Search This Blog

Saturday, April 16, 2011

மூக்கில் இரத்தம் வடிந்தால்...!

மூக்கில் அடிபட்டால் இரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வடிவதுண்டு. இதற்குச் ‘சில்லுமூக்கு’ என்று பெயர். ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்‘ (Epistaxis). 

மூக்கு ஒரு தொட்டாச்சிணுங்கி!

மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானது போல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப்பக்கம் தெரிகின்ற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. அந்தப் பகுதிக்கு ‘மூக்குப் பெட்டகம்’ (Nasal Box) என்று பெயர். இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளி லிருந்து மிக நுண்ணிய இரத்தக்குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா’ (Little's Area) என்று பெயர். இது தொட்டாச்சிணுங்கி பகுதி. லேசாக சீண்டப்பட்டால்கூட மூக்கி லிருந்து இரத்தம் கொட்டிவிடும். மூக்கிலிருந்து இரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்.


என்ன காரணம்?

மூக்கிலிருந்து இரத்தம் வடிவதற்கு, விபத்துகளில் அடிபடுவது, மூக்கைப் பலமாகச் சிந்துவது போன்ற சாதாரண காரணங்களில் தொடங்கி, மூக்கில் ஏற்படும் கட்டி மற்றும் புற்றுநோய் போன்ற பெரிய அளவு காரணங்களும் இருக்கின்றன.

சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக் கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத் தன்மை காணப்படும். இதனால் மூக்கில் வெடிப்புகள் தோன்றும். அப்போது மூக்கிலிருந்து இரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தம் வரலாம்.

மூக்கில் சதை வளர்ச்சி!

மூக்கில் ‘நீர்க்கோப்புச் சதை’ (Nasal Polyp) வளர்கின்ற வாய்ப்பு குழந்தைகளுக்கே அதிகம். தவிர, மூக்கும் தொண் டையும் இணைகின்ற பகுதியில் ‘அண்ணச்சதை’ (Adenoid) வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக் கொள்ளும். அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும்.

வினையாகும் விளையாட்டு!

குழந்தைகள் விளையாட்டாக குச்சி, பேப்பர் துண்டு, ரப்பர் துண்டு, பலப்பம், பஞ்சு, பயறு, பொத்தான், நிலக்கடலை, பருத்தி விதை, ஆமணக்கு விதை, வேப்பமுத்து, பிளாஸ்டிக் பொருள்கள் முதலிய அந்நியப்பொருள்களை மூக் கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அப்புண்ணிலிருந்து இரத்தம் கசியும்.


வெப்பமான சூழல் ஒரு காரணம்!

மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித் தால், மூக்கில் இரத்தம் வடியும். கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசிக்க நேரிட் டால், மூக்கில் இரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் இரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.

நோய்களும் காரணமாகலாம்!

ஒவ்வாமை, தடுமம், மூக்குச்சளி, மூக்குத்தண்டு கோளாறு, காசநோய், தொழுநோய், காளான்நோய், புற்று நோய்க் கட்டி, ‘ஹீமோபிலியா’ போன்ற இரத்த உறைவுக் கோளாறுகள், சைனஸ் பிரச்சனை, டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைட்டமின் சி மற்றும் வைட் டமின் கே சத்துக்குறைவு, இரத்தசோகை, கபாலக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்பிரின் போன்ற மருந் துகள் ஆகிய பல காரணங்களாலும் மூக்கு வழியாக இரத்தம் வடியலாம். 

என்ன முதலுதவி செய்வது?

* பாதிக்கப்பட்ட குழந்தையை லேசாகத் தலையைக் குனிந்து கொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.

* இப்போது மூக்கின் இரண்டு துவா ரங்களையும் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இரத்தம் வடிவது நின்றுவிடும்.

* மூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக இரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் இரத்தத்தைத் துப்பச் செய்யுங்கள்.

* இந்த முயற்சியில் இரத்தம் நிற்கவில்லை என்றால், அடுத்த வழி இது: குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கி எடுத்துப் பிழிந்து கொண்டு, மூக் கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.

* ஐஸ் கட்டி கைவசமிருந்தால் அதனையும் மூக்கின் மீதும், மூக்குக்கு இரு பக்கங்களிலும் வைக்கலாம். 

* பஞ்சு அல்லது சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, திரி போல் செய்து, மூக்கினுள் அழுத் தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம். 

* அப்படியும் இரத்தக்கசிவு நிற்க வில்லை என்றால், இரத்தக்கசிவு மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று பொருள். அதற்கு மருத்துவர் உதவியை நாடுங்கள்.

என்ன செய்யக் கூடாது?

* எந்தக் காரணத்தைக் கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.

* விரலை நுழைத்து அடைக்கக் கூடாது.

* மூக்கிலிருந்து இரத்தம் வடியும் போது, தலையை நிமிர்த்தக் கூடாது. காரணம், மூக்கிலிருந்து இரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.

* மருத்துவர் சொல்லாமல் எந்த சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள். 


பாதுகாப்புக்கு 10 வழிகள்! 

* குளிக்கும்போது தினமும் மூக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* தேவையில்லாமல் மூக்கைக் குடை யக்கூடாது

* மூக்குக்குள் குச்சி, ரப்பர் போன்ற அந்நியப் பொருள்களைப் போடக் கூடாது. 

* மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதும், மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதும் கூடாது.

* அதிக வெப்பச்சூழல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். 

* ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.

* அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படுமானால், ‘உடல் சூடு.... சில்லுமூக்கு உடைஞ்சிருக்கு’ என்று சொல்லி, சும்மா இருக்கக்கூடாது. காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.

* குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் யோசனைப்படி மூக்குச் சொட்டு மருந்து விடலாம்.

* சத்துள்ள உணவுகளைத் தினமும் சாப்பிட்டு, சத்துக்குறைவு நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

* அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தால், உயர் இரத்த அழுத்தம் உள்ளதா என்று சோதித்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.

டாக்டர் கு.கணேசன்


Friday, April 15, 2011

தெரிந்து கொள்ளுங்கள் ..

அன்றாடம் பயன்படும் மற்றும் கேள்வி பட்ட கருவிகளின் அறிவியல் விளக்கங்களை இங்கு பார்போம்.

பால் ஏன் பொங்குகிறது? 


 தண்ணீரைப் போல பால் என்பது ஓர் எளிய திரவம் கிடையாது. வேதியலில் பாலை ஒரு கொலாட் (colloid) என்பார்கள். அதாவது அதில் பல பொருள்கள் இணைந்து காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை புரதம் மற்றும் கொழுப்பு.தண்ணீரைப் போல பால் என்பது ஓர் எளிய திரவம் கிடையாது. வேதியலில் பாலை ஒரு கொலாட் (colloid) என்பார்கள். அதாவது அதில் பல பொருள்கள் இணைந்து காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை புரதம் மற்றும் கொழுப்பு.

பால் என்றால் அதில் தண்ணீர் கலந்துதான் இருக்கும். பால்காரர் சாமர்த்தியமாக கலக்கும் தண்ணீரை சொல்லவில்லை. இயல்பாகவே பாலில் நீர்சத்து உண்டு. பால் காச்சப்படும்போது வெப்பம் மெல்ல மெல்ல அதிகமாகிறது. அப்படி அதிகமாகும்போது தண்ணீரில் ஒரு பகுதி நீராவியாக மாறி மேற்புறத்தை அடைகிறது. அங்கே சிறுசிறு குமிழ்களாக மாறி வெடிக்கின்றன. 

படலம் முழுமையாகப் பரவாதபோதோ, மிக மெலிதாகவோ இருந்தால் இந்த நீராவி வெளியேறிவிடுகிறது. படலம் நன்கு முழுவதுமாகப் பரவி விட்டிருந்தால், கீழே கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் நீராவி ஒரு கட்டத்தில் அந்தப் படலத்தை மேலே தள்ளுகிறது. அதாவது பால் பொங்குகிறது. 

