Search This Blog

Thursday, April 07, 2011

வாக்களிப்பது எப்படி?

 
ஒரு குடிமகனின் மிகப் பெரிய ஜனநாயக உரிமை, ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க வாக்கு அளிப்பது. மிகப் பெரிய ஜனநாயகக் கடமையும் அதுவே. இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். இதோ அதற்கான எளிய வழிகாட்டி... 
 
முந்திச் செல்லுங்கள்  
 
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி. இதனால், கடைசி நேரக் காத்திருப்பையும் தவிர்க்கலாம்.
 
வரிசைக்கு மரியாதை  
 
வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசை யில் நில்லுங்கள். மாற்றுத்திறனாளி களுக்கும் கைக்குழந்தையைச் சுமந்து இருக்கும் பெண்களுக்கும் வாக்கு அளிப்பதில் முன்னுரிமை அளிப்பார்கள். முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். தேவையற்ற சச்சரவு களைத் தவிர்க்க இது உதவும். 
 
 
 

'நீங்கள் யார்?’ - பதற்றம் இன்றிப் பதில் அளியுங்கள் 

ஒவ்வொரு வாக்காளராகவே உள்ளே அனு மதிப்பார்கள். வாக்குச்சாவடிக்குள் நுழைந்த வுடன் முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா; அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள்தானா என்பதைப் பரிசோதிப்பார். வாக்காளர் அடையாள அட்டையையும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாளச் சீட்டையும் அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு, அவர் உங்கள் பெயரையும் வரிசை எண்ணையும் சொல்வார். இதன் மூலம், தேர்தல் முகவர்கள் உங்களின் இருப்பை அறிந்துகொள்வார்கள். அடுத்து, நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

ஒரு துளி மை - கௌரவச் சின்னம் 

நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, அவர் உங்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் அழிக்க முடியாத மையைத் தடவுவார். அதன் பிறகு,  வாக்காளர் பதிவேட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, அந்தப் பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்திடப்பட்ட அடையாளச் சீட்டை உங்களுக்குத் தருவார். அடுத்து, நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.


வாக்களிக்க அனுமதி 

நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத் தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்று விட்டீர்கள்.

இது வரலாற்றுத் தருணம் 

ஓட்டுப் போடும் இயந்திரம் இருக்கும் இடத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். ஒரு கணம் ஆழ்ந்து யோசியுங்கள். இந்த தேசத்தை வழிநடத்தும் தகுதி உடைய சரியான நபரை மனதில் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக, உங்களுக்கு நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். வேட்பாளருக்கு உரிய பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக இருக்கும் நீலப் பொத்தானை அழுத்துங்கள். 'பீப்’ ஒலி கேட்கும். அதேசமயம், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒரு முறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது.

யாருக்கு ஓட்டு... சொன்னால் குற்றம் 

நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமான ரகசியம். வாக்குச்சாவடிக் குள் நின்றுகொண்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால், உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வாக்களிப்பதைப் படம் எடுப்பதும் கூடாது!

உங்களுக்கு ஓட்டு இருக்கிறதா - எப்படித் தெரியும்? 

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் ஓட்டு இருக்கும். மார்ச் 16-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கும்கூட வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு, தேர்தல்ஆணையம் அடையாள அட்டைகளை அனுப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையமே அடையாளச் சீட்டுகளை வீடுகள்தோறும் விநியோகிக்கிறது. அடையாளச் சீட்டு உங்களைத் தேடி வந்தால், ஓட்டு இருக்கிறது என்று அர்த்தம். இல்லையென்றால், வாக்குச்சாவடிக்குப் போய் உறுதிசெய்துகொள்ளுங்கள்!

'49 ஓ’ போடுவது எப்படி? 

நீங்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் அதிருப்தியைப் பதிவுசெய்யச் சட்டம் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஓட்டு அளிக்க விரும்பவில்லை எனில், உடனே அதை வாக்குச்சாவடித் தலைமை அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர் உங்க ளிடம் இருந்து வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொண்டு, 'இவர் ஓட்டளிக்க விரும்பவில்லை’ என்று தனியே ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்வார். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இப்போது நீங்கள் '49 ஓ’ போட்டுவிட்டீர்கள்!

