Search This Blog

Tuesday, April 30, 2013

நான் கடவுள்! - மகா பெரியவா சொன்ன கதைகள்!

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவோர்தான் நம்மில் பலர். கல்யாண விஷயமானாலும், கடவுள் விஷயமானாலும் அவர்கள் அப்படித்தான்! இன்று மாப்பிள்ளைக்குப் பெண் தேடும்  படலம் மிக நீளமானது. ஒரு வருடம், இரண்டு வருடம் என வருடக்கணக்கில் பெண் தேடி, கடைசியில் எதிர்வீட்டுப் பெண்ணைப் பேசி, மணம் முடிப்பார்கள். வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு, நெய் தேடி அலைந்த கதைதான்! 

இந்த விஷயத்தை மகா பெரியவா கதையோடு சொல்லும் விதம் அழகானது; அற்புதமானது! இதோ, அவர் வாய்மொழியாகவே கேட்போமே! 

'கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளின் பெற்றோர், பந்துக்களுக்குள்ளேயே ஒரு முறைப் பையனைப் பார்த்து, அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ, ''புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், ''உன் இஷ்டப்படியே செய்!'' என்று விட்டுவிட்டார்கள்.

அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். எனவே, அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க்கொண்டிருந்தாள்.

ஒருநாள், ராஜா பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிப் போனான். இதை அந்தப் பெண் பார்த்தாள். 'அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்துவிட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் போல் இருக்கிறதே! கல்யாணம் பண்ணினால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்துவிட்டாள்.

 

ஒருநாள், சாமியார் தெருக் கோடியில் ஓர் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தாள். 'சரி சரி, சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள்.

அவளைத் தவிர, அந்தப் பிள்ளையாரிடம் வேறு யாரும் அடிக்கடி வருகிற இடமாக அது இல்லை. அது கோயில்கூட இல்லை; வெறும் மரத்தடிதான். அதனால், தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார் மேலே காலைத் தூக்கிக்கொண்டு 'ஒன்றுக்கு’ப் போயிற்று. அதைப் பார்த்தவுடன், 'அடடா, இந்தப் பிள்ளையாரையும்விட உயர்ந்தது இந்த நாய்தான் போலிருக்கிறதே!’ என்று, அந்த நாயைத் துரத்திக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டாள்.

வழியில், அந்த நாய் மீது ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். அது 'வள்... வள்’ என்று குரைத்துக்கொண்டு முன்னிலும் வேகமாக ஓடியது. ''ஏண்டா அந்த நாயை அடித்தாய்?'' என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக்கொண்டு அதட்டினான்; முதுகில் ஒன்று வைத்தான். 'நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அவனையே அதட்டி அடிக்கிற இவன்தான் எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தவன்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.

இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆசாமி வேறு யாருமல்ல; அவளுடைய அப்பா- அம்மா பார்த்து, முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளைதான்!

'வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான்’ என்று எண்ணிக்கொண்டே சுற்றினாள். கடைசியில், அவன் அவளுக்கு அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான். இப்படி, லௌகிகமாக ஒரு கதை சொல்வர்.
''எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே தத்வந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி சொல்கிறது.


ஹொரைஸன் என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் போய்விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே இருக்கும். 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம் போய்விட்டது. ஆகவே, அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.

'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.

நான்... நான் என்று எதை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதுதான்- அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'

என்ன அருமையாகச் சொல்லியிருக்கிறார், மகா பெரியவா! நாம்தான் உண்மையை அறிந்து தெளிய வேண்டும்

Monday, April 29, 2013

கார் வாங்கும் போது கவனிக்க வேண்டிய A-Z தகவல் கையேடு!


ஐம்பது வருடங்களுக்கு முன் கார் ஒரு ஆடம்பரம்!
முப்பது வருடங்களுக்கு முன் கார் ஒரு அந்தஸ்து!
இருபது வருடங்களுக்கு முன் கார் ஒரு சௌகர்யம்!
இன்றைக்கு கார் ஒருஅடிப்படைத் தேவை!
உங்கள் கார் ஆசைக்குத் தூபம் போட்டு ஊதியிருக்கிறோம். பயன்படுத்தி பலன் பெறுங்க! பழசோ புதுசோ, நல்லதா ஒரு கார் வாங்கி லைஃபை என்ஜாய் பண்ணுங்க!

புதிய கார் வாங்குறீங்களா?

முதலில் விற்பனை நிலையத்துக்குச் சென்று வெவ்வேறு கார்களை ஆராய்ச்சி செய்து அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்று உங்களுக்குத் தோன்றுவதை அங்கேயே குறித்துக் கொள்ளுங்கள். அதேபோல கண்ணில் படும் குறைபாடுகளை நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் முறை பார்க்கச் செல்லும்போது டீலர்களின் வார்த்தைகளில் மயங்காதீர்கள். நான் சும்மா பார்க்கத்தான் வந்தேன்" என்று கூறி அவர்களை அனுப்பி விடுங்கள்.

டீலர்கள் கூறும் விலையோடு ஆன்லைனில் அதே காருக்கான விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். இது குறித்து டீலரிடம் விவாதம் செய்யுங்கள். விலையை நிச்சயம் செய்யும்வரை ஃபைனான்ஸ் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம்.

முன்பு போல டீலர்களை நேரடியாக அணுகித்தான் கார்களைப் பார்க்க முடியும் என்பதில்லை. வலைத் தளங்களில் கார்களின் பலவித தோற்றங்கள் கொண்ட படங்களும் வேறு பல விவரங்களும் உள்ளன. முதல் கட்டமாக அவற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால் டெஸ்ட் டிரைவ் செய்ய நீங்கள் நேரடியாகத்தான் போக வேண்டும். அதாவது நீங்கள் வாங்க உள்ள காரை நீங்கள் ஓட்டிப் பார்க்க வேண்டும். அதைப் பற்றி விவரமாகப் பிறகு பார்ப்போம்.

வாங்குவதற்கு முன் சில குழப்பமான கேள்விகள் உங்கள் மனதில் எட்டிப் பார்க்கலாம். அவை குறித்த ஆலோசனைகள்:-

பெரிய கார் வாங்கலாமா? சின்ன கார் வாங்கலாமா?

உங்களுக்கு ஏற்ற காரை வாங்குங்கள். உங்கள் வீட்டில் ஆறு பேர் என்றும், பெரும்பாலும் ஆறு பேரும்தான் வெளியிடங்களுக்குக் கிளம்புவீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அதற்குத் தகுந்த இருக்கை வசதி கொண்ட காரைத்தான் வாங்க வேண்டும். நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய காரை வாங்கினால் எப்போதுமே பிரச்னைதான். சொல்லப்போனால் புதிய மனத்தாங்கல்கள் உண்டாகி, குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம்.

அதே சமயம் பொதுவாக மூன்றுபேர்தான் வீட்டில் இருப்பார்கள் என்றால், எப்போதாவது வரக்கூடிய உறவினர்களுக்காகப் பத்து பேர் அமரக்கூடிய காரை வாங்குவது விலை, பெட்ரோல் செலவு ஆகிய இரண்டு கோணங்களிலுமே வேஸ்ட்.

கார் வாங்குவதா?ஆம்னி வேன் வாங்குவதா?

ஆம்னி வேனில் எட்டு பேர் வரை போகலாம் என்பது கூடுதல் வசதி. ஆனால் பொதுவாக அதில் ஏ.சி. வசதி இருக்காது. பவர் ஸ்டீயரிங் கிடையாது.

பெட்ரோல் காரா? டீசல் காரா?

பெட்ரோல் காரைவிட டீசல் காரின் விலை அதிகம். ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை மைலேஜ் என்பது முக்கியம். ஒரு விளம்பரத்தில்கூட புதிய ஆகாய விமானம் குறித்து பல சிறப்பு தன்மைகளை ஒருவர் விளக்கி முடிக்க ‘அதெல்லாம் இருக்கட்டும் மைலேஜ் எவ்வளவு?’ என்று கேட்பது போல் அமைத்தது நினைவிருக்கலாம். டீசல் கார் என்பது எரிபொருள் என்கிற கோணத்தில் சிக்கனமானதுதான்.

ஆனால் பராமரிப்பு என்பது பெட்ரோல் காரைவிட டீசல் காருக்கு அதிகம். ஏனென்றால் பொதுவாக பெட்ரோல் கார்களின் உதிரி பாகங்களின் விலை குறைவு.

நீங்கள் தினமும் ஐம்பது கி.மீ. செல்வதாக இருக்கிறீர்கள் என்றால் டீசல் கார் வாங்கலாம். வாரத்திற்கு ஐம்பது கி.மீ.தான் செல்லப்போகிறீர்கள் என்றால் பெட்ரோல் கார் வாங்கலாம்.

சாதாரண கார் போதுமா? சொகுசு கார் வேண்டுமா?

அது உங்கள் பட்ஜெட்டையும் அந்தஸ்து குறித்த உங்கள் சிந்தனையையும் பொறுத்தது. என்றாலும் ஓர் ஆலோசனை. தினமும் பதினைந்து மைல்கள் மட்டுமே கார் சவாரி செய்பவர்களுக்கு (அதாவது பெரும்பாலானவர்களுக்கு) மிக அதிக விலை கொண்ட மிக நவீன கார் தேவையா?

அதேசமயம் தினமும் வெகுதூரம் செல்ல வேண்டுமென்றால் மைலேஜ் என்பது மட்டுமல்ல வசதியான பயணம் என்பதும் மிக முக்கியம். பாதுகாப்பு அம்சங்களும்தான். 

லீஸுக்கு எடுப்பது நல்லதா? வாங்கி விடுவது நல்லதா?

இரண்டிலும் சாதக பாதகங்கள் உண்டு.

லீஸில் எடுத்தால் சில வருடங்களுக்கு ஒருமுறை புதிது புதிதாகக் காரை மாற்றிக் கொண்டே இருக்கலாம். குறைந்த தொகைக்கு விலை உயர்ந்த கார்களை ஓட்டலாம்.

விலைக்கு வாங்கினால் எப்படியும் அது உங்களுக்கு சொந்தமான வண்டி. அதில் உண்டாகும் சேதங்களுக்கு யாரிடமும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாற்றலாகும் வேலை என்றால் உங்களுக்கு வேண்டும்போது காரை விற்றுவிடலாம்.

பொதுவாக கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்போது காரை வாங்குவதுதான், லீஸுக்கு எடுப்பதைவிட நல்லது.

டீலரிடம் செல்லும் முன்:

கார் டீலரிடம் போவதற்கு முன்பு சில ஒப்பிடல்களைச் செய்யுங்கள். பல்வேறு வலைத்தளங்களில் பலவித கார்களை உபயோகித்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்திருப்பார்கள். கார் எப்படி இயங்குகிறது என்பது மட்டுமல்ல. அவர்கள் கொடுக்கும் கேரண்டியின் தன்மை ‘உண்மையில்’ எப்படிப்பட்டது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளலாம். எல்லோருமே வலைத்தளங்களில் உண்மையைத்தான் பதிவு செய்கிறார்கள் என்பதில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருக்க இவை மிகவும் உதவும்.

Conditions apply என்று விளம்பரங்களிலோ காரோடு அளிக்க முன்வரும் கையேட்டிலோ காணப்பட்டால் நீங்கள் அது தொடர்பான முழு உண்மையை அறிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, மணிக்கு இவ்வளவு கிலோமீட்டர் ஓடும் என்று அறிவித்துவிட்டு கூடவே ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்பது போல் போட்டிருக்கலாம். நீங்கள் அந்த வண்டியை வாங்கிவிட்டு அவர்கள் அறிவித்ததை விடக் குறைவான மைலேஜ் கொடுக்கிறதே என்று கேட்டால், மேடு பள்ளமில்லாத நெடுஞ்சாலைகளில், போக்குவரத்து நெரிசல் இல்லாத பொழுதில் மணிக்கு இவ்வளவு வேகம் என்று போனால் கிடைக்கும் மைலேஜைத்தான் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்" என்று கூறக்கூடும்.

சோதனை ஓட்டம்

எந்தக் காரையும் ஓட்டிப் பார்க்காமல் வாங்கக் கூடாது. சோதனை ஓட்டம் அவசியம் தேவை. பொதுவாக நீங்கள் எந்தவிதமான பாதையில் காரை ஓட்டப் போகிறீர்களோ அதே போன்ற பாதையில்தான் போக வேண்டும். நீங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அடிக்கடி செல்ல வேண்டுமென்றால், சோதனை ஓட்டம் செய்யும் போது சற்று உயரமாகச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேடு, பள்ளமான சாலைகளிலும் ஓட்டிப் பார்க்கவும். குறுகலான திருப்பங்களையும் முயற்சிக்க வேண்டும். பிரேக் எப்படி இயங்குகிறது என்பதைச் சோதிக்க பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

ஓட்டுநர் இருக்கையில் மட்டுமல்ல பின்புற இருக்கையிலும் உட்கார்ந்து பாருங்கள். இரண்டு, மூன்று வெவ்வேறுவிதமான கார்களை ஓட்டிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றால். அந்தக் கார்களை அடுத்தடுத்து ஒரே நாளில் ஓட்டிப் பார்ப்பது நல்லது.

இன்ன காரணம் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒரு காரை ஓட்டும் போது மனதுக்குள் ஏதோ இடிக்கிறது என்றால் அந்தக் காரை வாங்க வேண்டாம். உள் உணர்வுக்கு மதிப்பு அளியுங்கள். ஏனென்றால் ஒருவித நெருடலோடு ஆண்டுக் கணக்கில் அந்தக் காரை ஓட்ட வேண்டியிருக்கலாம். நீங்கள் உங்கள் சொந்த உபயோகத்திற்காக கார் வாங்குகிறீர்களா? அக்டோபர் மாதம் வாங்குவதுதான் பெஸ்ட். அப்போது பல நிறுவனங்களும் தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை அளிப்பார்கள்.

நீங்கள் உங்கள் நிறுவனத்திற்காக கார் வாங்குகிறீர்களா? மார்ச் மாதத்தில் வாங்குவது நல்லது. அது செலுத்த வேண்டிய வரியைக் குறைக்க உதவும். இதனால்தான் பல நிர்வாக அதிகாரிகளும், தங்கள் நிறுவனத்துக்கான காரை மார்ச்சில் வாங்குகிறார்கள். 

