Search This Blog

Saturday, April 25, 2015

வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு...எவ்வளவு லாபம்?

சமீப காலத்தில் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி 0.25 சதவிகிதத்தை தலா இருமுறை குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவற்றின் வட்டி விகிதத்தை (பேஸ் ரேட்) குறைத்துள்ளன. இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டி 0.15% முதல் 0.25% வரை குறைந்திருக்கிறது. சில வங்கிகள், ஏற்கெனவே கடன் வாங்கியவர் களுக்கும் புதிய வாடிக்கையாளர் கள் அளவுக்கு வட்டியைக் குறைத்துள்ளன. சில வங்கிகள் ஏற்கெனவே கடன் வாங்கியவர் களுக்கு புதியவர்கள் அளவுக்கு வட்டியைக்  குறைக்காமல், கொஞ்சம் குறைவாகவே குறைந்துள்ளன.


ஐசிஐசிஐ பேங்க், அனைத்து (பழைய மற்றும் புதிய) வாடிக்கையாளர்களுக்கும் வீட்டுக் கடன் வட்டியில் (மாறுபடும் வட்டி) 0.25% குறைத்து 9.90 சதவிகிதத்துக்கு கடன் வழங்குகிறது. அதே நேரத்தில், எஸ்பிஐ புதிய வாடிக்கையாளர்களுக்கு 9.90%-ல் வீட்டுக் கடன் வழங்குகிறது. அதுவே பழைய வாடிக்கையாளர் களுக்கான வட்டியை (ஃப்ளோட்டிங்) 10.10 முதல் 10.15 சதவிகிதத்திலிருந்து 9.95 முதல் 10 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.  இதனை பெரிய வித்தியாசம் என்று சொல்ல முடியாது. பெண் களுக்கு சிறப்பு வட்டியாக ஐசிஐசிஐ பேங்க் 10.10 சதவிகிதத் திலிருந்து 9.85 சதவிகிதமாகவும், எஸ்பிஐ 10.10 சதவிகிதத்திலிருந்து 9.95 சதவிகிதமாகவும் குறைத்துள்ளன.

எவ்வளவு லாபம்?  

வீட்டுக் கடனுக்கான வட்டி 0.25% குறையும்போது எவ்வளவு லாபம் கிடைக்கும்?

‘‘ஒருவர் ரூ.30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10.15% மாறுபடும் வட்டியில் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக அண்மையில் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கான இஎம்ஐ ரூ.29,249. இவருக்கு வீட்டுக் கடன் வட்டி 0.25% குறைக்கப்பட்டு 9.90 சதவிகிதமாக மாறுகிறது. அப்போது இஎம்ஐ ரூ.28,752-ஆக குறையும்.

கடனுக்கான வட்டி 10.15 சதவிகிதமாக இருக்கும்போது கடன் வாங்கியவர் 20 ஆண்டு களில் இஎம்ஐ ரூ.29,249 என்கிற பட்சத்தில், வட்டியாக மட்டும் ரூ.40,19,862 கட்டி இருப்பார். இதுவே வட்டி 9.90 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு, இஎம்ஐ ரூ.28,752 என்கிறபட்சத்தில், வட்டியாக ரூ.39,00,520 கட்டி இருப்பார். மொத்த வட்டி மிச்சம் ரூ.1,19,342. அதாவது, ஒரு மாதத்துக்கு ரூ.497 வட்டி சேமிப்பு’’ என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.

‘‘இஎம்ஐ-யை மாற்றாமல் ரூ.29,249 என தொடர்ந்து கட்டி வந்தால், அவருக்கு கடன் ஓராண்டுக்கு முன்பாக, அதாவது 19 ஆண்டுகளிலே முடிந்திருக்கும். அப்போது அவர் வட்டியாக ரூ.36,67,206 கட்டி இருப்பார். வட்டியில் ரூ.3,52,700 மிச்சமாகி இருக்கும்.



வட்டியைக் குறைக்க மறுத்தால்..?

நீங்கள் வீட்டுக் கடன் வாங்கிய வங்கி அல்லது வீட்டுக் கடன் வசதி நிறுவனம் வட்டியை குறைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? உதாரணமாக,  உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டி 10.20%. இன்னொரு வங்கி 10 சதவிகிதத்துக்கு வீட்டுக் கடன் அளிக்கிறது. உங்களின் வீட்டுக் கடன் தொகை ரூ.40 லட்சம். கடனை 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டினால், உங்களின் மாதத் தவணை ரூ.530 குறையும். மொத்தம் 20 ஆண்டுக் காலத்தில் வட்டி ரூ.1.27 லட்சம் மிச்சமாகும்.

