குற்றப்பத்திரிகை 1 :
ஈழத் தமிழர்களின் மாபெரும் துயரங்களுக்கு ராஜபக்ஷே அரசும் விடுதலைப் புலிகளும் பொறுப்பு என்று நேர்மையான விமர்சகர்கள் இதுவரை சொல்லி வந்ததைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.கடைசியாக நடந்த உள்நாட்டு யுத்தத்தில் இருதரப்பும் குற்றங்கள் இழைத்திருப்பதை ஐ.நா. நிபுணர் அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
இந்த அறிக்கையின் விளைவாக ஏதேனும் உருப்படியாக நடக்குமா என்பது சந்தேகத்துக்குரியதுதான். ஏனென்றால் இதன் அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்தப்படுமா என்பதையெல்லாம் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில்தான் தீர்மானிக்குமே ஒழிய அதன் செயலாளர் முடிவு எடுத்துவிட முடியாது. ஐ.நா. என்பது உலகின் பல்வேறு வல்லரசு நாடுகளின் கைப்பாவையாக இருந்து வருகிறது என்பதுதான் கடந்த கால நிகழ்ச்சிகள் காட்டும் உண்மை. எனவே, அது அதிகபட்சம் பல் இல்லாத பாம்பாகவே இருக்கிறது.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்காக, சாதாரண பொது மக்களான ஈழத் தமிழர்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. அறிக்கை சொல்லியிருக்கிறது.
அதன்படி இலங்கை (ராஜபக்ஷே) அரசாங்கம் மீது அறிக்கை தெரிவிக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகள் ஐந்து :
1.மூன்று அமைதி வளையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்திப் பொது மக்களைக் கொன்றது.
2.மருத்துவமனைகள் போன்ற போருக்கு விலக்கப்பட்ட பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் செய்தது.
3. மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட வேண்டிய உதவிகளைச் செய்யவும் அனுமதிக்கவும் மறுத்தது.
4. அகதிகளாக வந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியது. புலிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைச் சித்ரவதை செய்தது.
5. யுத்தம் நடந்த பகுதிகளுக்கு வெளியே ஊடகங்களைப் பல வழிகளில் ஒடுக்கியது. அங்கு மனித உரிமைகளை மீறியது.
இதில் விசித்திரம் என்னவென்றால் இலங்கை அரசு மீது நிபுணர் குழு தெரிவித்துள்ள முதல் இரு குற்றச்சாட்டுகளுக்கும் அரசு மட்டுமல்ல, விடுதலைப் புலிகளும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது என்று அடுத்ததாக புலிகள் மீது ஐ.நா குழு பட்டியலிட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பார்க்கும் போது தெரிகிறது.
புலிகள் மீதான குற்றச்சாட்டுகள்:
1. பொது மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது.
2. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது.
3. பொதுமக்கள் இருந்த பகுதிகளிலிருந்து ஆயுதங்களுடன் தாக்குதல்கள் நடத்தியது.
4. சிறுவர்களையும் பிறரையும் பலவந்தப்படுத்தித் தங்கள் படையில் சேர்த்தது.
5. பொது மக்களை ஊழியர்களைக் கட்டாயப்படுத்திப் பதுங்குகுழிகள் வெட்டுவது போன்ற வேலை வாங்கியது.
6. தற்கொலைத் தாக்குதல்கள் செய்து பொது மக்களைப் படு கொலை செய்தது.
மேற்படி குற்றங்களுக்காக இலங்கை அரசின் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ராணுவத் தளபதிகள், ராணுவத்தினர், விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள், ஆகியோர் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. குழு அறிக்கை சொல்கிறது.
ராஜபக்ஷே, கோத்தபயா, பொன்சேகா முதலானோர் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள். அவர்கள் மீது விசாரணை நடத்த வாய்ப்பு இருக்கிறது. புலிகளின் போர்க் குற்றங்களுக்காக யாரை இப்போது பொறுப்பாக்குவது? வெளிநாடுகளில் இன்னமும் தங்களைப் புலிகளின் தலைவர்களாக அறிவித்துக் கொள்வோரையா? இலங்கை அரசு வசம் இருக்கும் கே.பி.யையா? அல்லது புலிகள் எந்தத் தவறும் செய்யவே இல்லை என்று அரசியல் தளத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்களையா? யாரைப் பொறுப்பாக்குவது?
