தெலங்கானா தனது தலைநகராக ஐதராபாத்தைத் தக்க வைத்துக்கொள்ள, ஆந்திராவின் புதிய தலை நகருக்கான தேடல் ஆரம்பமானது.
இதற்கென அமைக்கப்பட்ட சிவராமகிருஷ்ணன் குழு விசாகப் பட்டினம், விஜயவாடா, திருப்பதி, குண்டூர் எனப் பல நகரங்களைப் பரிந்துரைத்தாலும்,
ஆந்திராவின் தலைநகரம் ‘அமராவதி’ என்பதில் மாநில முதல்வர் சந்திரபாபு உறுதியாக இருந்தார்.
நாடாளுமன்ற வளாக மண் மற்றும் கங்கை, யமுனை ஆறுகளின் புனித நீர் அடங்கிய
கலசங்கங்களைப் பிரதமர் மோடி முதல்வர் சந்திரபாபுவிடம்
ஒப்படைத்தார். இவற்றுடன் ஆந்திராவில் ஓடும் ஆறுகளின் தண்ணீர், ஆந்திராவின்
16,000 கிராம / நகரங்கள், மானசரோவர், வாரணாசி, ஆஜ்மீர்
தர்கா, மெக்கா, ஜெரூசலம், அமிர்த்சரஸ் தங்கக் கோயில், மேடக் சர்ச், மகாத்மா
காந்தி, சர்தார் பட்டேல், அம்பேத்கர், அப்துல்கலாம் ஆகியோர்
பிறந்த இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் ஆகிய அனைத்தும் அமராவதி நகரக்
கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
புதிய தலைநகருக்கான மாஸ்டர் பிளானை சிங்கப் பூரைச் சேர்ந்த சர்பனா ஜுராங்க்
நிறுவனம் வடிவமைத்துள்ளது. சட்டமன்றம், உயர்
நீதிமன்றம், தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, அரசு அலுவலகங்கள்,
குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை 55,000 ஏக்கர் பரப்பளவில் புதிய
தலைநகரம் அமைய உள்ளது. இதற்கான உத்தேச செலவு ரூ 4 லட்சம் கோடிகள்
(முதற்கட்டமாக 32,000 ஏக்கர் செலவு ரூ 20,000 கோடிகள்). 17 சதுர
கி.மீ. சுற்றளவில் நிறுவப்பட உள்ள குடியிருப்புப் பகுதியில் 3 லட்சம்
மக்களைக் குடியமர்த்தவும் 7 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது.
நிர்வாகக் கட்டமைப்புக்கு மலேசியாவின் புத்ர ஜயா நகர், ஆற்றின் முகப்புப்
பகுதிக்கு லண்டன் தேம்ஸ் நதிக்கரை, நகரக் கட்டமைப்புக்கு
துபாய், துறைமுக முன்மாதிரிக்கு சிங்கப்பூர், வானளாவிய கட்டடங்களுக்கு
நியூயார்க் எனப் பல நகரங்களின் கலவையாகத் தலைநகர் அமராவதி
நிர்மாணிக்கப்படும். அமராவதி அருகே மங்களகிரியில் 5000 ஏக்கரில் பன்னாட்டு
விமான நிலையம், சென்னை - பெங்களூரு - ஐதராபாத் -
விசாகப்பட்டினம் ஆகியவற்றுடன் அமராவதியை இணைக்க உலகத் தரம் வாய்ந்த
சாலைகள், 12 கி.மீ. தூர மெட்ரோ ரயில், 15 கி.மீ. தூர அதிவேகப்
பேருந்து, 26 ச.கி.மீ. வட்ட - உள்வட்டச் சாலைகள், சிகாகோவில் உள்ளது போன்று
கிருஷ்ணா நதியில் ‘வாட்டர் டாக்ஸி’ மற்றும் தீம் பார்க் ஆகியவை
இடம்பெறும்.
அறிவுசார் நகரம், நிதி நகரம், சுகாதார நகரம், சுற்றுலா நகரம், அரசு நகரம்,
விளையாட்டு நகரம், மின்னணு நகரம், நீதி நகரம், கல்வி நகரம்
என ஒன்பது நகரங்களை உள்ளடக்கிய ‘நவரத்ன’ நகரமாக அமராவதி விளங்க வேண்டும்
என்பதே சந்திரபாபுவின் கனவு. அமராவதி ‘மக்கள்
தலைநகரம்’ என்பதால் முதலீடுகளைத் திரட்ட ஒவ்வொரு ஆந்திரரும் குறைந்தபட்சம்
ஒரு செங்கல் செலவாக ரூ 10/- அரசுக்கு வழங்க வேண்டுமென
முதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கு தெலுங்கர்களிடையே மகத்தான வரவேற்பு
கிடைத்துள்ளது.