ஆனால், கடனை மாற்றும்முன் சில செலவுகளை நீங்கள் செய்ய வேண்டும். புதிதாக கட்டட மதிப்பீடு அறிக்கை, லீகல் ஒப்பீனியன் போன்றவை தர வேண்டும். மேலும், பரிசீலனைக் கட்டணம் இருக்கும். இந்தச் செலவுகள் எல்லாம் சேர்ந்து, அதற்கு 20 ஆண்டுகளுக்கு 10% வட்டி போட்டால், வரும் தொகை ரூ.1.27 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டுமே கடனை மாற்றலாம்.


உங்கள் வங்கி, கடனுக்கான வட்டியை இப்போது குறைக்கவில்லை. அடுத்த சில மாதங்களில் குறைக்கும் என்றால் அதுவரைக்கும் காத்திருக்கலாம். தப்பில்லை. அல்லது நீங்கள் மாதத் தவணையை சரியாக கட்டிவருபவர் என்றால் மற்ற வங்கிகள் எல்லாம் வட்டியைக் குறைத்த மாதிரி உங்களுக்கும் குறைக்கும்படி கேட்கலாம். அப்படி குறைக்கவில்லை என்றால் வேறு வங்கிக்கு கடனை மாற்ற நீங்கள் முயற்சித்தால், நல்ல கடன்தாரரை இழக்க விரும்பாமல் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் வட்டியைக் குறைக்கிறோம் என்று வங்கிகள் சொன்னாலும் வங்கிக்கு நேரில் சென்று அதனை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. சில வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வட்டியைக் குறைக்கச் சொல்லி கடிதம் கொடுத்தால் மட்டுமே வட்டியைக் குறைக்கின்றன என்பதையும் மனதில் கொள்ளுங்கள்!

நினைவை எடுத்துச் செல்லும் பென்டிரைவ்கள்!

ஒரு மனிதன் எத்தனை விஷயங்களைதான் நினைவில் வைத்துக்கொள்வான்? பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கணினியில் நினைவகங்களை உருவாக்கினான்.

கணினி நினைவகங்களில் உள்ள பெரிய சிக்கல், அது ஒரே இடத்தில் நிலையாக சேமிக்கப் பட்டிருப்பதே. அதை இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல  இன்டர்நெட்டைக் கண்டு பிடித்தான். அப்போதும் குறிப்பிட்ட அளவிலான தகவல்களை மட்டுமே கொண்டுசெல்ல முடிந்தது.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக ஃப்ளாப்பி டிரைவ்களும், சி.டி-க்களும் வந்தன. ஆனால், அதிலும் சில சிரமங்கள். இவை வடிவத்தில் தட்டையாகவும், வட்டமாகவும் இருந்ததால் பயணங்களின்போது எளிதில் உடைந்துபோயின. இதன் மீது சிறு கீறல் விழுந்தாலும் தகவல்களை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.


இந்த பிரச்னையைச் சமாளிக் கும் விதத்தில் கண்டுபிடிக்கப் பட்டவைதான் பென்டிரைவ்கள். இந்த கண்டுபிடிப்புக்கு பின்னால் மிகப் பெரிய சர்ச்சையே இருந்தது. 1999-வது வருடம் ட்ரெக் டெக்னாலஜி மற்றும் நெடெக் டெக்னாலஜி என்ற இரு நிறுவனங் களும் பென்டிரைவுக்கான காப்புரிமையைப் பெற்றன. சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ட்ரெக் டெக்னாலஜி நிறுவனம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து நீதிமன்றம் அதன் இங்கிலாந்து காப்புரிமையை நிராகரித்தது.

பின்னர் அனைத்து நிறுவனங்களும் இந்த பென்டிரைவ் களை உற்பத்தி செய்யத் துவங்கின. முதலில் 8 எம்.பி. அளவுக்கு செய்யப்பட்ட இந்த ப்ளாஷ்டிரைவ் எனப்படும் பென்டிரைவ்கள், இன்று 128 ஜி.பி. அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, நல்ல தரத்தில் 60 ஹாலிவுட் படங்களை பதிவு செய்துவைத்து கொள்ளும் அளவுக்கு இந்த பெண்டிரைவ்களின் மெமரி இன்று அதிகரித்துள்ளது.

இன்று அலுவலகத்துக்கோ அல்லது கான்ஃப்ரன்ஸ்களுக்கோ லேப்டாப்களை சுமந்து செல்லாமல் எளிதாக தகவல்களை எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த பென் டிரைவ்கள்தான் நம் நினைவுகளை சிறிதும் பாதிக்காமல் வெகு தொலைவுக்கு எடுத்து செல்கின்றன என்றால் அது மிகையில்லை!