பேஸ்மேக்கர் கருவியைப் பொதுவாக உடலின் எந்தப் பகுதியில் பொருத்துவார்கள்? 


பேஸ்மேக்கர் என்பது ஒரு மின்கருவி. இதயம் தானாக சரியாகத் துடிக்காதபோது பேஸ்மேக்கர் அதைத் துடிக்க வைக்கும்.சிலர் எண்ணுவதுபோல் பேஸ்மேக்கர் இதயத்தினுள்ளாகவோ இதயத்துக்கு வெகு அருகிலோ பொருத்தப்படுவதில்லை. உடலின் முன்புறத்தில் தோள்பட்டையில் காலர் எலும்புக்குக் கீழே தோலுக்குள் பொருத்தப்படுகிறது. அங்கிருந்து ஒரு ஒயர் இதயப் பகுதிக்குச் செல்லும். 

(உலோகத்தால் செயப்பட்டது பேஸ்மேக்கர். நம் உடல் எந்த வெளிப்பொருளையும் ஏற்காது எனும்போது பேஸ்மேக்கரை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறது? பேஸ்மேக்கர் கிருமி நீக்கம் செயப்பட்டது. நன்கு சீல் செயப்பட்டிருப்பதால் உள்ளிருந்தும் எதுவும் வெளியேறாது. திசுக்களிலிருந்தும் அதற்குள் எதுவும் புக முடியாது. என்றாலும் இது ஒரு வெளிப்பொருள் என்பதால் அதைச் சுற்றிலும் ஒரு திசுப் படலம் உருவாகும்).  

ப்ளாஸ்டிக் சர்ஜரியில் எந்த வகை ப்ளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது? 

ப்ளாஸ்டிக் சர்ஜரியில் ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. பின் எதற்காக இந்தப் பெயர்? கிரேக்க மொழியில் ப்ளாஸ்டிக் என்றால் TO MOLD அதாவது ‘அச்சில் வார்த்தல் அல்லது ஒழுங்கமைத்தல்’ என்று பொருள். அதனால்தான் இதை ப்ளாஸ்டிக் சர்ஜரி என்கிறார்கள். 

குறிப்பு :

எதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் ..


நான் இந்த வலை தளம் ஆரம்பித்ததின் நோக்கம் நான் படித்தவற்றை  முகம் அறிந்த மற்றும் முகம் அறியா நபர்கள் படித்து தெரிந்து கொள்ள தான். என்னால் நாலு பேருக்கு நாட்டு நடப்பு தெரியுது ஒரு சின்ன சந்தோசம் .  நான் படித்த  சில விசயங்களை கூறுகிறேன். 

இது தப்பா???

எனக்கு நான் செய்யும் வேலையை பற்றி யோசிக்க நேரம் இல்லை.. உங்களுக்கு பிடித்து இருந்தால் வாசியுங்கள்.. இல்லை என்றால் உங்கள் வேலையே பார்த்து கொண்டு போங்கள். நான் யாரையும் கட்டாய படுத்தி வாசிக்க சொல்ல வில்லை என்பதை இங்கே தாழ்மையுடன் பதிவு செய்கிறேன் ..

Thursday, April 14, 2011

மெரினாவுக்கு ஆபத்து!

சென்னை...

உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை!தலைநகரத்தில் அனைவருக்கும் பிடித்த தலம்... மெரினா.காற்று வாங்கி, காலார நடந்து, கடலை போட்டு, காதல் செய்து, கடலோடு விளையாடி, ஜாலியாக அலையாடி, மணல் வீடு, தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் ருசித்து, உறவுகள், நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி என நீளும் சந்தோஷங்கள் இனி இருக்குமா என்பது சந்தேகம். காரணம், 'எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் வே’!


சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் 'எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் வே’, அதாவது உயர் மட்டப் பாலங்கள் அமைக்கும் திட்டம் பரபரப்பாக நடக்கின்றது. 'போக்குவரத்தைச் சீர்படுத்த’ என்பது இந்தப் பாலங்கள் கட்டப்படு வதற்கான காரணம். ஆனால், அதன் பாதகப் பின் விளைவுகள் உணர்ந்தும், அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது அதிகார வர்க்கம். இந்த உயர் மட்டப் பாலங்கள் திட்டத்தில் அதிக அளவு பாதிப்புகளைத் தரக் கூடியவை என மூன்றினை அடையாளம் காட்டுகிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

அவை - மெரினா முதல் கொட்டிவாக்கம் வரை செல்லும் பாலம், துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்லும் பாலம் மற்றும் அடையாறு அதிவேக வெளி வட்டப் பாலம் ஆகியவை. 

இந்தத் திட்டத்தால், அதிக அளவில் பாதிக் கப்படுவது மெரினா முதல் கொட்டிவாக்கம் வரையுள்ள பாலம் அமைக்கும் திட்டம்தான். 10 வருடங்களுக்கு முந்தைய ஆய்வு ஒன்று, மனிதர்களின் பிறப்பு விகிதத்தைக் காட்டிலும் தினமும் புதிதாக சாலை யைத் தொடும் வாகனங் களின் எண்ணிக்கை ஆறு சதவிகிதம் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தது. இந்த 10 வருடங்களில் அந்த நிலைமை இன்னும் ஏகத் துக்கும் அதிகரித்து இருக்கும். ஆக, பிரச்னையின் ஆணிவேர், அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்துதான்.

எலியைக் கொல்ல வீட்டை எரித்த கதையாக, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உயர் மட்டப் பாலங்களைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம்!'சென்னையின் ஆணிவேரையே அசைக் கும் இந்தத் திட்டத்தின் விபரீதம் குறித்து இப்போதாவது அரசு உணருமா?

விகடன் 

சிட்டுக்குருவி


உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 அன்று சந்தடியின்றி கடந்து சென்று விட்டது. ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது? காரணம் இருக்கிறது. உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.சிட்டுக்குருவிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் அதன் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் தான் இந்த நாள் உலக சிட்டுக்குருவிகள் நாளாக 2010-ம் ஆண்டிலிருந்து மார்ச் 20 அன்று நினைவுறுத்தப்படுகிறது.


மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான்.உலகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தன் வீட்டில் சிட்டுக்குருவிக் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.


உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது.முதன்முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் நியூயார்க் நகரங்களில் 1851, 52-ம் ஆண்டுகளில் இவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அதற்கு முக்கிய காரணம், அவைகள் பூச்சியினங்களைப் பிடித்துச் சாப்பிட்டு, உணவுத் தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், உண்மையில் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்ட மட்டுமே அவைகள் பூச்சிகளைப் பிடித்து வருகின்றன.


பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.

பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.மனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன.


சிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு. இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி , புடைத்து உணவு சமைக்க உதவுவாள் அன்றைய பாட்டி. இன்றைய பாட்டி கருணை இல்லங்களில் அடைக்கலமானதால் இன்று பாட்டியும் இல்லை. முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை.   

இரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். நமது வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள செடிகளையெல்லாம் அழித்து கான்கிரீட் காம்பவுண்டுகளாக மாறிவிட்ட நகரச்சுழலில் எங்கே புதர்ச் செடிகளையும், உயிர் வேலிகளையும் காண முடிகிறது?அதையும் மீறி இப்போது நகரங்களில் காணப்படும் தோட்டங்களில் அழகுச்செடிகள் என்ற போர்வையில் வேற்றிடத்துத் தாவர இனங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக, நமது நாட்டுத் தாவரங்களும், புற்களும் இல்லாததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.


மிக முக்கியமாக விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நாம் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம். ஆம், நாம் சிட்டுக்குருவிகளின் செல்லக் குழந்தைகளுக்கு உணவாக உள்ள பூச்சிகள், புழுக்களை பூச்சிக்கொல்லிகள் பதம் பார்த்து விடுவதால் அங்கே அவற்றுக்கு நிரந்தரமான உணவுப் பஞ்சம். சிட்டுக்குருவிகள் யாரிடம்தான் முறையிடும்?  

