Search This Blog

Saturday, September 28, 2013

தொண்டையைப் பாதுகாப்பது எப்படி?

 
கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல்வளையின் கீழ்ப்பகுதிவரை உள்ள குழல் பகுதியைத் ‘தொண்டை’ என்கிறோம். சுமார் 12 1/2 செ.மீ. நீளமுள்ள தொண்டை, நம் உணவுப் பாதைக்கும் சுவாசப்பாதைக்கும் பொதுவான பாதையாக இருக்கிறது. வாயில் தொடங்கும் உணவுப்பாதை தொண்டை வழியாகச் சென்று உணவுக்குழாய் மூலம் இரைப்பைக்குச் செல்கிறது. இதுபோல் மூக்கில் தொடங்கும் சுவாசப்பாதை தொண்டை வழியாகச் சென்று, உணவுக்குழாய்க்கு முன்பக்கமாக, சுவாசக்குழாய் மூலம் நுரையீரலுக்குச் செல்கிறது. இவற்றில், சுவாசப்பாதை எப்போதும் திறந்தே இருக்கும். அதன்வழியாக காற்று போவதும் வருவதுமாக இருக்கும். உணவுப்பாதை எப்போதும் மூடியே இருக்கும்; உணவு சாப்பிடும் போது மட்டும் திறக்கும். உணவு உள்ளே போனதும் மூடிக்கொள்ளும். சுவாசம் தொடரும். 
 
தொண்டையில், சுவாசப்பாதையும் உணவுப்பாதையும் இணைகிற இடத்தில், சுவாசக்குழாயின் வாசலாக ‘குரல் வளை’ இருக்கிறது. இதில் வீணையில் நாண்கள் இருப்பதுபோல் இரண்டு குரல்நாண்கள் உள்ளன. இவற்றின் அசைவினால்தான் குரலோசை ஏற்படுகிறது. பேசுவது, கோபமாகக் கத்துவது, கிசு கிசுப்பாகப் பேசுவது, பாடுவது, ‘மிமிக்ரி’ செய்வது என்று குரலோசையைக் கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் குரல்நாண்கள் மட்டுமல்லாமல், வாய், கன்னம், தொண்டை, டான்சில், மூக்கு, சைனஸ் அறைகள் என்று ஒரு ‘பட்டாளமே’ கூட்டுமுயற்சி செய்கின்றன. மேலும், குரல்வளையானது வெறும் ஓசையை எழுப்புகின்ற வேலையை மட்டும் செய்யவில்லை; சுவாசக்குழாய்க்குள் காற்றை அனுப்புவது, உணவுக்குழாய்க்கு வருகிற பொருள்கள் சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடாதபடி தடுப்பது போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறது.நாம் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று இவை மூன்றும் சுத்தமாக இல்லாவிட்டால், தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டு தொண்டை வலிக்கும். இருமல், காய்ச்சல், கழுத்தில் நெறிகட்டுவது, காதுவலி போன்ற தொல்லைகளும் ஏற்படும். புகைபிடித்தாலும் அடிக்கடி தொண்டைவலி வரும். ‘சமையல் உப்பு + இளம்வெந்நீர்’ கரைசலில் வாயையும் தொண்டையையும் கொப்பளித்தால், ஆரம்பநிலையில் உள்ள தொண்டைவலியைக் குறைக்கலாம். தகுந்த வலிநிவாரணி மற்றும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டால், தொண்டைவலி முழுவதுமாகக் குணமாகும். குழந்தைகளுக்கு வருகிற ஒரு முக்கியமான தொல்லை டான்சில் வீக்கம். தொண்டையில் உள்நாக்குக்கு இருபக்கமும் உள்ள நிணநீர்த்தசைக்கு ‘டான்சில்’ என்று பெயர். இது, காற்றில் வருகிற கிருமிகளை அடையாளம் கண்டு, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுகிறது. ஆகவே, இது உடலுக்குப் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. இருந்தாலும், சில வேளைகளில் நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது டான்சிலும் பாதிக்கப்பட்டு வீங்கிவிடும். அப்போது தொண்டையில் வலி, காய்ச்சல், கழுத்தில் நெறிகட்டுதல், காதுவலி போன்ற தொல்லைகள் ஏற்படும். நோயின் ஆரம்பநிலையில் இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகளே போதும். அடிக்கடி டான்சில் வீங்குகிறது, காது வலிக்கிறது, காதில் சீழ்ப்பிடிக்கிறது, வாந்தி வருகிறது, பசியின்மை போன்றவை தொடருமானால் அறுவை சிகிச்சைதான் தீர்வு. 
 
உணவை உண்ணும்போது, உணவுக்குழாய்க்குள் உணவு செல்லாமல், சுவாசக்குழாய்க்குள் சென்றுவிட்டால், அதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் இறங்கும். அப்போது தொடர்ந்து இருமல் வரும். இதைத்தான் ‘புரையேறுதல்’ என்கிறோம்.
 
பேசிக்கொண்டே உண்பது, அவசரமாக உணவை விழுங்குவது போன்ற காரணங்களால் புரையேறுகிறது. அழுத்தமாக பலமுறை இருமினாலே புரையேறிய பொருள் வெளியேறிவிடும். இல்லாவிட்டால் புரையேறியவரை குனியச் சொல்லுங்கள். அவரது முதுகுப் பக்கமாக நீங்கள் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளையும் அவரது தொப்புளுக்கு மேலே உள்ள வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும் மேல்புறமாகவும் ஒரே அழுத்தாகத் திடீரென அழுத்துங்கள். புரையேறிய பொருள் வெளியேறி விடும்.  குழந்தைகள் விளையாடும்போது கோலி, பலூன், விசில், நாணயம், ஊக்கு, மாமிச எலும்பு, ஸ்குரூ என்று எதையாவது ஒன்றை விழுங்கிவிடுவார்கள். அது தொண்டையில் மாட்டிக் கொள்ளும்போது சுவாசம் தடைபடும். எக்ஸ்-ரே மற்றும் சி.டி. ஸ்கேன் மூலம் தொண்டையில் அடைத்துள்ள பொருட்களைத் தெரிந்து கொள்ளலாம். பொருளை விழுங்கியது சின்னக் குழந்தையாக இருந்தால், அதன் காலைப் பிடித்துத் தலைகீழாகத் தொங்கவிட்டபடி முதுகில் தட்டினால், தொண்டையில் உள்ள பொருள் வெளியில் வந்துவிடும். பொருள் வெளிவரவில்லை என்றால், மருத்துவரிடம் செல்ல வேண்டும்.தொண்டையில் உள்ள தசைகள் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது விறைப்பாக இருக்கும். தூங்கும்போது தளர்ந்துவிடும். ஆழ்ந்த தூக்கத்தில் இவை சுவாசக்குழாயில் சரிந்து அழுத்தும். இதனால் சுவாசம் தடைபடும். உடனே சரிந்த தசைகளைத் தள்ளுகிற முயற்சி நிகழும். தொண்டைத் தசைகள் அதிரும். அப்போது ஏற்படுகிற ‘கொர்ர்ர்..’ சத்தம்தான் குறட்டை. சளியுடன் கூடிய மூக்கடைப்பு, டான்சில் வீக்கம், தைராய்டு பாதிப்பு, உடல் பருமன், கழுத்தில் கொழுப்பு அதிகமாகச் சேருவது, மதுப்பழக்கம், புகைப்பழக்கம போன்றவை குறட்டைக்கு வழிவகுக்கும். குறட்டைத் தொல்லை உள்ளவர்கள் மல்லாக்கப் படுக்காமல், ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால், குறட்டையின் அளவு குறையும்.
 
தொண்டையைப் பாதுகாக்க...

தினமும் ஒருமுறையாவது உப்பு போட்ட வெதுவெதுப்பான தண்ணீரில் கொப்பளிப்பது நல்லது. அதிகச் சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ எதையும் சாப்பிடக்கூடாது; அருந்தக் கூடாது. மிதமான சூடுதான் தொண்டையைப் பாதுகாக்கும். நன்றாகப் பல் துலக்குவது, சாப்பிட்ட பிறகு வாயைக் கொப்பளிப்பது போன்றவற்றால் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். வாய்ச்சுத்தம் தொண்டைப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். புகைபிடிப்பது, புகையிலை போடுவது, பாக்கு மற்றும் பான்மசாலா மெல்லுவது தொண்டைக்கு ஆகாது. அடிக்கடி உரத்த குரலில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குரலில் மாற்றம், உணவு விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் திணறல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
 

Friday, September 27, 2013

ஓ பக்கங்கள் - காப்பிரைட் சட்டங்களின் முன்னோடி - ஞாநி


நாட்டர்டேம் ஆலயத்தைத் தன் கதைக்களமாக ஆக்கிய பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியூகோ (1802-1885)வின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. உலகிலேயே உயிரோடு இருக்கும்போதே மிக பிரமாண்டமான பாராட்டைப் பெற்ற எழுத்தாளர் அவர்தான். எண்பது வயதை அவர் தொட்டபோது அவரைப் பாராட்டி அரசும் மக்களும் ஒரு திருவிழாவே நடத்தினார்கள். தம் வீட்டு ஜன்னலில் உட்கார்ந்து ஊர்வலத்தைப் பார்வையிட்டார் ஹியூகோ. ஊர்வலம் அவரைக் கடக்க நான்கு மணி நேரம் பிடித்ததாம். பின்னாளில் அவர் இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் இருபது லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். இத்தனைக்கும் ஹியூகோ ஆட்சியாளர்களின் வெறுப்பால், நாட்டை விட்டு ஓடி வேறு நாடுகளில் வசித்துவிட்டு அரசியல் சூழல் மாறிய பின்னர் இறுதிக் காலத்தில் பிரான்சுக்குத் திரும்பி வந்தவர். மன்னராட்சி முறைக்கு எதிராக குடியரசுக் கோட்பாட்டை ஆதரித்த ஹியூகோ, செனட் தேர்தலில் இருமுறை வென்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர். மரண தண்டனை பல நாடுகளில் ஒழிக்கப்படுவதற்கு அவர் எழுப்பிய குரல் காரணம். வசதியானவராக வாழ்ந்தார் ஹியூகோ. அவர் எழுதும் ஒவ்வொரு நாவலையும் புத்தகமாகப் பிரசுரிப்பதற்கு முன்பு ஏலம் விடுவது போல, அதிகத் தொகையைத் தரக்கூடிய பதிப்பாளருக்கே தருவார். பணக்காரரானாலும் ஏழைகள் மீதே அக்கறையுடன் செயல்பட்டார். இறக்கும்போது பல ஆயிரம் பிராங்க்குகளை ஏழைகளுக்காக உயில் எழுதி வைத்தார். தம் உடலை சாமான்யர்களின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கச் சொன்னார். துயரங்களை அதிகம் சந்திப்பவர்கள் கடவுள், மத நம்பிக்கையாளர்களாக மாறுவார்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஹியூகோ சொந்த வாழ்க்கையில் பல துயரங்களைச் சந்தித்தவர். அடுத்தடுத்து அவர் குழந்தைகள் இறந்தன. இளம் மகள் திருமணமாகி கணவருடன் சுற்றுலா சென்றபோது, ஏரியில் மூழ்க, அவளைக் காப்பாற்ற முயன்ற கணவனும் மூழ்கி இருவரும் இறந்தனர். தகவல் தொடர்பு வசதிகள் மிகக் குறைவான அந்தக் காலத்தில் தம் மகள் இறந்த செய்தியை வேறு ஊரில் இருந்த ஹியூகோ, செய்தித்தாளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார். இப்படி பல சோக நிகழ்ச்சிகள் அவர் வாழ்க்கையில் நடந்தபோதும் அவர், ‘மத நம்பிக்கை இல்லாத சுதந்திரச் சிந்தனையாளன்’ என்று தம்மை அறிவித்துக் கொண்டார். ‘நாட்டர்டேம் கூனன்’ நாவல் அவருடைய முதல் நாவல். இதில் ஒரு நாடோடிப் பெண், அவள் காதலிக்கும் இளைஞன், அவளை விரும்பும் பல பணக்கார அதிகாரச் சக்திகள், இவர்களிடையில் நடக்கும் சூழ்ச்சிகள், இத்தனைக்கும் நடுவே மௌனமாக அந்தப் பெண்ணைக் காதலிக்கும் கூனன் என்று பின்னப்பட்ட நாவலில் இறுதியில் நாடோடிப்பெண் தூக்கிலிடப்படுகிறாள். அதற்கு உத்தரவிட்டவனைக் கொன்றுவிட்டு கூனன், இறந்த பெண்ணின் உடலுக்குப் பக்கத்திலேயே நிலவறையில் தன்னையும் புதைத்துக் கொண்டு பட்டினி இருந்து செத்துப் போகிறான். காதல் - அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருக்கும் துயரத்தையே தருகிறது என்பதுதான் நாவலின் அடிநாதம். இந்த நாவல் அனிமேஷன் படமாக இரண்டு பாகங்கள் வெளியாகியிருக்கிறது. எண்ணற்ற மேடை இசை நாடகங்கள் உருவாகியிருக்கின்றன.

இதில் நாட்டர்டேம் கதீட்ரல் எங்கே வருகிறது? கூனன், தேவாலயத்தில் மணி அடிக்கும் ஊழியன். நாடோடிப் பெண்ணுக்கு அவன் அடைக்கலம் தருவது ஆலயத்துக்குள் வைத்துத்தான். கதை நெடுக பல்வேறு சம்பவங்கள் ஆலயத்திலும் அதைச் சுற்றிலுமே நிகழ்கின்றன. இந்த நாவலின் பெரும் வெற்றிக்குப் பின்னர்தான் அதுவரை பராமரிப்பில்லாமல் பாழடைந்து கிடந்த நாட்டர்டேம் ஆலயத்தின் மீது கவனம் குவிந்து அது புதுப்பிக்கப்பட்டது.  நாவலின் இன்னொரு முக்கிய அம்சம் விக்டர் ஹியூகோ தன் காலத்தில் நடக்கும் மாற்றங்களை உணர்ந்து அவற்றையொட்டி தன் கருத்தைத் தெரிவிப்பதாகும். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.‘அச்சகம் சர்ச்சைக் கொன்றுவிடும்’ என்கிறார் ஹியூகோ. அதாவது ‘அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் பரவினால், மத குருமார்களின் செல்வாக்கு குறைந்துவிடும். மக்கள் நேரடியாக விஷயங்களை அறிய ஆரம்பிக்கும் நிலை வந்தால், குருமார்களை நம்பி சார்ந்து இருப்பது தேவையற்றதாகிவிடும்’ என்கிறார். அதேபோல ‘அச்சுக் கலையினால் புத்தகங்கள் பரவப் பரவ, கட்டடக் கலைக்கான மதிப்பு மாறிவிடும்’ என்கிறார். நாட்டர்டேம் கதீட்ரல் உட்பட பல்வேறு அந்தக் காலத்தைய கட்டடக் கலைகளைப் பற்றிச் சொல்லும் ஹியூகோ, மக்களிடையே ஒரு கருத்தைப் பரவச் செய்யும் வடிவமாக அதுவரை கட்டடக் கலை இருந்தது. புத்தகங்களின் பெருக்கத்துக்குப் பின் அது மாறி, இனி ஒவ்வொரு புராதனக் கட்டடமும் நம் ஊரில் இருக்கும் இன்னொரு இடம் என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படும் என்ற ஹியூகோவின் கருத்து இன்று மெய்யாகிவிட்டது. இன்று அந்தக் கட்டடங்கள் எல்லாம் மியூசியமாகவும் டூரிஸ்ட் இடங்களாகவும் மாறிவிட்டன. வேறுவிதமான இடம் எதுவும் இன்று மக்கள் மனத்தில் இல்லை.நாட்டர்டேம் ஆலயத்துக்கு 850வது வருடக் கொண்டாட்டம் நடக்கும் இந்தச் சமயத்தில் அதற்குப் புத்துயிர் கொடுத்த விக்டர் ஹியூகோவையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகள் இல்லை. காரணம் ஹியூகோ மதத்தை விட்டு வந்துவிட்டவர். ஆனால் ஆலயம் மதத் தலைமையின் முக்கியக் கேந்திரமாக இருந்து வருகிறது.ஓவியர், அரசியல்வாதி, எழுத்தாளர், இசைப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட ஹியூகோதான் காப்பிரைட் சட்டங்களுக்கும் முன்னோடியாக வேலை செய்தவர். ‘ஒரு படைப்பின் உரிமை இரண்டு பேருடையது. ஒருவன் எழுத்தாளன், இன்னொருவர் மக்கள். மக்களின் குழப்பமான உணர்வுகளைத் தான் எழுத்தாளன் படைப்பாக்குகிறான். அதன்பின் அதை மக்கள் படித்து தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே இருவரில் ஒருவர் இறந்தால், மற்றவருக்கே காப்பிரைட் உரிமை செல்ல வேண்டும்’ என்று சொன்னவர் ஹியூகோ.