ச.ஸ்ரீராம்

அமேசான் கிண்டில் வோயேஜ்

அமேசான் நிறுவனம் தனது கிண்டில் இ-புக் ரீடர் மூலம் இ-புக் ரீடர் மார்க்கெட்டில் தனக்கான பிரத்யேகமான இடத்தைப் பிடித்துள்ளது. சிம்பிள் டிசைன், சூப்பர் பேட்டரி ஆகிய இரண்டும்தான் கிண்டில் இ-புக் ரீடரின் சக்சஸ் சீக்ரெட். அந்த வகையில் அமேசான் நிறுவனம் தனது புதிய இ-புக் ரீடரான ‘அமேசான் கிண்டில் வோயேஜ்’ என்ற இ-புக் ரீடரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

1. டிசைன்!
அமேசான் கிண்டில் வோயேஜ்ஜின் எடையும் அடர்த்தி யும் மிகக் குறைவு. மற்ற அமேசான் இ-புக் ரீடரைக் காட்டிலும் இந்தக் கிண்டில் வோயேஜை சுலபமாக ஒரு கையில் பிடித்துப் பயன்படுத்த லாம். நீண்ட நேரம் பயன்படுத்தி னாலும் கையில் எந்தவித சிரமமும் இருக்காது. பிரீமியம் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட இந்த இ-புக் ரீடர், தனது பவர் பட்டனை பின்புறத்தில் பெற்றுள்ளது.


2. டிஸ்ப்ளே!

மற்ற கிண்டில் இ-புக் ரீடரை விட கிண்டில் வோயேஜ்ஜின் டிஸ்ப்ளேவின் திறன் அதிகப் படுத்தப்பட்டுள்ளது. 300 PPI கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே துல்லியமான மற்றும் தெளிவான வார்த்தைகளைக் காண்பிக்கும் திறனைப் பெற்றுள்ளது.

மேலும், இந்த டிஸ்ப்ளே     ‘Ambient Light Sensor’ என்ற சென்ஸாரைப் பெற்றுள்ளது. இது வெளிச்சத்துக்கேற்ப  டிஸ்ப்ளேவின் ஒளிர்வை மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. மேலும், ‘Night Light Feature’ என்ற தொழில்நுட்பம் இருட்டில் தானாக டிஸ்ப்ளேவின் ஒளிர்வைக் குறைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால் கண்களை பாதிப்பில் இருந்து தடுக்கலாம்.


3. தொழில்நுட்பம்!

புதிய கிண்டில் வோயேஜ் இ-புக் ரீடர் ‘Pagepress’ என்ற வசதியைப் பெற்றுள்ளது. ரீடரின் கீழ் பகுதியின் வலப்பக்கமும் இடப்பக்கமும் ஒரு சிறிய கோடு உள்ளது. இந்தக் கோட்டை டச் செய்வதன் மூலம் முன்பக்கமும் பின்பக்கமும் இ-புக்கின் பக்கங்களை எளிதாகத் திருப்பிக் கொள்ளலாம். மேலும், மற்ற இ-புக் போல ஸ்க்ரீனில் டச் செய்தும் இதைச் செய்யலாம்.

4. கூடுதல் வசதி! 

கிண்டில் வோயேஜ் மற்ற அமேசான் இ-புக் ரீடர்களின் இயங்குதளத்தைக் கொண்டுதான் இயங்குகிறது. இதில் எந்தப் பெரிய மாற்றங்களும் இல்லை என்றாலும், ‘Family Library’ போன்ற சிறிய மாற்றங்கள் இதில் உண்டு. இந்த வசதியைக் கொண்டு குடும்பத்தில் உள்ள ஒருவர் மற்றவருடன் தங்களது புத்தகங்களை ஷேர் செய்துக்கொள்ளலாம்.


5. மாடல்கள்!

கிண்டில் வோயேஜ் இ-புக் ரீடர் இரண்டு மாடல்களில் வருகிறது. ஒன்று, வைஃபை (WiFi) வசதியுடன் மட்டும். மற்றொன்று, வைஃபை மற்றும் 3G வசதியுடன். வைஃபை மாடலின் விலை ரூபாய் 16,499. வைஃபை + 3G மாடலின் விலை ரூபாய் 20,499.

பிளஸ்:

டிசைன்
பேட்டரி

மைனஸ்:
விலை

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Tuesday, April 14, 2015

நெட் நியூட்ராலிட்டி

இனிமேல் நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்புக்கான கட்டணம் மாதமொன்றுக்கு 50 ரூபாய், கூகுளில் பல்வேறு விஷயங்களைத் தேட இனிமேல் ஒவ்வொரு மாதமும் 30 ரூபாய் கட்ட வேண்டும் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? ஏறக்குறைய இந்த நிலைக்கு நம்மை கொண்டுவந்துவிட்டன செல்போன் நிறுவனங்கள். பலவிதமான சேவைகளைத் தருகிறோம் என்று சொன்ன செல்போன் நிறுவனங்கள், இன்று கட்டணத்தை உயர்த்தி நம்மிடமிருந்து காசு பறிக்கத் தயாராகிவிட்டன. செல்போன் நிறுவனங்களின் இந்த காசு பறிக்கும் வேலைக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறது நெட் நியூட்ராலிட்டி என்கிற புதிய சர்ச்சை.
 
