சக்திவேல், ''பல ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியை அரசுக்கு ஈட்டித் தருகிற திருப்பூர், சாயப்பட்டறை பிரச்னை காரணமாக இன்று சிக்கலில் உள்ளது. பல்கலைக்கழகத்தின் வண்ணப்பருத்தி ஆராய்ச்சி முழுமை பெற்று, பல வண்ணங்களில் பருத்தி விளைந்தால் அது திருப்பூருக்கு விடிவெள்ளியாக இருக்கும்'' என்று சந்தோஷம் பொங்கக் குறிப்பிட்டார்!

அதேசமயம், திருப்பூரைச் சேர்ந்த சமூகசேவகர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் மிகவும் யோசிக்க வைப்பவையாகவே இருந்தன.''வண்ணப்பருத்தியின் வரவுக்கு நாடே வரவேற்புக் கொடுத்தாலும், சாயப்பட்டறை சார்ந்த தொழில் செய்பவர்கள் இதை விரும்ப மாட்டார்கள். திருப்பூரில் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்குச் சாயப் பவுடர், வேதியியல் பொருட்களின் வணிகம் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தையும் தயாரித்து விற்பது... பன்னாட்டு கம்பனிகள்தான். வண்ணப்பருத்தி வரும் பட்சத்தில்... திருப்பூர் மட்டுமல்ல, ஈரோடு, கரூர் என்று எல்லாச் சாய ஆலைகளும் மெள்ள மூடப்பட வேண்டியிருக்கும். பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் பறிபோகும் சூழலில், பன்னாட்டு ரசாயன கம்பெனிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டா இருக்கும்?


நிச்சயமாக வண்ணப்பருத்தி ஆராய்ச்சியில் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தத்தான் செய்வார்கள் அந்தக் கம்பெனிக்காரர்கள். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அப்போது, அந்தக் கம்பெனிகளுக்கு அடிபணிந்து விடாமல், துணிச்சலாக வண்ணப்பருத்தியை விவசாயிகள் மத்தியில் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே?!'’ என்ற கேள்வியை எழுப்பி முடித்தார்!


விகடன் 

Tuesday, June 28, 2011

தாய்நாட்டுக்கு என்ன செய்றீங்க?

அமெரிக்காவில் வளரும் இந்தியக் கலைகள்

அமெரிக்காவில் பல்வேறு கணினி நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய கணினிப் பொறியாளர்கள் ஒன்றுகூடி வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் என்னும் நகரத்தில் 2006ஆம் ஆண்டு இண்டஸ் க்ரியேஷன்ஸ் என்னும் அமைப்பை ஏற்படுத்தி, கலையையும் கலாசாரத்தையும் தமிழ் நாடகங்கள் மூலமாகத் திறம்பட வளர்க்கிறார்கள். இவர்களின் கடவுள் வந்திருந்தார், ரகசிய ஸ்நேகிதியே, லண்டன் எக்ஸ்பிரஸ், அரண்மனை சிறு வயலில் போன்ற நாடகங்கள் இங்கு பிரபலம்.


 
இவர்கள் தயாரிக்கும் நாடகங்களில் அனைவருமே தாங்களாகவே முன்வந்து, மேடை நிர்வாகம், இசை, நடிப்பு, கதை அமைப்பு, நாடகத்தின் வசனம் காட்சிகளின் ஆக்கம், ஒப்பனை அரங்க வடிவமைப்பு, ஒலி ஒளி ஆகியவற்றை அந்தக் குழுவினரே திட்டமிட்டு, தங்கள் கைகளாலேயே உருவாக்கி நாடகத்தில் அவர்களே நடித்தும் முழுமையாக்குகிறார்கள்.

திறமையாகக் கதை சொல்லும் கலையை வளர்ப்பது. தினம் தினம் மிகுந்த வேலைப்பளுவோடு மென்பொருள் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொறியாளர்களின் மனதை மென்மையாக்கி இரண்டு மணிநேரம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதே இண்டஸ் க்ரியேஷன்ஸின் நோக்கம். இவர்கள் எங்கும் பயிற்சி எடுக்காமல் தாங்களாகவே கற்றுக் கொண்டு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

நாடகக் கலையை வளர்ப்பது மட்டுமல்ல, இந்த நாடகக் கலை மூலமாக ஈட்டும் பணத்தை இந்தியாவிலே இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். இதுவரை தொடர்ந்து ஐந்து நாடகங்களை மேடையேற்றி மகத்தான வெற்றி கண்டிருக்கிறார்கள். கதை, இயக்கத்தை மனோஜ் சிவகுமாரும் தயாரிப்புப் பொறுப்பை வெங்கட் கிருஷ்ணமாச்சாரியும் கவனித்துக் கொள்கின்றனர்.



 
 
அதுமட்டுமல்ல இவர்களின் நாடகத்தைக் காணவரும் மக்களின் மூலமாக இண்டஸ் க்ரியேஷன் புகழ்பரவி அண்டை மாநிலமான ஒரே கான்ஸி, போர்ட்லாண்ட் நகரத்தில் இவர்களை அழைத்து நாடகம் போடச் சொல்லி வேண்டுகின்றனர். அங்கேயும் சென்று நாடகங்களைப் போடுகின்றனர். இவர்களுடைய ஆறாவது நாடகமான சக்கர வியூகத்தை வரவிருக்கும் ஜூலை மாதம் 10ஆம் தேதி சியாட்டிலில் உள்ள கிர்க்லாண்ட் பெர்பாமென்ஸ் மையத்தில் அரங்கேற்றவுள்ளார்கள். அதற்கான ஒத்திகை மைக்ரோ சாஃப்ட் ரெண்ட்மொண்ட் வளாகத்தில் நடக்கிறது.
 
இந்தியாவில் படித்து முன்னேறி அயல் நாடுகளுக்குச் சென்றுவிடும் வாலிபர்கள் தாய் நாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்கின்ற பலரின் கேள்விக்கு விடையாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து தங்கள் பணிகளையும் திறம்பட செய்துகொண்டே தமிழையும், நாடகக் கலையையும் வளர்த்து அதன் மூலமாக இவர்கள், இதுவரை செலவு போக ஈட்டிய தொகை 50,000 டாலர்கள்.அதாவது இந்திய மதிப்பில் 22 லட்ச ரூபாய்கள். இப்படி இவர்கள் தங்கள் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் தங்கள் உழைப்பு, நேரம் ஆகியவற்றை அளித்து ஈட்டிய இந்தப் பெருந் தொகையை இந்தியாவிலுள்ள தொண்டு நிறுவனங்களான ‘அசோசியேஷன் ஃபார் இந்தியாஸ் டெவலப்மென்ட்’, ‘சங்கரா கண் மருத்துவமனை’, ‘உதவும் கரங்கள்’ போன்ற பல நிறுவனங்களுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். இப்போ யாரும் கேட்க முடியாது ‘தாய்நாட்டுக்கு என்ன செய்றீங்கன்னு’ இந்த நினைப்பே சந்தோஷமாயிருக்கும் என்கின்றனர் இண்டஸ் க்ரியேஷன்ஸ் குழுவினர்.


Saturday, June 25, 2011

அண்ணாவின் போராட்டம்...அம்மாவின் ஆட்டம்.....ஓ பக்கங்கள், ஞாநி


அண்ணாவின் போராட்டம்...

மறுபடியும் உண்ணாவிரதப் போராட்டம்தான் என்று அண்ணா ஹசாரே அறிவித்துவிட்டார். சென்ற முறை அவர் உண்ணாவிரதமிருந்த போது ஆங்கில டி.வி.சேனல்கள் உருவாக்கிய எழுச்சியை இந்தமுறை உருவாக்கவும் முடியாது. அவை செய்யப்போவதும் இல்லை. வேறு ஏதாவது புதுமையாகப் பரபரப்பாக நடந்தால் தான் அவை கவனிக்கும்.உண்ணாவிரதப் போராட்டம் என்ற வடிவமே செத்துப் போய் பல காலமாகிவிட்டது. சரியாகச் சொல்லப்போனால், காந்தியோடு அதுவும் செத்துவிட்டது. காந்தியின் உண்ணா விரதங்களை இப்போதைய உண்ணாவிரதங்களோடு ஒப்பிடுவதோ, ஒரே வகைப்படுத்துவதோ நியாயமே இல்லை

 காந்தி தம் உண்ணாவிரதங்களை வேறு யாருக்கோ எதிரான போராட்டமாக முன் நிறுத்தவில்லை. தம் கருத்தை ஆட்சியாளர்களோ, தம் கட்சியினரோ ஏற்காதபோது, தம் கருத்தைத் தெரிவிப்பதில் தம்மிடம்தான் ஏதோ பிழையிருக்கிறது என்று அவர் கருதினார். தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்ளவும், தம்மை தம் கருத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும் உண்ணாவிரதம் இருப்பதாகவே அவர் பலமுறை தெரிவித்திருக்கிறார். தம்மைத்தாமே வருத்திக் கொள்வதன் மூலம் மேலும் கருத்துத் தெளிவும் மன உறுதியும் அடைய முடியுமென்று அவர் நம்பினார்.

இப்போதைய உண்ணாவிரதங்கள் எல்லாம் ஒருவிதத்தில் மிரட்டல்கள்தான். தன்னைத்தானே உறுதி செய்வதற்கானவை அல்ல. ஐரம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் மட்டுமே கொஞ்சம் வேறுபட்டதாகத் தோன்றுகிறது.  எப்படி இன்றைய உண்ணாவிரதிகள் யாரும் காந்தி போன்றவர்கள் இல்லையோ, இன்றைய ஆட்சியாளர்களும் அவர் காலத்து ஆட்சியாளர்கள் போன்றவர்கள் அல்ல. உண்ணாவிரதம் இருந்து ஒருவர் செத்துப் போவதைப்பற்றித் துளியும் கவலைப்படாத மனமுடையவர்களாகவே ஆட்சியாளர்கள் கடந்த 60 வருடங்களாகக் காணப்படுகிறார்கள். ஆந்திரத்தில் பொட்டி ஸ்ரீராமுலு, ஈழத்தில் திலீபன், அண்மையில் ஹரித்வாரில் சுவாமி நிகமானந்தா ஆகியோர் சாகவிடப்பட்டார்கள். பல்வேறு தொழிற்சங்கங்கள் அவ்வப்போது கோரிக்கைகளுக்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றன. யாரும் அதைக் கண்டுகொள்வதே இல்லை. ஈழத் தமிழர்களுக்காகச் சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த சாதனையைக் கருணாநிதி செய்திருக்கிறார். 