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா?

கார் தயாரிப்பு நிறுவனங்களே செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கி விற்கின்றன. மாருதி நிறுவனம் ‘ட்ரூ வேல்யூ’ என்ற பெயரிலும் ஹோன்டா நிறுவனம் ‘ஆட்டோ டெரஸ்’ என்ற பெயரிலும், ஹுண்டா நிறுவனம் ‘ஹெச்-அட்வான்டேஜ்’ என்ற பெயரிலும் டாட்டா நிறுவனம் ‘டாட்டா அஷ்யூர்ட்’ என்ற பெயரிலும் இப்படிச் செய்கின்றன.

இதுபோன்ற விற்பனை நிலையங்களில் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதில் சில நன்மைகள் உண்டு. நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதால் வெளிப்படைத் தன்மையுடன் இவர்கள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆவணங்கள் சரியானவையா என்பதை இவர்கள் சரிபார்ப்பார்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வண்டியை இவர்களிடம் சர்வீசுக்கு விட முடியும். மறைமுகமாக விலையைக் கூட்டுதல் (Hidden cost) இவர்களிடம் பொதுவாக இருப்பதில்லை.

மற்றபடி வேறெங்காவது வாங்கினால் கார் டீலரிடம் காருக்கான தொகை குறித்துப் பேசும்போது, அதில் டீலரின் கமிஷனும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் மூன்று லட்சத்திற்கு கார் வாங்குவதாகத் தீர்மானித்து, அதற்கு ஒப்புக் கொண்ட டீலர் நீங்கள் காரை எடுத்துக் கொள்ளச் செல்லும்போது ’ என்னுடைய கமிஷன் 3000 ரூபாய் தனி’ என்பதுபோல் கூறிவிடக்கூடும்.

பழைய கார்களை வாங்கும் போது மறக்காமல் அதன் ஆர்.சி. புத்தகத்தை வாங்கி நன்கு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒரிஜினலை சரிபார்ப்பதுதான் நல்லது. ஒருவேளை திருட்டுக் காராக இருந்துவிட்டால்? திருட்டுக் காரை உங்கள் தலையில் கட்டிவிட்டு டீலர் கம்பி நீட்டி விட்டால்? அப்போது நீங்கள் காரையும் அதன் ஒரிஜினல் உரிமையாளரிடம் கொடுத்து விட வேண்டியிருக்கும் தவிர கொடுத்த காசையும் திரும்ப வாங்க முடியாமல் தவிப்பீர்கள். நாலுபேருக்குத் தெரிந்தால் அவமானம் என்ற மனதுக்குள்ளேயே மருகுவீர்கள்.

டீலர் மட்டுமல்ல, காரை விற்பவரின் பின்னணியையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. அவர் காரை அவ்வப்போது சர்வீசுக்கு விடுபவரா என்பதையும் அறிந்து கொள்ள முயற்சியுங்கள். முக்கியமாக வண்டி இன்ஷ்யூர் செய்யப்பட்டிருக்கிறதா, எந்த வகையிலான இன்ஷ்யூரன்ஸ், இன்ஷ்யூரன்ஸ் தேதி காலாவதியாகாமல் இருக்கிறதா போன்ற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

காரை நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள். ஏதோ சின்னதான உராய்வு என்றால் அதற்கு அதிகம் செலவாகாது. ஆனால் ஒரு கதவையே மாற்றும்படியான நிலை என்றால், பல ஆயிரங்கள் அதற்குச் செலவழிக்க வேண்டியிருக்கும்.

சம்பந்தப்பட்ட சாலைப் போக்குவரத்து அலுவலகத்துக்கு (RTO), சென்று அந்தக் கார் மீது எந்த குற்றப் பத்திரிகையும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். என்ன காரணம் என்கிறீர்களா? காரின் சொந்தக்காரர் இன்று காலை நெடுஞ்சாலையில் பொறுப்பில்லாமல் வேகமாக ஓட்டி வந்து ஒருவர் மீது தன் காரை ஏற்றிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக ஒரு டீலரிடம் கொடுத்து அந்தக் காரை விற்றுவிடச் சொல்கிறார். உங்கள் போதாத காலம் நீங்கள் அந்தக் காரை வாங்கினால் நாளைக்கு காவல் துறையினர் உங்களிடமும் நிறைய கேள்வி கேட்கலாம். அதுவும் அந்தக் காரை விபத்து நடந்ததற்கு முன்தினமே உங்களுக்கு விற்றுவிட்டதாக நீங்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தால் நிறைய தொந்தரவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

செகண்ட் ஹேண்ட் காரை வாங்கினால் இன்ன தேதியில், இந்த மணிக்கு வாங்கிக் கொண்டேன் என்பதோடு இந்த நேரம், தேதிக்கு முன்னால் அந்தக் கார் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் அதன் பழைய உரிமையாளர்தான் பொறுப்பு" என்றும் எழுதி இருதரப்பினரும் கையெழுத்திட வேண்டும்.

அந்தக் கார்மீது கடன் வாங்கியிருந்தால் அந்த விவரம் ஆர்.சி. புத்தகத்தில் இருக்கும். அரிதாக ஆர்.சி. புத்தகம் இல்லாமலே கூட சில அடமானங்கள் நடப்பது உண்டு. எனவே சிரமம் பார்க்காமல் ஒருமுறை RTO அலுவலகத்துக்குச் சென்று இந்த அடமானம் குறித்த விவரங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பயன்படுத்திய காரை வாங்கும் போது மூன்று கோணங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, உங்கள் பட்ஜெட். இரண்டாவது, அந்தக் கார் தயாரிக்கப்பட்ட வருடம், மூன்று, அது எவ்வளவு ஓடியிருக்கிறது என்ற விவரம். பதினொரு வருடங்களைத் தாண்டிய கார் என்றால் பத்தாயிரம் கி.மீ. ஓடியிருக்க வாய்ப்பு உண்டு. டாக்டர்கள் வைத்திருக்கும் கார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. குறைவாகத்தான் பயன்படுத்தி இருப்பார்களாம். இதனால் சேதம் (Wear and Tear) குறைவாகவே இருக்கும்.

புதிய காரை வாங்கினாலும், பயன்படுத்திய காரை வாங்கினாலும் நினைவு கொள்ள வேண்டியவை:

ஓட்டுநரை நியமித்து காரில் செல்லப் போறீங்களா? அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது தெரியுமா? ஓட்டுநரை வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பரைக் கேட்டுப் பாருங்கள். நடுவில் ஓட்டுநர் விடுப்பு எடுத்துக் கொண்டால் என்ன செய்வீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தீங்களா?

* உங்கள் முதுகின் நலம் எப்படி? ஏதாவது பிரச்னை உண்டா? அப்படியானால் அதற்குத் தகுந்த இருக்கை கொண்ட காரைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.

* நீங்கள் வாங்கும் காரானது, உங்கள் கராஜ் அல்லது பார்க்கிங் பகுதியில் சுலபமாக அடங்கிவிடுமா என்பதையும் நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.

* நீங்கள் ஏதாவது நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்குகிறீர்கள் என்றால், கீழே உள்ள ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். வேலை பார்ப்பவர் என்றால் கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மெண்டும், கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கான சம்பள பில்லும் தேவைப்படும். பிசினஸ் செய்பவர் என்றால் கடந்த சில வருடங்களுக்கான உங்கள் வருமான வரி ரிட்டனைக் காட்ட வேண்டியிருக்கும். உங்கள் முகவரி தொடர்பான அடையாளச் சான்று தேவை. நிதி நிறுவனம் கேட்பதில்லை என்றால் கூட, காரை வாங்கும் போது ஓட்டுநர் உரிமம் உங்கள் பெயரில் இருந்தாக வேண்டும்.

* சில விஷயங்கள் எல்லோருக்கும் பொதுவானவை தான். என்றாலும் பெண்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மறக்காமல் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதில் அலட்சியம் காட்டக் கூடாது. வண்டி ஓட்டும்போது மட்டுமல்ல உட்கார்ந்து செல்லும் போதும் - முக்கியமாக முன்வரிசையில் உட்கார்ந்து செல்லும் போதும்.

* எப்படியும் காரின் வலதுபுறம், பின்வரும் வண்டிகளைக் கவனிக்க ரியர்வியூ கண்ணாடி இருக்கும். ஆனால் மறக்காமல் ஓட்டுநரின் இடப்புறத்திலும் காரின் வெளிப்பகுதியில் இதே போன்ற கண்ணாடி ஒன்று பொருத்தப்பட வேண்டும். இது இல்லாமலும் பெரும்பாலான ஆண்களால் வண்டியை மேனேஜ் செய்ய முடியும். ஆனால் பெண்களுக்கு இது கடினமான காரியம்.

* புதிய வண்டி வாங்கினால் உங்களுக்கு சாய்ஸ் நிறைய உண்டு. உங்களுக்கு வேண்டிய பிராண்டை உங்களுக்குப் பிடித்த நிறத்தில் வாங்கலாம்.

* வெள்ளை, சில்வர், கிரே வண்ணம் கொண்ட கார்களை வாங்குவது ஒருவிதத்தில் நல்லது. ஏனென்றால் இவற்றைப் பராமரிப்பது சுலபம். கறுப்பு நிற கார் என்றால் துடைத்துத் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
* பெட்ரோல் போடும்போது குறிப்பிட்ட பங்கிலேயே பெட்ரோல் போடுங்கள்.

* காரின் சக்கரங்களில் வழக்கமான காற்றை அடிப்பதைவிட நைட்ரஜன் காற்றை நிரப்பிக் கொண்டால் டயரின் ஆயுள் அதிகரிக்கும்.
 







 

Sunday, April 28, 2013

கேன்சர் - கட்டுப்படுத்த முடியாததா

புற்றுநோய்க்கு இதுவரை முழுமையான மருந்து என்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  சித்தர்கள் புற்றுநோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.'உணவே’ மருந்து. சித்த மருத்துவத்தின் தாரக மந்திரமும் அதுதான். சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் அனைத்தும்  மருத்துவக் குணம் வாய்ந்தவை. பாட்டி வைத்திய முறையை முற்றிலும் மறந்து நாம் ரொம்பவே விலகிவிட்டதால் வியாதிகள் பெருகிவிட்டன என்றுகூடச் சொல்லலாம். கொடிய நோயாகச் சித்தரிக்கப்படும் புற்றுநோய்க்குக்கூட சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் இருக்கின்றன.

புற்றுநோயும் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவத்தில் சில நோய்களை அசாத்திய நோய்கள் என்று வகைப்படுத்தினார்கள். அதில் புற்றுநோயும் ஒன்று.

கட்டிகள் கழுத்தில் வரக்கூடிய கழுத்துக் கழலைகள் போன்றவற்றைக் 'கண்ட மாலை’ என்று சொல்லுவார்கள். அது  புற்றாகவும் இருக்கலாம். புற்றுநோய் பற்றி வெவ்வேறு வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

காரண காரியங்கள்:  

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று வகைப்படுத்தினால், கிடைக்கும் பதில் ஆச்சர்யத்தை தரும். அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன தொடர்பு என்பதைப் போன்றதுதான்... ஆனால், உண்மை. 

சித்த மருத்துவத்தில் புற்றுநோய் வருவதற்கு மூன்று முக்கிய காரணங்களைச் சொல்கிறார்கள். அவை :

1. உணவு
2. சுற்றுச்சூழல்
3. மனம் 

உணவை உணருங்கள்:

  பட்டைத் தீட்டின பச்சரிசி, சுத்திகரிக்கப்பட்ட மாவு, அரிசி, கோதுமை, வெள்ளை உப்பு இவற்றை இன்று அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம்.  அவற்றைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

 உடலுக்கு ஒவ்வாத உணவுகள் மற்றும் அஜீரணம் ஏற்படுத்தும் எண்ணெய், புலால் உணவுகளைத் தவிர்த்து, கஞ்சி, பாலாடை, அவல், சிறுதானிய உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, 45 வயதைக் கடந்தவர்கள், நேரடியாக இனிப்பு உண்பதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை வந்த பிறகுதான் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. காபிக்கு இனிப்பு சேர்க்க, பனை வெல்லம், கருப்பட்டியைப் பயன்படுத்தலாம்.  

 வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.  மாட்டுப் பால் சிறந்தது.  

 பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் பல வேதிப்பொருட்களைச் சேர்க்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்தே பெரும்பாலானவை சந்தையில் கிடைக்கின்றன. இவை உடல்நலத்துக்குக் கேடானவை.

சுகாதாரமான சுற்றுசூழல்:

இப்போது உலகம் சுருங்கிவிட்டது. வெளிநாட்டுப் பழங்கள் உணவுகள் போன்றவை எளிதில் கிடைக்கின்றன. அவை நாடு கடந்து இங்கு வரும்வரை கெடாமல் இருக்கச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. வசிக்கும் இடத்திற்கு அருகே விளையும் காய்கறி, பழங்களையேப் பயன்படுத்தவேண்டும். அதிலும் இயற்கை உரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், மிகவும் நல்லது.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகள்:

எளிய மணமூட்டிகள் எல்லாமே புற்றுநோயை வரவிடாமல் தடுக்கக்கூடிய அருமருந்துகள்தான்.  

 மஞ்சள் அற்புதமான மருத்துவக் குணங்கள்கொண்டது. சிஸ்டோபிளாஸ்டி என்ற சிகிச்சை புற்றுநோய் வளராமல் தடுக்கும் ஆற்றலைக்கொண்டது.  ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மஞ்சளில் உள்ள மூலக்கூறுகள், பக்க விளைவுகள் ஏதும் இன்றி கேன்சர் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.  

  லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப் பூ, வெந்தயம், இஞ்சி, கொத்தமல்லி விதை, மிளகு இவை எல்லாவற்றிலும் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றல்கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.  

  புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது, சில மருந்துகளால் ரத்தத் தட்டுக்கள் குறையும். சளி, இருமலுக்குப் பயன்படக்கூடிய ஆடாதொடை இலை ரத்தத்தட்டுக்களை உயர்த்தும்.  

