பங்காளி ஒருவன் பகையாளி ஆன கதைதான்.  கருணாநிதிக்கு  எதிராக காங்கிரஸ் கட்சி கத்தியைத் தூக்கியது எவரும் எதிர்பாராத திருப்பம்.  அண்ணா அறிவாலயமும் சத்தியமூர்த்தி பவனும் இதுவரை இதன் சூட்சுமம் என்ன  என்பதை உணரவில்லை. எண் 8, கோபாலபுரம் 4-வது தெரு வீடும் நம்பர் 10 ஜன்பத்  வீடுமே இதன் முழு ரகசியம் அறியும்! 
''தென் இந்தியாவின் முதுபெரும் தலைவரான கலைஞரின் ஆலோசனை இல்லாமல்,  எதையும் இந்த மத்திய அரசு செய்தது இல்லை. கலைஞரை எனது தந்தையார் இடத்தில்  வைத்து மதிக்கிறேன்'' என்று சொன்னவர் சோனியா. ''அவர் இந்திராவின் மருமகள்  மட்டும் அல்ல... இந்தியாவின் மருமகள். சோனியா ஒரு சொக்கத் தங்கம்'' என்று  கருணாநிதியும் வாழ்த்தினார். 
இவை அனைத்தும் பழங் கனவாய்ப் போய்விடுமோ என்ற  சந்தேகம்தான் கடந்த திங்கள் கிழமை நள்ளிரவு நிலவரம்! 
 கடந்த ஆறு மாதங்களாக கரடிக்காரன் நிலைமையில்தான் காங்கிரஸும் கருணாநிதியும்  இருந்தார்கள். காங்கிரஸ் கை கழுவிவிடத் தயாரானபோது, வலியப் போய் நெருக்கம்  இருப்பதாகக் காட்டிக்கொண்டார் கருணாநிதி. இன்று அவர் கூட்டணியை  முறித்துக்கொள்ள முயலும்போது, எதிர் அறிக்கை வெளியிட காங்கிரஸ்  யோசிக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய மனம் இல்லாமல் பிரியத்  துடிக்கிறார்கள்!
 மு.க.அழகிரி மகன் திருமணத்தின்போதுதான் 2011 தேர்தல் கூட்டணிக்கான  நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்தார் கருணாநிதி. மதுரை திருமணத்துக்கு  பிரதமர் அல்லது சோனியாவை வரவழைக்க எத்தனையோ பகீரதப் பிரயத்தனங்கள் தி.மு.க.  தரப்பால் செய்யப்பட்டும், அவர்கள் வரவில்லை. அதற்கு ஐந்து நாட்களுக்கு  முன்னதாகத்தான் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆ.ராசா விலகி  இருந்தார். இவர்கள் இருவரையும் வரவழைப்பதன் மூலமாக தி.மு.க. மற்றும்  காங்கிரஸ் உறவுக்கு எந்தச் சேதாரமும் இல்லை எனக் காட்டிக்கொள்ள நினைத்தார்  கருணாநிதி. ஆனால், இவர்களுக்குப் பதிலாக பிரணாப் முகர்ஜி மட்டுமே  வந்திருந்தார். ''தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும்'' என்று பிரணாப்  அறிவிக்க... ''இது எனது பேரன் திருமணம் மட்டும் அல்ல... இரண்டு  கட்சிகளுக்கும் இடையே நடக்கும் திருமணம்'' என்று மகிழ்ச்சிக் கடலில்  திளைத்தபடி கருணாநிதி உருவகப்படுத்தினார். ஆனால், மூன்று மாதங்கள்கூட  முழுமையாக முடியவில்லை. கிராமங்களில் சொல்வதைப்போல... அறுத்துக் கட்டத்  தயாராகிவிட்டார்கள் கூட்டணியை! 