காந்தியின் உண்ணாவிரதப் போராட்ட வடிவம் மிகக் கடுமையாக இழிவுபடுத்தப் பட்டுவிட்டது. எனவே உண்ணாவிரதத்துக்கு பதிலாக மக்களைத் திரட்டும் வேறு வடிவங்களைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வோட்டு என்ற ஒற்றை அதிகாரம் இன்னமும் மக்களிடம் இருக்கிறது. சரியான பிரதிநிதிகளைத் தேர்வு செய்யாததால் வரும் விளைவுகளையே மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வேறு தீர்வுகள் தேடுவதில் அர்த்தமில்லை. சரியான பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதுதான் ஒரே தீர்வு.லோக்பால் சட்டம் நிறைவேறி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. இன்னொரு அதிகார மையத்தை உருவாக்குவதில்தான் அது முடியும். லோக்பாலாக யார் நியமிக்கப்படுவார், லோக்பால் குழுவாக யார் இடம் பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம்தான் அதாவது அரசியல் கட்சிகளிடம்தான் இருக்கும் என்பதை ஏற்கமுடியாது என்று அண்ணா ஹசாரே குழுவினர் சொல்லுகிறார்கள். அப்படியானால் வேறு யார் நியமிப்பது? பாராளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம்தான் அதிகாரமும் பொறுப்பும் தரமுடியும். சரியான பிரதிநிதிகளைத் தேர்தலில் அனுப்பி வைப்பது மக்களுடைய பொறுப்பு. 

இப்போதுள்ள சட்டங்களும் நீதித்துறையும் எல்லா ஊழல்களையும் முறை கேடுகளையும் விசாரித்து தண்டிக்கப் போது மானவைதான். ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக் கொள்வோம். தனியார் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் முதல் இருபெரும் தி.மு.க. பிரமுகர்கள் வரை வழக்கின் முதல் கட்டத்திலேயே சிறையில் இருக்கிறார்கள். இது எப்படி நடந்தது? ஆயிரக்கணக்கில் மக்கள் குண்டு வீச்சில் செத்துக் கொண்டிருந்தபோது, மத்திய அரசை நிர்ப்பந்திப்பதற்காக ஒரு முறை கூட தில்லி செல்லாத கருணாநிதி, இப்போது மாதாமாதம் தில்லி சிறைக்குப் போய்வரும் நிலையை ஏற்படுத்தியது எது?  இதற்காக எந்தப் புதிய சட்டமும் போடப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் சட்டங்களின் அடிப்படையில்தான் நீதிபதிகள் உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே நமது அசல் பிரச்னை சட்டங்கள் போதாமை அல்ல. இருக்கும் போதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய மனிதர்கள் அதற்கான பொறுப்புகளில் இல்லாததுதான். ஓரிரு இடங்களில் சரியான மனிதர்கள் வரும்போது சட்டங்களின் முழு வீச்சும் கிடைக்கிறது.எனவே சர்வ அதிகாரம் உடைய ஒரு புதிய லோக்பாலை உருவாக்குவதைவிட முக்கியமானது, ஏற்கெனவே இருக்கும் அதிகாரப் பதவிகளில் எப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை சரி செய்வதுதான். விஜிலன்ஸ் கமிஷனராக விட்டல் இருந்தபோது செயல்பட்டதற்கும் தாமஸ் வரும்போது செயல்படுவதற்கும் இருக்கும் வித்தியாசம் தான் முக்கியமானது.எனவே இப்படிப்பட்ட நியமனங்களைச் செய்யும் நடைமுறையில் மாற்றங்களுக்காக நாம் போராட வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில், நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பதவிகளுக்கான நியமனங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தின் சர்வகட்சி உறுப்பினர்களின் பொது விசாரணைக்குப் பிறகே செய்யப்படுகின்றன. ஒரு நீதிபதி கீழ் கோர்ட்டில் கொடுத்த தீர்ப்புகள் முதல் அவரது சமூகப் பார்வை வரை எல்லாம் அந்த விசாரணையில் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. 

நீதிபதிகள் முதல் துணை வேந்தர்கள், அரசு வக்கீல்கள் வரை அப்படிப்பட்ட வழிமுறைகளின்படியே நியமிக்கப்பட வேண்டும் என்பதற்கான சட்டத் திருத்தங்களுக்காகவே போராட வேண்டும். ஒரு கல்கி அவதாரம், ஒரு மகாத்மா காந்தி, ஒரு ஏசு கிறிஸ்து போல நம்மை உய்விக்க வருபவர் லோக்பால் என்ற மாயையைக் கைவிடவேண்டும்.

 அம்மாவின் ஆட்டம்.....

ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கூட ஆகாத நிலையில் ஜெயலலிதா ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கக் கொஞ்சம் காத்திருக்கலாம் என்றே முதலில் நினைத்தேன்.கருணாநிதி அரைகுறையாகக் கட்டிய ‘தண்ணீர் தொட்டி’க் கட்டடத்தைக் கைவிட்டது, கிராம ஏழைகளுக்கு வீடு கட்ட பணம் தருவதாகச் சொல்லி அவர்களை மேலும் கடனாளியாக்கிய வீட்டு வசதித் திட்டத்தை மாற்றியது, தனியார் நிறுவன லாபத்துக்காக நடத்தப்பட்ட மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை மாற்றுவது, ஏழைகளுக்கு என்று ஆரம்பித்து எல்லாருக்குமாக ஆக்கப்பட்ட அபத்தமான இலவச டி.வி. திட்டத்தை நிறுத்தியது எல்லாம் எனக்கு உடன்பாடானவைதான். மாற்றுத் திட்டங்கள் எப்படிப்பட்டவை என்று அவை வந்ததும்தான் விமர்சிக்க முடியும். பிரம்மாண்டமான அரசு விழாக்கள் நடத்த ஆரம்பிக்காமலிருப்பது, தான் செல்லும்போது போக்குவரத்தை சீர்குலைக்காமல் இருப்பது எல்லாம் பாராட்டுக்குரியவை.

பள்ளிக் கல்விக் கட்டணம் தொடர்பாக பெற்றோர், கல்வி நிறுவனங்கள் இரு சாராருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் கல்விக் கட்டண நிர்ணயக்குழு விவகாரம் கருணாநிதியின் குளறுபடி. நீதிபதி கோவிந்தராஜன், நீதிபதி ரவிராஜ பாண்டியன் இரு குழுக்களுமே கருணாநிதி ஏற்படுத்தியவை. ஜெயலலிதா தம் பங்குக்கு இனி இன்னொரு குழுவை நியமித்துக் குழப்பலாம்.என்னால் புதிய ஆட்சியிடம் சகித்துக் கொள்ளமுடியாமல் இருப்பது, சமச்சீர் கல்வி விஷயத்தைக் கையாளத் தெரியாமல் போட்டுக் குழப்பி, குழந்தைகளையும் பெற்றோரையும் பள்ளிகளையும் சிக்கலில் ஆழ்த்தியிருப்பதுதான்.


நான் ஆரூடம் சொன்னது போலவே உச்ச நிதீமன்ற உத்தரவின்படி அரசு அமைத்த ஆய்வுக்குழு ஆட்சியாளர்களின் விருப்பத்தை ஆமோதிக்கக் கூடிய குழு. அதில் கல்வியாளர்கள் போதுமான அளவு இல்லை. பள்ளி உரிமையாளர்கள்தான் இருக்கிறார்கள். அதிலும் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த ஆசிரியைக்கு, சரியாக ஊதியம் தராத வழக்கில் சிக்கியிருப்பவர். மெட்ரிக், ஸ்டேட், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல் என்ற நான்கு வழிகளையும் இணைக்கும் பொதுப் பாடத்திட்டத்தை ஆய்வு செய்வதற்கான குழுவில் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளி சார்புக்கு மட்டுமே இடம் தரப்பட்டிருக்கிறது. தமிழ் தெரியாத அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படித் தமிழ் மீடியப் பாடப் புத்தகத் தரம் பற்றி முடிவு செய்வார்கள்? பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தமிழ் மீடியம்தான் அதிகம்.  என்னால் சகிக்கமுடியாத கொடுமை, செம்மொழி மாநாட்டு சின்னத்தை ஸ்டிக்கர் வைத்து ஒட்டி மறைப்பதும் புத்தகங்களில் சில பக்கங்களைக் கிழித்து மாணவர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதும்தான். 

குமரிமுனை திருவள்ளுவர் சிலையும் அதன் கீழ் கருணாநிதி கையெழுத்தில் இருக்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகமும் ஏன் மறைக்கப்படவேண்டும்? சரியோ தவறோ, செம்மொழி மாநாடு தமிழக அரசு செலவில் நடத்தப்பட்டது. கருணாநிதி வீட்டுப் பணத்தில் அல்ல. அழகுணர்ச்சியே இல்லாமல் வடிக்கப்பட்ட வள்ளுவர் சிலையும் அரசுப் பணத்தில் வைத்ததுதான்.கருணாநிதிக்கு ஐஸ் வைப்பதற்காக அவர் தொடர்புள்ள பாடங்களை, பாடல்களை புத்தகத்தில் சேர்த்ததும், சூரியன் படத்துக்காக கலைஞர் டி.வி. சின்னத்தைப் படமாகப் போட்டதும் முந்தைய ஆட்சியின் மன்னிக்க முடியாத தவறு என்று அடித்துச் சொல்ல சமச்சீர்கல்வி ஆதரவாளர்கள் தயங்குவது ஏன் என்றும் புரியவில்லை.


கருணாநிதி-ஜெயலலிதா இந்தக் சண்டையில் இன்னொரு முக்கியமான குற்றவாளிகள் நம் கவனத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள். அவர்கள்தான் இரு ஆட்சியிலும் இருக்கிற ஜால்ரா அதிகாரிகள். பாடப்புத்தகங்களில் கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் விஷயங்களைச் சேர்த்தவர்கள் யார்? அதற்கு ஒப்புதல் தந்த அதிகாரிகள் யார்? ஆட்சி மாறியதுமே அரசு அறிவிப்புப் பலகை முதல் எல்லா இடங்களிலும் (கருணாநிதிக்கு ராசியான) மஞ்சளுக்கு பதில் (ஜெயலலிதாவுக்கு ராசியான)பச்சை வண்ணம் இடம்பெறச் செய்ய உத்தரவிடும் அதிகாரிகள் யார் யார்? இப்படியெல்லாம் மாற்றமுடியாது என்று ஏன் கருணாநிதியிடமோ ஜெயலலிதாவிடமோ எடுத்துச் சொல்லும் முதுகெலும்பு, அதிகாரிகளுக்கு இல்லை?

கருணாநிதி ஆட்சியில் அதன் சார்பாக அச்சிட்ட பாடப் புத்தகப் பக்கங்களைக் கிழிக்கத் தேவை இல்லை. அவற்றைப் படிக்க வேண்டாம் என்று மாணவர்களுக்கு உத்தரவு இட்டாலே போதும் என்று ஏன் ஒரு அதிகாரி கூட ஜெயலலிதாவிடம் சொல்ல முற்படுவதில்லை? அறிவுக் கூர்மையுள்ளவர் என்று ஆராதிக்கப்படும் ஜெயலலிதாவுக்கே ஏன் அது தோன்றுவதில்லை? எவ்வளவு பணமும் நேரமும் உழைப்பும் வீண்? வள்ளுவர் சிலைப் படத்தை பச்சை அட்டையால் மறைப்பது பெங்களூரில் மொழி வெறியர்களால், வள்ளுவர் சிலை கோணியால் மூடிக் கிடந்ததையே நினைவுபடுத்துகிறது. 