மூத்த தமிழ் வாசகர்களுக்கு ஹியூகோவின் இன்னொரு படைப்பு பரிச்சயமானது. அதுதான் ‘லே மிசரபிள்’ எனப்படும் ‘ஏழை படும் பாடு’. சுத்தானந்த பாரதியின் மொழிபெயர்ப்பில் வெளியான இந்த நாவல் படமாக்கப்பட்டது. அதில் இன்ஸ்பெக்டர் ஜாவர் என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றதால்தான் சீதாராமன், ஜாவர் சீதாராமன் ஆனார்.

யுவ்ராஜ் சிங் - தினேஷ் கார்த்திக்


‘இந்த வருட சாம்பியன்ஸ் லீக் இந்தியாவில் நடந்தும், சி.எஸ்.கே. இடம் பெற்றும், ஏன் சென்னையில் ஒரு மேட்ச்கூட நடைபெறவில்லை’ என்று சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். ஐ.பி.எல்.-லின் போது, இலங்கை வீரர்கள் ஆடக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டதால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இப்போது சாம்பியன் லீகில் இலங்கையிலிருந்து ஓர் அணி வந்திருக்கிறது. மற்ற அணிகளிலும் இலங்கை வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் மீண்டுமொரு சர்ச்சை வராமல் இருக்கவே சென்னை தவிர்க்கப்பட்டுள்ளது. அடுத்த வருட ஐ.பி.எல்.-லிலும் இலங்கை வீரர்கள் தொடர்பான சர்ச்சை தொடருமா என்றால் சந்தேகம்தான். காரணம், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எல். இந்தியாவில் நடக்காமல் போகலாம். தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய நாடுகளை மனத்தில் வைத்து, புதிய செயல்திட்டத்துக்குத் தயாராகி வருகிறது பி.சி.சி.ஐ. 

யுவ்ராஜ் சிங் இந்திய அணிக்குத் தேர்வாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து ஏழு ஒருநாள் ஆட்டங்களில் ஆடுகிறது. இதற்கான இந்திய அணியின் தேர்வு 30ஆம் தேதி நடக்கிறது.  மேற்கு இந்தியத் தீவுகள் ‘ஏ’ அணிக்கு எதிராக யுவ்ராஜ் சிங் அற்புதமாக ஆடி தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துவிட்டார். இந்திய அணி, கடைசியாக ஆடிய முக்கியமான ஒருநாள் போட்டிகள் - இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, மேற்கு இந்தியத் தீவில் நடந்த முத்தரப்புத் தொடர். இந்த இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றது. இரண்டு இறுதிப் போட்டிகளிலும் கிட்டத்தட்ட ஒரே அணிதான் ஆடியது. ஒரே ஒரு பௌலர்தான் வித்தியாசம். இந்த நிலையில் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்காது. இரண்டு முக்கியமான வெற்றிகளைக் கொடுத்த அணியை மீண்டும் தொடரவே தேர்வுக்குழு விரும்பும். அதையும் தாண்டி யுவ்ராஜ் சிங்கைத் தேர்வு செய்தால் அவரை எங்கு பொருத்துவார்கள்? 

இந்திய அணியில் - கோலி, தினேஷ் கார்த்திக், ரைனா, தோனி, ஜடேஜா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்கள் தவிர்த்த இதர பேட்ஸ்மேன்கள். இவர்களில் தினேஷ் கார்த்திக்கின் இடம் மட்டுமே இப்போது ஆபத்தான நிலையில் உள்ளது. யுவ்ராஜ் இந்திய அணிக்குள் நுழைந்தால் அதில் 100 சதவிகிதம் பாதிக்கப்படக் கூடியவர் தினேஷ் கார்த்திக் மட்டுமே. மற்ற 4 (மிடில் ஆர்டர்) பேட்ஸ் மேன்களும் இந்திய ஒருநாள் அணியின் தூண்கள். அவர்கள்மீது இன்னும் கொஞ்ச காலத்துக்குக் கைவைக்க முடியாது. யுவ்ராஜ் அணிக்குள் வருவது தோனிக்கும் கூடுதல் சந்தோஷத்தைத் தரும். யுவ்ராஜ் ஒரு ஆல்ரவுண்டர் என்பது மட்டுமில்லாமல் மேட்ச் வின்னரும்கூட. யுவ்ராஜைத் தாண்டவேண்டு மென்றால், தினேஷ் கார்த்திக் இன்னும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.




‘கூகுள் கிளாஸ்’


நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்/ நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்" என்ற கண்ணதாசனின் வரிகள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ‘கூகுள் கிளாஸ்’ எனும் பிரமிக்கத்தக்க நவீன கண்ணாடிக் கருவியை உருவாக்கியிருக்கிறது. இது தற்போது வீட்டு உபயோகம் முதல் விஞ்ஞானம் வரை பயன்படப் போகிறது.
தம் மனைவியின் பிறந்தநாள் பரிசாக ஒரு புடைவை வாங்க அந்தக் கடைக்குள் நுழைகிறார் கணவர். புடைவையை விற்பனையாளர் பிரித்துக் காட்டும்போது பாக்கெட்டிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு வீட்டிலிருக்கும் மனைவியிடம், ‘இது பிடிச்சிருக்கா?’ என்கிறார். கணவர் கூகுள் கிளாஸ் வழியே பார்க்கும் அந்தப் புடைவையை அவர் மனைவி வீட்டிலிருந்தே தம் லேப்டாப்பில் பார்க்கிறார். ‘இதன் பார்டர் சரியில்லை. பின்னால் அலமாரியிலிருக்கும் மயில் கழுத்து கலர் புடைவையைக் காட்டச் சொல்லுங்கள்’ என்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் கூகுளின் உதவியால் இப்படித்தான் ஷாப்பிங் இருக்கப் போகிறது.  

சாதாரண மூக்குக்கண்ணாடி போன்று அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூகுள் கிளாஸில் வலது கண்ணின் விழிக்குமேல் ஒரு நீண்ட செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட லென்ஸும் வலது காதருகில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட குட்டி கம்ப்யூட்டரும் இருக்கிறது. அணிந்து கொண்டிருப்பவர் பார்ப்பதை இந்த கம்ப்யூட்டர் அதன் தொடர்பிலிருக்கும் கம்ப்யூட்டர்களின் திரைகளில் காட்டுகிறது. இந்தக் குட்டி கம்ப்யூட்டருக்கு கட்டளைகளை கூகுள் கண்ணாடி அணிந்திருப்பவர் குரல் மூலம் கொடுக்கலாம். இதனால் அவர் பார்ப்பதை அவர் விரும்புபவர் பார்க்கச் செய்யலாம். அடுத்த ஆண்டு மார்க்கெட்டுக்கு வரப்போகும் இந்த கூகுள் கண்ணாடிக் கருவி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பரிசோதனையில் இருந்தது. உலகின் பல பகுதிகளில் 8000 பேர்களுக்கு வழங்கி அவர்களின் கருத்தைக் கேட்டுச் சிறப்பாக வடிமைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
முதல் கட்டமாக 2000 பேருக்குக் கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் சிவா திருமழிசை. சென்னையிலுள்ள ‘லைப்லைன்’ மருத்துவமனையின் தலைவர் ராஜ்குமார் அவரது நண்பர். அவரை அணுகியபோது மருத்துவத்துறையில் புதிய டெக்னாலஜியை விரும்பும் அவர் உடனே சம்மதித்தார். கூகுள் கிளாஸ் அறிமுக நிலையில் இருப்பதால் சில நிமிடங்கள் மட்டுமே பார்க்கும் வசதியைக் கொண்டிருந்த தொழில்நுட்பத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து, அரை மணிக்கும் மேல் பார்க்கும்படி மாற்றி அமைத்தார். டாக்டர் ராஜ்குமார் அதை அணிந்து கொண்டு இரண்டு ஆப்ரேஷன்களைச் செய்தார். இதை கூகுள் கிளாஸ் வழியே பெரிய திரையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பத்திரிகையாளர்களும் பார்த்தனர்.
ஆபரேஷன் செய்யும்போது நான் பார்க்கும் பகுதியை நீங்கள் பார்க்கிறீர்களா?" என அவர் கேட்டது காட்சியுடன் தெளிவாகக் கேட்டது. மருத்துவத் துறைக்கு இது வரப்பிரசாதம். ஆபரேஷன் தியேட்டருக்குள் என்ன நடக்கிறது என்று உறவினர்கள் வீட்டிலிருந்தே பார்க்க, ரிகார்ட் செய்ய முடியும்,"  .

ரமணன்

அருள்வாக்கு - அறிவுக்கு முன்னால் ஒழுக்கம் முக்கியம்!

 
நாம் மாடர்ன் ஸயன்ஸைப் படிக்க வேண்டும். அதில் நல்லதாகவும் பல அம்சம் இல்லாமலில்லை. ‘களவும் கற்று மற’ என்றார்கள். முதலில் நம் ஸமயாசாரங்களால் நல்லொழுக்கங்களைப் பாறை மாதிரி உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டால், அப்புறம் எதுவும் நம்மைக் கெடுக்க முடியாது என்ற நிச்சயத்துடன் கெட்டதோ, நல்லதோ எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு நல்லது - கெட்டதுகளை எடுத்துச் சொல்லலாம். 
 
ஆகையால் Knowledgeக்கு (அறிவை வளர்த்துக் கொள்வதற்கு) முன்னால் Character (ஒழுக்கம்) அவசியம். இல்லாவிட்டால் அறிவு கெட்டதற்கு Apply ஆகி, கெட்டதுகளை வளர்க்கும். முதலில் வரவேண்டிய இந்த ஒழுக்கம் மதாநுஷ்டானத்தால்தான் வரும்.
 
உலோகங்கள், மற்ற வித்யைகள், விஞ்ஞானங்கள் யாவும் லௌகிகத்துக்கும் அறிவுக்கும் மட்டுமே பிரயோஜனமானாலும் இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். Basic ஆக (அடிப்படையாக) தெய்வ பக்தியும், ஸமயாநுஷ்டானங்களும் இருந்துவிட்டால் அறிவுக்கும் மனோ வளர்ச்சிக்கும் ஏற்பட்ட விஞ்ஞானங்களையும் கலைகளையும் தெரிந்து கொள்வதுகூட அந்த அறிவையும் மனஸையும் நன்றாக வளர்த்து சுத்தப்படுத்தவே உதவும். அப்புறம் இவற்றைத் தாண்டி ஆத்மாவிலேயே ஆணி அடித்த மாதிரி நிற்க, ஆரம்பத்தில் இவையே உபாயமாயிருக்கும்.
 
உபவேதங்கள் மட்டுந்தானா என்ன? கர்மாக்கள் அத்தனையும் - தர்மசாஸ்திரம் சொன்ன அத்தனை விஷயங்கள், வேதத்தின் கர்மகாண்டத்திலேயே உள்ள அநுஷ்டானங்கள் எல்லாமும்கூட - முடிவிலே அடிபட்டுப் போகிறவைதான். ஆனால் அந்த முடிவிற்குப் போவதற்கே அடிமட்டத்தில் அவை வேண்டும். இத்தனை படிப்பதும், பார்ப்பதும், அறிவதும், அநுபவிப்பதும், அநுஷ்டிப்பதும் பரமாத்மாவைத் தெரிந்து கொள்வதற்கு வழியாகத் தான்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, September 26, 2013

சச்சின் சகாப்தம்!

'நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!''- 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த அணியின் கேப்டன் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை. இந்திய கிரிக்கெட்டில் 'சச்சின் சகாப்தம்’ எத்தனை அழுத்தமானது என்பதை உணர்த்தும் ஓர் உதாரணம் இது!
 
இந்த ஆண்டோடு கிரிக்கெட்டில் 24 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் சச்சின். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விரைவில் விடைபெற இருக்கிறார். தென் ஆஃப்ரிக்கா அல்லது மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் போட்டிகளில் 200-வது போட்டியோடு அவர் விடைபெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. கிரிக்கெட்டில் அறிமுகமான காலம் முதல் சமீப டி-20 டிரெண்ட் வரை தனது தகுதி, திறமைகளை அப்டேட் செய்துவந்த சச்சினிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.

இறுதி வரை போராடு!

16 வயதில் பொடியனாக பாகிஸ்தான் மைதானத்துக்குள் நுழைந்தபோது, முதல் போட்டியில் 15 ரன்கள் அடித்த சச்சின், வக்கார் யூனிஸ் பந்தில் க்ளீன் போல்ட். ''நான் என்னென்ன திட்டங்களோடு மைதானத்துக்குள் நுழைந்தேனோ, அது எதுவுமே நிறைவேறவில்லை. 'கிரிக்கெட் விளையாட நான் தகுதியானவன் அல்ல’ என்று அப்போது தோன்றியது. அந்த எண்ணமே என்னை மிகவும் சோர்வுறச் செய்தது. ஆனால், இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன் என்ற பாசிட்டிவ் சிந்தனையால் அந்தச் சோர்வை விரட்டினேன். அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே 59 ரன்கள் அடித்தேன். அந்த பாசிட்டிவ் எண்ணம் அன்று தோன்றாவிட்டால், இன்று இந்த சச்சினே இல்லை!'' - இந்த நேர்மறைச் சிந்தனை அவருக்கு மட்டுமல்ல... நம் அனைவருக்குமே அவசியம் தேவை!

மாத்தி யோசி!

  டான் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், ப்ரையன் லாரா, ராகுல் டிராவிட்... என பல பேட்ஸ்மேன்களை உருவாக்கியிருக்கிறது கிரிக்கெட். ஆனால், சச்சினின் ஆட்டத்தில் உள்ள கச்சிதமான நுணுக்கத்தை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடியாது. மேற்கு இந்திய வீரர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் வாகான பந்துகளை முரட்டுத்தனமாக அடித்து ஆடுவதும், அடிக்க ஏதுவாக இல்லாத பந்துகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதுமான பாணியைப் பின்பற்றுவார்கள். ஆனால், தவறான பந்துகளைத் தண்டித்தும் மற்ற பந்துகளை ஃபீல்டர்களுக்கு இடையில் தள்ளிவிட்டு 'கேப்பில் கிடா வெட்டும்’ ஆட்டத்தை அறிமுகப்படுத்தி, அதை 'வெற்றி யுக்தி’யாக மாற்றியவர் சச்சின்.


