நம் செரிமான மண்டலத்தின் முதல் உறுப்பும் முக்கிய உறுப்புமாக இருப்பது வாய்தான். சமையல் அறையில் பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. ஹாலில் இருக்கும் நமக்குப் பிரியாணி வாசனை மூக்கைத் துளைக்கிறது. பிரியாணியைப்
பார்த்ததும் நம் மூக்கும் கண்களும் மூளைக்குச் செய்தி அனுப்புகின்றன.உடனே, வாயில் உமிழ்நீர் சுரக்கிறது. வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம்
சுரக்கிறது. உணவைச் செரிப்பதற்குத் தேவையான அத்தனை நொதிகளும் சுரக்கத்
தொடங்குகின்றன. உணவுச் செரிமானத்தின்
முதல் கட்டம் வாயில்தான் தொடங்குகிறது. வாய்க்குள் போகும் உணவுப்
பொருள்கள், தாடையாலும், பற்களாலும், நாக்காலும் நொறுக்கப்படுகின்றன;
அரைக்கப்படுகின்றன. இவ்வாறு அரைக்கப்பட்ட உணவுடன் உமிழ்நீர்
கலக்கிறது. உமிழ்நீரில் ‘அமைலேஸ்’ எனும் நொதி உள்ளது. இது உணவில் உள்ள
‘ஸ்டார்ச்’ எனும் மாவுப்பொருளை ‘மால்டோஸ்’ எனும் இரட்டைச் சர்க்கரைப்
பொருளாக மாற்றி, உணவுச்
செரிமானத்தை ஆரம்பித்து வைக்கிறது. ‘மியூசின்’ எனும் வேதிப்பொருள் உணவைக்
கூழாக்குகிறது. இப்படிக் கூழான உணவானது தொண்டைக்குள் தள்ளப்படுகிறது. உணவை அரைப்பது, உமிழ்நீரைச் சுரப்பது, ஸ்டார்ச்சைச் செரிமானம் செய்வது,
உணவை விழுங்குவது ஆகியவைதான் வாயின் முக்கியப் பணிகள். இப்பணிகளைச் செய்ய
முடியாதபடி சில
பிரச்னைகள் வாய்க்கு வரலாம். அவற்றுள் முதன்மையானது, வாய்ப்புண்.
நம் அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படக் கூடியதுதான், வாய்ப்புண். ஆனால், அதைக்
கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் பிரச்னை பெரிதாகி விடும். கடுகளவு
தோன்றும்
கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக
மாறும். அப்புண்களில் வலி உண்டாகும். கழுத்தில் நெறிகட்டும். காய்ச்சல்
வரும். நாக்கு எரியும். உணவைச் சரியாகச்
சாப்பிட முடியாது. வாய்ப்புண் வருவதற்கு முக்கியக் காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு. இதிலும்
குறிப்பாக, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் - B2 மற்றும் B12
சத்து, புரதச் சத்து முதலியவை குறையும்போது
ரத்த வெள்ளையணுக்கள் குறைந்து, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி
குறைந்துவிடும்; ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து, ரத்தசோகை நோய்
ஏற்படும். அப்போது வாய்ப்புண் வரும். அதிகமாகக் கவலைப்பட்டாலும்
வாய்ப்புண் வரும். தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு மன அழுத்தம்
அதிகரிப்பதால் வாய்ப்புண் வருகிறது. கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள்
கன்னத்தைக் குத்திப்
புண்ணாக்கும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் வாயின்
உறுப்புகளைப் பாதிக்கும்போது வாய்ப்புண் வரும். ‘ஆன்டிபயாடிக்’ போன்ற சில மருந்துகள் மற்றும் சில ஒப்பனைப்பொருள்களின்
ஒவ்வாமை காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு. பல் ஈறுகளில் ஏற்படுகிற
குறைபாடுகளும் வாய்ப்புண்ணுக்கு வழி
அமைக்கும். புகைபிடிப்பதாலும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதாலும்
வாய்ப்புண் அடிக்கடி வரும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு அங்குச்
சுரக்கும் அதீத
அமிலம் படுத்துறங்கும்போது உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும்.