நெட் நியூட்ராலிட்டி என்றால்..?

இணையதளச் சேவையை வழங்கும் செல்போன் சேவை நிறுவனமும், அரசும் அனைத்து இணையதள டேட்டாக்களையும் சமநிலையில் வழங்கவேண்டும் என்பதே நெட் நியூட்ராலிட்டி என்னும் இணையதளச் சமநிலை. இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் கட்டணத்தில் வாடிக்கையாளர்களிடையே வித்தியாசம்  காட்டக்கூடாது. அதேபோல், தகவல், இணையதளம், இயங்குதளம், ஆப்ஸ், தொலைதொடர்பு முறை ஆகிய வற்றிலும் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே நெட் நியூட்ராலிட்டி. கொலம்பியா பல்கலையின் மீடியா சட்டப் பிரிவின் பேராசிரியர் டிம்வூ (TimWu) என்பவர் 2003-ல் இந்தக் கருத்தை உருவாக்கினார்

என்ன பிரச்னை?

கடந்த சில ஆண்டுகளாக செல்போன்கள் இந்தியாவில் வேகமான வளர்ச்சியைப் பெற்றுவந்தன. இதனால் செல்போன் சேவை தரும் நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இத்தனை நாளும் வசூல் ராஜாக்களாக விளங்கிய செல்போன் நிறுவனங்களின் வருமானம் சமீப காலமாக குறைய ஆரம்பித்திருக்கிறது. இதற்கு காரணம், தினம் தினம் புதிது புதிதாக முளைக்கும் ஆயிரமாயிரம் ஆப்ஸ்கள். இத்தனை நாளும் இணையதளங்கள் மூலம் செய்துவந்த வேலையை தற்போது பலரும் ஆப்ஸ் மூலம் செய்துவிடுவதால், செல்போன் நிறுவனங்களில் வருமானம் ஏகத்துக்கும் குறைந்திருக்கிறது.

அடுத்த முக்கியமான காரணம், வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VOIP) எனும் இணையதள கால் வசதி அதிகரித்து வருவது. முன்பெல்லாம் செல்போன் நிறுவனங்களின் மூலம் பேசி வந்த பலரும் இன்றைக்கு வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் ஹேங்அவுட் ஆகியவற்றின் மூலம் எளிதாக பேசிவிடுகின்றனர். இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர் களுடன் பலரும் தாராளமாகப் பேசுவதால், செல்போன் நிறுவனங்களின் வருமானம் குறைந்திருக்கிறது. இதுகுறித்து செல்போன் சேவையை நெறிமுறைப்படுத்தும் ட்ராய் அமைப்பிடம் ஏற்கெனவே செல்போன் சேவை நிறுவனங்கள் புகார் செய்துள்ளன.

இந்தப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டறியும்  முன் இதுபற்றி  மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய், இருபது கேள்விகளை மக்கள்முன் வைத்துள்ளது. (ட்ராய் கேட்டிருக்கும் கேள்விகளைப் படிக்க பின்வரும் லிங்க்கை கிளிக் செய்க http://www.trai.gov.in/WriteReadData/WhatsNew/Documents/OTT-CP-27032015.pdf)

இரண்டு வாய்ப்புகள்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இதுபோன்ற பிரச்னை தலைதூக்கியபோது, இணையதள அரசு நெட் நியூட்ராலிட்டி பக்கமே இருந்துள்ளது. ஆப்ஸ்கள் தங்கள் வருமானத்தைக் கெடுக்கின்றன என்பதற்காக செல்போன் சேவை தரும் நிறுவனங்கள் எடுக்கும் முடிவு மக்களைப் பாதிக்கும் விதமாக உள்ளது. அதாவது, ஆப்ஸ் நிறுவனங்களிடம் இருந்து தப்பிக்க செல்போன் சேவை தரும் நிறுவனங்கள் இரண்டு உத்திகளை கையாள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒன்று, ஆப்ஸ் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களிடம் கணிசமான ஒரு தொகையைப் பெற்று குறைந்த விலையில் சேவையை வழங்குவது. இரண்டாவது, இணைய தளச் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்து வது. இந்த இரண்டில் எந்த முடிவை செல்போன் சேவை தரும் நிறுவனங்கள் எடுத்தாலும் அதனால் மக்களுக்கு பாதிப்பே!

சிறிய மீனை விழுங்கும் பெரிய மீன்!