கடந்து செல்!

  விமர்சனங்களை எப்படிக் கையாள்வது என்பதையும் சச்சினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சி, 'கடவுள்’ என புகழ்ந்தாலும் சரி, 'சுயநலமாக ஆடுகிறார்’, மோசமான ஃபார்ம் காரணமாக 'எண்டுல்கர்’ என விமர்சித்தாலும் சரி, எதையும் ஒரு சின்னப் புன்னகையோடு கடந்துவிடுவார் சச்சின். அதுவும், இதுவும், எதுவும் கடந்துபோகும் என்பது சச்சினுக்குத் தெரிந்திருக்கிறது!

வேண்டும் இன்னொரு வீரநடை!

சூப்பர் மேனாகவே இருந்தாலும் பூமியில்தானே தரை இறங்க வேண்டும்! அதேபோல 'சாதனை நாயகன்’ சச்சினுக்கு பேட்டிங் பவர் குறைந்து வருவதும் உண்மையை, வேறு வழியில்லை என்றாலும், நாம் ஜீரணிக்கத்தான் வேண்டும்! 40 வயதான சச்சினுக்கு சீறி வரும் பந்துகளைக் கணிக்கும் திறன் குறைந்துகொண்டே போகிறது.  பேட்ஸ்மேன் முனையில் நிற்கும் சச்சின் முகத்தில் முதல்முறையாக பயத்தையும் பதற்றத்தையும் பார்க்க முடிகிறது. கொல்கத்தா டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் அடித்ததுதான் சச்சின் கடைசியாக விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ஸ்கோர். ஓய்வை அறிவிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார் சச்சின். 'அது எப்போது?’ என்பதை அவரே அறிவிப்பார் என்ற சுதந்திரத்தை சச்சினுக்கு அளித்துவிட்டுக் காத்திருக்கிறது கிரிக்கெட் உலகம். 

'பல சதங்கள் அடித்திருக்கிறேன். பல சாதனைகள் படைத்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் கிரிக்கெட் களத்திலிருந்து பெவிலியனுக்கு வீரநடை போட்டு நடந்திருக்கிறேன். ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, மணல் புயலுக்கு நடுவே சதம் அடித்து இந்திய அணியை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வைத்தபோதுதான், 'நான் ஒரு விவ் ரிச்சர்ட்ஸ் போல உணர்ந்தேன்!’ என்று சொல்லியிருக்கிறார் சச்சின்.

விரைவில் அவர் விளையாட இருக்கும் 200-வது டெஸ்ட் போட்டியில் அப்படியான ஒரு வீரநடைக்குப் பின் சச்சின், ஓய்வு முடிவை அறிவித்தால், அது இத்தனை வருட முத்திரை சாதனைகளுக்கான கிரீடமாக இருக்கும்!

சார்லஸ்

 
 

Saturday, September 21, 2013

அசாருதீன், ஹான்ஸி குரோனியே - வீணாகிப் போன திறமை!

 
‘40 லட்சத்துக்காக ஏன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டும்? ஒரு டெஸ்ட் தொடரில் அந்தப் பணத்தைச் சம்பாதித்துவிடலாம். மூன்று டெஸ்ட் மேட்சுகளில், 20 விக்கெட்டுகள் எடுத்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும். ஒரு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக பந்து வீசினால் பத்து மடங்கு பணம் கிடைத்திருக்குமே! ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அதைவிடவும் ஒரு முட்டாள்தனம் இல்லை’ என்று சமீபத்தில் ஸ்ரீசாந்தின் சூதாட்ட வழக்கு தொடர்பாக மிகவும் மனம் வருந்திப் பேசினார் கௌரவ் கங்குலி.
 
அசாருதீன், ஹான்ஸி குரோனியேவுக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டபோது, இனிமேல் கிரிக்கெட்டில் ஃபிக்ஸிங்கே இருக்காது என்கிற நம்பிக்கை வந்தது. சமீபத்தில், 3 பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டுச் சிறைத்தண்டனை பெற்றபோதும்கூட, ஃபிக்ஸிங் என்கிற நச்சுக்கிருமி முற்றிலும் ஒழிந்துவிடும், இனி வீரர்கள் தவறு செய்யப் பயப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்டனையை எவ்வளவு கடுமையாக்கினாலும் ஃபிக்ஸிங்கை ஒழிக்க முடியாதோ என்கிற கேள்வி ஸ்ரீசாந்த்தின் வாழ்நாள் தடைக்குப் பின் தோன்றுகிறது. கிரிக்கெட்டிலிருந்து மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அபாயங்களை ஒழிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதுதான் நாளுக்கு நாள் கிடைக்கும் சான்றுகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.ஐ.பி.எல். போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக (பணம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க ஒப்புதல் அளித்ததற்காக), ஐ.பி.எல்.-லின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடையும் அமீத் சிங்குக்கு 5 ஆண்டுகள் மற்றும் சித்தார்த் திரிவேதிக்கு ஒரு ஆண்டும் தடை விதித்துள்ளது, பி.சி.சி.ஐ. பி.சி.சி.ஐ.-யின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் ரவி சவானி தலைமையிலான ஒரு நபர் குழு முன் வைத்த முடிவுகளைக் கொண்டு இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
 
மனோஜ் பிரபாகர் கொடுத்த ஒரு தகவலிலிருந்து இந்தியாவின் மேட்ச் ஃபிக்ஸிங் அத்தியாயம் தொடங்குகிறது.1997ல், இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர், 1994ல் பாகிஸ்தானுக்கு எதிராக மோசமாக விளையாடுவதற்காக சக வீரர் ஒருவர் தமக்கு 25 லட்சம் ரூபாய் தந்ததாக ஒரு பத்திரிகையில் தெரிவித்திருந்தார். பிறகு, அந்த வீரரின் பெயர், கபில் தேவ் என்று அறிவித்தபோது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள்.  அடுத்த பேரதிர்ச்சியைக் கொடுத்தவர் ஹான்ஸி குரோனியே. இந்திய சூதாட்டக்காரர்களிடம் தொடர்பு கொண்டதாக ஹான்ஸி குரோனியேமீது வழக்குப் பதிவு செய்தது தில்லி காவல்துறை. உண்மையைக் கண்டறிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், கிங்ஸ் கமிஷனை நியமித்தது. அப்போது, ‘1996 கான்பூர் டெஸ்ட் நடந்த சமயத்தில், இந்திய அணியின் கேப்டன் முஹமது அசாருதீன், முகேஷ் குப்தா என்கிற சூதாட்டக்காரரை அறிமுகம் செய்து வைத்தார். சூதாட்டத்துக்காக சில மேட்சுகளில் மோசமாக ஆடினேன், என் அணியிலுள்ள சில வீரர்களையும் மோசமாக ஆட நிர்ப்பந்தித்தேன்’ என்று வாக்குமூலம் அளித்து கிரிக்கெட் உலகையே கிடுகிடுக்கவைத்தார் குரோனியே. பிறகு, 2002ல், விமானத்தில் செல்லும்போது, விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். 
 
இந்தியாவில் மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கு, சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.  

கே. மாதவன் தலைமையில் நடந்த விசாரணையின் முடிவில், அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், அஜய் சர்மா ஆகிய வீரர்கள், சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்து 3 ஒருநாள் ஆட்டங்களை மேட்ச் ஃபிக்ஸிங் செய்தார்கள் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதைத் தொடர்ந்து அசாருதீனுக்கும் அஜய் சர்மாவுக்கும் ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது. ‘அசாருதீன் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன’ என்று பி.சி.சி.ஐ.யின் நடவடிக்கைகளுக்கு விளக்கம் கொடுத்தார் அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவரான ஏ.சி. முத்தையா. அஜய் ஜடேஜாவுக்கும் மனோஜ் பிரபாகருக்கும் 5 ஆண்டுகாலத் தடை கிடைத்தது. பாகிஸ்தானிலும் ஃபிக்ஸிங் புயல் கடுமையான விளைவுகளை (அப்போதே) ஏற்படுத்தியது. சலிம் மாலிக்குக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.
 
ஆனால், நீதிமன்றத்தின் முன்பு எல்லாப் பரபரப்புகளும் ஓய்ந்துபோயின. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் ஜெயித்து மக்களவை உறுப்பினர் ஆனார் அசாருதீன். பிறகு, சென்ற வருடம், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அசாருதீன் மீதான ஆயுட்காலத் தடைக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்கிற காரணம் சொல்லி, தடையை நீக்கி உத்தரவிட்டது. ஜடேஜாவும் தில்லி உயர் நீதிமன்றத்தால் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு, தில்லி, ராஜஸ்தான் ரஞ்சி அணிகளின் கேப்டனாகவும் சில காலம் ஆடினார். இன்றைக்கும் அவர் ஒரு கிரிக்கெட் நிபுணராக மதிக்கப்படுகிறார்.  

இவர்களைத் தொடர்ந்து, ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்காலத் தடையும் வருங்காலத்தில் ஒன்றுமில்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. 
 
‘ஸ்ரீசாந்துக்கும் சூதாட்டத் தரகருக்கும் இடையே உள்ளதாகக் கூறப்பட்ட தொடர்புக்கு வலுவான ஆதாரம் இல்லை என்று கூறித்தான் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனவே இந்தத் தடை நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு வழக்கு தொடர்பாக, நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும், என்று தெரிவிக்கிறார் ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் ரிபெக்கா ஜான்.  ‘யாருடைய ஆதரவும் இல்லாமல்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்துள்ளேன். இந்தப் பிரச்னைக்குப் பிறகாவது ஆதரவு கிடைக்குமா என்று எதிர்பார்த்தேன்; ஆனால் கிடைக்கவில்லை,’ என்று ஸ்ரீசாந்த் பேசும்போது பாவமாகத்தான் இருக்கிறது. மிகச் சிறந்த ஒரு திறமையை பணத்தாசை தின்றதா அல்லது சூழ்ச்சியால் அது வஞ்சிக்கப்பட்டதா என்கிற சந்தேகங்களுக்கு நீதிமன்றம்தான் விடை சொல்ல வேண்டும். அப்படியே கறைபடியாதவராக ஸ்ரீசாந்த் அறிவிக்கப்பட்டாலும் அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கமுடியுமா என்பது சந்தேகம்தான். இனி அவருக்கு வெள்ளித்திரை, சின்னத் திரை, வியாபாரம் போன்றவைதான் கைகொடுக்கப் போகின்றன. ஆரம்பம் முதலே கிரிக்கெட் தவிர இதர பிரச்னைகளுக்காக மட்டுமே அதிகமாகப் பேசப்பட்டு வந்த ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை, அதேபோலொரு கிரிக்கெட் அல்லாத ஒரு பிரச்னைக்காக முடிந்ததை எண்ணி வேதனைப்படவே முடிகிறது. இன்னமும் இதுபோன்ற எத்தனை எத்தனை திறமைகள் பேராசையால் வீணாகப் போகின்றனவோ!
 
 
ச.ந.கண்ணன்

ஐபோன் 5 சி

 
ஐபோன் மீது உலகெங்கும் பயங்கர ஈர்ப்பு உண்டு. ஐபோன் அழகும், அதன் இயங்குதளத்தின் இயல்பும், அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையும் அதன் மேல் பைத்தியத்தையே ஏற்படுத்திவிடும். ஆப்பிள் தொடர்ந்து இந்த ரசனையான அனுபவத்தை அதன் ஒவ்வொரு போன் மாடலிலும் மெருகேற்றிக் கொண்டே வந்தது.
 
ஆனால், இந்த எழிலுக்கும் திறமைக்கும் நவீன தொழில்நுட்பத்துக்கும் ஒரு விலை உண்டு. ஆப்பிள் ஐபோன்கள் எல்லாம் விலை விஷயத்தில் கொஞ்சம் அதிகம்தான். அதுவும் இந்தியாவுக்குள் ஐபோன்கள், அமெரிக்க விலையைவிட இருபது சதவிகிதம் அதிகமாகவே விற்கப்படுகின்றன.  ஐபோன்களுக்கு உலகெங்கும் இருக்கும் மிகப்பெரிய போட்டியாளர் ஆண்டிராய்ட் வகை போன்கள்தான். அதுவும் சாம்சங் கேலக்ஸி போன்கள் சந்தையை வெகுவேகமாகக் கைப்பற்றிக்கொண்டு வருகின்றன.இந்நிலையில், ஆப்பிள் இந்தியா, சீனா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளுக்கு ஏற்ப விலைகுறைவான போன்களை அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஐபோன் 5 சி என்ற அந்த மாடலைப் பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல மீடியாவில் கசிந்து கொண்டே இருந்தது.கடைசியாக சென்ற வாரம் ஐபோன் 5 சி மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது. இதில் சி என்பது கலர் என்றே சொல்லலாம். நீலம், இளம் பச்சை, பிங்க், மஞ்சள், வெண்மை ஆகிய நிறங்களில் ஐபோன் 5 சி கிடைக்கும். மற்றபடி இந்த மாடலில் ஐபோன் 5இல் இருந்த அதே பிராசசரே இருக்கிறது. பேட்டரி பத்து மணிநேரம் வரை தாங்கும் என்று ஆப்பிள் அறிவித்திருக்கிறது. இந்தப் போன் மாடல் கெட்டியான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு இருப்பது தான் இதில் ஒரே புதுமை!உண்மையில், ஐபோன் 5 சி புதிய அனுபவத்தைத் தரும், வித்தியாசமாக இருக்கும், பெரிய முன்னேற்றமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், அதெல்லாம் இல்லாமல் வெகு சாதாரணமாக, இதற்கு முந்தைய மாடலில் இருந்து பெரிய வளர்ச்சி ஏதுமில்லாமல் 5 சி இருப்பது அனைவரையும் கொஞ்சம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி இருக்கிறது.ஒரே ஒரு விஷயம், விலை. அமெரிக்காவில், 16 ஜிபி ஐபோன் 5 சி, 99 டாலர். 32 ஜிபி 199 டாலர்.மொபைல் ஆபரேட்டர்களின் காண்ட்ராக்டோடு இருந்ததால்தான் இந்த விலை. இல்லையெனில் இதன் உண்மை விலை 549 டாலர்கள். அதாவது, அமெரிக்காவில், தொலைதொடர்பு நிறுவனங்கள், ஐபோனின் விலையில் பெரும்பங்கை ஆப்பிளுக்குச் செலுத்தி, அதன் சந்தை விலையைக் குறைக்கும். அதற்கு மாற்றாக, ஐபோன் வாடிக்கையாளர்கள், அந்தக் குறிப்பிட்ட ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கையே பயன்படுத்த வேண்டும். இப்படித்தான் ஐபோன் 5 சி மாடலுக்கு இரண்டு வருட காண்ட்ராக்டோடு விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
 
அமெரிக்காவில் வேண்டுமானால், இந்த விலை குறைவாக இருக்கலாம். ஆனால், இந்தியாவிலோ சீனாவிலோ இது குறைந்த விலை இல்லை. இந்தியாவுக்கு வரும்போது, ஐபோன் 5 சியின் விலை ரூ. 40,000 ஆக இருக்கும். இதில் பாதி விலையில் சூப்பரான போன்கள் சந்தையில் கிடைக்கும்போது, இவ்வளவு விலை கொடுத்து யார் வாங்குவார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.சீனாவிலோ, ஐபோன் 5 சியின் விலை கிட்டத் தட்ட 730 டாலர்கள். அங்கே இது மிக மிக அதிக விலை. அப்படியானால், ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய மதிப்பைக் குறைத்துக் கொண்டு சந்தையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே அர்த்தமாகிறது.ஆனால், ஆப்பிள் எப்போதும் தன்னுடைய தொழில்நுட்பத்தாலும் எழில்நிறை தயாரிப்பினாலுமே சந்தையில் கோலோச்சுகிறது. இம்முறையும் இந்த 5 சி மாடல், அதன் பல்வேறு வண்ணங்களுக்காகவே பயங்கர டிமாண்டைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வண்ணம் என்பது ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட். அதில் பின்தங்கியிருந்த ஆப்பிள், 5 சி மாடல் மூலம், புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தும்.ஆப்பிள் எது செய்தாலும் அது தலைப்புச் செய்தி தான். மக்களின் மனநிலையைப் புரிந்து வைத்துள்ள நிறுவனம் அது. இம்முறையும் அதன் திட்டம் சோடை போகாது. 
 