இதன் விளைவால் தொண்டை மற்றும் வாயில் புண்கள் ஏற்படுவதுண்டு. பற்களுக்குக்
‘கிளிப்’ பொருத்தப்படும்போது
ஆரம்பத்தில் வாயில் புண்கள் உண்டாகும். செயற்கைப் பற்கள் சரியாகப்
பொருந்தவில்லை என்றாலும் அடிக்கடி வாயில் புண்கள் வருவதுண்டு. உடலில் வைட்டமின் - B2 பற்றாக்குறை ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது,
வாதான். அதிலும் குறிப்பாக உதடு, நாக்கு, வாய் ஓரங்களில் புண்கள்(Angular
stomatitis) உண்டாகும். நாக்கு சிவந்து வீங்கும். நாக்கு பிசுபிசுப்பாக
இருக்கும். இந்த நிலைமையில்
சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு அல்லது வைட்டமின்- B2 கலந்த மருந்துகளைச்
சாப்பிட்டு இந்தப் பற்றாக்குறையைச் சரி செய்யவில்லை என்றால், உதட்டில்
வெடிப்புகள்
உண்டாகும். உதடும் நாக்கும் செந்நிறமாக மாறும். உதட்டின் மேற்புறம்
வெடிப்புகளும் புண்களும் தோன்றும்.
இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் குறைபாடுகளைச் சரி செய்தால்,
சத்துக்குறைவு காரணமாக வரும் வாய்ப்புண்ணை நிச்சயம் தவிர்க்கலாம்.
குறிப்பாகச் சொன்னால் வெல்லம், பேரீச்சை, தேன்,
பச்சைநிறக் காய்கறிகள், கீரைகள், பச்சைப்பட்டாணி, சோயாபீன்ஸ், நிலக்கடலை,
இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்து மிகுந்துள்ளது. பால், வெண்ணெய், நெய்,
பாலாடைக்கட்டி, கைக்குத்தல் அரிசி, தீட்டப் படாத
கோதுமை, கேழ்வரகு போன்றவற்றில் வைட்டமின் - B2 மிக அதிகம். இறைச்சி, மீன்,
முட்டை, ஈரல் ஆகிய அசைவ உணவுகளில் வைட்டமின்- B12 அதிக அளவில் உள்ளது.
முளைகட்டிய பயறுகள், பருப்புவகைகள், பால் பொருள்கள் ஆகியவற்றில்
புரதச்சத்து அதிகமுள்ளது. இந்த உணவுகளில் ஒன்று மாற்றி ஒன்றைத் தினமும்
சாப்பிட்டால் வாய்ப்புண் வருவதற்கு வாய்ப்பு குறையும். வாய்ப்புண்ணுக்கு
ஏன் இவ்வளவு
முக்கியத்துவம் தர வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். நாள்பட்ட
வாய்ப்புண்கள் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது.சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய்
கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாயில் நாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படைக்
காரணங்கள். பற்களில் சொத்தை இருந்தாலும், பல்
ஈறுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வாய்ப்புண் இருந்தாலும் துர்நாற்றம்
வரும். பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகமுள்ளவர்களுக்கு உணவுத்துகள்கள்
பற்களுக்கு இடையில் சொருகிக் கொள்ளும்
வாய்ப்பு அதிகம். இவர்கள் ‘இன்டர்டென்டல்’ பல்துலக்கியைப் பயன்படுத்தினால்
உணவுத் துகள்கள் வெளியில் வந்துவிடும். தரமான ‘மவுத் வாஷ்’ கொண்டு வாயைக்
கொப்பளித்தால், வாய்நாற்றம் மறையும்.
* உணவில் ஊட்டச் சத்துகள் உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
* வாய் சுத்தம் காத்தால் வாய்ப்புண் வருவதை நிச்சயம் தடுக்கலாம்.
சாப்பிட்டு முடிந்ததும் நன்றாக வாயைக் கொப்பளித்துச் சுத்தப்படுத்த
வேண்டும்.
* புகை பிடிக்கக்கூடாது. புகையிலை, வெற்றிலை போடக்கூடாது. பான்மசாலா ஆகாது.
* தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து உதடும் வாயும் வறண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* செயற்கைப் பல் செட்டினால் பிரச்னை என்றால் உடனே அதை மாற்றிவிட வேண்டும்.
* மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
* புகை பிடிக்கக்கூடாது. புகையிலை, வெற்றிலை போடக்கூடாது. பான்மசாலா ஆகாது.
* தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து உதடும் வாயும் வறண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* செயற்கைப் பல் செட்டினால் பிரச்னை என்றால் உடனே அதை மாற்றிவிட வேண்டும்.
* மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.