குழந்தைகள் அடம்பிடிக்கலாம்! அம்மா..?
கடந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்க் கல்வி
நடைமுறைப்படுத்தப்பட்டபோது, 'ஆசிரியர்-மாணவர் விகிதம், பள்ளிக் கட்டடம்,
உள்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லாமே சமமாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் அது சமச்சீர்க் கல்வி. இதைப் பொதுப் பாடத்திட்டம் என்றுதான்
சொல்ல வேண்டுமே தவிர, சமச்சீர்க் கல்வி என்று சொல்லக் கூடாது. அனைத்து
வசதிகளை யும் அரசு செய்துவிட்டு, முழுமையான சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த
வேண்டும்’ என்று தொடக்கத்தில் கல்வியாளர்கள் குரல் எழுப்பினர். அதன்
பின்னர், 'சமச்சீர்க் கல்விக்கான முதல் படி’ என்ற வகையில், இந்தத்
திட்டத்துக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.ஆனால், இப்போதைய அ.தி.மு.க. அரசு இந்த முதல் படியையே நிறுத்திவிட்ட
காரணத்தால் சமச்சீர்க் கல்விக்கான மற்ற வசதிகளையும் கேட்டு கோரிக்கை
வைத்தால், அவையெல்லாம் நிறைவேறும் சாத்தியமே இல்லை என்ற கசக்கும் உண்மை
தெளிவா கத் தெரிகிறது. சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்கும் சட்டத்
திருத்தம் முதல் சுப்ரீம் கோர்ட் அப்பீல் வரை தொடர்ச்சியாக அ.தி.மு.க. அரசு
மாணவர்களுக்குத் துரோகம் இழைத்தே வந்திருக்கிறது.
ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் மாறவே இல்லை என்பதற்குச் சாட்சி இந்த
சமச்சீர்க் கல்வி விவகாரம். 'அவர் மாறிவிட்டார்; திருந்திவிட்டார்’ என்று
கட்டியம் கூறியவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா. டாக்டர்
ராமதாஸ், திருமாவளவன், வைகோ, நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன்,
கி.வீரமணி போன்ற தலைவர்களும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கம் உட்பட பல அமைப்புகளும் கேட்டுக்கொண்ட பின்னும்,
மேல்முறையீட்டுக்குச் சென்றது தமிழக அரசு. ஆனால், உச்ச நீதிமன்றமோ தமிழக
அரசின் முகத்தில் கரி பூசிவிட்டது. அதே சமயத்தில், தி.மு.க-வினர் மீது நில
அபகரிப்பு வழக்குகள் போடப்படுவதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம்
அறிவித்த தி.மு.க., மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தனது ஆட்சியில்
கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டத் துக்குச் சமாதி கட்டப்படுவதை எதிர்த்துப்
போராட்டம் அறிவித்து இருக்க வேண்டாமா?
இதுநாள் வரை இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் காத்து வந்த மௌனத்தைக்
கலைத்து, சமச்சீர்க் கல்வியை வலியுறுத்தி யும், முத்துக்குமரன் கமிட்டியின்
109 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்தது. ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க காலக்கெடுவை நீட்டித்து இருக்கிறது உச்ச
நீதிமன்றம். ஆனால், இன்னமும் ஒரு பள்ளியில்கூட பாடப் புத்தகங்கள்
வழங்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இது குறித்து ஆசிரியர்களிடம் பேசியபோது,
''புத்தகம் எப்போது வரும் என்று எதுவுமே தெரியவில்லை. இது குறித்து
அதிகாரிகளிடம் கேட்கவும்கூட எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அரசுக்கு
எதிரான ஆள் என்ற முத்திரை விழுந்துவிட்டால், டிரான்ஸ்ஃபர் மாதிரி ஏதாவது
நடவடிக்கை எடுக்குமோ அரசு என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது.
சமச்சீர்க் கல்வி பற்றி மாணவர்களிடம் பேசக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை
அனுப்பி இருப்பதால், நீதிமன்ற உத்தரவை மாணவர்களிடமோ மற்றவர்களிடமோ
சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள் மத்தியில்
அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்சி காலச் சூழல் நிலவுகிறது. ஆட்சியாளர்களின்
விருப்பங்களையும் கொள்கை களையும் பள்ளிக்கூடத்தில் பின்பற்றும் இழிநிலைக்கு
தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது'' என்று வேதனைப்பட்டார் ஓர் ஆசிரியர்.
