Search This Blog

Monday, October 31, 2011

காஷ்மீரைக் காத்திடுவோம் பாகம்-3, ஜம்மு – அகதிகளின் புகலிடம்





ஜம்மு – அகதிகளின் புகலிடம்


 64 ஆண்டுகளாக இடம் பெயர்ந்து வந்து குடியேறியவர்களால் ஜம்மு பகுதி திணறி வருகிறது. தற்போது ஜம்முவில் 60௦ லட்சம் பேர் இருக்கின்றனர்.  அதில் 42 லட்சம் பேர் ஹிந்துக்கள். அந்த 42 லட்சத்தில் 15 லட்சம் பேர் பல வருடங்களாகவே அங்கு அகதிகளாக இருந்து வருகின்றனர்.சொந்த மண்ணிலேய மண்ணின் மைந்தர்கள் அகதிகளாக வாழ்வது வருவதை உலகில் வேறு எங்கும் காண முடியாது. அதை நமது நாட்டில் மட்டும்தான் காணலாம். நமது அரசியல் சாசனச் சட்டம்  நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட ஜம்மு காஷ்மீரில்  ஹிந்துக்கள் இன்னும் அகதிகளாகவே இருந்து வருகின்றனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகின்றன.  என்ன குற்றம் செய்தனர்  அவர்கள்? ஏன் இந்த அவல நிலைமை தொடர்கிறது? இன்னும் எத்தனை வருடத்திற்குத்தான் சொந்த நாட்டிலேயே அடிமைகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் வாழ்ந்திட வேண்டும் என்று அவர்கள் குமுறுகின்றனர். 

பாக் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து வந்தவர்கள் 

 
1947 ஆம் வருடம் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து 50,000௦ பேர் ஜம்முவிற்கு வந்து குடியேறினர். அவர்கள் எண்ணிக்கை இன்று 12 லட்சமாக அதிகரித்துள்ளது. அதில் 8 லட்சம் பேர் ஜம்முவில் வசித்து வருகின்றனர்.  மீதமுள்ளவர்கள் நாடெங்கிலும் சிதறிக்  கிடக்கின்றனர். அவர்களுக்கு இன்று வரை நமது நாட்டின் குடியுரிமை வழங்கப்படவில்லை. 60௦ ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எதுவும் செய்வதற்குத் தயாராக இல்லை. இன்றுவரை பாக் ஆக்கிரமித்து வைத்திருக்கிற ஜம்மு காஷ்மீர் பகுதிகளை நமது பகுதி என்றே நமது அரசு உரிமை கொண்டாடி வருவது மட்டுமல்ல வரைபடத்திலும் கூட அப்பகுதிகளை நமது நாட்டுக்குச் சொந்தமானதாகவே காட்டி வருகிறது. இதை காரணமாகக் கூறியே அவர்களுக்கு நிரந்தர குடியேற்ற உரிமைகள் ஏற்பாடுகள் எதுவும் செய்து தராமல் இருந்து வருகிறது. இவர்களுக்கு குடியுரிமை வழங்கி இழப்பீடுகள் கொடுக்கப்படுமானால் அவைகள் பாக் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மீது நாம் கோரி வருகின்ற உரிமைகள் நீர்த்துப் போய் பலவீனமாகிவிடும் என்று காரணம் சொல்லப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அவர்களுக்காக ஏற்பாடு செய்து தரப்பட்ட 52 முகாம்களிலேயே அவர்கள் 63 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். துயரத்திற்கு விடிவு காலம் என்று பிறக்கும் என பெரும் எதிர்பார்ப்புடன்  காத்திருக்கின்றனர்.   அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்டுள்ள நிலத்தின் மீதோ அல்லது வீடுகளின் மீதோ அவர்கள் எந்த உரிமையையும் கோரமுடியாது. அவைகள் அவர்களுக்குச் சொந்தமானதல்ல. 1947 ஆம் வருடம் பாக் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வந்தவர்கள் அங்கு விட்டுவிட்டு வந்துள்ள சொத்துக்கள் பற்றியோ  அல்லது உறவினர்கள் பற்றியோ எந்த ஒரு கணக்கெடுப்பையும் இது வரை நமது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் எதனடிப்படையில் இவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கிட முடியும்?  
 
 
இம்மாதிரி பிறநாடுகளில் இருந்து அகதிகளாக வந்து இங்கு குடியேறியுள்ள அனைவருக்கும் நமது நாட்டுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மட்டும்  இதுவரை அது  கொடுக்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 24 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப் படாமல் வெற்றிடமாக இருந்து வருகிறது. அவைகள் பாக் ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து வருவதால் அங்கு தேர்தல்களை  நடத்திட இயலவில்லை என்று  அறிவிக்கப்பட்டு  வருகிறது. அகதிகளாக வசித்து வருகின்ற ஹிந்துக்களின் சந்ததியினர் கல்வி கற்றிட உதவித் தொகை எதுவும் வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பில் கூட எந்த முன்னுரிமையும் ஒதுக்கீடும் கிடையாது.
 
சம்பா பகுதி அகதிகள்
 
 
1947 மற்றும் 1965 ஆம் வருடங்களில் நடைபெற்ற போரினால் இடம் பெயர்ந்தவர்கள் ஜம்முவில் வந்து குடியேறியுள்ளனர். 1971 ஆம் வருடம் நடைபெற்ற போரில் நாம் வெற்றி பெற்றும் நாம் அதான் நமது பகுதிகளை அவர்களுக்கு தாரை வார்த்துள்ளோம். இரு நாடுகளுக்கு இடையே 1971ஆம் வருடம் கையெழுத்திடப்பட்ட சிம்லா உடன்படிக்கை காரணமாக 18,000ச.கி.மீ. நிலப்பரப்பினை நாம்தான் பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளோம்.இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டியை சூழ்நிலை ஏற்பட்டது. சம்பா பகுதியிலிருந்து மொத்தம் 1லட்சம் பேர் வெளியேறி ஜம்மு பகுதியில் குடியேறினர். சம்பா பகுதியில் வசித்து வந்த மக்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தங்கள் நிலம் வீடு மனைகள், தொழில்களை யெல்லாம் விட்டுவிட்டு வந்துள்ளனர். அச்சமயத்தில் வாக்குறுதி அளித்த படி மத்திய அரசு இதுவரை இடம் பெயர்ந்தவர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை. இவர்களின் மறு குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை செய்து தர வேண்டிய மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.1989-1991 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளால் அப்பகுதியில் வசித்து வந்த முஸ்லிம் அல்லாதவர்களை அச்சுறுத்தியதால், படுகொலை செய்ததால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கிருந்து ஹிந்துக்கள் சீக்கியர்கள் அனைவரும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
 
இதன் காரணமாக 52,000000 குடும்பங்கள் அதாவது சற்றேறக் குறைய 4 லட்சம் ஹிந்துக்கள் சீக்கியர்கள் பெரும்பாலானோர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறி ஜம்முவில் வந்து அடைக்கலமாயினர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இருப்பதாக இதுவரை எத்தனையோ அறிக்கைகள் வந்துள்ளன, அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால்  பலன் எதுவம் கிடைத்திடவில்லை. அவைகள் வெறும் அறிக்கைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கட்டாயாமாக வெளியேற்றப்பட்ட ஹிந்து மற்றும் சீக்கியர்களின் மதம், சமுதாய உரிமைகளைப்  பாதுகாத்திடவோ, அவர்களது சொத்துக்களைப் பாதுகாத்திடுவதற்கோ அம்மாநில அரசு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. காஷ்மீரில் விட்டு விட்டு வந்துள்ள ஹிந்து மற்றும் சீக்கியர்களின் சொத்துக்களை அங்குள்ள முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருகின்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் இவைகளைக் காத்திட  எந்த ஒரு சட்டமும் இயற்றப்படவில்லை. இடம் பெயர்ந்துள்ள காஷ்மீர் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக  அம்மாநில சட்ட மன்றத்தில் குரல் கொடுத்திட அவர்களது  பிரதிநிதி ஒருவர் கூட இடம் பெறவில்லை. 1991 ஆம் வருடம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியவர்களில் ஒரு லட்சம் பேர்  வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 70,000 ஆகக் குறைந்து விட்டது.காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட வாக்காளர்கள் வாக்களித்திட சரியான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. வாக்களித்திட சரியான ஏற்பாடுகள் எதுவும் செய்து தரப்படாததால் பலருக்கு தேர்தலில் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது. அதன் காரணாமாகவே வாக்காளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தங்களது மண்ணில் பாதுகாப்பாக மீண்டும் குடியமர்த்தப்படுவோம்  என்கிற நம்பிக்கை அவர்கள் மனதில் இருந்து வருகிறது. ஆனால் அது என்று நனவாகும் என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.
 
 
காஷ்மீர் பள்ளத்தக்கிலிருந்து பயங்கரவாதம் மெல்ல மெல்ல மலைப் பகுதிகளான தோடா, கிஷ்த்வார், ராம்பன், உதம்பூர், ரியாசி, ரஜெளரி, மற்றும் கத்துவா மாவட்டங்களுக்கும் பரவியது. அதனால் பதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்தனர்.பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில்  இருந்து எவ்வளவு பேர்கள் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களை எங்கு மீள் குடியமர்த்துவது என்பது பற்றியோ அல்லது அவர்களது மறுவாழ்விற்கு என்னென்ன உதவிகள் தேவைப்படும் என்பது பற்றியோ சிறிதளவு கூட அம்மாநில அரசு கவலைப் படவில்லை. சுமார் 8 லட்சம் பேர் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.காஷ்மீர் மக்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் இடம் பெயர்ந்து ஜம்முவில் வசித்து வருகின்ற அகதிகளுக்கும் வழங்கிட வேண்டுமென உச்சநீதி மன்றமே  கூறியும் கூட எந்த பலனும் ஏற்படவில்லை. பயங்கரவாதத்தினை எதிர்த்துப் போராடியவர்கள் இவர்கள். எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியதில் சிலர் தங்கள் உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். அம்மாதிரி பாதிப்பிற்கு ஆளானவர்களுக்குக் கூட உதவி செய்திட மத்திய மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். எத்தனையோ பேர் தங்களது சொந்த இடங்களை, மனைகளை, நிலங்களை, வர்த்தக நிறுவனங்களை எல்லாம் துறந்துவிட்டு  கிராமத்தைவிட்டே  வெளியேற வேண்டியதாகிவிட்டது. அங்கிருந்து வெளியேறியவர்கள் எல்லாம் ஜம்முவில்தான் குடியேறியுள்ளனர். வறுமையில் வாழ்ந்து வருகின்ற போதிலும் அவர்கள் மதம் மாறிடத் தயாரில்லை. அவர்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் என்கிற முழக்கம்தானே தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் அவர்களது குழந்தைககளின் படிப்பிற்கு எந்த ஏற்பாடும் இல்லாததால் ஏராளமான சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கும்  உணவகங்களிலும் வேலைக்கு சென்று  கொண்டிருக்கின்றனர்.
 