ஜனவரி மாதம் 30-ம் தேதி கருணாநிதி டெல்லிக்குப் போனார். மார்ச் 5-ம் தேதி  காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் வெட்டு விழுந்திருக்கிறது. இந்த 35  நாட்களும் கருணாநிதி நிம்மதியாகத் தூங்கவில்லை என்பதுதான் உண்மை. பி.பி-யை  எகிறவைக்கும் பிப்ரவரி மாதமாகவே அது இருந்தது. ஏழு மணி நேரம்  காக்கவைத்துதான் ஜனவரி 31-ம் தேதி சோனியாவை அவரால் சந்திக்க முடிந்தது.  'மாற்றுப் பாதையில் செல்லவும்’ என்று அன்றே கருணாநிதி உணர ஆரம்பித்தார்.  ஆனால், காங்கிரஸ் கட்சி தனக்கு அறிமுகமான, வழக்கமான பாதைதானே என்று  நினைத்தார். அது வழுக்குப் பாதை என்பதை அடுத்த வாரமே உணர்த்திவிட்டது.  அன்றைய தின சோனியா சந்திப்பில், இடையில் புகுந்த ராகுல் சொல்லிய பல  செய்திகள், பழுத்த அரசியல்வாதியான கருணாநிதியின் மனத்தை அளவுக்கு அதிகமாகவே  குத்திக் கிழித்தது. சில வார்த்தைகளை ராகுல் இந்தியில் வேறு சொல்லி,  'பழைய’ இந்தி எதிர்ப்பு வீரரான கருணாநிதியைக் கோபப்படுத்தினார். 
''தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் காங்கிரஸுக்கு செல்வாக்கான  தொகுதிகளைப் பட்டியலிட்டு நாங்கள் உங்களிடம் கொடுப்போம். செல்வாக்கான  தொகுதிகள் என்று எத்தனை வருகின்றனவோ, அதுதான் காங்கிரஸின் கோரிக்கை. அந்த  எண்ணிக்கையையும், அதே தொகுதிகளையும் தர வேண்டும். இந்தப் பட்டியலை  எங்களுடைய ஐவர் குழு உங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கும்'' - இதுதான்  ராகுல் அன்று சொன்ன செய்திகளின் சாராம்சம். குளிர் தாங்க முடியாமல் இரண்டு  ஸ்வெட்டர்கள் போட்டு இருந்த கருணாநிதிக்கு வேர்க்க ஆரம்பித்தது. வீல்  சேரைத் திருப்பச் சொல்லிவிட்டார். அடுத்த பிரதமர் யார் என்று யாரும்  சொல்லாத போது, ''சோனியாதான் தகுதியானவர்'' என்று சொல்லி, டெல்லியின்  கவனத்தைத் தமிழகத் தின் பக்கம் திருப்பினார் கருணாநிதி. அவரை வரவேற்று  ஜன்பத் இல்லம் குதூகலம் அடைந்தது ஏழு ஆண்டுகளுக்கு முன்னால். ஆனால், இன்று  கருணாநிதியையே தமிழ்நாட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைக்கத் தடை  போடும் காரியம் அதே ஜன்பத்தில் அவருக்கு முன்னாலேயே அரங்கேறுகிறதோ என்ற  சந்தேகக் காட்சியை அவரால் காணச் சகிக்க முடியவில்லை. 
பூட்டன் நேருவுக்கு இரங்கற்பா பாடிய வர், பாட்டி இந்திராவால்  கடற்கரையில் பாராட்டு பெற்றவர், அப்பா ராஜீவால் மதிக்கப்பட்டவர், அம்மா  சோனியாவுக்கு ஓர் அங்கீகாரம் தந்தவர்... ஆனால், பேரன் ராகுலால் நெஞ்சு  நிறைய அம்புகள் தாங்கி சென்னை வந்து இறங்கினார்.
