தொழில்நுட்ப
மாறுதலுக்கு ஏற்றவாறு செல்போன்களும் தினம் தினம் மாறி வருகின்றன.
லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் அமைந்த இந்த செல்போன்களை குறைந்த விலை யில்
வாங்க வேண்டும் என்பதே இன்றைய வாடிக்கையாளர்களின் மனநிலையாக உள்ளது. இதனைப்
புரிந்துகொண்ட செல்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத்
துவங்கிவிட்டன. ஸ்மார்ட் போன் என்றாலே 10,000 ரூபாய்க்குமேல் இருக்கும்
என்கிற நிலை மாறி, ரூ.1,500 ரூபாய்க்கும் அதற்குக் கீழேயும்கூட கிடைக்கும்
என்கிற நிலை வந்துவிட்டது.
குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைக்கும்போது, அதிக விலை தந்து ஏன்
வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பலர். விலை குறைந்த ஸ்மார்ட் போன்களை
வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?
1.சிறப்பம்சங்களைக் கவனியுங்கள்!
குறைந்த விலை செல்போன்களை வாங்கும்போது அந்த போனை ஆன்லைன் மற்றும் ரீடெயில்
கடைகளில் காட்சிக்கு வைத்திருப்பார்கள். அந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள்
என்னென்ன என்பதை முதலில் சரியாக புரிந்துகொள்ளுங்கள். தவிர, அது இரண்டாம்
தர அல்லது போலி பாகங் களைக் கொண்டு உருவாக்கப்பட்டி ருக்கலாம். உதாரணமாக,
ரூ.10,000 செலவழித்து வாங்கும் செல்போனில் 2ஜிபி அளவுக்கு மெமரி
இருக்கும். ரூ.3,000-ல் வாங்கப்படும் செல்போனிலும் அதே அளவு மெமரி
இருக்கும். ஆனால், குறைந்த தரத்தில் அதனை தயாரித்ததன் மூலம் விலை
ஈடுகட்டப்பட்டிருக்கும். அது தெரியாமல் அந்த செல்போனை வாங்கினால், அது
குறுகிய காலத்துக்கே பயனளிக்கும்.
2.பிராண்டுகளைத் தேர்ந்தெடுங்கள்!
சில நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் செல்போன்களில்
எல்லா வசதிகளும் கிடைப்பதாக விளம்பரப் படுத்துவார்கள். ஆனால், அந்த
செல்போனை தயாரித்த நிறுவனத்தின் பெயர் முன்பின் பரிச்சயம் இல்லாததாக
இருக்கும். அதுபோன்ற நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, நன்கு தெரிந்த
பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்வது நல்லது. பிராண்டுகள் பலரது சாய்ஸாக
இருப்பதால், அவை நன்கு உழைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
3.உத்தரவாதம் இல்லாமல் வாங்காதீர்கள்!
இன்றைக்கு எலெக்ட்ரானிக் சாதனங்கள் தரம் குறைந்த
மூலப்பொருட் களால் தயாரிக்கப்படுவதும், கள்ளச் சந்தையில் விற்கப்படும்
பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதும் அதிகரித் துள்ளது. இதுமாதிரி
தயாரிக்கப்படும் செல்போன்களுக்கு எந்த உத்தரவாதமும் தரப்படுவதில்லை.
உத்தரவாதம் இல்லாத பொருளை வாங்கி, நீங்கள் உங்கள் பணத்தை வீணடிப்பதைவிட,
பணம் கொஞ்சம் அதிகமாகச் செலவானாலும், உத்தரவாதம் உள்ள, நல்ல, தரமான
பொருளையே வாங்குவது புத்திசாலித்தனம். உத்தரவாதம் உள்ள செல்போன்கள்
பழுதானால்கூட அதற்கென இருக்கும் சர்வீஸ் சென்டர் மூலம் சரிசெய்துகொள்ள
முடியும். நீங்களும் வருடத்துக்கு இரண்டு, மூன்று செல்போன் வாங்க வேண்டிய
கட்டாயம் இருக்காது.
4.ரிவியூகளைக் கவனியுங்கள்!
குறைந்த விலை செல்போனைத்தான் வாங்கப்போகிறீர்கள் எனில்,
முதலில் அந்த செல்போனின் பயன்பாடு எப்படி உள்ளது என்பதைக் கவனியுங்கள்.
அதனை ஏற்கெனவே பயன்படுத்தும் நண்பரோ அல்லது உறவினரிடமோ கருத்துக்களைக்
கேளுங்கள். பின்னர் அதுகுறித்த ரிவியூகளை அந்த நிறுவனத்தின் தளத்திலோ
அல்லது அதனை விற்கும் இ-காமர்ஸ் தளத்திலோ படிக்காமல், சமூக வலைதளங்களில்
படியுங்கள். அந்த செல்போனை பயன்படுத்தியவர்கள் அதை விளக்கமாக விமர்சனம்
செய்திருப்பார்கள். இதைவைத்து அந்த செல்போனை வாங்கலாமா, வேண்டாமா என முடிவு
செய்யலாம்.
5.தரம் மற்றும் விலையை ஒப்பிடுங்கள்!
அனைத்தும் தரமாக உள்ளது. ஆனால், குறைந்த விலை என்று
சொன்னால், எப்படி இது சாத்தியம் என நீங்களே ஆராய்ந்து பாருங்கள். தரம்
இல்லை எனில், அதைத் தவிர்த்துவிடுங்கள். அல்லது இன்னும் விலையைக் குறைக்க
முடியுமா என்று பாருங்கள்.
குறைந்த விலை என்பதை மட்டுமே மனதில் கொள்ளாமல், தரமான பொருளா என்று பார்த்து வாங்குங்கள்!
சூடாகும் செல்போன்கள்!
குறைந்த விலையில் செல்போன்களை விற்ற ஒரு நிறுவனம்,
செல்போனை மட்டும் விற்காமல், அதனை வாங்கிப் பயன்படுத்துகிறவர்களின்
தகவல்களையும் சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. அது
மட்டுமின்றி, செல்போன் சார்ஜ் செய்யும்போது சூடாகிறது. அடிக்கடி ஹேங்கும்
ஆகிவிடுகிறது என்ற புகார்கள் இந்தக் குறைந்த விலை செல்போன்கள் மீது
சொல்லப்படுகின்றன. இந்தக் குறைந்த விலை செல்போன்களை வாங்கி, காதில் சூடு
போட்டுக் கொள்ளாமல் இருப்பதே நல்லது!
ச.ஸ்ரீராம்