 
பயங்கரவாதத்தினை தடுத்தி நிறுத்திட எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது சிறுபான்மையின மக்களையே பாதிக்கின்றது என்று கூறி கூப்பாடு போட்டு அந்த சட்டங்களையெல்லாம்  வாபஸ் வாங்க வைத்து வருகின்ற மத சார்பற்றவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் பார்வையில் காஷ்மீர் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அனுபவித்து வருகின்ற  துன்பங்களும் துயரங்களும் படாமல் போனது ஏனோ?
 

சடகோபன்

ஃபைனான்ஷியல் பிளானிங்: பேச்சுலர்களுக்கு...


மனித வாழ்க்கையை நான்கு விதமாகப் பிரிக்கிறார்கள் ஃபைனான்ஷியல் பிளானர்கள். வேலை கிடைத்து திருமணமாகிற வரையிலான பேச்சுலர் வாழ்க்கை முதல் பாகம், திருமணமாகி குழந்தைகள் வளர்ப்பது வரை இரண்டாம் பாகம், அவர்களுக்கான சொத்து பத்து சேர்த்து வைப்பது மூன்றாம் பாகம், ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவது நான்காம் பாகம்...

தில் மிகவும் முக்கிய மானது 23 - 27 வயது வரை உள்ள இளைஞர் பருவம். இந்த வயதில் சரியாக நிதித் திட்டமிடல் செய்பவர்கள் கடைசி காலத்தில் காலாட்டிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிப்பார்கள். 'லைஃப்-ஐ அனுபவிக்கணும்டா’ என்று டயலாக் விடுபவர்கள், திருமணமான பிறகு இ.எம்.ஐ.சிக்கலில் மாட்டி பரிதவிப் பார்கள்! இந்த சிக்கலைத் தவிர்க்க 23 -27 வயதுள்ள இளைஞர்கள் தங்கள் நிதித் திட்டமிடலை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? 

பேச்சுலர்ஸ்!

23 - 27 வயதுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் இதுவரை அப்பா தந்த பாக்கெட் மணியையும், அம்மாவிடம் நைஸாகப் பேசி வாங்கிய பணத்தையும் வைத்து செலவு செய்து வந்திருப்பார்கள். ஆனால், கையில் முதல் மாதச் சம்பளம் கிடைத்தவுடன் கண்ணில் பட்ட அனைத்தையும் வாங்க நினைப்பார்கள். முதல் சம்பளத்தில் அப்பா, அம்மா, அக்கா, தம்பிகளுக்குப் பிடித்ததை வாங்கித் தருவதோடு, நண்பர்களுக்கு ட்ரீட்டையும் தந்துவிட்டு, நிதித் திட்டமிடலை தொடங்கி விடலாம்.

இன்ஷூரன்ஸ்!

படித்து முடித்து வேலைக்குப் போனதும் ஆணோ, பெண்ணோ முதலில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். 'இன்ஷூரன்ஸா, அதுவும் ஓடுற பாம்பை கையில பிடிக்கிற இந்த வயசிலேயேவா?’ என்று கேட்கத் தோன்றும் வயது இது. ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசியை எவ்வளவு குறைவான வயதில் எடுக்க முடிகிறதோ, அவ்வளவு குறைவான வயதில் எடுத்தால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் பெறலாம். தவிர, இளவயதில் பெரிய நோய் ஏதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அது தொடர்பான ரைடர் பாலிசிகளையும் தவிர்த்து விடலாம்.
இந்த வயதுடையவர்கள் தங்கள் வருமானத்தைப் போல பத்து மடங்குக்கு பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இன்ஷூரன்ஸ் என்ற வுடனே எல்லோரும் எண்டோவ்மென்ட் பாலிசிகளையே எடுக்கிறார்கள். இந்த வயதுக்காரர்களுக்கு எண்டோவ்மென்ட் பாலிசிகளைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளே பொருத்தமானதாக இருக்கும். திருமணமான பிறகு தேவைப்பட்டால் மட்டும் எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுக்கலாம்.இந்த வயதில் உள்ளவர்களுக்கு பெரிய நோய் எதுவும் வராது என்றாலும், மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். தன்னோடு தன் பெற்றோர்களுக்கும் சேர்த்து எடுக்கலாம். வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் கூடுதல் கவரேஜில் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதன் மூலம் நம்மை நம்பி இருப்பவர்களை நட்டாற்றில் விடத் தேவையில்லை என்பதோடு, வரிச் சலுகையும் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.


ரியல் எஸ்டேட்!

இப்போதைய இளைஞர்கள் அனைவரும் சம்பளம் வாங்க ஆரம்பித்தவுடனே வீடு, நிலம் வாங்க புறப்பட்டு விடுகிறார்கள். 23, 24 வயதில் வேலைக்குச் சேர்ந்து டிரெய்னிங் பீரியட்,  புரஃபேஷன் பீரியட் என பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். இந்த காலகட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்னையால் வேலை இழக்க வாய்ப்புண்டு. எனவே, வேலை உறுதியாகும் வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எந்தவிதமான தனிநபர் கடனோ, வீட்டுக் கடனோ வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.இதற்காக ரியல் எஸ்டேட் பற்றி யோசிக்கவே வேண்டா மென்று சொல்லவில்லை. எவ்வளவு தொகைக்கு வீடு அல்லது மனை வாங்கப் போகிறீர்கள் என்று தீர்மானித்துவிட்டு அதற்குத் தேவையான தொகையில் கால் சதவிகிதத்தைச் சேமிப்பது நல்லது. உதாரணத்திற்கு, இருபது லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்க ஆசைப்பட்டால் ஐந்து லட்சம் ரூபாய் வரை சேமித்துவிட்டு, மூன்று வருடங்கள் கழித்து யாரிடமும் கைநீட்டாமல், அதுவரை சேமித்து வந்த சொந்தப் பணம் மற்றும் வங்கிக் கடன் மூலம் வீடு வாங்கலாம்.இந்த வயதில் உள்ளவர்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது எவ்வளவு ரூபாய்க்கு கடன் வாங்குகிறார்களோ, அந்த தொகைக்கு இணையான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அவசியம். ஏனெனில், கடன் வாங்கிய பிறகு ஏதாவது அசம்பாவிதம் நடந்து கடன் கட்ட முடியாமல் போனால், பெற்றோர்கள் கஷ்டப்பட்டு அந்த கடன் பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், இந்த பாலிசி எடுத்தால், பெற்றோர்கள் பணம் எதையும் கட்டாமலே அந்த வீட்டின் உரிமையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.  



தங்கம்!

இளம்பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவன் இருக்குமிடத்திற்குப் போயாக வேண்டும் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பாக வீடு வாங்கியிருந்தால் அதனால் சில சிரமங்கள் ஏற்படலாம். ஒருவேளை திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல முடியாதபட்சத்தில் அந்த வீட்டுக்கான கடன் சுமை கணவனின் தலையில்தான் விழும். எனவே, இளம்பெண்கள் வேலைக்குச் சேர்ந்ததும் ஹவுஸிங் லோனில் ஃபிளாட் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்தால், திருமணத்தின்போதும், திருமணத்திற்குப் பிறகும் நிச்சயம் உதவும். ஆபரணமாகத்தான் தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. கோல்டு இ.டி.எஃப்., கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் திட்டங்கள் மூலமும் சேமிக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்!

ஆண், பெண் என இரு தரப்பினருக்குமே மிகவும் ஏற்றது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. எஸ்.ஐ.பி. முறையில் நல்ல வருமானம் தரும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மன்த்லி இன்கம் குரோத் பிளானில்கூட முதலீடு செய்து வரலாம். சில நிறுவனங்களில் மன்த்லி இன்கம் பிளானில் தங்கத்தில் சில சதவிகிதங்கள் முதலீடு செய்யும் திட்டங்களும் இருக்கின்றன. அதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஃபண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்கு வரி கட்ட வேண்டியதில்லை.
வங்கி டெபாசிட்!

வங்கி டெபாசிட்டில் முதலீடு செய்தால், போட்ட பணத்திற்கு வேண்டுமானால் பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், பணவீக்கத்தைவிட குறைந்த வருமானமே கிடைக்கும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுத்தாலும் பிரச்னை இல்லை என்கிற இந்த வயதில் வங்கி டெபாசிட் என்பது வீண்தான்!
பங்குகள்!

ரிஸ்க் எடுக்கும் வாய்ப்புகள் கொண்ட இளைஞர்கள், பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்யலாம். 50,000 சம்பளம் வாங்குபவர்கள் மாதம் 5,000 ரூபாய் வரை பங்குகளில் முதலீடு செய்யலாம். நல்ல லார்ஜ்கேப் பங்குகள், புளூசிப் கம்பெனி பங்குகளாகப் பார்த்து நீண்ட காலத்திற்கு வாங்கிப் போடலாம். சந்தை கீழே இறங்கும்போது கூடுதலாக பங்குகள் வாங்கிச் சேமித்தால் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன் கிடைக்கும்.  
மற்ற முதலீடுகள்!

வங்கி டெபாசிட்கள் 8.5 -10% வட்டி தருகிறது என்றால், கம்பெனி டெபாசிட்கள் 10.5 - 12.5% வரை வட்டி தருகின்றன. நல்ல நிவாகம், அதிக ரேட்டிங், மிகவும் வலுவான நிதிநிலை கொண்டுள்ள கம்பெனி டெபாசிட்டுகளாகப் பார்த்து போடலாம்.  அத்துடன் பங்குகளாக மாற்ற முடியாத டிபஞ்சர்களில்கூட முதலீடு செய்யலாம். பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டில் வருடத்திற்கு 70,000 ரூபாய் வரையில் சேமிக்கலாம். பங்குகளில் பணத்தை முதலீடு செய்ய விரும்பாத பெண்கள், தேசிய சேமிப்புப் பத்திரம் போன்ற ரிஸ்க் அல்லாத முதலீடுகளில் நீண்ட காலத்திற்குச் சேமிக்கலாம்.காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற மாதிரி வயதிருக்கும் போதே நிறைய சேமித்து, சரியாக முதலீடு செய்வது அவசியம் என்பதை இளைஞர்களும், இளம்பெண்களும் புரிந்து கொண்டால் சரி.


ஹரிணி.

விகடன்  

Sunday, October 30, 2011

என்ன செய்யணும் விஜயகாந்த்?


உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. சாதனை படைத்திருப்பதாக மதுரை அ.இ.அ.தி.மு.க.வினர் கிண்டலாகச் சொல்கிறார்கள். ‘தனியாக நின்றதால் தே.மு.தி.க.வின் சாயம் வெளுத்து விட்டது; அடுத்து ஆளப்போவது நாங்கள்தான் என்று சொல்லி வந்த இறு மாப்பில் இடி விழுந்தது; விஜயகாந்த் இனி அவ்வளவுதான். எழுந்திருக்க முடியாது’ என்ற எண்ணப் போக்கு மக்களிடம் இருக்க, ‘இதென்ன புதுக்கதை’ என்று மண்டை குடைகிறதா? ஐயா... விஷயம் இதுதான். மதுரை மேலூர் நகராட்சியின் 15வது வார்டில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டவர் ஜோதிலட்சுமி. இவர் வாங்கிய வோட்டு பூஜ்யம். வேட்பாளர் அவருடைய வோட்டை யாருக்குப் போட்டார் என்று கேள்வி எழுகிறதா? வேட்பாளருக்கே அவர் போட்டியிட்ட வார்டில் வோட்டு இல்லையாம்! மேலூர் நகராட்சி சார்பில் பூஜ்யம் வாங்கியதைத்தான் ‘தே.மு.தி.க. சாதனை’ என்று அ.தி.மு.க.வினர் நக்கலடிக்கிறார்கள். 

அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களையும் வோட்டுகளையும் பிடித்து தே.மு.தி.க. அழுத்தமாகவே அசத்தும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தி.மு.க. அந்த அளவுக்கு பலவீனமாக இருந்ததால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் இக்கருத்து நிலவியது. ஆனால், தமிழக அரசியலில் அ.தி.மு.க. வும் தி.மு.க.வும் ஒன்றுக்கொன்று மாற்றாக இருக்கின்றன என்பதையும் தே.மு.தி.க. வுக்கு அதில் ஒன்றைக் கழித்துக் கட்டும் அளவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும் முடிவுகள் பளிச்சென்று சொல்கின்றன.  ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் செல்வாக்கு உயர்ந்து வருவதாக தே.மு.தி.க. சொல்கிறது. 2006 சட்டமன்றத் தேர்தலில் 28 லட்சம் வாக்குகளைப் பெற்ற நாங்கள், 2009 மக்களவைத் தேர்தலில் 31 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். இப்போது கிட்டத்தட்ட 36 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோமே! இது வளர்ச்சி இல்லையா?" என்று கேட்கிறார் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன். உள்ளாட்சியில் உள்ள மொத்த இடங்கள் கிட்டத்தட்ட 20,000. இதில் தே.மு.தி.க. பெற்ற இடங்கள் 863தான். கிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான இடங்களைப் பிடித்திருக்கிறது தே.மு.தி.க. பத்து மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு மாநகராட்சியையும் பிடிக்காதது மட்டுமல்ல; அதற்குக் கிடைத்த கவுன்ஸிலர்கள் எட்டு பேர்தான். இரண்டே இரண்டு நகர சபைகளைத்தான் பிடித்திருக்கிறது. இத்தனைக்கும் விஜயகாந்தும் அவர் மனைவி பிரேமலதாவும் தமிழகம் முழுவதும் சுழன்றடித்துப் பிரசாரம் செய்தார்கள். சட்டமன்றத்தில் பெற்ற 29 இடங்கள்கூட ‘ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தே.மு.தி.க. வுக்குக் கிடைத்தது. தே.மு.தி.க. கூட்டணி இல்லாமலேயேகூட ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருப்பார்," என்றெல்லாம் மக்களிடம் பேச்சு எழத் தொடங்கிவிட்டது. 


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையாக, ‘தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை’ என்று விஜயகாந்த் அறிக்கை விட்டிருக்கிறார். ஆளும்கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் திட்டங்களும் நிதியும் அப்போதுதான் உள்ளாட்சிகளுக்கு வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்கள் முடியவில்லை. இந்தச் சூழலில் மக்கள் தங்கள் நம்பிக்கையை உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் கட்சி மீதே வைத்திருப்பது இயற்கைதான்," என்று சொல்கிறார் விஜயகாந்த். தோல்விக்கான காரணங்களை இதுபோல, அடுக்குவது எளிது. ‘எங்களது வோட்டு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’ என்று சொல்லி ஆறுதல் அடைவதும் இயற்கை. வாக்காளர் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப வோட்டுகள் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்துத்தான் செல்வாக்கை கணிக்க வேண்டும்.இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை மக்கள் எதிர்பார்ப்பில் தே.மு.தி.க. சறுக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. ஆகவே, தம்மையும் தன் கட்சியையும் நிலை நிறுத்திக் கொள்ள விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும். இரண்டு நடுநிலை அரசியல் விமர்சகர்களோடு பேசினோம்.விஜயகாந்துக்குப் பின்னடைவு இல்லை என்பதே என் கருத்து," என்கிறார் சோலை. ஆனால், அதிகமாக திருப்திப் பட்டுக் கொள்ளும் நிலையிலும் விஜயகாந்த் இருக்க முடியாது. தமது செயல்பாடு, அரசியல் யுக்தி ஆகியவற்றில் பளிச்சென ஒரு மாறுதலைக் கொண்டு வந்தால் 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கழகங்களில் ஒன்றுக்கு மாற்றாக வர முடியும். தமது குரு எம்.ஜி.ஆர். என்று சொல்லும் விஜயகாந்த், எம்.ஜி.ஆரின் அரசியல் செயல்பாடுகளைப் பாடமாக ஏன் எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார் என்பது புரியவில்லை.


எம்.ஜி.ஆர். முதலில் சந்தித்த திண்டுக்கல் தேர்தலில் அவருடன் கூட்டணி கண்டன இரு கம்யூனிஸ்ட் இயக்கங்கள். உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டைச் சேர்த்துக் கொண்ட விஜய காந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஏன் கை விட்டு விட்டார்? அதையும் சேர்த்துக் கொண்டிருந்தால் அவர் பெற்ற இடங்கள் ஆயிரத்தைத் தாண்டி இருக்கும். இது மட்டுமல்ல; இரு கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்களும் தே.மு.தி.க. இளைஞர்களுக்கு, தேர்தலைச் சந்திப்பது குறித்து யுக்திகளைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். இந்த அனுபவப் பாடம் ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் தேவை. 2014க்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்க்காமல் தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு நல்ல மாற்று அணியை அமைக்க உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும் விஜயகாந்த்.  அரசியலில் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்து வோட்டுகளைப் பெறுவது கடினம். அதிகாரத்தில் இருப்பவர்களே கல்லடி பெறுவார்கள். அந்த வகையில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், ஆளும் கட்சியைப் பாரபட்சமில்லாமல் விமர்சித்து மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து வந்தால் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பளிச்சிடுவார். விஜயகாந்துக்குப் பின்னடைவு என்று இப்போது கிளம்பியிருக்கும் பேச்சு, மீடியாவின் உருவாக்கம்," என்கிறார் சோலை.கருணாநிதி...எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், நல்ல எதிர்க்கட்சித் தலைவர்களாக மக்களிடம் நம்பிக்கை பெற்ற பிறகே முதல்வராக வர முடிந்தது என்பதை விஜயகாந்த் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அந்த நம்பிக்கையை அவர் மக்களிடம் துளிர்விட வைத்தால் ஐந்து வருடம் கழித்து ஆட்சி இவர் கைவசமாகும்," என்கிறார் தமிழருவி மணியன்.விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும் என்று சற்று விஸ்தாரமாகவே பேசினார் தமிழருவி மணியன். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுக்கும் மாற்றாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட விஜயகாந்த் ஒரு புதிய எழுச்சியையும், நம்பிக்கையையும் மக்களிடம் உண்டாக்கினார் என்பது யதார்த்தம். அவரும் மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று 2006 முதல் 2009 வரை எல்லா தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டார். அதனால் அவரது வாக்கு வங்கி வளர்ந்தது. 


2006 உள்ளாட்சித் தேர்தலைவிட இந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைவாகவே வாக்கு சதவிகிதம் பெற்றிருக்கிறார் விஜயகாந்த். ஆனால், சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததை ஒரு வகையில் நியாயம் என்று சொல்லலாம். ஒட்டுமொத்த தமிழகத்தையும் கபளீகரம் செய்து வந்த கருணாநிதியை, பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட சரியான முடிவு. விஜயகாந்த் தனித்தே நின்றிருந்தால் வோட்டுகள் பிரிந்து தி.மு.க. மூச்சு விடு வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே, ஜெயலலிதாவுடன் அவர் கூட்டணி அமைத்ததை மக்கள் தவறாகக் கருதவில்லை.  ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அவரது அணுகுமுறையை மக்கள் ஆதரிக்கவில்லை. ‘காமராஜர் வழியில் அரசை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டேன்’ என்றார் விஜயகாந்த். இது அரசியல் பிழை. 1967ல் தி.மு.க. முதன்முறையாக அதிகாரத்துக்கு வந்தது. அனுபவம் இல்லாத தி.மு.க.வினர் பொறுப்புக்கு வந்ததால் ஆறு மாதம் அவகாசம் கொடுத்தார் காமராஜர். ஆனால், மூன்றாவது முறையாக முதல்வரான ஜெயலலிதாவுக்கு காமராஜர் பாணியில் ஆறு மாதம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் பங்களிப்பு சரியாக இல்லையென்பதே மக்களின் கருத்து. சமச்சீர் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச் சூடு இரண்டிலும் அவர் கருத்து அழுத்தமாக இல்லை. கொஞ்சம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.விடம் கூட்டணி தொடர்ந்து 20 சதவிகித இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என் பதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. எனவே, விஜயகாந்த் அடக்கி வாசித்தார். அவரது எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்குப் போட்டியாக முதல்வரைப் புகழ்ந்தார்கள்! மாற்று அரசியலுக்குத் தகுதியான மனிதர் என்று நம்பிய வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எல்லா அரசியல் தலைவர்களைப் போல சந்தர்ப்பவாதம் காட்டும் சாதாரண அரசியல் தலைவர்தானோ விஜயகாந்த் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவு," என்கிறார் மணியன்.தமிழக அரசியலில் இனி விஜயகாந்துக்கு இடமே இல்லை என்று நான் சொல்லவில்லை" மணியன் தொடர்கிறார்... இரண்டு திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஜாதி, மத உணர்வு கடந்த, மக்கள் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்று அணியை விஜயகாந்த் உருவாக்க வேண்டும். இடதுசாரி இயக்கங்களோடு கொள்கைவாத இயக்கமாக இயங்கும் ம.தி.மு.க.வையும் சேர்த்துக்கொண்டு ஒரு மாற்று அணியை விஜயகாந்த் கட்டமைத்து நேர்மையான அரசியலை நடத்தினால், இன்று சரிந்திருக்கும் செல்வாக்கை நாளை நிச்சயம் தூக்கி நிறுத்த முடியும். விஜயகாந்த் முக்கியமாகச் செய்ய வேண்டியது சட்ட சபைக்குத் தவறாமல் சென்று, வாதங்களில் கலந்து கொள்ள வேண்டும். எந்தப் பிரச்னையிலும் நழுவல் இல்லாமல் மக்கள் சார்பாகக் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வோட்டுப் போட்டவர்களைத் தவிர, மற்ற எல்லா கட்சிகளுக்கும் வோட்டுப் போட்ட மக்களின் பிரதிநிதியாக அவர் செயல்பட வேண்டும். இந்த வகையில் தமது பணியை அமைத்துக் கொண்டால் கழகங்களுக்கு மாற்றான ஒரு சக்தியாக அவர் உருவாவது நிச்சயம்," என்கிறார் தமிழருவி மணியன்.