 
ஆர்.வெங்கடேஷ்

அருள்வாக்கு - இதை மாற்றினால் போதும்!

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரத்தில் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமென்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.
 
நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.
 
இக்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் strain பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும் அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.
 
நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான். ‘பணம்தான் பிரதானம்’ என்பதே அந்த அம்சம். பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

அருள்வாக்கு - பழையதும் புதியதும்!


‘நம்முடையது, பழையது என்பதற்காகவே ஒன்றை நல்லது என்று தீர்மானித்து விடக்கூடாது. பிறருடையது, புதிது என்பதற்காகவே ஒன்றைத் தள்ளியும் விடக்கூடாது. பரீட்சை பண்ணிப் பார்த்தே ஏற்க வேண்டியதை ஏற்றுத்தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டும். முதலிலேயே முடிவுகட்டி மனத்தைக் குறுக்கிக் கொள்வது மூடனின் காரியம்’ என்று இதை விரித்துப் பொருள் கொள்ளலாம். அதனால்தான் விதேசமானது, நவீனமானது எதுவுமே நமக்குக் கூடாது என்று சொல்லிவிடவில்லை. ஆனால், இப்போது காளிதாஸன் சொன்னதற்கு நேர்மாறாக, ‘நம்முடையது பழசு என்பதாலேயே மட்டம், அது தள்ள வேண்டியது; மேல்நாட்டிலிருந்து வந்ததுதான் modern (புதிது) என்பதாலேயே அதை அப்படியே யோசிக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றாயிருக்கிறது! இதுவும் தப்பு.

ஆகையால் அன்னியமும், நவீனமும் கூட எங்காவது நமக்குக் கொஞ்சம் தேவையாயிருந்தாலும் பெரும்பாலும் நம்முடையதான பழைய விஷயங்கள்தான் விசேஷமாக, அதிகமாக அனுசரிக்கத்தக்கன என்று சொல்ல வேண்டியதாகிறது. புதிதில் எவையெல்லாம் வேண்டும் என்று நாம் ஆலாப் பறக்கிறோமோ, அவைகள் வேண்டவே வேண்டாம் என்று அவற்றைக் கண்டுபிடித்த நாடுகளிலேயே பக்குவிகள் விட்டு விட்டு நம்முடைய யோகம், பஜனை, ஆத்மவிசாரம் முதலியவற்றுக்குக் கூட்டம் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருப்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

நவீனம் என்று நாம் எதை நாடிப் போகிறோமோ அதிலே கரை கண்டவர்கள் பெரும்பாலும் அது பிரயோஜனமில்லை என்றே உணர்ந்து நம் வழிகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்களாதலால், நாம் நம்முடைய பழைய வழியைத்தான் ஆதாரமாக வைத்துக் கொண்டு, அதன்படிதான் செய்ய வேண்டும் என்பது தெளிவு. இப்போது செய்கிற மாதிரி, மேல்நாட்டார் கழிசடை என்று ஒதுக்கித் தள்ளுகிறவற்றை நாம் கொண்டாடி எடுத்துக் கொள்வதற்காக நான் புது ஸயன்ஸ்களைப் படிக்கச் சொல்லவில்லை. நம் வழிக்குப் பாதகமில்லாமலே, அதற்கு அநுகூலமாகவே ஏதாவது அம்சங்களில் இந்த ஸயன்ஸ்களின் மூலம் பண்ணிக் கொள்ள முடியுமா என்று தெரிந்து கொள்வதற்கே இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவை லோக கே்ஷமத்துக்குப் பிரயோஜனப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காகவே கற்றறிய வேண்டும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு - எது ஆனந்தம்?

 
சக்தி ஜாஸ்தியாக ஆக ஆனந்தம் ஜாஸ்தி என்பதால் அந்த சக்தியினாலேயே ஆனந்தம் உண்டாகிறது என்று அர்த்தமில்லை. சக்திக்கும் ஆனந்தத்துக்கும் நேர் சம்பந்தமில்லை. ஒருத்தருக்குத் தம்மைவிடக் குறைந்த சக்தியுள்ளவர் மீது தம்முடைய சக்தியினால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. அவரைக் கட்டுப்படுத்த முடிகிறது என்பதிலே ஏற்படும் ஆனந்தம் தப்பான அஹங்காரத்தில் ஏற்படுவது; அதை முறையான ஆனந்தம் என்று சொல்ல முடியாது. பின்னே, சக்தி ஜாஸ்தியானால் ஆனந்தம் எப்படி ஜாஸ்தி ஆகிறது என்றால், அப்போது நம்மை விடவும் அதிக சக்தியோடு இருந்து கொண்டு நம்மைக் கட்டுப்படுத்துபவர்கள் குறைச்சலாகிக் கொண்டு வருகிறார்கள். ஆகையால், நாம் இன்னொருத்தரை ஆள முடிகிறது என்பதை விட, நமக்கு மற்றவர்களுடைய ஆளுகையின் கட்டுப்பாடு குறைந்து, நம்முடைய சுதந்திரத்தின் எல்லை ஜாஸ்தியாகிறது என்பதாலேயே ஆனந்தம் ஏற்படுகிறது. ஒரு குமாஸ்தா ஆபீஸராகிறாரென்றால், அவர் நல்லவராயிருந்தால், தாம் பிறத்தியார் மீது ‘தாட் பூட்’ செய்ய முடியுமென்ற ஆனந்தம் அவருக்கு ஏற்படுவதில்லை. ஆனாலும் தமக்கு இப்போது ஆபீஸரின் கட்டுப்பாடு இல்லை, சுதந்திரமாகச் சில காரியம் செய்யலாம். முடிவுகள் எடுக்கலாம் என்பதில் ஆனந்தம் உண்டாகத்தான் செய்யும்.
 
ஆபீஸர் மாதிரியான பெரிய பொஸிஷனில் சில பேர் இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு குமாஸ்தாக்கள் கட்டுப்பட்டிருப்பதைவிட அதிகமாக இவர்கள் இவர்களுக்கும் மேலதிகாரிகளிடமோ, அல்லது எம்.எல்.ஏ. போன்றவர்களிடமோ கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று இருக்கும்போது, ‘நம்மைவிட அந்த குமாஸ்தா எவ்வளவோ தேவலை; அவனுக்கு இருக்கிற ‘ஃப்ரீடம்’ நமக்கு இல்லை’ என்று வருத்தப் படுகிறார்கள். ஆகையால் சக்தியை விட ஃப்ரீடம்தான் ஆனந்தம் தருவது என்று தெரிகிறது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

அருள்வாக்கு - ஆசையும் ஆத்மாவும்!

 
நாம் அறிந்த ஆனந்தமெல்லாம் சின்ன ஜீவ நானான அகங்காரம் என்ற ஈகோவுடையதே. இது ஆசை பூர்த்தியாலேயே ஆனந்தமடைவது, ஆத்மாவோ ஆசையே இல்லாதது. அந்யமான இன்னொன்றைக் குறித்துத்தானே ஆசை ஏற்பட முடியும்? ஆத்மாவுக்கு அந்ய வஸ்து எதுவும் தெரியாதே! ஆனாலும், எப்படிச் சின்ன ஜீவநானின் சைதன்யமும் ஆத்ம சைதன்யத்திலிருந்து வந்ததுதானோ அப்படியே இந்த ஆசையும்கூட ஆத்மாவிடம் இதற்குள்ள ஆசையிலிருந்துதான் வந்தது. இப்படிச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். தனியொன்றாக மாத்திரமே இருப்பது ஆத்மா. அதாவது, ஆத்மா அத்வைத வஸ்து. இது எப்படி த்வைத ரீதியில் மட்டுமே வைக்கக்கூடிய ஆசை என்பதற்கு ஆஸ்பதமாயிருக்க முடியும் என்று ஆச்சர்யமாயிருக்கலாம். ஆத்மாவைக் கொஞ்சம்கூட அறிந்து கொள்ளாத ஜீவ மனஸ் அதனிடம் எப்படி ஆசை வைக்க முடியும் என்றும் கேட்கலாம்.
 
ஆனாலும் உபநிஷத்திலே இப்படித்தான் சொல்லியிருக்கிறது. யாஜ்ஞவல்க்ய மஹரிஷி தம்முடைய பத்னி மைத்ரேயிக்கு உபதேசம் பண்ணுமிடத்தில் இவ்விஷயம் சொல்கிறார். ‘ஆசை’ என்ற வார்த்தையைச் சொல்லாமல் ‘ப்ரியம்’ என்று சொல்கிறார். இரண்டும் ஒன்றுக்கொன்று ரொம்ப நெருங்கிய சம்பந்தமுள்ளவைதான்; ஒன்றே கூட என்று சொல்லிவிடலாம். நாம் ஆசைப்படுகிற வஸ்துக்களிடமெல்லாம் நமக்கு ப்ரியம் இருக்கிறது. நமக்கு அப்ரியமானவற்றிடம் ஆசையில்லை. ‘பெண்டாட்டிக்கு அகமுடையானிடம் ப்ரியம் இருக்கிறதென்றால் அவனை முன்னிட்டே அவள் ப்ரியம் வைக்கிறாள் என்று அர்த்தமில்லை. ஆத்மாவை (தன்னை) முன்னிட்டே அவனிடம் இவள் ப்ரியம் வைக்கிறாள். இப்படியேதான் அவன் இவளிடம் ஆசை வைப்பதும். புத்ரபாசம் என்ற ப்ரியம் அந்தப் பிள்ளைகளையே முன்னிட்டு அல்ல, ஆத்மாவை முன்னிட்டுத்தான். வித்தம் (பொருள்) ப்ரியமாயிருப்பதும் இதே காரணத்துக்காகத்தான்’.  

ஆனால், முடிவிலே மனம் தன்னையும் விலக்கிக் கொண்டு உயிரை மாத்திரம் இருக்க விடும்போது, அதற்கே சரியாக விளங்காவிட்டாலும் அது ஆத்மாவிடம் கொண்டுள்ள ப்ரியத்தால்தான் இப்படிச் செய்கிறது என்று தெரிகிறது.
 
இப்படி இனம் தெரியாமல் இருக்கிற ப்ரியத்தை இனம் புரிவதாக ஆக்கிக் கொண்டால் இப்போதே மனஸை ஆத்மாவிலே ஒடுக்கி இல்லாமல் பண்ணிக்கொண்டு ஆத்மாவாக மட்டும் இருப்பதற்கு எண்ணம் வந்துவிடும். ‘ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்’ என்று பகவான் உபதேசம் பண்ணியபடி செய்து பார்க்கத் தோன்றும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

Saturday, September 14, 2013

அயோடின் - ஜி.கே. வெங்கடேஷ் மன்னார்.


அயோடின் என்பது ஒரு முக்கிய நுண் உயிர்ச்சத்து. குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு அதுவும் மூளை வளர்ச்சிக்கு உதவும் நுண் உயிர்ச்சத்து. 80களில் இந்த ஊட்டச்சத்தின் குறைபாட்டினால் உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது உணரப்பட்டது. இன்று அயோடின் உயிர்ச்சத்தின் அவசியத்தைப் புரியவைத்து அதை உலகின் பலநாடுகளில் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்தவர்களில் முக்கியமானவர் ஜி.கே. வெங்கடேஷ் மன்னார்.

இன்று உலகெங்கும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டிருக்கும் ‘அயோடைஸ்டு சால்ட்’ என்ற உயிர்ச்சத்து சேர்க்கப்பட்ட உப்பை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மிக மலிவான, தினமும் உணவில் பயன்படுத்தப்படும் உப்பில் இந்த நுண் உயிர்ச்சத்தை சேர்ப்பதின் மூலம் எளிதாக, விரைவாக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மிகக் கடினமான அந்தத் தயாரிப்பு முறைகளை தம் ஆராய்ச்சிகள் மூலம் எளிதாக்கினார் வெங்கடேஷ். இன்று இந்த வகை உப்பை பயன்படுத்துவதன்மூலம் உலகம் முழுவதும் 2000 கோடி குழந்தைகள் நுண் உயிர்ச்சத்துக் குறைபாட்டின் விளைவுகளில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.  

ஜி.கே. வெங்கடேஷ் மன்னார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் இஞ்ஜினீயரிங் படித்த பின் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தவர். 1970களில் இந்தியா திரும்பி, தம்முடைய குடும்பத் தொழிலான உப்பு உற்பத்தியை நவீனமாக்கி டேபிள் சால்ட் தயாரிப்பு முறையை மலிவு விலையில் அறிமுகப்படுத்தினார். அந்தத் தயாரிப்பு முறையைப் பல உப்பு தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்ற உதவினார். 70களின் இறுதியில் உப்பை எப்படி உயிர்ச்சத்துள்ள பொருளாக்கி அதை எளிதில் எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஐக்கிய நாட்டுச் சபையின் ஓர் அங்கமான யுனிசெஃப் (UNICEF) உலகின் சில நிறுவனங்களுடன் இணைந்து இதைச் செய்ய முயற்சிப்பதை அறிந்து அவர்களுடன் இணைந்து தம் முயற்சியைத் தொடர்ந்தார். சில ஆண்டுகளிலேயே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் பல சர்வதேச நிறுவனங்களின் ஆலோசகரானார். 1993ல் யுனிசெஃப்பின் குழு தலைவர்களில் ஒருவராகி நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உப்பில் நுண்ணுயிர்ச் சத்து சேர்க்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அரசு அதிகாரிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்தார். இதன் விளைவாகத்தான் இன்று பல நாடுகளில் உப்பு தயாரிப்பு முறைகளில் அயோடின் சேர்ப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. 

கனடா நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் கனடா’ என்ற விருது இந்த ஆண்டு ஊட்டச்சத்துக் குறைபாடுகளை ஒழிக்கச் செய்யும் சிறந்த பணிக்காக ஜி.கே.வெங்கடேஷுக்கு வழங்கப்படுகிறது. 

உப்பை நுண் உயிர்ச்சத்துடன் உலகெங்கும் வழங்க வழி செய்த இந்த மனிதரை உப்பு உள்ளவரை உலகம் மறக்காது!


ஓ பக்கங்கள் - இயேசுவின் கடைசிக்கால சாட்சியங்கள்! ஞாநி


பாரீசில் நான் பார்த்த முக்கியமான இன்னொரு இடம் நாட்டர் டேம் கதீட்ரல். கலை, இசை, ஆன்மிகம், மதம், இலக்கியம் எல்லாம் இணையும் இடம் இது. நண்பர் அகிலாதான் நாங்கள் இந்த இடத்துக்குச் சென்றேயாக வேண்டும் என்று வற்புறுத்தியவர். இசைக் கலைஞரான அவர், அந்த மாதா கோயிலில் அன்று இசைக்கப்பட இருக்கும் கிரெகோரியன் சேண்ட்சை அனைவரும் அவசியம் கேட்க வேண்டும் என்றார். எனவே சென்றோம்.