 தாளித்தபத்ரி புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகை. புற்றுநோயைத் தடுக்கக்கூடிய வேதிப் பொருளான 'டாக்சால்’ (Taxol), தாளித்தபத்ரி மரத்திலிருந்துதான் கிடைக்கிறது.  

 தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற  மூலிகைகள் எல்லாமே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியன. வீரியமிக்க இந்த மூலிகைகளை முறையான ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும். 

மருந்தின் பலன்கள்:

புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளில் தாவர, உலோக உப்புக்களிலிருந்து செய்யக்கூடிய உயரிய சித்த மருந்துகள் இருக்கின்றன. ரத்தப் புற்றுநோய், குடல் புற்றுநோய், இரைப்பை, கருப்பை, மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கான புராஸ்டேட் புற்றுநோய் எனப் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் இருக்கின்றன. ஆனால், எல்லாமே, ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் புற்று நோய்களுக்குப் பலன் அளிக்கக்கூடியன. அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு மீண்டும் புற்று வராமல் தடுக்க சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.  கதிர்வீச்சு எடுத்த பிறகும், ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

புற்றுநோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும்போது, உடல் மிகவும் சோர்ந்துவிடும். வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுக்கள் குறைந்துவிடும்.  வெள்ளை அணுக்கள், தட்டுக்களை அதிகரிக்கவும் உடலை உறுதிப்படுத்தவும் சித்த மருத்துகள் உதவும். 

இணைந்த மருத்துவம்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் குழு (இன்டகரேடிவ் ஆன்காலஜிஸ்ட்) செயல்படுவது மிகப் பிரபலம்.  நோயாளிக்கு நேரத்தையும், செலவையும் இது குறைக்கும். நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கவும் வழிவகுக்கும். 

மருந்துகளுடன்,  மூச்சுப் பயிற்சி செய்வதும் நல்ல பலனைத் தரும்.  அதேபோல், நம் நாட்டில் எந்தெந்தத் துறையில் என்னென்ன சிறப்பான மருந்துகள் இருக்கிறதோ, அந்தந்தத் துறை மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாய்வு செய்து சிறப்பான சிகிச்சையை நோயாளிக்குத் தர முயற்சிப்பதன் மூலம் புற்றுநோயின் தீவிரத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தலாம்.
 


டிராவல் இன்ஷூரன்ஸ்...

வெளிநாடுகளுக்குப் பயணம் போகிற பலர் டிராவல் இன்ஷூரன்ஸ் எடுக்காமலே சென்றுவிடுகிறார்கள். போன இடத்தில் பணம் பறிபோய் அவதிபடுகிறவர்கள் உண்டு. திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் கஷ்டப்படுகிறவர்களும் உண்டு. இந்தச் சிக்கலில் நாம் சிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
 
''வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கட்டாயம் டிராவல் இன்ஷூரன்ஸ் தேவை. ஏனெனில், வெளிநாடுகளில் இன்ஷூரன்ஸ் இல்லாமல் எந்த மருத்துவமனையிலும் மருத்துவம் செய்துகொள்ள முடியாது. தவிர, அங்கு மருத்துவக் கட்டணம் அதிகம். மேலும், விமானப் பயணத்தின்போது ஏற்படும் இடர்பாடுகளிலிருந்தும் நம்மை பாதுக்காத்துக் கொள்ள இந்த இன்ஷூரன்ஸ் உதவுகிறது.

டிராவல் இன்ஷூரன்ஸ் குறைந்தபட்சம் 7 நாள் முதல் 180 நாட்கள் வரை தரப்படுகிறது. 6 மாத குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை இந்த இன்ஷூரன்ஸை எடுக்கலாம். மேலும், இந்த பாலிசியை நீங்கள் சுற்றுலாவிற்கு கிளம்பும் தினத்தன்றுகூட எடுக்கலாம். நீங்கள் விமானத்தில் ஏறி வெளிநாட்டிற்கு சென்று திரும்பி இந்திய விமான நிலையத்துக்குள் இறங்கும் வரை கவரேஜ் கிடைக்கும்.

பொதுக் காப்பீடு நிறுவனங்கள் டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசியை விநியோகம் செய்கின்றன. இதற்கு  மருத்துவப் பரிசோதனை கட்டாயம் தேவை என்று சொல்கின்றன சில பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்.  ஆனால், தனியார் நிறுவனங்கள் இதை வலியுறுத்துவதில்லை.  

இந்த இன்ஷூரன்ஸில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு இழப்பீடு கிடையாது. ஆனால், மிகவும் சிக்கலான அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மிகக் குறைந்த அளவு  இழப்பீடு மட்டுமே கிடைக்கும்.


சுற்றுலாச் செல்லத் திட்டமிட்ட பிறகு, நெருங்கிய உறவினர் இறந்து, அதனால் பயணம் ரத்தானால், டிக்கெட் மற்றும் ரூமை கேன்சல் செய்வதன் மூலம் ஏற்படும் இழப்பை க்ளைம் செய்ய முடியும். ஆனால், சுற்றுலாச் சென்றபிறகு பாதியில் திரும்பினால் எந்த இழப்பீடும் கிடைக்காது.

சுற்றுலாவின்போது உங்களின் பொருட்கள், பர்ஸ் தொலைந்தால் உங்களின் அவசரத் தேவைக்காக சிறிதளவு பணமும் இழப்பீடாக கிடைக்கும். வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்யும்போது, நீங்கள் தவறுதலாக ஒரு பொருளை உடைத்துவிட்டால் அதற்கும் க்ளைம் கிடைக்கும்.

சில மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் வசதி இருக்காது. அப்போது பணத்தைச் செலவழித்து மருந்து வாங்கி, அதற்கான பில்லை இந்தியா வந்தபிறகு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்து  க்ளைம் செய்துகொள்ளலாம். க்ளைம் தொகைக்கான ஆவணங்கள் கொடுத்த ஒரு மாதத்தில் க்ளைம் உங்களின் வங்கிக் கணக்கில் வந்துவிடும்.

வெளிநாட்டுச் சுற்றுலாவின் போது உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு உங்களின் கோரிக்கையை பதிவு செய்தால் மட்டுமே இழப்பீடு பெறமுடியும்.

மேலும், சுற்றுலாச் செல்லும்போது உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எண், அந்நிறுவனத்தின் பெயர், பாலிசியின் பெயர், நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண் ஆகியவை உங்களின் நினைவில் அல்லது ஏதாவது ஓர் இடத்தில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை பாலிசியின் நகல் தொலைந்துவிட்டால்கூட பாலிசியின் எண்ணை வைத்து சிகிச்சை உள்ளிட்டவைகளைப் பெறமுடியும்.

 
இந்த இன்ஷூரன்ஸுக்கு பிரீமியம் என்பது ஒரு நபருக்கு 7 நாட்களுக்கு, 50 ஆயிரம் டாலர் கவரேஜுக்கு சுமார் 900 ரூபாய்தான். க்ளைம் தொகை என்பது டாலரில்தான் இருக்கும். ஆனால், பிரீமியம் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பில் செலுத்தவேண்டும்

 

7 ரூபாயில் ஸ்பீடு தபால்! - அரசு பஸ் கூரியர்!


வெறும் 7 ரூபாய் செலவில் தமிழகத்தின் பல நகரங்களுக்கு இனி நீங்கள் கூரியர் அனுப்ப முடியும் என்றால் ஆச்சரியமாக இல்லை! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவியுடன் 'வீ ஸ்பீடு லாஜிஸ்டிக்’ என்கிற நிறுவனத்தில்தான் இந்த அதிசயம்!

'7 டிகிரி சி’ என்கிற பெயரில் கடந்த 12.12.12 அன்றே இந்த கூரியர் சேவை அறிமுகமானது. ஆரம்பத்தில் பொதுமக்களிடம் சுமாரான வரவேற்பை பெற்ற இந்த கூரியர் சேவை, இப்போது சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. 

12 மணி நேரத்தில் டெலிவரி!

''தமிழகத்தின் முக்கிய நகரங்களில் குறைந்தபட்சம் 12 மணி நேரத்தில் கூரியரை கொண்டுபோய் சேர்ப்பது எங்கள் வேலை. இந்தச் சேவைக்காக எஸ்.இ.டி.சி. பேருந்துகளை அரசின் உதவியுடன் பயன்படுத்துகிறோம். 250 கிராம் எடை கொண்ட கவர்களுக்கு ரூ.7 கட்டணம். 250 கிராமுடன் கூடுதலாகச் சேர்க்கும் ஒவ்வொரு 250 கிராமுக்கும் ரூ.2.50 தரவேண்டும். ஒரு கிலோ எடை வரை மட்டுமே கவர் வடிவில் ஏற்றுக்கொள்வோம். ஒரு கிலோவுக்கு மேல்  எனில் பார்சல் என்கிற வகையில் எடுத்துக்கொள்வோம். 2.5 கிலோ வரை ரூ.25. கூடுதலாகச் சேர்க்கப்படும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.5 கட்டவேண்டும்.

ஹோம் டெலிவரி கிடையாது. முக்கிய நகரங்களில் இருக்கும்  கவுன்டர்களுக்கு வந்து வாங்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் கூரியர் வேறு நகரத்திற்கு சென்றவுடன், கூரியரை பெறுகிற நபருக்கு ஊழியர்கள் போன் செய்து, தகவல் சொல்வார்கள். மத்திய மற்றும் மாநில அரசின் ஒப்புதல் பெற்ற முகவரிச் சான்றை (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு) ஆதாரமாகக் காட்டி கூரியரை பெற்றுக்கொள்ளலாம். தற்போது தமிழகத்தில் இருக்கும் 12 பெரிய நகரங்களில் (பெங்களூருவுக்கும் இந்த கூரியர் வசதி உண்டு) .

செல்போனுக்கு நோ!

இதில் கூரியர் அனுப்பும்போது டெலிவரி எடுப்பவரின் பெயர், அவரது செல்போன் நம்பர், எந்த ஊருக்கு கூரியர் அனுப்புகிறீர்கள் என்பதைத் தெளிவாக குறிப்பிடச் சொல்கிறார்கள். சிறிய கவரில் பேப்பர்களை வைத்து அனுப்பும் போது, அதை பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால், பெரிய அளவிலான பார்சல் என்கிறபோது அதை பிரித்துப் பார்த்தபிறகே புக்கிங்கிற்கு எடுத்துக்கொள்கிறார்கள். பணம், நகைகள், எண்ணெய் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கிரீஸ், கெமிக்கல் மற்றும் இதர வகையான பவுடர்கள், உடையும் தன்மைகொண்ட பொருட்கள் (கண்ணாடி போன்றவை) மற்றும் செல்போன்கள் போன்றவற்றை இந்த கூரியர் மூலம் அனுப்ப முடியாது.   


Saturday, April 27, 2013

எனது இந்தியா! - அன்றாட வாழ்வுக்கான ஆயுதங்கள்!

கழ்வாய்வு, மொழியியல் ஆய்வு, நிலவியல் கண்டுபிடிப்பு என்று பல்திறன்கொண்ட புரூஸ் புட், தென்னிந்தியா முழுவதும் குதிரையில் சுற்றி தொல்கற்காலம் குறித்து ஆய்வுசெய்து இந்தியாவின் பழைமையை உலகுக்கு அடையாளம் காட்டியவர். அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழகத்​​தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆய்வில் கல்லாயுதங்கள் கிடைத்திருக்கின்றன.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் சுந்தரவேலு வெளியிட்டுள்ள அறிக்கை​யில், ''தஞ்சை வட்டத்தில் வல்லம், புதூர், சாணூரப்​பட்டி, செங்கிப்​பட்டி, கூனம்பட்டி ஆகிய இடங்களில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் பாசாலம், நல்லாம்பாளையம், செந்துறை, தாமரைப்பூண்டி, சிறுகளத்தூர், கஞ்சமலைப்பட்டி மற்றும் உடையார்பாளையம் வட்டத்​தில் மருங்கூர், இடையக்குறிச்சி, கூழாட்டுக்குப்பம், மைக்கேல்பட்டி, பிலிச்சிக்குழி, மேலசிந்தாமணி, காக்காபாளையம், அணிக்குறிச்சி, வெண்மான் கொண்டான், ஆதிச்சனூர், விளாங்குடி, கா.அம்பாப்பூர், காத்தான்குடிக்காடு, கோரியம்பட்டி, நடுப்பட்டி, புதுக்குடி, செங்குந்தபுரம் ஆகிய இடங்களிலும் நுண் கற்கருவிகளும், பழைய கற்காலக் கருவிகளும் கிடைத்திருக்கின்றன. தர்மபுரி மாவட்டம்தான் அதிக அளவில் கற்கால ஆயுதங்கள் கிடைக்கக்கூடிய பகுதி'' என்கிறார்.


சிறிய நுண்கற்கருவிகள் குவார்ட்ஸ் என்ற வெள்ளை நிறக்கல்லை உடைத்துச் செய்யப்பட்டுள்ளன. இரண்டு அங்குலம் உள்ள கற்கருவிகள், மிருகங்களைக் கொல்வதற்கும் அவற்றின் தோலை உரிக்கவும்,  தோல்களை உடைகளாகவும், குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் தூளியாகவும் கற்கருவிகள் பயன் பட்டிருக்கின்றன. பூமியைத் தோண்டுவதற்கும், தாவரங்களை வெட்டி எடுப்பதற்கும் இந்த ஆயு தங்கள் பயன்பட்டன. ஆகவே, பல்வேறுவிதக் கற்களை செதுக்கி கையடக்க ஆயுதமாக மாற்றிக்கொள்வதன் மூலம் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பழகினர் பழங்கற்கால மக்கள்.

பழங்கற்காலத்தில் மனிதர்கள் இனக் குழுவாக வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள், விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. மிருகங்களை மேய்ச்சலுக்கு ஓட்டி அதை நம்பி வாழும் வாழ்​முறையும் அவர்களுக்குத் தெரியவில்லை. வேட்டையை நம்பி வாழ்வதே அவர்களின் உலகம். அதற்கு உதவுவதற்கே இத்தகைய கருவிகள். மனிதர்கள் பயன்படுத்திய முதல் ஆயுதமாக கடினமான மரத்​தடியைக் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தடியை கையில் ஏந்திக்கொண்டு வேட்டைக்குப் போவது, மிருகங்​களைத் தாக்குவது என செயல்பட்டனர். பிறகு, தடியின் முனையில் கூர்மையான கல்லைக் கட்டி ஈட்டியாகச் செய்திருக்கின்றனர். அந்த ஈட்டி​களைக் கொண்டு மிருகங்களைக் கொன்றனர். அதன் பிறகு, உருவாக்கப்பட்டதே கையடக்கக் கோடரி.