மீடியா எங்கள் செல்வாக்கை மிகவும் குறைத்து மதிப்பிட்டு விமர்சிக்கிறது. தனித்தே களம் கண்டதால் எங்கள் தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்தார்கள். ஆளும் கட்சிக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட அதிகார பண பலத்தையும் மீறி நாங்கள் வாக்குகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் தே.மு.தி.க. முக்கியஸ்தர் மாஃபா பாண்டியராஜன். ‘தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சிலர், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கட்சியை விட்டு விலகுகிறார்கள்’ என்ற வதந்தியும் கிளம்புகிறது. இதுவும் மீடியா கிரியேஷன்தான்," என்கிறார் பாண்டியராஜன்!


Saturday, October 29, 2011

மூன்று கவலைகள்! - ஓ பக்கங்கள், ஞாநி

கவலை 1:


நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பெரிய அரசியல் மாற்றம் எதையும் செய்துவிடவில்லை. ஐந்து மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் தி.மு.க.வை நிராகரித்து அ.தி.மு.க.வை ஆட்சிக்குக் கொண்டுவந்த அதே போக்குதான் இதிலும் தொடர்கிறது. ஐந்து மாதங்களுக்குள் புதிய ஆட்சிக்கு எதிராக பெரும் அதிருப்தி மக்கள் மனத்தில் உருவாக வாய்ப்பில்லை என்பதால் அதே போக்கு தொடர்கிறது.  பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., இடது சாரிகள் முதலிய சிறு கட்சிகளுக்கெல்லாம் பெரும் பின்னடைவு என்றும் காங்கிரஸ் அடியோடு காலி என்றும் சிலர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை விமர்சிக்கிறார்கள்.

அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. எப்போதுமே இரு பெரும் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுக்கும் தலா 25 சதவிகித வோட்டு பலம் குறைந்த பட்சம் இருந்துகொண்டே இருக்கிறது. தேர்தல் சமயத்து அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து இரு கட்சிகளுக்குமிடையே சுமார் 5 முதல் 10 சதவிகித வோட்டு வித்தியாசம் மாறி மாறி இருந்து வருகிறது. சிறு கட்சிகள் ஒரு சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை வோட்டும் பலம் உள்ளவை. பெரிய கட்சி ஏதேனும் ஒன்றுடன் சிறு கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால், அது இருவருக்கும் பயன் தரும். பிரிந்து இருந்தால், பெரிய கட்சிக்குப் பெரும் பாதிப்பு ஏற்படாது. சிறிய கட்சிக்குக் கடும் பாதிப்பு இருக்கும். இதுதான் எப்போதும் நடக்கிறது. இப்போதும் நடந்திருக்கிறது.  நம்முடைய தேர்தல் முறையில் வாங்குகிற வோட்டுகளுக்கும் பெறுகிற இடங்களுக்கும் சம்பந்தமே இல்லாத நிலை இருப்பதால் கணிசமாக வோட்டு வாங்கினாலும் பயன் இல்லாமல் போகும். இந்த முறை பாரதிய ஜனதாவும் மார்க்சிஸ்ட்டுகளும் ம.தி.மு.க.வும் ஆளுக்கொரு நகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வோட்டு சதவிகிதம் என்ன? கம்யூனிஸ்ட் - 0.71. மார்க்சிஸ்ட் 1.02. பா.ஜ.க. - 1.35. ம.தி.மு.க 1.7. இவர்களைவிட பாட்டாளி மக்கள் கட்சியும் காங்கிரசும் அதிக வோட்டுகளை வாங்கியும் எந்த நகராட்சியையும் பிடிக்கவில்லை. பா.ம.க - 3.55 சதவிகிதம். காங்கிரஸ் 5.71. உண்மையில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வந்தால் மட்டுமே நம் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் அசல் பலத்துக்குரிய இடங்களைப் பெறமுடியும். 

உள்ளாட்சித் தேர்தல்களில் தனி நபர் செல்வாக்குக்கு, கணிசமான இடம் இருக்க முடியும் என்றும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்குக்கு, கூடுதல் அழுத்தம் கிடைக்கும் என்றும் பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சிகளின் ஆதிக்கத்தையே உறுதிப்படுத்தியிருக்கின்றன. பஞ்சாயத்து மட்டத்தில் அதிகார பூர்வமாக கட்சி அடிப்படை கிடையாது என்ற போதும் அங்கேயும் கட்சி செல்வாக்கே இந்த முறை மேலோங்கியிருக்கிறது. கட்சி செல்வாக்கு என்பது இங்கே கூடவே பணபலத்தையும் குறிக்கிறது.உண்மையில் மாநகராட்சி வரை கட்சி அடிப்படையை முற்றிலும் நீக்க வேண்டும். கட்சி சின்னம் அடிப்படையில் போட்டி நடக்கக்கூடாது. தனி நபர்களின் தரத்தின் அடிப்படையிலேயே தேர்தல் நடக்க வேண்டும். அதுதான் உள்ளாட்சிகளுக்கு சரியானதாக இருக்க முடியும் என்றெல்லாம் நாம் சொன்னாலும், நடைமுறையில் கட்சி அடிப்படை தான் இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. சென்னை மேயர் தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் சைதை துரைசாமி தனிப்பட்ட முறையில் நல்ல பெயர் எடுத்தவர். மனித நேய அறக்கட்டளைப் பணிகள் வாயிலாக ஐ.ஏ.எஸ்.க்கு ஏழை மாணவர்களை இலவசமாகத் தயார் செய்து அனுப்பி சாதனைகள் செய்தவர். ஆனால் அவரே அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடாமல், சுயேச்சையாகப் போட்டியிட்டால், கவுன்சிலராகக்கூட தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் சைதை துரைசாமி போலவே நல்ல பெயர் எடுத்திருக்கக்கூடிய, நல்ல களப்பணிகள் செய்திருக்கக்கூடிய பல சமூக ஆர்வலர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு கவுன்சிலராகக் கூட ஆகமுடியவில்லை. தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய வீடுகளையும் மனைகளையும் முதலமைச்சர் தன் விருப்பக் கோட்டாவில் முறைகேடாக, பல அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஒதுக்கிய ஊழலை, தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தியவர் சென்னை எம்.ஜி.ஆர். நகர் கோபாலகிருஷ்ணன். ஆனால் அவருக்கு கவுன்சிலர் தேர்தலில் கிடைத்த மொத்த வோட்டு வெறும் 305தான். கொட்டிவாக்கத்தில் ராஜ் செரு பாலும், தியாகராய நகரில் ஸ்ரீதரனும் முக்கியமான சமூக ஆர்வலர்கள். அவர்களுக்கும் தேர்தலில் இதே கதிதான். 

உள்ளாட்சித் தேர்தலில் கூட கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நல்ல வேட்பாளர்கள் வெல்லும் வாய்ப்பு இனி சுத்தமாக இல்லை என்பதுதான் இந்தத் தேர்தல் காட்டியிருக்கும் ஆபத்தான நிலைமை. இது பற்றி நாம் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.

கவலை 2:


கிரண் பேடி அப்படி என்ன பெரிய தப்பு செய்துவிட்டார் என்று அவரை ஆதரிப்பவர்கள் வாதிடுகிறார்கள். ஊழலுக்கு எதிராக ஜன் லோக்பால் சட்டம் தேவை என்று போராடும் அண்ணா ஹசாரேவின் தளபதிகளில் ஒருத்தர் கிரண் பேடி. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் பேர்வழிகள், எல்லா எம்.பி.களும் நம்பமுடியாதவர்கள் என்று கேலியும் கிண்டலுமாக ராம் லீலா மைதான மேடையில் நடனம் ஆடி நையாண்டி செய்தவர் கிரண் பேடி. அவரை யாராவது வெளியூரில் பேசக் கூப்பிட்டால் விமான டிக்கட் வாங்கித் தர வேண்டும். கிரண்பேடி விமானத்தில் சொகுசு வகுப்புக்கான கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் வாங்கிக் கொள்வார். ஆனால் சாதாரண வகுப்பில் பயணம் செய்வார். அந்த டிக்கட்டிலும் அவருக்கு 75 சதவிகிதம் தள்ளுபடி உண்டு. காரணம் அவர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது தீரச் செயலுக்கான மெடல் வாங்கியவர் என்பதால் அந்தச் சலுகை. ஆக மொத்தத்தில் 10 ஆயிரம் ரூபாய் விமான டிக்கட்டை 2500 ரூபாய்க்கு வாங்கிவிட்டு, பில்லை மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கொடுப்பார் கிரண்பேடி என்பதுதான் குற்றச்சாட்டு. இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது.கிரண்பேடி நடந்ததை மறுக்கவில்லை. இப்படி ‘மிச்சப்படுத்தும்’ தொகையை நான் சமூகப் பணிகளுக்குத்தான் பயன்படுத்துகிறேன் என்பதுதான் அவரது சமாதானம். பல அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்களும், இப்படி பில் தொகையில் மிச்சப்படுத்தும் வழக்கம் நம் சமூகத்தில் சகஜமாக இருந்து வருகிறது. நான் சாதாரண வகுப்பில் போவேன். என் பதவி அந்தஸ்துக்கு எனக்கு முதல் வகுப்பு டிக்கட்டுக்கு உரிமை உண்டு என்பதால் முதல் வகுப்பு டிக்கட் பணத்தை வாங்கிக் கொள்வேன் என்பது பல அலுவலர்களின் வழக்கமான நிலை. கிரண் பேடியும் அதையேதான் செய்து வருகிறார். 

பொய்க் கணக்குக் காட்டி எடுக்கும் பணத்துக்குத்தான் கறுப்புப் பணம் என்று பெயர். அதை நல்ல காரியத்துக்குத்தான் பயன்படுத்துகிறேன் என்ற சமாதானத்தை, கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பிக்கலாம். ஊழலுக்கு எதிராக குரலெழுப்புபவர் துளியும் ஊழல் செய்யாதவராக இருக்கவேண்டும் என்பதே நியாயம்.இங்கே எனக்கு மறைந்த ஏ.கே.வி. எனப்படும் அ.கி.வேங்கட சுப்பிரமணியனின் நினைவுதான் வருகிறது. அவரும் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர்தான். பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் கேட்டலிஸ்ட் டிரஸ்ட், குடிமக்கள் முரசு இதழ் ஆகியவற்றின் மூலம் நுகர்வோர் விழிப்புணர்வுக்காகவும் வாக்காளர் உரிமைகளுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்துக்காகவும் ஓயாமல் வேலை செய்தவர். எனக்கு 49 ஓவை அவர்தான் தெரியப்படுத்தினார். தமிழகம் முழுவதும் அவரை பல அமைப்புகள் பயிற்சி வகுப்புக்கும் கூட்டங்களுக்கும் அழைத்தன. ஓயாமல் சுற்றுப் பயணம் செய்து பேசினார். பஸ்களில் செல்வார். பஸ் டிக்கட் என்னவோ அதைத்தான் அழைத்தவரிடம் வாங்கிக் கொள்வார். கூட்டம் பேசச் சென்ற ஊரில் சொந்த வேலையாக எதையாவது செய்யச் சென்றால், அதற்கு சொந்தக் காசைத்தான் செலவு செய்வார். நமக்கு ஏ.கே.வி.கள் தான் தேவை; கிரண் பேடிகள் அல்ல. ஆனால் கிரண் பேடிகள்தான் மீடியாவில் வலம் வருகிறார்கள் என்பதே கவலையாக இருக்கிறது. 