மூன்றாவதாக, உணவுக்குத்தான் இப்படிப் போராட்டம் என்றால் மனிதனின் குறுகிய சிந்தனையின் விளைவாக கான்கிரீட் காடுகளாகிவிட்ட நிலையில் சிட்டுக்குருவிகள் எங்கே போய் வீடு கட்ட முடியும்? அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிய வீடுகள், எப்போதும் மூடியே இருக்கும். முழுவதும் மூடிய வீட்டுக்குள் எப்படி இவைகள் புதுக்குடித்தனம் புகுந்து குடியிருக்க முடியும்?நான்காவதாக, இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு தன் சிறிய கூட்டைக் கட்டி வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத்தால் அங்குதான் சிட்டுக்குருவிகளுக்கு காத்திருக்கிருக்கிறது பேரதிர்ச்சி.

மனிதனின் நாகரிக வளர்ச்சியில் கைப்பேசி பிரதானமாகிவிட்டது. இவைகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. மாநகரங்கள், நகரங்களில் கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு கைப்பேசி கோபுரங்களில்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது.கைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியிடப்படும் "மின்காந்தக்' கதிர்வீச்சுகள் பறவைகளின் முட்டைகளை அதன் கருவிலேயே பதம் பார்த்து வருவதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.கைப்பேசிக் கோபுரங்கள் வெளியிடும் மிகக் குறைந்த அளவு கதிரியக்க அதிர்வலைகள் 900 முதல் 1,800 மெகாகர்ஸ். இவை மைக்ரோ அலைகள் என்று சொல்லக்கூடிய மின் காந்த அலைகள் என அழைக்கப்படுகின்றன.

இவை முட்டையின் மேல் தட்டின் கடினத்தன்மையை முற்றிலும் பாதித்து ஒரு மெல்லிய சவ்வு போன்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கைப்பேசிக் கோபுரங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவை பறவையினத்துக்கும் தேனீக்களுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாகின்றன.ஏனெனில் பறவைகள் மிகவும் நுண்ணறிவு கொண்டவை. இந்த மின்காந்த அலைகள் பறவைகளின் உணர்வுத் திறனைப் பாதித்துத் தவறாக வழிகாட்டி தங்கள் உணவைத் தேடுவதில் சிக்கல் ஏற்படுத்தி மற்ற உயிரினங்களுக்கு எளிதில் உணவாக்கி விடுகின்றன.

சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், நாம்தான் அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு நம் மண்ணையும், நம் வாழ்வையும் நஞ்சாக்கி வருகிறோம்.அழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்த அபாய ஒலியாகப் பாவித்து நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அவைகளைப் பாதுகாக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தானியங்கள், கொஞ்சம் தண்ணீர். அவை உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒரு சிறிய பெட்டி. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நாட்டுச் செடிகள். மரம் நடும்போது மறந்தும் அழகுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேற்றிடத்து மரங்களை நட வேண்டாம். பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் அறவே தவிர்த்திடுவோம். இயற்கை முறையில் பயிரிட முயல்வோம். இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பின் அவசியத்தை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அவர்களை இதில் ஈடுபடுத்துவோம்.கிராமங்களில் அன்று, சிட்டுக்குருவிகள் தங்கள் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்தால், அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். அவைகள் கட்டும் கூட்டுக்குக் குழந்தைகளால் எந்தவிதமான ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

சிட்டுக்குருவிகள் என்னும் இந்த சின்னத் தேவதைகள் தங்கள் வீட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என திடமாக நம்பினார்கள். இது கோடைகாலம் ஆதலால் சிட்டுக்குருவிகள் முதல் மற்ற பறவைகள் வரை உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்துப் போகின்றன. இந்த அடைக்கலத்தான் குருவிகள் மனிதரிடம் அடைக்கலம் வேண்டி நம் வீட்டின் கதவைத் தட்டி நிற்கின்றன. இவ்வளவு கஷ்டங்களிலும் இந்தச் செல்லச் சிட்டுகள் நம்மிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் செலவில்லாத சின்ன விஷயங்களை மட்டும்தான்.

நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் தானியம், கொஞ்சம் தண்ணீர், தங்க சிறிய இடம், முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம், அப்புறம் பாருங்கள் இந்தச் சின்னச் சிங்காரத் தேவதைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அத்துடன் உங்கள் குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டுவரும்.

அ. அலெக்ஸண்டர்
பசுமை உயிரினப்பன்மை சரணாலயத்தின் செயல் இயக்குநர்          

Wednesday, April 13, 2011

தமிழா உன்னை விற்காதே!


இன்று 14-வது சட்டப்பேரவைக்கான வேட்பாளர்களைத் தமிழகம் தேர்ந்தெடுக்க இருக்கும் நாள். 234 சட்டப்பேரவைக்கான இடங்களுக்கு 2,748 பேர் களமிறங்கி இருக்கிறார்கள். போட்டியிடும் வேட்பாளர்களில் 136 பேர்தான் பெண்கள் என்பது வருத்தத்தையும், 240 பேர் அதிகாரப்பூர்வமாகத் தங்களைக் கோடீஸ்வரர்கள் என்று அறிவித்துக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியையும் அளிக்கிறது.

பணக்காரர்கள் தேர்தலில் போட்டிபோடக் கூடாதா, கோடீஸ்வரர்கள் களமிறங்கக் கூடாதா என்று கேட்கலாம். ஒன்றிரண்டு பேர் களமிறங்கினால் பரவாயில்லை. அதிக அளவில் களமிறங்கி இருக்கிறார்களே, இவர்கள் வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை விவசாயியை, தினக்கூலித் தொழிலாளியை, வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை இழுத்துப் பிடித்து அவஸ்தைப்படும் நடுத்தர வர்க்கத்தினரை, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களைப் பற்றிக் கவலைப்படுவார்களா, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிப்பார்களா என்று யோசித்துப் பார்க்கும்போது, அதிர்ச்சியுடன் அச்சமுமல்லவா மேலோங்குகிறது.


காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என்று எல்லா ஆறுகளும் மணல் கொள்ளையால் வறண்டு போய்க் கிடக்கின்றன. பல கிராமங்களிலும், நகரங்களிலும் குடிக்கத் தண்ணீர் கிடையாது. ஆனால், தமிழகம் முழுவதும் கோடீஸ்வர வேட்பாளர்களின் உபயத்தால் பணம் மட்டும் தண்ணீராகச் செலவழிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தமாகத் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பணம் 53 கோடி ரூபாய் என்றால் அதில் வேட்பாளர்கள் விநியோகம் செய்ய இருந்த பணம் தமிழகத்தில் மட்டும் 41 கோடி ரூபாய். களமிறங்கி இருப்பவர்களில் பலர் கோடீஸ்வரர்களாயிற்றே, பிறகு பணம் புரளாமலா இருக்கும்?  பணப் பட்டுவாடா என்றால் இது சாதாரணப் பட்டுவாடாவாக இல்லை. கார்ப்பரேட் கலாசாரம் பரவிவிட்டிருப்பதன் அடையாளமாகத் திட்டமிட்டு ஏதோ ரேஷன் விநியோகம் செய்வதுபோல பல இடங்களில் பணப் பட்டுவாடா நடைபெற்றிருக்கிறது. நூறு வாக்காளர்களுக்கு ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டு, அவருக்கு உதவியாக மூன்று பேர் நியமிக்கப்பட்டும் பணம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.


அரசியல் கட்சிகள் கொள்கையற்றவையாகி விட்டன. சாதனை என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ஐந்து ஆண்டுகளில் காவிரிப் பிரச்னை தீரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவில்லை, மின்வெட்டுத் தொடர்கிறது, நெசவாளர்கள் நலிந்துபோய்க் கிடக்கிறார்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது, சிறு தொழில்கள் நலிந்து வருகின்றன, விவசாயிகளின் நிலைமை அதைவிடப் பரிதாபம். இந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்குக் கேட்பது?

