காளி ஆற்றுக்கும் டீஸ்டா ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி நேபாள இமயமலை. இந்தப் பகுதியில் எவரெஸ்ட், கஞ்சன் ஜங்கா, தவளகிரி, அன்னபூர்ணா ஆகிய சிகரங்கள் உள்ளன. டீஸ்டா ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருந்து பிரம்மபுத்திரா ஆறு வரை உள்ள பகுதி அஸ்ஸாம் இமயமலை. பர்மா பகுதியில் இந்த மலையின் உயரம் குறைந்து தாழ்ந்த குன்றுகளாகக் காணப்படுகின்றன. இவை, பாட்காய் குன்றுகளில் இருந்து உலூஷாய் குன்றுகள் வரை வடக்குத் தெற்காக அமைந்துள்ளன. இமயமலை, இந்தியாவுக்கு ஓர் அரணாக விளங்கியபோதும், பல்வேறு நாட்டு வணிகர்களின் நுழைவாயிலாகவும் விளங்கி இருக்கிறது. சீனாவின் பட்டுச் சாலை இமயத்தில்தான் நுழைகிறது. இதனால் அரேபிய, பெர்ஷிய, சீன வணிகர்களின் பண்பாட்டுக் கலப்பை இங்கே நாம் காணலாம்.
இமயமலைப் பகுதியை பல்வேறு சிறிய இனக் குழுக்களைச் சேர்ந்த அரசர்களே ஆட்சி செய்துவந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியின் புராதனப் பெயர் காஷ்தேஸ். அதாவது, காஷ் இன மக்களின் தேசம் என்பதாகும். இவர்கள் மத்திய இமாலயப் பகுதியில் வசித்த மலைவாசிகள். இவர்களின் வழியாக உருவானவர்களே சத்ரி இனம். இயற்கையை வணங்கி வந்த காஷ் இன மக்கள், புத்த மதம் தோன்றிய பிறகு, பௌத்தர்களாக மாறினர்.இந்திய நிலவியல் சர்வே முடிவில் 1852-ல் எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதன் உச்சிக்கு ஏறி சாதனை செய்ய வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் மலையேற்றக் குழுவினர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 1924-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, பிரிட்டிஷ் மலையேற்றக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் மலூரி மற்றும் ஆண்ட்ரூ இர்வின் ஆகிய இருவரும், எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியில் மலையேறத் தொடங்கினர். ஆனால், இருவரும் காணாமல் போய்விட்டனர். 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பனியில் உறைந்துகிடந்த ஜார்ஜ் மலூரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது கைப்பையில் கிடைத்த பொருட்களையும் நாட்குறிப்பையும்கொண்டு அவர்கள் பனிப் புயலில் சிக்கி இறந்துபோனது தெரியவந்தது.
இவர்களைப் போலவே 10 பேர் எவரெஸ்ட் உச்சியை அடைய முயற்சி செய்துள்ளனர். அதில் ஒருவரும் வெற்றிபெறவில்லை. இதில், 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல வருடங்களாக, உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் உச்சியை அடைவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள மலையேறுபவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவால். 1953-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி, எட்மண்ட் ஹிலாரி என்ற நியூசிலாந்து வீரரும் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நேபாளியான டென்சிங் நார்கேயும், எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர். இன்றுவரை முன்னோடி சாதனையாக அது கருதப்படுகிறது. இந்த 50 வருடங்களுக்குள் எவரெஸ்ட்டின் உச்சியை 1,200-க்கும் மேற்பட்டோர் தொட்டு இருக்கின்றனர்.
இதில், ஷெர்பா அப்பா எனப்படும் நேபாளி ஆக்சிஜன் உதவி இல்லாமல் எவரெஸ்ட்டில் பயணம் செய்து அதன் உச்சியை அடைந்து இருக்கிறார். அதோடு, 13 வருடங்களில் 12 முறை எவரெஸ்ட் உச்சியை அடைந்த வீரரும் இவர் ஒருவரே!ஷெர்பா எனப்படும் நேபாளிகள் புத்த மதத்தைத் தழுவியர்கள். இந்தியாவில் இருந்து நேபாளத்துக்குஇடம்பெயர்ந்தவர்கள். யாக் எனப்படும் எருதுகளைப் பராமரித்து அதை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். கடுமையான உழைப்பாளிகள். ஷெர்பா என்றால், கிழக்கில் இருந்து வந்தவர்கள் என்று பொருள். இன்று வரை, எவரெஸ்ட் மலையேற்றத்துக்குத் துணைபுரிகின்றவர்கள் இந்த ஷெர்பாக்கள்தான். இவர்கள் பனிக் கரடி போன்றவர்கள். எவ்வளவு மோசமான பனிப்பொழிவின்போதும் இவர்களால் மலையேற முடியும். அதோடு, வழிகாட்டுதலில் இவர்களைப் போல துல்லியமாக எவரும் செயல்பட முடியாது.