பட்டியலில் பெயர் இருக்கிறது; அடையாள அட்டை இல்லை - என்ன செய்யலாம்? 

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், கவலை வேண்டாம். தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டு உங்களிடம் இருந்தால்போதும். தாராளமாக ஓட்டுப் போடலாம். அதுவும் இல்லையென்றால், நீங்கள் ஓட்டுப் போட முடியாது.

பட்டியலில் பெயர் இருக்கிறது; ஆனால், உங்கள் படம் இல்லை - என்ன செய்யலாம்? 

சிலருக்கு இந்தப் பிரச்னை வரலாம். அதாவது, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும். ஆனால், உங்கள் படம் இருக் காது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டும் இல்லை என்றால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் எதையாவது ஒன்றைச் சான்றாகக் காட்டி ஓட்டுப் போடலாம். குடும்ப அட்டைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 உங்கள் மீது சந்தேகப்பட்டால், என்ன செய்வது? 

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று வாக்குச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால், என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்... இப்படிச் சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில் நீங்கள் வாக்களிப்பது 'சவாலுக்குரிய ஓட்டு’!

உங்கள் பெயரில் ஏற்கெனவே மற்றொருவர் வாக்களித்து இருந்தால், என்ன செய்வது?

முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால், அதை உடனே வாக்குச்சாவடித் தலைமை அலுவலரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் வாக்களித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக்கொள்வார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... நீங்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க முடியாது. ஏதாவது விசேஷக் காரணங்கள் இருந்தால் தவிர, உங்கள் ஓட்டு கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படாது!

உங்களுக்கு யாராவது பணம் கொடுக்க முற் பட்டால், மிரட்டி ஓட்டு கேட்டால், வாக்களிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், யாரிடம் முறையிடுவது? 

காவல் துறையினரிடம் முறையிடலாம். தலைமைத் தேர்தல் அலுவலர், தொகுதி அளவில், வாக்குப் பதிவு அலுவலர்... வட்ட அளவில், துணைத் தேர்தல் அலுவலர்... தொகுதி அளவில், தேர்தல் அலுவலர்.., மாவட்ட அளவில், மாவட்டத் தேர்தல் அலுவலர்... மாநில அளவில், தலைமைத்தேர்தல் அதிகாரி, தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை நீங்கள் அணுகலாம்!


 

Wednesday, April 06, 2011

நாம் எப்போது மாறப் போகிறோம் ..??


நாம்  எப்போது  மாறப்  போகிறோம் ..??

கிரிக்கெட் world cup இறுதிப்  போட்டியில்  வென்றாகி  விட்டது..முடிந்த வரை சாலையில் சத்தம் போட்டாகி விட்டது .போதாக்குறைக்கு மூன்று  நண்பர்களைப் பின்னால் உட்கார வைத்து அதிவேகமாய் bike ஓட்டியாகி விட்டது...
 
10000-wala சரவெடி போட்டு தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்களையும், குழந்தைகளையும் எழுப்பி விட்டுவிட்டோம்...இறுதியில் ரெண்டு beer  குடித்து  விட்டு  உறக்கம்...
 
மறுநாள் ..??? மற்றொரு கொண்டாட்டத்திற்கு காத்திருக்கத் தொடங்கிவிடுவோம் ???
நாம் உருவாக்கி இருப்பது உண்மையிலேயே ஒரு ஆரோக்கியமான சமுதாயம் தானா..???
 
கிரிக்கெட்-ல் இருந்த ஒரே ஒரு ஒற்றுமையைக் குலைக்கக் கூட இதோ IPL வந்துவிட்டது..இது வரை பாகிஸ்தானை எதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்த நாம் இனி பெங்களுருவையும், பஞ்சாபையும், கல்கத்தாவையும் எதிரியாகப் பார்க்கத் தொடங்கிவிடுவோம்..நம் ஒற்றுமை, சந்தோசம் எல்லாம் கிரிக்கெட்டை கொண்டாடுவதிலும், புத்தாண்டைக் கொண்டாடுவதிலும் தான் இருக்கிறது (முடிந்த வரை மற்றவருக்கு தொல்லை கொடுத்து விட்டு..)
 