இன்றுள்ள இரும்புக் கோடரி போல அது மரத்தில் பொருத்தப்பட்டது அல்ல. ஒரு கல்லைக் கூர்மையாகச் செதுக்கி அதைக் கையில் பொருத்திக்கொண்டு அதைக்கொண்டு தாக்கும்படியாக உருவாக்கினர். அது தான் கற்கோடரி. செதில்போல வடிவமைப்புகொண்ட இந்தக் கோடரி, மிருகங்களின் தோலை உரித்து எடுப்பதற்கே முக்கியமாகப் பயன்பட்டது. கல் ஆயுதங்களைச் செய்யும் பட்டறைகள் இந்தியாவில் பல்வேறு குகைகளில் காணப்படுகின்றன. ஆற்றோரங்​களில்தான் பழங்கற்கால மனிதர்கள் அதிகம் வசித்திருக்கிறார்கள். குறிப்பாக, கிருஷ்ணா நதியை ஒட்டியும், சென்னையில் உள்ள கொற்றலை ஆற்றை ஒட்டிய அதிரம்பாக்க ஆற்றுப்படுகையிலும் மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் இருக்கின்றன. இங்கே வாழ்ந்தவர்களை வேட்டைச் சமூகம் என்றே வகைப்படுத்துகிறார்கள். ஹோமோ எரெக்டஸ் எனப்படும் மானுட முன்னோடி வம்சமாக இது இருந்திருக்க கூடும்.

நியாண்டர்தால் மனித எலும்புகள், ஆப்கானிஸ்​தானிலும் பாகிஸ்தானிலும் இந்தியாவின் மராட்​டியத்திலும் கிடைத்திருக்கின்றன. நியாண்டர்தால் மனிதனுக்கு முன் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் மனிதர்கள் கல் ஆயுதங்களைக் கொண்டுதான் அன்றாட வாழ்வை வாழ்ந்திருக்க முடியும் என்கிறார்கள். கிங் மற்றும் ராபர்ட் புரூஸ் ஆகியோர் அதிரம்பாக்கம் பகுதியில் செய்த அகழ்வாய்வை சமீபத்தில் மீளாய்வு செய்​திருக்கிறார் வரலாற்று அறிஞர் சாந்தி பப்பு. இந்த ஆய்வில் கல்ஈட்டி மற்றும் பல்வேறு கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும். கற்காலக் கருவிகளின் வயதைக் கண்டுபிடிப்பதில் பல்வேறுவிதமான முறைகள் நடைமுறையில் உள்ளன. ஆகவே, துல்லியமாக இதன் பழைமையைக் கணிக்க முடியவில்லை. தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும் அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப்பிந்தைய கற்​காலத்தில் களிமண் போன்ற வண்டற் படிவகளைக்கொண்டு மண்​பாண்டங்கள் செய்யப்பட்டன.

தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே முதல் காலம். கற்காலத்தை இரண்டு வகை​யாகப் பிரிக்க வேண்டும் என 1851-ம் ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவர். இன்று பயன்​பாட்டில் உள்ள கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை ஜான் லுப்பொக் என்பவரால் 1865-ம் ஆண்டில், அவர் எழுதிய 'வரலாற்றுக்கு முந்திய காலங்கள்’ என்னும் நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய கற்காலம். இடைக் கற்காலம். புதிய கற்காலம் எனும் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப் பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும் பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடு​கின்றன.

பழைய கற்கால மனிதர்களின் வரலாறு 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தோன்றுகிறது. பழைய கற்கால மனிதர்களை உணவு சேகரிப்​போர் என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்பு இந்தக் காலத்தில்​தான் கண்டுபிடிக்கப்பட்டது. மத்தியப்​பிரதேச மாநிலம் பிம்பெடகா என்ற இடத்தில் கற்கால மனிதர்களின் 30ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் வேட்டைக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. குகைகளில் இதை எதற்காக வரைந்தனர் என்பதற்கான காரணம் இன்றும் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால், சடங்குகள் காரணமாக இவை வரையப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இடைக்​கற்காலம் என்பது கி.மு. 10,000-ல் இருந்து கி.மு. 6,000 வரை உள்ள காலம். இந்தக் காலகட்டத்தில், நாடோடியாக வாழ்ந்த மனிதர்கள் குழுக்களாக இணைந்து வாழத் தொடங்கினர். இவர்களும் கல் ஆயுதங்களையே பயன்படுத்தினர். ஆனால், இவை நுண்மையான ஆயுதங்களாக இருந்தன. இடைக்கற்காலச் சான்றுகள் குஜராத்தின் லகான்ஜ் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் ஆதம்கர் மற்றும் பீகார், தமிழகப் பகுதிகளில் கண்டெடுக்​கப்பட்டுள்ளன.

கற்காலத்தின் கடைசிக் காலம் புதிய கற்காலம். இது கி.மு 6,000 முதல் கி.மு 4,000 வரை உள்ள காலம் என்கிறார்கள். மனித நாகரிகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நடைபெற்ற காலகட்டம் அது. அந்தக் காலங்களில்தான் கால்நடைகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தனர். முறையாக விவசாயம் செய்தனர். மனிதனின் மிக முக்கியக் கண்டுபிடிப்பான சக்கரம் உருவாக்கப்பட்டது. கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்த மனிதன் உலோகங்களைக் கண்டெடுத்தான். பிறகு, அவற்றை உருக்கி உலோகக் கருவிகளைச் செய்தான். படிப்படியாக கல் ஆயுதங்களுக்கு விடைகொடுத்து உலோக ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தான். இது, உலோகக் காலம் ஆகும்.

கருவிகளின் பயன்பாடு சமூகத்தின் செயற்பாடுகள் நம்பிக்கைகள் ஆகியவற்றைச் சுட்டும் ஒரு காரணி மட்டுமே. இடைப் பழைய கற்காலத்திலும், மேல் பழைய கற்காலத்திலும் மனிதர்கள் தொடக்கக் கால வகை ஓவியங்களை வரையத் தொடங்கியதுடன், இறந்தோரை அடக்கம் செய்தல், சடங்குகள் செய்தல் போன்ற சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இடைக் கற்காலத்தில் கடல்மட்ட உயர்வு, காலநிலை மாற்றங்கள், உணவுக்கான புதிய மூலங்களைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய கற்காலத்தில், வேளாண்மை, மண்பாண்டங்களின் வளர்ச்சி, பெரிய குடியிருப்புக்களின் தோற்றம் என்பன முக்கியமான சிறப்பியல்புகளாக இருந்தன. பயிர்களை அறுவடைசெய்வதற்கும் பதப்படுத்துவதற்குமான தேவை ஏற்பட்​டதால், அரைப்பதற்கும், தீட்டுவதற்குமான கற்கருவிகள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. முதன்முதலாக பெரும் கட்டு​மானங்கள் கட்டப்பட்டன.

பொதுவாகப் பழைய கற்காலத் தொடக்கத்தில் மக்கள் வேட்டையாடு​பவர்களாகவும் உணவு சேகரிப்போராகவும் மட்டுமே இருந்தனர். ஆண், பெண்களுக்கு இடையே சம நிலை நிலவியது. ஆண்கள் வேட்​டைக்குச் சென்றனர். உணவு சேகரிப்பு மற்றும் குழந்தைகளைக் கவனிப்பதில் பெண் ஈடுபட்டாள். இதற்கு மேலுள்ள வேலைகளை இரு பகுதியினரும் சமமாகவே பகிர்ந்துசெய்தனர். ஆண், பெண் இருவருமே தாவரங்கள், மூலிகைகள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருந்தனர். இதனால், அவர்களுடைய வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது.

விவசாயம் செய்யத் தொடங்கியதும் மேய்ச்சலைப் பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றதும், உருக்கு உலைகளின் அறிமுகமும் கற்காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன. உலோகத்தின் பயன்பாடு அறிமுகமான பிறகு கத்தி, கோடரி, சுத்தியல், ஊசி, ஈட்டி, தூண்டில், கேடயம், கவசம், வில்அம்பு ஆகியவை செம்பு மற்றும் இரும்பைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. இந்தக் கருவிகளின் வளர்ச்சியே மானுட வளர்ச்சியின் முதல் கட்டம். கற்காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, பொதுவாகக் குகை மனிதர்கள் என்றே கூறுகிறார்கள். இது சரியல்ல. குகையில் வாழும் மனிதர்கள் என்று பொருள் தரும் ட்ரோக்லோடைட்ஸ் எனும் கிரேக்கச் சொல்லுக்கு பொந்துகளில் வசிப்பவர்கள் என்றே பொருள்.

கற்கால மனிதர்களில் பெரும்பான்மையினர் வேட்டையாடி உயிர் வாழும் நாடோடிக் கூட்டத்தினர். எப்போதாவது சில இடங்களில் குகைகளைப் பயன் படுத்தினர். மற்றபடி ஆற்றோரங்களிலும் திறந்தவெளி​களிலும்தான் வாழ்ந்​திருக்கிறார்கள். கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என, 200-க்கும் மேற்பட்ட இடங்கள் ஐரோப்பாவில் அடை யாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைவான இடங்களே குகைகள். ஆகவே, கற்கால மனிதர்கள் யாவரும் குகை மனிதர்கள் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கற்கால மனிதர்கள் வாழ்ந்த விதம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் போன்ற​வற்றை விளக்கும் அகழ்வாய்வுக் காப்பகம் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தின் பூண்டியில் அமைந்துள்ளது. இந்தக் காப்பகத்தில், நெருப்பை உண்டாக்கப் பயன்படுத்தப்பட்ட சிக்கிமுக்கிக் கற்கள் மற்றும் பழங்கற்கால ஆயுதங்கள், கற்கால மனிதர்களின் தோற்றம் மற்றும் வாழ்வியல் முறைகள் சிற்ப வடிவம்கொண்ட கண்காட்சியாக இடம் பெற்றுள்ளன

ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த தடயம்கொண்ட தமிழகம் அதன் வரலாற்றுப் பெருமைகளை மறந்து முக்கிய வரலாற்றுச் சின்னங்கள், தடயங்கள், அகழ்வாய்வு நடைபெற்ற இடங்கள் யாவற்றையும்  சிதைத்தும் அகற்றியும், கைவிட்ட நிலையில் வைத்துள்ளது வரலாற்றுக்குச் செய்யும் பெரும் துரோகம்.

Friday, April 26, 2013

தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா - இரண்டு ஃபீனிக்ஸ்கள்!


ஐ.பி.எல்.லில், பல கிரிக்கெட் வீரர்களின் நிலைமை பரிதாபமானது. ஒவ்வொரு வருடமும் அணி மாறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் சரியான வாய்ப்புகளும் கிடைக்காது. மரியாதையும் காற்றில் பறந்துவிடும். இப்படிப்பட்ட சூழலிலும் 2013 ஐ.பி.எல்.லில், தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களை வலுவாக நிரூபித்திருக்கிறார்கள். 

தினேஷ் கார்த்திக்:

கார்த்திக்கின் திறமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கூட உணரவில்லை. முதலில் தில்லி அணிக்காக ஆடினார். மூன்று வருடங்களுக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2011ல் நடந்த ஏலத்தில் ரூ. 4.77 கோடிக்கு கார்த்திக்கை விலைக்கு வாங்கியது பஞ்சாப். ஆனால், அடுத்த வருடமே மும்பை அணிக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டது. (ரூ. 12.4 கோடிக்கு என்று சொல்லப்படுகிறது.) அப்போது, மும்பை அணி சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. கார்த்திக் உள்ளே நுழைந்தவுடன் மும்பை அணி பீமபலம் கொண்டதாகிவிட்டது. சச்சின் அணியில் கார்த்திக் மிக மரியாதையுடன் நடத்தப்பட்டார். இந்த ஐ.பி.எல்.லில் மூன்றாவதாகக் களம் இறங்க அனுமதியளிக்கப்பட்டது. அவ்வளவுதான், கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இவருடையது நீண்ட நெடிய பயணம். ராகுல் டிராவிட் இனி விக்கெட் கீப்பராக நீடிக்க வேண்டாம் என்று பி.சி.சி.ஐ. முடிவெடுத்தபோது இந்திய அணிக்குத் தேர்வானவர், தினேஷ் கார்த்திக். ஆனால் அந்தச் சந்தோஷம் நீண்டநாள் நீடிக்கவில்லை. புயல் மாதிரி இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்து பல விக்கெட் கீப்பர்களின் வாழ்வை மாற்றினார் மகேந்திரசிங் தோனி. இதனால், தோனி ஓய்வு எடுக்கும் நேரத்தில்தான் கார்த்திக், பர்தீவ் படேல் போன்ற மற்ற விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், கார்த்திக் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. பேட்ஸ் மேனாக இந்திய அணிக்குள் நுழைந்தார். 2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ஷேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் அவர் இடத்தைப் பிடித்தார். கார்த்திக்கின் பெரிய சாதனை, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரராக சாதித்தது. சமகால இந்திய ஓபனர்களில் யாருக்கும் இல்லாத பெருமை இது. அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்ல கார்த்திக்கின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனாலும், சிறிது சறுக்கினாலும் அணியிலிருந்து அடிக்கடி நீக்கப்பட்டதால் கார்த்திக்கின் அருமையை யாருமே உணர முடியாமல் போய்விட்டது. கூடவே கார்த்திக்கின் கீப்பிங் தொடர்பாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதிர்ஷ்டத்துக்காக தன் பெயரில் கூடுதலாக a, c ஆகிய எழுத்துகளைச் சேர்த்துப் பார்த்தார். எதுவுமே கைகூடவில்லை. நிரூபிக்க வாய்ப்புக் கிடைத்த ஐ.பி.எல்.லிலும் நிரந்தரமாக ஓர் அணியில் நீடிக்க முடியாமல் போனது. விளைவு, இந்திய கிரிக்கெட்டின் எந்தவொரு திட்டத்திலும் இல்லாமல் போனார்.