கொடுமையிலும் பெரும் கொடுமை இந்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலை, பக்கம் கிழிக்கும் வேலையெல்லாம் ஆசிரியர்களிடம் தரப்பட்டிருப்பதாகும். செயல்முறைக்கல்வி, விளையாட்டின் மூலம் கல்வி முதலிய நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு அறிமுகம் செய்த போதெல்லாம் அதைச் செய்யமாட்டோம் என்று எதிர்த்து வேலை நிறுத்தம் செய்து ஒழித்துக் கட்டிய தொழிற்சங்க வீரர்கள் எல்லாம் இப்போது எங்கே? ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு பக்கம் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன கேவலம்? இடதுசாரி கட்சிகளின் மாணவர்கள் சமச்சீர் கல்விக்கும் கட்டணத்துக்கும் தெருவில் போராடுகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளின் ஆசிரியர்களும், தி.மு.க. ஆசிரியர்களும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வறட்டுப் பிடிவாத நடவடிக்கைகளும் அராஜகங்களும் அறவே இல்லாமல் ஆட்சி நடத்த எப்போது கற்பார் ஜெயலலிதா?

இந்த வார நகைச்சுவை:

அதிகாரபூர்வமான தேர்தல் செலவுக் கணக்கு:

ஸ்டாலின்: ரூ 3 லட்சத்து 32 ஆயிரத்து 709.

அவரை எதிர்த்த சைதை துரைசாமி: ரூ 6 லட்சத்து 11 ஆயிரத்து 659.

கருணாநிதி: ரூ 4 லட்சத்து 47 ஆயிரத்து 615. 97 பைசா.

ஜெயலலிதா: ரூ 9லட்சத்து 60 ஆயிரத்து 52.

தங்கபாலுவுக்குக் கட்சி கொடுத்தது: ரூ 10 லட்சம். அவர் செலவழித்தது: ரூ 4 லட்சத்து 4 ஆயிரத்து 809.
 

தயாநிதிமாறன்.. ப.சிதம்பரம்.. அடுத்து?

சுவாமியின் குற்றப் பத்திரிகை


னதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். 

இனி அவர் பேட்டி:

''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்​களேன்?''  

'இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் பினாமிகள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இந்த ஊழலில் சிக்கி இருக்கிறார்கள். இந்த வி.ஐ.பி-க்கள் எல்லோரையும் சினிமாவில் வருவதுபோல், ஒரே ஃப்ரேமில் கைது செய்துவிட முடியாது. இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே மூன்றாவது குற்றப் பத்திரிகையில் இடம்பெறுவார்கள். எனக்குக் கிடைத்த தகவல்படி, அடுத்தடுத்து 11 குற்றப் பத்திரிகைகள் வரை தாக்கல் ஆகப்போகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் விரைவில் சிக்குவார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். அடுத்து சிக்கப்போகிறவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இவருக்குப் பிறகு, மிகப் பெரிய பெயர் வரும். அது யார் என்று இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன்!''

''அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா?''


 ''நிச்சயமாகத் தமிழகத்தில் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க-வில் முக்கியமானவர்கள் எல்லாம் சிக்கிவிட்டார்கள். கருணாநிதிக்கு ரொம்ப வயதாகி​விட்டது. அவரை எந்த முறையில் கொண்டு​வரலாம் என்று ஆலோசித்து வருகிறோம். தயாளு அம்மாள், சாட்சிகள் வரிசையில் வருகிறார். ராஜாத்தி அம்மாளின் பெயரும் இருக்கிறது. இவை எல்லாம் பெரிய சமாசாரம் இல்லை. அதைவிட உயர் பதவியில் இருப்பவர்களை வளைத்துப் பிடிப்பதுதான் விஷயம். ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் பலன் பெற்றவர்கள் என்கிற பட்டியலும் தயார் ஆகும்போது, அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் சிக்கலாம். கடைசியில், சோனியா காந்தி பெயரும் வரும். இவர்களை எப்போது வழக்கில் கொண்டுவருவேன் என்பதை நான்தான் முடிவு செய்வேன்(!). ஏனென்றால், இதை சி.பி.ஐ. செய்யாது. ஆட்சியில் இருப்பவர்களை அது நெருங்காது. காலம் வரும்போது, நான் நீதிமன்றம் மூலம் இதே சி.பி.ஐ-யை வைத்து சோனியாவை விசாரிக்கச் சொல்வேன். சோனியாவுக்கு இரண்டு தங்கைகள். அனுஷ்கா, நாடியா. இருவரும் அவரவர் கணவரைவிட்டுப் பிரிந்தவர்கள். இருவரும் அடிக்கடி துபாய்க்குப் போய் வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் டீலிங்கில் வந்த பணத்தை இவர்கள் சீனாவில் 'மக்காவ்' என்கிற இடத்தில் உள்ள வங்கியில் பதுக்கிவைத்து இருக்கிறார்கள். எவ்வளவு தெரியுமா? 35 ஆயிரம் கோடி. சுவிஸ் வங்கியில்கூட பணம் போட்டு இருப்பவர் ஒரு கிரிமினல் என்று தெரிந்தால், அவரது முதலீடு விவரங்களை வெளியே சொல்லிவிடுவார்கள். மக்காவ்வில் இந்த வசதி இல்லை. என்ன குற்றம் செய்து இருந்தாலும், அங்கு இருந்து ஒரு 'பிட்' தகவலைக்கூட பெற முடியாத அளவுக்கு சீக்ரெட் பாங்க் அது. அதன் விவரங்கள் விரைவில் வெளிவரப்போகிறது.

மத்தியில் நிதித் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயித்த கமிட்டியில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம், ஆ.ராசாவுடன் இணைந்துதான் முடிவு எடுத்து இருக்கிறார். இதை ஒரு ஃபைலில் ஆ.ராசாவே குறிப்பிட்டு இருக்கிறார். (அதன் நகல்களை மேலே ) பல பேட்டிகளில் ஆ.ராசாவும், சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதற்கு, பத்திரிகை 'கட்டிங்'குகளே சாட்சிகள். இப்படி இருக்கும்போது, ஆ.ராசா மட்டும் திகார் ஜெயிலில் இருக்க... இன்னொரு காரணகர்த்​தாவான அவர் மட்டும் மத்திய மந்திரியாக நீடிப்பது எந்த வகையில் நியாயம்? நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது வழக்குப் போட பிரதமரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அந்தத் துறையில் இருந்து சிதம்பரம் மாற்றப்பட்டுவிட்டார். ஆகவே, எனக்கு இப்போது பிரதமரின் அனுமதி தேவைப்படாது. இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு ஆகஸ்ட் 24-ல் வருகிறது. இதோ... நான் உங்களிடம் காட்டும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அவற்றைப் பரிசீலித்து நல்ல முடிவு சொல்வார்கள் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடக்கும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி, கோ-அக்யூஸ்டாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்கிற விவாதம் வரப்போகிறது.  

விகடன்

Friday, June 24, 2011

ஐந்தே ரூபாயில்...'ஹாட் பேக்' !

விதம் விதமான சமையல் உப கரணங்கள் உதயமாகிக் கொண்டேதான் இருக் கின்றன. அவற்றின் விலையைக் கேட்டால் தான் 'ஷாக்' அடித்துப் போய் உட்கார்ந்துவிடுகி றோம் பல சந்தர்ப்பங்களில். ஆனால், எளிய புதுவரவான 'வைக்கோல் பெட்டி'... தன் செயல்பாட்டில் மட்டுமல்ல... விலை யிலும் ஆச்சர்யப்படுத்துகிறது. சொல்லப் போனால்... அதன் விலை, நீங்கள் நிர்ணயிப்பதுதான்!

என்ன... கேட்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறதா... முதலில் மேட்டருக்குள் புகுவோம்.மதுரை, வேளாண்மை கல்லூரியில் இயங்கி வரும் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் குடும்ப வள மேம் பாட்டுத் துறையினர்தான், 'வைக்கோல் பெட்டி' என்கிற எளிய, குறைந்த செலவிலான அந்த எரிபொருள் சேமிப்புச் சாதனத்தைப் பிரபலப்படுத்தி வருகின்றனர் .இந்தப் பெட்டியில் வெப்பம் உள்ளி ருந்து வெளியேறுவது தடுக்கப்படுவதால், வெப்ப ஆற்றல் உள்ளேயே சேமிக்கப்பட்டு, உணவுப் பொருட்களைச் சமைப்பதற்கும், அவற்றின் சூட்டை அப்படியே பல மணி நேரங்களுக்குத் தக்க வைப்பதற்கும் உதவுகிறது. 'ரைஸ் குக்கர் மற்றும் ஹாட் பாக்ஸ்' என்றே இதை அழைக்கலாம்!

''வேலைக்குப் போகிற பெண்களுக்கும், சுற்றுலா செல்பவர் களுக்கும் மிகவும் பயன் தரக்கூடியது இந்த வைக்கோல் பெட்டி. இதைப் பயன்படுத்தி எளிதாக சாதம் தயாரிக்க முடியும். கழுவிய அரிசியை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி, வழக்கம்போல அடுப்பில் வைத்து சூடு ஏற்ற வேண்டும். அரிசி சாதமாக மாறும் வரை காத்திருக்காமல், சுமார் 10 நிமிடத்திலேயே அந்த பாத்தி ரத்தை எடுத்து வைக்கோல் பெட்டியின் மத்தியில், அதற்கென உள்ள இடத்தில் வைக்க வேண்டும். பிறகு, பிரத்யேகமாக இருக்கும் வைக்கோல் நிரம்பிய தலைய ணையை வைத்து, காற்றுப் புகாதபடி பெட்டியை மூடிவிட வேண்டும். அடுத்த 45 நிமிடத்துக்குள் சாதம் தயாராகி விடும்.இந்தப் பெட்டியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சாதமானது... மற்ற முறையில் சமைக்கப்படும் உணவைவிட அதிக மணம், நிறம், சுவையுடன் இருக்கும். சமைக்கப் பயன்படுத்தும் நீர் முழுமையாக பயன்படுத்தப்படுவதால்... ஊட்டச்சத்து இழப்பும் அதிகமாக இருக்காது''

'ஹாட் பாக்ஸாக' பயன்படுவது எப்படி  

''இந்த பெட்டியில் வைக்கப்படும் பொருள், அதிகபட்சம் 56 மணி நேரம் வரை சூடாக இருக்கும். இதனுள் வைக்கப்படும் சாதம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் 5 மணி நேரம் வரை 61 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கும். அதன்பிறகு படிப்படி யாக வெப்பம் குறையும். என்றாலும், 56 மணி நேரம் வரை சூடு இருக்கும். அதாவது, நாம் சாப்பிடும் அளவுக்கான சூட்டை அது தக்க வைத்துக் கொண்டே இருக்கும்'' என்ற பிரேமலதா,'வைக்கோல் பெட்டியைப் பயன்படுத்துவது மூலம் எரி பொருள், பணம், நேரம், ஆள் செலவு ஆகியவற்றை சேமித்து, சுகாதாரக் கேடுகளும் தடுக்கப்படுவதுடன், 58% சமைக்கும் நேரமும், 44% எரிபொருளுக்கான பணமும் சேமிக்கப்படுகிறது. பாதுகாப்பானதும்கூட..