'டெல்லியில் இருந்து பேசிய குலாம் நபி ஆசாத், 60 தொகுதிகள் காங்கிரஸ்  கட்சிக்குத் தேவை என்றும், அப்போதுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்  என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் 60 தொகுதிகள்  அளிக்க ஒப்புக்கொண்டு, சென்னைக்கு வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவு  செய்யலாம் என்று கேட்டுக்கொண்டேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள்  என எண்ணிஇருந்த நிலையில், 63 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் அந்தத்  தொகுதிகளும் அவர்களால்தான் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறினர். காங்கிரஸ்  கட்சியின் இந்தப் போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமுகமாகச் செய்துகொள்ள  வேண்டும் என்பதற்குப் பதிலாக, இதையே சாக்காகவைத்து தி.மு.க -வை அணியில்  இருந்தே அகன்றுவிடச் செய்வதற்கான காரியமோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது''  என்று கருணாநிதி பட படப்புடன் அறிக்கை வெளியிட்டார்.
 எப்போதுமே டெல்லி காங்கிரஸ் தலைமை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு மூளையும்  சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னொரு மூளையும் வைத்துத்தான் சிந்திக்கும்.  எவருடனும் சேர்ந்து பிரதமர் நாற்காலியைக் கைப்பற்ற வேண்டும் என்று  நினைப்பார்கள். சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து நின்று வெல்ல முடியாத  மாநிலங்களில் 'டெல்லி அதிகாரத்தைப் பயன்படுத்தி’ கூடுதல் இடங்களைப் பெற  முயற்சிப்பார்கள். இம்முறை அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு வசதியான  லகானாகக் கிடைத்தது. 60 இடங்கள் வரைக்கும் கருணாநிதி ஒப்புக்கொண்டதும்  ஸ்பெக்ட்ரம் கைதுகளுக்குத் தற்காலிகத் தடை போடுவதற்காகத் தான். ஆனால்,  அதையும் தாண்டி கூடுதல் இடங்கள் கேட்டதும், 'ஆனது ஆகட்டும்’ என்ற  முடிவுக்கு வந்தார். 'கட்சியின் மானத்தை கருணாநிதி காப்பாற்றிவிட்டார்’  என்று தொண்டர்கள் குதூகலித்தார்கள். அது ஓரளவு உண்மைதான். ஆனால்,  'காங்கிரஸைக் கழற்றிவிட்டதால், உலகத் தமிழர் மத்தியில் கருணாநிதியின்  செல்வாக்கு உயர்ந்துவிட்டது’ என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சொல்ல  ஆரம்பித்திருப்பது முழுப் பொய்!
2009-ம் ஆண்டு பிப்ரவரியில் ஈழத் தமிழர்களை நான்கு திசைகளிலும் சூழ்ந்து,  எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் ராஜபக்ஷே தாக்குதல் நடத்தியபோது, கருணாநிதி  இந்தக் காரியத்தைச் செய்திருந்தால், வீரமணி சொல்லியது போல் உலகத் தமிழர்கள்  கருணாநிதியை உச்சி முகர்ந்திருப்பார்கள். இப்போது கருணாநிதி, காங்கிரஸுடன்  'கா’ விட்டுஇருப்பது கேவலம் மூன்று எம்.எல்.ஏ. தொகுதிகளுக்காக! மூன்று  லட்சம் தமிழர்களுக்காக ஆடாத சதை, மூன்று தொகுதிகளுக்காக ஆடுவது இன நலன்  அல்ல என்பதை வீரமணி தவிர, மற்ற தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்!
காங்கிரஸைக் கழற்றிவிடுவது என்ற கருணாநிதியின் முடிவில் எப்போது  வேண்டுமானாலும் மாற்றம் இருக்கலாம். ஆனால், கருணாநிதி எடுத்தது துணிச்சலான  முடிவு. அது அவரது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுமா... இல்லையா என்பதுதான்  இப்போதைய கேள்வி!