உதாரணமாக, ஆப்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்கள் தரும் பணத்தின் அடிப்படையில் அதை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் செல்ல செல்போன் நிறுவனங்கள் முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். எல்லா ஆப்ஸ் நிறுவனங்களாலும் செல்போன் நிறுவனங்கள் கேட்கும் தொகையைத் தரமுடியாது. பல பில்லியன் டாலர் முதலீட்டில் இயங்கும் அமேசான் நிறுவனம் தனது ஆப்ஸை கொண்டு செல்ல செல்போன் சேவை நிறுவனங்கள் கேட்கும் தொகையை எளிதாகத் தந்துவிடலாம்.


ஆனால், குறைந்த முதலீட்டில் பல நிறுவனங்கள் தங்கள் ஆப்ஸை கொண்டு செல்ல செல்போன் நிறுவனங்கள் கேட்கும் தொகையைத் தரமுடியாது. இதனால் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு வராது. இதனால் பெரிய நிறுவனங்கள் இனி சிறிய நிறுவனங்களை வியாபாரப் போட்டியிலிருந்து எளிதாக ஓரங்கட்ட முடியும். பெரிய நிறுவனங்களுக்கும் சிறிய நிறுவனங்களுக்கும் இடையே சமச்சீரற்ற போட்டி உருவாகும். எனவே, ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் ஒரு சில நிறுவனங்களின் பொருளை மட்டுமே வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

கட்டணத்தை உயர்த்தினால்..!

ஆப்ஸ் நிறுவனங்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்க முன்வராது என்பதால் இணையதளச் சேவைக் கட்டணங்களை உயர்த்த முடிவு செய் தாலும் மக்களுக்குத்தான் பாதிப்பு. அதாவது, இனி செல்போனை பயன்படுத்த மாதாந்திர சேவைக்காக அடிப்படை கட்டணம் 150 ரூபாய், கூகுள், யாகூ போன்ற தேடுதல் தளங்களுக்கு மாதமொன்றுக்கு 18 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம், வாட்ஸ்அப், வீசாட் போன்ற உடனடி ஆப்ஸ்கள் 80 ரூபாய் என்கிற மாதிரி  கட்டணம் விதிக்கப்பட்டால் சாதாரண மனிதன் அதை கட்டித்தானே ஆகவேண்டும்? இவை தவிர, இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆப்ஸில் பர்சேஸ் செய்ய அனைவரையும் பழக்கிவிட்டன. அதன் கட்டணம் 50 ரூபாயைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆக, மாதமொன்றுக்கு  800 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய நிலைமை பலருக்கும் உருவாகலாம்.

ஒருவர் ஒரு மாதத்தில் ஒருசில முறை மட்டுமே யூ-டியூப் பார்க்கிறார். ஒரு சிலமுறையே மட்டுமே ஸ்கைப்பில் பேசுகிறார் எனில், அதற்காக ஏன் 1,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் செலவழிக்க வேண்டும்? சாதாரணமாக 200 முதல் 300    ரூபாய்க்குள் இந்த அனைத்து சேவைகளையும் பயன்படுத்தி வந்த மக்களுக்கு 1,000 ரூபாய் பெரிய தொகையாக இருக்குமே என பலரும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ட்ராய் அமைப்பானது உடனடியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல், மக்களின் கருத்துக்களை அறிந்துகொண்டபிறகு ஒரு நல்ல முடிவை எடுக்க உத்தேசித்திருக்கிறது. ஆனால், ட்ராய் அமைப்பானது, இணையதள சமநிலையை வலியுறுத்தும் முடிவையே எடுக்க வேண்டும் என்றே மக்கள் நலனில் அக்கறை கொண்ட பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.  இணையதளச் சேவையானது எல்லோருக்கும் சமநிலையில் கிடைத்தால் மட்டுமே அதனைப் பயன்படுத்தி எல்லோரும் பொருளாதார ரீதியில் முன்னேற முடியும்.

எனவே, இந்த விஷயத்தில் செல்போன் சேவை தரும் நிறுவனங்களுக்கு ஆதரவான முடிவை எடுப்பதைவிட மக்கள் நலனுக்கு சாதகமான முடிவையே ட்ராயும் அரசாங்கமும் எடுக்க வேண்டும். டிஜிட்டல் இந்தியா, அனைவருக்கும் இணையதள சேவை என்று மார்தட்டி கொள்ளும் அரசு இந்த பிரச்னையை சரியாக கையாண்டால்தான் சமநிலை உண்டாகும் என்பதே நம் கருத்து.

இதுநாள் வரை நீங்கள் இலவசமாகப் பயன் படுத்திய ஆப்ஸ்களை இனி கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்றால், அதனால் உங்களுக்குப் பாதிப்புதானே! இந்த கட்டணத்துக்கு எதிராக, அதாவது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக, ட்ராய் கேட்கும் 20 கேள்விகளுக்கும் உங்கள் பதிலைப் பதிவு செய்து advqos@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். இதனால் நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு பெருகும். இல்லாவிட்டால் மிகச் சிலர்  சொல்லும் கருத்தை வைத்து ட்ராய் அமைப்பானது தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.