கிரெகோரியன் சேண்ட்ஸ், மாதா கோயில் என்று தொடர்வதற்கு முன்னால், ஒரு விஷயத்தைப் பேச வேண்டும். அங்கே சென்ற நாங்கள் மத, கடவுள் நம்பிக்கைகள் இல்லாதவர்கள். நாத்திகரும் பகுத்தறிவாளருமான நீங்கள் கோயில்களுக்கெல்லாம் போவீர்களா?’ என்று இந்தியாவிலும் என்னைச் சிலர் அவ்வப்போது கேட்பதுண்டு. எந்த இடத்துக்கும் செல்வேன். கும்பிடுவதில்லை, அவ்வளவுதான். வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டுமானால் எல்லா இடங்களுக்கும்தான் செல்ல வேண்டும். பாரீசில் ஆலயத்துக்கும் சென்றேன். ஆடை அவிழ்ப்பு நடன விடுதிக்கும் சென்றேன். (அந்தந்த இடத்தின் பிரதான நிகழ்வுகளான தொழுதலிலும் விழுதலிலும் பங்கேற்கவில்லை, அவ்வளவு தான்.) இந்த ஐரோப்பிய பயணத்தின்போது பல இடங்களில் தேவாலயங்களுக்குச் சென்றேன். காரணம் அவையெல்லாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்.கிரெகோரிச்யன் சேண்ட் என்பது கிறித்தவத் தேவாலயத்தில் இசைக்கப்படும் ஒரு இசை வகை. ஸ்ரீரங்கத்திலோ, திருவல்லிக்கேணியிலோ, பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டாகப் பிரபந்தம் பாடுவதைக் கேட்டால் உற்சாகமாக இருக்கும். கிரெகோரியன் சேண்ட் அந்த வகையைச் சேர்ந்தது அல்ல. இசை வடிவ ரீதியில் அதை வேதபாராயண மெட்டுக்குச் சமமாக ஓரளவு ஒப்பிடலாம். ஆப்பரா இசை வடிவத்துக்கு அருகாமையில் இருப்பது கிரெகோரியன் சேண்ட். ரொம்ப எளிமைப்படுத்திச் சொல்வதென்றால், மாடர்ன் தியேட்டர்ஸ் இசையமைப்பாளர் வேதா இசையமைத்த ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ பாட்டின் மெட்டு கிரெகோரியன் சேண்ட்டிலிருந்து கடன் வாங்கிய மூடில் இருக்கும். கண்ணை மூடிக் கொண்டு கிரெகோரி சேண்ட்டைக் கொஞ்ச நேரம் கேட்டீர்களென்றால், கொஞ்சம் சோகம், கொஞ்சம் அமைதி, கொஞ்சம் உருக்கம், கொஞ்சம் மென்மை, கொஞ்சம் சிலிர்ப்பு எல்லாம் இருக்கும். ரொம்ப நேரம் கேட்டால், அலுப்பாக இருக்கும். பக்தி எப்போதும் இசையைச் சார்ந்தே இருக்கிறது. ஆலயங்களில் கூட்டாகப் பாடுவது பக்தியின் முக்கிய அம்சம். கிரெகோரியன் சேண்ட்டைத்தான் தன் அதிகார பூர்வமான பக்தி இசை வடிவமாக ரோமன் கத்தோலிக்க சர்ச் கருதுகிறது. போப்பாண்டவர் கிரெகோரி தி கிரேட் என்பவரால் உருவாக்கப்பட்டதால் இந்த இசைக்கு அந்தப் பெயர் என்று கருதப்பட்டாலும், இந்த வடிவம் 5ம் நூற்றாண்டு முதல் ரோமானிய வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. போப் கிரெகோரி காலத்தில் அது செம்மைப்படுத்தப்பட்டுச் செழுமையாக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1200 வருடம் பழைமையான இந்த இசைவகையை நான் கேட்ட ஆலயத்துக்கு இந்த வருடம் வயது 850!நாட்டர் டேம் கதீட்ரல் ஆலயத்துக்கு இன்னொரு சிறப்பு அதுதான் பாரீசின் சீரோ கிலோமீட்டர்! அங்கிருந்துதான் பிரான்ஸ் நாட்டின் நகரின் ஒவ்வொரு இடத்தின் தூரமும் கணக்கிடப்படுகிறது. (சென்னையில் தமிழ்நாட்டின் சீரோ கிலோமீட்டர் கல் எங்கே இருக்கிறது தெரியுமா? அண்ணா சாலை தொடங்கும் இடத்தில் இருக்கும் முத்துசாமி பாலத்தின் நடுவில் இருக்கிறது! திருச்சி 195 மைல் தூரம் என்றால், இந்தக் கல்லிலிருந்து அவ்வளவு தூரம் என்று அர்த்தம்.) அது மட்டுமல்ல, நாட்டர் டேம் ஆலயம் இருப்பது ஒரு தீவில் ! பாரீஸ் நகரத்துக்குள் ஒரு தீவா? ஆம். பாரீசில் ஓடும் சேன் நதியில் எஞ்சியிருக்கும் ஒரு தீவு- இல் டே லா சைட். பழம் தீவான இது இப்போது பாரீஸ் நகரின் மையமாகி விட்டது. இரு பாலங்கள் தீவை பாரிசுடன் இணைக்கின்றன. இங்கே மெட்ரோ ரயில் நிலையம் கூட உண்டு.நாட்டர்டேம் என்றால், நம்ம அம்மா என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். ப்ரெஞ்ச்சில் டேம் என்றால் பெண். நாட்டர்டேம் நம்ம பொண்ணு. ஆங்கிலத்தில் அவர் லேடி. இங்கே குறிக்கப்படும் பெண், ஏசுவின் அன்னை மேரி. நாட்டர்டேம் கதீட்ரலை 1163ம் வருடம் கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். முடித்த வருடம் 1345. ஆலயத்தின் கட்டடக் கலையின் சிறப்பு இதன் இரட்டைக் கோபுரங்கள். மொத்தம் 69 மீட்டர் உயரமுள்ள இவற்றின் 387 படிகளை ஏறிப் போய் பார்த்தால் முழு பாரீஸ் நகரின் தோற்றத்தையும் பார்க்க முடியுமாம். நான் போகவில்லை. இடத்தை 850ஆம் வருடக் கொண்டாட்டத்துக்காக பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கோபுரத்தின் உச்சியில்தான் இந்த ஆலயத்தின் புகழ்பெற்ற இமானுவேல் என்ற மணி இருக்கிறது. இந்த மணியின் எடை மட்டும் 13 டன். இருப்பது ஒரு மணி அல்ல. இன்னும் எட்டு மணிகள் இன்னொரு கோபுரத்தில் உள்ளன. எல்லா மணிகளையும் ஒன்றாக அடித்தால் அதிர்ச்சியைக் கட்டடம் தாங்காது என்பதால், தனித் தனியேதான் அடிப்பார்களாம். மணிகள் விஷயம் கோர்ட் வழக்கில் இருக்கிறது. புதுப்பிப்பதற்காக மணிகளைக் கழற்றியதும்,எல்லாவற்றையும் உருக்கி விடலாம் என்று நினைத்தார்கள். புராதன மணிகளை உருக்கக் கூடாது என்று வழக்கு போட்டு தடை வாங்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில் கிறித்தவ பக்தர்கள் புனிதப் பொருட்களாகக் கருதும் சில பொருட்கள் இருக்கின்றன. இயேசுவை சிலுவையில் அறைந்தபோது அவரைக் கிண்டல் செய்தவர்கள், நீ என்ன ராஜாவா ? அப்படியானால் இந்தக் கிரீடத்தை அணிந்து கொள் என்று சொல்லி முள்ளாலான கிரீடத்தை தலையில் அமுக்கி வைத்துச் சித்திரவதை செய்ததாக வர்ணிக்கப்படுகிறது. ஒரு முட்செடியையே அப்படி கிரீட மாக்கியதாகச் சொல்லப்படும். அந்த முட்கிரீடத்தின் ஒரு பகுதி நாட்டர்டேம் ஆலயத்தில் உள்ளது.இயேசு தலையில் வைத்த முட்கிரீடத்தின் பகுதி என்று சொல்லப்படுபவை உலகில் மொத்தம் 700 உள்ளன. இருபது இடங்களில் இவை வைக்கப்பட்டுள்ளன. நாட்டர்டேம் ஆலயத்தில் இருக்கும் முள், 1238ல் கான்ஸ்டாண்ட்டிநோபிள் அரசன் பால்ட்வினால், பிரெஞ்ச் அரசன் லூயி 9ன் தயவு கோரி அளிக்கப்பட்டது. 

இதேபோல இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி என்று சொல்லப்படும் பொருளும் நாட்டர் டேம் ஆலயத்தில் இருக்கிறது. ரோமானிய அரசி ஹெலனா 328ஆம் வருடத்தில் இந்தச் சிலுவையைக் கண்டறிந்தாராம். அதன் பகுதிகள் உலகில் பல தேவாலயங்களில் உள்ளன. மூன்று வெவ்வேறு மரங்களிலிருந்து ஏசு சுமந்த சிலுவை செய்யப்பட்டதாம் ஹெலனா, சிலுவையை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. அதில் இயேசுவைப் பொருத்தி அடித்த ஆணிகளையும் கண்டறிந்தார். அந்த ஆணிகளில் ஒன்று நாட்டர் டேம் கோயிலில் இருக்கிறது. அந்த ஆலயத்தின் இன்னொரு புகழ்பெற்ற பொருள் இசைக்கருவியான ஆர்கன். இந்த ஆலயத்தின் தலைமை ஆர்கன் இசைக்கலைஞராக நியமிக்கப்படுவது பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.  நாட்டர் டேம் ஆலயத்துக்கு வரலாற்றில் கிடைத்த இன்னொரு சிறப்பு, அதை வைத்து ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஒரு முழு நாவலையே எழுதியதுதான். எழுத்தாளர் பிரெஞ்ச் படைப்பாளியான விக்டர் ஹியூகோ. நாவலின் தலைப்பு: தி ஹஞ்ச்பேக் ஆஃப் நாட்டர் டேம். (நாட்டர் டேம் கூனன்)

லியாண்டர் - ஓயாத புயல்

 
இரட்டையர் ஆட்டத்தில் உலகப்புகழ் பெற்ற வீரர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார் லியாண்டர். 16 வயதில் இந்தியாவுக்காக டேவிஸ் கோப்பையில் ஆடியபோது இருந்த அதே வேட்கைதான் அவரை இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த volleyer மற்றும் dropshoter என்று டென்னிஸ் நிபுணர்கள் மெச்சுகிறார்கள். தனக்கு எது வரும், வராது என்பதில் ஏற்பட்ட தெளிவுதான் லியாண்டரை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒற்றையர் ஆட்டத்தில் தன்னால் சாதிக்க முடியாது என்று தெரிந்தவுடன் உடனே மிகத் தெளிவாக முடிவெடுத்து இரட்டையர் ஆட்டங்களில் கவனம் செலுத்தினார். 14 கிராண்ட்ஸ்லாம்களை அள்ளிக் கொடுத்துவிட்டது. 
 
மகேஷ் பூபதியுடன் ஆட ஆரம்பித்து, 94 பேருடன் இரட்டையர் ஆட்டங்களில் ஆடியிருக்கிறார். ஆனால், இத்தனை பேரில் அவர் மிகவும் நம்புவது, செக் குடியரசைச் சேர்ந்த 34 வயது ஸ்டெபனிக்கைத்தான். இந்த வருட ஆரம்பத்தில் ஸ்டெபனிக்குக்கு ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் வேறொருவருடன் ஆட லியாண்டருக்குப் பலத்த ஆலோசனைகள் வந்த போதும், ஸ்டெபனிக் முழு ஆரோக்கியத்துடன் திரும்பும் வரைக்கும் காத்திருந்தார். அந்த நம்பிக்கையை ஸ்டெபனிக்கும் ஏமாற்றவில்லை. என் வாழ்க்கையில் என்ன ஆனாலும் நான் எப்போதும் ஸ்டெபனிக்குடன்தான் ஆடுவேன். இரட்டையர் ஆட்டங்களில் ஈடுபடுவோர் தைரியமாக, செக் குடியரசு வீரர்களுடன் ஆடலாம். அவர்கள் கடும் உழைப்பாளிகள்," என்று உறுதியான நட்புடன் பேசுகிறார் லியாண்டர். இப்போது யு.எஸ் ஓபனை ஜெயித்ததற்காக லியாண்டர்-ஸ்டெபனிக் ஆகிய இருவருக்கும் மூன்று கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் வென்றாலும் இந்தப் பெருமையை அடைய அவர் பல சர்ச்சைகளைத் தாண்ட வேண்டியிருந்தது.  

லியாண்டர், தன் முதல் கிராண்ட்ஸ்லாமை மகேஷ் பூபதியுடன் இணைந்துதான் ஜெயித்தார். ஆனால் அவருக்கும் பூபதிக்கும் ஏற்பட்ட ஈகோ பிரச்னைகளால் இருவரும் பிரிந்தபோது, டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். அதேசமயம், இருவருடைய திறமையும் தனித்தனியாகப் பளிச்சிட, அந்தப் பிரிவும் ஒரு காரணமாக அமைந்தது. விதவிதமான வெளிநாட்டு வீரர்களுடன் கூட்டணி அமைத்து இருவரும் இரட்டையர் போட்டியில் நிறைய சாதனைகளைச் செய்து விட்டார்கள். மகேஷ் பூபதி இந்த வருடத்துடன் ஓய்வு பெற்றுவிடுவார். ஆனால், லியாண்டர் இன்னமும் 3 வருடங்கள் நிலைத்து ஆடுவார் என்கிற செய்தி மிகவும் நம்பிக்கையூட்டுகிறது. ஸ்டெபனிக்கின் துணை இருக்கும்வரை லியாண்டரால் இரட்டையர் ஆட்டங்களில் இன்னமும் சாதிக்கமுடியும் என்று தெரிகிறது. இதுவரை இந்தியாவுக்காக ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். ‘சரியான உடல் தகுதியோடும், மனரீதியாக உற்சாகமாகவும் இருக்கிறேன். இந்திய அணியில் உள்ள இளைஞர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்கிறேன். நான் ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள அவர்கள்தான் ஊக்கசக்தியாக இருக்கிறார்கள்’ என்கிறார் லியாண்டர். இந்தப் புயலுக்கு ஓய்வே கிடையாது!

Thursday, September 12, 2013

சிரியா

சிரியா’ என்ற நாட்டைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால், சில நாட்களுக்கு முன் ரசாயனக் குண்டு தாக்குதலில் 600 குழந்தைகள் உள்பட சுமார் 1,429 பேர் கொலை செய்யப்பட்ட காட்சிகள்தான் உலகின் கவனத்தை சிரியா மீது திருப்பியது!
 
இப்படி ஒரு 'சம்பவத்துக்காக’ காத்திருந்த அமெரிக்கா, 'இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. சிரியா மீது போர் தொடுப் பது நிச்சயம்’ என்று வெளிப்படையாக அறிவித்து, அதற்கான ஆயத்தங்களையும் தொடங்கி விட்டது. மறுபுறம், 'சிரியா மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்கிறது ரஷ்யா. சிரியாவை முன்வைத்து மூன்றாம் உலகப்போருக்கான அறிகுறிகள் தென்படும் வேளையில், அந்த நாட்டை இன்னோர் ஆஃப்கானிஸ்தானாக மாற்றுவதே அமெரிக்காவின் எண்ணமாக இருக்கிறது. எண்ணெய் வளம் மிக்க சிரியா, பற்றி எரிவதன் காரணம்தான் என்ன?
 