இந்த வைக்கோல் பெட்டி, 'ஹே பாக்ஸ்’  என்ற பெயரில் வெளிநாடுகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது. இதைத் தேடி கடை வீதியில் அலைந்தால் கிடைக்காது. வீட்டில் நாமே தயாரித்துக் கொள்ளலாம். அது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. காலியான அட்டைப் பெட்டி, கொஞ்சம் வைக்கோல் இருந்தாலே போதும்...


இப்படித்தான் தயாரிக்க வேண்டும்!

மரப்பெட்டி, கார்ட்போர்டு பெட்டி, மூங்கில் கூடை, சிமென்ட் தொட்டி போன்றவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். உதாரணமாக 'கார்ட்போர்டு' எனப்படும் அட்டைப்பெட்டியில் தயாரிக்க நினைத்தால், ஒன்றரை அடி (45 செ.மீ.) நீள, அகல, உயரமுள்ள கார்ட்போர்டு பெட்டியின் மத்தியில் பாத்திரம் வைக்கும் அளவுக்கு இடத்தை விட்டுவிட்டு, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வைக்கோலை அடைத்தால், வைக்கோல் பெட்டி தயார். நாம் பயன்படுத்தும் பெட்டியை சரியாக மூடும் அளவுக்கு வைக்கோல் நிரம்பிய ஒரு தலையணையை தயாரித்துக் கொண்டால் ஹாட் பேக் ரெடி! இப்படி, 20 லிட்டர் கொள்ளளவு வரைக்கும் பெட்டியைத் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கு மேலும் பெரிய சைஸுக்கு தேவை இருந்தால், தயாரிப்பதில் தவறு ஏதும் இல்லை.

முனைவர் பிரேமலதா  
தலைவர்
மனையியல் கல்லூரியின் ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷியன்

Thursday, June 23, 2011

சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா?

ழல் அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவோரின் சொர்க்கம்...  சுவிட்சர்லாந்து.  காரணம், வங்கி ரகசியத்தைப் பாதுகாக்கும் அந்த நாட்டின் சட்டம்!

 யார் யார் எல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்?

எந்த நாட்டைச் சேர்ந்தவரும், சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தற்போது 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கி இருக்கிறார்கள்.நம் ஊரில் அடையாளம், இருப்பிடச் சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் விண்ணப்பத் தைப் பூர்த்திசெய்து கொடுத்து வங்கிக் கணக்கு தொடங்குவதுபோல, சுவிஸ் நாட்டில் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பில் வங்கிகள் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் பெயருக்குத்தான். பல கோடிகளைக் கொட்டும் நபருக்கு இந்தக் கெடுபிடிகள் எதுவும் இல்லை. புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுப்பதற்காகவே, நிறைய நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன என்று கூறுகிறார்கள் 'அனுபவஸ்தர்கள்’.


''வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உங்களுக்கு உள்ள தேவைகள், உங்கள் பணம்பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்வீர்கள் என்பதுபோன்ற விவரங்களை அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க உங்களது பாஸ்போர்ட் போதுமானது. தபால் மூலம் அனுப்பி கணக்கு தொடங்க வேண்டி இருந்தால், உங்களுக்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும். மேலும், உங்கள் இருப்பிடத்தை
உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, சமீபத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி ரசீது போன்றவற்றில் ஒன்றைக் கொடுக்கலாம். உங்கள் பொருளாதாரப் பின்னணி மற்றும் பணம் வரும் பின்னணிபற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். நேரில் சென்று கணக்கு தொடங்குவதாக இருந்தால்,  மூன்று மணி நேரத்தில் முடித்துவிடலாம்'' என்கிறார்கள் அவர்கள்.

வங்கிக் கணக்கு தொடங்கக் குறைந்தபட்ச டெபாசிட் இவ்வளவு இருக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. 500 சுவிஸ் பிராங்க் இருந்தாலே வங்கிக் கணக்கைத் தொடங்கிவிடலாம். ஆனால், சில வங்கிகள் மட்டும் தொகையைக் கொஞ்சம் அதிகம் எதிர்பார்க்கின்றன. குறைந்தபட்சம் எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் சுவிஸ் ப்ராங். நம் ஊர் பணத்துக்குக் கிட்டத்தட்ட ரூ.53 கோடி!

சுவிஸ் வங்கி கணக்கு தொடங்க எவ்வளவு நாள் ஆகும்?

தபால் மூலம் கணக்கு தொடங்குவதாக இருந்தால், குறைந்தது 10 நாட்கள் ஆகும். இதற்கு முதலில் வங்கிக் கணக்கு தொடங்க உதவும் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர், அவர்கள் விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பிவைப்பார்கள். அதில் நீங்கள் கையெழுத்திட்டு, தகுந்த ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதை அந்த நிறுவனம் நீங்கள் விரும்பும் வங்கியில் கொடுப்பார்கள். நீங்கள் கணக்கு தொடங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள, வங்கி தனியாக ஒரு கடிதம் அனுப்பும். அதை நீங்கள் நேரடியாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு, வங்கி உங்களுடைய கணக்கை ஆரம்பிக்கும்.

பணத்தை எப்படி டெபாசிட் செய்வது?

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தேர்ட் பார்ட்டி பேமென்ட் ப்ராசஸர் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதனால், பணத்தை யார் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. இது தவிர, மணி ஆர்டர், பர்சனல் செக் போன்ற முறைகளையும் கையாளலாம்.

இந்தியாவில் கிளை உள்ளதா?

சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் இல்லை!

சுவிஸ் வங்கி ஏன் பிரபலமாக உள்ளது?

சுவிட்சர்லாந்து 1505-ம் ஆண்டு முதல் எந்த நாட்டுடனும் போரிடுவது இல்லை என்பதால், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கிறது. சுவிஸ் தன்னுடைய பணப் பரிமாற்றத்துக்கு தங்கத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அதனால், உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பைக்கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது. இன்டர்நெட் பேங்கிங், சுலபமான முதலீட்டு முறைகள் போன்ற சிறப்பான வங்கி சேவை, கிரிமினலாக இல்லாதவரை உங்களைப்பற்றிய தகவல் வெளியே போக வாய்ப்பே இல்லாத சூழல் ஆகிய காரணங்களால் அனைவராலும் சுவிஸ் வங்கிக் கணக்கு பெரிதும் விரும்பப்படுகிறது.

வாடிக்கையாளர் இறந்துவிட்டால், கணக்கு என்ன ஆகும்?

அவரது வாரிசுதாரருக்குப் பணம் கிடைக்கும். ஆனால், அவர்தான் வாரிசுதாரர் என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. பிரபல தலைவரோ, நடிகராகவோ இருந்து இறந்தால், அது அங்கு உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். சம்பந்தப்பட்ட வங்கிக்கு எளிதில் அது தெரிந்துவிடும். மற்றபடி அவர்களுக்கு வங்கிக் கணக்கு உள்ள நபரின் இறப்பு தெரியப்போவது இல்லை. எனவே, வாரிசுதாரர் 10 ஆண்டுகளுக்குள் வந்து, தான்தான் சட்டபூர்வ வாரிசு என்று நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், 10-வது ஆண்டின் முடிவில் அந்தக் கணக்கு செயலற்றதாகிவிடும்!ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் இருக்க, வாரிசுகளிடம் சுவிஸ் வங்கிக் கணக்குபற்றிய விவரத்தைத் தெரிவிக்கும்படியும், அல்லது தன் மரணத்துக்குப் பிறகு வாரிசுதாரர் படிப்பதற்கு என்று ஒட்டப்பட்ட உறையில் எல்லா விவரங்களையும் எழுதி வைக்கும்படியும் தன்னுடைய வாடிக்கையாளர்களை சுவிஸ் வங்கி அறிவுறுத்துகிறது.

வங்கிக் கணக்கை ரத்து செய்ய முடியுமா?

எப்போது வேண்டுமானாலும் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ள முடியும். அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்தால், அதை எடுக்க ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படும். மற்றபடி எந்தச் செலவும் இன்றி சுவிஸ் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ளலாம்!  
   
விகடன்  

ரஜினி ரிட்டர்ன்ஸ்!

''இந்த விஞ்ஞான உலகத்தில்கூட எந்த விளையாட்டை விளையாடினாலும், காசை மேலே தூக்கிப் போட்டு யார் முதலில் ஆடுவது என முடிவு செய்றாங்க. காசை மேலே தூக்கிப் போடுவது மட்டும்தான் மனிதனின் வேலை. பூவா... தலையான்னு தீர்மானிப்பது ஆண்டவன் வேலை!'' - படத்தில் அல்ல... படுக்கையில் இருந்தபடி ரஜினிகாந்த் சொன்ன வசனம் இது.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் ரசிகர்களுக்கு ரஜினி எழுதிய கடிதத்தில், 'என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், மருத்துவம், மிகச் சிறந்த மருத்துவர்கள் என இருக்க... இன்னொரு பக்கம் நான் நலம் அடைய, பிரார்த்தனை கள், பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள் ஆகியவைதான் என்னைக் காப்பாற்றின. ரஜினிக்கு எவ்வளவு மக்களின் அன்பு இருக்கிறது என்பதை உலகத்துக்குக் காட்டிவிட்டீர்கள். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை!’ என்று நெகிழ்ந்து இருக்கிறார்.  


ரஜினியிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என ஏங்கிய ரசிகனுக்கு, இது அடை மழை ஆனந்தம். சிறுநீரக மாற்று சிகிச்சை வரை அவசியம் என்கிற அளவுக்குப் பரபரக்கப்பட்ட ரஜினியின் உடல்நிலை இப்போது, டயாலிசிஸ்கூட அவசியம் இல்லை என்கிற அளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.

இன்னும் 20 நாட்கள் சிங்கப்பூரில் ஓய்வு எடுக்க இருக்கும் ரஜினி, சென்னையில் கால் வைக்கும்போது 'பழைய ரஜினி’யின் சுறுசுறுப்பில் துளி அளவும் குறைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள ரஜினி விரும்ப, 'இப்போதைக்கு வேண்டாம்’ எனத் தவிர்த்தார்கள் மருத்துவர்கள். 'ரெஜு வெனேஷன் தெரபி’ மட்டுமே ரஜினிக்கு இப்போது வழங்கப்படுகிறது. குறைவான உணவு, பிரார்த்தனை, நல்ல தூக்கம், மாடி யில் வாக்கிங் என ரஜினியின் பொழுதுகள் இப்போது ஆரோக்கியமாகக் கழிகின்றன.
சென்னைக்குத் திரும்பிய உடன் செய்ய வேண்டிய வேலைகளாகப் பல முக்கிய விஷயங்களை ரஜினி பட்டியல் போட்டுவைத்து இருக்கிறார்.

முதல்வரைச் சந்திக்கிறார்!

ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டபோது, 'அவருடைய உடல்நிலை குறித்த தகவல்களைத் தினமும் கார்டனுக்குச் சொல்லுங்கள்!’ என உத்தரவே போடப்பட்டது. ரஜினியின் சிகிச்சைக்கு அரசுத் தரப்பிலான எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் எனவும் கார்டனில் இருந்து சொல்லப்பட்டது. 'பழைய’ வருத்தங்களை எல்லாம் மறந்துவிட்டு, ஜெயலலிதா காட்டிய இந்த அக்கறை ரஜினியை வியக்கவைத்தது. அதனால்தான், குணமான உடனேயே முதல் வேலையாக ஜெயலலிதாவுடன் பேசினார். சென்னைக்கு வந்த உடன் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக் கவும் இப்போதே தேதி கேட்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்!’ என கார்டனும் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது.