கூடுமானவரையில் புத்தகங்கள் வழங்குவதைக் கால தாமதம் செய்கிறது அரசு. உயர்
நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்நேரம் அனைத்துப் புத்தகங்களும் மாணவர்களுக்கு
வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க உச்ச
நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. ஏன் அரசு இன்னும் புத்தகங்கள்
வழங்கும் பணியைத் தொடங்கவில்லை?''இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி புத்தகங்களை முன்பே பதிவிறக்கம்
செய்து வைத்து இருக்கிறோம். ஆனாலும், உத்தரவு வரும் வரை பாடம் நடத்த
முடியாது என்பதால், குழப்பத்துடன் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள் சில
ஆசிரியர்கள். இதற்கிடையே ஏற்கெனவே அச்சிடக் கொடுத்த பழைய பாடப்
புத்தகங்களுக்கான ஆர்டரை அரசு இன்னும் ரத்து செய்யவில்லை. அச்சடிக்கும்
வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.www.textbooksonline.tn.nic.in என்கிற அரசு இணையதளத்தில் இருந்த
சமச்சீர்க் கல்வி நூல்களை இப்போது காணவில்லை. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி
அமலில் இருக்கும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான நூல்களையும் சேர்த்து
நீக்கி இருக்கிறது அரசு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சமச்சீர்க்
கல்விக்கு உச்ச நீதிமன்றத் தின் இறுதித் தீர்ப்பில் தடை வாங்கி விடலாம்
என்று அரசு எதிர்பார்க்கிறதோ என்பது ஆசிரியர்களின் அச்சமாக இருக் கிறது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ''உடனடியாகப் புத்தகங்களை
வழங்காவிட்டால், இது நாள் வரை பொறுமையாக இருந்ததுபோல இனியும் இருக்க மாட்டோம்'' என்று அரசை எச்சரித்து
உள்ளது. விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்கள் அரசைக் கண்டித்து
வகுப்புகளைப் புறக் கணித்துப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
உச்சகட்டமாக, நீதிமன்ற உத்தரவை அவமதித்த தாக தமிழக அரசுக்கு வக்கீல்
நோட்டீஸும் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்தப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க... தமிழக அரசு செய்த இன்னொரு காரியமும்
மிகுந்த கண்டனத்துக்கு உரியது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின் போது
நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித் தனியே
கொடுத்த கருத்துகளையும் சமர்ப் பிக்க வேண்டும் என்று ஆணை யிட்டது
நீதிமன்றம். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித் தனி அறிக்கைகளையும், இறுதி
அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.'நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்க
வில்லை. சமச்சீர்ப் பாடத்தில் பல திருத் தங்கள் செய்யப்பட வேண்டும்
என்றும், அதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு
சிலர் கூறி உள்ளனர். ஆனாலும், சமச்சீர்க் கல்வியை முற்றிலும் நிராகரிக்க
வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை. அதோடு, பழைய 2004-ம்
ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை.
ஆனால், அறிக் கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவுஅறிக்கை முதல் இறுதி அறிக்கை வரை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்
சபீதாதான் முடிவு எடுத்து உள்ளார். சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது
என்றும், அது தேவையானது என்றும் நிபுணர் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர்
கூறியிருக்கிறார். அவரது முழு கருத்தும் எங்களிடம் தாக்கல் செய்யப்பட்ட
இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை. சமச்சீர்க் கல்வியின் ஆக்கபூர்வமான
விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இவையெல்லாம் இல்லா மல்
அரசின் கருத்து மட்டுமே இறுதி அறிக்கையாக வந்திருக்கிறது'' என்று தனது 81
பக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது நீதிமன்றம்.
ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்காமல், தன்
இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு. இது மக்களையும்
நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம்
மன்னித்தாலும், மக்கள் மன்றம் மன்னிக்கப் போவது இல்லை!
முடிவுக்கு வராத மு.க. கலாட்டா!
கருணாநிதிக்கு அடுத்த இடம் அண்ணன் அழகிரிக்கா... தம்பி
ஸ்டாலினுக்கா என்ற கலாட்டா வுக்கு இன்று வயது 15. கோவையில் கடந்த வாரம்
நடந்த பொதுக் குழுவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று
எதிர்பார்த்தான் தி.மு.க. தொண்டன். ஆனால், மீண்டும் கால் புள்ளி, அரைப்
புள்ளிவைத்து வந்த கருணாநிதி, மீண்டும் முக்கால் புள்ளிதான் வைத்தார்!