கவலை 3:


சென்ற சில வருடங்களில் உலகத்தை உலுக்கி எடுத்தவர் ஜூலியன் அசாஞ்சே. அவர் உருவாக்கிய விக்கிலீக்ஸ், அரசாங்கங்கள் குறிப்பாக அமெரிக்க அரசாங்கம் சொல்லும் பல பொய்களை அம்பலப்படுத்தியது. இணையதளத்தின் மூலம் புதிய இதழியலையே அசாஞ்சே உருவாக்கியிருந்தார்.விக்கிலீக்ஸை முடக்க அமெரிக்க அரசும் இதர அரசுகளும் எடுத்த பல முயற்சிகள் தோற்றன. அசாஞ்சே மீது வழக்கு போட்டு அவரை முடக்கும் முயற்சியும் வெற்றி பெறவில்லை. எனவே விக்கிலீக்சின் பொருளாதார பலத்தை சீர்குலைக்கும் வேலையில் இறங்கிவிட்டன. விக்கிலீக்ஸ் முழுக்க முழுக்க பொது மக்களின் நன்கொடையை நம்பியே நடக்கிறது. ஆண்டு தோறும் 35 லட்சம் டாலர்கள் தேவை. உலகம் முழுவதும் பல நாடுகளிலிருந்து நன்கொடை கொடுப்பவர்களுக்கு எளிமையான வழி விசா, மாஸ்டர் கார்டுகள், பேபால் போன்றவை மூலம் இன்டர்நெட் வழியாக நன்கொடை அனுப்புவதாகும். வெஸ்டர்ன் யூனியன் போன்ற பண பரிவர்த்தனை கம்பெனிகள் மூலம் பணம் அனுப்பலாம். அமெரிக்க அரசின் நெருக்கடியால், இவை அனைத்தும் விக்கிலீக்சுக்கு எங்கள் கார்டுகள், அமைப்புகள் மூலம் நன்கொடை வாங்கித் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டன. இதனால் விக்கிலீக்சுக்கு வந்து கொண்டிருந்த நன் கொடையில் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே அடுத்த ஓராண்டுக்கு விக்கிலீக்ஸ் செயல்பாடுகளை நிறுத்திவைக்கப் போவதாக அசாஞ்சே அறிவித்திருக்கிறார். மாற்று வழிகளில் பணம் திரட்டியபிறகு மறுபடியும் செயல்படுவோம் என்று அசாஞ்சே சொல்லியிருக்கிறார்.

இன்று படித்தவர்கள் பலரும் இன்டர்நெட் சார்ந்த விசா, மாஸ்டர் கார்ட், பேபால், கூகிள், ஃபேஸ்புக், ஜீமெயில் போன்ற பல வசதிகளை சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாம் நம் சுதந்திரமான உரிமைகள். யாரும் இவற்றை எதுவும் செய்ய முடியாது. இவை நமக்கு நிரந்தரமானவை என்று நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு தவறு என்று விக்கிலீக்ஸ் சிக்கல் புரிய வைக்கிறது. அத்தனையும் அமெரிக்க கம்பெனிகள். அமெரிக்க அரசின் மிரட்டலுக்கு உட்பட்டவை. உலகத்தில் அராஜகங்களை பகிரங்கமாகப் பேசவும் எடுத்துச் சொல்லவும் விக்கிலீக்ஸ் மட்டுமல்ல, கிரீன்பீஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகளும் இயங்குகின்றன. எல்லாமே மக்களின் நன்கொடைகளில் இயங்குபவை. ஆனால் அவை செயல்பட, வங்கிகள், கிரெடிட் டெபிட் கார்டுகள், இன்டர்நெட் போன்ற உதவிகள் தேவை. அவற்றை வெட்டிவிட்டால் செயல்பட முடியாது. அரசாங்கங்கள் நினைத்தால் வெட்டிவிட முடியும் என்பதை விக்கிலீக்ஸ் சிக்கல் நமக்கு முகத்தில் அடித்தாற் போலச் சொல்கிறது.இந்தியாவிலும் நமக்கு மறந்திருக்கலாம். சில வருடங்கள் முன்பு தெஹல்கா முதலில் இணையதளமாகத்தான் செயல்படத் தொடங்கியது. பல முறைகேடுகளை அம்பலப்படுத்தியது. தெஹல்காவை ஒடுக்க நினைத்த பி.ஜே.பி. அரசு, தெஹல்காவில் முதலீடு செய்த நிதிநிறுவனங்களை ரெய்டு செய்து முடக்கியது. தெஹல்கா இணையதளமும் மூடப்பட்டது. பின்னர் மக்கள் நன்கொடையினால் தெஹல்கா அச்சுப் பத்திரிகையானது. பத்திரிகைகளின் பொருளாதாரத்தை ஒடுக்க அரசாங்கங்களும் தனியார் கம்பெனிகளும் விளம்பரங்களில் கைவைப்பது வழக்கம்.

எந்த எதிர்ப்பையும் விமர்சனத்தையும், போராட்டத்தையும் ஒடுக்க அதன் அடிப்படையாக இருக்கக் கூடிய வருமானத்தில் கைவைப்பதுதான் ஒடுக்குவோரின் நடைமுறை. கூடங்குளம் போராட்டத்தையும் ஒடுக்க அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் தடை முயற்சிகளில் அரசு ஈடுபடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. பொருளாதாரரீதியாக தாக்குப் பிடிக்கும் சக்தி இருந்தால் மட்டுமே எந்த எதிர்ப்பையும் வெல்ல முடியும். அந்த சக்தி பெரும்பாலான எதிர்ப்பு இயக்கங்களுக்கு இல்லையே என்பது கவலையாக இருக்கிறது.   

இந்த வார வேண்டுகோள்!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னையில் நடத்தப்பட்ட சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக பல முறை கேடுகள், விமர்சனங்கள் இருந்தாலும், கிராமியக் கலைகளை ஊக்குவிக்கவும் நகரில் அறிமுகப்படுத்தவும் அவை உதவும் என்பதால், ஜெயலலிதா அரசு வரும் ஜனவரியில் அவற்றை கைவிடாமல் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும், சைதை துரைசாமி தலைமையிலான புதிய மாநகராட்சியும் சேர்ந்து அதை நடத்த முடியும்.   

Friday, October 28, 2011

காஷ்மீர் காத்திடுவோம் , பாகம் – 2

முதல் பாகம் படிக்க  காஷ்மீர் வரலாறு , பாகம் – 1

 

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 6 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.அதில் 3 காஷ்மீரிலும் 2 ஜம்முவிலும் ஒன்று லடாக்கிலும் உள்ளது. மொத்தம் 87 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில் 46 காஷ்மீரிலும் 37 ஜம்முவிலும் 4 லடாக்கிலும் இருக்கின்றன. 

 ஜம்முவின் பகுதியின் மொத்தப் பரப்பளவு 26,000 ச.கி.மீ. 2002 வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வாக்காளர்களின் எண்ணிக்கை 30,59,986 ஆகும். ஆனால் அங்கு இருப்பதோ 37 சட்டமன்றம் 2 நாடாளுமன்றத் தொகுதிகள்.காஷ்மீர் சமவெளி என்பது வெறும் 15,953 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்டது. அங்குள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 29 லட்சம். ஆனால் 3 நாடாளுமன்றம் 46 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. லடாக்கில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. கார்கில் மற்றும் லே பகுதிகளில் தலா 2 தொகுதிகள் வீதம் மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. மொத்த வாக்காளர்கள் 1,52,339.ஜம்முவில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரி 84,270 வாக்காளர்கள் இருக்கின்றனர். காஷ்மீரில் ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கு 62,673 வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஜம்முவில் 710.6 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது ஒரு சட்ட மன்றத் தொகுதி. ஆனால் காஷ்மீரில் வெறும் 346 ச.கி.மீ. பரப்பளவிற்கு ஒரு தொகுதி இருக்கிறது.ஜம்முவில் ஒரு நாடாளுமன்றத்திற்கு 15.29 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆனால் காஷ்மீரில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 9.61 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஜம்முவில் ஒரு மாவட்டம் என்பது சராசரி 2629 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் காஷ்மீரிலோ 1,594 ச.கி.மீ. பரப்பளவிற்கு ஒரு மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.ஜம்முவில் 4,571 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை வசதி இருக்கிறது. காஷ்மீரில் 7,129 கிலோமீட்டருக்கு சாலை போடப் பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் அரசுப் பணிகளில் ஜம்முவைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை1.25 லட்சம். காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும். தலைமைச் செயலகத்தில் ஜம்முவை சேர்ந்தவர்கள் 462 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் 1,329 பேர் பணிபுரிகின்றனர்.மத்திய பல்கலைக் கழகம் (Central University), தேசிய தொழில் நுட்பக்கல்லூரி (National Institute of Technology) உட்பட மத்திய அரசின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்கள்  இருப்பது காஷ்மீர்ப் பகுதியில். ஜம்முவில் எதுவும் இல்லை. மாநில பட்ஜெட்டில் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகின்ற நிதியில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே ஜம்முவிற்கு 85 சதவிகிதம் காஷ்மீருக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால் சுற்றுலாப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவது ஜம்மு பகுதிக்குத்தான். கடந்த 2009 ஆம் ஆண்டில் ஜம்மு பகுதிக்கு 85 லட்சம் பேரும் காஷ்மீர் பகுதிக்கு வெறும் 8 லட்சம் பேரும் வந்து சென்றுள்ளனர். 2001 ஆம் வருடத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகையின் படி காஷ்மீர் சமவெளிப் பகுதியின் மக்கள்தொகை 54,76,970. அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை 29 லட்சம் ஆகும். ஜம்முவின் மக்கள் தொகை 44,30,191. அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை 30.59 லட்சமாகும். ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளோ காஷ்மீரை விடக் குறைவு. தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருவதால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் காஷ்மீரில் முறையாக செயல்படவில்லை. கிட்டத்தட்ட முற்றிலும் குலைந்து போய்விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அங்கு போட்டித் தேர்வுகளில்  வெற்றி பெறுபவர்களின் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் ரகசியம் என்னவென்பது தெரியவில்லை. 

தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருவதால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் காஷ்மீரில் முறையாக செயல்படவில்லை. கிட்டத்தட்ட முற்றிலும் குலைந்து போய்விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அங்கு போட்டித் தேர்வுகளில்  வெற்றி பெறுபவர்களின் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் ரகசியம் என்னவென்பது தெரியவில்லை. லடாக் பகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு மிக அதிகமாக புறக்கணிக்கப்பட்ட பகுதி லடாக். அடிப்படை வசதிகள் கூட இம்மக்களுக்கு  செய்து தரப்படவில்லை. மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்பகுதி இருந்து வருகிறது. மக்களின் போராடத்திற்குப் பிறகு கூர்க்காலாந்து   போன்று  இங்கும் மேம்பாட்டுக் கவுன்சில் அமைக்கப்பட்டது. அதனால் பெரும் பயன் எதுவும் ஏற்படவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்து  வந்துள்ள ஆட்சிகள் அனைத்தும் காஷ்மீர் சமவெளியை மட்டும் கவனித்துக் கொண்டனவே தவிர ஜம்மு மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகளையும் தொடர்ந்து  புறக்கணித்தே வந்துள்ளன. அதில் லடாக்தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இப்பகுதியில் இருந்து நான்கே நான்கு நபர்கள் மட்டுமே இதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த நான்கு பேர் கூட முஸ்லிம்கள் ஆவர். பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள்  ஒருவர்  கூட  இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநில அரசுப் பணித் தேர்வுக் குழு சார்பில் 1997-98 ஆம் வருடம் காஷ்மீர் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை சேவைகளுக்காக தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு கிறிஸ்துவர் மூன்று முஸ்லிம்கள் மற்றும் 23 பௌத்தர்கள் தேர்வாகினர். அதில் 1 கிறிஸ்தவர் மற்றும் 3 முஸ்லிம்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரேயொரு  பௌத்தருக்கு  மட்டும் வேலை  வழங்கப்பட்டுள்ளது.

லடாக்கிலிருந்து காஷ்மீர் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 22 பேருக்கு இதுவரை எந்த ஒரு வேலையும் வழங்கப்படவில்லை. ஜம்மு&காஷ்மீர் அரசு  எப்படி பாகுபாடு காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஒரு உதாரணமே போதுமானது.  ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைமை செயலகப் பணிக்காகவென தனியான தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு 3,500 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒருவர் கூட லடாக் பகுதியைச் சேர்ந்த புத்தமதத்தினர் இல்லை. கடந்த 52 வருடத்தில் நான்காம் நிலை ஊழியராகக் கூட லடாக் புத்தமதத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டதில்லை. 1996 இல் 2.54 லட்சம் பேர் மாநில அரசுப் பணிகளில் இருந்து வந்தனர். அது 3.58 லட்சமாக 2000 வருடம் உயர்த்தப்பட்டது. அதில் 1.04 லட்சம் பேர் பாரூக் அப்துல்லா முதல்வராக இருந்தபோது தேர்வு செய்யப்பட்டவர்கள். அதில் வெறும் 319 பேர் மட்டுமே லடாக் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே லடாக்கியர்கள். மாநிலத்தில் இருக்கின்ற 9 பொதுத் துறை நிறுவனங்களில் மொத்தம் 21.286 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் லடாக்கை சேர்ந்த 3 பேருக்கு மட்டும் அரசுப் போக்குவரத்து நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள எந்த பொதுத் துறை நிறுவனத்திலும் அவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்பட்டது இல்லை. இதைப் போன்றே கிராம அதிகாரிகளாக 1997இல் 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒரேயொரு லடாக் புத்த மதத்தவருக்கு மட்டுமே   இவ்வேலை  வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 40 பேர் மாநில கல்வித்துறையில் கடைநிலை ஊழியராக பணியாற்றிட தேர்வு செய்யப்பட்டனர். அதில் 39 பேர் காஷ்மீர் முஸ்லிம்கள் ஆவர். ஒரேயொரு புத்தமதத்தினர்.  

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற பகுதிகளில் மரணம் அடையும் புத்தமதத்தவர்கள் அங்கு இறுதிச் சடங்குகளை செய்திட முஸ்லிம்கள்  அனுமதிப்பதில்லை. உடல்கள் அங்கிருந்து புத்தமதத்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பகுதிக்கு எடுத்து வரப்பட்டு  அங்குதான் இறுதிச் சடங்குகள்  நடத்திட முடியும்.  லடாக் மற்றும் லே பகுதிகளை சுற்றுலாத் தளமாக பிரசாரம் செய்து வருகிறது அம்மாநில அரசு. ஆனால் சுற்றுலாப் பயணிகளைக் ஈர்த்திடும் வகையில் எவ்வித முயற்சியும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. லடாக் புத்த கலாசாரம், பண்பாடு,   கலைகள், கைவினைப் பொருட்கள்  பற்றி  சிறிது கூட கவலைப்படாமல் வெறும்  விளம்பரம் மட்டும் செய்து வருகிறது. பழைமையான புத்த மடாலயங்கள் , விஹாரங்கள் சரியான  பராமரிப்பு இன்றி சிதைந்து வருகின்றன. அதுவுமின்றி லடாக்கில் அதிகரித்து வருகின்ற முஸ்லிம்களின் குடியேற்றத்தினால் புத்த மதத்தவர்கள் பல  புதிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.  காஷ்மீர் சமவெளிப் பகுதியைச் சார்ந்தவர்களே மாநிலத்தின் அனைத்து பிரச்சனைகளையும் கையாளுகின்றனர். முடிவுகளும் அங்கிருக்கின்ற அதிகாரிகள், மந்திரிகளே எடுத்து வருவதால் தொடர்ந்து ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. சரியான தீர்வும் நியாயமும்  அம்மக்களுக்கு கிடைப்பதில்லை. லடாக் மொழி, கலாச்சாரம், பாரம்பரியமான பழக்க வழக்கங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. அவைகளின்  மேம்பாட்டிற்காக அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. லடாக்கில் இருந்து வருகின்ற போதி மொழி மிகத்  தொன்மையானது. காலத்தால் கணிக்க முடியாத பல சம்ஸ்க்ருத படைப்புகள் அழிந்து விட்டன. ஆனால் இன்றும் கூட அவைகள்  போதி மொழியில்  பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  உருது மொழிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் சிறிது கூடக் கிடையாது. ஆனால் மாநில அரசு உருது மொழியை அரசு அலுவல்  மொழியாக அறிவித்து அதை மக்கள் மீது திணித்து வருகிறது. லடாக் பகுதிக்கு சிறிதும் தொடர்பில்லாத உருது மொழியை பாடத் திட்டத்தில் புகுத்தி அப்பகுதி மாணவர்கள் மீது உருது மொழியை திணித்து வருகிறது.மாநில அரசு போதி மொழியை அழித்திடவே விரும்புகிறது. தொன்மையான  போதி மொழியைக் காப்பாற்றிட  வேண்டுமெனில்  அம்மொழியை நமது அரசியல் சாசன சட்டத்தில் அட்டவணை 14 இல் சேர்த்திட வேண்டும்.  

1600 கிலோமீட்டருக்கு நமது நாட்டின் எல்லைப் பகுதிகள் லடாக்கில் இருந்து வருகிறது. நமது நாட்டினை காப்பாற்றிட எல்லையைக் காப்பாற்றிட வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால் நமது மத்திய மாநில அரசுகளோ அதைப் பற்றி சிறிதும் அக்கறை கொண்டதாகத் தெரிய வில்லை. ராணுவ  முக்கியத்துவம்  உள்ள பகுதியை காத்திட அங்குள்ள மக்களின் நன்மதிப்பினைப் முதலில் பெற்றிருக்க வேண்டும். லடாக் மக்களின் மொழி இலக்கியம்  மதம், பண்பாடு கலைகள் போன்றவற்றினைக் காப்பாற்றிடவும், அப்பகுதியைக் சர்வதேச ஆதிக்கக் கும்பல் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு வெறியிலிருந்து    காப்பாற்றிடவும் தனி யூனியன் பகுதியாக  லடாக்கினை அறிவித்திட வேண்டும்.        

 

 

 
நா.சடகோபன்

காஷ்மீர் காத்திடுவோம் , பாகம் – 1

காஷ்மீர் வரலாறு  
காஷ்மீர் புராண காலம்தொட்டு பாரதத்துடன் இணைந்திருக்கிற பகுதி. காஷ்யப ரிஷியினால் உருவாக்கப்பட்ட சமவெளிப் பகுதிதான் காஷ்மீராகும்.  காஷ்மீர்   பூவுலகின் சொர்க்கம் என்று போற்றப்படுகிறது. ஹிந்துக்களின் புனிதமான கைலாயம், மானசரோவர் ஏறி உற்பத்தியாகின்ற இடமும்  அங்குதான் இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்துக்கள் பனிபடர்ந்த மலையின்மீது தவமியற்றி வருகின்ற சிவபெருமானை தரிசனம்  செய்வதற்காக காஷ்மீருக்கு கைலாய யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். மாதா வைஷ்ணவி தேவி இருந்து வருகின்ற இடம். பகவான் அமர்நாத் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்ற இடம் காஷ்மீர். சூரிய பகவானுக்கு மார்த்தாண்டன் என்கிற பெயர்  உண்டு. காஷ்மீரில் மார்த்தாண்ட கோயில் இருந்துவந்துள்ளது. தற்போது அது இடிந்து சிதைந்த நிலையில் இருக்கிறது. காஷ்மீர் சரித்திரக் குறிப்புகளை  ராஜதரங்கிணி என்கிற நூலாக எழுதிய கல்ஹனர் இந்த மார்த்தாண்ட ஆலயத்தில் இருந்து கொண்டுதான் அதை எழுதியுள்ளார். 
 இமயமலையே ஹிந்துக்களுக்குப் புனிதமாகும். ஹிந்துக்கள் இப்பூமியை வெறும் மண்ணாக மலையாக நீராக மட்டும் பார்ப்பதில்லை. இங்கு எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பது என்பது பாரதப் பண்பாடாகும். மலை புனிதம் நதி புனிதம் கடல் புனிதம் பூமியை பூ மாதா என்று அழைக்கின்ற உயர்ந்த பண்பாடு பாரதப் பண்பாடாகும். அம்மாதிரிதான் முழு இமயமும் ஹிந்துக்களுக்கு புனிதமாகும்.  காலம் காலமாக அங்கு ஹிந்து மன்னர்களின் ஆட்சிதான் நடந்து வந்திருக்கிறது. பௌத்த விஹாரங்கள் அதிகமாக இங்கு இருந்து வருகின்றது. பௌத்தர்களுக்கும் இமயம் புனிதமாகும்.   
  1947 அக்டோபர்  26ஆம் தேதியன்று காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் அவர்கள் ஜம்மு காஷ்மீரை பாரத்துடன் முழுமையாக இணைப்பதற்கான   ஒப்பந்தத்தில்  கையெழத்திட்டு  இந்திய கவர்னர் ஜெனரலாக பதவி வகித்து வந்த மவுண்ட்பாட்டனுக்கு அனுப்பி வைத்தார்.
 
 அவர் அந்த இணைப்பு பிரகடனத்தை ஏற்றுக் கொண்டு 1947 அக்டோபர் 27 ஆம் தேதியன்று அங்கீகாரம்  செய்து ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியென அறிவித்தார். அன்று இணைந்த முழுமையான ஜம்மு காஷ்மீர் இன்று நம்மிடம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். 
 