இந்த ஐ.பி.எல்., கார்த்திக்கின் ஐ.பி.எல். கார்த்திக்கின் ஆட்டம் fearless cricket என்பதையொட்டி இருந்தது. அதாவது, தன்னுடைய அணி எந்தச் சூழலில் இருந்தாலும், எதிரணிக்கு அடுத்த வாய்ப்பை அளிக்காமல், இன்னும் சொல்லப்போனால், அவர்களுடைய ஆதிக்கத்தைத் தன் ஆட்டத்தால் நொறுக்க வேண்டும். ரிச்சர்ட்ஸின் ஆட்டம் எப்போதும் இப்படித்தான். 1996 செமி ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக அர்விந்த் டிசில்வா ஆடியதும் fearless cricket தான். கடந்த ஒரு வருடத்தில், தன்னுடைய ஆட்டத்தையும் அணுகு முறையையும் வெகுவாக மாற்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜாம்பவான்கள் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில், டாப் ஸ்கோரராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போது, தன் கீப்பிங்கிலும் நிறைய மாற்றம் செய்திருக்கிறார். ‘ஆனால், அதை நிரூபிக்க முடியாமல் இருக்கிறேன்,’ என்கிறார் கார்த்திக். ‘விக்கெட் கீப்பிங்கில் தவறு செய்யாமல் இருப்பதற்காக நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு பேட்ஸ்மேன் தாம் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டதை நிரூபிக்க முடியும். ஆனால், விக்கெட் கீப்பிங்கில் என்னுடைய முன்னேற்றத்தைக் காண்பிப்பது சிரமம். அதை மற்றவர்கள் உணர்வது சுலபமல்ல’ என்கிறார். சச்சின், பாண்டிங், ரோஹித் சர்மா, பொலார்ட் உள்ள ஓர் அணியில் நிகரற்ற நட்சத்திரமாகத் திகழ்வது மிகக்கடினம். கார்த்திக் அதைச் சாதித்திருக்கிறார்.

அமித் மிஸ்ரா:

அடுத்த கும்ப்ளேவாக வளர்ந்திருக்க வேண்டியவர். முதல் டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்தவர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கே அமித் மிஸ்ரா என்று தேட வேண்டிய நிலைமை. இப்போது, மிஸ்ராவுக்கும் இந்த ஐ.பி.எல். பெரிய திருப்புமுனை.

மிஸ்ரா, முதலில் தில்லி அணியில் ஆடினார். பிறகு, டெக்கான் ஹைதராபாத் அணிக்கு மாறினார். இப்போது புதிய ஹைதராபாத் அணியான சன் ரைஸர்ஸின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார். 2008, 2011ல் ஐ.பி.எல். ஹாட்ட்ரிக் எடுத்த மிஸ்ரா, இந்த ஆண்டும் இன்னொரு ஹாட்ட்ரிக் எடுத்திருக்கிறார். ஐ.பி.எல்.லில், மூன்று முறை இந்தச் சாதனையை யாரும் செய்ததில்லை. 

மிஸ்ராவுக்கு 30 வயதாகிவிட்டது. மிகக் குறைந்த டெஸ்ட் (13) மற்றும் ஒருநாள் ஆட்டங்களில்தான் (15) ஆடியிருக்கிறார். 2003ல் இந்திய அணி ஒருநாள் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து வாழ்வா சாவா நிலைமைதான். முதல் டெஸ்டிலேயே தன்னை நிரூபித்தாலும், அடிக்கடி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பாதிப்புக்குள்ளானார். ஆனால், ஐ.பி.எல்.லில் தொடர்ந்து தம்மை நிரூபித்துக் கொண்டிருந்தார். இந்த வருட ரஞ்சிப் போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பிரமாதப் படுத்திவிட்டார். ஒரு டபுள் செஞ்சுரி உள்பட. இதனால், சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஐ.பி.எல். லில், கூக்ளி, டாப் ஸ்பின், ஃப்ளிப்பர் என்று விதவிதமாகப் பந்து வீசி எதிரணியினரைத் திணறடித்து வருகிறார்.

இந்திய அணியில் அஸ்வின், ஓஹா, ஜடேஜா என்கிற வலுவான ஸ்பின் கூட்டணி அமைந்த பிறகும் முட்டிமோதுகிறார் மிஸ்ரா. கும்ப்ளேவுக்குப் பிறகு இந்திய அணியில் நல்ல லெக் ஸ்பின்னர் இல்லை. இந்தக் குறையை மிஸ்ராதான் தீர்க்கவேண்டும். 

ஐ.பி.எல்.லுக்குப் பிறகு, இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தினேஷ் கார்த்திக்கும் அமித் மிஸ்ராவும் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.
 

தங்கத்தின் வீழ்ச்சி நிரந்தரமா? வி.கோபாலன்

சென்ற ஒரு வார காலமாக தமிழ்ப் புத்தாண்டையொட்டி தங்கத்தின் விலை கிடுகிடுவென்று இறங்கிக் கொண்டே வருகிறது. சுமார் 4 நாட்களுக்குள் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் ரூபாய் 350-க்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. இதனால் ஒரு பவுன் தங்கம் (8 கிராம்) ரூபாய் 2800-க்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. சென்ற ஜனவரி விலை நிலவரத்துடன் ஒப்பிட்டால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று சுமார் 470 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 18.4.2013 அன்று ரூபாய் 19,400. ஒரு கிராம் விலை ரூபாய் 2425.

ஒரு வார காலக்கெடுவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி சமீபகாலத்தில் கண்டிராத அளவுக்கு இருக்கிறது. சென்ற பத்தாண்டுகளாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகத்தான் இருந்து கொண்டிருந்தது. எப்போதாவது விலை குறைந்தாலும் அது சிறிய அளவில்தான் இருந்தது. கிராமுக்கு சுமார் 1 ரூபாய் முதல் 15 ரூபாய் வரைதான் குறைந்தது. தங்கத்தின் விலை ஏறுமுக மாகவே இருந்தது என்பதற்கு இதோ ஒரு புள்ளி விவரம்:

ஆண்டு ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் சராசரி விலை

ஆண்டு ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் சராசரி விலை


இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ந்ததுதான் காரணம். எப்படி?

சென்ற பத்து நாட்களில் உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 250 அமெரிக்க டாலர் குறைந்திருக்கிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1670 டாலரிலிருந்து 1420 டாலராகக் குறைந்திருக்கிறது. (ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 30 கிராம்) சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியினால் தான் இந்தியாவில் தங்கத்தின் விலை ரூபாய் அளவில் குறைந்திருக்கிறது. இதுதான் முக்கியக் காரணம். சரி, சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

1. அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு நல்ல திருப்புமுனையைக் கண்டுவிட்டது. சென்ற சில மாதங்களாக அமெரிக்கப் பொருளாதாரம் ஏறுமுகமாகவே இருக்கிறது. அதனால் தங்கத்தில் முதலீடு செய்த பல நாடுகள் மீண்டும் அமெரிக்க டாலரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. இதனால் இந்த நாடுகளில் தங்கத்தின் முதலீடு குறைந்து விட்டது.

2. ஐரோப்பாவிலுள்ள சில நாடுகள் மிகுந்த பொருளாதாரச் சிரமத்திலிருந்து விடுபடுவதற்காக தங்கள் கையிருப்பு தங்கத்தில் ஒரு பகுதியை விற்கத் தொடங்கி விட்டன.

3. ஜப்பானின் பொருளாதாரம் சில ஆண்டுகளாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. அதைத் தலைநிமிரச் செய்ய 1400 பில்லியன் டாலரை தன் பொருளாதார வளர்ச்சிக்குச் செலவிட ஜப்பான் தீர்மானித்திருக்கிறது. அதற்காகத் தன்னிடமுள்ள தங்கத்தில் ஒரு அளவை விற்பனை செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது ஜப்பானுக்கு!

4. சென்ற சில மாதங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பரஸ்பர நிதிநிறுவனங்கள் (Mutual Funds) உறுப்பினர்களின் சேமிப்புத் தொகையை தங்கத்தில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தீர்மானித்து விட்டன. இதனால் அந்தப் பரஸ்பர நிதிநிறுவனங்கள் தங்களிடம் உள்ள தங்கத்தைப் பெரிய அளவில் விற்கத் தொடங்கியிருக்கின்றன.

சாதாரணமாக ஒரு பொருளின் விலை குறைவதற்கு முக்கியக் காரணம் அந்தப் பொருளின் உற்பத்தி அளவு அதிகரிப்பதால். ஆனால், தங்கத்தைப் பொறுத்த வரை உலக அளவில் மொத்தம் வெட்டி எடுக்கப்படும் தங்கம் ஆண்டொன்றுக்கு சுமார் 3000 டன்தான். இந்த அளவில் பெரும் மாற்றம் கிடையாது. 

தங்கத்தின் விலை இந்த அளவு குறைந்திருக்கிறதே! இன்னும் குறையுமா?" என்பது எல்லோரும் சாதாரணமாக எதிர்பார்ப்பதுதான். ஆனால் இந்த அளவு தங்கத்தின் வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதார அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு அசாதாரணச் சூழ்நிலைதான் காரணம். இந்த அசாதாரணச் சூழ்நிலை நிரந்தரமானதல்ல. அதனால் மேலும் தங்கத்தின் விலை அதிக அளவு குறைய வாய்ப்பில்லை. அநேகமாக இப்போதைய விலை நிலவரம் அதே அளவில் (சற்றே கூடிக் குறைந்து) இன்னும் சில மாதங்கள் இருக்கக்கூடும்.

இந்த விலைச் சரிவை பயன்படுத்திக் கொண்டு தங்கம் வாங்கலாமா?" - அவசியமான நிகழ்ச்சிகளுக்கு - கல்யாணம் உட்பட வாங்கலாம்.

அடுத்த சுமார் 8 அல்லது 9 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ஏறக்கூடும்.



அருள்வாக்கு - நிறைவு!


ஜலத்துக்கு நிறைவு சமுத்திரம். டம்ளரில், செம்பில், குடத்தில், அண்டாவில், கிணற்றில், குளத்தில், நதியில் என்று ஒன்றைவிட ஒன்று ஜாஸ்தியாக இருக்கிற ஜலம் கடைசியில் சமுத்திரம் என்று முடிகிறது. இப்படியே ஞானத்துக்கும் கிருபைக்கும் நிறைவான சமுத்திரம் பராசக்தி. நமக்குக் கொஞ்சம் அறிவு, கொஞ்சம் அன்பு இருக்கிறது. பிராணிகளுக்கு நம்மை விடக் குறைவு. நம்மைவிட ஜாஸ்தி அறிவுள்ள, ஜாஸ்தி கிருபா சக்தி உள்ள தேவ ஜாதிகள் இருக்கின்றன. நம்மிலேயே மஹான்களானவர்கள் மகாஞானிகளாக, பரம காருண்யத்தோடு இருக்கிறார்கள். இந்த ஞானம், கிருபை பூரணமாக நிறைந்த இடத்தைத்தான் ஸ்வாமி, பரமாத்மா, பராசக்தி என்று சொல்வது.

எல்லாவற்றையும் அறிகிற ஞானம் அது; அறிகிறது மட்டுமில்லை. அறியப்படுகிற எல்லாமுமே அதுதான். அதற்கு வேறாக இன்னொன்று இருந்து, அதை இது அறிகிறது என்றில்லை. அப்படி இன்னொன்று இருப்பதற்கு இடம் இருந்துவிட்டால், இது எங்கும் நிறைந்த பூரணம் ஆகாது. இன்னொன்று துளித்துளி இருந்து விட்டால்கூடச் சரி, இதற்குக் குறைதான் - இது அந்தத் துளியில் இல்லாததால் இது பூரணமில்லை; நிறைந்த ஒரே நிறைவில்லை என்றுதானே அர்த்தம்? இதனால் என்ன முடிவாகிறது என்றால், பரமாத்மாவைத் தவிர அறியப்படுகிற வஸ்து என்று இரண்டாவது பதார்த்தமே கிடையாது என்பதுதான்.

அப்படியானால் இத்தனை ஜீவாத்மாக்கள் வேறு வேறாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோமே இது என்ன? இது ஒரு பெரிய வேஷம்தான், மாயா நாடகம்தான். வேஷம் கலைந்துவிட்டால், நிறைந்த நிறைவான ஒன்றே ஒன்றுதான். அதுவே அறிவாக நிற்கும். ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிற அறிவு! அது பூரணமானதால், அதனால் அறியப்பட வேண்டிய வஸ்து என்று வேறு எதுவுமே இல்லை. தன்னையே அறிந்து கொண்டிருக்கிற அறிவு அது.

இப்படி இரண்டாவதாக வேறே இல்லாமல் ஜீவாத்மாவை அந்தப் பரமாத்ம சமுத்திரத்தில் கொண்டு போய்க் கரைப்பதுதான் வாஸ்தவமான நிறைவு.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - பாதகம் செய்பவரைக் கண்டால்... ஞாநி


அண்மையில் ‘கார்டியன்’ ஆங்கில இதழில் வந்த ஒரு கட்டுரையை ஃபேஸ்புக் நண்பர் ஐகாரஸ் பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தினசரி செய்திகளைப் படிக்காமல், பார்க்காமல், கேட்காமல் இருந்தால் வாழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று வாதாடுகிற கட்டுரை அது. ஏனென்றால் பெரும்பாலான செய்திகள் எந்த விதத்திலும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவக் கூடியவையே அல்ல. மேலும் குழப்பக் கூடியவையே என்பதே அந்தக் கட்டுரையாளர் ரோல்ஃப் டெபெல்லியின் வாதம்.

அறியாமையே ஆனந்தம் (ignorance is bliss) என்பது ரொம்பப் பழமையான ஒரு கருத்து. அறியத் தொடங்கினால் பல சந்தோஷங்கள் அடிபட்டுப் போய்விடுகின்றன. நாம் சந்தோஷம் என்று அதுவரை அறிந்திருந்த பலவும் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியானவை அல்ல என்று புரியத் தொடங்கிவிடுகிறது. எனவே எதையும் அறியாமலே ஆனந்தமாக இரு என்று அந்தப் பழமொழி சொல்கிறது.