புதிய தலைநகருக்கான சிறந்த செயல்திட்டங்களுக்குப் பாராட்டுகள் குவிந்தாலும் விமர்சனங்களும், கண்டனங்களுக்கும் தப்பவில்லை. 58
தாலுக்காக்களைச் சேர்ந்த 500 மக்களை வெளியேற்றியதற்கும், ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதால் சுற்றுச் சூழல்
பாதிக்கப்பட்டதற்கும், நான்கு போகம் காணும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்பட்டதற்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,
விவசாயிகள், சமூக ஆர்வலர் மேதா பட்கர், இடதுசாரிகள், காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை கடுமையான எதிர்ப்பைத்
தெரிவித்துள்ளன. “புதிய தலைநகர் அமைய 1000 ஏக்கர் தரிசு நிலம் போதும் என்பதால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடமிருந்து
வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட பசுமை நிலங்கள் அனைத்தையும் திருப்பித் தருவோம்” என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்
உறுதி அளித்துள்ளார்.
புதிய தலைநகரத்துக்கான மிகப்பெரிய பிரச்னை சுமார் ரூ 4 லட்சம் கோடிகளைத் திரட்டும் பொருளாதாரச் சிக்கல்தான். குறிப்பாகத் தெலங்கானா
பிரிவினை காரணமாக ஆந்திராவுக்கு ஏற்பட்டுள்ள ரூ 17,000 கோடிகள் நிதிப் பற்றாக்குறை. அடுத்தது அரசு நிர்வாகத்துக்கான தலைநகரமாக
உருவாக்காமல் மேற்கூறிய நவரத்ன நகரமாகச் சந்திரபாபு உருவாக்க முனைந்தது கடுமையான நிதி நெருக்கடியுடன், நிர்வாகக் கோளாறுகளுக்கும்
வழிவகுக்குமென எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இவற்றுடன் இந்த இடம் நிலநடுக்கம் மண்டலம் 3-இன் கீழ் வருவதாலும், கருப்புப்
பருத்தி மண் நிறைந்த பகுதி என்பதாலும், 70-80 அடுக்கு மாடிக்
கட்டுமானங்களோ, மேம்பால / பாதாள மெட்ரோ ரயில்களோ ஆபத்தானவை என்பதால்,
தலைநகராக உருவாவதற்கான எந்தத் தகுதியும் அமராவதிக்கு
இல்லை என்ற சில நிபுணர்களின் அறிக்கைகளையும் புறந்தள்ள முடியாது.
ஆவலுடன் ‘எதிர்பார்த்த’ ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து என்ற அறிவிப்பு
பிரதமரிடமிருந்து கடைசி வரை வராததும், யாருமே ‘எதிர்பார்க்காத’
வகையில் தெலங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும்
குறிப்பிடத்தக்கதாகும். தெலங்கானாவுக்கு சந்திரசேகர
ராவும், ஆந்திராவுக்கு சந்திரபாபு நாயுடுவும் முன்னுரிமை தர, வறண்ட
பகுதிகளைக் கொண்ட ராயலசீமா மீண்டும் சீந்துவார் இல்லாத சவலைக்
குழந்தையானது. செழிப்பான விவசாய நிலங்களை அழித்து அமராவதியைத் தலைநகராக
மாற்றுவதை விட, வானம் பார்த்த பூமியான ராயலசீமாவில்
குறிப்பாக பிரகாசம் ஜில்லாவில் ஏதேனும் ஒரு பகுதியைத் தலைநகராக மேம்படுத்தி
இருக்கலாம் என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்
ஜெகன்மோகனின் கருத்தும் கவனிக்கத்தக்கது.
ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி உருவாவது மகிழ்ச்சியான விஷயம்
என்றாலும், இதில் தமிழகத்துக்கு ஓர் ஆபத்து காத்திருப்பதை
யாருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவு
செய்து வரும் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள
அமராவதியின் கட்டுமானப் பணிகளுக்கு கிருஷ்ணா தண்ணீர் அதிக அளவில்
பயன்படுத்தப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஏற்கெனவே
கேரளம் (முல்லைப் பெரியாறு), கர்நாடகம் (காவிரி) தண்ணீர் வழங்குவதில்
பிடிவாதம் காட்டும் நிலையில், ஆந்திராவிலிருந்து (கிருஷ்ணா) மட்டுமே
ஓரளவு பிரச்னை இல்லாமல் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அமராவதி
கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பிறகு வரும்
காலங்களில் கிருஷ்ணா நதி நீர் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு முழுமையாகக்
கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
இது வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் தமிழக அரசு விழித்துக்கொண்டு கிருஷ்ணா நதிநீர் தடையின்றிக் கிடைப்பதற்கான உத்தரவாதத்தை
ஆந்திர அரசிடமிருந்து பெறவேண்டியது கட்டாயமாகும்.
ஜனனி ரமேஷ்