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஊர்ஊராகப் போய் என்ன பேசியிருக்க வேண்டும்? மத்திய ஜவுளித்துறை அமைச்சரான பிறகு தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை முன்னேற என்னென்ன திட்டங்கள் வகுத்தேன், ஒன்றன்பின் ஒன்றாக மூடிக்கொண்டு வரும் நூற்பாலைகள் மீண்டும் புத்துயிர் பெற்றுச் செயல்பட நான் உதவினேன் என்றல்லவா சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்? "ஜெயலலிதா பத்து ஆண்டு ஆட்சி செய்தாரே, உங்களுக்கு இலவசமாக ஏதாவது தந்திருக்கிறாரா? ஒரு குன்றுமணி, ஒரு கொண்டை ஊசி தந்திருக்கிறாரா? நாங்கள் இலவசமாகத் தருகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கேட்க அவருக்கு வெட்கமாக இல்லை? 


திருவாரூர் முத்துவேலர் மகன் கருணாநிதியாக, பராசக்தி, மனோகரா போன்ற திரைப்படங்களுக்கு அனல் தெறிக்கும் வசனங்களை எழுதிய மு. கருணாநிதியாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி கலைஞர் கருணாநிதியாக 1962-ல் தஞ்சாவூரின் பெரும் தனவந்தர் பரிசுத்த நாடாரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது அவருடைய உயரமென்ன, வெற்றியின் மகத்துவம் என்ன? 

இன்று, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, ஐந்து முறை முதல்வராக இருந்தவர், 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர், தனது சொந்த ஊரில் வெற்றி பெறத் தனது மகனையும், மகளையும் தெருத்தெருவாக அலையவிட்டு வாக்குச் சேகரிக்கிறார் என்றால், தானே 5 நாள்கள் கிராமம் கிராமமாகத் தள்ளாத 87 வயதில் "இதோ மண்ணின் மைந்தன் வந்திருக்கிறேன்' எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்' என்று வாக்காளர்களிடம் கெஞ்சுகிறார் என்றால், முதல்வர் கருணாநிதியின் இன்றைய உயரம் என்ன? அவரது மரியாதைதான் என்ன? 

ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நடிகை குஷ்புவின் கவர்ச்சியும், சிரிப்பு நடிகர் வடிவேலுவின் பிரசாரமும் தேர்தல் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. நிஜமோ, பொய்யோ தெரியவில்லை, முதல்வரின் தொகுதியிலும் பணப் பட்டுவாடா நடக்கிறது என்கிறார்கள். ஐந்து முறை முதல்வர், ஐந்தாண்டு நல்லாட்சி நடத்தியவர் என்றால், வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெறுவானேன்? அதைவிடத் தேர்தலில் நிற்காமலேயே இருக்கலாமே, மரியாதையாவது மிஞ்சுமே... 

ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நடிகை குஷ்புவின் கவர்ச்சியும், சிரிப்பு நடிகர் வடிவேலுவின் பிரசாரமும் தேர்தல் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. நிஜமோ, பொய்யோ தெரியவில்லை, முதல்வரின் தொகுதியிலும் பணப் பட்டுவாடா நடக்கிறது என்கிறார்கள். ஐந்து முறை முதல்வர், ஐந்தாண்டு நல்லாட்சி நடத்தியவர் என்றால், வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெறுவானேன்? அதைவிடத் தேர்தலில் நிற்காமலேயே இருக்கலாமே, மரியாதையாவது மிஞ்சுமே...

ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நடிகை குஷ்புவின் கவர்ச்சியும், சிரிப்பு நடிகர் வடிவேலுவின் பிரசாரமும் தேர்தல் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. நிஜமோ, பொய்யோ தெரியவில்லை, முதல்வரின் தொகுதியிலும் பணப் பட்டுவாடா நடக்கிறது என்கிறார்கள். ஐந்து முறை முதல்வர், ஐந்தாண்டு நல்லாட்சி நடத்தியவர் என்றால், வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெறுவானேன்? அதைவிடத் தேர்தலில் நிற்காமலேயே இருக்கலாமே, மரியாதையாவது மிஞ்சுமே...


நல்லவர்கள் யாரும் போட்டி போடவில்லையே, களத்தில் இருக்கும் இரண்டு பேருமே நல்லவர்கள் இல்லையே, இதற்கு அது மாற்று, அதற்கு இது மாற்று என்று நாங்கள் வாக்களித்து ஓய்ந்ததுதானே மிச்சம்... என்று 13 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் வாக்களித்து ஏமாந்து சலித்தபடி 14வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது.

நல்ல தலைவர்களை உருவாக்குவதும், நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதும், நல்லவர்களுக்குத்தான் வாக்களிப்பது என்று தீர்மானிப்பதும் வாக்காளர்களின் கையில்தானே இருக்கிறது? தோல்வி அடைவார் என்று கருதப்படும் நல்லவர், வல்லவராக இல்லாவிட்டாலும் வெற்றியடையச் செய்யும் சக்தி உங்களது வாக்குச் சீட்டுக்கு உண்டே, அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்?

மாற்றி மாற்றி வாக்களித்து எதைக் கண்டோம் என்று சலிப்படையத் தேவையில்லை. தேர்தல் என்பது மத்தால் தயிர் கடைவதற்கு ஒப்பானது. மத்தால் தயிர் கடையும்போது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக மாற்றி மாற்றி கயிற்றை இழுத்துக்கொண்டே இருந்தால், உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கும் வெண்ணெய் திரண்டு வருவதுபோல, தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களித்தாலும், மக்களாட்சி முறை தோல்வி அடைந்துவிடாமல் பார்த்துக் கொண்டால், நல்லதொரு தலைமை, நல்லதொரு மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இன்றைய தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பணத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தல் வெற்றியை நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்கிற அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் நம்பிக்கையைத் தகர்க்க முடியும். அடுத்த தேர்தலில், எந்த வேட்பாளரும் பணத்தை வாரி இறைத்து ஏமாற மாட்டார்கள்.

வாக்களிக்கத் தவறாதீர்கள். எனது வாக்கு விற்பனைக்கல்ல என்பதையும், வாக்குச் சீட்டின் வலிமையால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற உண்மையையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. இந்த வாய்ப்பைத் தயவுசெய்து தவறவிட்டு விடாதீர்கள்!   



தினமணி      

 

Tuesday, April 12, 2011

மல்டி ப்ளெக்ஸ் கலாச்சாரம் - திருட்டு VCD-இன் மூலகாரணம்.!!

மல்டி ப்ளெக்ஸ்   கலாச்சாரம் - திருட்டு VCD-இன் மூலகாரணம்.!!

