Search This Blog

Wednesday, February 06, 2019

மாண்டலின் சீனிவாஸ்


 வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து வாசிப்பை நிறுத்தியது வரை, தம் சின்னஞ்சிறு இசைக் கருவியால் உலக அளவில் இசை ரசிகர்களைக் கவர்ந்த இளைய தலைமுறைக் கலைஞர் ஒருவர் உண்டு என்றால் அது நிச்சயம் மாண்டலின் சீனிவாஸ்தான். இசை கேட்டு ரசிக்கத் தெரியாதவர்களையும் கவர்ந்திழுத்த தனித்துவமான இசை அது.

ஒரு டிசம்பர் கச்சேரி சீஸனில், சீனிவாஸ் வாசித்ததையும், அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன ஒரு சங்கீத வித்வான், தம் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொண்டு விரைந்து போய் மேடையில் அமர்ந்திருந்த சீனிவாஸுக்குச் சூட்டியதையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. 

கூடவே வாசிக்கும் சக பக்கவாத்தியக் கலைஞர்களிடம் அசாத்திய மரியாதை. தஞ்சாவூர் உபேந்திரன், உமையாள்புரம் சிவராமன், பாலக்காடு ரகு, விக்கு விநாயக ராம், வயலின் கன்யாகுமாரி எல்லாம் கர்நாடக இசை உலகில் சிகரம் தொட்டவர்கள். இவர்கள் சீனிவாஸுக்கு வாசிக்க வேண்டும் என்றால் அவரது திறமை எந்த உயரத்தில் இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். கற்பனை வளம் அவரிடம் கொட்டிக் கிடந்தது என்றால், அதை வழங்கும் விதம் ரசிகர்களை ஈர்த்தது. மேற்கத்திய வாத்தியமான துளியூண்டு மாண்டலினில் கமகம் வாசிப்பது இயலாது என்றார்கள். சீனிவாஸ் தம் வாசிப்பில் கமகங்களாகக் கொட்டினார். எட்டு தந்தி உள்ள மாண்டலினில் நாலைக் குறைத்தார்.

பிறகு, குருவின் ஆலோசனைப்படி ஒரு தந்தியைச் சேர்த்தார் சீனிவாஸ். அப்புறம் அவர் சொல்கிறபடி கேட்காமல் இருக்குமோ அந்த மாண்டலின்? 

எந்தக் கீர்த்தனையை எடுத்துக் கொண்டாலும், அதை இவர் வாசிக்கக் கேட்டால், அந்தக் கீர்த்தனை வரிகளை அப்படியே கூடவே பாடிக்கொண்டு வர முடியும். அத்தனை துல்லியமாக அந்தச் சொற்கள் அவர் விரல்களிலிருந்து ஒலியாக வெளிப்படும். தோடி, கல்யாணி, கீரவாணி, கல்யாணவசந்தம் என்று எடுத்துக்கொண்டால், அந்த ராகங்களில் உள்ள ரசம் அத்தனையும் பிழிந்து தந்துவிடும் கலைஞர் மாண்டலின் சீனிவாஸ். நிரவலில் ஒருமுறை வாசித்த சங்கதியையே மீண்டும் வாசிக்கக் கேட்டதாக யாரும் கூறமுடியாது. அத்தனை கற்பனை வளம்! ஸ்வரங்கள் பின்னிப் பின்னி வர்ணஜால வாணங்களாக உதிர்ந்து கொண்டே இருக்கும். கேட்கிற வருக்கு பிரமிப்பாக இருக்க, சீனிவாஸ் சிரித்தபடி அனாயாசமாக வாசிப்பது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காணும் காட்சி. குழையக் குழைய அவர் வாசிக்கும் போது, அவர் வாத்தியத்தைக் கொஞ்சுகிறாரோ என்று தோன்றும். அடுத்த கணமே சரமாரியாக சுவரங்களைக் கொட்டும்போது மாண்டலினை வேண்டுமென்றே சீண்டுகிறாரோ என்று தோன்றும்!

ஆரம்ப நாட்களில், அவரை ஒருமுறை அவரது வடபழனி வீட்டில் சந்தித்து ‘கல்கி’க்காகப் பேட்டி கண்டபோது, அவரது பயமும் பவ்யமும், தமிழ் வார்த்தைகளுக்குத் தயங்கித் தயங்கி ஒரு வார்த்தை இரண்டு வார்த்தைகளாக பதில் சொன்னதும் நினைவுக்கு வருகின்றன. அதிலும் எதிரில் அமர்ந்திருந்த தந்தையின் முகத்தைப் பார்த்து, தான் சொன்னது சரிதானா என்று சைகையாலேயே கேட்டுக்கொண்டார். அடுத்த பேட்டியின்போது சீனிவாஸிடம் பயமில்லை என்றாலும் பணிவு அப்படியே இருந்தது. ஆனால், ஆறு வருடங்களுக்கு முன், இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்மை ஆசிரியர் சேகர் குப்தாவின் ‘வாக் த டாக்’ டி.வி. நிகழ்ச்சியில் அவர் சேகர் குப்தாவுக்கு அளித்த பதில்களைக் கேட்டபோது, அந்தப் பழைய சீனிவாஸா இப்படி ஆங்கிலத்தில் சக்கைப் போடு போடுகிறார் என்ற வியப்பு உண்டானதும் உண்மை. தான் பள்ளிக்கூடம் போய்க் கல்வி கற்கவில்லையே என்ற ஆதங்கம் சீனிவாஸுக்கு இருந்தாலும், அத்தனை கச்சேரிகளுக்கும் நடுவில் சொந்தமாகக் கல்வி கற்றது வியப்பைத் தந்தது.  

ஹரிபிரசாத் சௌராசியா, ஜாகிர் உசேன் போன்ற ஹிந்துஸ்தானி மேதைகளுடன் வாசித்த மேடைகள் பல. ஆனால் அவற்றில் தம் திறமையை மட்டுமே முன்னிறுத்தி விட்டு கைதட்டலைப் பெற்றுக்கொண்டு அடக்கமாக இருந்துவிடுவார். ‘ஜுகல்பந்தி ஒன்றும் கலைஞர்களுக்கு இடையே போட்டி அல்லவே!’ என்பது அவர் கருத்து.ஃப்யூஷன் மியூசிக்கின் மூலம் கர்நாடக இசைக்கோ, வாசிப்பு முறைக்கோ கௌரவக் குறைச்சல் தந்துவிட்டதாக யாரும் சீனிவாஸைக் குற்றம் கூற முடியாது. ஜான் மெக்லாக்லின், மைக்கல் நைமேன், மற்றும் மைக்கல் ப்ரூக் போன்ற உலக இசைக் கலைஞர்களுக்கு இணையாக இடம் பிடித்து அவர்களின் வாத்தியத்தில், அவர்களே அசந்து போகும் அளவுக்கு இசை மழை பொழிந்தவர் மாண்டலின் சீனிவாஸ். அவர் வாசித்தது அத்தனையும் கர்நாடக இசையே. ஆனால் அதில் ஒரு புதுமை தெரிந்தது. ஒரு கவர்ச்சி இருந்தது. அதன் ருசியை உலகம் மொத்தமும் உணரும் அளவுக்கு எடுத்துச் செல்லும் அசாத்திய திறமை அவரிடம் இருந்தது. தான் அமர்ந்த எந்த மேடையிலும் தன் வாசிப்பை மட்டுமே முன்னிறுத்தி வெற்றி கண்டவர் சீனிவாஸ்.

No comments:

Post a Comment