அறியத் தொடங்கத் தொடங்க ஆனந்தம் குறைவது உண்மைதான். ஆனால் மெய்யான மகிழ்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் கூடுகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி செய்தித்தாட்களைப் பார்க்காமல் இருந்திருந்தால் நானும் நிச்சயம் சந்தோஷமாக இருந்திருக்கக்கூடும். பார்த்ததில் நிச்சயம் மகிழ்ச்சி குறைந்துவிட்டது. கவலையும் கோபமும் வேதனையும் கேள்விகளுமாக மனம் நிரம்பியிருக்கிறது.

தில்லியில் காந்தி நகரில் ஐந்து வயது சிறுமியை அண்டை வீட்டுக்காரர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதில் அந்தச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். அவள் பிறப்புறுப்புக்குள் மெழுகுவர்த்தி, எண்ணெய் புட்டியை எல்லாம் நுழைத்து அவளைக் கொடுமைப்படுத்தினார்கள் என்று படிக்கும் போதே அழாமல் இருக்க முடியவில்லை. பிடிபட்டவன், ‘நான் செய்யவில்லை. நானும் என் நண்பனுமாக மது குடித்தோம். அவன் தான் எல்லாம் செய்தான்’ என்று சொன்னதையடுத்து நண்பனை பீகாரில் போய் கைது செய்திருக்கிறார்கள். குழந்தையை இரண்டு நாட்களாக வீட்டில் தேடியிருக்கிறார்கள். அதே கட்டடத்தில் இன்னொரு அறையில் அந்தச் சிறுமி அடைத்து வைக்கப் பட்டிருந்திருக்கிறாள்.

இதே வாரம் அலிகாரில் ஆறு வயதுச் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு இறந்து போய் அவள் உடல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருக்கிறது.

‘அமைதிப் பூங்கா’வான நம் தமிழ்நாட்டில் திருப்பூரில் எட்டு வயதுச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். பக்கத்து வீட்டு 23 வயது இளைஞர் அவளிடம் வந்து சோறு கேட்டு, அவள் சோறு பரிமாறுகையில் அறையைப் பூட்டி விட்டு அவளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார். கோவையில் பிப்ரவரி மாதத்தில் காணாமல் போன 13 வயதுச் சிறுமியை பெங்களூருக்குக் கடத்திச் சென்றவன் திரும்ப அழைத்து வந்தபோது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறாள். இரு மாதங்களாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தச் சிறுமியும் மருத்துவமனையில் இருக்கிறாள்.

இந்த நிகழ்ச்சிகள் எதையும் காவல்துறையால் நடக்காமல் தடுக்க முடியாது என்பது உண்மைதான். தில்லி காவல்துறை தலைவர் நீரஜ் குமார் அப்படித் தான் சொல்லியிருக்கிறார். பொது இடங்களில் எந்த நேரத்திலும் பயமின்றி நடமாட முடியக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுதான் காவல் துறையின் பொறுப்பு. (அதை அது சரியாகச் செய்வதில்லை என்பதைத்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் காட்டியுள்ளன.) தனியே அவரவர் வீடுகளில், அறைகளில் நடக்கும் கொடுமைகளை காவல்துறை முன் கூட்டி என்ன செய்தும் தடுக்கமுடியாது. சரி.

ஆனால் புகாருடன் போலீசிடம் பொதுமக்கள் வரும்போது போலீஸ் எப்படி நடந்து கொள்கிறது என்பதுதான் முக்கியம். தில்லிச் சிறுமி விஷயம் தொடர்பாக அவள் குடியிருப்பைச் சேர்ந்த பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் பங்கேற்ற ஒரு பெண்ணை, காவல்துறை துணை ஆணையர் கன்னத்தில் அறைந்தார். சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி முதலில் புகாரைப் பதிவு செய்யவே போலீஸ் விரும்பவில்லை. சிறுமி வீட்டாரிடம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவளைக் கவனித்துக் கொள்ளும்படியும் விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாமென்றும் காவலர்கள் சொன்னதாக சிறுமியின் அப்பாவான கட்டடத் தொழிலாளி புகார் கூறியிருக்கிறார். இவையெல்லாம் மீடியாவில் வந்ததால் தவறு செய்த அதிகாரி இடைநீக்கமேனும் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் காவல்துறையை அடியோடு சீர்திருத்தி அமைத்தால் ஒழிய அது தடுக்கக்கூடிய குற்றங்களைக் கூட அதனால் தடுக்க முடியப் போவதுமில்லை. மக்களின் நம்பிக்கையை அது அடையப் போவதுமில்லை. என்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ஏராளமான பரிந்துரைகள் பல்லாண்டுகளாக அரசுக் கோப்புகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
பொது இடத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறைகளைத் தடுக்கவும் குறைக்கவும்தான் போலீஸ் தேவை. ஆனால் வீட்டுக்குள், குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறைகளை எப்படித் தடுப்பது? யார் தடுப்பது?

நாம்தான் தடுக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளில் சுமார் 90 சதவிகிதம் அவர்களுக்குத் தெரிந்தவர்களால் தான் செய்யப்படுகிறது. அன்னியர்கள் பத்து சதவிகிதம்தான். பாலியல் வன்முறைக்கு உள்ளாவோர் பற்றிப் பொதுபுத்தியில் பல தவறான கருத்துகள் இருக்கின்றன. அதில் ஒன்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பாலியல் வன்முறை நடக்கிறது என்பதாகும். ஆறு வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசின் குழந்தைகள் நலத்துறை நடத்திய ஆய்வில் மொத்தக் குழந்தைகளில் 53 சதவிகிதம் பேர் ஏதோ ஒருவித பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று தெரியவந்தது. இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆண் குழந்தைகள். பாதிக்கப்பட்டோரில் பெண் குழந்தைகள் 47 சதவிகிதம்.

உறவினர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையே அதிகம். சுமார் 60 சதவிகிதம் கொடூரர்கள் நெருங்கிய உறவினர்கள்தான். அண்மைக் காலமாக ஃபேஸ்புக்கில் ஒரு சினிமா விளம்பர வாசகத்தைப் பலரும் புல்லரித்துப் போய் லைக் போட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், ‘முத்தம்’ காமத்தில் சேர்ந்தது இல்லையென்று," என்ற இந்த வாசகம் படத்தில் வரும் அப்பா பாத்திரத்துக்கு வேண்டுமானால் பொருந்தக்கூடும். ஆனால் அசல் வாழ்க்கையில் எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தாது. கடந்த சில மாதங்களுக்குள்ளேயே மூன்று சம்பவங்கள் தமிழ்நாட்டில் செய்தியாக வெளியிடப்பட்டன. மூன்றும் அப்பாக்கள் தங்கள் மகள்களான சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செய்தது தொடர்பானவைதான். இதேபோல அம்மா - மகன் தகாத உறவுப் பிரச்னைகள், பாலியல் வன்முறைகள் எல்லாம் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் கண்ணை மூடிக்கொண்டுவிடுவதால் இவை இல்லாமல் போய்விடுவதில்லை. கார்டியன் கட்டுரையாளர் நம்மைக் கண்ணை மூடிக்கொள்ளச் சொல்கிறாரா? இல்லை. திறக்கவேண்டியதற்கு மட்டும் கண்ணைத் திறக்கக் கற்றுக் கொள்ளச் சொல்கிறார்.

ஒரு சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதும் நம் மீடியா, பத்திரிகைகள் பெரும்பாலும் எழுப்பும் கூக்குரல் எல்லாம் ஆளுங்கட்சி, அரசு, போலீஸ் சார்ந்த எதிர்ப்பாக மட்டுமே முடிந்துவிடுகின்றன. ஒவ்வொரு கட்சியும் அதைத் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறது.

ஆனால் அசல் பிரச்னை இன்னும் ஆழமானது. அதில் எல்லா கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்த அசல் பிரச்னையின் வேர்களைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதைப் பார்க்கச் செய்வதுதான் இதழியலின் நியாயமான பணி.

ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. குழந்தையிடம் நிஜமான அன்பு உடையவர்களிடம் இதைக் கற்பிப்பதை பிரசவம் முடிந்ததும் மருத்துவமனையிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது. தன்னிடம் பேட்டச் செய்பவர் உறவினரானால் வீட்டுக்கு வேண்டியவர், நெருக்கமானவர், ஆசிரியரானால் அதிகாரம் உடையவர் என்பதெல்லாம் குழந்தையை பயப்படுத்தும் அம்சங்கள். அச்சம் தவிர் என்று குழந்தைக்குச் சொல்லித் தரவேண்டியிருக்கிறது. நம்முடைய குடும்ப அமைப்பிலும் கல்வி அமைப்பிலும் இப்போது இதற்கெல்லாம் இடமே இல்லை. அதைப் பற்றித் தான் மீடியா விவாதிக்க வேண்டும். காவலர் பயிற்சித் திட்டத்தில் இதைப் பற்றிச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

இன்னொரு பக்கம், கைதான கொடூரர்களில் பலர் திரும்பத் திரும்பச் சொல்வது - நான் மது குடித்திருந்தேன் என்பதாகும். அப்படியானால் மதுவைப் பற்றி நம் சமூகத்தின் பார்வை என்ன, அரசின் கொள்கை என்ன என்று நாம் தெளிவுக்கு வர வேண்டும். பக்குவமற்ற நம் சமூகத்தில் பூரண மதுவிலக்கே தீர்வு என்று கோரும் என் போன்றோரின் கருத்தை ஏற்காதவர்கள், மதுவின் ஆபத்திலிருந்து நம் குழந்தைகளையும் அவர்களுக்குக் கொடுமை செய்யப் போவோரையும் காப்பாற்ற வழிகள் என்ன என்றாவது கண்டறிந்து விவாதிக்க வேண்டும்.

உயிருக்கே ஆபத்து என்ற அளவுக்கு பாலியல் வன்முறை செய்யப்பட்ட குழந்தைகள் பற்றிய செய்திகள் மட்டுமே நம் கவனத்துக்கு வருகின்றன. ஆனால் சின்னச் சின்னதாகத் தொடர்ந்து பல பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகும் பல குழந்தைகள் அதைப் பற்றிப் பேச பயப்பட்டுச் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் அடிமனத்தில் இருக்கும் பயமும் வேதனையும் அவர்கள் நடத்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த அறிகுறிகளைப் புரிந்து கொண்டு குழந்தைக்கு உதவ குழந்தையிடம் மெய்யான அன்புடைய ஆசிரியர்களுக்கோ பெற்றோருக்கோ கற்பிக்க வேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது என்று மீடியா விவாதிக்க வேண்டும். நடைமுறைக்குத் தோதான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் இந்தக் கல்வி நடக்க வேண்டும்.

இந்தியாவில் இப்போது மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவிகிதம் பேர் குழந்தைகள். அதாவது 40 கோடி குழந்தைகள். அத்தனை குழந்தைகளும் உள்ளுக்குள் பயத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்தப் போகிறோமா? அல்லது அச்சமின்றி தன்னால் தனக்கு வரும் சவால்களைச் சந்திக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறோமா?


ஒரு திருத்தம்: சென்ற வாரக் கட்டுரையில் : கடந்த 4 வருடங்களில் மட்டும் சுமார் 900 கோடி இலங்கைப் பணம் (சுமார் 1800 கோடி இந்திய ரூபாய்) கண்ணி வெடி அகற்ற செலவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்" என்பதை 400 கோடி இந்திய ரூபாய் என்று திருத்திப் படிக்கவும். கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தமிழர் விதவைப் பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். மாதக் கூலி 200 டாலர் (சுமார் 2500 இலங்கை ரூபாய்)" என்பதை 25 ஆயிரம் இலங்கை ரூபாய் அல்லது 12500 இந்திய ரூபாய்" என்று திருத்திப் படிக்கவும். இலங்கை ரூபாயைப் போல இரு மடங்கு அதிக மதிப்புள்ளது இந்திய ரூபாய்.



Thursday, April 25, 2013

கணித மேதை சகுந்தலா தேவி.

சினிமா பிரபலங்களையும், கிரிக்கெட் பிளேயர்களையும் தாண்டி 'ரோல் மாடல்’களை யோசிக்க முடியாத இந்திய சமூகத்தில், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஒரு ரோல் மாடல் கணித மேதை சகுந்தலா தேவி. ஆனால், அவர் இப்போது நம்மிடையே இல்லை!
 
'ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ என்று கொண்டாடப்பட்ட சகுந்தலா தேவியிடம், 13 இலக்க எண்ணை இன்னொரு 13 இலக்க எண்ணால் பெருக்கச் சொன்னால், அதற்கான விடையைச் சொல்ல அவருக்கு ஒரு சில விநாடிகளைத் தவிர பென்சில், தாள், கால்குலேட்டர் என எதுவும் தேவைப்படாது.
 
சுமார் 33 வருடங்களுக்கு முன்பு... அதாவது கணினி என்பது பிரமாண்ட அளவுகளில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கூடங்களில் மட்டுமே இருந்த காலகட்டத்தில், சகுந்தலா தேவியை லண்டன் மாநகரின் இம்பீரியல் கல்லூரிக்கு அழைத்தார்கள் பேராசிரியர்கள். அவரிடம் 201 இலக்கங்களைக்கொண்ட ஒரு எண்ணைக் கொடுத்து அதன் 23-வது வர்க்க எண்ணைக் கேட்டார்கள். 28 விநாடிகளில் சகுந்தலா பதில் சொல்ல, வாயடைத்துப்போனார்கள் அந்தப் பேராசிரியர்கள்.
 
 
அந்தரத்தில் வித்தை காட்டும் ஒரு சர்க்கஸ் கலைஞனுக்குப் பெண்ணாகப் பிறந்த சகுந்தலா, சிறுமியாக இருக்கும்போது சீட்டுக்கட்டுகளில் இருக்கும் 52 அட்டைகளை வைத்துப் பல வித்தைகளைக் காட்டினார். அந்த வித்தைகள் அனைத்துக்கும் கணிதம்தான் அடித்தளம் என்பதைத் தாண்டி சகுந்தலாவின் தந்தையால் அவரது பெண்ணின் திறமைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சகுந்தலாவை நல்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்கவைக்கக்கூட இயலவில்லை அவரால்.
 