 
கங்குலி ஒரு விளையாட்டில் சரியாக ஆடவில்லை என்று கல்லெறிகிற கூட்டம் என்றாவது சுரேஷ்  கல்மாடியின் வீட்டிலோ, spectrum ஊழலுக்கு உடந்தையாக இருந்த ராஜா-வின் வீட்டிலோ கல்லெறிந்திருக்கிறதா??? இல்லை NDTV-யில் Nehra-வுக்கு கடைசி over கொடுத்து விட்டார் Dhoni என்று கொதித்துப் பேசும் அளவிற்குக் கூட யாரும் கோபம் அடைவதில்லை..ஒரு கிரிக்கெட் வீரரின் வீட்டில் கல்லெறியும் நாம், நமக்கோ நம் உடமைக்கோ பாதிப்பு வரும் என்று கருதி நமக்கு எதற்கு அரசியல் என்று ஒதுங்கி விட்டோம்..நமக்கு எப்போது தான் ரோசம் வருமோ...
 
அதற்காக நான் ஒன்றும் வீதியில் இறங்கிப் போராட சொல்லவில்லை .. நமக்கு நாமே உண்மையாக இருக்கிறோமா என்று தான் நினைக்கிறன். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க விடுப்பு எடுக்கும் நாம் தேர்தல் நாளன்று ஓட்டுப் போடப் போவதில்லை.
 
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஊழல் செய்கிறார்கள் என்று சொல்லும் நம்மில் எத்தானை பேர் ஒழுங்காக இருக்கிறோம்.. எத்தனை  தடவை சாலை விதிகளை மீறி இருக்கிறோம், சரியான தேதியில் வாகனக் காப்பீடு விண்ணப்பித்து இருக்கிறோமா? சமயத்தில் வாகனக் காப்பீடு இல்லாமல் போலீஸ்-க்கு லஞ்சம் கொடுத்து வருகிறோம்..நம்மில் இங்கு எத்தனை பேருக்கு இரு சக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் எடுக்கும் விதிமுறைகள் தெரியும்?? பெரும்பாலானோர் ஓட்டுனர் பயிற்சி நிறுவனத்தின் ஏஜெண்டுக்கு பணம் கொடுத்து தான் லைசென்ஸ் வாங்குகிறோம்.. எத்தனை பேர் உண்மையான விலைக்கு நிலத்தையோ/வீட்டையோ பதிவு செய்கிறோம்..?? எப்போது முழுமையான நேர்மையுடன் இருக்கப் போகிறோம்.?? நாம் மாறும் வரை, கேள்வி கேட்க தொடங்கும் வரை அனைத்து அலட்சியங்களும், லஞ்சங்களும் இருக்கும், முன்பை விட அதிகமாய் இருக்கும்..ஆனால் எப்போது மாறப் போகிறோம்.??

மகாத்மா காந்தி சொன்னது.: "Be the change what you want to see"

"மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்"
  
 
மணிகண்டன்

Tuesday, April 05, 2011

கிரிக்கெட் யுத்தம்


இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கப்படுகிறதா? ஆரம்ப காலத்திலிருந்தே இந்த இரு அணிகளும் மோதும் போட்டி பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கப்படுவது வழக்கம்.அண்மைக்காலமாக, அது ஒரு போர்போல சித்திரிக்கப்பட்டு, ஏறக்குறைய இருநாட்டையும் சேர்ந்த பெரும்பாலான ரசிகர்களும் அந்த மனநிலைக்கே வந்துவிட்டனர்.

விளையாட்டு என்பது ஒற்றுமை உணர்வை வளர்க்கத்தானே தவிர, வேற்றுமையை விதைக்க அல்ல. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தால் அந்தப் போட்டியின் நோக்கமே மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது. 


பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியும் அதை நிரூபித்தது. அந்தப் போட்டி நடந்த தினத்தன்று பாகிஸ்தானில் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலும் தில்லி உள்பட சில மாநிலங்களில் அரைநாள் விடுமுறையை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன.கிரிக்கெட் ஜுரத்தால் தனியார் அலுவலகங்களில் வேலையே நடக்கவில்லை. மாணவர்கள் படிப்பில் கவனமின்றி தொலைக்காட்சியே கதியெனக் கிடந்தனர். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பான நேரத்தில் தேர்தல் பிரசாரத்துக்குப்போன தலைவர்களைப் பார்க்கக்கூட கூட்டமில்லையாம்!