நெட் நியூட்ராலிட்டிக்காக ட்ராய் கேட்டுள்ள 20 கேள்விகளுக்கு நாணயம் விகடன் மூலமாகவும் நீங்கள் பதிலளிக்கலாம். http://bit.ly/WriteToTRAI என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்கள் பதில்களை பதிவு செய்யுங்கள்!

விதிமுறையை மீறியதா ஏர்டெல்?

நெட் நியூட்ராலிட்டி பற்றி சர்ச்சை மும்முரமாக நடந்துவரும் வேளையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ‘ஏர்டெல் ஜீரோ’ திட்டத்தின் மூலம் ஆப்ஸ்களில் சிலவற்றை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரானது எனச் சேவை நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் குறைந்த விலையில் மார்க்கெட்டிங் வாய்ப்புகளை வழங்கியதன் மூலம் நெட் நியூட்ராலிட்டி விதிமுறையை மீறியுள்ளதாக அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த பிரச்னையை பரிசீலனை செய்துவருவதாகவும், விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் ட்ராய் கூறியுள்ளது.
ச.ஸ்ரீராம்




 
 

ரயில்கள்! - உலகை மாற்றிய புதுமைகள்!

இன்றைக்கு சென்னையிலிருந்து மதுரைக்கு போவதாக இருந்தாலும் சரி, கோவைக்கு செல்வதாக இருந்தாலும் சரி, அனைவரின் ஒரே தேர்வாக இருக்கின்றன ரயில்கள். இன்றைக்கு அத்தனை பேரும் விரும்பும் ரயில்கள், அவை வழக்கத்துக்கு வந்த காலத்தில் எல்லோரும்  பார்த்து பயந்து ஓடிய சுவாரஸ்யமான வரலாறும் இருக்கவே செய்கிறது. ரயில்கள் தண்டவாளத்தில் ஓடியதைப் பார்த்து நமக்கு ஆபத்து வந்துவிடும் என்றுதான் மனிதர்கள் நினைத்தார்கள்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல் பாலங்களில் வண்டிகளை இழுத்தும் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் மனிதன். 13-ம் நூற்றாண்டில் ஆஸ்த்ரிய நாட்டு மன்னர்கள் தங்களது பயணங்களுக்கு மரத்தாலான ரயில்களைப் பயன்படுத்தியுள்ளனர். மனிதர்கள் மற்றும் விலங்குகளை இதனை இழுக்க பயன்படுத்தினர்.

1769-ல் ஜேம்ஸ் வாட் நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தபின் இரும்பினால் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. ரயில் இன்ஜினும் பெட்டிகளும் எளிதாக நகர்வதற்காக ரயில் தண்டவாளங்களும் இரும்பினாலேயே தயார் செய்யப்பட்டன.

முதலில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட ரயில் இன்ஜின் வழக்கத்துக்கு வந்தன. இங்கிலாந்திலிருந்து வேல்ஸ்க்கு சரக்கு கொண்டு செல்ல இந்த ரயில்கள் பயன்படுத்தப் பட்டன. பிற்பாடு பயணிகளை அழைத்துச் செல்லும் போக்குவரத்து வாகனமாகவும் மாறியது.

நிலக்கரியில் ஓடிய ரயில் பிறகு டீசலில் ஓடத் துவங்கி, இன்றைக்கு மின்சார ரயிலாக மாறிவிட்டது. ரயில் தொழில்நுட்பம் கடந்த அரை நூற்றாண்டுகளில் கண்ட அசூர வளர்ச்சியின் காரணமாக, இன்றைக்கு மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் மின்னலாக பறக்கும் புல்லட் ரயில்கள் பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டன. அடுத்த பத்து ஆண்டுகளில் புல்லட் ரயில்கள் இந்தியாவிலும் ஓடும் என்றே எதிர்பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல இன்றுவரை ரயிலைத் தவிர வேறு  வாகனம்  உருவாகவில்லை என்பதே உண்மை!
ச.ஸ்ரீராம்

ஹுவாய் ஹானர் 6 பிளஸ் (Huawei Honor 6 Plus)

சமீப காலமாக ஹுவாய் நிறுவனம் தனது குறைந்த விலை + அதிகத் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் போன்களைத் தயாரிப்பதன் மூலம் தனக்கான இடத்தை ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் பிடித்துள்ளது.

 டிசைன்!

ஹுவாய் ஹானர் 6 பிளஸின் டிசைன் ஆப்பிள் ஐபோன் 4 டிசைனுக்கு இணையாக உள்ளது. பின்புறம் முழுவதும் கிளாசைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓரங்கள் முழுவதும் மெட்டலைக் கொண்டுள்ளது. 7.5 மி.மீ அடர்த்தியுள்ள இந்த ஸ்மார்ட் போனின் எடை 165 கிராம்.