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை உண்மையானது என்று வாதிட்டால் இலங்கை அரசு பற்றிச் சொல்லப்பட்டது மட்டும்தான் உண்மை என்றோ, புலிகள் பற்றிச் சொல்லப்பட்டது மட்டும்தான் உண்மை என்றோ யாரும் வாதிடமுடியாது. முழுவதும் உண்மை என்று ஏற்கப்பட்டால், இரு தரப்பிலிருந்தும் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே நியாயமாக இருக்க முடியும்
பெரும் கொடுமைகளுக்கு உள்ளாகி யுத்தத்தில் இறந்த ஈழத்தமிழர்களுக்கான உண்மையான நியாயம் என்பது இனி எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு புனர்வாழ்வும், சம உரிமையும், சம அரசியல் அதிகாரமும் பெற்றுத் தருவதேயாகும். அதற்கான வழிகள் என்ன என்று ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுப்பதுதான் சரியான அடுத்தகட்ட அரசியலாக இருக்க முடியும்.
குற்றப்பத்திரிகை 2:
கனிமொழி கூட்டுச் சதிகாரராக இருந்தார் என்று சொல்லியிருக்கிறது சி.பி.ஐ.ஸ்பெக்ட்ரம் ஊழல் முன் கூட்டித் திட்டமிடப்பட்ட ஊழல் என்பது அம்பலமான நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து வைத்துப் பார்த்தாலே சாதாரண மனிதர்களுக்குக் கூடப் புரிந்துவிடும். மன்மோகன் அமைச்சரவையை அமைக்கும்போதே யாருக்கு டெலிகாம் இலாகா என்பது பற்றிச் சதி செய்யப்படுகிறது. ஆ.ராசா நிச்சயம் அமைச்சராக வேண்டும், அவருக்கே டெலிகாம் தரப்படவேண்டும் தயாநிதி மாறனுக்குத் தரப்படக் கூடாது என்றெல்லாம் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதத்தில் தரகர் நீரா ராடியா, கனிமொழி, ராசா மூவரும் பங்கேற்கிறார்கள். நீரா ராடியா வாக்களித்தபடியே ராசாவுக்கு டெலிகாம் கிடைக்கிறது. நீரா ராடியா டாடா நிறுவனத்தின் தரகர். தவிர இன்னும் அம்பானி உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குத் தரகர். ராடியா தொடர்புள்ள நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸில் பயனடைகின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கும் போது, ராசாவுக்கு எதிராகப் பெரும் விமர்சனம் எழும்போது, தொழிலதிபர் டாடா. ராசாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறார். கருணாநிதிக்குக் கடிதமே எழுதுகிறார். அதை நீராவிடமே கொடுத்தனுப்புகிறார்.அடுத்து கலைஞர் டி.வி. சேனல் ஆரம்பிக்கப்படும்போது அதற்கு வருகிற சுமார் 214 கோடி ரூபாய் பணம், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனியிடமிருந்து பல கை மாறி வருகிறது. கலைஞர் சேனலை டாடாஸ்கை டிஷ்ஷில் இடம் பெறச் செய்ய சேனலின் இயக்குனரான கனிமொழி தீவிர முயற்சிகள் எடுக்கிறார். டாடா தொடர்பான அண்ணா சாலை கட்டட பேரத்தில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் பெயர் சம்பந்தப்படுகிறது, அவருடைய ஆடிட்டர் ரத்னம் நீரா ராடியாவுடன் பேசியது பதிவாகியிருக்கிறது.
ராசாவின் தயவில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டில் கிராமியக் கலைகளை வளர்க்கும் சமூக அக்கறை வந்துவிடுகிறது. கனிமொழியும் ஜகத் கஸ்பரும் நடத்தும் தமிழ் மையத்துக்கு நன்கொடை வழங்குகிறார்கள்.இப்படி மிகத்தெளிவாக கனிமொழியின் பங்கு, கருணாநிதியின் குடும்பத்தினரின் பங்கு நீரா ராடியா டேப் உரையாடல்களிலும் அடுத்தடுத்து அம்பலமான சில ஆவணங்களிலும் வெளிச்சமாகிவிட்டது. இவற்றையெல்லாம் மேலும் ஆவணங்களின் உதவியுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. இதுவரை சி.பி.ஐ. சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் விசாரணையை நேரடியாக உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிடுவதுதான்.