தி.மு.க.  அணிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கு சதவிகிதம் 41.78. காங்கிரஸ்  கட்சிக்கு இருக்கும் 8.38 சதவிகிதத்தைக் கழித்தால், 33.40 சதவிகிதம்தான்.  கட்சிகளுக்கு இருக்கும் சதவிகிதச் செல்வாக்குதான் வெற்றியை நிர்ணயம்  செய்கிறது என்று வைத்துக்கொண்டால், இது தி.மு.க-வுக்குப் பலவீனம்தான்!
கடந்த ஐந்து தேர்தல்களில் தி.மு.க. வாங்கிய வாக்குகளின் சதவிகிதம்... 
1989 - 33.34
1991 - 22.46
1996 - 42.06
2001 - 30.92
2006 - 26.46
1991 - 22.46
1996 - 42.06
2001 - 30.92
2006 - 26.46
அதாவது, சுமார் 31 சதவிகித வாக்குகள் தி.மு.க-வுக்கு எப்போதும் அசைக்க  முடியாமல் இருக்கின்றன. அதன் கூட்டணியில் இன்று அங்கம் வகிக்கும் பாட்டாளி  மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகளும் வட தமிழ் நாட்டில் செல்வாக்கு  உடையவை. தென் மாவட்டங்களுக்கு இதன் தலைவர்கள் செல்வதே இல்லை என்பதுதான்  யதார்த்தம். புதிதாகச் சில கட்சிகளைத் தங்களது அணிக்குள் சேர்க்க  முயற்சிக்கிறார் கருணாநிதி. 2001 தேர்தலைப்போல பல சமூக இயக்கங்கள் தங்களை  அரசியல் கட்சிகளாகப் பெயர் மாற்றம் செய்துகொண்டு, தி.மு.க-வுடன் கை  கோக்கவும் தயாராகி வருகின்றன. இவர் களால் பெரிய பலன் ஏற்படப் போவது இல்லை.  உதிரிக் கட்சிகளுக்கு நிறையவே பிரித்துக் கொடுத்து 2001 தேர்தலில் தி.மு.க.  அதிகாரத்தை இழந்ததுதான் மிச்சம்.
இந்நிலையில், தி.மு.க. தனது சொந்தச் செல்வாக்கை மட்டுமே மனதில்வைத்து,  இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும்  காங்கிரஸைப் பகைத்துக்கொள்வதன் மூலமாக பல்வேறு சலுகைகளை தி.மு.க. இழக்க  நேரும். தாராளமாகப் பணம் செலவழிக்கவும் முடியாது. காங்கிரஸின் வாக்கு களை  இழப்பதுடன், இது போன்ற அதிகாரங் களை அனுபவிக்கவும் தடை ஏற்படும்.  மொத்தத்தில் மிக மிக நெருக்கடியான காலகட்டத்தில் தி.மு.க. தனது காலை  எடுத்துவைக்கப்போவது தெளிவாகத் தெரிகிறது. ஒருவேளை, காங்கிரஸுடன் தி.மு.க.  உடன்பாட்டுக்கு வந்தாலும், இரண்டு கட்சியினரும் இணங்கி இனிமேலும் வேலை  பார்க்க முடியுமா என்பதும் சந்தேகமே. ஒருவரை வீழ்த்த மற்றொருவர் முனையலாம்.  அரசியலில் யாரும் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருப்பது இல்லை. நாணயமான  எதிரியாக இருப்பதும் இல்லை... என்பது கருணாநிதி அறியாதது அல்ல.  காங்கிரஸ்காரர்களும் இதைப் புரியாதவர்கள் அல்ல.
மொத்தத்தில், ஆறாவது முறை கருணாநிதி முதல்வர் ஆவாரா என்பதைவிட, இந்த ரணங்கள் ஆறவே அவருக்குப் பல ஆண்டுகள் ஆகும் என்பதே உண்மை!

 
 
No comments:
Post a Comment