மத்தியப் பிரதேசத்தில் மின்தடையின்றி ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதற்காக அந்த மாநில அரசு 1.80 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியதாம். இந்தியாவுடனான போட்டியில் வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு அறிவித்தது. இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவை வீழ்த்தினால் போதுமாம்.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் முக்கியமான ஒன்று. அதுவும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இரு நாட்டு அணிகளும் மோதுவது பெரிய விஷயம்தான். அதற்காக அரசாங்கமே அரைநாள் விடுப்பு அறிவிக்கும் அளவு அத்தனை முக்கியத்துவம் அதில் இருக்கிறதா?


மேலும், அந்த நாளில் இரு நாடுகளிலும் முக்கியமான நகரங்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதுபோல ஆள்நடமாட்டமே இன்றி வெறிச்சோடி இருந்தனவாம். கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து அதில் ஒன்றுமேயில்லை. ஆனால், அந்தப் போட்டியில் வெற்றிபெறுவது இரு நாடுகளின் கௌரவம் சார்ந்த விஷயமாக ஆக்கப்பட்டுவிட்டது.இரு அணி வீரர்களையும் இந்த அழுத்தம் வேறு மாதிரி பாதித்துள்ளது. "இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே "டபுள் பிரஷர்' இருப்பது வழக்கம்தான்' என்கிறார் இந்திய அணியின் ஹர்பஜன் சிங். இரு அணி கேப்டன்களுக்கும் இந்தப் போட்டியில் வெல்வது என்பது உணர்வுபூர்வமான விஷயமாகிவிட்டது.

போட்டியில் வென்றுவிட்டால் பாராட்டு மழை; தோற்றுப்போனால் நாட்டின் மானத்தையே அடகுவைத்தாற்போன்ற அவச்சொல். ஒரு விளையாட்டுப் போட்டியின் வெற்றி தோல்வியில்தான் ஒரு நாட்டின் மானமே அடங்கியிருக்கிறதா? இதுதவிர, போட்டியில் ஏதாவது ஒரு வீரரின் செயல்பாடு மோசமாக இருந்தால், அந்த வீரரின் நேர்மையையே சந்தேகிக்க வேண்டிய சூழலை இந்த கிரிக்கெட் போட்டி ஏற்படுத்திவிட்டது.  


இந்தப் போட்டியைக் காண இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி நேரில் வந்திருந்து போட்டியை இந்திய பிரதமருடன் அமர்ந்து பார்த்தார்.இரு நாடுகளின் உறவை மேம்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் கிரிக்கெட் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டார் என ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. "இந்தச் சந்திப்பால் உடனடி பலன் கிடைத்துவிடப் போவதில்லை; இருப்பினும் இரு நாடுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இருந்த தயக்கங்கள் குறைந்துவிட்டன' என பாகிஸ்தான் பத்திரிகைகள் எழுதுகின்றன. இது எந்த அளவுக்குச் சரி?

எத்தனையோ முறை கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ள பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயக்கத்தை இந்த கிரிக்கெட் போட்டிதானா தகர்த்துவிடும்? இதெல்லாம் ஊடகங்கள் தோற்றுவிக்கும் மாயபிம்பங்கள்.  

மேலும், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெறும் நாள்களில் எல்லாம் இரு நாடுகளிலுமே தொழில்துறையில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இதுபோதாது என்று, மொஹாலியில் நடந்த அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோற்றுப்போனதும் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். எத்தகைய மோசமான செயல் இது. பாகிஸ்தான் எத்தனையோ அணிகளிடம் தோற்கத்தான் செய்கிறது? ஆனால், இந்திய அணியிடம் தோற்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதாம். 