'ஸ்டாலினை முதல்வர் ஆக்குங்கள். கலைஞர் கட்சித் தலைவராக இருந்து வழி
நடத்தட்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே குரல்
கொடுத்து வந்தார்கள். 'ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பு காத்திருக்
கிறது’ என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார்
கருணாநிதி. பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று
எதிர்பார்த்தார் ஸ்டாலின். ஆனால், பேராசிரியர் அன்பழகனைக் காயப்படுத்திய
காரணத்தால், ஆற்காடு வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர்
பதவிதான் ஸ்டாலின் வசமானது. தம்பிக்கு சாக்லேட் கொடுக்கும்போது எல்லாம்
அண்ணனுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டும் அல்லவா? தென் மண்டலச் செயலாளர் ஆனார்
அழகிரி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதும், ஸ்டாலினுக்குத் துணை
முதல்வர் பதவி தரப்பட்டது. அடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் அடைய இரண்டே
இரண்டு நாற்காலிகள்தான் இருக்கின்றன. அது, கருணாநிதி உட்கார்ந்திருக்கும்
தலைவர் பதவி. அன்பழகன் அமர்ந்திருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு. இந்த
இரண்டைக் குறிவைத்த மியூஸிக்கல் சேர் விளையாட்டில், ஸ்டாலினும் அழகிரியும்
மட்டும் சுற்றி வர... மற்ற நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான்
தி.மு.க-வின் செயற் குழு, பொதுக் குழுவாக மாறிப்போனது!
கோவையிலும் அதேதான். வழக்கம்போல, நாற்காலியை கருணாநிதியும் அன்பழகனுமே மடக்கி எடுத்துச் சென்றுவிட்டார் கள்! செயல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர் என்ற பெயரில் ஏதாவது ஒரு பதவியை
ஸ்டாலினுக்குத் தந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள்
எதிர்பார்த்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்னால் நடந்த இளைஞர் அணி மாவட்ட
அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் 'தளபதிதான் தலைவராக வேண்டும்’
என்று பேசினார்கள். 'இது எல்லாம் பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயம்’
என்று ஸ்டாலின் அப்போது சமாதானம் சொன்னார். அதை கருணாநிதியிடம் போட்டுக்
கொடுத்த நல்ல மனிதர் ஒருவர், 'தன்னைத் தலைவராக்கச் சொல்லி பொதுக் குழுவில்
பேச ஸ்டாலின் தூண்டிவிட்டார்’ என்று சொல்ல... கருணாநிதிக்கு முகம் சிவக்க
ஆரம்பித்தது. 'நீ ஒருத்தன்தான் எனக்கு மனக் கஷ்டம் கொடுக்காதவன் என்று
நினைத்தேன். ஆனால், நீயே இப்படிப் பேசலாமா?’ என்று கருணாநிதி கேட்க...
ஸ்டாலின் அதற்குச் சமாதானம் சொல்ல... தந்தை, மகன் இடையே 10 நாட்கள் சரியான
பேச்சுவார்த்தைகூட இல்லை.'ஸ்டாலினை இப்போதே தலைவராக அறிவித்தால்தான், பின்னால் குழப்பம் இல்லாமல்
இருக்கும்’ என்று சிலர் தூண்டி னார்கள். அதனால் செயல் தலைவர் அந்தஸ்துகூட
அவருக்குத் தரப்படலாம் என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இது
மதுரையில் இருந்த அழகிரிக்கு மன வருத்தம் கொடுத்தது. 'பொதுக் குழுவுக்கு
நானும் வர மாட்டேன். நீங்களும் போக வேண்டாம்’ என்று அழகிரி உத்தரவு போட்டு
இருக்கிறார் என்ற செய்தியைக் கிளப்பியதே மதுரை நிர்வாகிகள்தான்.
ஸ்டாலினுக்கு மீண்டும் உயர்வு என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொரு
நபர், ராஜாத்தி அம்மாள். மகள் கனிமொழிக்குப் பிடிக்காத ஸ்டாலின் கட்சித்
தலைவர் ஆனால், கனிமொழியின் எதிர்காலத்தையே இது கேள்விக் குறியாக்கும் என்று
நினைத்தார். இந்த கலாட்டாவில் அழகிரியும் ராஜாத்தி யும் ஒன்றாக,
ஸ்டாலினுக்கான நாற்காலி தட்டிப் பறிக்கப்பட்டது.