ஜம்மு காஷ்மீர் விவரங்கள் 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று வித்தியாசமான பகுதிகளை உள்ளடக்கியது.1) ஜம்மு 2) காஷ்மீர் 3) லடாக்.
ஜம்மு
ஜம்முவின் மொத்த நிலப்பரப்பு 36315 ச.கி.மீ. அதில் தற்போது நம்வசம் இருப்பது 26,000 ச.கீ.மீ. மட்டுமே. பீர்பாஞ்சல் என்கிற  மிக உயரமான மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் தாவி,ஜீலம்,செனாப் போன்ற வற்றாத ஜீவ நதிகள் உற்பத்தியாகி இப்பகுதியை  வளப்படுத்துகிறது. இங்கு மக்கள் தொகையில் 67 சதவிகிதம் ஹிந்துக்கள் ஆவர். டோக்ரி மற்றும் பஹாடி மொழிகள் மக்களிடையே  வழக்கத்தில் இருந்து வருகிறது. 

காஷ்மீர் 
இது ஒரு சமவெளிப் பகுதி. இதன் மொத்தப் பரப்பளவு 22,000 ச.கீ.மீ. ஆகும். ஆனால் இதில் தற்போது 16,000 ச.கீ.மீ. மட்டுமே நம்வசம் இருந்து  வருகின்றது. இப்பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர். ஜீலம், கிஷன்கங்கா போன்ற நதிகள் பாய்ந்து சமவெளியை வளப்படுத்தி வருகின்றன. இங்கு 2 சமவெளி இருக்கின்றது. ஒன்று ஜீலம் சமவெளி மற்றொன்று லோலாப் சமவெளி ஆகும். காஷ்மிரி மொழி வழக்கத்தில் இருந்து வருகின்றது. இருந்த போதிலும் மூன்றி ஒரு பகுதியினர் பஞ்சாப் பஹாடி பேசுகின்றனர்.  மாநிலத்தில் இருக்கின்ற பகுதிகளில் மிகச் சிறிய பகுதி இதுவேயாகும்.

லடாக்: 
இமயத்தின் மிக உயரத்தில் இருக்கின்ற பகுதி லடாக். பரப்பளவிலும் மிகப் பெரியது. ஆனால் மக்கள் தொகையோ மிகமிகக் குறைவு. இயற்கை  இங்கு கொட்டிக் கிடக்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 1,64,748 ச.கீ.மீ. ஆனால் அதில் தற்போது வெறும் 59,000 ச.கீ.மீ. மட்டுமே நம்வசம் இருக்கிறது. புத்த மதத்தினரே இங்கு அதிகமாக வசித்து வருகின்றனர். ஏராளமான புத்த மடாலயங்கள் உள்ளன. மிக உயரமான பகுதியானாலும் கூட தட்பவெட்ப நிலைமை மிகவும் வறண்டு காணப்படும். மழை என்பது இங்கு அரிதிலும் அரிது. ஒரு வருடத்திற்கே சாராசரி வெறும் 3.2 அங்குலம் மட்டுமே மழை பொழிகிறது. வருடத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே ஆறுகளில் தண்ணீர் ஓடுவதைப் பார்க்க முடியும். மீதி நாட்கள் எல்லாம் பனி உறைந்த நிலையில்தான் இருக்கும்.
இதன் வடக்கே உயரமான காரகோரம் மலைத் தொடர் செல்கின்றது.அங்குதான் உலகப் பிரசித்தி பெற்ற காரகோரம் நெடுஞ்சாலை இருக்கிறது. 1999ஆம் வருடம் பாகிஸ்தானுடன் போர் நடைபெற்ற கார்கில் மலைத்தொடர் இங்குதான் உள்ளது. 1979 ஜூலை 1 அன்று லடாக்கில் இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று லே மற்றொன்று கார்கில்.  தன்னாட்சி  அதிகாரம் கொண்ட   மலை  மேம்பாட்டுக்   குழுவின்  நிர்வாகம்  அங்கு செயல்பட்டு வருகிறது. லடாக்கி மற்றும் பாலி மொழிகள் வழக்கத்தில் இருந்து வருகின்றது. இங்குள்ள லே, ஜன்ஸ்கார், சாங்தங், நூபுரா பள்ளத்தாக்குகளில் புத்த  மதத்தினரும், அருவெளி பள்ளத்தாக்கில் ஷியா முஸ்லிம்களும் வசித்து வருகின்றனர். கார்கில் ஷியா முஸ்லிம்கள் தீவிர தேசப்பற்று மிக்கவர்கள். கார்கில் போரின்போது நமது ராணுவத்திற்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தவர்கள்.1950 முதல் அப்பகுதியை கைப்பற்றிட சீனா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.  லடாக்கை மேற்கு திபெத் என்று அது அழைக்கிறது. அங்கு ஓடுகின்ற சிந்துநதிக் கரையையே எல்லைக் கோடாக மாற்றிட வேண்டும் என்றும் விரும்புகிறது. 
கில்ஜித் & பால்டிஸ்தான்
இவ்விரு பகுதிகளும் ஜம்மு காஷ்மீரின் பகுதியாகும். இதில் கில்ஜித் 42,000 ௦௦௦ ச.கீ.மி. பரப்பளவும் பால்டிஸ்தான் 20,000 ச.கீ.மி. பரப்பளவு கொண்டது. கில்ஜித் ராணுவ நோக்கில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.அப்பகுதியில் 6 நாடுகளின் எல்லைக் கோடுகள் தொட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், சீன, திபெத், மற்றும் பாகிஸ்தான் எல்லைக் கோடுகள் சந்திக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதி இன்று நம்வசம் இல்லை. பாகிஸ்தான் பிடியில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் அரசு தனது நேரடிக் கண்காணிப்பின்கீழ் இப்பகுதிகளை நிவகித்து வருகிறது. கில்ஜித் எவராலும் எளிதில் எட்ட முடியாத இடத்தில் அரணாக இருந்து நமது நாட்டினைக் காத்து வந்துள்ளது. அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றதோ அந்நாட்டின் கை இராணுவ ரீதியில் ஆசியப் பகுதியில் ஓங்கி இருக்கும். எனவே அதைக் கைப்பற்றிட அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் துவக்க முதலே முயற்சி செய்து வந்தன. 1935 இல் சோவியத் ரஷ்யா கிழக்கு துருக்மேனிஸ்தானைத் தாக்கியது. அச்சமயத்தில் ஆட்சிக் கட்டிலில் இருந்து வந்த பிரிட்ஷார் கில்ஜித்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து காஷ்மீர் மகாராஜாவுடன் ஒரு  உடன்படிக்கை  செய்து கொண்டு  60௦ வருடத்திற்கு  கில்ஜித்தை குத்தகைக்கு எடுத்து தனது நேரடி  நிர்வாகத்தில் வைத்துக் கொண்டனர். சீனாவின் செல்வாக்கு இப்பகுதியில் அதிகரித்து விடாமல் இருப்பதற்காக சோவியத் ரஷ்யா 60 களில் பாகிஸ்தானை ஆதரித்து  உதவி செய்து வந்துள்ளது. ஆனால் தற்போது அப்பகுதியில் சீன அரசு மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் சுமார் 65,000 கோடி முதலீடு செய்துள்ளது. பல்லாயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர். 11,000 சீனத் துருப்புகள் அங்கு இருந்து வருகின்றன. 

1947 இல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய போது கில்ஜித் பகுதியை ஆங்கிலேயர்கள் காஷ்மீர் மகாராஜா வசம் திருப்பிக் கொடுத்து விட்டனர்.அதற்கு முன்பாக கில்ஜித்தின் பாதுகாப்பிற்காக ஒரு சிறு படையை உருவாக்கிக்  கொடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மன்னருக்கு 21 குண்டுகள் முழங்கி வரவேற்பு கொடுக்கப்பட்டு வந்தது. இந்திய யூனியனுடன் இணைந்த சமஸ்தானங்களில் ஜம்மு காஷ்மீர் தான் மிகப் பெரிய சமஸ்தானமாகும். இந்தியாவுடன் அது இணைந்த போது மொத்தம் 2,22,236 ச.கீ.மி. இருந்தது. பாம்பே மாகாணத்தை விடப் பரப்பளவில் பெரியது. ஹிந்து மன்னர்களான டோக்ரா வம்சத்தினரின் கீழ் இருந்து வந்தது. காஷ்மீரில் அப்போது 76 சதவிகித மக்கள் முஸ்லிம்கள். நல்ல நிர்வாகம் மற்றும் தூமையான நல்லாட்சி வழங்கியதால்  டோக்ரா மன்னர்களுக்கு மக்களிடையே பெரும் மரியாதையும் வரவேற்பும்  இருந்து வந்தது.1947 ஜூன் 17 அன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து ராணி 1947 ஜூலை 18 அன்று அச்சட்டத்தை அங்கீகாரம் செய்து பிரிட்டிஷ் இந்தியாவை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரித்து சுதந்திரம் வழங்கிடப் போதவதாக அறிவித்தார்.கிழக்கு வங்காளம் மேற்கு பஞ்சாப் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் மற்றும் சிந்து மாகாணங்களை பாகிஸ்தான் என்றும் மீதமுள்ளவை இந்தியா எனவும் அறிவிக்கப்பட்டது.பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து வந்த நாடுகள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ அல்லது சுதந்திர தனி நாடாகவோ இருந்து கொள்ளலாம் என  அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்நாடுகளைப் பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு இல்லை என்றும் தனது பொறுப்பு முடிவிற்கு வந்து விட்டதாகவும் பிரிட்டிஷ் அரசு அறிவித்துவிட்டது. இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்கிற முடிவினை எடுப்பதற்கு அந்தந்த மன்னர்களுக்கு  முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. 


500கும் மேற்பட்ட சிறிய நடுத்தர பெரிய சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து புதிய பாரதத்தைக் கட்டி எழுப்பியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆவார்.  பட்டேலுக்கு இணையான ஒரு சாதனையை வேறு எவரும் இந்நாட்டில் நிகழ்த்தியதில்லை எனலாம். இன்றைய பாரதம் ஒரே நாடாக மாறிட அவர் ஒருவரே காரணமாவார் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு சமஸ்தானமும் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்திய யூனியனுடன் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவுடன் இணைந்திட இணைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டு கொடுத்திட வேண்டும். அதை கவர்னர் ஜெனரல் அங்கீகாரம் செய்து ஏற்றுக் கொண்டு பிரகடனம் செய்த பிறகே அந்த இணைப்பு முழுமை பெற்றதாகும். எந்த  ஒரு நிபந்தனையுடன் நாட்டினை இணைப்பதற்கு சட்டத்தில் இடமே கொடுக்கப்படவில்லை. அதன் படியே அனைத்து சமஸ்தானங்களும் இணைந்தன. மகாராஜா ஹரிசிங்  அவர்களும் 1947 அக்டோபர் 26 ஆம் தேதியன்று எவ்வித நிபந்தனையும் இன்றி  ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க விரும்புவதாகக்  சாசனத்தில் கையெழுத்திட்டு அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்து வந்த மவுண்ட் பாட்டன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.




