Search This Blog

Sunday, June 22, 2014

அருள்வாக்கு - யார் நல்ல வாய் உடையவர்?


முகம் என்பது முழு மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றேதான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. 

வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது ஸமஸ்கிருத வார்த்தை. மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண - இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்தியார்த்திகளும், தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிஹாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை முகம் இல்லாதவன் என்பானாம். அவன் இவனை வாய் இல்லாதவன் என்று திருப்புவானாம்.  

பரிஹாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. Good & humoured banter என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீன மாகக் கேலி பண்ணிக் கொள்வார்கள்.

முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் என்றால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது. அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு.  

21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தனுக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸு புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ரஸாள புஷ்பம் போடணும் என்று இருக்கிறது. ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். யார் லோகத்தை முதலில் சுற்றிக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு என்று நாரதர்\ கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக்கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

1 comment:

  1. mukham kimasya kau bahoo kaavooru paadha ucheyethe

    I feel that mukam here very much denotes what is munh in hindi that is the mouth.

    For example, munhpali . the fruit.

    subbu thatha
    www.subbuthatha72.blogspot.com
    in Hindi, the thathbhava shabhd is mukh. for the face it is chehra,

    ReplyDelete