ஏழ்மைக்கு இடையிலும் தன்னார்வத்தோடு தன் முயற்சிகளைப் பட்டை தீட்டியபடியே இருந்தார் சகுந்தலா. ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார்.அசந்து போன ஐன்ஸ்டீன், சகுந்தலாவின் திறமையைப் பாராட்டிச் சான்றிதழும் அளித்திருக்கிறார்.
 
ஆனால், காமதேனுவே கிடைத்தாலும் அதை காராம்பசுவாக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நம் நாடு, சகுந்தலா தேவியை ஒரு ஜோசியக்காரராக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. மனக்கணக்காகவே எப்படி அவ்வளவு பிரமாண்டக் கணக்குகளை சகுந்தலா தீர்க்கிறார் என்பதை சகுந்தலாவிடமிருந்து கடைசி வரை தெரிந்துகொள்ளாமலேயே இருந்துவிட்டோம். கடந்த வாரம் பெங்களூரில் மரணமடைந்த சகுந்தலாவுடனேயே, அவரது மனக்கணக்கிடும் திறமையும் மரித்துவிட்டது!

Wednesday, April 24, 2013

எனது இந்தியா (கல்லாயுதங்கள் !) - எஸ். ரா

வரலாற்றின் பணிகளில் ஒன்று, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவது. முறையான பதிவேடுகள், சான்றுகள் இல்லாத கற்காலத்தை அறிந்துகொள்ள நம்மிடம் இருப்பவை கல்லாயுதங்கள் மற்றும் குகை ஓவியங்கள் மட்டுமே. உலகின் முதல் ஆயுதங்களில் ஒன்று கல். கற்கால மனிதர்கள் கல்லால் ஆன ஆயுதங்களைக் கொண்டுதான் வேட்டையாடி இருக்கின்றனர். பழைய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள், உளிகள், கத்திகள் மற்றும் சிறிய கற்கருவிகள் தமிழகத்தில் பல்லாவரம், காஞ்சிபுரம், தர்மபுரி மற்றும் குடியம் குகைப்பகுதியைச் சுற்றி 30க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதைபொருள் ஆய்வில் கிடைத்துள்ள கல்லாயுதங்​களைக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பூமியில் எந்த இடங்களில் வாழ்ந்தனர், எப்படி வேட்டை​யாடினர் என்பதை மீள்ஆய்வு செய்கின்றனர். அப்படி ஆய்வு செய்யப்படும் ஆய்வியல் களங்களில் மிகமுக்கியமானது தமிழகம். அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சுற்றிய பகுதிகளும் தர்மபுரி மாவட்டத்து மலைப்பகுதிகளும்தான். இங்கே கிடைத்துள்ள பழங்கற்கால ஆயுதங்களை ஆராயும்போது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலப்பகுதியில் மக்கள் வாழ்ந்தது தெரியவருகிறது. பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், குவார்ட்சைட் எனப்படும் கரடுமுரடான கற்களை, வேட்டையாடப் பயன்படுத்தினர். பெரிய குவார்ட்சைட் பாறைகளை நெருப்பால் சூடாக்கிய பிறகு, அதன் மீது நீரை ஊற்றிப் பிளந்து ஆயுதங்கள் செய்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படியாக, கூழாங்கற்களாலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களை உடைத்து, சிறிய ஆயுதங்களாக மாற்றி இருக்கின்றனர். பின்னாளில் கல்லாயுதங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.


இன்றும் சென்னை மியூசியத்தில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல்லாயுதங்களைப் பார்க்கலாம். இவை, ராபர்ட் புரூஸ் புட் என்பவர் சேகரித்தவை. இவர், சென்னை நகரில் நிலவியல் ஆய்வாளராகப் பணியாற்றியவர். இந்திய நிலவியல் ஆய்வுகளின் தந்தை எனப்படும் ராபர்ட் புரூஸ், 1863-ல் சென்னையில் பல்லாவரம் அருகே கைக்கோடரி ஒன்றைக் கண்டுபிடித்தார். தனது நிலவியல் ஆய்வின் போது தற்செயலாகப் பார்த்த அந்தக் கல்லாயுதம் தனது வாழ்க்கையைப் புரட்டிப் போடப்போகிறது என்று ராபர்ட் புரூஸ் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்தக் கல்லாயுதம் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறிய முயன்ற அவரது ஆய்வு, இந்தியாவின் பழங்கற்கால ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. அவரது ஆய்வுப்படி அந்தக் கோடாரி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்தியது. இந்தக் கண்டுபிடிப்புதான், பழங்கற்கால ஆயுதங்கள் குறித்த புரூஸின் தேடுதல்களுக்கான முதல் புள்ளியாக அமைந்தது.

1834-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள செல்டன்ஹாமில் வசித்த வில்லியம் ஹென்றி புரூஸ் மற்றும் சோபியாவின் மகனாகப் பிறந்தார் ராபர்ட் புரூஸ். இளவயதில் இருந்தே பாறைகளை ஆராய்வதில் ஆர்வம்கொண்டிருந்த ராபர்ட், இதற்காகவே நிலவியல் ஆய்வுகள் குறித்த படிப்பைத் தேர்வுசெய்து படித்தார். 1858-ம் ஆண்டு இந்தியாவில் இயங்கிய கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய நிலவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றத் தேர்வுசெய்யப்பட்டு ராபர்ட் புரூஸ் கல்கத்தா வந்து சேர்ந்தார்.

இந்தியாவை ஆட்சிசெய்துவந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், இந்தியாவின் இயற்கை வளங்களை, குறிப்பாகக் கனிமங்களைக் கண்டறிவதில் அதிக அக்கறை கொண்டிருந்தனர். இதுபோலவே படை நடத்திச் செல்லும் வழி, மற்றும் குடிநீர் நிலவரம் பற்றி அறிந்துகொள்ள பல்வேறு நிலவியல் ஆய்வுகளை நடத்தினர். இந்திய ஆய்வுப் பணியின் தலைவராக இருந்தவர் தாமஸ் ஆல்ட்ஹெம். இவருக்குக் கீழே 12 பேர் கொண்ட குழு இருந்தது. அதில் ஒருவராக இணைந்தார் ராபர்ட் புரூஸ். இந்தியா குறித்து வாசித்து மட்டுமே அறிந்திருந்தவருக்கு, இந்திய மண்ணின் வேறுபட்ட நிலவியல் அமைப்புகள் மற்றும் இந்தியாவின் மிகையான வெக்கை, விசித்திரமானதொரு மனநிலையை உருவாக்கியது. நிலவியல் களங்களைத் தேடிச்சென்று நேரடியாக ஆய்வுசெய்த ராபர்ட் புரூஸ் பாறை அடுக்குகளின் இயல்பு குறித்து நிறையத் தகவல்களைத் திரட்டினார்.

மதபோதகர் பீட்டர் பெர்சிவலின் மகள் எலிசபெத் ஆன் - ராபர்ட் புரூஸ் ஆகியோருக்கு 1862-ல் திருமணம் நடந்தது. பெர்சிவல், யாழ்ப்பாணம் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். தேர்ந்த தமிழ் அறிஞர். பைபிள் மொழியாக்கம் செய்வதற்குக் காரணமாக இருந்தவர். பைபிளை மொழியாக்கம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்த ஆறுமுக நாவலருடன் நட்பாக இருந்தவர். இலங்கையில் இருந்து மதறாஸ் வந்த பெர்சிவல், பிரசிடென்சி கல்லூரிப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இங்கு ராபர்ட் புரூஸுடன் ஏற்பட்ட நட்பு, இந்தியாவின் தொன்மை குறித்த ஆய்வுகளின் வழியேதான் நடந்தேறியது, எலிசபெத்துடன் வாழ்ந்து நான்கு குழந்தைகளின் தந்தையானார் ராபர்ட் புரூஸ். எட்டு ஆண்டுகள் ராபர்ட்டுடன் வாழ்ந்த எலிசபெத் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தபோது, நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு தடுமாறினார் ராபர்ட் புரூஸ். ஆகவே, தன்னையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள எலிசா வெல்ஸ் என்ற இளம்பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். மெட்ராஸ் சர்வே பார்ட்டி எனப்படும் ராபர்ட் புரூஸின் ஆய்வுக் குழு, வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்களது நிலவியல் ஆய்வுப் பணிகளை நடத்தியது. இதில் பிளைன்போர்ட், ஆல்ட்ஹெம், வி.கிங், ஜியோகான் ஆகியோர் தனித்துவமிக்க நிலவியல் ஆய்வாளர்களாக விளங்கினர்.  
ராபர்ட் புரூஸ் மற்றும் கிங் இருவரும் பாறைகளை ஆய்வுசெய்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக, பல்வேறு பாறைப் படிவுகளைச் சேகரித்து, அவற்றின் காலம் மற்றும் தன்மை குறித்து நுட்பமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்காக சேலம், ஆற்காடு, சென்னை, நெல்லூர், கடப்பா, கர்நூல், கிருஷ்ணா பகுதிகளில் ராபர்ட் புரூஸ் அலைந்து திரிந்து நிலவியல் கூறுகளைத் துல்லியமாக ஆராய்ந்தார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பல்லாவரம் பகுதியில் பாறைப் படிவங்​களை ஆராயும்போதுதான் ராபர்ட் புரூஸுக்கு கல்லால் ஆன கோடரி ஒன்று கிடைத்தது. அது, என்ன விதமான பொருள் என்று தெரியாமல் அதைச் சேகரித்துக் கொண்டுவந்தவர், தன்னிடம் இருந்த ஆய்வியல் வரைபடங்களைக்கொண்டு அது கற்கால ஆயுதம் என்பதை அறிந்தார். அந்த ஆயுதம் கிடைத்தவுடன், கற்காலச் சின்னங்கள் வேறு எதுவும் அந்தப் பகுதியில் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்கினார்.  அவரும் கிங்கும் இணைந்து அதிராம்பாக்கம் பகுதியில் அகழ்வாய்வு செய்தனர். அங்கு, பல்வேறு கல்லாயுதங்களைக் கண்டெடுத்தனர். அந்த ஆயுதங்களைக்கொண்டு அங்கே பழங்கற்காலத்திலேயே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைக் கண்டறிந்த ராபர்ட் புரூஸ் புட், அதன் வயது ஐந்து லட்சம் ஆண்டுக்கு முற்பட்​டதாக இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். அந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவின் தொன்மை குறித்த புதிய வெளிச்சம் ஒன்றை உருவாக்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த பழங்கற்காலத்தைய வாழ்வைத் தேடும் ஆய்வின் ஒரு பகுதியாக இது மாறியது. ஆப்பிரிக்காவில், குறிப்பாக எத்தியோப்பியாவில் நடந்த அகழ்வாய்வில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் மற்றும் கல்லாயுதங்கள் கிடைத்திருப்பதை அறிந்த ராபர்ட் புரூஸ், இந்தியாவிலும் அதுபோன்ற தொன்மையான மனிதக் குடியிருப்புகள் எந்த இடங்களில் இருந்திருக்கக்கூடும் என்று தேடுவதற்காக தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்தார்.

இன்று, கற்காலத்தை அறியும் ஆய்வு மிகப் பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. ஆனால், ராபர்ட் புரூஸ் காலத்தில் அதற்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக, கிழக்கிந்தியக் கம்பெனி இதுபோன்ற ஆய்வுகளால் தங்களுக்குப் பிரயோஜனமில்லை என்று, அவரது கண்டுபிடிப்புகளைப் புறம்தள்ளியது. ஆனாலும் மனச்சோர்வு அடையாமல் தனது ஆய்வுப் பணியைத் தொடர்ந்த ராபர்ட் புரூஸ், 33 ஆண்டுகள் நிலவியல் அறிஞராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அதன் பிறகு, மூன்று ஆண்டுகள் பரோடா அரண்மனையில் அரசு நிலவியல் அறிஞராகவும், மூன்று ஆண்டுகள் மைசூர் அரண்மனையில் நிலவியல் அறிஞராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர், தனது முதுமையைக் கழிக்க ஏற்காட்டில் வசித்தார். கல்கத்தாவில் மரணம் அடைந்த ராபர்ட் புரூஸின் உடல் ஏற்காட்டில் அடக்​கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரது கல்லறையும் அவரது மா​மனார் மதபோதகர் பெர்சிவலின் கல்ல​றையும் ஏற்காட்டில் சமீபத்தில் கண்டறியப்​பட்டுள்ளது.

Tuesday, April 23, 2013

உங்க லேப்டாப், கேமராவுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தாச்சா..?

நாம் வைத்திருக்கும் இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகளுக்கு மட்டுமல்ல, நம்மிடம் இருக்கும் கேமரா, லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற எந்த எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். இந்த இன்ஷூரன்ஸை எப்படி எடுப்பது? அதற்கான பிரீமியம் எவ்வளவு? எந்தச் சூழ்நிலைகளில் க்ளைம் கிடைக்கும்? க்ளைம் செய்யும்போது சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
 
'நம்மிடம் இருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது அல்லது திருடு போகும்போது ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சமாளிக்க எடுத்துக்கொள்ளும் இன்ஷூரன்ஸ்தான் எலெக்ட்ரானிக் எக்யூப்மென்ட் இன்ஷூரன்ஸ். இந்த இன்ஷூரன்ஸை இரண்டு வழிகளில் பெறமுடியும். ஒன்று, பொருட்களின் அனைத்து ரிஸ்க்குகளுக்கும் சேர்த்துப்பெறலாம்; மற்றொன்று, தேவையைப் பொறுத்து பொருளின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் பெறக்கூடிய ஸ்பெஷல் கன்டின்ஜென்ஸி பாலிசி முறை. (கேமரா மற்றும் லேப்டாப்புக்கு மட்டும்)

எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்கும்?

''கேமரா மற்றும் கேமரா லென்ஸுகளுக்கு சிராய்ப்பு ஏற்பட்டால் க்ளைம் கிடைக்காது. (இது அனைத்து வகையான எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும்.) அதேபோல ஜூம் லென்ஸ் செயல்படாமல் நின்று விடுவது  போன்ற விஷயங்களுக்காக க்ளைம் கிடைக்காது. கேமரா உடைந்து விட்டாலோ அல்லது எதிர்பாராத விபத்துகளால் பெரிய அளவில் சேதமானாலோ க்ளைம் கிடைக்கும்.