இரு நாட்டு ரசிகர்களையும் வசப்படுத்துகிற கிரிக்கெட் உண்மையிலேயே நல்ல விஷயம்தான். ஆனால், வசப்படுத்திய ரசிகர்களை வெறிபிடிக்க வைக்கக்கூடாது. கிரிக்கெட்டை ரசியுங்கள், மகிழுங்கள். அது ஒரு விளையாட்டுதானன்றி யுத்தம் அல்ல. 


Sunday, April 03, 2011

கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் இங்கே..பதில் எங்கே? - ஓ பக்கங்கள்,ஞாநி


கலைஞர் கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் நீங்கள் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளை எழுதி அனுப்புங்கள் என்று என் இணைய தள வாசகர்களைக் கேட்டிருந்தேன். நூற்றுக்கணக்கில் கேள்விகள் வந்து குவிந்துவிட்டன. அவற் றிலிருந்து தொகுத்து சில கேள்விகளை இங்கே நாகரிகமான மொழியில் தந்திருக்கிறேன். 

இப்போதைய ஆளும்கட்சி என்பதால் கருணாநிதிக்கு 20 கேள்விகள். ஜெயலலிதாவுக்கு 15 கேள்விகள். இருவருக்கும் பொதுவாக 8 கேள்விகள். பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட சளைக்காத இருவரும், இந்தக் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன். 


ஜெயலலிதாவுக்கு: 


1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?


2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் ?


3.யாருமே நெருங்க முடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களைச் சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாகத் தனியே வாழ வேண்டியதுதானே?


4. அ.தி.மு.க.வை சசிகலா குடும்பம்தான் ஆக்கிரமித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற ஏதாவது திட்டம் உண்டா?


5. கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் இஷ்டப்படி கூட்டணிகளை உடைப்பது உங்கள் வழக்கம். இந்த அணுகுமுறை மாறுமா?


6. இலவசங்கள் தவிர, உங்கள் பத்தாண்டு ஆட்சியில் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் தொடர்பாக ஏதாவது உருப்படியான நடவடிக்கைகள் செய்தது உண்டா?


7. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து எத்தனை போராட்டங்களை நீங்கள் தலைமை ஏற்று நடத்தினீர்கள்? 


8. ஒரு பெண்ணாக இருந்தும் ஏன் பெண்களுக்கு 33 சதவிகித சீட் தரவில்லை?


9. சக மனிதனை - பெண்ணாக / ஆணாக இருந்தாலும் - காலில் விழச் செய்து புகைப்படம் எடுத்து வெளியிடும், அருவருப்பான கலாசாரத்தை / மன நிலையை எப்போது விடப் போகிறீர்கள்?


10. காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் எவ்வாறு திசை திருப்பப்பட்டது? அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?


11. மாதம் முழுவதும் கூலி வேலை செய்யும் வயது வந்த பெண்களின் வலி உங்களுக்குத் தெரியுமா? பள்ளி / ரேஷன் கடை மூலம் வயது வந்த ஏழைப் பெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக (அ) குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த சிந்திக்காதது ஏன் ?


12. மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கும் இலவசங்களை தி.மு.க.வுக்குப் போட்டியாக நீங்களும் அறிவிப்பது ஏன்?


13. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது மக்களைத் திரட்டிப் போராடி ஈழ பொதுமக்களைக் காப்பாற்ற முயலாதது ஏன்?


14. (மக்களின் உணர்வு அறிந்தும்) இனியாவது ஊழலற்ற ஆட்சி தருவேன் என்ற உறுதிமொழி உங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாமல் போனது ஏன்?


15. கருணாநிதி குடும்ப அரசியலை இவ்வளவு வசைபாடும் நீங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு இருக்காது என உறுதி கூற முடியுமா? 


கருணாநிதிக்கு: 


1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?


2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?


3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா? 


4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?


5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?


6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?


7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?


8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப் பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?


9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?


10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?


11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்? 


12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?


13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?


14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்? 


15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்? 


16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?


17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?


18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி? 


19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா? 


20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை? 

இருவருக்கும்:


1. விவசாயம் லாபமில்லாத் தொழிலாகப் போய்விட்டது. தனியார் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. அவை சில காலம் கழித்து, பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாயக் கூலியும், இடுபொருட்கள் செலவும் அதிகரித்துவிட்டன. விவசாய விளைபொருட்களின் விலையை விவசாயி தீர்மானிக்க முடியவில்லை. பதுக்கல் வியாபாரிகளே அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?