அரசியல்ரீதியாக கனிமொழி மீதான குற்றப்பத்திரிகை என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். மே 13 அன்று தமிழகத் தேர்தல் முடிவுகள் எப்படி அமைகின்றன என்பதுதான் விளைவை ஏற்படுத்துமே தவிர வேறு எதுவும் ஒன்றும் செய்யாது. சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தது போல அடுத்து கனிமொழியைக் கைது கூடச் செய்யலாம். ஆனாலும் மே 13 முடிவுகள்தான் தி.மு.க.வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதுவரை ஓரிரு மிரட்டல் அறிக்கைகள் தவிர வேறு எதுவும் தி.மு.க. வுக்குச் சாத்தியமில்லை.
தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், நிச்சயம் கலைஞர் கருணாநிதி, மகளுக்காக மத்திய அரசுடன் மோதத் தயாராகிவிடுவார். மன்மோகன் ஆட்சிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்று அமைச்சரவையிலிருந்து விலகி காங்கிரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கலாம். தி.மு.க., ஆட்சியை இழந்தால், என்னவானாலும் காங்கிரசுடன் உறவை முறிக்காமல் தொடர அரும்பாடுபடும். ஏனென்றால் தமிழக ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவும் காங்கிரஸ் மத்திய ஆட்சியும் ஒன்று சேர்ந்து விட்டால் தி.மு.க. நிலை கடினமான தாகிவிடும்.
கனிமொழியின் அரசியல் எதிர்காலம், இனி சகோதரர்களின் கருணையை மட்டுமே நம்பியிருக்கிறது. கருணை காட்ட வேண்டிய எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை. அப்பாவுக்காக அவர்கள் சற்று நெகிழ்ந்து கொடுக்கலாம். முற்றிலும் அரசியலை விட்டு விலகிச் செல்வதென்ற நிபந்தனையை கனிமொழி ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்கள் கனிமொழிக்கு உதவ முன்வரக் கூடும்.
கனிமொழியின் நிமித்தம் தி.மு.க.வின் எதிர்காலத்தைப் பணயம் வைக்க ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். கட்சிக்கு ஸ்டாலினால், அழகிரியால், மாறன்களால் லாபம் என்ன நஷ்டம் என்ன என்று கணக்குப் பார்த்தால் லாபங்களே அதிகம். ஆனால் கனிமொழியால் கட்சிக்கு எந்த லாபமும் இது வரை இல்லை. நஷ்டமே அதிகம்.
சர்க்காரியா கமிஷன் விசாரணையின் அடிப்படையில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் கருணாநிதி மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளிலிருந்து மத்திய அரசின் உதவியுடன் தப்பியது போன்ற சூழ்நிலை இப்போது இல்லை. மத்திய அரசே உதவினாலும், நீதிமன்றங்களிடமிருந்து தப்பமுடியாது என்ற நிலை அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து உச்சநீதி மன்றம் இப்படியே இயங்கினால், இன்னும் பல பிரபலங்களை நாம் அவர்களுக்குரிய இடத்தில் (சிறையில்)வைத்துப் பார்க்கும் ஆச்சர்யம் நிகழும்.
இந்த வார சந்தேகம்!
உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின் பத்தாண்டு காலம் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாமல் நேரான வாழ்க்கையை வாழ்ந்திருக்கும் ஜான் டேவிட்டை, உச்சநீதி மன்றம் மீண்டும் பழைய குற்றத்துக்காகச் சிறையில் அடைப்பது எப்படிச் சரியாகும்? சிறை தண்டனை சீர் திருத்தவா? தண்டிக்கவா? பத்தாண்டு தாமதமாகத் தீர்ப்பு வழங்கியது யார் குற்றம்?
இந்த வார பூச்செண்டு!
எண்டோசல்பான் பூச்சி மருந்தைத் தடை செய்யக் கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு இ.வா.பூ.