'நீங்க பொதுக் குழுவுக்கு வராமல் போனால், ஸ்டாலினுக்கு அதுவே வசதியாகப்
போய்விடும்!’ என்று சென்னையில் இருந்து அழகிரிக்கு ஒரு தகவல்
சொல்லப்பட்டது. அதன் பிறகே உஷாரான மனிதர், கோவை வந்து இறங்கினார். கனிமொழி
கைதானது முதல் டெல்லியிலேயே தங்கிவிட்ட ராஜாத்தி அம்மாளும் கோவை வந்து
கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் இடம் பிடித்தார். ஸ்டாலின் நினைப்பு
மொத்தமாகப் பணால் ஆனது.''நான் உனக்கு அப்பாவாக மட்டுமா இருக்கிறேன்? நான் உன்னுடைய கட்சியின்
தலைவராக இருக்கிறேன். நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாய். அதனால்தான்
மாநகராட்சி மன்றத்திலே உன்னை மேயராக்கி, உனக்கு தங்கச் சங்கிலி அணிவித்து,
மேயருக்கு உரிய உடையைப் பூட்டி அழகு பார்த்தேன். இது எனக்குப் புரிகிறது.
ஸ்டாலினுக்குப் புரிகிறது. சில நண்பர்களுக்குத்தான் புரியவில்லை!'' என்று
கருணாநிதி சமாதானம் சொல்லும்போது, பொதுக் குழுவில் இருந்த ஸ்டாலின் முகம்
கடுப்பால் சிவந்தது. பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாத்தியே... கவலை
மறந்து சிரித்துவிட்டார். ஆனால், இதைப் பார்க்க அழகிரி கோவையில் இல்லை.
மதியத்துக்கு மேல் மதுரைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.
''ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவியை விட்டுத்தர கலைஞர் தயாராக இல்லை. இதை
அவரால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. 'உனக்குக் கொடுத்தால்
அழகிரியும் கேட் பான்’ என்று காரணம் சொல்வது; 'உன்னைத் தலைவராக ஆக்கி னால்,
ராஜாத்திக்குப் பிடிக்காது’ என்று சொல்வது; இப்படிப் பல காரணங்களை அவரே
சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார். கலைஞர், தனக்குப் பிறகு
இன்னார்தான் தலைவர் என்பதை உடனே அறிவித்தாக வேண்டும். இதில்தாமதம் செய்யச்
செய்ய... கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். இப்போதே கட்சியில்
யாரும் யார் பேச்சையும் கேட்பது இல்லை. இது இன்னும் சில மாதங்களுக்குத்
தொடர்ந்தால், உள்ளாட்சித் தேர்தலின்போதே பல ஊர்களில் பிரளயம் வெடிக்கும்!''
என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஒருவர்...''ஸ்டாலின் முழுமையான தகுதியை அடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால்,
கலைஞருக்கு அடுத்து தலைவர்ஆகும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது.
அதையும் புறக்கணித்தால், தலைமை அற்ற கட்சியாக கழகம் மாறிவிடும்!'' என்றார்.
ஆனால், இதனை அழகிரி ஆட்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 'ஸ்டாலினுக்கு
செயல் தலைவர் பதவி கொடுத்தால், நீங்கள் கட்சியைவிட்டு விலகுங்கள்!’ என்று
அழகிரிக்கு ஆலோசனைகள் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. இந்த சைக்கிள்
கேப்பில் கனிமொழிக்கு தலைமைக்கான தகுதி இல்லையா என்று ராஜாத்தி
தூண்டுதலுடன் இன்னொரு அணி களத்தில் குதித்து உள்ளது.
''விரைவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியில் வருவார். கலைஞரின் எழுத்து,
பேச்சுத் திறமைகொண்ட வாரிசு இவர் மட்டுமே என்பதை நிரூபிப்பார். சிறையில் இருந்தபோது கிடைத்த அனுதாபங்களை மூலதனமாகக்கொண்டு அவரைத் தலைவர் ஆக்கலாம்'' என்கிறார்கள்
ராஜாத்தி ஆதரவாளர்கள். நெல்லை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சாளர்
வாகை முத்தழகன் இதற்கான ஆரம்பத்தைச் செய்துவிட்டார். சில மாவட்டச்
செயலாளர்களின் ஆதரவை இதை நோக்கித் திருப்பும் காரியத்தையும் ராஜாத்தி
செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.உள்கட்சிக் கலவரங்களுக்கும் தலைமைக்கான போட்டிக்கும் மத்தியில் ரத்தம்
சிந்திய சம்பவங்கள் தி.மு.க-வில் ஏராளமாக நடந்து உள்ளன. இந்த கடந்த காலத்
தவறுகளில் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரும் எந்தப்
பாடத்தையும் படிக்கவில்லை என்பது அவர்களது தவறு அல்ல. அதை சொல்லித் தராத
கருணாநிதியின் தவறுதான்!
நன்றி - விகடன்