கருணாநிதிக்குப் பரிசு!

உடல்நிலை சரி இல்லை எனத் தெரிந்த உடனேயே முதல் ஆளாக ரஜினியைப் பார்க்க ஓடியவர் கருணாநிதிதான். இதற்கு நன்றி கூறி, சமீபத்தில் ரஜினி கருணாநிதிக்கு போன் செய்தார். அப்போது, கருணாநிதி பகிர்ந்து கொண்ட விஷயம் ரஜினியையே அதிரவைத்தது. ''உங்க உடம்புக்குப் பெரிய சிக்கல்னு டாக்டர்கள் மூலமா செய்தி வந்தது. 'அவரால் நடக்கவே முடியாது’ன்னு சொன்னாங்க. அதனால்தான் பதறி அடிச்சு ஓடி வந்தேன். உண்மையைச் சொல்ல ணும்னா, அன்னிக்கு எனக்கும் உடம்பு சரி இல்லை. மற்றபடி, கடந்த ஆட்சியில் என்னால் ஏதாவது சங்கடம் வந்திருந்தா, தவறா எடுத்துக்காதீங்க!'' என கருணாநிதி சூசகமாகச் சொல்ல, ரஜினி பதறிப்போனாராம். 'நேரில் சந்தித்து உங்களிடம் நிறையப் பேச வேண்டும்!’ என்று மட்டுமே சொன்ன ரஜினி, சென்னைக்கு வந்ததும் கோபாலபுரம் செல்கிறார். கருணாநிதிக்குக் கொடுப்பதற்காகவே விசேஷப் பரிசு ஒன்றும் இப்போது ரஜினி கையில்.

மன்றத் தலைவர்களுக்கு அழைப்பு!


சௌந்தர்யா திருமணத்தின்போது ரசிகர்களுக்கு விருந்துவைப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால், ரசிகர்கள் எவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதைக் கணக்கிட முடியாததாலும், தேர்தல் பரபரப்பாலும் விருந்து தள்ளிப்போனது. ரசிகர்களின் பிரார்த்தனை களைக் கேள்விப்பட்டு சிலிர்த்துப்போன ரஜினி, அனைத்து மாவட்டத் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார். ரஜினிக்காகப் பிரார்த்தனை நடத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பட்டியலும் தீவிரமாகத் திரட்டப்படுகிறது. 'அரசியல் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம்!’ என மன்றப் பொறுப்பாளர் சுதாகருக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.

'ராணா’வுக்குத் தயார்!

ஷூட்டிங்கில் கலந்துகொள்கிற அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. வேகமாக நடக்கவோ, விறுவிறுவெனப் பேசவோ ரஜினியால் முடியவில்லை. ஆனால், ஒரு மாத காலத்துக்குள் இதெல்லாம் சரியாகிவிடும் என உறுதியாக நம்புகிறார் ரஜினி. ரஜினிக்கு சிரமத்தை ஏற்படுத்தாதபடி 'ராணா’வின் கதை சற்றே மாற்றப்பட்டு வருகிறது. ரஜினியின் போர்ஷனும் குறைக்கப்படலாம் என்கிறார்கள்.

வடிவேலுவுக்கு வாய்ப்பு!

'ராணா’ படத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டதால், ரஜினி குறித்து அவர் ஆவேசமாகச் சீறினார். தேர்தலுக்குப் பிறகு திரைத் துறையே வடிவேலுவை ஓரமாகத் தள்ளிவைத்துவிட்டது. தன்னை வசை பாடிய மனோரமா வுக்கு 'அருணாச்சலம்’ படத்தில் வாய்ப்பு அளித்து அசத்திய ரஜினி, அதே பாணியில் 'ராணா’வில் வடிவேலுவைச் சேர்க்கச் சொல்லி இருக்கிறார். வடிவேலு உடன் கஞ்சா கருப்புவும் படத்தில் இருப்பார் என்கிறது யூனிட். இது குறித்து வடிவேலுவுக்குத் தகவல் சொல்லப்பட... தழுதழுப்பே பதிலாக வந்ததாம்.

மருத்துவர்களுக்கு விருந்து!

தான் மீண்டு வந்ததற்கு மிக முக்கியக் காரணமாக ரஜினி கருதுவது டாக்டர்களைத்தான். இசபெல்லா, ராமச்சந்திரா மற்றும் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை களில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் களை வீட்டுக்கு அழைத்து விருந்துவைக்கத் திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி. மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், ''உங்களை எல்லாம் சென்னைக்கு அழைத்துப்போய் 'எனக்கு மறுவாழ்வு அளித்த தெய்வங்கள்’ எனச் சொல்ல வேண்டும்!'' என உருகினார் ரஜினி

கடிதத்துக்கு ரியாக்ஷன்!

தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிக்கு உருக்கமான ஒரு கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். 'இது உங்களுக்கு மறு பிறப்பு. போன பிறவி யில் ஒரு நடிகராக மட்டுமே இருந்தீர்கள். மகத்தான மாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தாலும், அதனை நீங்கள் பயன்படுத்தவே இல்லை. இந்தப் பிறவியிலாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக நீங்கள் போராட வேண்டும். உங்களுக்குக் கிடைத்த உயரிய சிகிச்சைகள் சாதாரண குடி மகன்களுக்குக் கிடைப்பது சாத்தியம் இல்லை. அடிப்படை மருத்துவத்துக்கே வழியற்ற நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. அதனைத் தீர்க்கும் விதமான முன்னெடுப்பைச் செய்வதுதான் உங்களைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பதிலீடாக இருக்கும்!’ என அழுத்தமாக எழுதி இருக்கிறார் சௌந்தர்ராஜன்.

உயிர் மீண்ட நெகிழ்வில் இருக்கும் ரஜினியை அந்தக் கடிதம் ரொம்பவே உசுப்பி இருக்கிறதாம். சமூகம் சார்ந்த கைகோப்புக்கான அழைப்பு எப்போதும் ரஜினியிடம் இருந்து கிளம்பலாம்!    

விகடன்  
   

Wednesday, June 22, 2011

சென்னை மோனோ ரயில் வரமா சாபமா?

லைநகர் சென்னையில் தி.மு.க. அரசு கொண்டு​வந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஜரூராக நடந்துகொண்டு இருக்க, புதிதாக மோனோ ரயில் கொண்டுவரப்படும் என அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா. '300 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் இயக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தாலும், முதற்கட்டமாக 111 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும்’ என்று, சட்டப் பேரவையில் ஆளுநர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, 2006-ம் ஆண்டு அன்றைய ஜெயலலிதா அரசு சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை அறிவித்தது. அதற்காக, ஒப்பந்தங்கள் கோரப்பட்ட நிலையில், ஆட்சி மாறி தி.மு.க. பதவி ஏற்றவுடன், மோனோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அப்போதும், 300 கி.மீ. தூரத்துக்​குத்தான் மோனோ ரயில் திட்டம் தீட்டப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி, போரூர், ஆவடி, செங்குன்றம், மணலிப்புதுநகர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களுக்கும், கிண்டி ஹால்டா சந்திப்பு -  மேடவாக்கம், அண்ணா சதுக்கம் - அடையாறு, விருகம்பாக்கம் - சாந்தோம், எழும்பூர் - எம்.எஃப்.எல்., சைதாப்பேட்டை - அண்ணாநகர் ரவுண்டானா, சாலை மாநகர் - கண்ணதாசன் நகர், அயனாவரம் - அண்ணா சதுக்கம், அமைந்தகரை - அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாரிமுனை - கேளம்பாக்கம், காந்திசிலை - வில்லிவாக்கம் நாதமுனி, பட்டினப்பாக்கம் - நுங்கம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் மோனோ ரயில் இயக்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.


கடந்த வாரம், டெல்லியில் பிரதமரைச் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, மோனோ ரயில்  திட்டத்துக்காக மத்திய அரசு 16,650 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆனால், கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால், மோனோ ரயில் திட்டம் உலக அளவில் பல நாடுகளால் கைவிடப்பட்ட திட்டம் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கேளிக்கைப் பூங்கா, விமான நிலையம் ஆகிய இடங்களில் இணைப்பு போக்குவரத்துக்காக மோனோ ரயில் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் 60 இடங்களில்தான் மோனோ ரயில் இயக்கப்படுகின்றன. அதில் 48 இடங்களில் 3 முதல் 4 கி.மீ. தூரத்துக்குத்தான் இயக்கப்படுகின்றன. 10 கி.மீ-க்கும் அதிகமாக இந்த ரயில் இயங்குவது, 12 இடங்களில். அந்தப் 12-லும் 5 இப்போது பயன்பாட்டில் இல்லை. இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தா, மலேசியாவில் புத்ரகயா ஆகிய இடங்களில், கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருந்தபோதே, மோனோ ரயில் திட்டப் பணிகளை நிறுத்தி விட்டனர். அமெரிக்காவின் சியாட் நகரிலும் திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கட்டுமானச் செலவு மட்டுமின்றி, மோனோ ரயிலை இயக்குவதற்கான செலவும் அதிகம் என்பதால்தான், உலக அளவில் இதற்கு வரவேற்பு இல்லை. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 8 கி.மீ. தூரத்துக்குப் பணிகள் முடிக்க 5 ஆண்டுகள் ஆனது. எட்டு மாதங்களுக்கு ரயில் இயக்கும் செலவு மட்டுமே 69 கோடி வீணானது. இந்தத் திட்டத்தால் தேவையற்ற செலவு மட்டுமே   1,200 கோடி ஏற்பட்டது. பிரச்னைகளைச் சமாளித்து மோனோ ரயிலைக் கொண்டுவந்து விட்டாலும், பழுது ஏற்பட்டால் அதை நீக்குவதும் எளிது அல்ல. காரணம், மோனோ ரயில் சேவையை அளிக்க ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் அதைக் காப்புரிமை செய்திருப்பவை என்பதால், ஒரு போல்ட், நட்டைக்கூட மற்றவர்கள் மாற்ற முடியாது. அந்த நிறுவனங்கள் திவால் ஆகிவிட்டால், மோனோ ரயில் சேவையே நின்று விடும் அபாயமும் உண்டு.
 

ஜப்பான் நாட்டில், அதிகபட்சமாக 28 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் இயக்கப்படுகிறது. மும்பையில் 20 கி.மீ-க்கு மோனோ ரயில் பாதை அமைக்கப்​பட்டு வருகிறது. பல்வேறு பாதகமான அம்சங்கள் இருந்தும் சென்னையில் 300 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. போக்குவரத்து நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் சென்னையின் முக்கியச் சாலைகள் நெடுக பள்ளங்களைத் தோண்டி உயரமான தூண்களை அமைத்த பிறகு, பணிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.  அப்போது, சாலைகளின் மத்தியில் எலும்புக்கூடுகளைப் போன்று தூண்கள் நிற்க, நெரிசல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். மேலும், பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு கட்டணம் வசூலித்தால்தான், மோனோ ரயிலுக்கு செலவு செய்த தொகையை திரும்பப் பெற முடியும் என்ற நிலை இருப்பதால், பயணிகளிடம் இது கண்டிப்பாக வரவேற்பைப் பெறாது. குறைந்த கட்டணத்தில் ஓட்டினால், அரசுக்குத்தான் இழப்பு!