கேமராவின் தரம் மற்றும் விலையைப் பொறுத்து பாலிசிகள் தரப்படுகின்றன. கேமராவின் விலையைப் பொறுத்து அதற்கான இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இதே விதிமுறைகள்தான் லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற மற்ற எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும்.

கம்ப்யூட்டருக்கு  இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, இன்ஷூரன்ஸ் விண்ணப்பத்தில் தரப்பட்ட முகவரியில் வசிக்கும்போது நிகழும் பாதிப்புக்கோ, திருடு போனாலோதான் க்ளைம் கிடைக்கும். மற்றொரு வீட்டில் குடி அமர்ந்த பிறகு திருடு போனாலோ, பாதிப்பு ஏற்பட்டாலோ க்ளைம் கிடைக்காது. அதனால் இன்ஷூரன்ஸ் எடுத்தபிறகு வீடு அல்லது அலுவலகத்தை மாற்றினால் உடனே அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியபடுத்த வேண்டும்.

இனி பிரிமீயம் எவ்வளவு என்று பார்ப்போம்.

கேமரா: 

கேமராவின் விலையில் குறைந்தபட்சம் 1  முதல் அதிகபட்சம் 2.5 சதவிகிதம் வரை பிரீமியம் செலுத்தவேண்டி இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை பிரீமியம் செலுத்தினால் போதுமானது. இதை இப்போதைக்கு நேரில் சென்றுதான் கட்டமுடியும். கூடிய விரைவில் ஆன்லைன் மூலம் பணம் கட்டும் வசதி வர வாய்ப்புண்டு.  

உதாரணமாக, ரூ.25,000 மதிப்புள்ள கேமராவிற்கு 1 சதவிகிதம் பிரீமியம் கட்டவேண்டியிருக்கும். அதாவது, வருடத்திற்கு ரூ.250. அதே 5 லட்சம் மதிப்புகொண்ட கேமராவிற்கு 1.5 சதவிகிதம் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, வருடத்திற்கு ரூ.7,500. அதே உலகளாவிய பாலிசியாக இருந்தால் 2 சதவிகிதம் பிரீமியம் செலுத்தவேண்டும்.

லேப்டாப்:

லேப்டாப் விலையில் 1.5 - 2.5% வரை இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தவேண்டி இருக்கும். லேப்டாப் என்பது எந்த நேரத்திலும் கையில் எடுத்துச்செல்ல வாய்ப்பிருப்பதால் அதற்கான ரிஸ்க் அதிகம். இதனாலேயே அதற்கு அதிக பிரீமியம் கட்டவேண்டும். பொருட்களின் மதிப்பு, தரத்திற்கு ஏற்றாற்போல இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. கேமரா, லேப்டாப் இரண்டையும் உடன் வைத்துக்கொண்டு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்பவராக இருந்தால் அதற்கென்று இருக்கும் சிறப்புப் பாலிசியை எடுப்பது நல்லது.

கம்ப்யூட்டர்:

வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்திருக்கும் கம்ப்யூட்டர்களுக்கு ரிஸ்க் குறைவு. அதுபோல அதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் பிரின்டர், யூ.பி.எஸ்., போட்டோ ஸ்கேனர் போன்றவற்றுக்கும் சேர்த்து இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ரிஸ்க் குறைவு என்பதால் கட்டும் பிரீமியமும் குறைவே. கம்ப்யூட்டர் விலையிலிருந்து 0.75 - 1.5% வரை பிரீமியம் இருக்கும்.

சமர்ப்பிக்க வேண்டியவை!

இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்ட பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனே இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியபடுத்த வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட பொருளுக்காக க்ளைம் செய்யும்போது எஸ்டிமேட் ரிப்போர்ட், பழுது பார்க்கப்பட்டதற்கான ரசீது, விபத்துக்கு உள்ளாகி இருந்ததால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். நகல் மற்றும் பொருள் தொலைந்து போயிருந்தால், அந்தப் பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல் நிலையம் அளிக்கும் சான்றிதழ் போன்றவற்றுடன் சமர்ப்பிக்கவேண்டும்.

க்ளைம் தொகை!

இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அன்றைக்கு மார்க்கெட்டில் என்ன விலையோ, அது க்ளைம் தொகையாக தரப்படும். பொருளின் பயன்பாடு, தரம் என எல்லாவற்றையும் கணக்கிட்டபின்னர் 80% தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 10 வருடங்களுக்கு முந்தைய காலத்து கேமரா இன்றைய இன்ஷூரன்ஸ் கால அளவில் பழுதடைந்திருந்தாலோ, விபத்துக்கு உள்ளாகி சேதம் உண்டாகியிருந்தாலோ அந்த பழுதை சரிபார்க்கும் வாய்ப்பு அமையாமல் போனால் அந்த கேமரா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு இன்றைய மார்க்கெட் விலையை க்ளைம் தொகையாகத் திருப்பித் தரப்படும். இதுபோலத்தான் மற்ற பொருட்களுக்கும்.

க்ளைம் செய்யும்போது விவரங்கள் சரியாக இருந்தால், சில நாட்களில் இழப்பீடு கிடைத்துவிடும். இல்லாவிட்டால் காலதாமதம் ஏற்படும்''.


 
 

வருமானம் தரும் குடிநீர் தயாரிப்பு!

'பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் ஆலையை அமைப்பதற்கு, முதலில் சுத்தமான, குறைந்த தாது மற்றும் ரசாயனப் பொருட்கள் உள்ள தண்ணீர் கிடைக்கும் இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதி, விவசாயப் பகுதி சரிப்படாது. நீங்கள் அவர்களின் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாக நாளை பிரச்னை வரலாம். எனவே, பிரச்னை இல்லாத, பல வருடங்களுக்கு வற்றாத நீர் ஊற்று உள்ள இடமாகத் தேர்ந்தெடுப்பது முதல் படி. அந்த நீரை பரிசோதனை கூடங்களில் கொடுத்து, சுத்திரிக்கப்பட்ட குடிநீராக மாற்றத் தகுதியுள்ள நீர்தானா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

அடுத்ததாக, இந்தத் தொழிலை நடத்த மூன்று விதங்களில் தொழிற்சாலை அமைக்கலாம். ஒரு மணி நேரத்தில் 2,000 - 5,000 லிட்டர் வரை நீர் சுத்திகரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கு, 'மேனுவல்' என்றால் 20 லட்சமும், 'செமி ஆட்டோமேட்டிக்' என்றால் 25 லட்சமும், 'ஃபுல் ஆட்டோமேட்டிக்' என்றால் 40 லட்சமும் தேவைப்படும். இத்தொழிலை 'டர்ன்கி சிஸ்டம்’ மூலம் செய்து தர பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்களே எந்திரங்களை நிறுவி அதற்கான பயிற்சிகளையும் அளிப்பார்கள்.


தொழிற்சாலையில் எட்டு நிலைகளில் இந்த நீர் சுத்திகரிக்கப்படும். அப்போதுதான் நீரானது, 100% சுத்தமானதாக இருக்கும். இதுதான் இந்தத் தொழிலுக்கு மிகமிக முக்கியமான தேவை. ஆனால், பேராசைப்பட்டு பணத்தை மிச்சப் படுத்துவதற்காக நீரை சரியாக சுத்தம் செய்யாமல் பேக் செய்து விற்றனர். அதன் விளைவு, 'பிஐஎஸ்' (BIS) நிறுவனத்தின் 'தரக் கட்டுப்பாடு முத்திரை'யுடன்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, தரம் என்பது மிக அவசிய மான ஒன்று. தரக்கட்டுப்பாடு முத்திரை பெறுவது என்பது கட்டாயமான ஒன்று. இதன்படி சுத்திகரிக்கப்பட்ட நீர், பலகட்ட பரிசோதனையை கடந்த பின்னேதான், இந்தத் தொழிலை நடத்துவதற்கான உரிமம் கிடைக்கும்.

அடுத்ததாக, தொழில் போட்டி மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி பார்ப்போம்.    மிக முக்கியமாக, உங்கள் பகுதியில் இத்தகைய தொழிற்சாலைகள் எத்தனை உள்ளன என்று முதலில் கணக்கெடுங்கள். அவற்றுடனான போட்டியை சமாளிக்க முடியுமா... என்பதையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுங்கள். பன்னாட்டு நிறுவனங்களும் இந்தக் களத்தில் உள்ளதால், போட்டி அதிகம் என்பதை கவனிக்கத் தவறாதீர்கள். சுத்திகரிக்கப்பட்ட நீரை 20 லிட்டர் கேன்களில் மட்டுமல்ல, ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்களிலும் விற்பனை செய்யலாம். பெருநகரங்களில் உள்ள பங்களாக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள் என்று ஏறி இறங்கினால் விற்பனை சுலபமாகும். உற்பத்தி செலவைவிட, போக்குவரத்து செலவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தேவையான வாகன வசதி அவசியம்.முன்பு எளிதாக துவங்கப்பட்ட இத்தொழிலுக்கு இப்போது பல கட்டுப்பாடுகள் வந்துள்ளன. பூமிக்கு அடியில் உள்ள அனைத்தும் அரசுக்கு சொந்தம், எனவே, நீரை எடுத்து விற்கும் குளிர்பானம் மற்றும் தண்ணீர் தொழில்களுக்கு ஏன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தன்மையையும் கருத்தில் கொள்ளவும். மாசுக்கட்டுப்பாடு வாரியம், தரக்கட்டுப்பாடு வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம், சுகாதார நிறுவனம், உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தகுதி சான்று என பல கட்ட சான்றிதழ்களைப் பெறவேண்டும்.

மொத்தத்தில் தொழிலைத் துவங்க நிறைய மெனக்கெட வேண்டும். அதேசமயம், விற்பனை சரியாக அமைந்துவிட்டால் மிகமிக லாபகரமான தொழில். ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தயாரிக்க 18 முதல் 22 பைசாதான் செலவு ஆகும். 20 லிட்டர் கேன் என்றால், 5 முதல் 6 ரூபாய் வரை செலவாகும். 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். தற்போது அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் 'நீட்ஸ்’ (NEEDS -New Entrepreneur-cum-Enterprise Development Scheme) திட்டம், இதற்கு ஏற்ற திட்டம். இதைப் பயன்படுத்தி, இந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபடலாம். ஆனால், வெற்றியும் தோல்வியும்... உங்களுடைய முயற்சியில்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்!''

சித்ரா பௌர்ணமி - சோழவந்தான்

மதுரையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். வீரபாண்டியன் எனும் மன்னன் சோழ மன்னனைக் கொன்ற இடம் என்பதால், சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டதாகவும், பிறகு ராஜராஜசோழன் இங்கு படையெடுத்து வந்து வென்றதால் 'சோழவந்தான்’ என அழைக்கப்படுவதாகவும் சொல்வர். 

பாகனூர், சதுர்வேதிமங்கலம், ஜனநாதன் சதுர்வேதிமங்கலம் என ஆதிகாலத்தில் பல பெயர்களுடன் விளங்கிய சோழவந்தானுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஜனக மகாராஜா வந்து வழிபட்ட திருத்தலம் இது. 

வைகையாறு பாய்ந்தோடுகிற இந்த அழகிய இடத்தில் தங்கி, பெருமாளையும் சக்தியான பெண் தெய்வத்தையும் வழிபட்டாராம் ஜனகர். பின்னாளில், ஜனகர் வழிபட்ட பெருமாளுக்கும் அம்மனுக்கும் தனித்தனியே கோயில் கட்டி வழிபட்டனர், அடுத்து வந்த மன்னர் பெருமக்கள்.


இந்த ஊரில் ஜனகை மாரியம்மன் திருக்கோயிலும், அங்கே நடைபெறும் திருவிழாவும் வெகு பிரசித்தம்! அதேபோல், மாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாள் கோயில், முழுக்க முழுக்கக் கற்றளிக் கோயிலாக அமைக்கப்பட்ட, அற்புதமான வேலைப் பாடுகள் கொண்ட ஆலயம்.  

சுக்கிர யோகம் தந்தருளக்கூடிய திருத்தலம் எனப் போற்றப்படும் ஸ்ரீஜனகை நாராயணர் கோயிலில் அழகும் கருணையும் கொண்டு காட்சி தரும் பெருமாளை, கண்ணாரப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆடிப் பூரம், பங்குனி உத்ஸவம், மார்கழி திருப் பள்ளியெழுச்சி, ஸ்ரீஅனுமன் ஜயந்தி, திருக் கல்யாணம் ஆகியவை சிறப்புற நடைபெறும் இந்தக் கோயிலில், சித்ரா பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வேண்டிச் செல்கின்றனர்.


அந்த நாளில், காலையிலிருந்து சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். மாலையில் குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறும். ஊரில் மொத்தம் ஐம்பது மண்டகப்படிகள் உண்டு. எனவே, சர்வ அலங்காரத்தில் வாகனத்தில் வருகிற பெருமாள், ஐம்பது இடங்களுக்கும் சென்று, ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும் வேண்டுதலையும் கேட்டு, அவற்றை நிறைவேற்றி அருள்வார் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், கிராம மக்கள்.  

பிறகு, அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவம் போலவே, இங்கும் ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாள், ஊரில் உள்ள வைகையாற்றில் இறங்குகிற நிகழ்ச்சி சிறப்புற நடைபெறும். அப்போது கருட வாகனத்தில், சர்வ அலங்காரங்களுடன் வருகிற பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும்.

மறுநாள், தசாவதார திருக்கோலக் காட்சி. ஒவ்வொரு அலங்காரத்திலும் காட்சி தருவார் பெருமாள். பிறகு, பூப்பல்லக்கில் உத்ஸவர் திருவீதியுலா வருவார். மண்டூக மகரிஷிக்கு சாபத்தில் இருந்து விமோசனம் தந்தருளினார் என்பதால் சோழவந்தான் ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாளை வந்து வணங்கினால், நம் சாபங்களும் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லா தவர்கள், வறுமையில் வாடுபவர்கள், தொடர்ந்து 7 அல்லது 11 வாரங்கள் வெள்ளிக் கிழமைகளில் வந்து, வெள்ளை மொச்சை வைத்து வழிபட்டால்  அவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி, சுக்கிர யோகம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.