ஸ்டோரேஜ்!

ஹானர் 6 பிளஸ், 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. மேலும், 128 GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

 டிஸ்ப்ளே!

ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் 5.5 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. 1080 x 1920 pixels 401 ppi கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே, சிறப்பான கலர்களைக் காண்பிக்கும் திறனைக் கொண்டுள்ளது. வெளிச்சத்திலும் சிறப்பாகச் செயல்படும் இந்த டிஸ்ப்ளே, பாதுகாப்புக்காக      ‘Corning Gorilla Glass 3’-யையும் கொண்டுள்ளது.

 இயங்குதளம்!

ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டின் கிட்-கேட் 4.4.4 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும், ஹுவாய் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘EMUI’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். முந்தைய EMUI டிசைனைவிட இது கச்சிதமாக இருக்கிறது.


 தொழில்நுட்பம்!

ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் Kirin 925 1.3 GHz octa-core SoC சிப் செட்டைக் கொண்டு இயங்குகிறது. இந்த அதிநவீன சிப் செட்டில் நான்கு Cortex A7core 1.3GHz மற்றும் நான்கு Cortex A15core 1.8GHz பிராசஸர்கள் அடங்கும். மேலும், Mali-T628 MP4 என்ற பிரத்யேகமான கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். இந்த ஸ்மார்ட் போன் 3GB ரேம்மை கொண்டு இயங்குகிறது.

 கேமரா!

ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் பின்புறத்தில் இரண்டு 8 MP கேமராக்களை அருகருகில் கொண்டுள்ளது. இந்த இரு கேமராக்களும் ஒன்றாகச் செயல்படக்கூடியவை. இது குறைவான வெளிச்சத்தில் தெளிவான படங்களை எடுக்கும் ஆற்றலை உடையது. இந்த இரு கேமராக்கள் 13 MP படங்களை எடுக்கும் திறனை பெற்றுள்ளன. மேலும், இந்தக் கேமராக்களைக் கொண்டு 1080 P வீடியோக்களை எடுக்கலாம். முன்புறத்தில் உள்ள 8MP கேமராவைக் கொண்டு சிறப்பான செல்ஃபிக்களை எடுக்கலாம்.

 பேட்டரி!

ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் 3600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களின் ‘Flag Ship’ ஸ்மார்ட் போன்களின் பேட்டரியைவிட திறன் அதிகம்.

 விலை!

டூயல் சிம் 3G வசதியுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனின் இந்திய விலை ரூபாய் 26,499.

பிளஸ்:
* கேமரா.
* சாஃப்ட்வேர்.
* பேட்டரி.

மைனஸ்:
* விலை.

Sunday, April 05, 2015

ஹெச்பி ஸ்ட்ரீம் 11-d023tu

1.டிஸைன்!

ஹெச்பி ஸ்ட்ரீம் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. நீல நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த நோட்புக், மிகவும் புதுமை யான டிஸைன் அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் அமைந்துள்ள ‘Mirror Finish’ ஹெச்பி சின்னம் நோட்புக்கின் தோற்றத்தை மேலும் அழகாக்கியுள்ளது. நோட்புக் முழுவதும் மேட் ஃபினிஷால் செய்யப்பட்டுள்ளது. கீபோர்டு முழுவதும் வெள்ளை நிறத்தால் டிஸைன் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பிங்க் நிறத்திலும் இந்த நோட்புக் கிடைக் கிறது. ஆனால், இந்தியாவில் பிங்க் நிற ஹெச்பி ஸ்ட்ரீம் நோட்புக்குகள் விற்கப்படுவதில்லை.


2.தொழில்நுட்பம்!

ஹெச்பி ஸ்ட்ரீம் 11 நோட்புக் டூயல் கோர் Intel Celeron N2840 CPU 2.16 GHz பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த பிராசஸர் குறைவான மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் தன்மையைக் கொண்டது. 2GB ரேம்மைக் கொண்டு இயங்கும் லேப்டாப், 32GB சாலிட் - ஸ்டேட் மெம்மரியைக் கொண்டுள்ளது. SD கார்டு மூலம் மேலும் 32GB வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

3.டிஸ்ப்ளே!

ஹெச்பி ஸ்ட்ரீம் 11 லேப்டாப், 11 இன்ச் 1366x768 ஸ்க்ரீன் ரெசலூஷனைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கிரீனில் டச் வசதி இல்லாததால், ‘Reflective Glass’ ஒன்று இந்த டிஸ்ப்ளே மீது பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே மற்ற நோட்புக்குகளை ஒப்பிடும்போது சுமாராகவே இருக்கிறது.


4.கீ-போர்டு!

இந்த நோட்புக்கின் கீ-போர்டு சிம்பிள் மற்றும் ஸ்டைலாக இருக்கிறது. டச்-பேடு பெரிதாக இருப்பதனால், வாடிக்கையாளர்கள் எந்தச் சிரமமுமின்றி இதைப் பயன்படுத்தலாம்.