முழுமையான கஷ்மீரைத்தான் மகாராஜா ஹரிசிங் நமது நாட்டுடன் இணைத்தார். அதில் பாதி கூட இன்று நம்மிடம் இல்லை. எஞ்சியுள்ள காஷ்மீரையும் தட்டிப் பறித்திட சதிகள் பல நடந்து வருகிறது. இழந்த காஷ்மீரை  மீட்டிட வேண்டும். இருக்கின்ற காஷ்மீரைக் காத்திட வேண்டும்.  அக்டோபர் 27 ஆம் தேதியன்று அதாவது அடுத்த நாளே மன்னரது கோரிக்கையை ஏற்று ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்ததாக பிரகடனம் செய்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு மாநிலமாக ஜம்மு காஷ்மீர் அறிவிக்கப்பட்டது.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மொத்த பரப்பளவு 2,22,236 சதுர கிலோ மீட்டர். 1947 இல் 83,294 ச.கி.மீ. இடத்தை ஆக்கிரமிப்பு செய்த பாகிஸ்தான் 1960 ஆம் வருடம் 5,180 ச.கி.மீ. பரப்பளவு இடத்தை சீனாவிற்குக் கொடுத்து விட்டது. தற்போது பாகிஸ்தான் வசம் 78,114 சதுர கிலோ மீட்டர் இருந்து வருகிறது.1959 ஆம் வருடம்  சீனா லடாக் பகுதியில் 42,735 ச.கி.மீ. பகுதியை ஆக்கிரமித்து  செய்தது. மேலும் பாக் கொடுத்துள்ள 5,180 ச.கி.மீ.  பகுதியை  சேர்த்தால் சீனா வசம் மொத்தம்  42,735 ச.கி.மீ. பரப்பளவு இருந்து வருகிறது. பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து ஜம்மு காஷ்மீரில் 1,20,859 ச.கி,மீ. பரப்பளவை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. மீதமுள்ள 1,02,307 ச.கி.மீ. பரப்பளவு நிலப்பகுதி  மட்டும்தான் நம்வசம்  தற்போது  இருந்து வருகின்றது.


நா.சடகோபன்

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை

மனித குலத்துக்குச் சவாலாக இருக்கும் நோய்களில் ஒன்று, புற்று நோய்! 'யாருக்கு வேண்டுமானாலும்... எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று மிரட்டிவரும் புற்று நோய்க்கு மருத்துவத் துறையின் நவீன வளர்ச்சியால் பல்வேறு சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. அதில் லேட்டஸ்ட், ரேப்பிட் ஆர்க் எனப்படும் கதிர் வீச்சு சிகிச்சை முறை. 
புற்று நோயைப் பொறுத்தவரை அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு, கீமோதெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. இதில் கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயன் அளிக்கக்கூடியது. தற்போது ஐ.எம்.ஆர்.டி. (IMRT), ஐ.ஜி.ஆர்.டி. (IGRT), எஸ்.ஆர்.டி. (SRT), வி.எம்.ஏ.டி.  (VMAT) போன்ற கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த சிகிச்சைகள் தினமும் 15 முதல் 30 நிமிடங்களுக்கு சுமார் ஆறு வாரங்கள் வரை அளிக்கப்படுகிறது. ஆனால், தற்போது வந்திருக்கும் ரேப்பிட் ஆர்க் சிகிச்சையின் மூலம் முன்பைவிட பல மடங்கு துல்லியமாகவும் வேகமாகவும் சிகிச்சை அளிக்க முடியும்.இந்த சிகிச்சையானது லினாக் இயந்திரம் மூலம் தரப்படுகிறது. புற்று நோயாளியை முதலில் சி.டி., எம்.ஆர்.ஐ. அல்லது பெட் ஸ்கேன் செய்து, புற்று நோயின் தன்மை, நிலை, பரவிய அல்லது பரவக்கூடிய இடங்கள் ஆகியவற்றைக் கண்டறிவோம். பின்னர் சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டதும், நோயாளிக்கு ரேப்பிட் ஆர்க் சிகிச்சையைத் தொடங்குவோம்.
நோயாளியை லினாக் இயந்திரத்தின் கீழே படுக்கவைப்போம். பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட கருவிகள் மூலம் உடல் அசையாமல் பிடித்துக்கொள்ளப்படும். அந்த இயந்திரத்தில் உள்ள ஸ்கேன் கருவி, நோயாளியைப் படம் பிடிக்கும். அந்தப் படத்தைக்கொண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் கண்டறியப்படும். அந்தப் பகுதிக்கு மட்டும் கதிர் வீச்சு செல்லுமாறு கம்ப்யூட்டர் மூலம் சிகிச்சை வடிவமைக்கப்படும்.கதிர் வீச்சு செல்லும் இடமும், புற்று நோய்க் கட்டி இருக்கும் இடமும் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றிலும் அதாவது 360 டிகிரி கோணத்தில் கதிர் வீச்சு செலுத்தப்படும்.முந்தைய சிகிச்சையில் ஒரே பக்கத்தில் இருந்து கதிர் வீச்சு செலுத்தப்படும். அதனால் புற்று நோய் பாதிப்புள்ள திசுவுடன் சேர்ந்து நல்ல திசுவும் ஓரளவு பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. அதனால் நோயாளிக்கு கூடுதல் பாதிப்பும் வேதனையும் ஏற்படும். ஆனால், இந்த ரேப்பிட் ஆர்க் சிகிச்சை முறையில் அந்த பாதிப்புக்கு சிறிதும் இடம் இல்லை. இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே இந்த சிகிச்சை முடிந்துவிடுகிறது.
பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது, நீண்ட நேரம் படுத்திருப்பதால் நோயாளியின் உடல் அசையவும், அதனால் நோய் இருக்கும் இடத்தைத் தாண்டி நல்ல திசுக்கள் மீதும் படுவதற்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இந்த ரேப்பிட் ஆர்க் சிகிச்சை மிகக் குறுகிய காலத்திலேயே முடிந்துவிடுவதாலும், உடல் அசையாமல் பிடித்துக் கொள்ளப்படுவ தாலும் நோயாளியின் உறுப்புகள் அசைவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. இது தவிர ஸ்கேட்டரிங் எனப்படும் கதிர் சிதறலும் மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறது. இது போன்ற காரணங்களால் நல்ல திசுக்கள் சிறிதளவும் பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.இந்த ரேப்பிட் ஆர்க் கதிர்வீச்சை, ரத்தப் புற்று நோய் தவிர்த்து மற்ற அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் அளிக்க முடியும். மற்ற கதிர்வீச்சு சிகிச்சைகளைப் போலவே இந்த சிகிச்சையும் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குத் தரப்படும். நோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் குறையவும் வாய்ப்பு உண்டு. மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக சிகிச்சை அளிக்கும் இந்த சிகிச்சையால் நோயாளிக்குப் பக்க விளைவுகள் இல்லாமல் போகிறது.
புற்று நோய் சிகிச்சை நிபுணர் சுப்ரமணியன்
வி.எஸ். மருத்துவமனை

Thursday, October 27, 2011

ராஜாவுக்குக் கல்யாணம்!


உலகில் மன்னர் ஆட்சி நடைமுறையில் இருக்கும் சில குட்டியூண்டு நாடுகளில் ஒன்று, நமது பக்கத்து நாடான பூட்டான். ஓர் அரசக் குடும்பத் திருமணத்துக்கான எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக நடந்திருக்கிறது அதன் மன்னர் ஜிக்மி கேஸர் நாம்ஜியால் வாங்சக் (Jigme Khesar Namgyel Wangchuck) திருமணம். திருமணத்துக்குப் பிற நாட்டுத் தலைவர்கள், மன்னர்கள் அழைக்கப்படவில்லை. நண்பர்களாகப் பங்கு கொண்டவர்கள் ராகுல் காந்தி, அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா இருவர் மட்டுமே. பூட்டானின் பழைய தலைநகர் புனாகாவில் இருக்கும் பரம்பரை புத்தர் கோவிலில்தான் திருமணம். மணப்பெண் இருபத்தோறு வயதான ஜெட்சன் பெமா (Jetsun Pema). 


இவர், இந்தியாவில் படித்தப் பின் தற்போது லண்டனில் படிக்கும் கல்லூரி மாணவி. ஏற்கெனவே ஆக்ஸ்போர்டிலும் அமெரிக்காவிலும் படித்தவர் என்பது ஐரோப்பிய மீடியா கசியவிடும் தகவல்.  நான்கு மணிநேரப் பிரார்த்தனைக்குப் பின் மன்னரிடம் தரப்பட்ட சிவப்புத் துணித் தொப்பியை மணமகளுக்கு அணிவித்தார். பிறகு அழைத்துச் சென்று தம் தங்கச் சிம்மாசனத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தனியாசனத்தில் அமர வைத்தார். அவ்வளவுதான், திருமணம் முடிந்தது. ஜெட்சன் பூட்டான் ராணியாகி விட்டார். வெறும் ஏழு லட்சமே மக்கள் தொகை கொண்ட, எளிமையான வாழ்க்கையில் மிக சந்தோஷமாக இருக்கும் இந்த நாட்டுக்கு, மக்கள் கேட்காமலேயே ஜனநாயக அரசை மக்களிடம் திணித்திருப்பவர் இவரது தந்தை. இதனால் இப்போது 47 உறுப்பினர்கள் கொண்ட பார்லிமெண்ட்டும் இருக்கிறது. இதில் மன்னர் தம் திருமணத்தை அறிவித்த போது, “நாட்டின் ராணியாக வரப்போகிறவர் நல்லவராகவும் மக்களின் நலம் பேணுபவராகவும் இருப்பார்” எனச் சொல்லி இருந்தார். அந்த நாளிலிருந்து மக்கள் ஆவலுடன் ராணியைக் காண காத்திருந்தனர். 

திருமணத்தை பூட்டான் முழுவதும் மக்கள் தங்கள் வீட்டுத் திருமணமாகக் கொண்டாடினர். பேப்பர் போஸ்டர்கள் கூட அனுமதியில்லாத பூட்டானில் முதல் முறையாக டிஜிட்டல் பேனர்களில் மன்னர் தம்பதியின் படம். குடும்ப விழாவாக நடைபெற்ற திருமணத்தைத் தொடர்ந்து மக்கள் கூடியிருந்த ஸ்டேடியத்தில் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மன்னரும் ராணியும், அவர்கள் முன் முத்தமிட்டுக் கொண்டது எதிர்பாராத இனிய ஆச்சர்யம். பொது இடத்தில் பெண்களைத் தொடுவது கூடத் தவறு என்று கருதப்படும் நாட்டில் மன்னரின் இந்தச் செய்கை மன்னரை ஹீரோவாகப் பார்க்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  GDP என்ற வளர்ச்சி குறியீடுபோல GHP என்பது ஒரு நாட்டு மக்களின் சந்தோஷத்தைக் குறிக்கும் குறியீடு. அதில் 148 உலக நாடுகளில் ஏழாவது இடத்திலும், ஆசியாவில் முதல் இடத்திலும் பூட்டான். அதனால்தான் மக்கள் ஆட்சி மலர்ந்திருந்தாலும் மன்னரின் திருமணத்தால் தேசமே சந்தோஷப்படுவதில் ஆச்சர்யமில்லையே.