சிறு வயதில் சினிமா பார்க்கச் செல்வதே ஒரு இனிமையான அனுபவம்..
காலாண்டு , அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் அம்மா  தான் வழக்கமாக சினிமா பார்க்க கூட்டிச் செல்வார்கள்.. உடன் பக்கத்து  
வீட்டு அதையும், என் வயதை ஒத்த அவர்களது பிள்ளைகளும் வருவார்கள். வீட்டில் இருந்தே சில சமயம் தின்பண்டங்கள் எடுத்துச் செல்வதுண்டு.. பெரும்பாலும் இடைவேளையின் போது அம்மா வாங்கித் தரும் ஐஸ்கிரீம் சாப்பிடவே சினிமா செல்வதுண்டு..டிக்கெட்  வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருப்பதே ஒரு ஆவலான தருணம்..அப்போது ஏற்பட்டவை எல்லாம் இனிமையான அனுபவங்கள்..
ஆனால் இன்று..?!?!
online-ல்  டிக்கெட் இரண்டே நிமிடங்களில் கிடைத்து விடுகிறது.. ஆனால் டிக்கெட் விலை மிகவும் அதிகம்.. அதுவும் வார நாட்களில் ஒரு விலையும், சனி மற்றும் ஞாயிறு அதிக விலையும் நிர்ணயிக்கிறார்கள் .. சரி A/C theatre, DTS sound இருக்கு 100 ரூபா கொடுத்து போனாலும் படம் நல்ல படம்னா ஒரு சின்ன திருப்தி இருக்கும்..ஆனால் theatre கான்டீன் பொருட்களின் விலை தான் முகம் சுழிக்க வைக்கின்றது.
இதில் theatre-க்குள் நுழையும் போதே அவர்களின் அடாவடி ஆரம்பம் ஆகிறது.. சமீபத்தில் சென்னையில் உள்ள சங்கம்திரை அரங்கில் 'பயணம்' திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன் .. உள்ளே நுழையும் போதே ஏதோ விமான நிலையத்தில் சோதனை செய்வது போல் செய்கிறார்கள்..
என்  பை-ஐ திறந்து  துலாவுகிறான். ஒருவன்.இன்னொருத்தன் என் சட்டை  மற்றும் பான்ட் பை-ஐத் துலாவுகிறான். யாராவது சாப்பிடும் பொருள் கொண்டு  வந்தால்  உடனே  அதைப்  பிடுங்கி  வைத்துக்  கொள்கிறார்கள் .. நாம்  உள்ளே  சென்று  அவர்கள்  விற்பதைத்  தான்  சாப்பிட  வேண்டுமாம் ..நாம் என்ன  சாப்பிட  வேண்டும்  என்று  யாரோ  ஒருவன்  தீர்மானிக்கிறான் ..அப்போதே  நம்மாட்களின்  புத்தி  தெரிந்து  விடுகிறது .
சரி  உள்ளே  அவர்கள்  விற்பனையாவது  நியாயமாக  இருக்கிறதா  என்றல் ?? நிச்சயமாக  இல்லை ... அரை  லிட்டர்  தண்ணீர் பாட்டிலின் விலை வெளியே  10 ருபாய்  தான் ..அனால்  theatre-குள்  அது  20 ருபாய் ..இரு  மடங்கு  விலை ..கோயம்பேடு  பஸ்ஸ்டாண்ட்-ல்  கூட  இரண்டு அல்லது  மூன்று ருபாய்  அதிகமாய்  விற்கிறார்கள் .. அனால்  இவர்கள்  பகல்  கொள்ளையர்கள் ..முழுதாய்  பத்து ருபாய்  உயர்த்தி  விற்கிறார்கள் ..நான் ஏன்  இரு மடங்கு  விலை  என்று  கேட்டதற்கு 'இங்க  இப்படித்தான் " என்று  பதில்  வந்தது ..வேறு  வழி  இன்றி  வாங்க  வேண்டியதாய்  இருந்தது ..இதைக்  கேட்க  யாரும்  இல்லையா  என்று  கோபமும் , வருத்தமும்  ஏற்பட்டது .. 
இப்போது  தான்  தெரிகிறது  ஏன்  திருட்டு  VCD நம்  நாட்டில்  சக்கை  போடு  போடுகிறது .. நானும்  பேசாமல்  திருட்டு  VCD ரசிகனாக  மாறி  
விடலாம்  போலிருக்கிறது .. கொஞ்ச நாள்  காத்திருந்தால்  நல்ல  print கிடைத்து  விடும் .!! 
உண்மை... ஒரு  டிக்கெட்டின் விலை  85 ருபாய்  ஒரு  நபருக்கு .. சராசரியாக  5 நபர்கள்  உள்ள  ஒரு  குடும்பம்  படம்  பார்க்க  மொத்த 
கட்டணம்  - 5*85 = 425/- இடைவேளை  செலவு 150 ருபாய்  என்று  எடுத்துக்  கொண்டாலும்  மொத்தம்  575 ரூபாய்..இதற்கு  திருட்டு  VCD மிஞ்சிப் போனால் வெறும் 50 ருபாய்  தான்  ஆகும். குடும்பத்துடன்  வீட்டில்  அமர்ந்து  கொண்டு  அம்மா  செய்யும்  பலகாரங்கள்  சாப்பிட்டுக்  கொண்டு  விடுமுறை  நாட்களை  சந்தோசமாய்  கழிக்கலாம் .
திருட்டு  VCD ஒழிக்க வேண்டும்  என்று  கோஷம்  போடும்  திரைத்துறையினர்  உண்மையில்  போராட்டம்  நடத்த  வேண்டியது  இந்த  theatre 
உரிமையாளர்களிடம்  தான் .. இதில்  நமது  அரசாங்கமும்  மிகவும்  கண்டிப்பாய்  நடந்து  கொள்ள  வேண்டும் .. ஏனென்றால்  பணம்  படைத்தவர்கள்  வீட்டிலேயே  home-theatre வைத்துப்  படம்  பார்பவர்கள் , இல்லை  என்றால்  சிபாரிசு  மூலம்  preview show பார்த்து  விடுவார்கள் ... 
என்னைப்  போல்  நடுத்தர  வர்க்கத்திற்கு  theatre-க்கு  போய்  படம்  பார்த்தல்  தான்  திருப்தி .. ஒரு  நியாயமான  டிக்கெட்  விலையும் , உள்ளே  விற்கும்  பண்டங்களின்  விலையும்  நியாயமாக  இருந்தால் மட்டுமே  இந்த  திருட்டு  VCD-ஐ  ஒழிக்க  முடியும் .. சினிமா  பார்ப்பது  என்பதும்  மறுபடியும்  ஒரு  இனிமையான  அனுபவமாக  மாறும்.!!


மணிகண்டன் 

Monday, April 11, 2011

பி.எஃப். பணம் - இனி நீங்களே பார்க்கலாம்!


அரசு நிறுவனமாகட்டும், தனியார் நிறுவனமாகட்டும், அதில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஒரே சந்தோஷம் கண்ணுக்குத் தெரியாமலே அவர்கள் பெயரில் சேமிப்பாகும் பி.எஃப். பணம்தான். ஆனால், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் இந்த பி.எஃப். பணத்தை, பி.எஃப். அலுவலகத்தில் கட்டாமல் சில நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்த ஏமாற்று கம்பெனிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக பி.எஃப். அலுவலகமே சொல்லி இருக்கிறது. 2009-10-ம் ஆண்டின்படி, இந்தியா முழுக்க சுமார் ரூபாய் 165 கோடி பணம் பி.எஃப். அலுவலகத்துக்கு கொடுக்காமலே ஏப்பம் விடப்பட்டிருக்கிறதாம். இதில், இன்னொரு அதிர்ச்சியான தகவல், பி.எஃப். கணக்கில் மோசடி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பது தமிழகத்தில்தானாம்!


இந்திய அளவில் மொத்தம் ஐந்து கோடி பேர் பி.எஃப். கணக்கு வைத்திருக்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் நிதி ஆண்டின் இறுதியில், சிறிய வால் போன்ற ரசீது ஒன்று கொடுக்கப்படும். அதில், முந்தைய ஆண்டில் மொத்தம் எவ்வளவு பணம் கட்டப்பட்டிருக்கிறது, கணக்கில் உள்ள மொத்தப் பணம்  போன்ற விவரங்கள் மட்டும்தான் தரப்படும். சந்தாதாரரின் பணம் மாதம்தோறும் பி.எஃப். கணக்கில் கட்டப்படுகிறதா என்கிற விவரத்தை இந்த சின்ன ரசீது மூலம் அறிந்து கொள்ள முடியாது. இந்தப் பிரச்னை களுக்கெல்லாம் ஒரு தீர்வு காண இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.


பெரும்பாலான சந்தாதாரர் களுக்கு அவர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்பட வேண்டும் என்ற விவரம் தெரிவதில்லை. இதனால், பல நேரங்களில் அவர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப். தொகை மற்றும் அதற்கு இணையாக தொழில் நிறுவனம் கட்டும் தொகை ஆகியவற்றை சரி பார்க்க முடிவதில்லை.இதுநாள் வரை நிறுவனங்கள் பி.எஃப்.க்கு உரிய தொகையை மாதம்தோறும் கட்டி வந்தாலும், எந்த பணியாளர் கணக்கில் எவ்வளவு பணம் கட்டப்பட்டிருக்கிறது என்கிற விவரத்தை ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான்  பி.எஃப் அலுவலகத்துக்கு தெரிவிக்கும். இதன் அடிப்படையில் பணத்தைப் பிரித்துப்போட்டு, அதற்குரிய வட்டி எல்லாம் கணக்கிட்டு செப்டம்பர் மாத வாக்கில் நிறுவனங்களுக்கு அனுப்புகிறது பி.எஃப். அலுவலகம்..