எவரெஸ்ட் உச்சியை எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங்கும் அடைவதற்கு துணையாக 400 பேருக்கும் அதிகமானோர் உதவி செய்து இருக்கின்றனர். மலையேற்றக் குழுவிலேயே 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். மலையின் ஒவ்வொரு தளத்திலும் முகாம் அமைக்கவும் அவர்களுக்குத் தேவையான உணவு சமைக்கவும், சுமைகளைத் தூக்கி வரவும், மருத்துவம் செய்யவும், வழிகாட்டவும் 40-க்கும் மேற்பட்டோர் உடன் வருவார்கள்.
ஒரு முறை எவரெஸ்ட் மலையை ஏறுவதற்கு ஒரு ஆளுக்குக் குறைந்தபட்சம் ஆகும் செலவு 75,000 டாலர். இந்திய மதிப்பில் 40 லட்ச ரூபாய். பணம் இருந்தால் மட்டும் மலை ஏறிவிட முடியாது. இதற்காக, நேபாள அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்காகக் காத்திருப்பவர்களின் பட்டியலில் இப்போது 2,000 பேர் இருக்கிறார்கள். இவ்வளவு சிரமங்களைத் தாண்டி மலை ஏறி எவரெஸ்ட் உச்சியை அடைந்த டென்சிங், தனது மலையேற்ற அனுபவங்களை தொகுத்து ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். நேபாளிக் குடும்பம் ஒன்றில் பிறந்த டென்சிங், சிறு வயது முதலே மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது 11-வது வயதிலேயே மலை ஏறத் தொடங்கினார். அதோடு, பிரிட்டிஷ் மலையேற்றக் குழுவில் கூலியாக வேலை செய்துகொண்டு, இமயமலையின் பல்வேறு சிகரங்களுக்கு சென்றுவந்து இருக்கிறார்.
தனது சுய முயற்சியால், மலையின் நுட்பங்களை அறிந்த டென்சிங், ஹிலாரியுடன் இணைந்து 1953-ம் ஆண்டு எவரெஸ்ட் பயணத்தைத் தொடங்கினார். முந்தைய ஆண்டு அவர் மேற்கொண்ட இதே பயணம் கடுமையான பனிப் புயல் காரணமாகப் பாதியில் கைவிட நேர்ந்தது. ஆகவே இந்த முறை, அவர்கள் மிகக் கவனமாகப் பயணம் செய்தனர். எவரெஸ்ட்டின் உச்சியில் முதலில் யார் கால்வைத்தது என்று, பத்திரிகை பேட்டியில் டென்சிங்கிடம் கேட்டபோது, தங்கள் இருவரில் யார் முதலில் கால்வைத்தது என்பதை, தான் ஒருபோதும் சொல்லப்போவது இல்லை என்றும், இது ஒரு கூட்டு முயற்சி என்றும் கூறினார். ஆனால், புகைப்படங்கள் நிரூபிக்கும் சாட்சி எவரெஸ்ட் உச்சியில் டென்சிங் மட்டுமே நிற்கிறார் என்பதே.இதை மறுக்கும் ஹிலாரி, டென்சிங்குக்குப் புகைப்படம் எடுக்கத் தெரியாது என்ற காரணத்தால் அவரை, தான் புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அதனால் மட்டுமே தன்னைப் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்து இருக்கிறார்.