மத்தியக் கிழக்கு நாடுகள் சூழ அமைந்திருக்கும் சிரியா, ஒரு மேற்காசிய நாடு. இதன் அதிபர் பஷர்-அல்-ஆசாத். 1971-ம் ஆண்டு முதல் இப்போது வரை இவரது குடும்பத்தினர்தான் அதிபர் பதவியை அலங்கரித்துவருகின்றனர். ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இவரது குடும்பத்தினர், இன்றுவரை அதைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில், பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலுக்குத் தோள்கொடுத்து அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்க, சிரியாவோ, 'இஸ்ரேல், எங்கள் எதிரி’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதேபோல அறிவித்த ஈரான் நாட்டுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இதனால் அரபுலகின் மற்ற நாடுகளில் இருந்து சிரியா தனித்து நிற்கிறது.


இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் அதிபர் ஆசாத்தின் 42 ஆண்டுகால ஆட்சி, சர்வாதி காரமாக மாறிவிட்டதால் மக்களிடையே வெறுப்பு உணர்வு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில்தான் 2011, ஜூலை மாதத்தில் 'சிரிய சுதந்திரப் படை’ என்ற குழு உருவானது. இவர்கள் அரசை எதிர்த்து ஆயுத வழியில் போராடினார்கள். சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சுதந்திரப் படைக்கு ஆயுத மற்றும் நிதி உதவி அளித்தனர். சிரியாவில் போராடுவது முழுக்க முழுக்க மக்கள் இல்லை. அவர்களைவிட அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவால் பயிற்று விக்கப்பட்ட ஆயுததாரிகளும் மத தீவிரவாத இயக்கங்களுமே ஊடுருவியுள்ளன. இந்தப் போராட்டக்காரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஜோர்டானில் ஒரு முகாமையே அமைத்துள்ளது அமெரிக்கா. இந்த பலத்தின் காரணமாகவே கடந்த மூன்றே ஆண்டுகளில் சிரியாவின் பல பகுதிகளை புரட்சிப்படை கைப்பற்றியது.

தனது செல்வாக்கு எல்லை மிக வேகமாகச் சுருங்கிவருவதைக் கண்ட அதிபர் ஆசாத், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டார். 'ரசாயன ஆயுதங்களால் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதலில், மொத்தம் 1,429 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 600 பேர் குழந்தைகள்’ என்கிறது அமெரிக்கா. இது தொடர்பாக வெளியிடப்பட்ட காட்சிகள், மனதைப் பதை பதைக்க வைக்கின்றன. ஆனால் அதிபர் ஆசாத், 'நாங்கள் அப்படி ஒரு ரசாயன தாக்குதலை நடத்தவே இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இதைத் தொடர்ந்தே சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான வேலைகளை அமெரிக்கா தொடங்கிவிட்டது. ஃப்ரான்ஸ் இதற்கு ஆதரவாக உள்ளது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நேரடியாகக் களம் இறங்கியுள்ளது. இதனாலேயே இன்னோர் உலகப்போருக்கான அபாயம் தென்படுகிறது.


சிரியாவில் புரட்சிப்படை மட்டுமே கலகத்தில் ஈடுபடவில்லை. அங்கு 'ஜபாத் அல் நுஸ்ரா’ என்ற இஸ்லாமிய மத தீவிரவாத அமைப்பும் அரசுக்கு எதிரான தாக்குதலில் முக்கியமான பங்காற்றுகிறது. அல்கொய்தா பாணியிலான இந்த அமைப்புக்கு, அமெரிக்கா ஆசி உண்டு என்பது ஒரு முக்கியமான செய்தி.

சரி, அமெரிக்கா ஏன் சிரிய அரசை வீழ்த்த நினைக்கிறது? ஏனெனில், மத்தியக் கிழக்கில் தனது விசுவாசியாக இருக்கும் இஸ்ரேலுக்கு சிரியா எதிரி. அத்துடன் அமெரிக்காவின் நீண்டநாள் எதிரியான ஈரானுடன், சிரியா நட்பாக இருக்கிறது. இந்த இரண்டு பேரையும் ஒழித்துக்கட்டுவதன் மூலம் மத்தியக் கிழக்கை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். முதலில் சிரியாவில் இருக்கும் சர்வாதிகாரத் தலைமையை அகற்றி, அங்கு ஒரு பொம்மை அரசைக் கொண்டுவந்துவிட்டால் அது நடந்துவிடும். அதன்பிறகு ஈரான் தனித்துவிடப்படும்; அதை வீழ்த்துவதும் எளிது. இதுவே அமெரிக்காவின் திட்டம் என்பது, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து. அமெரிக்காவில் இந்தத் திட்டத்துக்கு சிரியாவின் சர்வாதிகாரத் தலைமையும், அதன் மனிதாபிமானமற்றத் தாக்குதல்களும் ஓர் அடிப்படையை உருவாக்கித் தருகின்றன.

சிரியாவை முன்வைத்து உலகின் பல நாடுகளில் இருந்து உதிர்க்கப்படும் சவடால்களும் எச்சரிக்கைகளும், எஞ்சியிருக்கும் சிரிய மக்களை உயிரோடு கொன்றுகொண்டிருக்கின்றன! 


 

Friday, September 06, 2013

சச்சினும் - சேப்பாக்கம் - ஸ்ரீனிவாசன்

 
திடீரென்று நவம்பரில், மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான இரண்டு டெஸ்டுகள் ஏற்பாடாகி இருக்கின்றன. இதன்மூலம் தன் சொந்த மண்ணில், மும்பையில், 200வது டெஸ்டை ஆடவிருக்கிறார் சச்சின். இதோடு சச்சின் ஓய்வு பெற்றுவிடுவார் என்று யூகங்கள் பறக்கின்றன. அடுத்த ஒரு வருடத்துக்கு இந்திய அணி வெளிநாடுகளில் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதால், அதற்கு முன்பே சச்சின் ஓய்வு பெற்று விடுவதற்கு இது நல்ல தருணம். (வெளிநாடுகளில் ஆடும் போது பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்ற தோனி விரும்புவதில்லை.) 
 
சச்சினின் இறுதி டெஸ்டுகளை ஏன் சென்னையில் நடத்தக்கூடாது? சச்சினின் டெஸ்ட் வாழ்க்கையில் எப்படி மும்பை மிக முக்கியமான மைதானமோ, அதுபோல சென்னைச் சேப்பாக்கமும் அவர் மிகவும் விரும்பும் ஒரு மைதானம். சேப்பாக்கத்தில்தான் அதிக செஞ்சுரிகளை மட்டுமல்லாமல் மறக்கமுடியாத ஆட்டங்களையும் சச்சின் ஆடியிருக்கிறார். இந்தப் பெருமை வேறெந்த மைதானத்துக்கும் கிடையாது. தமக்கு மிகவும் பிடித்தது, சேப்பாக்கம்தான் என்று பல பேட்டிகளில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். சச்சின் சென்னையில் ஆடிய 10 டெஸ்ட் மேட்சுகளில் 5 செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அதுவும் முதல் நான்கு டெஸ்டுகளிலும், சச்சின்தான் மேன் ஆஃப் தி மேட்ச். அதனால் சச்சினின் கடைசி இரண்டு டெஸ்டுகள் சென்னை, மும்பையில் நடப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். என். ஸ்ரீனிவாசன், ஆவன செய்வீர்களா?

நோ மோர் நோக்கியா!

 
நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரும்தொகை கொடுத்து வாங்கிவிட்டது என்பதுதான் ஹாட் டாபிக். ஒரு காலத்தில் நோக்கியா போன்கள்தான் மார்க்கெட்டையே கலக்கிக் கொண்டு இருந்தன. விலை குறைவான ஆரம்ப நிலை போன்கள் அனைத்துமே நோக்கியாவுடையதுதான். ஸ்மார்ட் போன்கள் வருவதற்கு முன்பு, உலக போன் விற்பனையில் அதுதான் முதலிடத்தில் இருந்தது.ஆனால், ஸ்மார்ட்போன்களால் ஏற்பட்ட போட்டியை நோக்கியாவால் எதிர்கொள்ள முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அதன் விற்பனை படிப்படியாக விழ ஆரம்பித்தது. லாபமும் குறைய ஆரம்பித்தது. ஆப்பிள் ஐபோன்களும் கூகுளின் ஆண்ட்ராய்டு வகை போன்களும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துவிட, நோக்கியா பின் தங்கிவிட்டது.இதேபோல், மொபைல் தொழிலில் பின்தங்கிய நிறுவனம், மைக்ரோசாஃப்ட். அதன் விண்டோஸ் இயங்குதளம் சந்தைக்கு வந்தபோது, ஏற்கெனவே ஐபோன் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியிருந்தது. ஒருவகையில், தான் இழந்த சந்தையைக் கைப்பற்றவே நோக்கியா மொபைல் போன் பிரிவை மைக்ரோசாஃப்ட் வாங்கியிருக்கிறது. இரண்டு நிறுவனங்களுமே தோல்வி அடைந்தவை என்பதனால், இவை இணைவதனால் என்ன பெரிய பயனை அடைந்துவிடப் போகின்றன என்ற கேள்வி நிபுணர்களால் எழுப்பப்படுகிறது.
 
ஆனால், நோக்கியாவில் இருக்கும் பல காப்புரிமைகள், முக்கியமாக பல அப்ளிகேஷன்களின் காப்புரிமைகள் மைக்ரோசாஃப்டுக்கு பெருமளவு உதவும். ஐபோனும் ஆண்ட்ராய்டு போன்களும் வேகவேகமாக புதிய அறிமுகங்களைச் செய்து கொண்டே, மக்களைத் திக்குமுக்காடச் செய்து வருகின்றன. அத்தகைய புதுமைகளை, மிக வேகமாகவும் நேர்த்தியாகவும் செய்ய, இந்தக் கூட்டணி உதவும். நோக்கியாவின் 32,000 ஊழியர்களும் இப்போது மைக்ரோசாஃப்டுக்கு மாறியிருப்பதால், அவர்களின் பங்களிப்பும் மைக்ரோசாஃப்டின் விற்பனைத் திறனும் ஐபோனுக்கும் ஆண்ட்ராய்டுக்கும் வலுவான போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இன்னும் தனியாக, துண்டாக இருப்பது ப்ளாக்பெர்ரி மட்டுமே. ப்ளாக்பெர்ரி போன்களையும் இயங்குதளத்தையும் பயன்படுத்தும் ஒருசிலர் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். போகிற போக்கில், ஒரு நாள் மைக்ரோசாஃப்ட், ப்ளாக்பெர்ரியையும் வளைத்துப் போட்டால் ஆச்சர்யமில்லை. ஸ்மார்ட்போன்களின் போட்டியில், காலாவதியாகி விடாமல் இருக்கவே மைக்ரோசாஃப்ட் விரும்புகிறது.
 
சரி, இந்த இணைப்பு நம் இந்தியாவுக்குச் சொல்லும் செய்தி என்ன? ஆரம்பநிலையில் உள்ள குறைந்த விலை நோக்கியா போன்கள் எல்லாம் இனி காணாமல் போய்விடும். 1100 மாதிரியான அற்புத மாடல்கள், இனி கனவுதான்! 

ஆர்.வெங்கடேஷ்

சினிமாவுக்கு ஏன் வரிவிலக்கு?


தமிழ் சினிமாக்காரர்களுக்கு எந்த ஒரு விஷயம் குறித்தும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், அதை தைரியமாக வெளியில் சொல்வதற்குத் தயங்குகிறார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்ட் ‘தலைவா’ பட விவகாரம். ‘தலைவா’ படத்தின் காட்சிகளில் 400க்கும் அதிகமான ஆங்கில, ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன; ஹீரோ, சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறார்; படத்துக்கு சென்சார் போர்டும் யூ சர்டிஃபிகேட் கொடுத்திருந்தாலும், ‘அதிக அளவில் வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன,’ என்று காரணம் சொல்லி, படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க அரசு மறுத்துவிட்டது. இதற்கு முன்னால், உதயநிதி ஸ்டாலினின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படமும், அவர் தயாரித்த ‘ஏழாம் அறிவு’ படமும் வரி விலக்கு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதை மறக்க முடியாது. இத்தகைய சூழலில், ஒரு படத்துக்கு வரிவிலக்கு பெற்றே தீர வேண்டும் என்று கட்டாயமா என்ன? வரி விலக்கு பெறாமல் ரிலீஸ் செய்ய முடியாதா என்ன? வரிவிலக்கு பெறுவதால் யாருக்கு லாபம்? வரிவிலக்கு பெறுவதற்கான விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அரசியல் நுழைவது ஏன்? போன்ற கேள்விகள் ஒரு பக்கமும், சினிமாக்களுக்கு எதற்காக வரிவிலக்கு அளிக்க வேண்டும்? கேளிக்கை வரி மூலமாகக் கிடைக்கும் வருவாயை அரசாங்கம் எதற்காக இழக்க வேண்டும்? என்றும் கேள்விகள் எழுகின்றன. அவை அனைத்தையும் குறித்த கலக்கலான அலசல் இது: 

1980களில் தமிழ்நாடு முழுவதிலுமாக 2400 சினிமா தியேட்டர்கள் இருந்தன. அவற்றில் சுமார் 20 லட்சம் இருக்கைகள் இருந்தன. ஆனால் இன்று தியேட்டர்களின் எண்ணிக்கை எண்ணூறாகச் சரிந்து விட்டது. ஒரு தியேட்டரின் சராசரி இருக்கைகள் எண்ணிக்கையும் 400 ஆகிவிட்டது. அதாவது மொத்த இருக்கைகள் எண்ணிக்கை சுமார் மூணு லட்சத்து 20 ஆயிரம்தான். பெரிய ஹீரோக்களின், புதுப்பட ரிலீசை ஒட்டிய ஒரு சிலநாட்களில் மட்டுமே தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகின்றன.  பொதுவாக, நகர்ப்புறங்களில் சில தியேட்டர்களில் மட்டுமே சராசரியாக 50 முதல் 65 சதவிகிதம்வரை எல்லா நாட்களிலும் இருக்கைகள் நிறைகின்றன. மற்றபடி, தமிழ்நாட்டில் தியேட்டர்களில் சராசரியாக 25 சதவிகித இருக்கைகளே நிரம்புகின்றன என்று புள்ளி விவரங்கள் சோக கீதம் இசைக்கின்றன. போதாக்குறைக்கு தமிழ் சினிமாவை, திருட்டு வி.சி.டி. என்ற பிரம்ம ராட்சசன் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறான். எனவே, படம் ரிலீசாகி, எவ்வளவு சீக்கிரமாக அதிகபட்ச வசூலைப் பார்க்கலாம் என்று யோசிக்கும் சினிமாக்காரர்களின் நோக்கத்தையும் குறை சொல்ல முடியாது. எனவே, குறுகிய காலத்தில் அதிகபட்ச வசூலுக்கு அரசாங்கம் கொடுக்கும் வரிவிலக்கு கைகொடுக்கிறது என்பதால் சினிமாக்காரர்கள் வரி விலக்குக்காக அரசாங்கத்தின் வாசலைத் தட்டி விட்டுக் காத்திருக்க வேண்டி உள்ளது.தியேட்டர்களில் 10 சதவிகித இருக்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் பத்து ரூபாய்தான் எனவும், மீதி 90% இருக்கைகளுக்கு, உணவகம் கொண்ட தியேட்டர் வளாகங்களில் 120 ரூபாய் என்றும், மற்ற தியேட்டர்களில் அதிக பட்சக் கட்டணம் 95 ரூபாய் என்றும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தில் அரசாங்கம் விதிக்கும் 30% கேளிக்கை வரியும் அடங்கும். படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்போது, இந்த டிக்கெட் கட்டணம் அப்படியே முழுசாக தியேட்டர்காரர், வினியோகஸ்தர் என முழுசாக சினிமாக்காரர்களுக்கே போய்ச் சேரும். இல்லையெனில், வரி போக, மீதிதான் அவர்கள் கைக்குக் கிடைக்கும். அதனால்தான், வரிவிலக்கு என்பது கணிசமான உபரி வருமானம் என்று அதை எப்படியும் பெற்றுவிட சினிமா உலகத்தினர் நினைக்கிறார்கள். கடந்த ஆட்சியின்போது தமிழில் சினிமாவுக்குப் பெயர் வைத்தால், வரி விலக்கு என்று கலைஞர் அறிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஜெயலலிதா, அதை மாற்றி, புதிய விதிமுறைகளை அறிவித்தார்.