ஆனால், பி.எஃப். ஆணையம் இப்போது கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையின்படி, எல்லா நிறுவனங்களும் இனி மாதம்தோறும் பி.எஃப். பணத்தை கட்டும்போதே, எந்த ஊழியரின் கணக்கில் எவ்வளவு பணம் போட வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அப்படி நாங்கள் செய்யும் பட்சத்தில், பல்வேறு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை கம்ப்யூட்டர் மூலம் பார்த்துக் கொள்ளும் வசதியையும் கொண்டுவரப் போகிறோம். இந்த வேலைகள் எல்லாம் சரியாக முடிந்துவிட்டால், 2013-ம் ஆண்டு முதல் வங்கிக் கணக்குப்போல, பி.எஃப். கணக்கிலும் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை எப்போது வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். மேலும், எஸ்.எம்.எஸ் மூலமும் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளும் வசதி வர இருக்கிறது .

Sunday, April 10, 2011

மாப்பிள்ளை, நஞ்சுபுரம் - விமர்சனம்


மாப்பிள்ளை


சன் பிக்சர் வெளியீட்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாப்பிள்ளை. சுராஜ் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைபடத்தின் அவுட் லைன் எடுத்துட்டு இப்போ இருக்கிற ட்ரெண்டுக்கு ஏற்ற மாதரி கொஞ்சம்  மாற்றி அமைத்து படம் எடுத்து உள்ளார்.

கதை  

முதல் காட்சியில் விவேக்கை காட்டுகிறார்கள்.. கிட்டத்தட்ட சுமார் முப்பது நிமிடம் அவர் தான் பேசி கொண்டே உள்ளார் (நமீதா ரசிகர் மன்ற தலைவனாக ).. சரி மெயின் லைன் கதைக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்கள்..


நாயகி ஹன்சிகா மோத்வாணி தனுஷை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.பல காட்சிகளுக்கு பிறகு தனுஷ் இவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் இவர்களின் காதலுக்கு விவேக் மறைமுகமாக பயன்படுத்த படுகிறார்.  ஹன்சிகா அம்மாவாக மனிஷா கொய்ரால.. ( கொடுமை ) .. காதலுக்கு ஒத்து கொள்ளும் போதும் தனுசின் உண்மையான கேரக்டர் தெரிய வருகிறது.. திருமணதிற்கு தடை போடுகிறார். அதனையும் மீறி தனுஷ் கல்யணம் செய்கிறார் .. பின்பு அத்தை மருமகனுக்கு இடையே  நடக்கும் காட்சிகள் தான் இந்த மாப்பிளை..



ஏற்கனவே சீடன் என்ற மொக்கை படத்தில் நடித்த தனுஷ் இந்த படத்தை ஏன் நடித்தார் என தெரிய வில்லை. இப்படத்தில் அவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  நாயகி வேஸ்ட் ஒ வேஸ்ட்..

இப்படத்திற்கு முக்கிய பலம் நடிகர் விவேக். விவேக்கின் டயலாக் மிக  மிக சூப்பர்.  

நான் பார்த்த படங்களில் மிக மொக்கையான படங்களில் இதுவும் ஒன்று.. இன்டர்நெட்டில் பார்த்த எனக்கே இவளோ கடுப்பா இருக்கு.. தியேட்டரில் படம் பார்த்த நண்பர்களுக்கு எப்படி இருக்கும்.. :(


 நஞ்சுபுரம்

 நஞ்சுபுரம் பேருக்கு தகுந்தது போல, ஊர் நிறைய விஷப்பாம்புகள் நடமாட்டம் நிறைந்த ஊர், எப்போது யாரை வந்து பாம்பு கடிக்கும் என யாருக்கும் தெரியாது. ஷப்பற்களோடு திரியும் நாகங்களை, வேடிக்கையாக து£க்கி வீசுகிற அளவுக்கு தைரியமுள்ள ராகவ் ( நாயகன் ). அந்த ஊரில் ஜாதி தீ பற்றி எரிகிற வழக்கமான ஒரு ஊரு.. ராகவ் மோனிகாவை காதலிக்கிறார், ஆனால் மோனிகா கீழ் ஜாதி பெண்.  மோனிகாவை ஒரு முறை பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார் ராகவ். ஆனால் அந்த பாம்பை கொல்வதற்குள் அது தப்பித்து விடுகிறது. 

அந்த ஊரில் அடிபட்ட பாம்பு நாற்பது நாளுக்குள் அடித்தவனை கொன்று பழிதீப்பதாக நம்பப்படுகிறது.படமெடுக்கும் நாகத்தை படக்கென்று பற்றிக் கொண்டு வாலை திருகி விசிறியடிக்கும் ராகவ் திடீரென்று கோழையாக மாறி கயிறை கூட 'அது'வாக நினைத்து அலறுவதெல்லாம் பரிதாபம். ஒரு மண்டலத்திற்கு பரணில்தான் இருக்க வேண்டும் என்று பாம்பு ஏற முடியாத பாதுகாப்பு அரண் அமைக்கிறார்கள். இதற்கு நடுவே இருவருக்கும் காதலாகி, பின்பு வீட்டில் அனைவருக்கு தெரிந்து, ஜாதி சண்டை ஆகி, இருவரும் இணைத்தார்கள என்பதே இந்த நஞ்சு புறம்..


 தம்பி ராமய்யா இதில் வில்லன். பாம்பின் விஷத்தைவிட கொடுமையானது ஜாதி விஷம் என்ற விஷயத்தை சொல்ல நன்றாகவே பயன்பட்டிருக்கிறார்.  மோனிகாவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார், ராகவ்வும் நன்றாக செய்திருக்கிறார்.

படம் எந்த லாஜிக் இல்லாமல் பார்த்தால் ஓகே.. மோனிகா நடித்தால் பார்க்கலாம்..

Saturday, April 09, 2011

யாருக்கு வோட்டுப் போடுவது? - ஓ பக்கங்கள், ஞாநி


நம் அரசியல் கட்சிகள் திருந்தவில்லை என்பதற்குத் தொடர்ந்து பல அடையாளங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகக் கவனிப்பதும் இல்லை. அழுத்தம் கொடுப்பதும் இல்லை. 

சென்றமுறை ஜெயித்து வந்த 234 எம்.எல்.ஏ.க்களில் 77 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. இந்த முறை போட்டி யிடும் வேட்பாளர்களில் 18 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 66 பேர் மீது உள்ளவை கடும் குற்றச்சாட்டுகள். ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர் களிலும் கிரிமினல் வழக்குள்ளவர்கள் சதவிகிதம் அதிர்ச்சியாக இருக்கிறது. தி.மு.க - 22 சதவிகிதம். அ.தி.மு.க - 30. பா.ம.க -52. விடுதலைச் சிறுத்தைகள்- 50. தே.மு. தி.க- 19. காங்கிரஸ்- 11. பி.ஜே.,பி- 11.  

சென்ற முறை ஜெயித்தவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள். இந்த முறை போட்டியிடுபவர்களில் 35 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். மீதி பெரும்பாலோர் லட்சாதிபதிகள். கோடீஸ்வர வேட்பாளர்கள் கட்சி வாரியாக: தி.மு.க - 65.77 சத விகிதம். அ.தி.மு.க - 52.08. காங்கிரஸ் - 61.11. பா.ம.க - 40.74. விடுதலைச் சிறுத்தைகள் - 33.33. தே.மு.தி.க - 33.333. பி.ஜே.பி- 14.79. மார்க்சிஸ்ட் - 8.33. கம்யூனிஸ்ட்- 0. 