எவரெஸ்ட் மலையேற்றத்தில் வெற்றி பெற்றவர்களைவிடவும், பாதிப் பயணத்தில் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை அதிகம். பனிப் பொழிவில் சிக்கிக்கொண்டோ அல்லது எதிர்பாராமல் உடல்நலக் குறைவு ஏற்பட்டோ இறந்துபோனவர்கள் அதிகம். தனது பயணம் ஒன்றில் ஒரு பனிப்பாறையை தான் உடைத்தபோது, பல வருடத்துக்கு முன், மலையேறச் சென்ற ஒரு வெள்ளைக்காரனின் உடல் அப்படியே உறைந்துபோயிருந்ததை மீட்டு எடுத்ததாக டென்சிங் நினைவு கூர்கிறார். மலையேற்றத்துக்கு விருப்பம் இருந்தால் மட்டும் போதாது. கடுமையான உடற்பயிற்சியும் மனப்பக்குவமும் தேவை. காரணம், உயரம் அதிகமாக அதிகமாக உடல் தன் இயல்பை இழந்துவிடுவதோடு மிகப் பெரிய தனிமை மனதை வெகுவாக பாதிக்கக்கூடியது. பல நேரங்களில் அது பைத்திய நிலைக்கு ஒப்பாக இருக்கும் என்று சொல்லும் டென்சிங், அதுபோன்ற நேரங்களில் நான் தனியாக மலையேறவில்லை என்றும், தன்னோடு புத்தரும் உடன் இருக்கிறார் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
எவரெஸ்ட் உச்சியை அடைந்தபோது, டென்சிங் தன்னை மறந்து கூச்சலிட்டார். 15 நிமிடங்கள் உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சியில் தனியாக நின்றுகொண்டு இருந்த டென்சிங், உலகம் எத்தனை பிரம்மாண்டமானது, அழகானது என்று தன்னை அறியாமல் அழுததாக விவரித்து இருக்கிறார். பௌத்த நம்பிக்கைகொண்ட டென்சிங், எவரெஸ்ட் உச்சியில் எதையாவது காணிக்கையாகப் புதைத்துவிட்டு வர விரும்பினார். அதன்படியே தனது மகள் நீமாவின் விருப்பப்படி அவள் கொடுத்து அனுப்பிய நீல நிறப் பேனா ஒன்றையும், கொஞ்சம் இனிப்புகளையும் எவரெஸ்ட் உச்சியில் புதைத்துவிட்டு வந்தார். இன்றும், உலகின் உச்சியில் ஒரு பேனா மிக நிசப்தமாகப் புதையுண்டு கிடக்கிறது.
டென்சிங்குக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், சரளமாக அவரால் ஏழு மொழிகளில் பேச முடியும். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வெற்றியின் காரணமாக, பிரிட்டிஷ் அரசின் மிக உயர்ந்த விருது டென்சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசும் அவரைக் கௌரவித்தது. இவற்றைவிட, புத்தரின் கருணைதான் இந்தச் சாதனையை தனக்கு வழங்கியது என்று நம்பும் டென்சிங், மலையேறுபவர்களுக்கான நிறுவனம் ஒன்றை நிறுவி, இமயமலைப் பயணத்துக்கு உதவி செய்து வந்தார். 1986-ம் ஆண்டு டார்ஜிலிங்கில் இறந்துபோன டென்சிங்கின் வாழ்வு, ஓர் எளிய மனிதனின் கடுமையான உழைப்புக்கும், இயற்கையைப் புரிந்துகொண்ட ஒரு மனதுக்கும் கிடைத்த வெற்றி. டென்சிங்கின் மகனும் இன்று, எவரெஸ்ட் மலையேறி சாதனை செய்து இருக்கிறார். இன்றும் மனிதனின் காலடி படாத சிகரங்களில், சூரியன் தனியே ஒளிர்ந்துகொண்டு இருக்கிறது.
'இமயமலை ஓர் அன்னை. அதன் உயர்ந்த மார்பகங்கள்தான் சிகரங்கள். அந்த மார்பில் இருந்து பாலை அருந்தியவன் நான். ஆகவே, அந்த அன்னைக்கு என்றும் கடமைப்பட்டவன்’ என்கிறார் டென்சிங். மலையை ஒருபோதும் மனிதனால் வெற்றிகொள்ள முடியாது. அது, இயற்கையின் புதிர். அதோடு இணைந்து வாழ்வது மட்டுமே சாத்தியமானது என்று, தனது நூலில் பல முறை குறிப்பிட்டு இருக்கிறார் டென்சிங். இமயம் சுட்டும் உண்மையும் அதுதான்.