ஆனால், தமிழக அரசு தரப்பிலோ, 'மோனோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்’ என்று பிரதமருக்குத் தந்த மனுவில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.மோனோ ரயில் வந்து போக்குவரத்து குறைகிறதோ இல்லையோ இந்த திட்டம் அமலாகும் வரை சென்னை டிராஃபிக் அம்போதான்!  


அருள் 
மாநிலச் செயலாளர் 
பசுமைத் தாயகம்’ சுற்றுச்சூழல் அமைப்பு 


நன்றி ; விகடன்

Tuesday, June 21, 2011

வான் வெளித் திருவிழா !


கடந்த ஜூன் முதல் தேதியில் இருந்து வரும் ஜூலை முதல் தேதிக்குள் வான்வெளி நமக்கு மூன்று அற்புதமான விருந்தினைப் படைக்கிறது. ஜூன் முதல் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்பட்டது. ஜூன் 15-ல் இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவானது. ஜூலை முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

பொதுவாக, வருடத்தில் ஐந்து சூரிய கிரகணமும், மூன்று சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமல் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள்தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின் மிக நீண்ட நேரம் என்பது, 7.5 நிமிடங்கள் மட்டுமே. 

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜூன் 15-ல் நிகழ்ந்தது. இது 100 நிமிடங்கள் நீடித்தது. இந்தக் கிரகணத்தின்போது, சந்திரன் நொடிக்கு ஒரு கி.மீ வேகத்தில் கிரகணப் பகுதியைக் கடந்தது. கிரகணத்தின்போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை முறையே, அம்பரா (Umbra), பெனும்பரா (Penumbera) என்பார்கள். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரியக் கதிர் சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்த்தால்... சூரியன், சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய்த் தெரியும். இத்தகைய கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சரோஸ் சுழற்சியின் 130-ஆவது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும். இது 34- ஆவது கிரகணம். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011, டிசம்பர் 10-ல் ஏற்படும். 

பொதுவாக முழு சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால், இம்முறை நிலா கருப்பாகக் காட்சி அளித்தது. இதில் சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக்கூட பார்க்கலாம். இதுபோல ஒரு முழு சந்திர கிரகணம், 2058 ஜூனில் வரும்.


சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம்போல கிடையாது. ஏனெனில், முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால், முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்குத் தெரியும். சரித்திரத்தில்  எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம், சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty) சோயு-சூ புத்தகத்தில் கிமு 1136-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 29-ஆம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப்பட்டுள்ளது!

Monday, June 20, 2011

சிறுகதைகள் படிக்கும் கனிமொழி.. இந்தி கற்றுக்கொள்ளும் ராசா..!


திகார் ஜெயில் - தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள், நாடறிந்த பிரபலங்கள் என .இப்போது இங்கே இருக்கும் வி.வி.ஐ.பி. கைதிகளால் சிறை அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரபலங்களுக்கு சட்டப்படி என்னென்ன சலுகைகள், வசதிகள் வழங்கப்பட வேண்டுமோ அவற்றை மட்டுமே வழங்கி இருக்கிறோம்" என்கிறார்கள் திகார் சிறை அதிகாரிகள். 

 எல்லோருக்குமே பதினைந்துக்குப் பத்தடி அளவுள்ள தனி அறைகள்தான். காலையில் ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டும். ரோல் கால் எடுப்பார்கள். பல் துலக்கி, பேப்பர் பார்த்து, காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு ஏழரை எட்டு மணிக்கு ரெடியானால் எட்டரை மணிக்கு கோர்ட்டுக்குப் புறப்படத் தயாராக வேண்டும். 2ஜி வழக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெறுவதால், சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் தினசரி அங்கே ஆஜராக வேண்டும். அங்கே போனாலும், நேரடியாக கோர்ட் ஹாலில் உட்கார்ந்து கொண்டு கோர்ட் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்க அனுமதி இல்லை. அங்கே இருக்கும் லாக்-அப்பில்தான் இருக்க வேண்டும். 2ஜி கேஸ் நடக்கும் நேரத்தில் மட்டுமே அங்கே இருக்க அனுமதி உண்டு. 


மறுபடியும் திகார் திரும்ப மாலை ஐந்தரை, ஆறு மணியாகிவிடும். ஏழு மணிக்கு இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு தூங்கப்போக வேண்டியதுதான். இரவு பத்தரை மணியானால், வளாகத்தினுள்ளே விளக்குகளை அணைத்துவிடுவார்கள். இரவு நேரத்தில் அறையில் ஒரு விளக்கும், மின் விசிறியும் மட்டுமே. ஏ.சி. குளிர்ச்சிக்குப் பழகிப் போன வி.வி.ஐ.பி.க்கள் முதல் சில நாட்கள் ரொம்பவே திண்டாடிப் போய்விடுவார்கள். வி.ஐ.பி கைதிகள் சிறைக்கு வரும்போது, சொந்தமாக சின்ன டி.வி.கொண்டு வர அனுமதி. ஆனால், விடுதலையாகிப் போகிறபோது அந்த டி.வி.யைக் கொண்டு போக முடியாது.

ஆ.ராசாவுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சாப்பாடு சரிப்பட்டு வராமல், தினமும் அவருக்கு வீட்டுச் சாப்பாடு வேண்டும் என கேட்க, அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.ஸ்வான் டெலிகாமின் முதலாளியான ஷாகித் பால்வாவுக்கு, சிறைக்கொட்டடிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சிமென்ட் மேடை மெத்து, மெத்தென்று இல்லை என்று புகார் சொன்னார்.




ஆறாம் எண் கொண்ட பெண்களுக்கான சிறையில், 15ஆம் எண் வார்டில் இருக்கும் கனிமொழிக்கு பாத்ரூமில் பிரச்னை. இதற்கு முன்பு சிறைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் அதிகாரியின் அறையாக இருந்த அறை இது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறை அதிகாரிகள் தவிர வேறு யாரும் செல்ல முடியாத இந்த அறை, கனிமொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஸ்டைல் பாத்ரூம் கொண்டது கனிமொழியின் அறை. அந்த பாத்ரூமில் டவல் ராடு, திரைச்சீலைகள் உட்பட சில சௌகரியங்கள் உண்டு. வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட படுக்கையைத்தான் கனிமொழி பயன்படுத்துவதாகக் கூட சொல்கிறார்கள். கைதிகள் நகை அணியக்கூடாது என்பது சிறை விதி. எனவே, சிறைக்குப் போகிறபோது கனிமொழி தன் மூக்குத்தியைக்கூட கழற்றிக் கொடுத்துவிட்டுப் போகும்படி ஆகிவிட்டது.

கனிமொழி, சிறை நூலகத்திலிருந்து எடுத்த அலெக்சாண்டர் மக்கால் ஸ்மித் எழுதிய நாவலான ‘தி கேர்ஃபுல் யூஸ் ஆஃப் காம்ப்ளிமென்ட்ஸ்’, நைஜீரிய எழுத்தாளரான சிம்மமன்டாவின் ‘தி திங் அரௌண்டு யுவர் நெக்’ என்ற சிறுகதைத் தொகுப்புகளைப் படித்து முடித்துவிட்டாராம்.நூறு நாட்களை திகாரில் கழித்துவிட்ட ஆ. ராசாவுக்கு இப்போது ஜெயில் அசௌகரியங்கள் ஓரளவுக்குப் பழகிவிட்டன. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். தினமும் உடற்பயிற்சி செய்கிறார். அவருக்கு மூன்று தினசரி பேப்பர்கள் வழங்கப்படுகின்றன. ஜெயில்வாசிகளுக்கு அடிப்படைக் கல்வி கற்பிப்பதற்காக வழங்கப்படும் புத்தகங்களின் உதவியோடு கொஞ்சம்போல இந்தி கற்றுக் கொண்டுவிட்டார்.

பகல் நேரத்தில் ரொம்ப புழுக்கமாக இருந்தால், ஜெயில் கண்காணிப்பாளர் அறைக்கு வந்து கொஞ்ச நேரம் ஏ.சி. காற்று வாங்கிவிட்டுப் போகிறாராம். 


ஒரு பெரிய நோட் புக்கில் சுரேஷ் கல்மாடி எப்போது பார்த்தாலும் ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கிறாராம். ஒரு நாள் குளியலறையில் தடுக்கிக் கீழே விழுந்து விட்டார் கல்மாடி. ஆனால் அந்த விஷயத்தை மூன்று நாட்கள் கழித்துத்தான் வெளியில் சொன்னாராம். மாலை நேரங்களில் பாட்மின்டன் ஆடுகிறார். இவருக்கு திகாரில் இருக்கும் மற்ற கைதிகள் மூலமாக ஆபத்து வரலாம் என்பதால், அவர் மீது கொஞ்சம் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டியும் இங்கேதான் இருக்கிறார்.

எச்ச்ளுசிவே

புது தில்லி சாணக்கியபுரியிலிருந்து ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள திகார் ஜெயில் 1958ல் உருவாக்கப்பட்டது.

திகார் சிறை வளாகத்தில் தனித்தனியாக ஆறு சிறைச்சாலைகள் உட்பட மொத்தம் 10 உள்ளன. மொத்த கொள்ளளவு: 6,250; ஆனால் தற்போது இருப்பவர்கள்: 11,719 பேர். இவர்களில் அன்னிய நாட்டவர்: 428.

திகார் சிறைவாசி ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியிருக்கிறார்.

சிறைவாசிகள் கிரிக்கெட், வாலிபால், பாஸ்கெட் பால், பாட்மின்டன், செஸ், கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாட வசதி உள்ளது. 

திகார் வளாகத்தில் 150 படுக்கைகள் கொண்ட ஒரு ஆஸ்பத்திரி உண்டு. சிறை வாசிகளில் சுமார் 6% பேருக்கு ஹெச்.ஐ.வி. பாசிடிவ்.

திகார் சிறைவாசிகள் தயாரிக்கும் ஊறுகாய், காகித கவர்கள், அப்பளம், மெழுகுவர்த்தி, பிஸ்கட் முதலிய உணவுப்பண்டங்கள், ரெடிமேடு ஆடைகள், பரிசுப் பொருட்கள் விற்பனைக்கென தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு விற்பனை மையம் உள்ளது.

கிரன் பேடி, திகார் ஜெயிலின் ஐ.ஜி. ஆக இருந்தபோது, சிறைவாசிகளுக்கு யோகாசன தியானப் பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்து வைத்தார். இன்றும் தியான வகுப்புகள் தொடர்கின்றன.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு உட்பட மொத்தம் ஒன்பது மரண தண்டனைக் கைதிகள் திகாரில் இருக்கிறார்கள்.