2. முன்பெல்லாம் உள்கட்டமைப்பு மூலதனச் செலவுகளுக்குப் பட்ஜெட்டிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது உலக வங்கியிலிருந்தும், நபார்டிலிருந்தும் கடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. இது ஒரு நல்ல போக்கா?


3. பத்திரப் பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை இந்த நான்கு துறைகளில்தான் அதிகம் லஞ்சம் புழங்குகிறது. இதைக் கணிசமாகக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?


4. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ?


5. சட்டமன்றத்தில் ஜால்ரா பேச்சுகளை அடியோடு ஒழித்துவிட்டு அசல் பிரச்னைகளைப் பற்றி ஆழமான விவாதங்களை நடக்கச் செய்யாமல் உங்கள் கட்சியினரைக் கெடுத்து வைத்திருப்பதை எப்போது மாற்றுவீர்கள்?


6. தலைமையை வைத்துத்தான் தொண்டர்கள் இருப்பார்கள். அப்பழுக்கற்ற அரசியல்வாதி, கண்ணியமான அரசியல்வாதி என்ற நற்பெயரைச் சம்பாதிக்க ஏன் இதுவரை முயற்சிக்கவில்லை?


7. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு மதுக்கடைகள் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி உங்களுக்கு அக்கறையே கிடையாதா?

8. இவ்வளவு தவறையும் பண்ணிவிட்டு மறுபடியும் மறுபடியும் மக்கள் முன்னாடி வந்து நிற்பதற்கு உங்களால் எப்படி முடிகிறது?


 ஓட்டளிக்கும் முன் யோசித்து முடிவு செய்யுங்கள் ..


Saturday, April 02, 2011

தள்ளிப்போகுமா தேர்தல்?


சொத்துப் பட்டியல்

தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.

கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1.50 கோடியாக இருந்த ஸ்டாலின் சொத்து 2.11 கோடியாக ஆகியிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.

நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 20.78 லட்சமாக இருந்த சுரேஷ் ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய பரிதி இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு காட்டி இருக்கிறார். வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியது.

**********************************************************************************

''ஏப்ரல் 11-ம் தேதி போலீஸாருக்குத் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்​படும். அதற்காக, அன்றைய தினம் சுமார் ஐந்து மணி நேரமாவது அனைத்து போலீஸாரும் அந்தந்தத் தலைமையகங்களில் கூடவேண்டி இருக்கும். அந்த நேரத்தில் கவர்களைக் கொண்டுபோய் சேர்க்கப்போவதாவும் செய்தி இருக்கிறது!''

பணப் பட்டுவாடா விவகாரங்களைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வரும் மாநிலத் தேர்தல் ஆணையம்,  கலவரத்தை ஏற்படுத்தி பணம் கொடுக்கும் சதி வேலைகள்  நடந்தால்,  தேர்தலையே ஒத்திவைக்கச் சொல்லி சிபாரிசு செய்யவும் தயாராக இருப்பதாகத் தகவல்!

***********************************************************************************

கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அகாடமி!

துணை முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதிக்​குப் பதிலாக  கொளத்தூரில் போட்டியிடப் போகிறார் எனத் தெரிந்த உடனேயே, அவருக்கு சரியான போட்டியாக போயஸ் கார்ட​னில் விவாதிக்கப்பட்ட பெயர்... சைதை துரைசாமி. எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. புள்ளிகள் பலரும் தி.மு.க-​வின் தூண்டிலுக்குத் துண்டைப் பறிகொடுத்துவிட்ட நிலையில்... மிச்சம் இருக்கும் சிலரில் குறிப்பிடத்தக்கவர் சைதை துரைசாமி.  எளிமையும் உதவும் குணமும் கொண்ட வித்தியாச அரசியல்வாதி!

***********************************************************************************************************
''தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு​விட்டால், எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்​தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே,  நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது!'' என்று நீதிபதிகள் சொல்லி இருப்பது ஆளும் கட்சித் தரப்பை மிரளவைத்துள்ளது!

***********************************************************************************************************