ஐந்து வருடங்களில் இவர்களுடைய சொத்து எப்படிப் பெருகியிருக்கிறது என்பதே இவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டி விடும். தி.மு.க அமைச்சர் இ.வ.வேலுவின் சொத்து பல நூறு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆட்சியில் இருந்த அமைச்சர்களை விட அவர்களுடைய மனைவிகள், துணைவிகள் சொத்து அதிகரித்திருக்கிறது. முதலமைச்சர்தான் இதில் வழிகாட்டி. பிறவி கம்யூனிஸ்ட் அல்லவா அவர்! 2006ல் அவர் சொத்து 26.52 கோடி. 2011ல் 44.14 கோடி இதில் கருணாநிதியின் சொத்து வெறும் சுமார் 5 கோடிதான். தயாளுவுடையது சுமார் 16 கோடி. ராஜாத்தியுடையது சுமார் 24 கோடி! இன்னும் பல பேர் மனைவி-துணைவி கணக்கு காட்டியிருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு வெறும் 75 லட்சம். மனைவி ரங்கநாயகியுடையதோ 93 லட்சம். துணைவி லீலாவுடையதோ 2.25 கோடி!


தேர்தல் ஆணையம் இந்த முறை தமிழ்நாட்டில் பிரதான பிரச்னை, பெரும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்படுவதைத் தடுப்பதுதான் என்று அறிவித்து, கடுமையாகச் செயல்பட்டிருக்கிறது. இதன் விளைவு டீக்கடைக்காரர் வீட்டில் சில லட்சங்களும் ஆம்னி பஸ் கூரையில் பல கோடிகளும் பிடிபட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த அளவு கறுப்புப் பணம் சுழற்சியில் இருக்கிறது என்பதற்கு, தேர்தல் ஆணையம் தரும் ஒரு புள்ளிவிவரமே சாட்சி. சென்ற வாரம் வரை பிடிபட்ட 22 கோடியே 40 லட்சம் ரூபாயில், முறையாகக் கணக்கு காட்டி தேர்தலுக்குச் சம்பந்தம் இல்லாத நியாயமான சொந்தப் பணம் என்று நிரூபித்து திரும்பப் பெறப்பட்ட தொகை வெறும் 4 கோடியே 88 லட்சம்தான்.  

பணபலம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருசில விதிவிலக்கான இடதுசாரி வேட்பாளர்கள் தவிர, எந்தப் பெரிய கட்சி வேட்பாளரும் ஆணையம் நிர்ணயித்த வரம்புக்குள் செலவு செய்வதே இல்லை என்பது உண்மை. பணபலம் இல்லாமலே ஜெயிக்க முடியும் என்று நம்பும் படித்த இளைஞர்களின் பிரதிநிதியாகத் தங்களை முன்னிறுத்தும் சுயேச்சை வேட்பாளர் சரத்பாபு போன்றோர் போடும் கணக்குக் கூட தப்பாகவே இருக்கிறது. மொத்தம் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ள வேளச்சேரியில் தமக்கு 40 ஆயிரம் வாக் குகள் கிடைத்தால் ஜெயித்து விடலாம் என்று அவர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 70 சதவிகித வாக்குப் பதிவு என்றால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் விழும். அதில் 40 ஆயிரம் ஜெயிக்கப் போதும் என்றால் மீதி ஒரு லட்சம் வாக்குகளுக்கு அர்த்தம் என்ன? அவை பல வேட்பாளரிடையே பிரிவதால் தான் 40 ஆயிரத்துக்கு மதிப்பு வருகிறது!  


இந்தத் தேர்தல் முறையே தவறு; விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது பற்றித்தான் படித்தவர்கள் பிரசாரம் செய்து கருத்து திரட்ட வேண்டும். இருக்கும் தவறான முறைக்குள்ளேயே செயல்பட்டு ஜெயித்துவிடலாம் என்று கணக்குப் போடுவது படித்த நல்லவர்களின் அப்பாவித்தனம் அல்லது சாமர்த்தியம். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் என் நண்பர் அவருக்கு எதிர் வேட்பாளர் மூன்று கோடி செலவு செய்தால், தான் ஒரு கோடி வரைக்குமாவது செலவிடும் கட்டா யத்துக்குத் தள்ளப்படுவேன் என்கிறார். நண்பருக்கு மாத வருவாயே 15 ஆயிரத்துக்குள்தான். எப்படி ஒரு கோடி திரட்ட முடியும்? கொடுப்பவர்கள் நாளைக்கு பதிலுக்கு என்னவெல்லாம் பிரதி உபகாரம் கேட்பார்கள் என்பதை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது. 

இப்படிப்பட்ட ஒட்டுமொத்த அருவருப்பான சூழ்நிலையில் ஒரே நம்பிக்கைக் கீற்று, தேர்தல் ஆணையத்தின் கறாரான செயல்பாடு மட்டும்தான். ஆனால் அது போதாது. இன்னும் பல தேர்தல்களுக்கு இப்படிப்பட்ட கெடுபிடிகள் தொடர்ந்தால்தான் கட்சி அமைப்பு சீர்படும்.  

 
இப்போதும் பணபலமும், இலவச ஆசை காட்டி வோட்டு வாங்கும் உத்தியும் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன. இந்தச் சூழலில் எந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுவது என்று பலரும் என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நம் முன்னால் மூன்று வழிகள்தான் இருக்கின்றன.

வழி 1: 49 ஓ. எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமை. இப்போதைக்கு இது மின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ரகசிய பட்டனாக இல்லை. எனவே பகிரங்கமாக சொல்லித்தான் இதைப் பதிவுசெய்ய வேண்டும். எனவே பெருவாரியானவர்கள் இதைப் பயன்படுத்தும் வாய்ப்புக் குறைவு. பெருவாரியாக 49 ஓ விழுந்தால்தான் கட்சிகளுக்குக் கலக்கம் ஏற்படும். ஒரு சில நூறு 49 ஓக்கள் பயன் தராது. என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று நமக்கு நாமே வலியுறுத்திக் கொள்ள இது உதவும். 

வழி 2: தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு மட்டைகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்தான்.  கடந்த ஆட்சிக் காலங்களைப் பார்த்தீர்களானால், 1996-2001ல் தி.மு.க ஆட்சியும், 2001-2006ல் அ.தி. மு.க ஆட்சியும் சகிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால், 1991-96 அ.தி.மு.க ஆட்சியும் 2006-2011 தி.மு.க ஆட்சியும் சகிக்க முடியாதவை. மூன்றாவது அணியாக உருப்படியாக எதுவும் உருவாவதற்கு இன்னும் 15 வருடங்கள் ஆகலாம். அதுவரை எந்த ஒரு கழகத்தையும் தொடர்ந்து பத்தாண்டு ஆள விடாமல், 5 வருடங்களுக்கு ஒரு முறை கேரளா மாடலில் மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்து நம்மை நாமே கொஞ்சம் ஆறுதல்படுத்திக் கொள்ளலாம். 

வழி 3: வேட்பாளர் அடிப்படையில் பார்ப்போம். சரியான கட்சியில் இருக்கும் தப்பான ஆள் என்று சொல்ல எவருமில்லை. ஏனென்றால் சரியான கட்சிகளே இல்லை. தப்பான கட்சியில் இருக்கும் சரியான ஆட்களாக யாரேனும் இருக்கிறார்களா என்று தேடலாம். (சரியான ஆளாக இருந்தால் அவர் ஏன் தப்பான இடத்துக்குப் போகிறார் என்ற தர்க்க நியாயம் தனி.) இரு பிரதான அணிகளிலும் இருக்கும் வேட்பாளர்களில் இருப்பதில் சுமாரானவர் என்பவருக்கு வோட்டுப் போடலாம். நல்ல சுயேச்சைகளுக்குப் போட்டுப் பயனில்லை. எப்படியும் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். அவற்றில் பெருவாரியாக முழு அயோக்கியர்களுக்கு பதில், ஓரளவு நல்லவர்களை யாவது ஜெயிக்க வைக்கலாம்.  


மூன்றில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ செய்யுங்கள். ஆனால் வோட்டுப் போடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். மூன்றில் எப்படி வோட்டுப் போட்டாலும் தொலைநோக்கில் மாற்றம் வர அது நிச்சயம் உதவும்.