தச்சுவேலைப் பிரிவு, நெசவு பிரிவு, தையல் பிரிவு, பேக்கரி பிரிவு, வத்தல், ஊறுகாய் போன்ற தயாரிப்பு வேலைகளில் சிறைவாசிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வழங்கப்படுகிறது. தினக்கூலி ரூ.40 முதல் 52 வரை.

Sunday, June 19, 2011

இரண்டு கவலைகள்! ( பெட்ரோலியம் ஊழல் & நிருபர்கள் ) - ஓ பக்கங்கள், ஞாநி

1. ஆபத்தான அதிகாரிகள்

ஊழலுக்காக முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகளா, அதிகாரிகளா என்று என்னைக் கேட்டால், நான் அதிகாரிகளைத்தான் குறிப்பிடுவேன். இதில் கருத்து மாறுபடுபவர்கள் இருக்கலாம். ஆனால், அதிகாரிகளின் மூளையும் உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் ஓர் அரசியல்வாதிகூட ஊழல் செய்ய முடியாது என்பதும், அரசியல்வாதியின் ஒத்துழைப்பு இல்லாமலே அதிகாரிகள் ஊழல் செய்ய முடியும் என்பதும் நடைமுறை உண்மைகள்.
வரலாறு காணாத விதத்தில் உயர் அதிகாரிகளும் பெரும் அரசியல்வாதிகளும் அடுத்தடுத்து சிறைக்குப் போய்க் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக் கொண்டு பார்த்தால், டெலிகாம் துறையின் உயர் அதிகாரிகள் பலர் இப்போது சிறையில் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரிகள் மிகக் குறைவு. அவர்கள் இடம் மாற்றப்படுவார்கள்; பந்தாடப்படுவார்கள்; அதைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளின் ஊழல்களில் பங்குதாரர்களாகவோ, பிரதான கருவிகளாகவோ, குறைந்தபட்சம் எதிர்ப்பு காட்டாமல் சொன்னதைச் செய்து தருபவர்களாகவோதான் இருக்கிறார்கள்.



 ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. இதன் நோக்கம் நிர்வாகத் திறமையை மேம்படுத்துவது அல்ல. முந்தைய ஆட்சியில் ஊழல்களுக்கு ஒத்துழைத்தவர்களை இடம் மாற்றிவிட்டு, தமது ஆட்சியில் தன் ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கக் கூடியவர்களை முக்கிய பொறுப்புகளில் கொண்டு வந்து வைப்பதுதான் நோக்கம். ஆட்சி மாறியதுமே இவர்களும் கட்சி மாறிவிடுவார்கள்.

உயர் மட்டத்தில் ஒரு பேரம் நடக்கும்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிக்குத் தெரிந்ததெல்லாம் இந்தப் பேரத்தில் அதிகபட்சம் தாம் எவ்வளவு பெறமுடியும் என்பதுதான். அதை முடிவு செய்தபின்னர் மீதி எல்லா வேலைகளையும் அரசு அதிகாரிகளும், பேரத்தில் லாபமடையப் போகும் தனியார் நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டுச் செய்து முடிக்கிறார்கள். ஒப்பந்தத்திலோ, லைசன்சிலோ என்னென்ன விதிகள் இருக்கலாம், எதை எப்படி மாற்றலாம், எப்படி வளைக்கலாம் என்பதையெல்லாம் இவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.செய்து முடித்ததும், அவற்றைப் பற்றி சட்டமன்றத்திலோ, மக்களவையிலோ கேள்விகள் வரக் கூடும். அந்தக் கேள்விகளும் வருவது பெரும்பாலும் பேரத்தில் பயன் பெற முடியாமல் போன கம்பெனிகள் சில அரசியல்வாதிகளை தகவல் கொடுத்துத் தூண்டிவிட்டுக் கேட்கவைப்பதால் தான். நியாயப்படுத்தி பதில்கள் சொல்வதற்கான குறிப்புகளையும் முன்கூட்டியே அரசு அதிகாரிகளும், தனியார் அதிகாரிகளும் திட்டமிட்டுத் தயாரித்து அமைச்சர்களுக்குக் கொடுத்திருப்பார்கள். கொஞ்சம் படிப்பறிவும், கோப்புகளைப் படித்துப் பார்த்துத் தானே ஆராயும் ஆர்வமும் உடைய ஒரு சில அமைச்சர்கள், இந்தத் திட்டமிடல்களில் எல்லாம் தாங்களும் பங்களிப்பார்கள். மற்றவர்கள் முற்றிலும் அதிகாரிகளைச் சார்ந்திருப்பார்கள்.

இப்படித்தான் நாட்டில் எல்லா ஊழல்களும் நடக்கின்றன.

ஸ்பெக்ட்ரமுக்கு அடுத்தபடி பெரிதாக வெடிக்கும் வாய்ப்பு இருக்கிற பெட்ரோலியம் ஊழல் பற்றி இதுவரை வெளிவந்துள்ள செய்திகளைப் பார்த்தால், அதிகாரிகள் எப்படியெல்லாம் ஊழல் வேலை பார்க்கிறார்கள் என்பது புரியும். கிருஷ்ணா கோதாவரி படுகையில் பெட்ரோல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்தி, அதை எடுத்து விற்கும் உரிமையை ரிலையன்ஸ் கம்பெனிக்கு இந்திய அரசு கொடுத்திருக்கிறது. இந்த உரிமை, இவ்வளவு பெட்ரோல் கிடைத்து விற்றால், இவ்வளவு ராயல்டி என்ற அடிப்படையில் தரப்படவில்லை. அரசும் ரிலையன்சும் சேர்ந்து பணம் முதலீடு செய்வார்கள். தொழிலை நடத்துவது ரிலையன்ஸ் வேலை. அதில் அரசுக்கு இடமில்லை.கிடைக்கும் லாபத்தில் இருவருக்கும் பங்கு. 

மொத்தம் 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான இந்த ஒப்பந்தம் எப்படிச் செயல்பட்டது என்பதைத் தணிக்கை செய்திருக்கும் மத்திய தணிக்கை அதிகாரி, மொத்த ஒப்பந்தமும் அரசுக்கு நஷ்டமும் ரிலையன்சுக்கு லாபமும் இருக்கும் விதத்தில் இருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அரசுக்கு இதனால் ஏற்படும் இழப்பை மதிப்பிடவே முடியவில்லையாம். மேலும் ஆவணங்கள் கிடைத்தால்தான் மதிப்பிட முடியும்.முதலில் சொன்னதிலிருந்து முதலீட்டு செலவை ரிலையன்ஸ் 117 சதவிகிதம் வரை உயர்த்திக்கொண்டே போயிருக்கிறது. இந்தப் பணம் எப்படிச் செலவிடப்படுகிறது என்ற முழு விவரங்களை ரிலையன்ஸ் தரவில்லை. இதைக் கேட்க வேண்டிய நிர்வாகக் குழுவின் அரசுப் பிரதிநிதிகளான அதிகாரிகளும் கேட்கவில்லை.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் எங்கெல்லாம் பெட்ரோல் இருக்கிறது என்று ஆய்வு செய்யும்போது, எந்தெந்த இடத்தில் எடுத்தால் லாபம் வராது என்று ரிலையன்ஸ் கருதுகிறதோ, அந்த இடத்தை அடுத்தபடியாக வேறு கம்பெனிக்குக் குத்தகைக்குக் கொடுத்து அரசு முயற்சிப்பதற்கும் தடை செய்யப்பட்டிருக்கிறது.துரப்பணப் பணியில் பயன்படுத்தும் டீசலைக் குறைந்த விலைக்கு அரசாங்கத்தின் பெட்ரோல் கம்பெனியிடம் வாங்காமல், அதிக விலைக்கு ரிலையன்ஸ் தன்னுடைய கம்பெனியிடமே வாங்கியிருக்கிறது. தணிக்கை அதிகாரி இதையெல்லாம் ஆராயும்போது, கேட்ட ஆவணங்களைத் தராமல், இது உங்கள் தணிக்கைக்கு அப்பாற்பட்டது என்று ரிலையன்ஸ் - அரசு கூட்டு நிறுவனம் தகராறும் செய்திருக்கிறது.

எல்லாம் அதிகாரிகள் வேலை. ஒப்பந்தத்தைத் தனியாருக்குச் சாதகமாகப் போடுவது முதல், நிர்வாகக் குழுவில் ஒப்புக்குக் கையெழுத்துப் போடுவது, தணிக்கை வந்தால் ஆவணத்தைத் தர மறுக்க விதிகளைச் சுட்டிக் காட்டுவது வரை எல்லாமே அதிகாரிகளின் கைவேலைதான். இந்தத் துறையின் உச்ச அதிகாரியான டைரக்டர் ஜெனரல் சிபால் என்பவருக்கு ரிலையன்ஸ் கம்பெனிதான் பெரிய பங்களா கட்டிக் கொடுத்திருப்பதாக ஆங்கில டி.வி. சேனல் அம்பலப்படுத்தியிருக்கிறது.உண்மையில் கிருஷ்ணா கோதாவரி படுகையில் பெட்ரோல் கிடைக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்ததே அரசின் ஓ.என்.ஜி.சி எனப்படும் எண்ணெய், இயற்கை எரிவாயு கமிஷன்தான். ஆனால், அங்கே உற்பத்திக்கான வேலையைத் தொடங்காமல் கிடப்பில் போட்டார்கள். பின்னர் அதை தனியாருக்கு லாபப் பகிர்வு அடிப்படையில் தரலாம் என்று சொல்லி ரிலையன்ஸுடன் ஒப்பந்தம் போட்டார்கள். இதெல்லாம் நடந்த சமயத்தில் ஓ.என்.ஜி.சி.யில் இருந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றதும் ரிலையன்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள்.

இன்னும் உருவாகாத லோக்பால் சட்டத்தின்கீழ் பிரதமரைக் கொண்டு வருவது பற்றி சண்டை போடுவதைவிட, ஏற்கெனவே இருக்கும் சட்டங்களின் கீழ் ஊழல் அதிகாரிகளை உடனடியாக முதலில் தண்டிக்க வேண்டும் என்று யாராவது சிவில் சொசைட்டி மகான் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால் ஆதரிப்பேன்.

2. ஆபத்தில் நிருபர்கள்

மும்பையில் மிட்-டே பத்திரிகையின் மூத்த நிருபர் ஜோதிர்ம டே, ஜூன் 11ந்தேதி பொவா பகுதியில் மார்க்கெட் அருகே தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் அவரைச் சுட்டுத் தள்ளிவிட்டு தப்பிவிட்டார்கள்.


