Search This Blog

Thursday, December 31, 2015

எல் நினோ

இந்த ஆண்டின் இறுதி, மறக்க முடியாத சோகத்தை அளித்திருக்கிறது. சென்னை மற்றும் கடலூர் பகுதியில், பல லட்சம் மக்களைத் தெருவில் வரவைத்தது பேய் மழை. ‘எல் நினோ’ எனும் உலக வானியல் நிகழ்வே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்த ‘எல் நினோ’-வின் காரணத்தால், வெள்ளத்தில் சென்னை மூழ்கிவிடும் என்ற பெரும் பீதி கிளம்பியது. 


‘எல் நினோ’ என்றால், ஸ்பானிஷ் மொழியில்  ‘குட்டிப் பையன்’ என்று பொருள். ‘குழந்தை ஏசு’ என்றும் பொருள்படும். தென் அமெரிக்க பசிபிக் கடலில், பெரு நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், கிறிஸ்துமஸ் நெருங்கும் சமயத்தில், வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் வெப்பமாக இருப்பதை மீனவர்கள் கண்டனர். இந்த நிகழ்வுக்கு ‘எல் நினோ’ என்று பெயர் வைத்தனர். டிசம்பரில் ஏற்படும் எல் நினோ, அடுத்த ஒன்பது மாதங்கள் நீடித்து, உலக வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

எல் நினோவுக்கும் பசிபிக் கடலின் வானிலைக் காற்றழுத்த மாற்றங்களுக்கும் தொடர்பு உள்ளது. பசிபிக் கடலின் மேற்கில், குறைவான காற்றழுத்தம் இருந்தால், எடை இல்லாத தராசுத் தட்டு மேலே செல்வது போல பசிபிக் கடலின் கிழக்கில், காற்றழுத்தம் கூடுதல் அடையும். அதேபோல, மேற்குப் பகுதியில் காற்றழுத்தம் குறைந்தால், கிழக்குப் பகுதியில் அதிகரிக்கும். ஊஞ்சல் போல அலையும் இந்த வானிலை மாற்றத்தை, தென் பகுதி அலைவு (Southern Oscillation) எனப்படும். எனவே, எல் நினோவையும் தென் பகுதி அலைவையும் சேர்த்து, ‘என்ஸோ’         (ENSO-El Nino Southern Oscillation) என்று வானிலையாளர்கள் அழைக்கின்றனர்.


எல் நினோ நிகழ்வின்போது, கிழக்கு பசிபிக் கடல் நீரோட்டத்தின் வெப்பம் அதிகரிக்க, கடல் நீர் ஆவியாவதும் அதிகரிக்கிறது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. எனவே, எல் நினோ ஏற்படும்போது, கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் மழைப் பொழிவு கூடுதல் அடைகிறது. அதிக மழைப் பொழிவால், கிழக்கு பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில், வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கக் கண்டத்தில், அதிக வெள்ளம் ஏற்படும். கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்படுவது முதல், ஆஸ்திரேலியாவில் புயல் மழை வரை இதன் விளைவுகள் அமையும்.

சரி, இந்த நிகழ்வு இந்தியாவை எப்படிப் பாதிக்கும்? எல் நினோ- என்ஸோ அலைவுக்கும், இந்திய வானிலைக்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு. எல் நினோ ஆண்டுகளில், மேற்கில் இருந்து கடல் நீர் வெப்பம் அடையத் துவங்கி, மத்திய பசிபிக் வரை வெப்பம் அடையும். பசிபிக் கடலில் குவியும் வெப்ப நீர்த்திரளின் காரணமாக, புவியின் பல பகுதிகளிலும் வானிலை வெகுவாகத் தாக்கம் பெறும். இந்தோனேஷியப் பகுதியில் அதிகரிக்கும் கடல் வெப்பம் காரணமாக, இந்திய நிலப்பரப்பின் மேலே இருந்து பசிபிக் கடல் நோக்கிக் காற்று பாயும். இதன் காரணமாக, தென் மேற்குப் பருவக் காற்று வலிமை குன்றி, இந்தியாவில் மழைப் பொழிவு குறையும்.


132 ஆண்டுகால இந்திய வானிலை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவில் வறட்சி ஏற்பட்ட ஆண்டுகள் எல்லாம் ‘எல் நினோ’ நிகழ்வு ஆண்டுகளே.  ஆயினும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எல் நினோ வில்லன் எனச் சொல்ல  முடியாது. தென்மேற்குப் பருவ மழையை, எல் நினோ கடுமையாகப் பாதித்தாலும், அதன்பின் ஏற்படும் வடகிழக்குப் பருவ மழை கிடைக்கும். எல் நினோவின் தங்கையாகிய ‘லா நினோ’ என்பது, ‘குட்டிப் பெண்’ என்று பொருள்படும். லா நினோ விளைவு, இந்திய தென் மேற்குப் பருவ மழைக்கு உதவும்.

- த.வி.வெங்கடேஸ்வரன்


1 comment:

  1. How to place a bet in a casino - DRMCD
    of your bets in a 김천 출장마사지 slot machine; if a player wins 의정부 출장안마 at the casino, they 삼척 출장샵 are able to It's easy to get 익산 출장샵 started with 창원 출장안마 the

    ReplyDelete