சந்தேகங்கள்! 

1. விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரசாரத்தில் உளறுகிறார் என்று பிரசாரம் செய்யும் சன், கலைஞர் தொலைக்காட்சிகள், ஒரு முதலமைச்சர் மனைவி, துணைவி என்று இருவருடன் பகிரங்கமாக வாழ்க்கை நடத்துவதை குடிக்குச்
சமமான ஒழுக்கக்கேடாக ஏன் கருதவில்லை ? 

2. வேட்பாளர்கள், தலைவர்கள் மட்டும்தான் மது குடிக்காத ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டுமா? ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை படைத்த வாக்காளர்களுக்கும் அந்த ஒழுக்கம் வேண்டாமா? வருடத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குடிப்பவர்கள் தொகை குறைந்தபட்சக் கணக்குப்படி ஒரு கோடிக்கு மேல். குடிப்பழக்கம் உள்ள இந்த ஒரு கோடி வாக்காளர்கள் வோட்டுப் போடும் தகுதி உடையவர்களா, இல்லையா? 

3. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பை என்னவோ 11 பேருக்கு மட்டும்தான் உரியது. ஆனால் தேசமே அதைத் தங்கள் வெற்றியாகக் கொண்டாடுவது போலத்தான் தி.மு.க.வினரும் கூட்டணியினரும் கட்சியில் ஒரு சிலர் மட்டுமே தேர்தலில் வாய்ப்பு பெற்று வெற்றியடைவதைக் கருத வேண்டும் என்று கருணாநிதி அறிவுறுத்தியிருக்கிறார். அதாவது கிரிக்கெட் 11 பேர் மாதிரி அவர் குடும்பத்தினர் 11 பேர் எல்லா லாபங்களையும் அடைவதை எல்லா தி.மு.க.வினரும் கொண்டாட வேண்டும் என்று இதற்கு அர்த்தமா?

4. அமைச்சராக இருக்கையில் ராசா மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட தருணத்தில் அவரைப் புகழ்ந்து தொழிலதிபர் ரத்தன் டாட்டா கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றிக் கேட்ட போது, ‘அப்படி ஒரு கடிதமும் தமக்கு வர வில்லை’ என்றார் கருணாநிதி. இப்போது நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு விசாரணையில் டாட்டா தம் கைப்பட கடிதம் எழுதியதாகவும், நீரா ராடியா தாம் அதை நேரில் கருணாநிதியிடம் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார்களே? கருணாநிதிக்கு செலக்டிவ் அம்னீஷியாவா? ராடியா வேறு யாராவது கருணாநிதியிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டாரா?

5. ஒரே மேடையில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் பேசுவார்களா என்று சவால் விடும் தி.மு.கவினர், ஏன் ஒரே மேடையில் ராகுல் காந்தியும் கருணாநிதியும் தோன்றுவதில்லை என்பதை விளக்குவார்களா? ராகுல் காந்தி, ஸ்டாலினோடு கூட ஒரே மேடையில் தோன்ற முன் வருவதில்லையே ஏன் ? 

6. தேர்தல் நேரத்தில் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகம் இயங்குவதால் எல்லாம் ஒழுங்காக நடைபெறுவது பற்றி மக்களிடையே பெரும் மகிழ்ச்சி இருக்கிறது. இதே அதிகாரிகள்தானே நிர்வாகத்தை எப்போதும் கவனித்து வருகிறார்கள்? ஏன் இதே போல சுதந்திரமாக, சட்டப்படி எப்போதும் நடப்பதில்லை? தடுப்பது யார் என்று அவர்கள் அடையாளம் காட்ட வேண்டாமா? 

Friday, April 08, 2011

'ஊழலுக்கு எதிரான இந்தியா!' - அன்னா ஹசாரே!

'இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கத்துடன் 72 வயதான மனிதர் ஒருவர் சாகும் வரை உண்ணா​விரதப் போராட்டத்தில் இறங்க... ஒட்டுமொத்தத் தேசமும் சிலிர்த்து நிற்கிறது! எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே!  

மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் என்ற சிற்றூரை மாதிரிக் கிராமமாக மேம்​படுத்தி​யவர். அதற்காக, 1992-ல் பத்ம பூஷண் வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. 'ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை விசாரிக்கும் லோக்பால் மசோதாவை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் அன்னா! 


ஊழல் புரியும் ஆட்சியாளர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கக் கோருவதுதான் லோக்பால் மசோதா. முதலில் இது, 1969-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்களையே விசாரிக்க எம்.பி-க்கள் ஒப்புக்கொள்​வார்களா? எதிர்ப்பு கிளம்பியதால், அது  நிறைவேறவில்லை. அதன் பின்னர், 1971 முதல் 2008 வரை ஒன்பது தடவைகள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், இன்று வரை நிறைவேறவே இல்லை!

அதனால், அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், 'பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்​​களாக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அன்னா ஹசாரேவும் பிரதமரிடம் இதை வலியுறுத்தினார். ஆனால், அதை மன்​மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அக்னிவேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, 'ஜன் லோக்பால்’ என்ற மாதிரி மசோதா ஒன்றைத் தயாரித்தனர். அதில், எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தனர். இதையும் பிரதமர் நிராகரிக்கவே, அதிர்ச்சி அடைந்த அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இப்போது போராட்டத்தில்.



இது குறித்து ஹசாரே, ''லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் சமூக அமைப்புகளில் உள்ளவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி, மூத்த வக்கீல்கள் போன்றவர்களையும் முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரை இந்த கமிட்டிக்குத் தலைவராக நியமித்துள்ளனர். அரசு விதிகளுக்கு மாறாக, பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள ஒருவரை இதற்குத் தலைவராக நியமித்து மசோதா தயாரிப்பது சரியாகுமா?

இந்த மசோதா தயாரிப்புக் குழுவில் 50 சதவிகிதம் அதிகாரிகளையும், 50 சதவிகிதம் சமூக நல அமைப்பினரையும், அறிவுஜீவிகளையும் நியமிக்க வேண்டும். 'உங்களை மதிக்கிறேன், உங்களை நம்புகிறேன்’ என்று பிரதமர் என்னிடம் கூறுகிறார். ஆனால், கடந்த மாத சந்திப்புக்குப் பின்னர் எங்களுடன் கலந்தாலோசனை செய்ய ஏன் பிரதமர் மறுக்கிறார் என்று தெரியவில்லை!முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே இந்த மசோதாவைத் தயாரித்தால், அதில் ஜனநாயகம் இருக்காது. முழுமையான எங்கள் எல்லா ஷரத்துகளும் அடங்கிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை என் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன்!'' என்கிறார் உறுதியாக.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உண்ணாவிரத இடத்துக்கே சென்று, ''இந்தியாவில் தற்போது தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் இரண்டு மட்டுமே துடிப்பாக உள்ளன. ஊழலுக்கு எதிராக இதுபோன்ற துடிப்பான அமைப்பு நிச்சயம் தேவை என்பதால், ஹசாரோ மற்றும் குழுவினர் தயாரித்த மாதிரி லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாடாளு​மன்றத்துக்குக் கொண்டுசெல்ல முயற்சிப்​பேன்...'' என்றார்.
 
மேலும், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். பீகார் துணை முதல்வர் எஸ்.கே.மோடியும் ஆதரவு அளித்துள்ளார்.அன்னா ஹசாரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பொதுமக்களும் இந்த மசோதாவை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். அந்த இயக்கத்தைச் சேர்ந்த மாயங்க் காந்தி, ''அன்னா ஹசாரேவுக்குப் பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் இந்தப் போராட்டம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் தங்கள் அலுவலகங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோரிக்கை நிறைவேறினால் ஒழிய, இந்தத் தீ அணையாது!'' என்கிறார்.

 நல்ல விஷயத்துக்காக நடக்கும் போராட்டம், நாலா திசைகளிலும் பரவி வருவது நம்பிக்கை அளிக்கிறது!

விகடன்