அந்தக் காலத்தில் தேசப்பற்று ஊட்டும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு எடுக்கப்பட்ட சமூகப் படங்களுக்கு அரசாங்கம் கேளிக்கை வரியிலிருந்து விதிவிலக்கு அளித்து அதன்மூலம் அதிக அளவில் மக்கள் வந்து அந்தப் படங்களைப் பார்த்துப் பயன் பெற்றார்கள். ஆனால், இன்று வருகிற படங்களில் வியாபாரம்தானே நோக்கமாக இருக்கிறது? சமூகத்துக்கு நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லும் படங்களை எத்தனை பேர் எடுக்கிறார்கள்? அப்படி இருக்கும்போது, அரசாங்கம் எதற்காக சினிமாக்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான்  கேள்வி.

உயிர் காக்கும் மருந்துகள், உணவுப் பொருட்கள், இதர அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட முழுமையாக இங்கே வரி விலக்கு கிடையாது. அப்படி இருக்கும்போது, கோடிக்கணக்கான முதலீடு செய்து, லாப நோக்கத்தோடு எடுக்கப்படும் சினிமாக்களுக்கு எதற்கு வரி விலக்கு? பெட்ரோல் விலை உயரும்போது, அதன் பாதிப்பு மக்களைப் பாதிக்காமல் இருக்க, விற்பனை வரியைக் குறையுங்கள் என்ற ஆலோசனை, அரசாங்கத்தின் காதில் விழவில்லை; ஆனால், சினிமாவுக்கு வரிவிலக்கு கொடுத்து, அதன் மூலமாக ஆண்டு தோறும் கோடிக்கணக்கான வரிவசூலை அரசாங்கம் இழந்து கொண்டிருக்கிறது. இது நியாயமா? தி.மு.க. ஆனாலும் சரி, அ.தி.மு.க. ஆனாலும் சரி, சினிமாக்காரர்கள் என்றால் ரொம்பவே கரிசனம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு எதற்காக சிறப்புச் சலுகை காட்ட வேண்டும்? இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சினிமா தியேட்டர்களில் கேளிக்கை வரியின் மூலமாகக் கிடைக்கும் தொகை, முழுவதுமாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான் போய்ச் சேர வேண்டும். அரசாங்கத்தின் வரிவிலக்குக் கொள்கை காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசு ஈடு செய்வதும் இல்லை. எனவே, தமிழக அரசாங்கம் உடனடியாக இந்த வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்.


ஓ பக்கங்கள் - வரலாறு சொல்லும் வெர்செய்ல்ஸ் அரண்மனை! ஞாநி


பாரீசிலும் ரோமிலும் பிக்பாக்கெட் பயம் அதிகம் என்ற கருத்து டூரிஸ்ட்டுகளிடையே பரவலாக இருக்கிறது. கமல்ஹாசன் இதை ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஒரு காட்சியின் மூலம் பிரதிபலித்திருப்பார். இப்படி பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அகதிகள்தான் என்பதே பொது நம்பிக்கை.எந்தச் சமூகத்திலும் ‘வந்தேறிகள்’ என்று சிலர் அடையாளப் படுத்தப்படுவார்கள். சமூகத்தின் முன்னேற்றத்துக்கு இவர்களுடைய பங்களிப்பு அங்கீகரிக்கப்படாவிட்டாலும் கூட, சமூகத்தில் இவர்களால் ஏற்பட்ட தீங்குகள் எப்போதும் நினைவுபடுத்தப் பட்டுக் கொண்டே இருக்கும். இது உலகம் முழுவதும் எல்லா கலாசாரங்களிலும் சமூகங்களிலும் நிலவும் மனித இயல்பு.ஐரோப்பா நெடுக இதன் வெளிப்பாடுகளைப் பார்க்க முடியும். பிரான்சிலும் இத்தாலியிலும் டூரிஸ்ட்டுகளிடம் பிக்பாக்கெட்டுகள் ஜாக்கிரதை என்று சொல்லப்படுவதற்குப் பின்னணியில் இந்த அகதி அரசியலும் கலந்திருக்கிறது.பிற நாடுகளிலிருந்து அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று அரசு உதவிகளை அடைந்து வாழ்க்கை நடத்துவோரில் சிலர் குற்றங்களில் ஈடுபடுவது என்பது ஆச்சர்யமானதல்ல. உள்ளூர் சமூகத்தில் எப்படி ஒரு சதவிகிதத்தினர் குற்றவாளிகளாக இருப்பார்களோ அதேபோல அகதிகளாக வருவோரிலும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் நடக்கும் குற்றங்களுக்கெல்லாம் இந்த அகதிகள் மீது பழி போடுவது என்பது உள்ளூர் அரசியலுக்கு வசதியானதாகும்.

பிரான்சில் நான் உரையாடிய பலரிடம் இந்தத் தாக்கம் தெரிந்தது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்தோர்தான் பல பிக்பாக்கெட், வழிப்பறிக் குற்றங்களுக்குக் காரணம் என்றும், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்தான் போதைப் பொருள் கடத்தல், குழுச் சண்டைகள் போன்ற குற்றங்களுக்குப் பொறுப்பு என்றும் கருத்துகள் நிலவுகின்றன. இப்படிப்பட்ட அரை உண்மைகள்தான் சமூக மனத்தில் எந்த இனத்தைப் பற்றியும் ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழ் நாட்டில் கூட அண்மைக் காலங்களில் பீஹார், ஜார்கண்ட், நேபாளம் ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான உடல் உழைப்பாளிகள் பணிபுரிய புலம் பெயர்ந்து வந்த நிலையில், கொலை, கொள்ளைக் குற்றங்கள் பலவற்றுக்கும் வடவர்களே பொறுப்பு என்ற பிம்பத்தை போலீசும் மீடியாவும் உருவாக்கத் தொடங்கியது நினைவிருக்கலாம்.  என்னுடைய 30 நாள் ஐரோப்பா சுற்றுப் பயணத்தில் எந்த இடத்திலும் எனக்கு பிக்பாக்கெட் வழிப்பறிச் சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை.பொதுவாக இந்தியாவோடு ஒப்பிடும்போது மேலைநாடுகளில் மக்கள்தொகை குறைவு என்பதும் அதனால் பொது இடங்களில் நெரிசல் குறைவு என்பதும் உண்மையானாலும், டூரிஸ்ட்டுகள் வரும் இடங்கள் அப்படி இல்லை. மியூசியங்களைப் பார்க்க, பெரிய கியூ வரிசைகள் இருக்கின்றன. வெர்செல்ஸ் அரண்மனையைக் காணவும் வாடிகன் ஆலய வாசலிலும் கிலோமீட்டர் கணக்கில் கியூ நிற்கிறது. பல டூரிஸ்ட் இடங்களில் உணவகங்களில் உட்கார இடம் கிடைக்கக் காத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக ஐரோப்பாவைச் சுற்றிப் பார்க்க விரும்பும் யாரும் மைல் கணக்கில் நடக்கத் தயாராக இருக்க வேண்டும். டிராம், மெட்ரோ, சப்வே, புறநகர் ரயில், பேருந்துகள் என்று போக்குவரத்து வசதிகள் மிகச் சிறப்பாக இங்கே உள்ளன. சைக்கிளையோ பைக்கையோ கூட வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றும் வசதிகள் பல நாடுகளில் இருக்கின்றன. ஆனால் டிராம் ஸ்டேஷனிலிருந்து, ரயிலடிக்கு, அங்கிருந்து பஸ்சுக்கு, ரயில் நிலையத்தில் பலவிதமான மாடிப்படிகள், நகரும் படிகள், லிப்டுகள், சுரங்கப் பாதைகள் என்று கடந்து சென்று வண்டி மாறுவதற்கெல்லாம் கணிசமாக நடக்கத்தான் வேண்டும். பின்னர் முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்க்கச் செல்லும்போது அங்கேயும் நிறைய நடக்க வேண்டியிருக்கும்.

அப்படி மிக அதிக தூரம் ரயிலடியிலிருந்து நடந்து போய் நான் பார்த்த ஒரு இடம் பிரான்சின் வெர்செல்ஸ் அரண்மனை.  வெர்செல்ஸ் அரண்மனை பிரம்மாண்டமானது. அதன் தோட்டம் இன்னும் பிரம்மாண்டமானது. இத்தனை பெரிய அரண்மனை இந்தியாவில் எங்கேயும் இல்லை. மன்னன் பதிமூன்றாம் லூயி காலத்தில் வெர்செல்ஸ் ஒரு சின்ன கிராமம். சுற்றிலும் பெரும்காடு. வேட்டையாட வரும்போது தங்குவதற்காகக் கட்டிய குடில்தான் பின்னாளில் கிராமத்தையே அழித்து அரண்மனையாயிற்று. பதினான்காம் லூயி காலத்தில் பெரும் அரண்மனையாக உருவெடுத்தது. அரச தர்பாரே இங்கேதான் நடக்கும் என்ற நிலை 1682ல் ஏற்பட்டது. பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் அரண்மனைக்கு ஆபத்து வந்தது. அதுவரை ராஜ குடும்பம், பிரபுக்களின் குடியிருப்பாகவும் அரச சொத்துகளின் கண்காட்சிக் கூடமாகவும் இருந்த வெர்செல்ஸ் பூட்டி வைக்கப்பட்டது. அதிலிருக்கும் தங்கம், வெள்ளி, ஆடம்பரப் பொருட்கள், நாற்காலி மேசைகள், கட்டில்கள் எல்லாவற்றையும் ஏலம் போட்டு விடலாம் என்று புதிய அரசு யோசிக்க ஆரம்பித்தது. ஓரளவு ஏலமும் விடப்பட்டது. பின்னர் நெப்போலியன் ஆட்சியில் அரண்மனை மறுபடியும் தர்பார் மண்டபமாகவும் காட்சியகமாகவும் மாறியது.வெர்செல்ஸ் அரண்மனையைக் கட்ட எவ்வளவு செலவாகியிருக்கும் என்ற மதிப்பீடுகள் இன்றும் நடந்த வண்ணம் உள்ளன. இன்றைய கணக்கில் சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியிருக்கலாம் என்பது ஒரு மதிப்பீடு. இதுவே குறைவான மதிப்பீடுதான். பதிமூன்றாம் லூயி தொடங்கி அடுத்தடுத்து நான்கைந்து மன்னர்கள் ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டு வந்த அரண்மனையில் 100 நூலகங்கள் இருந்துள்ளன. அவற்றில் இரண்டு லட்சம் புத்தகங்கள் இருந்தன. அரண்மனையை அலங்கரிக்கத் தேவையான பட்டுத்துணியைத் தயாரிக்க தனி நெசவாலை நடத்தப்பட்டது. கண்ணாடிப் பொருட்களை உருவாக்க வெனிசிலிருந்து கைவினைக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்கள் கண்ணாடி தயாரிப்பு ரகசிய உத்திகள் வெளியே இப்படித் தெரியக்கூடாது என்பதற்காக வெனிசில் பல கலைஞர்கள் வேலை செய்து முடித்ததும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.வெர்செல்ஸ் அரண்மனை பற்றி எழுதும்போது அரசிமேரி அந்தோணியே பற்றி எழுதாமல் விடமுடியாது. பிரெஞ்சுப் புரட்சியின்போது கொல்லப்பட்ட பதினாறாம் லூயியின் மனைவியான ராணி மேரி பற்றிப் பல கதைகள் உலவுகின்றன. தம் தாய்நாடான ஆஸ்திரியாவுக்கு விசுவாசமாக பிரான்சின் செல்வங்களைச் சுரண்டி அங்கே அனுப்பினார் மேரி என்பது ஒரு குற்றச்சாட்டு. மக்கள் பசியில் வாடி ரொட்டிக்கு ஏங்கியபோது ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடலாமே என்று சொன்னார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. வெவ்வேறு பிரபுக்களுடன் கூட்டாக பாலியல் கேளிக்கைக் கூடாரமாக அரண்மனையை மாற்றிவிட்டார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. மரணதண்டனைக்கு முன்னால் அவர் மீது வைக்கப்பட்ட கடைசி குற்றச்சாட்டு தம் இளம் மகனுடன் பாலுறவு வைத்தார் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டுகளில் பலவும் கற்பனையானவை, சில அரை உண்மைகள், சில முழு உண்மைகள் என்பது இன்றைய ஆய்வாளர்கள் சிலரின் கருத்து.மேரி, ராணியாக இருந்தபோது சந்தித்த பிரமுகர்களில் முக்கியமானவர்கள் நம்ம ஊர் திப்பு சுல்தானின் தூதர்கள். இந்தத் தூதர்கள் ராணிக்கு அளித்த பரிசுகளும் ராணி, திப்புவுக்கு அனுப்பி வைத்த பரிசுகளும் இன்னமும் மியூசியங்களில் உள்ளன. பிரிட்டிஷாருக்கு எதிராக திப்பு, பிரெஞ்சு உதவியை நாடியதும் பிரிட்டிஷுக்கு எதிராக திப்புவைப் பயன்படுத்த முடியுமா என்று பிரெஞ்சு முயற்சித்ததும் வரலாறுகள்.