ஜோதிர்ம டே மும்பையின் மாஃபியா பற்றித் தொடர்ந்து எழுதி வருபவர். கடந்த வாரம்கூட சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு நடந்துவரும் எண்ணெய் மோசடி பற்றி எழுதினார். இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய இதழ்களில் இதற்கு முன்பு பணியாற்றிய ஜோதிர்ம டே, மும்பையில் மிக முக்கியமான க்ரைம் ரிப்போர்ட்டராகக் கருதப்பட்டவர். சில ஆண்டுகள் முன்பு அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை மும்பை தாதாக்களில் ஒருவனான சோட்டா ஷகீல், ஃபோனில் அழைத்தான். ”இப்போது விக்ரோலி அருகே பைக்கில் போய்க் கொண்டிருக்கிறாய். உன் ரெயின்கோட்டை பின்பக்கம் மடித்து வைத்திருக்கிறாய். உன்னைப் போட்டுத்தள்ள சொல்லட்டுமா" முதலில் அதிர்ச்சியடைந்த டே, சமாளித்துக் கொண்டு பதில் சொன்னார்: ”என்னைக் கொல்ல என் அனுமதி கேட்கிறாயா? எதற்கு? கொல்வதானால் கொல்" என்றார்.

சில வாரங்கள் முன்பு டே, மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சரைச் சந்தித்து அவரிடம் மாஃபியா கும்பலுக்கும் போலீசுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி விவரமான அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகளான போலீஸ் அதிகாரிகள் ஓய்ந்து போய்விட்டதையடுத்து மும்பையில் மறுபடியும் மாஃபியா தலைதூக்கிவிட்டதாக சில வாரங்கள் முன்னால் டே எழுதினார். 1983ஆம் வருட பேட்ச்சைச் சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகள் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகளாகச் செயல்பட்டு 1995லிருந்து 2001க்குள் 600 தாதாக்களைக் கொன்றதாக அவர் எழுதியிருக்கிறார். 

தாதாக்களை உருவாக்குவதும் போலீஸ்தான்; அழிப்பதும் போலீஸ்தான் என்று கூறிய டே, நிழல் உலகம் பற்றி எழுதிய இரு புத்தகங்களும்தான் ராம்கோபால் வர்மா படக் கதைகளுக்கு உதவியதாகச் சொல்லப்படுகிறது.இந்தியாவில் இப்போது நிருபர்களுக்கான ஆபத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆறே மாதங்களில் இது மூன்றாவது கொலை. சட்டிஸ் கரில், பிலாஸ்பூர் பிரஸ் க்ளப்பின் செயலாளர் தனிக் பாஸ்கர் ஏட்டின் நிருபர் சுசீல் பதக் வீடு திரும்பும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். ந துனியா நிருபர் உமேஷ் ராஜ்புத்தைக் கொன்றவர்கள் ‘செய்தி வெளியிடுவதை நிறுத்தாவிட்டால் இதுதான் நடக்கும்’ என்று சீட்டு எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எந்தக் கொலையிலும் இதுவரை யாரும் கைதாகவில்லை.கடந்த 18 வருடங்களில் இந்தியாவில் 28 பத்திரிகை நிருபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஜோதிர்ம டேவின் கொலைக்கு கண்டனமும் அனுதாபமும் தெரிவித்து எல்லா நகரங்களிலும் ஊர்வலமும் கூட்டங்களும் பத்திரிகையாளர்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும்வரை சென்னையில் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பல பத்திரிகையாளர்கள் சங்கங்களில், க்ளப்களில் தேர்தல்கள் நடந்து பல வருடங்கள் ஆகின்றன. என்ன செய்வது ? அதையும் தேர்தல் ஆணையமே நடத்தினால்தான் உண்டு போலிருக்கிறது. 

இந்த வார பிரச்னை

சமச்சீர் கல்வி என்ற பெயரில் தி.மு.க. கொண்டு வந்த பொது பாடத் திட்டத்துக்கு அச்சிட்ட 200 கோடி ரூபாய் புத்தகங்களை வீணாக்காமல், ஒவ்வொரு புத்தகத்தையும் அதற்கான அறிஞர் குழுவிடம் கொடுத்து ஒரு வாரத்தில் படித்துப் பார்த்து ஏற்பதா, நிராகரிப்பதா என்று சொன்னால் வேலை எளிதாக முடிந்துவிடும் என்று ஓ பக்கங்களில் சொல்லியிருந்தேன்.உச்சநீதிமன்றம் அதேபோன்ற ஓர் உத்தரவைத்தான் போட்டிருக்கிறது. தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகளின் குழுவை நியமித்திருக்கிறது. என் பரிந்துரை அதிகாரிகள் குழு அல்ல. ஆசிரியர்/அறிஞர் குழு. நீதிமன்றம் சொல்லியிருக்கும் குழுவில் என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி கவுன்சில்), மாநில கல்வி வாரிய அதிகாரிகள் மட்டும் வேண்டுமானால் அறிஞர்களாக இருக்க வாப்பிருக்கிறது. 

இந்தக் குழுவின் பரிந்துரையை உயர்நீதிமன்றத்திடம் இரு வாரத்தில் தந்ததும், உயர்நீதிமன்றம் ஒரு வாரத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குழுவில் பெரும்பாலும் தமிழக அரசு அதிகாரிகளே இருப்பதால், முதலமைச்சர் மனநிலைக்கு விரோதமாக எதுவும் சொல்லாமல், பொதுப் பாடத்திட்டம் அடுத்த வருடம்தான் சாத்தியம் என்றே பரிந்துரை செவார்கள் என்பதே என் அரசியல் ஆரூடம். அப்போது உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் என்பதுதான் இறுதி முடிவை ஏற்படுத்தும். உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் பரிந்துரையைத் தேவைப்பட்டால், உயர்நீதிமன்றம் நிராகரிக்க சட்டத்தில் இடம் உண்டா என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை.

புரிவது ஒன்றே ஒன்றுதான். இன்னும் ஒரு மாதத்துக்கு நம் தமிழ்க் குழந்தைகள் மார்க் தயாரிக்கும் மெஷின்களில் சிக்கி அரைபடமாட்டார்கள். அப்புறம் ஓவர் டைமாகப் போட்டு அரைக்கப்படுவார்கள்.பெற்றோர்களின் குழப்பத்தைக் கூட்ட, பள்ளிக் கட்டண நிர்ணய கமிட்டியின் உத்தரவும் வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சி ஜெயலலிதாவுக்கு விட்டுச் சென்ற தலைவலிகள் இவை. இரண்டு தலைவலிக்கும் என்னிடம் சரியான மருந்து இருக்கிறது. சொன்னால், அரசு, பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் எல்லாருக்கும் கோபம் வரும். குழந்தைகள் மட்டுமே சந்தோஷப்படுவார்கள். 

பர்சனல் லோன் - எளிதாக மீள இதோ சில வழிகள்


திடீரென உடல் நலமில்லாமல் போய் மருத்துவ மனையில் அட்மிட் ஆகிவிடுவது... நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவுவது இப்படி யாக கொஞ்சமும்  எதிர்பாராமல் வந்து சேரும் திடீர் செலவுகளைச் சமாளிக்க ஒரே வழி, ஏதாவது ஒரு வங்கியில் பர்சனல் கடன் வாங்குவதே. அடமானம் மற்றும் ஜாமீன் எதையும் கேட்டு நோண்டாமல் கொடுக்கிற கடன் இது என்பதாலோ என்னவோ இதற்கு விதிக்கப்படும் வட்டியும் அதிகமே. ஏதோ ஒரு அவசரத்தில் இந்தக் கடனை வாங்கிவிட்டு, பிற்பாடு ஒழுங்காகத் திரும்பக் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் பலர். இந்தக் கடனிலிருந்து எளிதாக மீள இதோ சில வழிகள்...!

சொத்தை வைத்து சமாளிக்கலாம்!

உங்களிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடு, கார், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், வரி சேமிப்புச் சான்றிதழ்கள், பங்குகள், பாண்டுகள், தங்க நகைகள், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற சொத்துக்களை வங்கியில் அடகு வைத்து தனிநபர் கடனை அடைக்கலாம்.  சில வங்கிகள் இது மாதிரியான சொத்துகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கின்றன. அதனைப் பயன்படுத்தி அதிகளவி லான வட்டி கட்டுவதைத் தவிர்க்கலாம்.

மறுசீரமைப்பு!

நீங்கள் முப்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டின் பெயரில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் எனில், தற்போது அந்த வீட்டிற்கான மதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் மீண்டும் வீட்டின் மீது கடன் வாங்கி தனிநபர் கடனை அடைக்கலாம். வீட்டுக்கான கடனின் வட்டி 10.75-11 சதவிகி தமாக இருக்கும் பட்சத்தில், தனிநபர் கடன் 16-24 சதவிகிதமாக இருப்பதால் வீட்டின் மீது மறுசீரமைப்பு (Restructure) முறையில் கடனைப் பெற்று, தனிநபர் கடனை அடைத்து விடலாம்.இம்முறையில் கடன் பெறும்போது மாறுபடும் வட்டி விகிதத்தில் இருந்தால், வருங் காலத்தில் வட்டி விகிதம் குறையும்போது கூடுதல் பலன் கிடைக்கும். இதற்கு நீங்கள் ஒழுங்காக இ.எம்.ஐ. கட்டியிருக்க வேண்டும்; சிபில் அமைப்பில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்க வேண்டும். இதுமாதிரி உங்கள் வங்கி  ரெக்கார்டில் எந்த குறை பாடும் இருக்கக்கூடாது.  

பல வங்கிகளில் வேண்டாமே!

பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கி இருப்பார்கள். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமான வட்டி கணக்கிடப்படும். இதனாலும் அதிகளவில் நீங்கள் வட்டி செலுத்த வேண்டியிருக் கலாம். பல வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கியவர்கள், வட்டி குறைவாக இருக்கும் வங்கியில் தகுதி இருந்தால் அந்தத் தொகைக்கு ஈடாக கடன் வாங்கி, மற்ற வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைத்துவிடலாம். இதில் கண்ணுக்குத் தெரியாமல் போகும் அதிக வட்டி நமக்கு மிச்சமாகும்.

குறைந்த காலத்தில் கட்டுங்க!

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனைத் திரும்பச் செலுத்தும் போது இ.எம்.ஐ. குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை அதிகமாக வைத்திருப்பீர்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல அதிக வட்டி கட்ட வேண்டி யிருக்கும் என்பதை பலரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை. எனவே, கடன் பணம் குறைவோ, அதிகமோ அதை எவ்வளவு சீக்கிரத்தில் கட்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கட்டி முடித்து விட்டால், வட்டியாக கொடுக்கும் பெரும் பணத்தை எளிதாக மிச்சப்படுத்தலாம்.  

யோசித்து வாங்கவும்!

அதிகப்படியான வட்டியில் கொடுக்கப்படும் தனிநபர் கடனை வாங்கும்முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்துவிட்டு வாங்குவது நல்லது. என்னதான் அவரசத் தேவை என்றாலும் நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்றோ, ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை எடுத்தோ அவசரத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.மாதச் சம்பளம் வாங்குபவர் எனில் உங்கள் சம்பள விவரம், தெளிவான வங்கி பரிவர்த்தனை ஆகிய விவரங்களைக் கொண்டு வங்கியை அணுகி குறைந்த வட்டியில் அடமானக் கடன் பெற்றுக் கொள்வது நல்லது.  வாங்குவது கடன்தான் என்றாலும், அதை குறைந்த வட்டியில் வாங்குவதே நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால், பர்சனல் லோனை எளிதாகக் கட்டி முடிக்கலாமே!

விகடன்