5.இயங்குதளம்!

ஹெச்பி ஸ்ட்ரீம் 11 நோட்புக் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8.1 64 பிட் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும், மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 சந்தாவும் இந்த நோட்புக்கோடு இலவசம். தவிர, 1TB ஒன்-டிரைவ் க்ளவ்டு மெம்மரி சேவையும் ஒரு வருடத்துக்கு இலவசம்.

6. இதர அம்சங்கள்!

3G சிம்மை நேரடியாக இந்த நோட்புக்குடன் பொருத்திக்கொள்ளலாம். சுமார் 5 மணி நேரம் வரை பேட்டரியில் தாங்கும் இந்த நோட்புக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த நோட்புக்கின் மொத்த எடை வெறும் 1.27 கிலோதான்.

விலை!
இதன் இந்திய விலை ரூபாய் 21, 312.
பிளஸ்:
* விலை.
* இன்-பில்ட் 3G மோடம்.
* பேட்டரி.
மைனஸ்:
* ஸ்டோரேஜ்.
* சுமாரான தொழில்நுட்பம்.

சுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யாருக்கு எது பெஸ்ட்?

சுகன்யா சம்ரிதி திட்டத்தில் பணவீக்கத்தைவிட சற்று கூடுதலான வருமானம் கிடைக்கும். என்றாலும், நீண்ட காலத்தில் கல்விக் கட்டணங்களை ஈடுசெய்யும் அளவுக்கு வருமானப் பெருக்கம் இந்தத் திட்டத்திலிருந்து கிடைக்குமா என்பது சந்தேகமே!

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பதவி ஏற்றபின் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானதாக பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கான சேமிப்புத் திட்டமாக சுகன்யா சம்ரிதி திட்டம் அமைந்துள்ளது. இதனை தமிழில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்கிறார்கள்.

சாதகங்கள்!

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்) வருமானத்தைவிடச் சற்று அதிகம் கிடைக்கிறது.

முதலீட்டுக்கு வரிச் சலுகை (80சி பிரிவு) இருக்கும் அதேநேரத்தில், வருமானத்துக்கு வரி கட்டத் தேவையில்லை.

18 வயதில் கல்விச் செலவுக்காக 50% தொகையையும், மீதித் தொகையைத் திருமணத்தின்போதும் பெற்றுக்கொள்ளலாம்.

21 வருடத்துக்குமேல் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறாவிட்டாலும், கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படும்.


 

யாருக்கு உகந்தது?

செல்வ மகள் சேமிப்பு என்பது ரிஸ்க் எடுக்க விரும்பாத பாதுகாப்பான முதலீட்டாளர்களுக்கு உகந்ததாக இருக்கும். இதன் வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மாறுதல் களுக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே இருக்கும்.

நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட சற்றுக் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால், நீண்ட காலத்தில் கல்விக் கட்டணங்களை ஈடுசெய்யும் அளவுக்கு வருமானப் பெருக்கம் இதிலிருந்து கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே, ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதே உகந்ததாக இருக்கும்.

 


மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குழந்தைகளுக்காக பிரத்யேகத் திட்டங்கள் உள்ளன. அந்தத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு முன் முதலீட்டைத் திரும்பப் பெற, வெளியேற்றுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் பேலன்ஸ்டு வகை மியூச்சுவல் திட்டங்கள் போன்றே 60% பங்குகளிலும் 40% கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன.

இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வரிவிலக்குப் பெற முடியாது. எனவே, வரிவிலக்கு பெற விரும்புவோர் இஎல்எஸ்எஸ் (ELSS) திட்டங்களில் முதலீடு செய்வது உகந்ததாக இருக்கும். இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகையில் 65 சதவிகிதத்துக்குமேல் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தில் முதலீட்டை மூன்று வருடம் எடுக்க முடியாது. பிள்ளைகளின் படிப்புக்குத் தேவைப்படும் அதிகத் தொகையை ஈடுகட்டும் ரிஸ்க் எடுக்கக் கூடிய முதலீட்டாளர்களுக்கு உகந்ததாக இருக்கும்.

பணவீக்கத்தைக் காட்டிலும் அதிக வருமானம் பெறமுடியும். குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இதனைக் கண்டு கவலைக்கொள்ளத் தேவை இல்லை.

நீண்ட கால அடிப்படையில் ‘சுகன்யா சம்ரிதி’ திட்டத்தைக்காட்டிலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக வருமானம் தரக்கூடியதாக இருக்கும்.
அதிலும் சைல்டு மியூச்சுவல் ஃபண்டுகளைவிட, இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள் அனைத்து காலகட்டத்திலும் அதிக வருமானம் தந்திருப்பதைப் பார்க்கலாம்.