மேரி கடைசியில் கில்லட்டின் பொறியில் தலை துண்டிக்கப்படும் முன்பாக முடிவெட்டப்பட்டு திறந்த வண்டியில் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கில்லட்டின் இயந்திரத்தின் முன்னால் தலையை வைக்கும்போது, மேரியின் கால் தவறுதலாக கில்லட்டின் இயக்குபவரின் கால் மீது பட்டதாகவும், உடனே அவரிடம் அதற்கு மன்னிப்பு கேட்டதாகவும் அவையே அவருடைய கடைசி சொற்கள் என்றும் ஒரு கதை இருக்கிறது.கடைசியில் தெருத்தெருவாக அலங்கோலமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட ராணியும் அரச குடும்பத்தினரும் ஆட்சி செய்த காலங்களில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு அரண்மனை அறைகள் சாட்சியமாக இருக்கின்றன. அறை சுவர் முழுக்க அற்புதமான ஓவியங்கள், நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மேசைகள், கட்டில்கள், உபயோகப் பொருட்கள், கண்ணாடி விளக்குகள், பட்டு மெத்தைகள் எல்லாம் இதுபோன்ற அரச வாழ்க்கை இந்தியாவிலோ தமிழகத்திலோ இருந்திருக்க முடியுமா என்ற ஐயத்தையே எனக்கு எழுப்பு கின்றன. இன்று வெர்செல்ஸ் அரண்மனைக்கு தினசரி ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உலகின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கே நுழைவிடமருகே சுத்தமான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆனால் வெர்செல்ஸ் அரண்மனையில் அரசர்களும் பிரபுக்களும் வசித்து வாழ்ந்த காலத்தில் கழிப்பறைகள் கிடையாது! அங்கே உள்ளே எப்போது போய் வந்தாலும் எல்லோர் துணியிலும் மோசமான வாடை அடிக்கும் என்று ஒரு வரலாற்றுப் பதிவு இருக்கிறது. நூற்றுக்கணக்கான செல்வக் குடும்பங்கள் வசித்த வெர்செல்ஸ் அரண்மனையில் மன்னன், ராணி குடும்பத்தினர் உபயோகிப்பதற்கு மொத்தமாக ஏழே ஏழு கழிப்பிடங்கள் இருந்தனவாம். அவையும் உலர் கழிப்பறைகள். மீதி அறைகளில் எல்லாம் மலச்சட்டிகள் இருக்கும். பலரும் அவற்றை ஜன்னல் வழியே வெளியே கொட்டிக் கொண்டிருந்தார்கள், அதனால்தான் அரண்மனையில் எப்போதும் வாடை என்று ஓர் ஆவணம் சொல்கிறது!இப்படி அருவருப்பான வாடை வீசிய வெர்செல்ஸ் அரண்மனை, ஒரு நாட்டைப் பொறுத்த மட்டில் மறக்க முடியாத கசப்புணர்ச்சியையே எழுப்பும். அதுதான் ஜெர்மனி. முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோற்றதும் அது இதர நாடுகளுக்கு நஷ்டஈடாக 31.4 பில்லியன் மார்க்குகள் (இன்றைய மதிப்பில் 442 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொடுக்க வேண்டுமென்று பிரான்சும் பிரிட்டனும் அமெரிக்காவும் போட்ட வெர்செல்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது இந்த அரண்மனையில்தான். ஒப்பந்தப்படி ஜெர்மனி பணமும் கொடுத்தது! பிரான்சின் தலைநகரான பாரீசுக்குப் போனால் தவறவிடக் கூடாத வரலாற்று இடங்கள் தலைநகரின் மையத்தில் இருக்கும் லூவ்ரு மியூசியமும் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வெர்செல்ஸ் அரண்மனையும்தான். ஈபெல் டவரை விட இவையே முக்கியமானவை.

Tuesday, September 03, 2013

மகாபெரியவா சொன்ன கதைகள் - தியாகக் கதை !


தியாகம் பற்றி நம் புராணங்களில் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போதுள்ள தலைமுறையினரிடம் தியாகம் பற்றி எடுத்துச் சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. நான், என் குடும்பம் என்றாகிப்போன இன்றைய சூழலில் காஞ்சி மகா பெரியவா சொல்லும் தியாகத்தின் கதை, நாம் எல்லோரும் அறியவேண்டிய ஒன்று.

இதோ, அந்தத் தியாகக் கதை!

கொடுக்க வேண்டும். அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்கும்போது, ''நான்தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது'' என்கிற பரம தியாக புத்தியில்...

'ந மம’ - 'எனதில்லை; எனக்கில்லை’ என்று, அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.

மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, ''நான் கொடுத்தேன்'' என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால், இந்த அகங்கார மானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபி விருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். தியாகம் பண்ண வேண்டும்; அதைவிட முக்கியமாக, தியாகம் பண்ணினேன் என்கிற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும். 'ஸோஷியல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்'' என்று சொல்லிக்கொண்டு, வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால், இவனுக்கும் பிரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் பிரயோஜனமிராது. தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால், அது நின்று நிலைத்து விளங்காது.

சிபியின் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு புறாவுக்காகத் தன் சரீரத்தையே, பிராணனையே தியாகம் செய்ய முற்பட்ட மஹாபுருஷன் அவன். நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்குத் தந்திருக்கிற முக்கிய மான ஸ்தானத்துக்கு சிபி கதை ஒன்றே போதும்.

வேத பூமியான இந்த பாரதபூமியின் விசேஷம் மனுஷ்யனுக்காக மட்டுமில்லாமல், மற்ற ஜீவராசி களுக்கும், பூச்சி பொட்டுகளுக்கும்கூட க்ஷேமத்தைக் கோரி தியாகம் பண்ணச் சொல்வது. இதில், இன்னொரு பக்கம், இந்த மண்ணின் விசேஷத்தால் மற்ற ஜீவராசிகளுக்கும்கூட இப்படிப்பட்ட பரோபகார சிந்தனையும், தியாக புத்தியும் இருப்பதாகச் சொல்கிற புராண விருத்தாந்தங்களைப் பார்க்கிறோம்.

புறாவுக்காகத் தியாகம் செய்த சிபியைப் பற்றிச் சொன்னேன். புறாக்களே செய்த பரம தியாகத்தை 'கபோத உபாக்யானம்’ சொல்லுகிறது. 'கபோதம்’ என்றால் புறா என்று அர்த்தம். 'உபாக்யானம்’ என்றால், சின்ன கதை என்று அர்த்தம். இந்தப் புறாக்களின் கதை மனசை ரொம்பவும் உருக்குவது.

வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காட்டிலே வலை வீசி, ஒரு பெண் புறாவைப் பிடித்தான். அப்போது ஒரே இடியும் மழையுமாக வந்தது. இந்தப் புறாவும், அதன் ஜோடியான ஆண் புறாவும் வசித்த மரத்தடியிலேயே அவன் ஒண்டிக்கொண்டான். மழை நின்றபோது, நல்ல இருட்டாகிவிட்டது. ஒரே குளிர்! வேடனால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடம்பெல்லாம் நடுங்க, அங்கேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.இதைப் பார்த்த மரத்தின் மேல் இருந்த ஆண் புறா தன்னுடைய ப்ரிய பத்தினியைப் பிடித்த பாபி நன்றாக அவஸ்தைப் படட்டும் என்று நினைக்கவில்லை. நேர்மாறாக, நம் தேசத்தின் விருந்தோம்பல் பண்பு முழுதும் அந்தச் சின்ன பட்சியிடம் திரண்டு வந்துவிட்டது. ''நாம் வசிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி. 'அதிதி தேவோ பவ’ - 'விருந்தாளியை தெய்வமாக நினை’ என்பது வேதை ஆக்ஞை. எனவே, இந்த அதிதிக்குத் தன்னாலான ஒத்தாசையைச் செய்ய வேண்டும்'' என்று நினைத்தது.முதலில், குளிரில் நடுங்குகிறவனுக்குக் கணப்பு மூட்டவேண்டும் என்று நினைத்தது. தன் கூட்டையே பிரித்து, அதிலிருந்த காய்ந்த குச்சிகளை வேடனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டது. தன் வீடு போனாலும் சரி, அவனுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற உத்தமமான எண்ணம்.'சிகிமுகி’ கல் என்று ஒன்று உண்டு. 'சிக்கிமுக்கி’ என்று பேச்சு வழக்கில் சொல்லு கிறார்கள். 'சிகி’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். 'சிகை’ உள்ளதெல்லாம் 'சிகி’தான். சிகையை விரித்துக்கொண்டு ஆடுகிற மாதிரிதானே நெருப்பு ஜ்வாலை நாக்குகளை நீட்டிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிகிறது? 'முகம்’ என்றால் வாய். வாயில் நெருப்பை உடைய கல்தான், அதாவது தேய்த்தால் நெருப்பை உமிழ்கிற கல்தான் 'சிகிமுகி’.

இப்படிப்பட்ட சிகிமுகி கற்களைப் புறா தேடிக்கொண்டு வந்து போட்டது. வேடன் அவற்றை ஒன்றோடொன்று தட்டி நெருப்பு உண்டாக்கி, அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்றவைத்துக் குளிர் காய்ந்தான்.தனக்குப் புறா இத்தனை உபகாரம் செய்ததும், வேடனுடைய குரூர சுபாவம் கூட மாறி, மனசு இளகிவிட்டது. தான் பிடித்திருந்த அதனுடைய பேடையை விட்டுவிட்டான்.'விருந்தோம்பல் என்றால், முக்கியமாக அதிதிக்குச் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் இங்கே நம் விருந்தாளியாக வந்துவிட்டுப் பட்டினி கிடந்தால், அதனால் நமக்கு மஹாபாபம் ஏற்படும். இவனுடைய பசியை ஆற்றுவதே நம் முதல் தர்மம்’ என்று பெண் புறா நினைத்தது.அவனுடைய ஆகாரத்துக்காக அது வேறு எங்கேயோ போய்த் தேடவில்லை. தானே இருக்கும்போது வேறு ஆகாரம் தேடுவானேன் என்று நினைத்தது. உடனேயே, கொஞ்சங்கூட யோசிக்காமல், பரம சந்தோஷத்தோடு அந்த அக்னியில் தானே விழுந்து பிராண தியாகம் பண்ணி விட்டது. நெருப்பில் வெந்து பக்வமான தன்னை அவன் புசிக்கட்டும் என்ற உத்தம சிந்தை.இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பட்சியும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னை வதக்கிக் கொண்டது. 'என்பும் உரியர் பிறர்க்கு’ என்கிற மாதிரி, இப்படி உயிரையே தந்தாவது இன்னொருத்தருக்கு உபசரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நம் மத க்ரந்தங்களில் எல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறது.'


 

Monday, September 02, 2013

தங்கம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனையான தங்கம், இன்று மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்தது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுவருவதால் நம் நாட்டில் தங்கத்தின் விலை இப்படி தாறுமாறாக உயர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று 10 கிராம் தங்கம் 34,500 ரூபாய்க்கு புதிய உச்சத்தைத் தொட்டது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதியன்று 32,975 ரூபாய்க்கு வர்த்தகமானதே இதுவரையில் தங்கம் கண்ட உச்சபட்ச விலையாக இருந்தது. இப்போது அந்த விலையைத் தாண்டிச் சென்றுவிட்டதைப் பார்த்து குடும்பத் தலைவிகள் கவலையில் மூழ்கி இருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,350 டாலர் என்கிற அளவிலேயே வர்த்தகமானது. அமெரிக்கப் பொருளாதாரம் சீர்பட ஆரம்பித்த தால் தங்கத்திற்கான மவுசு கொஞ்சம் குறைய ஆரம்பித்தது.

இப்போது சர்வதேச நிலைமை கொஞ்சம் மாறியதால் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கிறது.

 

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அமெரிக்கா, சிரியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதால் பாதுகாப்பு முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் முதலீட்டாளர்கள்.மேலும், இந்தியாவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 68.75 ரூபாய்க்கு ஆகஸ்ட் 28-ம் தேதி சரிந்தது. இவை அனைத்தும் தற்போது தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு காரணங்களாகும்.தங்கத்தின் விலை உயர்விற்கு காரணமான அதே காரணங்கள்தான் வெள்ளியின் விலைக்கும் காரணமாக அமையும். 10 கிராம் வெள்ளி 60,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது. சர்வதேச சிக்கல்களும், ரூபாயின் மதிப்பும் வில்லன்களாக  மாறி தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை ஏற்றிவிட்டது என்று சொல்வதே சரி!

இந்திய ரூபாய் மதிப்பு... சரிய வைத்த சக்திகள்!

கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.90 வரை குறைந்து, மத்திய அரசாங்கத்திற்கு மிகப் பெரும் கலக்கத்தை உருவாக்கியது. இன்னும் சில நாட்களில் ரூபாய் மதிப்பு 70-ஆக குறையும் என எல்லோரும் நடுங்கிய வேளையில், ரூபாய் மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருப்பது சற்று நிம்மதி அளிக்கும் லேட்டஸ்ட் தகவல்.இந்திய ரூபாய் மதிப்பு மட்டுமல்ல, உலக அளவில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாணய மதிப்பு நடப்பாண்டில் 23 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் 20.7 சதவிகிதம் வீழ்ச்சியுடன் இந்தியா உள்ளது. பிரேசில் 17.6 சதவிகிதம் குறைந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், சீனா மட்டும் 2 சதவிகிதம் முன்னேற்றத்துடன் ஏறுமுகத்தில் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

இந்திய ரூபாய் மதிப்பு ஏன் இந்த அளவுக்கு சரிந்தது? அதற்கு என்னதான் காரணம்?

''ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததற்கு பல காரணங்கள். அதில் முக்கியமானது, அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதால், இந்தியாவில் முதலீடாகி இருந்த அமெரிக்க டாலர் மீண்டும் சொந்த நாட்டுக்கே சென்றது. இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயர்ந்தது.

 

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.24,000 கோடி!) முதலீடு இந்தியாவைவிட்டு வெளியேறி இருக்கிறது. இதிலும் குறிப்பாக, கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மட்டும் 400 மில்லியன் டாலர் (ரூ.2,400 கோடி) வெளியேறி இருக்கிறது. ரூபாயின் மதிப்பு சரிவினால் இந்திய பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.தங்கம், கச்சா எண்ணெய் போன்றவை அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததன் காரணமாகவும் டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமாக இருப்பதினால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 நாடுகளுடன் இந்தியாவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இதில் முதல் பத்து இடத்தில் சீனா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன.

ரூபாய் மதிப்பு குறைந்து வருவதற்கு நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்புதான் முக்கிய காரணம். இந்த பற்றாக்குறை அதிகரிக்க, அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதே என்று நினைத்த மத்திய அரசு, தங்கம் இறக்குமதி செய்ய பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, தங்க இறக்குமதி வரியை நடப்பு ஆண்டில் 2-லிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்தது. தங்க நாணய விற்பனைக்கும் தடை விதித்தது. அப்படியும் தங்க விற்பனைக் குறையவில்லை.  

 இந்த வருடம் 18 மின் திட்டங்களைத் தொடங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 1,83,000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மத்திய முதலீட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. நாட்டின் 9 உள்கட்டமைப்புத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்த 9 திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.92,514 கோடியாகும் என்று கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி செய்தியாளர்களிடம் சொன்னார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். புதிய முதலீடுகள் வருவதன் மூலம் இனி ரூபாய் மதிப்பு வலுவடை யும்.

மேலும், இந்திய பொருளாதாரத்தை சரிசெய்ய, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த மத்திய அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கிப் போவதால் வேறு வழியின்றி அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. சமையல் கேஸ் விலையையும் இனி மாதந்தோறும் சிலிண்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இனி வெளிமார்க்கெட்டில் டாலர் வாங்கத் தேவையில்லை என்று சொல்லி இருக்கிறது மத்திய அரசாங்கம். குறிப்பிட்ட சில அரசு வங்கிகள் மூலம் டாலர் வாங்குவதால்  சந்தையில் டாலருக்கான தேவை அதிகரிப்பதை தடுக்க  முயற்சித்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

தவிர, மக்களிடம் இருக்கும் தங்கத்தை மீண்டும் வங்கிகளே வாங்க முடிவு செய்திருப்பதால் இனி தங்கம் இறக்குமதி ஆவது குறையும் என எதிர்பார்க்கலாம். மேலும், எம்.சி.எக்ஸ். கமாடிட்டி சந்தையில் தங்கத்திற்கான மார்ஜின் 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனாலும் தங்கம் அதிக அளவில் டிரேட் ஆவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



''கடந்த வாரம் ரூபாயின் மதிப்பு 68.90 ஆக சரிந்தாலும், இனி அந்த அளவுக்கு குறைவது கடினம். மத்திய அரசு ரூபாயின் மதிப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தங்கம், ஆயில் இறக்குமதி தவிர எலெக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதியும் அதிகமாக இருப்பதால், அந்த இறக்குமதியைக் குறைக்க, எலெக்ட்ரானிக் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது.

ரூபாயின் மதிப்பு 66-க்கு மேல் இருக்கும் நிலையில், அடுத்த சப்போர்ட் லெவல் 61 ரூபாய்.  ரெசிஸ்டன்ஸ் லெவல் 68 ரூபாய்''